பதிவு செய்த நாள்
08
ஜூன்
2016
11:06
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே, கோவிலின் கருவறை கதவை உடைத்து, 2.5 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த காரப்பங்காடு கிராமத்தில், 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ அபிஷ்டவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், சமீபத்தில் தான், 13 நாள் வைகாசி திருவிழா நடந்தது. இந்நிலையில், வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து, அர்ச்சகர் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று அதிகாலை, பூஜைக்காக கோவிலை திறக்க வந்தபோது, கருவறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ரமணி, மதுக்கூர் போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர். கோவிலில், 2,905 கிராம் தங்க நகைகள் இருந்ததாகவும் தற்போது, 377 கிராம் மட்டுமே மீதம் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கூறினர். கைரேகை நிபுனர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுக்கூர் போலீசார், நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.