ராமேஸ்வரம் அக்னி தீர்த்த சாலை சேதம் கேபிள் பதிப்பதற்காக அரசு நிதி ரூ.25 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2016 11:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சி.சி.டி., கேமராவுக்கான கேபிள் பதிப்பதற்காக பேவர் பிளாக் சாலை சேதப்படுத்தபட்டதால் அரசு நிதி ரூ.25 லட்சம் விரயமானது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், யாத்ரிகர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பின்னரே கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்வது வழக்கம். இதனால் கடற்கரை பகுதி அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதை காணலாம். பக்தர்களின் வசதிக்காக சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடற்கரை பகுதியை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. முதற்கட்டமாக மண்டி தெருவில் கடற்கரையை ஒட்டி ரூ.25 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் தொடர் திருட்டை தடுக்க போலீசார் கண்காணிப்பு கேமரா பொருத்தினர். அவை பழுதாகியதால் நவீன கேமரா பொருத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்கான கேபிள் பதிப்பதற்காக நகராட்சி அனுமதியின்றி நேற்று முன்தினம் இரவோடு இரவாக மண் அள்ளும் இயந்திரம் மூலம் புதிதாக போடப்பட்ட பேவர் பிளாக் சாலை பெயர்க்கப்பட்டு 300 மீட்டர் துாரம் குழி தோண்டப்பட்டது. தகவலறிந்த நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா சம்பவஇடம் விரைந்து சென்று மேலும் குழி தோண்ட விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் இரு திட்ட பணிகளும் முழுமை பெறாமல் பக்தர்களுக்கு பயனற்ற நிலையில் உள்ளது.
இதற்கிடையே புனித நீராடுவதற்காக அக்னிதீர்த்த கடற்கரைக்கு செல்லும் பக்தர்கள் கூட்ட நெரிசல் காரணமாக கால்இடறி குழிக்குள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். தோண்டப்பட்ட குழியை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி ஆணையர் ஜெயராம ராஜா கூறுகையில்,“அக்னி தீர்த்த கடற்கரையில் கண்காணிப்பு கேமராவுக்காக கேபிள் பதிக்க, நகராட்சி அனுமதியின்றி பேவர் பிளாக் சாலையை போலீசார் பெயர்த்துவிட்டனர். முறையாக அனுமதி பெற்று கேபிள் பதிக்குமாறு போலீசாருக்கு அறிவுரை வழங்கி பணி நிறுத்தப்பட்டது, என்றார்.