பதிவு செய்த நாள்
09
செப்
2011
02:09
காலடியிலிருந்து சன்னியாசிகளுக்கு உரித்தான காவி உடையில் இருந்த சங்கரர் ஒரு குருவைத் தேடிப் பாதயாத்திரை சென்றார். பல மாதங்களுக்குப் பின்னர் சங்கரர் நர்மதைக் நதிக் கரைக்கு வந்தார். அங்கிருந்த ஒரு குகையில் மிகப்பெரிய ஞானியான கோவிந்தபாதர் வசித்து வந்தார். ஆதிசேஷனின் அவதாரமாகிய அவரை சங்கரர் வணங்கி, தம்மை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். கற்று உணர்ந்ததை எல்லாம், அனைவரும் ஏற்கும் அளவுக்கு, எளிமையாக எடுத்துக் கூறும் திறனைப் பெற்றதோடு, மாற்றுக் கருத்துக்களுக்கும், முழுமையடையாத சித்தாந்தங்களுக்கும், முதிர்ச்சி பெறாத போதகர்களுக்கும் எதிராக வாதமிட்டு அத்வைத தத்துவத்தை நிலைப்பிக்கும் திறமையையும், குருவருளால் ஆதிசங்கரர் விரைவிலேயே பெற்றார்.
முதல் சீடர் பத்மபாதர்: குருவின் விருப்பபப்படி சங்கரர் காசிக்குச் சென்று கங்கையின் புனித நதிக்கரையில் தங்கினார். வேதங்களையும், உபநிடதங்களையும் கற்க எத்தனையோ சீடர்கள் இவரை வந்தடைந்தனர். சில காலம் காசியில் தங்கியிருந்து விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதும், சீடர்களுக்கு வேதபாடம் சொல்லிக் கொடுப்பதுமாக இருந்தார். இவரை அடைந்த சீடர்களில் சனந்தனன் என்ற ஒரு சீடரும் இருந்தார். மிகச் சிறந்த அறிவாளி. ஒருநாள் இவர் கங்கையின் எதிர்க்கரையில் இருந்தார். வகுப்பு நேரம் நெருங்கி விட்டது, ஆற்றைக் கடக்க எண்ணிக்கொண்டிருக்கையில் கங்கையில் திடீரென்று வெள்ளம் ஏற்பட்டது. வகுப்பைத் தவறவிட்டு விடுவோமோ என்று கவலைப்பட்ட அவர், தன் குருவை மனதில் நினைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கினார். இவரின் குருபக்தியைப் பார்த்த கங்காதேவி, இவரின் பாதஅடிகளை தாமரை மலரால்(பத்மத்தால்) தாங்கிக் கொள்கிறது. அன்று முதல் இவர் பத்மபாதர் ஆனார். இவர் தான் சங்கரரின் முதல் சீடர். காசியில் இருந்தபோது சங்கரர் முக்கிய இறைநூல்களான பகவத்கீதை, பிரம்மசூத்ரம், உபநிடதங்கள் போன்றவற்றுக்கு பாஷ்யங்கள் (விளக்கவுரை) எழுதினார்.