பதிவு செய்த நாள்
11
ஜூலை
2016
06:07
கோவை: அமைச்சர்கள், ஆதீனங்கள் புடை சூழ, மடாதிபதிகள் முன்னிலையில், வெள்ளிங்கிரிமலையடிவாரம் பூண்டியிலுள்ள வெள்ளிங்கிரியாண்டவர் கோவிலில், கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு பாதியிலுள்ள, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பூண்டியில், வெள்ளிங்கிரியாண்டவர், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆறாயிரம் அடி உயரம் கொண்ட, வெள்ளிங்கிரி மலை உச்சியிலுள்ள, குகையினுள் சுயம்புவாக, சிவபெருமான் எழுந்தருளி காட்சிதருகிறார். தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும், பிப்., மார்ச், ஏப்., மே மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி, சுவாமியை தரிசனம் செய்கின்றனர். பல சிறப்புகளை பெற்ற வெள்ளிங்கிரி மலைக்கு சென்று தரிசிக்க முடியாதவர்கள், பூண்டியிலுள்ள, சுவாமியை வழிபாடு செய்வதற்காக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், பூண்டி விநாயகர், வெள்ளிங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்பாளை நிறுவி வழபாடு செய்தனர், பின்னர் கோவில் கட்டப்பட்டது.
தற்போது அறநிலையத்துறை வசம் கோவில் இருப்பதால், அதிகாரிகள் மற்றும் ஆதீனங்கள், மடாதிபதிகள் குழு திருக்குட நன்னீராட்டு செய்ய முடிவு செய்தது. அதனடிப்படையில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்தில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோபுர விமானம், மதில் சுவர்களில் வண்ணம் பூசுதல், கொடிமரம், தீபக்கம்பம் விரிவுபடுத்துதல், உள்ளிட்ட பல்வேறு பணிகள், 55 லட்ச ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, கோவில் நிதி, 35 லட்ச ரூபாயும், கட்டளை தாரர்கள் வாயிலாக, 20 லட்ச ரூபாயும் திருப்பணிக்காக செலவிடப்பட்டது. காலை 9:30 மணிக்கு, கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை வளாகத்தில், யாகவேள்வியில் வைக்கப்பட்ட, புனிதநீரை, சிவாச்சாரியார் எடுத்துவர, அதைப்பெற்றுக்கொண்ட ஆதீனங்கள், விமானக்கலசங்களில், புனித நீரை ஊற்றினர். ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என்று பக்தர்கள் கோஷம் எழுப்பினர். கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. முன்னதாக. முதல், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் கால வேள்விகள் நடந்தன. பேரொளிவழிபாடு நிறைவடைந்து, புனித நீர் நிரப்பிய திருக்குடங்கள் கோபுரங்களுக்கு எழுந்தருளுவிக்கப்பட்டு அதன் பின்பு திருக்குடநன்னீராட்டு நடந்தது. இந்நிகழ்ச்சியில், பேரூராதீனம் இளையபட்டம் மருதாசலஅடிகள், சிரவையாதீனம் குமரகுருபரசுவாமிகள், பிள்ளையார்பீடம் பொன்மணிவாசக அடிகள் உள்ளிட்ட ஏராளமான ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்ககளும், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும் திருக்குடநன்னீராட்டு விழாவில் பங்கேற்றனர்.