சங்கரரும், அவருடைய சீடர்களும் நர்மதை நதியில் நீராடிவிட்டு, மண்டன மிஸ்ரரின் வீட்டை அடைந்தார். அவரது வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. சங்கரர் தம் யோக சக்தியைக் கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே அவரது தந்தையாருக்கு திதி நடந்து கொண்டிருந்தது. திதி முடியும் வரை காத்திருந்த சங்கரர், மண்டன மிஸ்ரரை வாதத்திற்கு அழைத்தார். மண்டன மிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் மிகச்சிறந்த பண்டிதை. உபயபாரதியை நடுவராக நியமித்து இருவர் கழுத்திலும் மாலை இடப்படுகிறது. யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவர் போட்டியில் தோற்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. சங்கரர் தோற்றால் இல்லற வாழ்க்கையும், மண்டனமிஸ்ரர் தோற்றால் சன்னியாச வாழ்க்கையும் ஏற்க வேண்டும் என கூறப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாதம் நடைபெற்றபின் மண்டனமிஸ்ரரின் மாலை வாடத் தொடங்கியது. உபயபாரதி, தன் கணவராகிலும் மண்டனமிஸ்ரரே தோல்வியுற்றார் என அறிவித்தார். தான் தோல்வியுற்றதாக மிஸ்ரரும் ஒப்புக்கொண்டார். சங்கரர், அவருக்கு சன்னியாச தீட்சை கொடுத்து சுரேஷ்வராச்சாரியார் என்ற பட்டத்தையும் கொடுத்தார். மண்டன மிஸ்ரர் பிரம்மாவின் அவதாரம், அவரது மனைவி உபயபாரதி சரஸ்வதியின் அவதாரம். சங்கரர் மிஸ்ரரை வென்ற பிறகு உபயபாரதி தான் சத்யலோகத்திற்குச் செல்வதாகக் கூறினாள். அதற்கு சங்கரர் வனதுர்கா மந்திரத்தால் அதை தடுத்து, தாங்கள் சித்ரூபிணியான பரதேவதை பக்தர்களின் நன்மைக்காக லக்ஷ்மி முதலான தேவதைகளாகவும் நீங்கள் விளங்குகிறீர்கள். நான் விரும்பும் சமயம் நீங்கள் போகலாம் என்று வேண்டவே அம்பிகையும் அதற்கு சம்மதித்தாள். சங்கரர் மீண்டும் சீடர்களுடன் யாத்திரையாகப் புறப்பட்டு மஹாராஷ்டிரம் சென்று அத்வைத தத்தவத்தை பிரசாரம் செய்தார்.