பதிவு செய்த நாள்
21
ஜூன்
2016
11:06
மங்கலம்பேட்டை : விருத்தாசலம் அருகே, 600 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் திருடு போனதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ராசாபாளையத்தில், 600 ஆண்டுகள் பழமையான, செவிட்டு அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில், விநாயகர், செவிட்டு அய்யனார், முனியப்பர், கருப்பன் சுவாமி உள்ளிட்ட கற்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. இதில், ஒன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட விநாயகர், முனியப்பர், கருப்பன் சுவாமி சிலைகள் மட்டும், நேற்று முன்தினம் இரவு, திருடு போனது. தகவலறிந்த கிராம மக்கள், அப்பகுதி முழுவதும் தேடிப் பார்த்தனர். மங்கலம்பேட்டை போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு, நேற்று காலை, 7:00 மணிக்கு வந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த, 36 வயது நபர், காணாமல் போன முனியப்பர், கருப்பன் சுவாமி சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நட்டுக் கொண்டிருந்தார். அவரை பிடித்து, போலீசார் விசாரித்ததில், காணாமல் போன இரண்டு சிலைகளும் அருகில் உள்ள முட்புதரில் கிடந்தன; அவற்றை எடுத்து வந்து திரும்ப வைத்தேன் என்றார். தொடர்ந்து அவரிடம், மாயமான விநாயகர் சிலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.