பெண் என்பவள் நம் ஆதித்தாய்; அவளே நம் பெரும் தெய்வம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2016 12:06
கோவை : பெண் என்பவள் நம் ஆதித்தாய், அவளே பெரும் தெய்வம். பெண்தான் ஊன் உருக உழைத்து மானுட இனத்தை உருவாக்கினாள், என, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசினார். கோவை அருட்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு இலக்கிய பேரவை சார்பில், நுால் வெளியீட்டு விழா, ஆர்.எஸ்.புரம் புரந்தரதாசர் கலையரங்கில் நேற்று நடந்தது. தமிழ்நாடு இலக்கிய பேரவை செயலாளர் திராவிடமணி வரவேற்றார். பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். சர்வோதயம் தண்டாயுதம் எழுதிய புன்னகைதான் அழகு கட்டுரை நுால், கவிஞர் சுப்பிரமணியம் எழுதிய கள்ளிப்பூ கவிதை நுாலை கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட, பேராசிரியர் இருசுபிள்ளை பெற்றுக்கொண்டார். நுால்கள் குறித்து கருத்துரை வழங்கிய கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசியதாவது: அருட்செல்வர் மகாலிங்கம் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரை மிகவும் உருக்கமானது. காந்திய சிந்தனைக்கு இந்நுாலில் அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கவிஞர் சுப்பிரமணியம் எழுதிய கள்ளிப் பூ கவிதை நுால் பெண்களின் பெருமை, அவர்களின் பேராற்றலை சிறப்பித்து எழுதப்பட்டுள்ளது. பெண் என்பவள் நம் ஆதித்தாய், அவளே பெரும் தெய்வம், அவள்தான் ஊன் உருக உழைத்து மானுட இனம் உருவாக்கினாள். இந்நுால் பெண்களின் பன்முக திறமைகளை போற்றும் குறுங்காவியமாக மரபுக் கவிதையில் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு, சிற்பி பாலசுப்பிரமணியம் பேசினார்.