Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் ... 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-3 | திருத்தொண்டர் புராணம் 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் ...
முதல் பக்கம் » பனிரெண்டாம் திருமறை
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-2 | திருத்தொண்டர் புராணம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 செப்
2011
04:09

அமர் நீதி நாயனார் புராணம்

சோழநாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் தோன்றியவர் அமர்நீதி நாயனார். அவர் திருநல்லூரை விரும்பி அவ்வூரில் தங்கியருக்கலானார். அவ்வூரில் ஒரு மடத்தையும் ஏற்படுத்தினார். அவர் சிவனடியார்க்கு ஆடை, கீள், கோவணம் முதலியவற்றை அளித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய அவரிடம் ஓர் அந்தணர் வந்தார். அவர் தம்மிடம் உள்ள கோவணத்தைப் பாதுகாத்து வைத்திருக்கும்படிச் சொல்லி விட்டு நீராடச் சென்றார். சென்றவர் நனைந்தபடி வந்தார். அமர்நீதியாரிடம் கொடுத்து வைத்திருந்த கோவணத்தைத் திரும்பத் தரும்படி வினவினார். என்னே வியப்பு! அமர்நீதியார் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் அக்கோவணத்தைக் காணவில்லை. செய்வது இன்னது என்று தெரியாது திகைத்தார். அவர் வேறு கோவணத்தைத் தருவதாகச் சொன்னார். அதை அந்தணர் ஏற்றுக்கொள்ளவில்லை! பொன்மணி முதலியவை தர முன்வந்த போதும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னிடம் உள்ள மற்றொரு கோவணத்துக்கு நிகரான எடையுள்ள கோவணத்தைத் தரவேண்டும் என்றார். அவர் விரும்பியபடியே ஒரு துலாக்கோலில் அந்தணர் கோவணத்துக்கு ஈடாகத் தன்னிடம் இருந்த புதிய கோவணத்தை இட்டார். அது சமமாகவில்லை. அதனால் தன்னிடம் இருந்த கோவணங்களையெல்லாம் இட்டும் சமமாகவில்லை. மேலும் தன்னிடம் இருந்த பட்டாடை, பொன், வெள்ளி, மணி முதலியவற்றை இட்டார். அப்போதும் நிகராகவில்லை, அதனால் வியப்படைந்த அமர்நீதியார் இறைவரை வணங்கித் தாமும் தம் மனைவியுமாகத் துலாத்தட்டில் ஏறி நின்றனர். அப்போது தட்டுகள் சமமாய் நின்றன. இறைவர் அவர்க்குக் காட்சி தந்து பேரின்ப வீட்டை அளித்தார்.

திருச்சிற்றம்பலம்

502. சீரில் நீடிய செம்பியர் பொன்னி நன்னாட்டுக்
காரின் மேவிய களி அளி மலர்ப் பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழு மணிவீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை

தெளிவுரை : சிறப்பில் நீடிய சோழ மன்னர்களின் காவிரி பாய்கின்ற நல்ல நாட்டிலே, மேகம் போல் அமைந்த, களிப்புக் கொண்ட வண்டுகள் மொய்த்த, பூஞ்சோலைகளால் சூழப் பெற்றும், தேவர்களுடன் கூடிய செழுமையான மணிகளையுடைய தெருக்களால் சிறக்கப் பெற்றும், உலகில் என்றும் நிலைத்த பெருமையுடைய பதியாவது, பழையாறை என்பதாகும்.

503. மன்னும் அப் பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார்
பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூந்துகில் முதலா
எந் நிலத்தினும் உள்ளன வரு வளத்து இயல்பால்
அந் நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார்

தெளிவுரை : அமர்நீதியார் என்று அழைக்கப்படுபவர், நிலை பெற்ற அந்த நகரத்தில் வணிகர்களுக்குரிய குலத்திலே தோன்றியவர். பொன்னும் முத்தும் மற்ற நல்ல மணிகளும் பிற பூந்துகில் முதலியனவுமாக எல்லா நிலத்தினின்றும் வருகின்ற வளங்கள் எல்லாம் மிகுதியாய்ப் பெற்ற இயல்பால் அந்த வாணிக நிலையில் மிக்கவர்.

504. சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார்
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்துக்
கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்

தெளிவுரை : அவர் தம் மனத்துள் வைத்துச் சிந்தை செய்வது சிவபெருமான் திருவடியையே அல்லாது வேறொன்றும் இல்லாதவர், அந்தி மாலையின் செவ்வானம் போன்ற நிறம் கொண்ட சிவபெருமானுக்கே உரிய அடியார்களை அமுது செய்வித்து, அவர்களின் மனக் கருத்தை அறிந்து அதற்கேற்ற வண்ணம் கீளும் உடையும் தந்து அதன் பயனாகத் தம்மிடம் வந்த செல்வ வளங்களால் தாம் இந்த வுலகத்தில் பிறவி பெற்றதனால் உண்டாகும் பயனைப் பெற்று வந்தார்.

505. முக்கண் நக்கராம் முதல்வனார் அவர் திரு நலூர்
மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்
தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார்
தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர்

தெளிவுரை : அவர் மூன்று கண்களை யுடையவராய் (நக்கராய்) நிர்வாணராய் உள்ள முழு முதற்கடவுளான சிவ பெருமானின் திருநல்லூரில் மிக்க சிறப்பு வளரும் திருவிழா விருப்பத்துடன் வணங்கி, அடியார்கள் உணவு கொள்வதற்குத் தக்க திருமடத்தை அமைத்தார். பின் கூடிய சுற்றத்தாரும் தாமுமாய்த் தூயவரான அவர் பழையாறை என்ற ஊரினின்று திருநல்லூரை வந்து சேர்ந்தார்.

506. மருவும் அன்பொடு வணங்கினர் மணி கண்டர் நல்லூர்த்
திரு விழா அணி சேவித்துத் திரு மடத்து அடியார்
பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி
உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாள் இடை ஒருநாள்

தெளிவுரை : பொருந்திய அன்போடு வணங்கியவராகத் திரு நீலகண்டரான சிவபெருமான் வீற்றிருக்கும் திருநல்லூரின் திருவிழாச் சிறப்பைத் தரிசித்து வணங்கியும், திருமடத்தில் சிவனடியார்கள் மேன்மேலும் பெருகும் இன்பத்துடன் உணவு கொண்டிடச் செய்தும் உருகிய மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். அந்நாள்களில் ஒருநாள்.

507. பிறைத் தளிர் சடைப் பெருந்தகைப் பெரும் திரு நல்லூர்க்
கறைக் களத்து இறை கோவணப் பெருமை முன் காட்டி
நிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
மறைக் குலத்தொரு பிரமசாரியின் வடிவு ஆகி

தெளிவுரை : பிறைச் சந்திரன் என்ற தளிரைச் சூடிய சடையையுடைய பெருந்தகையான திருநல்லூரில் எழுந்தருளிய நீலகண்டரான இறைவர், தம் கோவணத்தின் பெருமையைக் காட்டி அதன் மூலம், மிக்க அன்புடைய தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டு, வேதியர் குலத்துத் தோன்றிய ஒரு பிரமசாரியின் கோலத்தைக் கொண்டு.

508. செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடிச் சிகையும்
சைவ வெண் திரு நீற்று முண்டகத்து ஒளித் தழைப்பும்
மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும்
கையில் மன்னிய பவித்திர மரகதக் கதிரும்

தெளிவுரை : சிவந்த சிறு சடையை மறைத்த திரு முடிச்சிகையும், சைவ உபயத்துக்குரிய வெண்ணீற்றைத் திரிபுண்டரமாய் அணிந்த தன் ஒளியின் தழைப்பும், தம் திருமேனியில் வெண்மையான புரிகளைக் கொண்ட பூணூலுடன் விளங்கும் மான்தோலும், கைவிரல் பொருந்திய மரகதக் கதிர்விட்டு ஒளிரும் நீண்ட மோதிரமும்.

509. முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில்
தஞ்ச மா மறைக் கோவண ஆடையின் அசைவும்
வஞ்ச வல் வினைக் கறுப்பறும் மனத்து அடியார்கள்
நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீணிலம் பொலிய

தெளிவுரை : முஞ்சிப் புல்லைத் திரித்து அரை ஞாணாக அணிந்த இடையில், அடைக்கலமாக அடைந்த மறையான கோவண ஆடையின் பிணிப்பும் கொண்ட தோற்றம் கொண்டவராகி, வஞ்சமுடைய தீவினையான கறுப்பு நீங்கிய உள்ளத்தையுடைய அடியவரின் மனத்தில் நீங்காமல் நின்ற திருவடி மலர்கள் பெரிய நிலத்தில் விளங்க,

510. கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருகத்
தொண்டர் அன்பு எனும் தூ நெறி வெளிப் படுப்பார் ஆய்த்
தண்டின் மீது திரு கோவணம் நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்து அமர் நீதியார் திரு மடம் குறுக

தெளிவுரை : கண்டவர் எல்லார்க்கும் மிக்க ஆசையினால் உள்ளம் கரைந்து உருகுமாறு, தொண்டரின் அன்பு என்னும் தூய நெறியை வெளிப்படுத்துவராகித் தம் கைகளில் தாங்கிய தண்டில் இரண்டு கோவணமும், திருநீற்றுப் பையும், தருப்பைப் புல்லும் கொண்டவராய் நடந்து வந்து அமர் நீதியாரின் திருமடத்தை அடைந்தார்.

511. வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து
கடிது வந்து எதிர் வணங்கி இம் மடத்தினில் காணும்
படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ
அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர்

தெளிவுரை : அமர்நீதியார், அவரது வடிவத்தைக் கண்டவுடன், உள்ளே மலர்ந்த உள்ளத்தை விட முகமானது மிகுதியும் மலர்ச்சியடைந்து, விரைவில் எதிர் சென்று வணங்கி, இந்த மடத்தில் முன் காணும்படி இல்லாத தாங்கள், இன்று அடியேன் வெளிப்படக் காணும்படி வந்து சேர்ந்ததற்காக முன்னே அடியேன் செய்த தவம் என்னோ ? என்று உரைத்தார்.

512. பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு
ஊணும் மேன்மையில் ஊட்டி நற் கந்தை கீள் உடைகள்
யாணர் வெண் கிழிக் கோவணம் ஈதல் கேட்டு உம்மைக்
காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன்

தெளிவுரை : இங்ஙனம் தம்மை வழிபட்டு நின்ற அடியவரான அமர்நீதியாரைப் பார்த்து, நீவிர் அன்பால் பெருகிய அடியார்களுக்கு மேன்மையாய் உணவை ஊட்டிக் கந்தை, கீள், உடை என்ற இவற்றையும் புதிய வெண்மையான உயர்ந்த கோவணத்தையும் கொடுப்பதைக் கேட்டு உம்மைப் பார்க்க வந்தோம் என்று நெற்றிக் கண்ணை மறைத்துக் கொண்டு வந்த இறைவர் கூறினார்.

513. என்று தம்பிரான் அருள் செய இத் திரு மடத்தே
நன்று நான் மறை நற்றவர் அமுது செய்து அருளத்
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச

தெளிவுரை : இங்ஙனம் தம் இறைவர் அருளிச் செய்ய, இந்த மடத்தில் பெரிய நான்மறைத் தவ ஒழுக்கத்தினர் நன்கு உண்ணத் தக்கபடி, நிறைந்த வேதியர்கள் தூய்மையாகச் சமைப்பதும் உண்டு. ஆதலால் நீரும் இங்கு உணவு உண்டருளல் வேண்டும் என்று அமர்நீதியார் சொல்லி (வணங்கினார்) வணங்க,

514. வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே
அணங்கு நீர்ப் பொன்னி ஆடி நான் வர மழை வரினும்
உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண்
குணங் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்துக் கொடுப்பார்

தெளிவுரை : இப்படி வணங்கிய அமர்நீதியாரைப் பிரமசாரியாய் வந்த வேதியர் நோக்கி, அன்பரான அவரது வேண்டுகோளுக்கு இணங்கி, தெய்வத் தன்மையுடைய நீர் பொருந்திய காவிரியாற்றில் நீராடி வரும் போது மழை உண்டாக நேர்ந்தாலும், அச்சமயத்தில் உதவுவதற்கென, இந்தக்கோவணத்தை உன்னிடம் பாதுகாத்து வைத்துப் பின் எனக்குத் தருவாயாக ! என்று சொல்லி, வெண்மையான கோவணத்தைத் தம் தண்டினின்று அவிழ்த்து அதைத் தந்தவராய்,

515. ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு உமக்கே
ஈங்கு நான் சொல்ல வேண்டுவது இல்லை நீர் இதனை
வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே
ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார்

தெளிவுரை : சிறந்த கோவணத்தின் பெருமையை உள்ள வாறு உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. நீர் இதை வாங்கி நான் நீராடித் திரும்பி வரும்வரையில், உம்மிடத்தில் தவறாது காப்பாற்றி வைத்துத் திரும்ப என்னிடம் தருவீராக ! என்று சொல்லி அமர்நீதியாரின் கையில் அக் கோவணத்தை அளித்தார்.

