பதிவு செய்த நாள்
25
மே
2016
12:05
பொன்னேரி: கோவில் குளத்திற்கு, சுற்றுச்சுவர், படித்துறைகள் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பொன்னேரி அடுத்த, ஆண்டார்குப்பம் பகுதியில், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, சித்திரை மற்றும் ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, முடி காணிக்கை செலுத்தி, அங்குள்ள குளத்தில் நீராடி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மேற்கண்ட கோவில் குளத்தில், பக்தர்கள் கீழிறங்கி செல்வதற்கு படித்துறைகள் இல்லை. இதனால், பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தண்ணீரில் இறங்கும்போது, வழுக்கி விழவேண்டி உள்ளது. வயதானவர்கள் குளத்தில் இறங்குவதற்கு தயங்குகின்றனர். மேற்கண்ட கோவில் குளத்தை சுற்றிலும், சுற்றுச்சுவர் அமைத்து, படித்துறைகள் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.