பதிவு செய்த நாள்
07
ஜூலை
2016
03:07
சுவாமி சிவானந்தர்: 1880 மே/ஜூன் மாதத்தில் ஒரு சனிக்கிழமையன்று தாரக் கல்கத்தாவிலுள்ள ராமசந்திர தத்தரின் இல்லத்தில் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்தித்தார். அப்போது குருதேவர் பரவசநிலையில், நான் இப்போது எங்கு இருக்கிறேன்? என்று கேட்டார். அதற்கு மற்றவர்கள், ராமின் வீட்டில் என்றனர். உடனே அவர், எந்த ராமரின் வீட்டில்? என்று கேட்டார். டாக்டர் ராமின் வீட்டில் இப்போது நீங்கள் இருக்கிறீர்கள் என்று அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். குருதேவர், ஆம், இப்போது புரிகிறது என்று கூறி அமைதியாக இருந்தார். தாரக் இந்த முதல் சந்திப்பைப் பற்றிக் கூறினார். அன்று குருதேவர் அறையில் பக்தர்களுடன் பரவசநிலையில் அமர்ந்திருந்தார். நான் அவரை வணங்கி அவருக்கு அருகில் அமர்ந்தேன்.
நான் எந்தச் சமாதியைப் பற்றி நாளெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேனோ, அதைப் பற்றியே குருதேவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் நிர்விகல்ப சமாதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது. எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. சிலரால் மட்டுமே அதை அடைய முடியும் என்று அவர் கூறினார். அந்தச் சமாதியில் ஆழ்ந்திருக்கும் ஒருவருடைய உடல் 21 நாட்களில் வீழ்ந்து விடும் என்றார் அவர். தாரக்கினால் அப்போது குருதேவருடன் பேச முடியவில்லை. ஒருமாதம் கழித்து அவர் குருதேவரைப் பார்க்க தட்சிணேஸ்வரம் சென்றார். எண்ணெய் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் குருதேவர் தமது அறையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். அவர் முன் நான்கைந்து பேர் தரையில் அமர்ந்திருந்தனர். ஸ்ரீராமகிருஷ்ணர் தாரக்கைப் பார்த்து, என்னை இதற்கு முன்பு பார்த்திருக்கிறாயா? என்று கேட்டார். தாரக் அவரை சமீபத்தில் ராமின் வீட்டில் பார்த்ததாகக் கூறினார். தாரக் குருதேவரின் மடியில் தலையை வைத்து வணங்கினார். குருதேவர் அவரது தலையை அன்புடன் வருடிக் கொடுத்தார்.
தாரக் நினைவு கூறுகிறார்: குருதேவரின் மீது எனக்கு இனம் புரியாத அன்பு ஏற்பட்டது. அவர் எனக்கு மிகவும் அறிமுகமானவர்போல் தோன்றியது. மகிழ்ச்சி அலை என் இதயத்தில் புரண்டடித்தது. அவருக்குள் நான் அன்பான, மென்மையான, என்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் தாயைக் கண்டேன். எனவே நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும், சிறு குழந்தைக்கே உரிய எதிர்பார்ப்புடனும் அவரிடம் சரணடைந்தேன், என்னை முழுவதும் அவர் வசம் ஒப்படைத்துவிட்டேன். என் வாழ்நாள் முழுவதும் தேடிக் கொண்டிருந்தவரிடமேயே வந்து சேர்ந்துவிட்டதை உணர்ந்துவிட்டேன். அன்று முதல் நான் குருதேவரை என்னைப் பெற்ற தாயாகவே எண்ணத் தொடங்கினேன். கோயில்களில் மாலை ஆரதிக்கான மணிகளும் முரசுகளும் ஒலிக்கத் தொடங்கின. குருதேவர் தெய்வீகப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தார். சிறிது நேரம் கழித்து அவர் தாரக்கிடம், உனக்கு உருவக் கடவுளைப் பிடிக்குமா? அருவக் கடவுளைப் பிடிக்குமா? என்று கேட்டார்.
எனக்கு அருவக் கடவுளைப் பிடிக்கும். ஆனால் பல்வேறு உருவங்களாக வெளிப்படும் தெய்விக சக்தியையும் நீ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றார் குருதேவர். பிறகு அவர் தாரக்கை அழைத்துக் கொண்டு காளி கோயிலுக்குச் சென்றார். குருதேவர் காளி தேவியின் திருமுன்பு வீழ்ந்து வணங்கினார். தாரக்கும் அப்படியே செய்தார். மற்றொரு சந்திப்பைப் பற்றி தாரக் கூறுகிறார். நான் தட்சிணேசுவரம் சென்றபோது பரவச நிலையில் இருந்த குருதேவர் எதிர்பாராத விதமாக எனது நெஞ்சைத் தொட்டார். நான் உடனே புற உலக நினைவை இழந்து தியானத்தில் மூழ்கினேன். எவ்வளவு நேரம் அந்த நிலையிலேயே நீடித்திருந்தேன் என்பது எனக்குத் தெரியாது. அதன் விளைவாகப் பல உண்மைகள் எனக்கு விளக்கப்பட்டன. நான் ஆன்மா-எப்போதும் உள்ளவன்- பந்தம் எதுவும் இல்லாதவன் என்பதையும் அன்று உணர்ந்துகொண்டேன். குருதேவரின் உருவில் கடவுளே மக்களின் நன்மைக்காக அவதரித்திருக்கிறார் என்ற தெளிவு உண்டாயிற்று. அவருக்குச் சேவை செய்யவே நான் இந்தப் பூமியில் பிறந்துள்ளதையும் புரிந்து கொண்டேன். அவர் மற்றொரு நாளும் பஞ்சவடியிலுள்ள ஆலமரத்தடியில் என்னை அதுபோல் ஆசீர்வதித்தார்.