516. கொடுத்த கோவணம் கைக் கொண்டு கோது இலா அன்பர்
கடுப்பில் இங்கு எழுந்து அருளும் நீர் குளித்து எனக் கங்கை
மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அம் மறையோர்
அடுத்த தெண்டிரைப் பொன்னி நீர் ஆட என்று அகன்றார்

தெளிவுரை : குற்றம் இல்லாத அமர்நீதியார் இறைவர் தந்த கோவணத்தைப் பெற்றுக் கொண்டு, நீவிர் நீராடி விரைவில் இங்கு எழுந்தருளுக ! எனக் கூறினார். கங்கையை அணிந்த வளர்சடையை மறைத்த அந்த வேதியர் அங்குப் பக்கத்தில் பொருந்தியுள்ள தெளிவான அலைகளையுடைய காவிரியாற்றில் நீராடச் சென்றார்.

517. தந்த கோவணம் வாங்கிய தனிப் பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும்
கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்புச்
சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்தின் வைத்தார்

தெளிவுரை : வேதியர் தந்த கோவணத்தைப் பெற்றுக் கொண்ட ஒப்பில்லாத தொண்டரான அமர்நீதியார், முந்தையந்தணரான அவரது சொல்லை ஏற்று, இதற்கு முன் தாம் அடியார்களுக்குத் தருவதற்கென வைத்திருக்கும் கந்தை, கீள், உடை. கோவணம் என்ற இவற்றை வைத்த இடத்தில் அல்லாது ஒரு காவல் பொருந்திய இடமாக மனத்தில் எண்ணி அங்ஙனமே தனியான ஓரிடத்தில் ஒப்பற்ற காப்பில் அதை வைத்தார்.

518. போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப்
பானலந்துறைப் பொன்னி நீர் படிந்து வந்தாரோ
தூநறுஞ் சடைக் கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ
வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார்

தெளிவுரை : நீராடச் சென்ற இறைவரான வேதியர் வைத்த கோவணத்தை மறையும்படி செய்து பின்பு நீலோற்பலம் மலர்வதற்கு இடமான அழகிய துறைகளையுடைய காவிரியில் ஆடித்திரும்பினாரோ ! அல்லது தூய மனம் உடைய சடையில் உள்ள கங்கை நீரில் ஆடி வந்தாரோ ! நாம் அறியோம் ! ஆயின் வானத்தினின்றும் வரும் நீரான மழை பெய்ய அதில் நனைந்து வந்து சேர்ந்தார்.

519. கதிர் இளம் பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதில்
முதிரும் அன்பு உடைத் தொண்டர் தாம் முறைமையின் முன்னே
அதிக நன்மையின் அறு சுவைத் திருவமுது ஆக்கி
எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர்

தெளிவுரை : கதிரையுடைய இளம்பிறையை அணிந்த இறைவர் வந்து சேர்ந்த போது முதிரும் அன்புடைய நாயனார், தாம் அவர் வருவதற்கு முன் முறையின்படி அதிக நன்மையில் ஆறு சுவையும் பொருந்தத் திருவமுது ஆக்கும்படி செய்து, அவர் வந்து சேர்ந்ததும் எழுந்து அவரை எதிர் கொண்டு வணங்கி நிற்க, நிறைந்த பூணூலை அணிந்த மார்பையுடைய இறைவர்.

520. தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி
மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம் நான் தந்த கோவணத்தைக்
கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவணக் கள்வர்

தெளிவுரை : தொண்டரின் அன்பு என்ற தூய்மையான நீரில் ஆட விரும்பி, அவரைப் பார்த்து, செறிவான குளிர்ந்த நீரிலே முழுகப் பெற்றதால் ஈரமான கோவணத்தை மாற்றுதற்குத் தண்டின் மேல் உள்ளது ஈரமாக உள்ளது ஆதலால் நான் உன்னிடம் தந்த கோவணத்தைக் கொண்டு வாரும் ! எனவுரைத்தார் கோவணக் கள்வர்.

521. ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி
எய்தி நோக்குறக் கோவணம் இருந்த வேறு இடத்தில்
மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன்
செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார்

தெளிவுரை : தலைவரான இறைவரின் வஞ்சத்தை அறிந்து கொள்ளாத அமர்நீதியார் விரைவாக உள்ளே போய்ப் பார்க்வே, தனியான இடத்தில் வைத்திருந்த அவரது கோவணத்தை அவர் கண்டிலர். நான் முன்னே இங்குச் சேமமாய் வைத்த கோவணம் செய்தது என்ன? என்று திகைத்துத் தேடலானார்.

522. பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின நெறி மேல்
சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில்
எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார்
அங்கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப் பட்டார்

தெளிவுரை : இறைவரின் வெண்மையான கிழியான கோவணம் போன வழியில் சந்தேகம் இல்லாமல் தப்பி விட்டது என்று முடிவு செய்து, தம் துகில் முதலான பொருள்களிலும் எங்கும் தேடி அறிந்தும் கண்டிலர்; என்ன செய்வார்? ஒன்றும் புலப்படாது திகைத்தார். அழகிய அருட் கண்ணுடைய இறைவரின் மாயையில் அகப்பட்டார்.

523. மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்
இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து
நினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார்
புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார்

தெளிவுரை : மனைவியோடும் சுற்றத்தவருடனும் தாமுமாக இத்தகைய ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்ததே என்று மிக்க துன்பத்தை அடைந்தார்; வேறு எண்ணத் தக்கது ஒன்றும் இல்லாது வருந்தினார். இந்நிலையில் அவர் உள்ளே நிற்கவும் மாட்டார். வேதியர் உடுத்துக் கொள்வதற்கு வேறொரு கோவணத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

524. அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை
வைத்த இடத்து நான் கண்டிலேன் மற்றும் ஓர் இடத்தில்
உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன்
இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று

தெளிவுரை : அமர்நீதியார் இறைவரின் முன் போய், அடிகளே நீர் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அதை வேறிடத்தில் வைத்து ஒளித்தவர் எவரும் இல்லை. அது மறைந்த விதத்தை நான் அறியேன்; இத்தகைய அதிசயத்தை வேறு எங்கும் நான் கண்டதில்லை என்று கூறினார். மேலும் அவர்,

525. வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன்
கீறு கோவணம் அன்று நெய்தமைத்தது கிளர் கொள்
நீறு சாத்திய நெற்றியீர் மற்றுது களைந்து
மாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க

தெளிவுரை : வேறு நல்ல கோவணத்தை ஈரம் மாற்றி நீங்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்துடன் கொணர்ந்தேன். அக்கோவணம் கிழிந்தது அன்று, கோவணமாகவே செய்ததாகும். விளங்கும் திருநீறு அணிந்த நெற்றியை யுடையவரே ! உம் ஈரமான கோவணத்தைக் களைந்து, அதற்கு மாறாக இதை உடுத்திக் கொண்டு என் பிழையைப் பொறுத்தருளுக ! எனக் கூறி (வணங்கினார்) வணங்க.

526. நின்ற வேதியர் வெகுண்டு அமர் நீதியார் நிலைமை
நன்று சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்றால்
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு
ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா

தெளிவுரை : அங்கு நின்ற வேதியரான இறைவர் அமர் நீதியரே ! நீர் சொல்லும் நிலை மிகவும் நன்று ! இடையில் அதிக நாள் கடக்கவும் இல்லை ! இன்றைக்கு நான் உம்மிடத்தில் கொடுத்து வைத்த கோவணத்தை நீரே கவர்ந்து கொண்டு, அதற்கு மாறாக வேறு ஒரு கோவணத்தைப் பெற்றுக் கொள்க எனக் கூறுவதா? எனக்கூறி,

527. நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும்
சொல்லும் விதத்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ
ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று
எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான்

தெளிவுரை : நல்ல கோவணம் தருகின்றேன் என்று உலகில் பல நாளும் கூறச் செய்வது என் கோவணத்தைக் கொள்வதற்குத் துணிவு கொண்டோ? விரைவாக நீர் இங்குச் செய்த வாணிகம் உமக்கு அழகாயுள்ளது ! என்று எல்லை இல்லாதவரான இறைவர் எரி துள்ளியதைப் போல் சினந்தார்.

528. மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுளப்
பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து
சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள் செய்வீர் அடியேன்
அறிய வந்தது ஒன்று என அடி பணிந்து அயர்வார்

தெளிவுரை : மானை ஒளித்து அதற்கு மாறாகத் தண்டை எடுத்து வேதியர் இவ்வாறு சினம் கொள்ள, உணர்வெல்லாம் பொறி கலங்கியவராகி முகம் வாட்டம் அடைந்து, சிறியவனான என் இந்தப் பெரும் பிழையைப் பொறுத்தருளுக ! இது நான் அறியுமாறு நிகழ்ந்த செயலன்று ! என்று அடியை வணங்கித் தளர்வார்.

529. செயத்தகும் பணி செய்வன் இக் கோவணம் அன்றி
நயத் தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள்
உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்காப்
பயத்தொடுங்குலைந்து அடி மிசைப் பல முறை பணிந்தார்

தெளிவுரை : தாங்கள் செய்யத் தகுந்த செயல் எனக் குறிப்பது எதுவோ அதைச் செய்வேன், இந்தக் கோவணமே அன்றி, விருப்பத்தக்க நல்ல பட்டாடைகள் மணிகள் என்ற இவற்றில் உயர்ந்தன பலவற்றைக் கொள்ளுங்கள் என உடலில் அடங்காத அச்சத்துடன் அடியில் பல முறை விழுந்து வணங்கினார் அமர் நீதியார்.

530. பணியும் அன்பரை நோக்கி அப் பரம் பொருளானார்
தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய
அணியும் கோவணம் நேர் தர அமையும் என்றான்

தெளிவுரை : அங்ஙனம் தம்மை வணங்கும் அடியாரை இறைவர் நோக்கி, உள்ளத்தில் சினம் தணிந்தார் போல் காட்டி, நீவிர் அளிக்கும் மணியும் பொன்னும் நல்ல ஆடையும் பிறவும் எனக்கு என்ன பயனைச் செய்யும்? (அவற்றால், நான் செய்வது என்ன?) நான் உடுக்கும் கோவணத்துக்குச் சமமான கோவணத்தைத் தருவதே பொருந்துவதாகும் என்று அருள் செய்ய,

531. மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார்
அலர்ந்த வெண்ணிறக் கோவணம் அதற்கு நேராக
இலங்கு பூந் துகில் கொள்வதற்கு இசைந்து அருள் செய்யீர்
நலங் கொள் கோவணம் தரும் பரிசு யாதென நம்பர்

தெளிவுரை : அவர் கூறியதைக் கேட்டு மலர்ந்த உள்ளத்தை உடையவரான வணிகருள் ஏறு போன்ற அமர் நீதியார், வெண்மை நிறம் கொண்ட தங்கள் கோவணத்துக்குப் பிரதியாய் விளங்கும் பூந்துகில் கொள்வதற்கு இசையவில்லை. ஆனால் நன்மையுடைய கோவணம் தருகின்ற வகை யாது? என்று வினவ, இறைவர்,

532. உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர்
கொடுத்ததாக முன் சொல்லும் அக் கிழிந்த கோவணநேர்
அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழாது
எடுத்து மற்று இதன் எடையிடும் கோவணம் என்றார்

தெளிவுரை : நாம் உடுத்தியிருக்கும் கோவணம் தவிர, உம் கையில், நாம் தர, நீர் கெட்டுப் போக்கியதாய் முன்னே சொன்ன அந்தக் கிழிந்த கோவணத்துக்கு நிகராய்க் கூடிய கோவணம் இதுவாகும் எனச் சொல்லித் தண்டின்மீது கட்டியிருந்ததை அவிழ்ந்து எடுத்து, இதற்குச் சமமான எடை கொண்ட கோவணத்தைத் தருவீராக ! என்று சொன்னார்.

533. நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்டக்
குன்ற வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்
நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணத் தட்டு
ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார்

தெளிவுரை : அன்பரான அமர்நீதியார் மிகவும் நன்று என்று ஒரு துலையை (தராசினை) நாட்ட, மலையை வில்லாகக் கொண்ட இறைவர் அந்தத் துலையில் ஒரு தட்டில் தம் கோவணத்தை வைத்தார். அங்கு நின்ற அமர்நீதியாரும் தம் கையில் வைத்திருந்த நெய்ததான கோவணத்தைத் துலையின் மற்றத் தட்டில் இட, அஃது அக் கோவணத்துக்கு நேரான எடையாய் நில்லாததைக் கண்டார்.

