பதிவு செய்த நாள்
05
ஜூலை
2016
12:07
ஆர்.கே.பேட்டை: அம்மையார்குப்பம் அன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், 10ம் தேதி நடைபெற உள்ளது. 8ம் தேதி, யாக சாலை பூஜை துவங்குகிறது. செராத்துாரான் குல மரபினரின் குலதெய்வமான அன்னியம்மன் கோவில், வேலுார் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே, சேரி அய்யம்பேட்டையில் உள்ளது. இந்த கோவிலுக்கு, வங்கனுார், அம்மையார்குப்பம், சொரக்காய்பேட்டை, பொதட்டூர்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலம், புதுப்பேட்டை, சத்திரவாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செராத்துாரான் குல மரபினர், ஆடி மற்றும் தை மாதங்களில் சென்று வழிபட்டு வருகின்றனர். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், வங்கனுார் மற்றும் அம்மையார்குப்பத்தில் உப கோவில்கள் கட்டப்பட்டன. அம்மையார்குப்பம், மோசூர் சாலையில் உள்ள அன்னியம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி, ஓராண்டாக நடந்து வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி, வரும், 10ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 8ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, புதிய சிலைகள் கரிக்கோலம் ஊர்வலம் நடக்கிறது. அன்று துவங்கும் யாகசாலை பூஜைகள், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடக்கின்றன. 10ம் தேதி காலை, 9:30 மணிக்கு, மூலவர் அம்மன் மற்றும் கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.