குருகுலவாசம் செய்யும் காலத்தில் தினந்தோறும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்பணித்துவிட்டு பிறகு உண்பது சங்கரரது வழக்கமாயிருந்தது. ஒருநாள் ஒரு ஏழை அந்தணர் அயாசகன் வீட்டு வாசலில் நின்று கொண்டு சங்கரர், பவதி பிக்ஷõம் தேஹி என்றார். ஒளிவீசும் முகத்துடன் திகழும் இந்த சிறுவனுக்கு கொடுக்கக் கூடியதாக தன்னிடம் ஏதுமில்லையே என்று அந்த ஏழையின் மனைவி வருந்தினாள். பின் வீடு முழுவதும் தேடி, உலர்ந்து போன நெல்லிக்கனி ஒன்றை சங்கரருக்கு தானமாக அளித்தாள். இந்த கருணைச் செயல் சங்கரரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. வறுமையில் வாடும் போதே தானம் கொடுக்கும் எண்ணம் கொண்ட இவளிடம் செல்வம் இருந்தால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்த சங்கரர், அக்குடும்பத்தின் வறுமை நீங்க லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடித்துதித்தார். 19வது ஸ்லோகம் பாடி முடித்த போது அந்த ஏழையின் வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனியை நிரப்பி மகாலட்சுமி பொன்மழை பொழிந்தாள். இந்த நிகழ்ச்சி ஒரு அட்சய திரிதியை நாளில் நடந்தது. (இதன் அடிப்படையில் தான் இப்போதும் கூட அட்சய திரிதியை நாளில் காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம் நடைபெறுகிறது) சங்கரர் ஏழு வயதிற்குள் எல்லா வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுமுடித்து குருகுலத்திலிருந்து தன் இல்லம் வந்து தன் தாய்க்கு பணிவிடை செய்து வந்தார்.