534. நாடும் அன்பொடு நாயன்மார்க் களிக்க முன் வைத்த
நீடு கோவணம் அடைய நேராக ஒன்று ஒன்றாக்
கோடு தட்டின் மீது இடக் கொண்டு எழுந்தது கண்டு
ஆடு சேவடிக்கு அயரும் அற்புதம் எய்தி

தெளிவுரை : பெருகிய அன்புடன் தாம் அடியார்களுக்கு அளிக்கும் பொருட்டு முன் வைத்திருந்த நீண்ட கோவணங்களை, முழுவதும் நேராகும் என்று ஒவ்வொன்றாக எடுத்துக் கோடு தட்டின் மீது (உயர்ந்து நிற்கும் தட்டின் மீது) வைக்க வைக்க, அது அவற்றைக் கொண்டு மேல் எழுந்தே நின்றது. அதைக் கண்டு அம்பலத்தில் ஆடும் இறைவரது திருவடிக்கு அடிமை செய்யும் நாயனாரும், இதுவென்ன? என்று அதிசயம் அடைந்து,

535. உலகில் இல்லதோர் மாயை இக் கோவணம் ஒன்றுக்கு
அலகில் கோவணம் ஒத்தில என்று அதிசயத்துப்
பலவும் மென் துகில் பட்டுடன் இட இட உயர
இலகு பூந்துகிற் பொதிகளை எடுத்து மேல் இட்டார்

தெளிவுரை : இந்த உலகத்தில் இல்லாத மாயை இதுவாகும் ! இந்த ஒரு கோவணத்துக்கு அளவில்லாத கோவணங்கள் நிகராவதில்லை ! என்று வியந்து, அதன் பின்பும், மென்மையான ஆடைகள், பட்டுக்கள் முதலான பலவற்றையும் இடவும், அடியாரின் அந்தத் தட்டு உயரவே நின்றது. அதனால் மேலும் பூந்துகில் மூட்டைகள் முதலானவற்றை எடுத்து அவற்றின்மீது இட்டார்.

536. முட்டில் அன்பர் தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்ற தட்டு அருளொடு தாழ்வு உறும் வழக்கால்
பட்டொடும் துகில் அநேக கோடிகளிடும் பத்தர்
தட்டு மேற் படத் தாழ்ந்தது கோவணத் தட்டு

தெளிவுரை : முட்டு இல்லாத அன்பரின் அன்பை இடுகின்ற தட்டை நோக்க, இறைவரின் தட்டு மட்டும் அருளுடனே தாழும் என்ற வழக்கால், பட்டுக்களுடனே துகில்களும் பல கோடிகளாய் இடவும், நாயனாரின் தட்டு மேலாகவே நிற்க, மறையவரின் கோவணம் இட்ட தட்டு மட்டும் தாழ்ந்தே நின்றது.

537. ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன்
தூ நறுந் துகில் வர்க்க நூல் வர்க்கமே முதலா
மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால்
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச

தெளிவுரை : இவ்வாறு நிகழ்ந்ததைப் பார்த்து அடியவரான நாயனார் இறைவன் முன், இத்தட்டிலே தூய நல்ல ஆடை வருக்கத்தையும், அவற்றின் காரணமான நூல் வருக்கங்களையும், இவை முதலான அளவில்லாவற்றை மேன்மேல் குவித்திடவும் தட்டின் ஓரளவு இவ்வளவாய் நின்றது. இனி மற்ற என் செல்வங்களையும் அடியேன் இத்தட்டில், இடத் தாங்கள் இசைய வேண்டும் என்று வணங்க,

538. மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே
இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என் கொல்
அங்கு மற்று உங்கள் தனங்களினாகிலும் இடுவீர்
எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார்

தெளிவுரை : உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்ட இறைவர் அவரது வேண்டுகோளுக்கு இசைந்து இங்கு நாம் இனிவேறு ஒன்று கூற என்ன உள்ளது? அங்கு மற்றுமுள்ள செல்வங்களில் உள்ளவற்றையாயினும் இடுக ! எப்படியேனும் எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது ஒன்று தான் நாம் விரும்புவதாகும் என மொழிந்தார்.

539. நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணித் திரளும்
பல் வகைத் திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும்
எல்லை இல் பொருள் சுமந்து அவர் இட இடக் கொண்டே
மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர்

தெளிவுரை : நல்ல பொன்னுடன் வெள்ளியும் நவ மணித்தொகுதிகளும் மற்றும் பலவகை உலோக வகைச் சேர்க்கையால் ஆனவையும் ஆக அளவற்ற பொருள்களை அவர் சுமந்து வந்து அந்தத் தட்டில் இட இட அத்தட்டு அவற்றையெல்லாம் தன்னுள் கொண்டு நிறைவுடையதாயும் மேலேயே நின்றது. உலகத்தவர் அதைக் கண்டு வியப்புக் கொண்டனர்.

540. தவம் நிறைந்த நான் மறைப் பொருள் நூல்களால் சமைந்த
சிவன் விரும்பிய கோவணம் இடும் செழுந்தட்டுக்கு
அவனி மேலமர் நீதியார் தனமெலாம் அன்றிப்
புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ

தெளிவுரை : தவத்தால் நிறைந்த நான்மறையின் பொருள் நூல்களால் அமைந்து இறைவர் விரும்பியதாய்ச் செழும் தட்டில் இட்ட கோவணத்துக்கு இந்த ஒரு பூமியில் அமர் நீதியாரின் செல்வங்கள் மட்டுமே அல்லாது எல்லா உலகங்களும் நேர் நிற்க மாட்டா என்று கூறுவதும் அதற்கு ஒரு புகழாக அமையுமோ?

541. நிலைமை மற்றது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று
உலைவில் பஃறனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன்
தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையில் ஏறிடப் பெறுவது உன் அருள் எனத் தொழுதார்

தெளிவுரை : அந்த நிலைமையைப் பார்த்த நாயனார், மறையவரான இறைவரின் முன்னம் நின்று, அழியாத என்னிடம் இருந்த செல்வங்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் துலைத் தட்டில் முடிய வைத்தேன். தலைவரே ! நானும் எனது மனைவியும் மகனும் தகுமானால், துலையில் இட ஏறப்பெறுவதற்கு உன் அருள் இருப்பதாக ! என்று கூறி வணங்கினார்.

542. பொச்சமில்ல அடிமைத் திறம் புரிந்தவர் எதிர்நின்று
அச்ச முன்புற உரைத்தலும் அங்கணர் அருளால்
நிச்சயித்தவர் நிலையினைத் துலை எனுஞ் சலத்தால்
இச் சழக்கினின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார்

தெளிவுரை : குற்றம் அற்ற அடிமைத் தன்மையுடைய நாயனார் எதிரில் நின்று தம் முன்பு அச்சம் உற இவ்வாறு சொல்லவும் அங்கணரான மறையவர், அவரது நிலையை நிச்சயித்து, துலை என்ற காரணத்தால் இந்த வுலகத் துன்பத்தினின்று கரை ஏற்றுபவராய், அவரும் அவருடைய மனைவியாரும் மகனும் துலையில் ஏறுதற்குச் சம்மதித்தார்.

543. மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப்
புனை மலர்க் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்
தனை உடன் கொடு தனித் துலை வலம் கொண்டு தகவால்
இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து

தெளிவுரை : மனத்தில் மகிழ்ச்சி கொண்டு அவரது திருவடியைத் தலையால் வணங்கி, கட்டப்பட்ட மலர் சூடிய கூந்தலையுடைய மனைவியாருடன் மகனையும் துலையில் இடுவதற்காக உடனே கொண்டு தகுதியால் இத்தகைய செயலிலே துணிந்து ஏறுகின்ற அடியார் எடுத்துச் சொல்பவராய்.

544. இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை
பிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க என்று
மழைத் தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத்து ஓதினார் ஏறினார் தட்டில்

தெளிவுரை : மேற் கொண்ட அன்பால் இறைவரின் திருநீற்றிலே கொண்டு செலுத்திய அடிமைத் திறத்திலே இது வரை நாங்கள் தவற வில்லை என்பது உண்மையானால் பெருந்துலையானது நேர் நிற்பதாகுக ! எனக் கூறி, மழையால் நிறைந்த நீர் நிலைகளும் சோலைகளும் சூழ்ந்த திருநல்லூரில் விளக்கம் பெற எழுந்தருளியுள்ள இறைவரைத் துதித்துத் தழைந்த திரு ஐந்தெழுத்தை (பஞ்சாட்சரத்தை) விதிப்படி ஓதித் துலைத்தட்டில் ஏறினார்.

545. மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற
அண்டர் தம்பிரான் திரு அரைக் கோவணம் அதுவும்
கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமைத்
தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அத் துலைதான்

தெளிவுரை : மிக்க அன்புடன் மற்றவர்கள் மகிழ்ந்து உடனே தட்டில் ஏறினர். ஏற, எல்லா அண்டத்தவர்க்கும் தலைவரான இறைவரின் திருவரையில் அணியும் கோவணமும், அவரிடம் கொண்ட அன்பினால் குறையாத அடியவரின் தொண்டும் ஒப்பானவை யாதலால் மேலும் கீழுமாய் நிற்பதின்றி ஒத்துத் துலை நேர் நின்றது.

546. மதி விளங்கிய தொண்டர் தம் பெருமையை மண்ணோர்
துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர் தொழுதார்
கதிர் விசும்பு இடை கரந்திட நிரந்த கற்பகத்தின்
புதிய பூ மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்

தெளிவுரை : அறிவால் விளக்கம் பெற்ற அடியாரின் பெருமையை இவ்வுலத்தவர் யாவரும் துதித்து எங்கும் அதிசய உணர்ச்சி உண்டாகத் தொழுதார்கள். ஒளிக்கதிரையுடைய வான் உலகத்தினின்றும் அந்த வெளி மறைவு பெறும்படி நிரம்பிய புதிய இனிய கற்பகமலர்களை மழையெனத் தேவர்கள் மகிழ்ச்சியுடன் பொழிந்தனர்.

547. அண்டர் பூ மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர்ப்
பண்டு தாம் பயில் கோலமே விசும்பினிற் பாகங்
கொண்ட பேதையும் தாமுமாய்க் காட்சி முன் கொடுத்தார்

தெளிவுரை : தேவர் பூமழை வானம் மறையப் பொழிய, அதனிடையே ஒரு வழியால் ஒளிந்தவரான திரிபுண்டரம் தரித்த இறைவர், முதன்மையான திருநல்லூரிலே, ஒரு பாகத்தில் வைத்த உமையம்மை யாரும் தாமுமாய், அநாதியாய்த் தாம் மேற்கொள்ளும் கோலத்தையே கொண்டு வானத்தில் முன்னர் நின்று காட்சியளித்தார்.

548. தொழுது போற்றி அத் துலை மிசை நின்று நேர் துதிக்கும்
வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன்னருள் பெற்றுத் தம் முன் தொழுது இருக்கும்
அழிவில் வான் பதங் கொடுத்து எழுந்து அருளினார் ஐயர்

தெளிவுரை : வணங்கி வாழ்த்திக் கொண்டு அத்துலையின் மீது நின்று துதிக்கும் குற்றம் இல்லாத அடியாரும் மகனும் மனைவியாரும், முற்றும் இனிய அருள் பெற்றுத் தம் முன்பு எக்காலமும் தொழுத வண்ணம் இருக்கின்றதான அழிவற்ற பெரிய சிவபதம் தந்த இறைவர் எழுந்தருளிச் சென்றார்.

549. நாதர் தம் திரு அருளினால் நல் பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம் அதுவாகி மேல் செல்லக்
கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்த
ஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார்

தெளிவுரை : சிவபெருமானின் திருவருளால் நல்ல பெரிய அந்தத் துலாக் கோலே அவர்களை மேலே கொண்டு எழுகின்ற விமானமாகி மேலே செல்ல, குற்றம் அற்ற அன்பரான நாயனாரும், அவருடைய மகன் மனைவியராகிய குடும்பத்தாரும் எஞ்ஞான்றும் குறைவற்ற அழிவற்ற வான்பதம் எய்திச் சிவமூர்த்தியாருடனே சிவலோகத்தை அடைந்தனர்.

அமர் நீதி நாயனார் புராணம் முற்றுப் பெற்றது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி

550. மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்
பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் அவணப் பழமை காட்டி
உலகு உய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித்
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும்

தெளிவுரை : தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் கான்பதற்கு அரியவரான சிவபெருமான், பலரும் புகழும் திருவெண்ணெய் நல்லூரில், ஓலையினது பழைமையைக் காட்டி, உலகம் உய்ய ஆளப்பட்டவரான நம்பியாரூரரின் திருவடிகளைத் தியானித்துத் தலையின் மீது வைத்து அதன் கீழ் வாழ்கின்ற தலைமையே நம் தலைமையாம்.

