பதிவு செய்த நாள்
10
செப்
2011
10:09
சென்னை : முதல்வர் ஜெயலலிதாவால், அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டம், மேலும் 106 கோவில்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த, இந்து சமய அறநிலையத் துறை செய்திக்குறிப்பு:முதல்வர் ஜெயலலிதாவால், அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில், 2002ம் ஆண்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், அன்னதானத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. அந்த ஆட்சியிலேயே, மாநில அளவில் 360 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.இந்தத் திட்டம், முழு உத்வேகத்துடன் செயல்படுத்தப்படும் எனவும், மேலும் 106 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும், முதல்வரால் ஆணையிடப்பட்டு, பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டது. இதன்படி, நாளை (ஞாயிறு) முதல், அந்த 106 கோவில்களில் அன்னதானம் செயல்படுத்தப்படும். மயிலாப்பூர், மாதவப் பெருமாள் கோவிலில், நாளை பகல் 1.35 மணிக்கு, அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதனால் துவக்கி வைக்கப்படுகிறது. இதே போல, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானியம்மன், காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர், திண்டிவனம் லட்சுமி நரசிம்மர், கடலூர் வரதராஜப் பெருமாள், மதுரை காமராஜர் சாலை அரசமர பிள்ளையார், பெரியகுளம் பாலசுப்பிரமணியர், பழநி இடும்பன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் வழிவிடு முருகன், கோவை மேட்டுப்பாளையம் அனுமந்தராமசாமி, பொள்ளாச்சி அய்யப்பசாமி உள்ளிட்ட கோவில்களில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து கோவில்களிலும், இத்திட்டத்துக்கென, உண்டியல் ஒன்றும் நிறுவப்பட உள்ளது. அனைவரும், தங்களால் இயன்ற நிதியுதவியை, தாங்கள் விரும்பும் கோவிலுக்கு அளிக்கலாம். பிறந்த நாள், மண நாள் போன்ற, தாங்கள் விரும்பும் நாட்களில், பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க, அதற்கான தொகையைச் செலுத்தி, தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.இந்த அன்னதானத் திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் ஒரு கோடி பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். 106 கோவில்களுக்கு விரிவாக்கம் செய்வதன் மூலம், மேலும் 25 லட்சம் பக்தர்கள் பயன்பெறுவர்.இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.