அந்தியூர்: அந்தியூரை அடுத்த, பொதியாமூப்பனூரில் அமைந்துள்ள தம்பிக்கலை ஐயன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இக்கோவில் நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது. ஆண்டு தோறும் ஆவனி மாதம் தேர்திருவிழாவுடன் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். பழமை வாய்ந்த இக்கோவிலை புதுப்பித்து, புனரமைத்து, வர்ணம் தீட்டும் பணி முடிந்தது. நேற்று முன்தினம் மாலை, 5 மணிக்கு விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கி, முதற்கால யாகவேள்வி நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை செய்யப்பட்டது. காலை, 9 மணிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. அந்தியூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆப்பக்கூடல் போலீசார் செய்திருந்தனர்.