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் முற்றுப் பெற்றது.

3. இலை மலிந்த சருக்கம்

14. எறிபத்த நாயனார் புராணம்

கருவூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்ட மன்னருள் ஒருவர் எறிபத்தர். அவர் சிவனடியார்க்கு எவரேனும் ஊறு செய்தால் தண்டிப்பதற்காகக் கையில் மழுவாயுதம் ஒன்றை வைத்திருந்தார். அவ்வூரில் சிவகாமி ஆண்டார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் இறைவர்க்கு மலர்களைப் பறித்துக் கொண்டு சாத்தும் திருப்பணியை மேற்கொண்டவர். ஒருநாள் ஆற்றில் நீராடிப் புகழ்ச் சோழமன்னரின் பட்டத்து யானை வந்தது. அது அப்போது மதம் பிடித்ததாக இருந்தது. அதனால் சிவகாமி ஆண்டார் கொண்டு சென்ற மலர்க்கூடையைப் பறித்துக் கீழே சிதறுமாறு செய்தது. பாகர்கள் அதனை விலக்கவில்லை. அவர் அந்த யானையைத் தாக்கச் சென்றார். ஆனால் அதற்குள் ஓடி விட்டது. சிவகாமி ஆண்டார் கீழே விழுந்து விட்டார். சிவசிவ என்று அலறினார். அப்போது அங்கு வந்த எறிபத்த நாயனார் அந்த யானை எந்தப்பக்கம் சென்றது என்று கேட்டறிந்து அந்த யானையைத் தம் கையில் உள்ள மழுவால் வெட்டினார். உடன் வந்த பாகரையும் கொன்றார். யானையும் பாகரும் மடிந்த செய்தியைப் புகழ்ச்சோழர்க்கு அவருடைய ஆட்கள் தெரிவித்தனர். சினம் கொண்டார் மன்னர். போருக்குப் புறப்பட்டார். போர் வந்துவிட்டது என எண்ணினார் போலும்! யானை இறந்து கிடந்தவிடத்தில் எறிபத்தரை மன்னர் பார்த்தார். எறிபத்தர் தாம் யானையையும், யானைப்பாகரையும் கொன்றவர் என அறிந்தார். தக்க காரணம் இன்றி அவர் யானையையும் பாகரையும் கொன்றிருக்க மாட்டார் எனவுணர்ந்தார். சிவனடியார் ஒருவருக்குச் சினம் உண்டாகும் நிகழ்ச்சியுண்டாகி விட்டதே! என்று கவலை கொண்டார். நிகழ்ந்ததை எறிபத்தர் விளக்கினார். மன்னர் எறிபத்தர் கொடுத்த தண்டனை போதாது; தம்மையும் தண்டிக்குமாறு வேண்டினார்; தம் வாளையும் தந்தார். அவரது கையில் உள்ள வாளைத் தாம் வாங்கி இத்தகைய உயர்ந்த மன்னருக்க யானைக்குக் கொன்று தவறிழைத்து விட்டேனே! என்னை மாய்த்துக் கொள்வதே தக்க தண்டனை! என்று தம்மை மாய்த்துக் கொள்ள எறிபத்தர் முயன்றார். அதைப் பார்த்த மன்னர் திடுக்கிட்டு எறிபத்தரையும் அவருடைய கையில் இருந்த வாளையும் பிடித்துக் கொண்டார். அப்போது ஓர் அசரீரி, உங்கள் இருவரின் அன்பைப் புலப்படுத்தச் சிவபெருமான் அருளால் யானை மலர்களைச் சிதறியது எனக்கூறியது. எறிபத்தர் மன்னரை வணங்கினார்; மன்னரும் எறிபத்தரை வணங்கினார். சிதறிய மலர்க்கூடையில் மலர்கள் நிறைந்தன. யானையும் பாகரும் உயிர் பெற்றெழுந்தனர். சிவகாமியாண்டார் இறைவன் அருளை வியந்து திருக்கோயிலுக்குச் சென்றார். எறிபத்தர் தொண்டு செய்யச் சென்றார்.

551. மல்லல்நீர் ஞாலந் தன்னுள் மழவிடை யுடையான் அன்பர்க்
கொல்லைவந் துற்ற செய்கை உற்றிடத் துதவும் நீரார்
எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லலாம் படித்தன் றேனும் ஆசையாற் சொல்ல லுற்றாம்.

தெளிவுரை : செழுமையான நீர் சூழ்ந்த இம்மண்ணுலகத்தில், இளமையுடைய எருதினை ஊர்தியாய்க் கொண்ட சிவ பெருமானின் அடியார்களுக்கு இடையூறானது உண்டான போது, விரைவாய் வந்து இடையூற்றை போக்குதற்குரிய செயலைச் செய்யும் தன்மையுடையவராகிய, எல்லை இல்லாத புகழ் மிக்க எறிபத்த நாயனாரின் பெருமை எம் சொல்லில் அடங்குகின்ற தன்மையுடையது அன்று. எனினும் ஆசை பற்றிச் சொல்லத் தொடங்குகின்றேன்.

552. பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப் போற்றும்
அந்நெறி வழியே யாக  அயல்வழி யடைத்த சோழன்
மன்னிய அநபா யன்சீர்  மரபின்மா நகர மாகும்
தொன்னெடுங் கருவூ ரென்னும் சுடர்மணி வீதி மூதூர்.

தெளிவுரை : பழமையான நெடிய கருவூர் என்ற பேசப்படுகின்ற ஒளியும் அழகும் உடைய வீதிகளுடன் கூடிய பழமையான ஊர், வெற்றியின் அடையாளமாய் இமயமலையின் உச்சியில் புலிச்சின்னக் கொடியானது ஓங்கி விளங்க, அந்த மலையை இடித்துக் காவல் பொருந்துமாறு உண்டாக்கப்பட்ட புதிய வழியே வழியாய் விளங்க, மற்ற வழிகளை அடைத்துவிட்ட கரிகால் சோழன் முதல் அநபாயச் சோழன்வரை சிறப்பில் நிலை பெற்ற முடிமன்னரின் வழி வரும் தலைநகரங்களில் ஒன்றாகும்.

553. மாமதில் மஞ்சு சூழும் மாளிகை நிரைவிண் சூழும்
தூமணி வாயில் சூழும் சோலையில் வாசஞ் சூழும்
தேமலர் அளகஞ் சூழும் சிலமதி தெருவிற் சூழும்
தாமகிழ்ந் தமரர் சூழும் சதமகன் நகரம் தாழ.

தெளிவுரை : தேவர்கள் குழுமிய இந்திரனின் நகரமும் தாழும் படியாய், அந்தக் கருவூர் நகரத்தில் பெரிய மதில்களால் சூழப்பெற்ற மேகங்கள் பொருந்தியிருக்கும்; மாளிகைகள் வானத்தில் வரிசையாய் ஓங்கி விளங்கும்; தூய்மையான மணிகள் வாயில்களில் பொருந்தியிருக்கும்; பூஞ்சோலைகளில் மலர்களின் மணம் கமழும்; தேன் பூக்களைக் கூந்தலில் சூழ அணிந்திருந்த சந்திரன் போன்ற முகத்தையுடைய பெண்கள் சிலர் தெருவில் சூழ்ந்திருப்பர்.

554. கடகரி துறையி லாடும் களிமயில் புறவி லாடும்
சுடர்மணி யரங்கி லாடும் அரிவையர் குழல்வண் டாடும்
படரொளி மறுகி லாடும் பயில்கொடி கதிர்மீ தாடும்
தடநெடும் புவிகொண் டாடும் தனிநகர் வளமை ஈதால்.

தெளிவுரை : மதத்தையுடைய யானைகள் நீர்த்துறைகளில் விளையாடும். களிப்பையுடைய மயில்கள் காட்டில் ஆடும். அடர்ந்து பதித்த மணிகள் பொருந்திய ஆடல் அரங்குகளில் ஆடும் பெண்களின் கூந்தலின் மேல் வண்டுகள் மொய்க்கும். படர்ந்த ஒளியுடைய வீதிகளில் ஆடும் மிகுந்த கொடிகள் சூரிய சந்திரர் மீது போய்ப் பொருந்தும், அகன்ற நெடிய உலகம் கொண்டாடும் ஒப்பில்லாத நகரத்தின் வளமை இதுவாகும்.

555. மன்னிய சிறப்பின் மிக்க வளநக ரதனின் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க தொண்டர்தஞ் சிந்தை நீங்கா
அந்நிலை யரனார் வாழ்வ தானிலை யென்னுங் கோயில்.

தெளிவுரை : நிலையான சிறப்பினால் மிகுந்த வளம் கொண்ட அந்தக் கருவூர் நகரத்தில் வானவர்களும் வாழ்த்தும் சிறப்புடன் மிக்க பொன் வேலைப் பாட்டால் ஆன மதிலால் சூழப்பட்டு, உழைப்புடைய அன்பால் மிக்க தொண்டர்களின் உள்ளத்தினின்று நீங்காதிருக்கும் அந்நிலை போல, அரசனார் நிலை பெற்று வாழ்கின்ற திருவானிலை என்ற கோயில் சிறந்து விளங்கியது.

556. பொருட்டிரு மறைகள் தந்த புனிதரை இனிதக் கோயில்
மருட்டுறை மாற்று மாற்றால் வழிபடுந் தொழில ராகி
இருட்கடு வொடுங்கு கண்டத் திறையவர்க் குரிமை பூண்டார்க்
கருட்பெருந் தொண்டு செய்வார் அவர்எறி பத்த ராவார்.

தெளிவுரை : உண்மைப் பொருளைத் தருகின்ற வேதங்களையும் கடந்து நின்ற தூயவரான சிவபெருமானை இனிதாய் அக் கோயிலில், மருளான பிறவிப் பகையைப் போக்கும் நெறியால் வணங்குபவராய், இருள் போன்ற விடமானது ஒடுங்கிப் பொருந்திய கழுத்தினையுடைய சிவபெருமானுக்கு உரிமையான அடிமை மேற்கொண்டு ஒழுகுகின்ற அடியார்களுக்கு, அவனது அருள் வழியே நிற்கும் பெரிய தொண்டு செய்பவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரை எறி பத்தர் என்று உரைப்பர்.

557. மழைவளர் உலகில் எங்கும் மன்னிய சைவ மோங்க
அழலவிர் சடையான் அன்பர்க் கடாதன அடுத்த போது
முழையரி யென்னத் தோன்றி முரண்கெட எறிந்து தீர்க்கும்
பழமறை பரசுந் தூய பரசுமுன் னெடுக்கப் பெற்றார்.

தெளிவுரை : மழையினால் வளர்கின்ற இவ்வுலகத்தில் எங்கும் நிலைபெற்ற சைவமானது ஓங்கும்படியாக, தீப்போன்ற நிறம் கொண்ட சடையையுடையவனின் அடியார்களுக்கு உண்டாகத் தகாத இடர்கள் உண்டான காலத்தில், தன் குகையை விட்டுக் கிளம்பிப் பாயும் சிங்கம் போல், விரைவாகத் தோன்றி, அந்த முரண்பட்ட வன்மை கெடும்படி எறிந்து (அந்த இடரைப்) போக்கும் படைக்கலமான பழைய மறைகளால் போற்றப்பட்ட மழு என்ற படைக்கலத்தை எப்போதும் அந்த எறிபத்தர் ஏந்துபவராக இருந்து வந்தார்.

558. அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை யடிக ளார்க்குத்
திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி யாண்டா ரென்னும்
புண்ணிய முனிவ னார்தாம் பூப்பறித் தலங்கல் சாத்தி
உண்ணிறை காத லோடும் ஒழுகுவார் ஒருநாள் முன்போல்.

தெளிவுரை : அங்ஙனம் எறிபத்தர் ஒழுகி வந்த காலத்தில், திருவானிலை என்ற கோயிலில் எழுந்தருளிய சிவபெருமானுக்குத் திண்மையான அன்பையுடைய சிவகாமி ஆண்டார் என்னும் புண்ணிய முனிவர், தாம் விதிப்படி மலர்களைக் கொய்து மாலையாய்க் கட்டிச் சாத்தி உள்ளத்துள் நிறைந்த ஆசையுடன் ஒழுகி வந்தார். அவ்வாறு அவர் ஒழுகி வந்த காலத்தில் ஒருநாள்,

559. வைகறை யுணர்ந்து போந்து புனல்மூழ்கி வாயுங் கட்டி
மொய்ம்மலர் நெருங்கு வாச நந்தன வனத்து முன்னிக்
கையினில் தெரிந்து நல்ல கமழ்முகை அலரும் வேலைத்
தெய்வநா யகர்க்குச் சாத்தும் திருப்பள்ளித் தாமங் கொய்து.

