மரத்தண்டின் இருபுறமும் அபிஷேகத்திற்குரிய பொருட்களைக் கட்டி, அதைத் தோளில் சுமந்து வரும் வழிபாடு காவடி. இதில் கட்டப்படும் பொருட்களைப் பொறுத்து பால், பன்னீர், புஷ்பம், இளநீர், வேல், சர்க்கரை, சாம்பிராணி, மச்சக்காவடி, சர்ப்பக்காவடி என்று பெயர்கள் சூட்டப்படும். முருகப்பெருமானுக்கு இந்த நேர்ச்சையை செய்வர். இதில் மச்சக்காவடி, சர்ப்பக்காவடி இரண்டும் நடைமுறையில் இல்லை. மச்சக்காவடியின் இருபுறங்களிலும் கட்டப்படும் மண் சட்டிகளில் மீன்களும், சர்ப்பக் காவடியில் நாக பாம்பும் இடம் பெற்றிக்கும். இவற்றை விரதமிருந்து சுமந்து வரும் பக்தர்கள், வேண்டுதல் முடிந்ததும் கோவில் அருகிலுள்ள குளம் மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களில் விட்டு விடும் வழக்கம் இருந்தது.