குளித்தலை: குளித்தலை அருகே, மிகவும் பிரசிதிபெற்ற மகாமாரியம்மன் கோவில் அருள்வாக்கு கூறும் விழா நடந்தது. குளித்தலை அடுத்த, கூடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகர், மகாமாரியம்மன், கருப்பசாமி மற்றும் மலையாளிசாமிக்கு கோவில்கள் உள்ளது. இந்தாண்டுக்கான விழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. கரகம் பாலிக்கப்பட்டு தாரை தப்பட்டை முழங்க வாணவேடிக்கையுடன் கருப்பசாமி மற்றும் மலையாளி சாமிகள் முன்செல்ல, வீதி உலா வந்து மகாமாரியம்மன் கோவிலில் குடி புகுந்தது. இரண்டாம் நாள் பொங்கல், மாவிளக்கு, கிடா வெட்டி வழிபட்டனர். தொடர்ந்து அக்கினி சட்டி மற்றும் அலகு குத்திக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்று, மகாமாரியம்மன் சாமிக்கு நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர். மூன்றாம் நாள் காலை கருப்பசாமி மற்றும் மலையாளிசாமிகளுக்கு குட்டி குடித்தல், தொடந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது. மாலை மஞ்சல் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது.