பதிவு செய்த நாள்
31
மே
2016
04:05
பெருமாளின் அவதாரங்கள் பல என்றாலும், கிருஷ்ணாவதாரம் தனித்தன்மை வாய்ந்தது. உடலென்னும் சிறையில் சிக்கியிருக்கிறோம். என்பதையும் அறியாத, அஞ்ஞானப் பறைவைகளான நம்மை மீட்பதற்காக, தாமே சிறையில் அவதரித்தருளினான் பகவான். ஆம், உலகனைத்தும் உறங்கும் இரவில் அனைவரையும் எழுப்பும் அந்த ஞானச் சுடர் விளக்கு அவதரித்தது. இப்படி கிருஷ்ணாவதாரத்தின் சிறப்புகள் பல பெற்றுள்ளன. அவதாரம் முதல் யதாஸ்தானத்துக்கு மீண்டும் எழுந்தருளும் வரையில், தம்முடைய லீலா வினோதங்களால் அனைவரையும் மயங்கச் செய்த அவதாரம் இது. மகான்களைக்கூட, இந்த குறும்புக்காரன் விட்டு வைக்கவில்லை. நாராயண பட்டதிரி, நாராயண தீர்த்தர், ஜயதேவர், கனகதாசர், புரந்தரதாசர், ஊத்துக்காடு வேங்கட கவி, நாமதேவர், ஆழ்வார்கள், மீரா, சூர்தாஸ், ரவிதாஸ் என்ற கண்ணனின் விளையாடல்களை அனுபவித்தவர்கள் அநேகர். அவர்களில், லீலாசுகர் அனுபவிப்பது தனிரகம்.
யசோதையிடம் கேட்கிறான் கண்ணன், அம்மா, பசிக்கிறது பால் கொடு. அடிக்கடி இப்படி சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாதே என்று நினைத்த யசோதை சொன்னாள்: õல் இப்போது இல்லை
எப்போது கிடைக்கும்?
ராத்திரிதான் கிடைக்கும்?
ராத்திரின்னா என்ன?
அடடா... ஒன்றுமே தெரியாத குழந்தையின் கேள்வி என்று நினைத்து யசோதை பதில் சொன்னாள்:
ராத்தரின்னா எங்க பார்த்தாலும் இருட்டிருக்கும் இல்லையா அதுதான்.
பிள்ளைக்குப் புரியுற மாதிரி சொன்ன சந்தோஷம் யாசோதைக்கு. ஆனால், மறுகனம் அந்தக் குறும்பன் கேட்டான் கண்ணை மூடிக்கொண்டு:
இப்போ இருட்டிடுத்து, பாலைக் கொடு
இன்னொரு காட்சி.
ஒரு வீட்டிலே வெண்ணெய் திருடிக் கொண்டிருக்கிறான் கண்ணன். அந்த வீட்டுக்காரப் பெண் உள்ளே வந்துவிட்டாள். அவனைப் பார்த்ததும் அவளுக்கு ஆச்சர்யம்; அவனுக்கோ திகைப்பு ஆனாலும் அசரவில்ல.
அவள் கேட்கிறாள் நீ யார்?
நான் பலராமனின் தம்பி
ஏனென்றால் பலராமன் சமர்த்து, இப்படி சேட்டை செய்யமாட்டான். அதனால், அவன் தம்பியாம். இதுதான் கிருஷ்ணக் குறும்பு.
இங்கே எங்கு வந்தாய்?
என் வீடு மாதிரியே இருந்ததா? அதான் உள்ளே வந்துவிட்டேன்.
அது சரி. அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
வெண்ணெய் எடுத்ததைப் பார்த்துவிட்டாள்?
என்னுடைய கன்றுக்குட்டியை காணவில்லை. அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். வெண்ணெய் பாத்திரத்தை ஏன் எடுத்தாய்? ஒருவேளை இதுக்குள் அந்த கன்றுக்குட்டி இருக்குமோ என்று தான் பார்த்தேன். வெண்ணெய் பாத்திரத்துக்குள் கன்றுக்குட்டியை தேடும் சாதுர்யன் இவனன்றி வேறு யார் இருக்க முடியும்? அல்லது இந்தப் பதிலைக் கேட்டதும், அவளால்தான் எப்படி சிரிக்காமல் இருந்திருக்க முடியும்?