சுவாமி சாரதானந்தர்: சசி (சுவாமி ராமகிருஷ்ணானந்தர்) சரத் (சுவாமி சாரதானந்தர்) மற்றும் இவர்களது நண்பர் காளி பிரசாத் ஆகியோர் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி இந்தியன் மீரர் பத்திரிகை மூலமாக அறிந்தனர். அவர்கள் ஒருநாள் நண்பகலில் தட்சிணேசுவரம் சென்றார்கள். அங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அறையில் சிறிய கட்டிலில் அமர்ந்திருந்தார். அவர்களை இன்முகத்துடன் வரவேற்று பாயில் அமரச் சொல்லி உபசரித்தார். அவர்களுடைய பெயர், இருப்பிடம் போன்ற விவரங்களைக் கேட்டறிந்தார். அவர்கள் பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த குருதேவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். குருதேவர் சசியையும் சரத்தையும் பார்த்த உடனே அவர்கள் தமக்குச் சொந்தமானவர்கள் என்பதை உறுதி செய்துகொண்டார். அவர்களுக்குள் இழையோடும் துறவு மனப்பான்மையை அறிந்து கொண்ட அவர் பின்வருமாறு கூறினார். செங்கல், ஓடு ஆகியவற்றின் மீது கம்பெனியின் முத்திரையை வார்த்துச் சூளையில் இட்டுச் சுடுவார்கள். இதனால், அந்த முத்திரை அவற்றின் மீது நிரந்தரமாகப் படிந்துவிடும். அதேபோல் ஆன்மிகத்தில் ஓரளவு முன்னேறிய பிறகே நீங்கள் வாழ்க்கையில் நுழைய வேண்டும். அதனால் உலகியலில் மூழ்கும் அபாயம் இருக்காது.
ஆனால் வருத்தமான விஷயம் இந்தக் காலத்துப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்க எண்ணுகிறார்கள். இதனால் குழந்தைகளின் வாழ்க்கை பாழாவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. பள்ளிப் படிப்பை முடிக்கும்போதே, பையன்கள் தந்தை ஆகிவிடுகின்றனர். இதனால் அவர்கள் அங்கும் இங்கும் ஓடி, வேலை ஒன்றைத் தேடிக் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தேடினால்தான் ஒரு வேலை கிடைக்கும். ஆனால் அதில் கிடைக்கும் சொற்ப வருவாயை வைத்துக் கொண்டு எத்தனை பேரின் பசியைத் தீர்க்க முடியும்? கடைசியில் அவர்கள் பணம், பணம் என்று அலைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதில் கடவுளைப் பற்றி நினைக்க அவர்களுக்கு நேரம் ஏது? அப்படி என்றால் திருமணம் செய்து கொள்வது தவறா? அது கடவுளின் விருப்பத்திற்கு எதிரானதா என்ன? என்று பக்தர்களில் ஒருவர் கேட்டார்.
குருதேவர் அவருக்கு அலமாரியில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துத் தந்தார். அதில் ஏசு கிறிஸ்து திருமணத்தைப் பற்றிச் சொல்கின்ற பக்கத்தைப் படித்துப் பார்க்கச் சொன்னார். அதில் பின்வருமாறு எழுதியிருந்தது. சிலர் தாயின் கருவிலேயே பிரம்மசாரிகளாகப் பிறக்கிறார்கள். சிலர் பிறரால் பிரம்மசாரிகளாக உருவாக்கப்படுகிறார்கள். மற்றும் சிலரோ விண்ணுலக ராஜ்யத்திற்காகத் தங்களைத் தாங்களே பிரம்மசாரிகள் ஆக்கிக் கொள்கிறார்கள். அடைய முடிந்தவர்கள் அதை அடையட்டும். அதற்குப் பிறகு குருதேவர் செயின்ட் பால் எழுதிய நூலை எடுத்துப் படிக்கச் சொன்னார். அதில் பின்வருமாறு எழுதியிருந்தது: திருமணம் ஆகாதவர்களும், விதவைகளும் என்னைப்போல் உறுதியாக இருப்பார்களேயானால் இருக்கட்டும். அதனால் அவர்களுக்கு நன்மைதான். உறுதியில்லாதவர்கள் திருமணம் செய்து கொள்வதே நல்லது. ஏனெனில் மனம் புழுங்கிச் சாவதைவிட இல்லறம் நல்லது. அப்போது யாரோ இடைமறித்து, திருமணம் கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது என்கிறீர்களா? எல்லோரும் இப்படியே திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துவிட்டால் கடவுளின் படைப்புத் தொழில் நடப்பது எவ்வாறு? என்று கேட்டார்.
அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்துக்கொண்டே, அதைப் பற்றிக் கவலைப்படாதே. திருமணம் செய்து கொள்ள விரும்புவர்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. நான் சொன்னது எங்களுக்கிடையில் உள்ள விஷயம். சொல்ல வேண்டியதை நான் சொன்னேன். உன்னால் முடிந்ததை மட்டும் எடுத்துக் கொள். மற்றதை விலக்கிவிடு. இவ்வாறு குருதேவர் சரத் மற்றும் சசியின் மனதில் துறவிற்கான விதையைத் தூவினார்.
சுவாமி சாரதானந்த ஜயந்தி ஜனவரி 15
சுவாமி துரியானந்தர்: ஹரி (சுவாமி துரியானந்தர்) பாக்பஜாரிலுள்ள தீனநாத் பாசு என்பவரது வீட்டில் குருதேவரை முதன் முதலில் சந்தித்தார். ஹரி பிற்காலத்தில் அந்த நாளை நினைவுகூர்ந்தார். குருதேவர் மிகவும் ஒல்லியாகக் காணப்பட்டார். ஆடைகள் அவிழ்ந்துவிடாமல் இருக்க இடுப்பில் துணி ஒன்றை இறுக்கிக் கட்டியிருந்தார். அவர் அரையுணர்வு நிலையில் இருந்தார். அவர் கீழே இறங்கியபோது, ஆஹா! என்னவோர் அற்புதமான காட்சி அது அவரது முகத்தில் இனம்புரியாத அமைதி தவழ்ந்தது. சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள சுகதேவ முனிவர் இவர்தானோ என்று எனக்குத் தோன்றியது. தீனநாத் பாசு குருதேவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். ஹரி அவரைப் பின் தொடர்ந்தார். புறஉலக நினைவைத் திரும்பப் பெற்ற அவர் சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்த காளி தேவியின் திருவுருவப் படத்தின் முன்பு வீழ்ந்து வணங்கினார். பிறகு, கிருஷ்ணரும் காளியும் ஒருவரே என்பதை விளக்குகின்ற பாடல் ஒன்றைப் பாடி, அங்கிருந்த பக்தர்களை மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்த்தினார்.
ஹரிநாத் குருதேவருடன் பழக ஆரம்பித்தார். ஒருநாள் அவரிடம் காம எண்ணத்திலிருந்து முற்றிலுமாக விடுபடுவது எப்படி? என்று கேட்டார். குருதேவர் அதற்கு காம எண்ணத்தை ஏன் விட வேண்டும் என்கிறாய்? அதை வேறு திசையில் திருப்பிவிடு. காமம் என்றால்தான் என்ன? ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்பதுதானே! கடவுளை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்து, எல்லாம் சரியாகி விடும் என்றார். குருதேவரின் அறிவுரைகள் எளிமையாகவும் இயற்கையாகவும் இருந்தன. தக்க விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமையும் அவற்றிற்கு உண்டு. கிழக்கை நோக்கி முன்னேற ஆரம்பித்தால் மேற்கு திசை தானே விலகிவிடும். அதேபோல் இறைவன் மீது நாம் அன்பு செலுத்த ஆரம்பித்துவிட்டால் காமம், கோபம், பொறாமை ஆகிய எண்ணங்கள் நம்மை விட்டு விலகிவிடும் என்று குருதேவர் அடிக்கடி கூறுவார்.
அத்வைத வேதாந்தத்தில் அதிக ஈடுபாடு உடைய ஹரி, தத்துவ ஆராய்ச்சியில் மூழ்கினார். இதனால் அவர் கொஞ்ச காலம் குருதேவரிடமும் போகவில்லை. இத்தனை குருதேவர் அறிந்தார். சில நாட்கள் கழிந்தன. ஒருநாள் ஹரி குருதேவரைப் பார்க்கச் சென்றார். குருதேவர் அவரிடம் என்னப்பா, வேதாந்தம் படிப்பதிலும், ஆராய்ச்சிலும் நீ மூழ்கிவிட்டதாகக் கேள்விப்பட்டேன் அது நல்லதுதான். ஆனால் உன் வேதாந்தம் எதைப் போதிக்கிறது? பிரம்மம் மட்டுமே உண்மை, உலகம் உண்மையல்ல என்பதைத்தானே வேதாந்தத்தின் சாரம் இதுதானே? வேறு எதையாவது அது சொல்கிறதா? அது சொல்வது போல் உண்மையற்றதை விட்டுவிட்டு உண்மையைப் பின்பற்ற ஏன் தயங்குகிறாய்? என்று கேட்டார். ஹரிநாத்தின் வாழ்வில் இந்த நிகழ்ச்சி ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
சுவாமி துரியானந்த ஜயந்தி: ஜனவரி 23