அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களில் திருமணப் பதிவுக் கட்டணத்தை ரூ.2 ஆயிரமாக மாக உயர்த்த நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் கட்டுப்பாட்டில் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில், ஐயப்பன் கோயில், வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில்கள் உள்ளன. திருமண பதிவு கட்டணமாக தற்போது ரூ.250 வசூலிக்கப்படுகிறது. இது ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படவுள்ளது.
நிர்வாக அதிகாரி செல்லதுரை கூறியதாவது: அழகர்கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில்களில் திருமண பதிவு கட்டணம் மட்டும் ரூ.250 வசூலிக்கப்படுகிறது. மற்றபடி அர்ச்சகர்கள், அர்ச்சனைக்கான பொருட்கள், சாமி தரிசனத்திற்கு மணப்பெண், மாப்பிள்ளை என அனைவருக்குமே தலா ரூ.100 என தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் போன்ற முதுநிலை கோயில்களில் ரூ.2 ஆயிரம் பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் அர்ச்சகர், அர்ச்சனை பொருட்கள் மற்றும் மணமக்கள் தவிர அவர்கள் குடும்பத்தினர் 10 பேர் இலவசமாக சாமி தரிசனம் செய்யலாம். அத்துடன் சான்றிதழும் இலவசமாக வழங்கப்படும். இந்த கட்டணங்களை சேர்த்தால் ரூ.2 ஆயிரத்துக்கு அதிகம் வரும், என்றார்.