கண்ணன், தான் குறும்புக்காரனாக இருந்தது மட்டுமில்லை. தன் குறும்பை கோபியர்க்கும் கற்பித்தவனாகி விட்டான். அவனுடன் பழகி பழகி கோபியர்க்கும் அந்தக் குறும்பு தொற்றிக் கொண்டு விட்டது.
ஒரு கோபியின் வீட்டுக் கதவைத் தட்டுகிறான் கிருஷ்ணன் உள்ளேயிருந்து கேட்கிறாள் அந்தக் கோபி
கதவைத் தட்டுவது யார்?
நான்தான் மாதவன்.
ஓ, வசந்த காலமா?
மாதவ என்கிற சொல் வசந்த காலத்தையும் குறிக்கும். அதைச் சொல்லி கேட்கிறாள்.
இல்லை, நான் சக்கரம் தாங்கியவன்
ஓ, பானை செய்யும் குயவனா?
பானை செய்வதற்கும் ஒரு சக்கரம் பயன்படுத்தப்படுகிறது. இல்லையா? அதைச் சொல்கிறாள்.
இல்லை நான் உலகத்தைத் தாங்குபவன்
அட, பாம்பான ஆதிசேஷனா?
இல்லையில்லை கொடிய பாம்பை (காளிங்கனை) அடக்கியவன்.
ஓஹோ, நீதான் கருடனா?
இல்லையில்லை! நான்தான் ஹரி,
ஹரியா? அட, குரங்குகளின் தலைவனா?
ஹரி என்றால் குரங்கு என்றும் பொருள்.
எல்லாரையும் குறும்பால் குதூகுலிக்க வைக்கும் கிருஷ்ணனுக்கும் அந்த அனுபவத்தை தருகிறாள் இந்த கோபி. இவை அனைத்தும் கிருஷ்ண கர்ணாமிர்தத்தில் லீலா சுகர் காட்டும் சுவையான காட்சிகளில் சில, இப்படியெல்லாம் பாடும் அவர். தன்னுடைய கரைதலை வெளிப்படுத்துகிற இடம் மிகவே அற்புதமானது. அவர் தனக்கு சிபாரிசு செய்யுமாறு வேண்டுகிறார். யாரிடம்? புல்லாங்குழலிடம். மூங்கிலில் பிறந்த புல்லாங்குழலே சிவந்த தாமரை மலர் போன்ற கிருஷ்ணனின் வாயிலிருந்து வெளிப்படும் சுகந்தமான காற்றை சுவைக்கும் பேறு உனக்குத்தான் வாய்த்திருக்கிறது. அதுமட்டுமா? அதனாலேயே, கிருஷ்ணனுடைய அதரங்களின் அருகிலேயே இருக்கின்ற பெரும் ஆனந்தமும் உனக்கே வாய்த்திருக்கிறது. என்னுடைய பரிதாப நிலையை தவிப்பை, அந்த நந்தகோபன் மகனிடம் நீ எடுத்துச் சொல்லேன். எப்போதும் அவனுடன் இருக்கும் நீ சொன்னால், அவன் உன்னுடைய வார்த்தையை செவிமடுப்பான் அல்லவா? இப்படி மனம் கரைந்து உருகி வழிவதைக் காணும் போது, நமக்கே பரிவும் பாசமும் பொங்கி வழிகிறது. என்றால், பரிவின் திருவுருவான கிருஷ்ணன் தேடிச் சென்று அருளியதில் ஆச்சர்யமென்ன இருக்கிறது. தம் விளையாடல்களாகவே செயலனைத்தையும் புரிந்த அந்த மாயனைமன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை நினைத்துச் செயல்படுவோம்; விளைவுகளை அவனுக்கே அர்ப்பணிப் போம். அவை என்றென்றும் நமக்கு நலமாகப் பெருகிவரும்.