பதிவு செய்த நாள்
13
ஜூன்
2016
11:06
பவானி: பவானி கூடுதுறையில் உள்ள சகஸ்ரலிங்கம் கோவிலில், 107 வயது வள்ளலார் பக்தர், பக்தர்களுக்கு தினசரி ராகி கூழ் வழங்கி வருகிறார். பவானி, மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அர்த்தனாரி சுவாமி, 107, இவர் கடந்த, 29 ஆண்டுகளாக பக்தர்களிடம் நிதி திரட்டி, ராகி கூழ் தயார் செய்து, கூடுதுறை சகஸ்ரலிங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, காலை, 7 மணி முதல், 9 மணி வரை வழங்குகிறார்.
இதுகுறித்து, பெரியவர் அர்த்தனாரி சுவாமி கூறியதாவது: சேலம் மாவட்டம் அத்தனூர் பகுதியை சேர்ந்த நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன் பவானிக்கு வந்தோம். என் மனைவி வள்ளியம்மாள். ஏழு குழந்தைகள். மனைவி மற்றும் இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள் இறந்து விட்டனர். அழகேசன், நடராஜன், தங்கவேல் என மூன்று மகன்களும், பேர பிள்ளைகளும் உள்ளனர். நான் வள்ளலார் பக்தன். நம்மால் முடிந்த வகையில், கூடுதுறை வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டும் என நினைத்து, பவானி, குமாரபாளையம் பகுதி மக்களிடம் நிதி பெற்று கடந்த, 29 ஆண்டுகளாக கூழ் வழங்கி வருகிறேன். தற்போது, 107 வயது ஆகிய நிலையில், வெளியே செல்ல முடிவதில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு மேல் கூழ் வழங்கி முடியாமல் போனது. நேற்று (ஞாயிறு) அன்று மீண்டும் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கியது மிகவும் மன மகிழ்ச்சி தருவதாக இருந்தது. தினசரி ஆட்டோவில் கோவிலுக்கு வந்து செல்லும் செலவை தேனியை சேர்ந்த வக்கீல் ஒருவர் ஏற்றுகொண்டார். எனக்கு இதுவரை முதியோர் உதவி தொகை வழங்க கூட யாரும் உதவி செய்யவில்லை. இவ்வாறு மிகுந்த வருத்தத்துடன் கூறினார். இவரைப்பற்றிய தகவல் அறிந்து சென்னை, பெரம்பூர் அருள்ஜோதி அன்ன ஆலயம் சார்பில், கூழ் வழங்க ஆகும் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.