தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி வழிபாடு சிறப்பாக நடக்கிறது. ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராஹியை வழிபட்ட பி ன்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனைராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம் என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராஹி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர். மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோயிலில் உண்டு. எந்த வழிபாட்டை தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு. இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராஹியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள். பார்வதிதேவியின் போர்ப்படைத்தளபதியாக இவள் விளங்குவதாக சக்தி வழிபாட்டு நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. காசியில், திரிபுர பைரவி காட் என்ற இடத்தில் வராஹிக்கு கோயில் உள்ளது. இவள் சப்தமாதர்களில் ஒருவர்.