பதிவு செய்த நாள்
24
ஜூன்
2016
11:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நகை மாயமானது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, சிவனடியார் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்த சிவா என்பவர், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு, அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் கோவிலில், கடந்த மார்ச்சில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, அருணாசலேஸ்வரர் கோவில் பொக்கிஷத்திலிருந்து நகைகள் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. வீதி உலா முடிந்த பின், நகைகள் மீண்டும் கோவில் பொக்கிஷத்தில் வைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, கோவில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. அப்போது, உண்டியலில் ஒரு பாக்கெட் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, வைர தாலி இருந்தது, இந்த நகை துர்க்கையம்மனுக்கு சொந்தமானது என, அதில் எழுதப்பட்டிருந்தது. அப்போதைய கோவில் இணை ஆணையர் வாசுநாதன், அந்த நகை மற்றும் அதிலுள்ள விவரங்கள் குறித்து வீடியோ ரிக்கார்ட் மூலம் பதிவு செய்தார்.
இதுகுறித்து துர்க்கையம்மன் கோவில் விழாவின் போது, நகை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கோவில் எழுத்தர் கருணாநிதி என்ற செந்தில் மற்றும் அர்ச்சகரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், துர்க்கையம்மனுக்கு சொந்தமான விலை உயர்ந்த நகையை பொக்கிஷத்தில் இருந்து வெளியே எடுத்து விட்டு, உபயதாரர் கொடுத்த நகையை கோவில் பொக்கிஷத்தில் சேர்த்து கணக்கு காண்பிக்கப்பட்டது தெரியவந்தது. கோவில் நகை திருடினால் பாதிப்பு ஏற்படும் என அஞ்சி, நகையை மீண்டும் உண்டியலில் போட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், நகை திருட்டு விசாரணை அளவிலேயே உள்ளது. யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நகை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.