பதிவு செய்த நாள்
09
ஜூன்
2016
11:06
கடலுார்: கடலுார், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணி முடிந்து உட்பிரகார திருப்பணிகள் துவங்கப்பட உள்ளது. கடலுார் புதுப்பாளையத்தில் உள்ள செங்கமலத்தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில், கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் முகப்பில், 56 அடி உயரத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் அமைக்கும் பணி, கடந்தாண்டு தொழிலதிபர் துரைராஜ் தலைமையில் துவக்கப்பட்டு, தற்போது முடிந்துள்ளது. திருவதிகை சரவணன் ஸ்தபதி, கோபுர கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தில், கிருஷ்ணர் வரலாற்றை குறிக்கும் வகையில், 110 சுவாமி சிலைகள் கலை நயத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளன. இங்குள்ள மூலவர் ராஜகோபால சுவாமி, செங்கமலத்தாயார், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட சன்னதிகளும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளன. கோவில் உட்பிரகார மண்டபம் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளதால் பக்தர்கள் பொருளுதவி வழங்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பணி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, பிரபு, நரசிம்மன் பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.