தெளிவுரை : அவர், விடியற்காலத்தில் உறக்கத்தினின்றும் உணர்ந்து எழுந்து, வெளியே சென்று, நீரில் ஆடி, வாயையும் கட்டிக்கொண்டு, கொத்துக்களாக மலர்கள் நிறைந்த மணம் கமழும் பூஞ்சோலைக்குள் சென்று, பழகிய கையினால் தெரிந்து கொண்டு, நல்ல மணம் கொண்ட அன்று மலர்கின்ற தன்மையுடைய அரும்பு களைச் சமயம் அறிந்து, அவற்றில் சிவபெருமானுக்குச் சாத்தும் திருப்பள்ளி மாலைகளைக் கொய்து,

560. கோலப்பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசங் கொண்டு மலர்க்கையில் தண்டுங் கொண்டங்
காலய மதனை நோக்கி அங்கணர்க் கமைத்துச் சாத்தும்
காலைவந் துதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார்.

தெளிவுரை : தம் அழகிய மலர்க்கூடையை நிறைத்துக் கொண்டு, உள்ளத்தில் தூய்மையான அன்பு கொண்டு, அழகிய கையில் தண்டும் எடுத்துக் கொண்டு, அங்குள்ள திருக்கோயிலை நோக்கி, இறைவனுக்கு மாலை கட்டிச் சாத்தும் காலையில் வந்து உதவுவதற்காக விரைவாக வரலானார்.

561. மற்றவ ரணைய இப்பால் வளநக ரதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம் பெருகுமா நவமி முன்னாள்.

தெளிவுரை : சிவகாமி ஆண்டார் இவ்வாறு வரவும், வளமையுடைய அந்தக் கருவூர் நகரில் நிலைபெற்ற மன்னரான அநபாய சோழன் குல வழியில் தோன்றிய புகழ்ச் சோழ நாயனார் பகைவரின் போர் முனைகளை வெல்லும் பட்டவர்த்தனம் என்ற பெயர் கொண்ட யானை அலங்காரம் மிக்க நவமியின் முன் நாளில்,

562. மங்கல விழவு கொண்டு வருநதித் துறைநீ ராடிப்
பொங்கிய களிப்பி னோடும் பொழிமதஞ் சொரிய நின்றார்
எங்கணு மிரியல் போக எதிர்பரிக் காரர் ஓடத்
துங்கமால் வரைபோல் தோன்றித் துண்ணென அணைந்த தன்றே.

தெளிவுரை : மங்கலமான திருவிழா அணியை மேற்கொண்ட தாய், அந்த நகரத்தில் ஓடி வருகின்ற ஆம்பிராவதி ஆற்றில் நீராடி, மிக்க களிப்புடனே பொழியும் மதநீர் ஒழுகவும், அங்கங்கே நிற்பவர் அஞ்சி ஓடவும், சிறந்த பெரிய மலை போல் தோன்றி, அச்சம் தரத்தக்க வகையில் வந்தது.

563. வென்றிமால் யானை தன்னை மேல்கொண்ட பாக ரோடும்
சென்றொரு தெருவின் முட்டிச் சிவகாமி யார்முன் செல்ல
வன்தனித் தண்டில் தூங்கும் மலர்கொள்பூங் கூடை தன்னைப்
பின்தொடர்ந் தோடிச் சென்று பிடித்துடன் பறித்துச் சிந்த.

தெளிவுரை : வெற்றியுடைய அந்த யானை தன்மீது ஏறியிருந்த பாகர்களோடும் சென்று ஒரு தெருவிலே முட்டி, அங்குச் சிவகாமி ஆண்டார்முன் சென்று கொண்டிருக்க, அவரைப் பின்னால் தொடர்ந்து போய், அவர் தாங்கிச் சுமந்து சென்ற வலிய ஒப்பில்லாத தண்டில் தொங்கிய பூக்கூடையை முன் பறித்துச் (சிந்தியது) சிந்த,

564. மேல்கொண்ட பாகர் கண்டு விசைகொண்ட களிறு சண்டக்
கால்கொண்டு போவார் போலக் கடிதுகொண் டகலப் போக
நூல்கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி
மால்கொண்ட களிற்றின் பின்பு தண்டுகொண் டடிக்க வந்தார்.

தெளிவுரை : அக்களிற்றின் மேல் அமர்ந்திருந்த பாகர் அந்தக் களிற்றின் செயலைக் கண்டு, அதனை ஊழிக் காற்றைக் கொண்டு செல்பவரைப் போல் விரைவாக அகன்று போயினர். போகவும், முந்நூல் அணிந்த மார்பையுடைய சிவகாமி ஆண்டார். அந்த யானையின் செயலைப் பார்த்துப் பதைத்துச் சினத்தால் பொங்கி, மதமுடைய அந்த யானையின் பின்னால் அதனைத் தண்டால் அடிக்க வந்தனர்.

565. அப்பொழு தணைய வொட்டா தடற்களி றகன்று போக
மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால் விரைந்துபின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால் தரையடித் தெழுந்து நின்று
செப்பருந் துயரம் நீடிச் செயிர்த்துமுன் சிவதா வென்பார்.

தெளிவுரை : அப்போது வலிய அந்த யானை அச்சிவகாமி ஆண்டார் தன்னை நெருங்க இயலாதபடி அகன்று போய் விட்டது. உண்மைத் தன்மையுடைய சிவகாமியாண்டார் முதுமையால் விரைவாகத் தொடர்ந்து செல்ல முடியாதவர் ஆனார். ஆகி, அதைப் போக விட்டார். கீழே விழுந்து, கைகளால் தரையில் அடித்து மோதிப் பின்னர் எழுந்து நின்று சொல்ல இயலாத துன்பம் மிகப் பெற்றுச் சினந்து முன்னே சிவதா என்று சொல்பவரானார்.

566. களியா னையின்ஈர் உரியாய் சிவதா
எளியார் வலியாம் இறைவா சிவதா
அளியார் அடியார் அறிவே சிவதா
தெளிவார் அமுதே சிவதா சிவதா.

தெளிவுரை : மதம் உடைய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திக் கொண்டவரே, சிவதா ! எளியவரைக் காக்கின்ற வன்மையுடையவரே ! அன்புடைய அடியவரின் அறிவாய் விளங்குபவரே ! சிவதா ! தன்னைத் தெளிபவர்க்கு அமுதமாக விளங்குபவரே, சிவதா !

567. ஆறும் மதியும் அணியுஞ் சடைமேல்
ஏறும் மலரைக் கரிசிந் துவதே
வேறுள் நினைவார் புரம்வெந் தவியச்
சீறுஞ் சிலையாய் சிவதா சிவதா.

தெளிவுரை : கங்கையாற்றையும் பிறைமதியையும் அணியும் சடை முடிமீது அணியப்படுகின்ற மலரை யானை சிந்துவது தகுமோ? மாறுபட்ட எண்ணத்தை மனத்தினுள் எண்ணும் அசுரனின் புரங்கள் வெந்து சாம்பலாகும்படி சினந்த வில்லை ஏந்தியவரே, சிவதா, சிவதா !

568. தஞ்சே சரணம் புகுதுந் தமியோர்
நெஞ்சேய் துயரங் கெடநேர் தொடரும்
மஞ்சே யெனவீழ் மறலிக் கிறைநீள்
செஞ்சே வடியாய் சிவதா சிவதா.

தெளிவுரை : அடைக்கலமாக, உம் அடியை அடைவோரான மார்க்கண்டேயரின் மனத்தில் உண்டான துன்பம் அழியத் திருவுள்ளம் கொண்டு, அவரைத் தொடர்ந்து வந்த கரிய மேகம் போன்ற காலனுக்குச் சிறிதே நீண்ட செம்மையான திருவடியினை உடையவரே ! சிவதா ! சிவதா !

569. நெடியோன் அறியா நெறியா ரறியும்
படியால் அடிமைப் பணிசெய் தொழுகும்
அடியார் களில்யான் ஆரா அணைவாய்
முடியா முதலாய் எனவே மொழிய.

தெளிவுரை : முடிவில்லாத முதல்வரே ! திருமாலும் அறியமாட்டாத சிவ நெறியிலே நின்றவராகித் தாம் அறிந்த வகையால் அடிமைத் தன்மையில் நின்று பணி செய்து ஒழுகுகின்ற அடியார் கூட்டத்திலே என்னை யார் என்று கருதிய அணைவீர்? என்று சிவகாமி ஆண்டார் சொல்லவே,

570. என்றவ ருரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும் நெருப்புயிர்த் தழன்று பொங்கி
மன்றவ ரடியார்க் கென்றும் வழிப்பகை களிறே யன்றோ
கொன்றது வீழ்ப்ப னென்று கொடுமழு எடுத்து வந்தார்.

தெளிவுரை : இவ்வாறு சிவகாமி ஆண்டார் கூறியவற்றை எதிரே வந்து கொண்டிருந்த எறிபத்த நாயனார் கேட்டு, மூளும் தீயைப்போல் பெருமூச்சுவிட்டுச் சினத்தால் பொங்கி, மன்றில் ஆடும் நடராசப் பெருமானின் அடியார்களுக்கு என்றும் யானை வழிப் பகையன்றோ? நான் அதைக் கொன்று வீழ்த்துவேன், என்று தம் கொலைத் தன்மை கொண்ட மழுவை எடுத்துக் கொண்டு வந்தார்.

571. வந்தவ ரழைத்த தொண்டர் தமைக்கண்டு வணங்கி உம்மை
இந்தவல் லிடும்பை செய்த யானைஎங் குற்ற தென்ன
எந்தையார் சாத்தும் பூவை என்கையில் பறித்து மண்மேல்
சிந்திமுன் பிழைத்துப் போகா நின்றதித் தெருவே யென்றார்.

தெளிவுரை : அங்ஙனம் வந்த எறிபத்த நாயனார் சிவபெருமானை நோக்கிச் சிவதா என்று அழைத்த தொண்டரான சிவகாமி ஆண்டாரைப் பார்த்து வணங்கி, உமக்கு இத்தகைய வலிய துன்பம் செய்த யானை எங்குச் சென்றது? என்று வினவ, அச்சிவகாமியாண்டார், எம் பெருமான் அணியும் பூவை என் கையிலிருந்து பறித்துத் தரையில் சிந்தி முன்பு தப்பிப் பிழைத்து இத்தெருவழியே சென்றது, என இயம்பினாõர்.

572. இங்கது பிழைப்ப தெங்கே இனியென எரிவாய் சிந்தும்
அங்கையின் மழுவுந் தாமும் அனலும்வெங் காலு மென்னப்
பொங்கிய விசையிற் சென்று பொருகரி தொடர்ந்து பற்றும்
செங்கண்வாள் அரியிற் கூடிக் கிடைத்தனர் சீற்ற மிக்கார்.

தெளிவுரை : எறிபத்தர், இங்கு இந்த யானை இனிப்பிழைப்பது எங்கே? என்று சொல்லி, உடனே, தீயினை வாயில் சிந்துவதாய் உள்ளங்கையில் ஏந்திய மழுவும் தாமுமாகத் தீயும் காற்றும் கூடியதைப் போல், மிக்க விரைவாகச் சென்று, போர் செய்யும் ஆண் யானையைத் தொடர்ந்து பற்றுகின்ற சிவந்த கண்ணையுடைய கொடிய சிங்கம் போல் சினம் மிக்கவராய் அந்த யானையை நெருங்கினார்.

573. கண்டவர் இதுமுன்பு அண்ணல் உரித்தஅக் களிறே போலும்
அண்டரும் மண்ணு ளோரும் தடுக்கினு மடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வே னென்று சுடர்மழு வலத்தில் வீசிக்
கொண்டெழுந் தார்த்துச் சென்று காலினாற் குலுங்கப் பாய்ந்தார்.

தெளிவுரை : நெருங்கி அந்த யானையைப் பார்த்து, இது முன் காலத்தில் சிவபெருமான் உரித்த அந்த யானையைப் போன்றதேயாகும். தேவரும் இவ்வுலகத்தவரும் தடுத்தாலும் பொருட்படுத்தாது எதிர்த்துச் சென்று சிந்தி விழும்படி துண்டித்துக் கொல்வேன் என்று ஒளியுடைய மழு என்ற படைக்கலத்தை வலக்கையால் வீசி, மேல் எழுந்து ஆரவாரம் கொண்டு காலினால் குலுங்கப் பாய்ந்தார்.

574. பாய்தலும் விசைகொண் டுய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக்
காய்தழல் உமிழ்கண் வேழம் திரிந்துமேற் கதுவ அச்சம்
தாய்தலை யன்பின் முன்பு நிற்குமே தகைந்து பாய்ந்து
தோய்தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர்.

தெளிவுரை : எறிபத்தர் அவ்வாறு பாய்ந்தவுடன், தன்மேல் இருந்து செலுத்தும் பாகரைச் சீறுகின்ற நெருப்பை உமிழ்கின்றபடி சிவந்த கண்ணையுடைய அந்த யானை திரிந்து இவர் மீது பாய்ந்து தாவியது. அதனை மறித்து எறிபத்தர் பாய்ந்து, அதன் ஒப்பில்லாத நீண்ட பெரிய துதிக்கை விழும் படி மழுவினால் துண்டாக்கினார். அச்சமானது தாயினது சிறந்த அன்பின் முன் எதிர்த்து நிற்க வல்லதோ?

575. கையினைத் துணித்த போது கடலெனக் கதறி வீழ்ந்து
மைவரை யனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த
வெய்யகோல் பாகர் மூவர் மிசைகொண்டார் இருவ ராக
ஐவரைக் கொன்று நின்றார் அருவரை அனைய தோளார்.

தெளிவுரை : எறிபத்தர் அந்த யானையின் துதிக்கையைத் துண்டித்த போது, அந்தக் கரிய மலை போன்ற யானை கடல் போலக் கதறிக் கீழே விழுந்து புரண்டது. அதன் பக்கத்தில் வந்த கொடிய குத்துக் கோற்பாகர் மூவரும் யானை மீதிருந்து செலுத்திய பாகர் இருவரும் என்னும் ஐவரையும் அரிய மலை போன்ற தோள்களையுடைய எறிபத்த நாயனார் கொன்றுவிட்டு நின்றார்.

576. வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழியமற் றுள்ளார் ஓடி
மட்டவிழ் தொங்கல் மன்னன் வாயிற்கா வலரை நோக்கிப்
பட்டவர்த் தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்று
முட்டநீர் கடிது புக்கு முதல்வனுக் குரையும் என்றார்.

தெளிவுரை : எறிபத்தர் வெட்டியதால் இறந்து வீழ்ந்த பாகர்கள் தவிர, மற்றவர் ஓடிச் சென்று மணம் கமழும் மாலையைச் சூடிய மன்னரின் அரண்மனை வாயிற் காவலரை நோக்கி சிலரால் பட்டவர்த்தன யானையும் இறந்தது. சில பாகரும் இறந்து பட்டனர் என்று நீவிர் விரைவிற் சென்று மன்னருக்குக் கூறுங்கள் என்று இயம்பினர்.

577. மற்றவர் மொழிந்த மாற்றம் மணிக்கடை காப்போர் கேளாக்
கொற்றவன் தன்பால் எய்திக் குரைகழல் பணிந்து போற்றிப்
பற்றலர் இலாதாய் நின்பொற் பட்டமால் யானை வீழச்
செற்றனர் சிலரா மென்று செப்பினார் பாக ரென்றார்.

தெளிவுரை : அவர்கள் கூறியதை மணிகட்டிய வாயிலைக் காப்பவர் கேட்டு மன்னரிடம் சென்று, அவனது கழல் அணிந்த அடிகளை வணங்கி நின்று, பகைவர் இல்லாதவரே ! உம் பட்டத்து யானை விழும்படி சிலர் கொன்றார்களாம் எனப் பாகர் உரைத்தனர் என மொழிந்தார்.

578. வளவனுங் கேட்ட போதில் மாறின்றி மண்காக் கின்ற
கிளர்மணித் தோள லங்கல் சுரும்பினங் கிளர்ந்து பொங்க
அளவில்சீற் றத்தி னாலே யார்செய்தா ரென்றுங் கேளான்
இளவரி யேறு போல எழின்மணி வாயில் நீங்க.

தெளிவுரை : சோழ மன்னரும் பாகர்கள் கூறியதைக் கேட்டு, எதிர் எவரும் இல்லாது உலகத்தைக் காக்கின்ற கிளர்ச்சியுடைய மணிகள் அணிந்த தோள்களி ல் உள்ள மாலையில் மொய்த்த வண்டுகள் ஆரவாரம் செய்து எழும்படி உண்டான அளவற்ற பெருஞ் சினத்தால் இதனைச் செய்தவர் யார்? என்றும் வினவாது, மணி பொருந்திய வாயிலை இளஞ்சிங்கம் போல் நீங்கி வர.

579. தந்திரத் தலைவர் தாமும் தலைவன்தன் நிலைமை கண்டு
வந்துறச் சேனை தன்னை வல்விரைந் தெழமுன் சாற்ற
அந்தரத் தகல மெல்லாம் அணிதுகிற் பதாகை தூர்ப்ப
எந்திரத் தேரு மாவும் இடையிடை களிறு மாகி.

தெளிவுரை : தந்திரத்தலைவரான அமைச்சர்களும் தம் மன்னரின் நிலைமையைக் கண்டு வந்து, படையை மிக விரைவாக எழுந்து வருமாறு, பறை சாற்றி, அழகான துகில் கொடிகள் வானம் எல்லாம் தூர்த்து நிறைய, எந்திரத் தேர்களும் குதிரைகளும் இடையிடையே யானைகளுமாகி,

580. வில்லொடு வேல்வாள் தண்டு பிண்டிபா லங்கள் மிக்க
வல்லெழு முசலம் நேமி மழுக்கழுக் கடைமுன் னான
பல்படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்த வன்கண்
எல்லையில் படைஞர் கொட்புற் றெழுந்தனர் எங்கு மெங்கும்.

தெளிவுரை : வில்லொடும் வேலும் வாளும், தண்டும் பிண்டி பாலங்களும், வன்மையான இருப்புலக்கையும், சக்கரங்களும், மழுவும், சூலமும் முதலான பற்பல படைக்கலங்களைக் கைக்கொண்டவராய், அழகான வீரக்கழல் அணிந்த வரிந்து தச்சுக் கட்டிய வன்கண்மையுடைய அளவில்லாத படை வீரர்கள் சுழன்று குதித்து எழுந்தனர்.

581. சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்ன மெல்லாம் பொருபடை மிடைந்த பொற்பின்
மங்குல்வான் கிளர்ச்சி நாண மருங்கெழுந் தியம்பி மல்க.

தெளிவுரை : சங்கும், தாரையும், காளமும், மிக்க ஒலி செய்யும் பேரியும், கொடிய குரலையுடைய பம்பையும் கண்டையும் பெருந் துடியும், திமிலையும், தட்டியும், முதலான மிக்க ஒலி செய்யும் வாத்தியங்கள் எல்லாம் கூடிய இவ்வகையில் போர்ப்படைகள் மிக்கு நெருங்கிய சிறப்பால், மேகங்கள் நிரம்பிய வானத்தின் கிளர்ச்சியும் கீழாகுமாறு பக்கங்களில் எழுந்து ஒலித்து நிறைய,

582. தூரியத் துவைப்பும் முட்டுஞ் சுடர்ப்படை ஒலியும் மாவின்
தார்மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர்ச் சீரும்
வீரர்தஞ் செருக்கி னார்ப்பும் மிக்கெழுந் தொன்றாம் எல்லைக்
காருடன் கடைநாள் பொங்கும் கடலெனக் கலித்த வன்றே.

தெளிவுரை : வாத்தியங்களின் ஓசையும், தாக்குகின்ற ஒளியுடைய படைக்கலங்களின் ஒலியும், குதிரைகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளின் ஓசையும், யானைகளின் ஒலியும், பெரிய தேர்களின் ஆரவார ஒலியும், படை வீரர்களின் ஒலியும் மிகவும் அதிகமாகக் கிளம்பி எழுந்து ஒன்றாகக் கூடிய போது, யுக முடிவில் ஊழிப் பெருமேக ஒலியுடன் பொங்கும் கடலைப் போன்று ஒலிகள் பெருகின.

583. பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்தெழு சேனை யெல்லாம்
மண்ணிடை யிறுகான் மேன்மேல் வந்தெழுந் ததுபோல் தோன்றத்
தண்ணளிக் கவிகை மன்னன் தானைபின் தொடரத் தானோர்
அண்ணலம் புரவி மேல்கொண் டரசமா வீதி சென்றான்.

தெளிவுரை : வகைப்படுத்தப்பட்ட நால்வகைப் படையுறுப்புகளால் பரவி எழுந்த படைகள் எல்லாம், உலகத்தை அழிக்கும் ஊழிக் காற்று மேல் மேல் வந்து எழுந்தது போல் தோன்ற, அங்ஙனம் எழுந்த படை தன்னைப் பின் தொடர்ந்துவர, தான் ஒரு பெருமையுடைய குதிரைமீது ஏறிக் குளிர்ந்த கருணை பொருந்திய கொற்றக் குடையையுடைய சோழ மன்னன் அரச மாவீதியில் சென்றான்.

584. கடுவிசை முடுகிப் போகிக் களிற்றொடும் பாகர் வீழ்ந்த
படுகளங் குறுகச் சென்றான் பகைப்புலத் தவரைக் காணான்
விடுசுடர் மழுவொன் றேந்தி வேறிரு தடக்கைத் தாய
அடுகளி றென்ன நின்ற அன்பரை முன்பு கண்டான்.

தெளிவுரை : மன்னன், படையுடன் வர, மிக்க விரைவாகச் சென்று யானையுடன் பாகர்கள் இறந்த இடத்தை நெருங்கி யடைந்தனன். அங்கே பகைவர் ஒருவரையும் அவன் காணவில்லை. ஒளி வீசும் மழு என்ற ஒரு படைக்கலத்தை ஏந்தி வேறு இரண்டு பெருங் கைகளையுடையதாய் அழிக்கும் யானை போன்று நின்ற அடியாரான எறிபத்தரைத் தன்முன் கண்டான்.

585. பொன்தவழ் அருவிக் குன்றம் எனப்புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்று ளென்றும் நிருத்தமே பயிலும் வெள்ளிக்
குன்றவ ரடியா ரானார் கொன்றவ ரிவரென் றோரான்
வென்றவர் யாவ ரென்றான் வெடிபட முழங்குஞ் சொல்லான்.

தெளிவுரை : பொன் துகள்கள் நீருடன் கலந்து வருவதற்கிடமான அருவிகளையுடைய மலை போல் புரண்ட யானையின் முன் நின்றவர் அம்பலத்தில் எப்போதும் ஆனந்தக் கூத்தினையே பயின்றவரும் வெள்ளி மலையையுடையவருமாகிய சிவபெருமானுக்கு அடியவராயினார். ஆதலால் இவர் யானையையும் பாகரையும் கொன்றவர் என்று எண்ண மாட்டாதவனாய் வென்றவர் யார்? என்று வெடிபட ஒலிக்கும் சொல்லால் வினவினான்.

586. அரசனாங் கருளிச் செய்ய அருகுசென் றணைந்து பாகர்
விரைசெய்தார் மாலை யோய்நின் விறற்களிற் றெதிரே நிற்குந்
திரைசெய்நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்கு செய்தார்
பரசுமுன் கொண்டு நின்ற இவரெனப் பணிந்து சொன்னார்.

தெளிவுரை : மன்னன் இவ்வாறு சொல்ல, பாகர்கள் மன்னனின் அருகில் சென்று, மணம் கமழும் மாலை சூடியவரே ! உன் வலிய யானையின் முன் எதிர்த்து நிற்கவும் வல்ல மன்னர் யார் இருக்கின்றார்? அத்தீங்கைச் செய்தவர் மழுவை ஏந்தி முன்னால் நிற்கும் இவரே ஆவார் என்று வணங்கிக் கூறினர்.

587. குழையணி காதி னானுக் கன்பராங் குணத்தின் மிக்கார்
பிழைபடின் அன்றிக் கொல்லார் பிழைத்ததுண் டென்றுட் கொண்டு
மழைமத யானை சேனை வரவினை மாற்றி மற்ற
உழைவயப் புரவி மேல்நின் றிழிந்தனன் உலக மன்னன்.

தெளிவுரை : குழை என்ற காதணியை அணிந்த சிவபெருமானுக்கு அடியவரான குணத்தில் மிக்க இவர், பிழை ஏற்பட்டிருந்தால் அன்றிக் கொலை செய்ய மாட்டார். எனவே பிழை ஏற்பட்டதுண்டு என்று தன் மனத்தில் எண்ணி, மழைபோல் மதம் சொரியும் யானைப் படை முதலான படைகள் தன்னுடன் தொடர்ந்து வாராமல் தடுத்து, தான் மேல் கொணர்ந்த கொற்றக் குதிரையினின்று உலக மன்னனான சோழன் தனியான இடத்தில் இழிந்தான்.

588. மைத்தடங் குன்று போலும் மதக்களிற் றெதிரே யிந்த
மெய்த்தவர் சென்ற போது வேறொன்றும் புகுதா விட்ட
அத்தவ முடையேன் ஆனேன் அம்பல வாண ரன்பர்
இத்தனை முனியக் கெட்டேன் என்கொலோ பிழையென் றஞ்சி.

தெளிவுரை : கரிய பெரிய மலை போல் உருவுடையதும் மதம் கொண்டதுமான யானையின் முன் இந்த மெய்த்தவர் சென்றபோது வேறு ஒன்றும் நிகழாமல் விட்டதான, தவம் உடையவன் ஆனேன். சிவபெருமானுக்கு அடியவரான இவர் இவ்வாறு சினம் கொள்ளும்படி என்ன தவறு நேர்ந்ததோ? ஓ! கெட்டேன் என்று அச்சம் கொண்டு,

589. செறிந்தவர் தம்மை நீக்கி அன்பர்முன் தொழுது சென்றீது
அறிந்திலே னடியேன் அங்குக் கேட்டதொன் றதுதா னிற்க
மறிந்தஇக் களிற்றின் குற்றம் பாகரோ டிதனை மாள
எறிந்ததே போது மோதான் அருள்செயு மென்று நின்றார்.

தெளிவுரை : தன்னை நெருங்கி வந்தவரையெல்லாம் தடுத்து விலக்கி, எறிபத்தரான அடியார் முன்னம் வணங்கிச் சென்று, இதை நான் அறியேன், நான் கேள்விப்பட்டது ஒரு செய்தி, அது நிற்க. மடிந்த யானையால் உண்டான பிழைக்குத் தீர்வு பாகருடன் மாளும்படி எறிந்த செயலே போதுமா? கூறியருளுக ! எனக் கூறி நின்றான் மன்னன்.

590. மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர்
சென்னியித் துங்க வேழஞ் சிவகாமி யாண்டார் கொய்து
பன்னகா பரணர்ச் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம்
தன்னைமுன் பறித்துச் சிந்தத் தரைப்படத் துணித்து வீழ்த்தேன்.

தெளிவுரை : அவ்வாறு வினவிய சோழமன்னனைப் பார்த்துத் தேவர்களின் தலைவரான சிவபெருமானின் அடியாரான எறிபத்தர் சோழனே ! சிவகாமியாண்டார் என்னும் அடியார் இறைவனுக்குச் சாத்தும் பொருட்டுப் பறித்துக் கொண்டுவந்த திருப்பள்ளித் தாமத்தை, முன்பு, இந்தப் பெரிய யானை பறித்து வீழ்த்தியதால் அதனை நிலத்தில் விழுமாறு துண்டித்து வீழ்த்தினேன்.

591. மாதங்கந் தீங்கு செய்ய வருபரிக் காரர் தாமும்
மீதங்குக் கடாவு வாரும் விலக்கிடா தொழிந்து பட்டார்
ஈதிங்கு நிகழ்ந்த தென்றார் எறிபத்த ரென்ன அஞ்சிப்
பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன்.

தெளிவுரை : இந்த யானை தீங்கு செய்யவும், அதனுடன் வந்த குத்துக் கோற்காரர்களும், அதன் மீது அமர்ந்து செலுத்தும் பாகர்களும், அது தீமை செய்யும் போது, அதனை விலக்காமல் விட்டதனால் இறந்து பட்டனர். இதுதான் இங்கு நிகழ்ந்தது என்று சொன்னார். அப்போது பெரிய மலை போன்ற தோளையுடைய மன்னன் அஞ்சி அவருடைய அடிகளை முறைப்படி வணங்கி,

592. அங்கண ரடியார் தம்மைச் செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார்.

தெளிவுரை : சிவபெருமானிடத்தும் அடியவரிடத்தும் செய்த இந்த அபசாரத்துக்கு இங்கு இது மட்டும் போதுமானது அன்று; என்னையும் கொல்ல வேண்டும். தாங்கள் மங்கலம் பொருந்திய தங்கள் மழுப்படைக்கலத்தால் கொல்லுதல் பொருத்தம் உடையது என்று, இது அதற்குத் தக்கது என்று தண்டனையை விரும்பித் தன் சிவந்த கையினால் தன் உடைவாளை உருவி எறிபத்தரின் கையில் தந்தான்.

593. வெந்தழற் சுடர்வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக் கெட்டேன்
அந்தமில் புகழான் அன்புக் களவின்மை கண்டே னென்று
தந்தவாள் வாங்க மாட்டார் தன்னைத்தான் துறக்கு மென்று
சிந்தையால் உணர்வுற் றஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார்.

தெளிவுரை : கொடிய தீயைப் போல் ஒளிவீசும் வாளையுருவி நீட்டும் மன்னனைப் பார்த்து, ஓ நான் கேட்டேன். எல்லையில்லாத புகழையுடைய மன்னனது அன்பின் எல்லையில்லாத் தன்மையை இப்போது கண்டு கொண்டேன் என்று நினைத்தவராகி, அம்மன்னன் நீட்டிய வாளை வாங்க மாட்டாதவராயிருந்தும், தாம் அதைப் பெற்றுக் கொள்ளாவிடில் மன்னன் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வான் என்று உணர்ந்தவாரகி, அஞ்சி, அத்தீங்கு வாராது காக்கும் கருத்தால் கையில் வாங்கினார்.

594. வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே
ஈங்கெனை வாளி னாற்கொன் றென்பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர்பா லென்றே
ஆங்கவர் உரைப்பக் கண்ட எறிபத்தர் அதனுக் கஞ்சி.

தெளிவுரை : வாளைப் பெற்றுக் கொண்ட எறிபத்தரான தொண்டரின் முன் தொழுது நின்று, இங்கு வாளால் கொன்று என் பிழையைத் தீர்க்கும் வண்ணம் பேருதவி செய்யும் பேற்றை இவரிடம் நான் பெற்றேன் என்று மன்னன் மகிழவே, அதனைக் கண்ட எறிபத்தர் அதற்கு அச்சம் கொண்டு,

595. வன்பெருங் களிறு பாகர் மடியவும் உடைவா ளைத்தந்
தென்பெரும் பிழையி னாலே யென்னையுங் கொல்லு மென்னும்
அன்பனார் தம்மைத் தீங்கு நினைந்தன னென்று கொண்டு
முன்பென துயிர்செ குத்து  முடிப்பதே முடிவென் றெண்ணி.

தெளிவுரை : வன்மையுடைய பெரிய யானையும் பாகரும் இறக்கவும், தன் உடை வாளைத் தந்து என் பெரும் பிழையால் என்னையும் கொல்ல வேண்டும் என்று சொல்கின்ற அடியார்க்குத் தீங்கு நினைத்தேன் என எண்ணி முதலில் என் உயிரைப் போக்கி முடிப்பதுவே இதற்குத் தக்க முடிவாகும் என நினைத்து,

596. புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர்தங் கழுத்தில் பூட்டி
அரிந்திட லுற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவா றிதுவென் கெட்டேன் என்றெதிர் கடிதிற் சென்று
பெருந்தடந் தோளாற் கூடிப் பிடித்தனன் வாளுங் கையும்.

தெளிவுரை : அவ்வாறு எறிபத்தர் நினைத்து, மன்னன் தந்த வாளைத் தன் கழுத்தில் அரியத் தொடங்கிய போதில், பெரியோர் செய்கை இருந்தவாறு என்னே ! ஓ ! கெட்டேன் ! என்று எதிர் விரைந்து சென்று, மிகப் பெரிய தன் தோள்களால் கூடி, மன்னன் அந்த வாளையும் அதைப் பற்றிய அன்பரின் கையையும் சேர்த்துப் பற்றிக் கொண்டான்.

597. வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்தி நிற்ப
அளவிலாப் பரிவில் வந்த இடுக்கணை யகற்ற வேண்டிக்
களமணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வாக்குக்
கிளரொளி விசும்பின் மேல்வந் தெழுந்தது பலருங் கேட்ப.

தெளிவுரை : தாம் கொண்ட வாளையும் கையையும் பற்றி மன்னன், அவர் எண்ணிய செய்கையைச் செய்யவிடாது தடுத்தான். அதனால் பெருந் தவத்தவரான எறிபத்தர் வருந்தி நின்றார். இந்த இருவரிடத்திலும் அளவில்லாத அன்பு காரணமாய் வந்த இடுக்கண்களை நீக்கும் பொருட்டாக, நஞ்சு பொருந்திய கழுத்தையுடைய செம்மை தரும் நெற்றிக் கண்ணையுடைய பெருமானின் அருளால், ஞான ஒளி கிளரும் வானத்தில் பலரும் கேட்கும்படி எழுந்தது ஒரு திருவாக்கு.

598. தொழுந்தகை யன்பின் மிக்கீர் தொண்டினை மண்மேற் காட்டச்
செழுந்திரு மலரை யின்று சினக்கரி சிந்தத் திங்கள்
கொழுந்தணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற் றென்றங்
கெழுந்தது பாக ரோடும் யானையும் எழுந்த தன்றே.

தெளிவுரை : யாவரும் தொழுகின்ற அன்பினால் மிக்கவர்களே ! நீங்கள் செய்த திருத்தொண்டின் இயல்பை மண்ணுலகில் காட்டும் பொருட்டாகச்செழும் திருப்பள்ளித்தாமத்தை இன்று சினம் கொண்ட யானை சிந்தும்படி செய்த நிகழ்ச்சி, பிறைச் சந்திரனை அணிந்த சடையுடைய இறைவனின் திருவருளால் நேர்ந்தது என்று எழுந்து ஒலித்தது அத் திருவாக்கு. இறந்த பாகர்களுடன் இறந்த யானையும் அப்போதே எழுந்தது.

599. ஈரவே பூட்டும் வாள்விட் டெறிபத்தர் தாமும் அந்த
நேரியர் பெருமான் தாள்மேல் விழுந்தனர் நிருபர் கோனும்
போர்வடி வாளைப் போக எறிந்துஅவர் கழல்கள் போற்றிப்
பார்மிசை பணிந்தார் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார்.

தெளிவுரை : தம் கழுத்தை அரியும்படி வைத்த வாளை விட்டு எறிபத்தரும் சோழ மன்னனின் அடிகளில் விழுந்தார். சோழ மன்னனும் தம் கைப்பிடியுடன் பட்டிருந்த போர் வாளை எறிந்து விட்டு எறிபத்தரை அவரது அடிகளில் தரையில் விழுந்து பணிந்தான். தேவர்கள் குளிர்ந்த பூமழையைப் பொழிந்தனர்.

600. இருவரும் எழுந்து வானில் எழுந்தபே ரொலியைப் போற்ற
அருமறைப் பொருளாய் உள்ளார் அணிகொள்பூங் கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாம நிறைந்திட அருள மற்றத்
திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார்.

தெளிவுரை : எறிபத்தர், சோழ மன்னன் என்னும் இருவரும் எழுந்து நின்று, வானத்தில் எழுந்த திருவாக்கின் ஒலியைப் போற்றினர். அருமறைப் பொருளாய் உள்ள சிவபெருமான் அழகிய மலர்க் கூடையில் முன் பொருந்திய திருப்பள்ளித் தாமம் நிறையுமாறு செய்தார்; அந்தத் திருவருட் செயலைக் கண்டு பெருவாழ்வு பெற்றவராய் மகிழ்ந்து சிவகாமியாண்டாரும் நின்றார்.

601. மட்டவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர்
உட்டரு களிப்பி னோடும் உறங்கிய தெழுந்த தொத்து
முட்டவெங் கடங்கள் பாய்ந்து முகிலென முழங்கிப் பொங்கும்
பட்டவர்த் தனத்தைக் கொண்டு பாகரும் அணைய வந்தார்.

தெளிவுரை : மணம் கமழும் ஆத்தி மாலை சூடிய வெற்றியுடைய மன்னனின் முன்பு, தூங்கி மீண்டு விழித்து எழுந்ததைப் போல், வெவ்விய மதநீர் பாய, மேகத்தைப் போல் ஒலி செய்து, ஆரவாரத்துடன் கிளம்பும் பட்டவர்த்தன யானையைச் செலுத்திக் கொண்டு உள்ளம் நிறைந்த மகிழ்வோடும் அந்தப் பாகர்களும் அங்கு நெருங்கி வந்தனர்.

602. ஆனசீர்த் தொண்டர் கும்பிட் டடியனேன் களிப்ப இந்த
மானவெங் களிற்றில் ஏறி மகிழ்ந்தெழுந் தருளும் என்ன
மேன்மையப் பணிமேற் கொண்டு வணங்கிவெண் குடையின் நீழல்
யானைமேல் கொண்டு சென்றார் இவுளிமேல் கொண்டு வந்தார்.

தெளிவுரை : இத்தகைய சிறப்புடைய தொண்டரான எறிபத்தர், மன்னனை வணங்கி, அடியேன் பார்த்து மகிழும்படி இந்தப் பெரியதும் விருப்பத்தைத் தருவதுமான யானையின் மீது ஏறி மகிழ்ச்சியுடன் இனிமேல் உம் அரண்மனைக்கு எழுந்தருள்வீர் என்று கூறினார். குதிரை மீது ஏறிவந்த மன்னர் மன்னன், மேலோரால் தரப்படும் மேன்மையுடைய அந்தக் கட்டளையை ஏற்று, அவரை மேலும் வணங்கி, வெண்குடையின் நீழலிலே யானை மீது ஏறிச் சென்றான்.

603. அந்நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழு மொன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண்ணெலாம் மகிழ்ந்து வாழ்த்தப்
பொன்னெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியிற் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான்.

தெளிவுரை : அந்நிலையில் எழுச்சி பெற்ற படையினர் ஏழு கடல்களும் ஒன்று கூடி ஒலித்தாற் போல் ஓசையுடன் ஆரவாரிக்கவும், உலகத்தார் எவரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தவும், நெடிய பொன்னம் பலத்தில் நித்யமான திருக்கூத்து ஆடும் இறைவனின் திருவடிகளைத் தலையில் சூடியவராய்ச் சோழனும் திருவளரும் கோயிலில் புகுந்தான்.

604. தம்பிரான் பணிமேற் கொண்டு சிவகாமி யாருஞ் சார
எம்பிரான் அன்ப ரான எறிபத்தர் தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற் கரியார் என்று
செம்பியன் பெருமை உன்னித் திருப்பணி நோக்கிச் சென்றார்.

தெளிவுரை : தம் இறைவனின் பணியை மேற்கொண்டு சிவகாமி யாண்டாரும் திருக் கோயிலை நோக்கிச் சென்றார். இறைவனின் அடியவரான எறிபத்தரும் என்னே ! அம்பலத்துள் நிறைந்த இறைவனின் அடியார்கள் அறிதற்கு அரியவர் ஆவர் என்று சோழன் பெருமையை எண்ணி அற்புதம் அடைந்தவராகித் தம் திருப்பணி செய்யச் செல்லலானார்.

605. மற்றவர் இனைய தான வன்பெருந் தொண்டு மண்மேல்
உற்றிடத் தடியார் முன்சென் றுதவியே நாளும் நாளும்
நற்றவக் கொள்கை தாங்கி நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம் கோமுதல் தலைமை பெற்றார்.

தெளிவுரை : அந்த எறிபத்தர் நாயனார் இத்தகைய வலிய பெருந்தொண்டை இவ்வுலகில் இடையூறு அடைந்த இடத்தில் அடியார்களுக்கு முன் போய் உதவி நாளும் நாளும் இங்ஙனம் இந்த நற்றவக் கொள்கையை மேற்கொண்டு செய்து வந்து, முடிவில் நன்மை மிக்க திருக்கயிலை மலையில் இறைவரின் திருக்கணங்களின் முதல்வர்க்கு முதல்வராகும் கணநாயகத் தலைமை பெற்றார்.

606. ஆளுடைத் தொண்டர் செய்த ஆண்மையுந் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும்
நாளுமற் றவர்க்கு நல்கும் நம்பர்தாம் அளக்கி லன்றி
நீளுமித் தொண்டின் நீர்மை நினைக்கில்ஆர் அளக்க வல்லார்.

தெளிவுரை : ஆளுடைய தொண்டரான எறிபத்தர் செய்த வீரச் செயலையும், தன்னையும் கொல்லும்படி தம் உடை வாளையும் தந்து நின்ற சோழனின் பெருமையையும், நாளும் நாளும் அவர்க்கு அருள் நல்கும் இறைவர் தாமே அளந்தாலன்றி, நீளச் செல்கின்ற இத்தொண்டின் இயல்பை நினைக்குமிடத்து யார் அளக்கும் வன்மையுடையவர் !

607. தேனாருந் தண்பூங் கொன்றைச்  செஞ்சடை யவர்பொற் றாளில்
ஆனாத காதல் அன்பர் எறிபத்த ரடிகள் சூடி
வானாளுந் தேவர் போற்றும் மன்றுளார் நீறு போற்றும்
ஏனாதி நாதர் செய்த திருத்தொழி லியம்ப லுற்றேன்.

தெளிவுரை : தேன் பொருந்திய குளிர்ந்த அழகிய கொன்றை மலரைச் சூடிய சிவந்த சடையையுடைய சிவபெருமானின் பொற்பாதங்களில் குறையாத விருப்புடைய அன்பரான எறிபத்தரின் திருவடிகளைத் தலை மீது சூடி, வான் உலகம் காவல் பூண்ட தேவர்கள் வணங்குகின்ற, அம்பலவாணரின் திருநீற்றைப் போற்றும் வாழ்வுடைய ஏனாதி நாயனார் செய்த திருச் செயலைச் சொல்லப் புகுகின்றேன்.

எறிபத்தர் நாயனார் புராணம் முற்றிற்று.

15. ஏனாதிநாத நாயனார் புராணம்

சோழநாட்டில் உள்ள ஊர் எயினனூர். அந்தவூரில் ஈழ குலத்தில் தோன்றியவர் ஏனாதி நாதர். திருநீற்றினிடத்து அன்பு செலுத்துவதும் மன்னர்க்குப் படைக்கலப் பயிற்சி அளித்தலும் அவரது தொழில். அவர், தம் தொழிலால் வரும் பொருளைச் சிவனடியார்க்குப் பயன்படுத்துவார். ஈழ குலத்திலே அதிசூரன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனது தொழிலும் படைக்கலப் பயிற்சி அளிப்பதே ஆகும். அத்தொழிலில் ஏனாதி நாதர்க்கு வருவாய் அதிகம் வந்ததால் அதிசூரன் அவர் மீது பொறாமை கொண்டான். அதனால் அவன் அவர் மீது படையுடன் போர் செய்ய வந்தான். போரில் வெல்பவரே போர்ப் பயிற்சி அளிக்கும் உரிமை பெற்றவர். எனவே போருக்கு வருக! என்று அழைத்தான். ஏனாதிநாதரும் போருக்குச் சளைக்கவில்லை! போருக்குப் புறப்பட்டார் படையுடனே! அதிசூரன் தோற்று ஓடினான். வீரத்தால் ஏனாதி நாதரை வெல்ல முடியாது. அவன் வஞ்சனையால் வெல்ல எண்ணினான். மறுநாள் அவன் தன்னுடன் தனியே போர் செய்யவருமாறு ஓர் ஏவலன் மூலம் சொல்லி அனுப்பினான். அதிசூரன் நெற்றியில் திருநீறு பூசிச் சிவனடியார் கோலத்துடன் போருக்கு வந்தான். முதலில் அவன் தன் நெற்றியைக் கேடயத்தால் மறைத்திருந்தான். பின் கேடயத்தை விலக்கித் தன் திருநீறு அணிந்த நெற்றியைப் புலப்படச் செய்தான். அப்போது ஏனாதி நாதர் இவர் இன்று சிவனடியார் ஆனார். எனவே இவர் கருத்துக்கு இசைய அவர் என்னைக் கொல்ல ஆயுதம் இன்றி நிற்பேன்! என நினைத்தார். பின், ஆ! நான் ஆயுதம் இன்றி நின்றால், இவர் நிராயுதபாணியான என்னைக் கொன்றார் என்ற பழியுண்டாகும்!. எனவே, நான் படைக்கலம் ஏந்திப் போர் செய்வதைப் போல் நிற்பேன் என்று எண்ணி நின்றார். அதிசூரன் தான் எண்ணியதை எண்ணிய வண்ணமே செய்து முடித்தான். திருநீற்றுக்காக உயிர் அளித்த ஏனாதி நாதர் சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்தார்.

608. புண்டரிகம் பொன்வரைமேல் ஏற்றிப் புவியளிக்கும்
தண்தரள வெண்கவிகைத் தார்வளவர் சோணாட்டில்
வண்டறைபூஞ் சோலைவயல் மருதத் தண்பணைசூழ்ந்
தெண்திசையும் ஏறியசீர் எயின்மூதூர் எயினனூர்.

தெளிவுரை : புலிக் கொடியை இமய மலை மீது ஏற்றி, அந்த எல்லை வரையிலும் பரவிய தம் நாட்டினைக் காவல் செய்யும், குளிர்ந்த முத்துக்கள் கட்டிய வெண் கொற்றக் குடையையும் வெற்றி மாலையையும் உடைய சோழர்களின் வளமை மிக்க சோழ நாட்டில், வண்டுகள் ஒலிப்பதற்கு இடமான பூஞ்சோலை சூழ்ந்த வயல்களையுடைய மருதத்தின் குளிர்ந்த பண்ணைகள் சூழ்ந்ததாக எட்டுத் திக்குகளிலும் பரவிய சிறப்புடையதாய் விளங்கியது எயினன் ஊர்.

609. வேழக் கரும்பினொடு மென்கரும்பு தண்வயலில்
தாழக் கதிர்ச்சாலி தானோங்குந் தன்மையவாய்
வாழக் குடிதழைத்து மன்னியஅப் பொற்பதியில்
ஈழக் குலச்சான்றார் ஏனாதி நாதனார்.

தெளிவுரை : குளிர்ந்த வயல்களில் நாணல் கரும்போடு மென் கரும்பும் தாழுமாறு, கதிர்ச் சாலி என்ற நெற்பயிர் ஓங்கி வளர்கின்ற இயல்புடையதாக விளங்கவும், அதனால் வாழ்வு பெறும்படி பெருங்குடி மக்கள் தழைத்து நிலை பெற்ற அந்த அழகிய நகரத்திலே ஈழக் குலச் சான்றார் மரபில் தோன்றியவர் எனாதி நாதனார் என்ற பெரியார்.

610. தொன்மைத் திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டின்
நன்மைக்கண் நின்ற நலமென்றும் குன்றாதார்
மன்னர்க்கு வென்றி வடிவாள் படைபயிற்றும்
தன்மைத் தொழில் விஞ்சையில்தலைமை சார்ந்துள்ளார்.

தெளிவுரை : அந்த ஏனாதி நாதர் பழைமையான திருநீற்றுத் தொண்டினை வழிபடும் திறத்தின் நன்மையில் நிலைத்து நின்ற தன்மையிலே எக்காலத்தும் பிறழாதவர். மன்னர்க்கு வெற்றி யளிக்கும் வாள்படை பயிற்றும் தொழிலான கலைத் திறத்திலே தலைமை பெற்றவராய் விளங்கினார்.

611. வாளின் படைபயிற்றி வந்த வளமெல்லாம்
நாளும் பெருவிருப்பால் நண்ணும் கடப்பாட்டில்
தாளும் தடமுடியும் காணாதார் தம்மையுந்தொண்
டாளும் பெருமான் அடித்தொண்டர்க் காக்குவார்.

தெளிவுரை : அவர் வாளைப் பயிற்றுவித்து அதனால் வந்த ஊதியமான பொருள்கள் எல்லாவற்றையும், நாள்தோறும் மிக்க விருப்பத்துடன் பொருந்திய கடமையிலே, தம் அடி முடிகளையும் ஆட்கொள்ளும் சிவபெருமானின் அடியார்களுக்குப் பயன்படுத்தி வந்தார்.

612. நள்ளார் களும்போற்றும் நன்மைத் துறையின்கண்
எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகுநாள்
தள்ளாத தங்கள் தொழிலுரிமைத் தாயத்தின்
உள்ளான் அதிசூரன் என்பான் உளனானான்.

தெளிவுரை : பகைவர்களும் போற்றும்படியான நல்ல துறையில் இகழப்படாத செயலிலே அவர் ஒழுகி வந்தார். அக்காலத்தில், விடுபடாத வண்ணம் தொடர்ந்துள்ள தம் தொழில் உரிமைத் தாயத்தில் உள்ளவனான அதிசூரன் என்பவன் ஒருவன் இருந்தான்.

613. மற்றவனும் கொற்றவடிவாட் படைத்தொழில்கள்
கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் இல்லையெனும்
பெற்றிமையால் மாநிலத்து மிக்க பெருமிதம்வந்
துற்றுலகில் தன்னையே சால மதித்துள்ளான்.

தெளிவுரை : அந்த அதிசூரனும் வெற்றியுடைய வாள் படைத் தொழில் கற்றவர்களில் தன்னைவிட மேன்மை உடையவர் எவரும் இல்லை என்னும்படி உலகத்தில் மிக்க பெருமிதம் உடையவனாய்த் தன்னைத் தானே மதித்துக் கொள்பவனாய் விளங்கினான்.

614. தானாள் விருத்திகெடத் தங்கள்குலத் தாயத்தின்
ஆனாத செய்தொழிலாம் ஆசிரியத் தன்மைவளம்
மேனாளுந் தான்குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்
ஏனாதி நாதர்திறத் தேலா இகல்புரிந்தான்.

தெளிவுரை : தன் தொழில் குறைவுபடத் தங்கள் குலத்துக்குரிய தாய உரிமையில் குறையாத தொழிலான வாட்படைப் பயிற்சி பயிற்றும் ஆசிரியத் தொழிலால் வரும் ஊதிய மானவை மேலும் மேலும் தனக்குக் குறைந்து, ஏனாதி நாதருக்கே மேம்பட்டு வந்தது. அதனால் அதிசூரன் ஏனாதி நாதரிடம் பகைமை பூண்டவன் ஆனான்.

615. கதிரோன் எழமழுங்கிக் கால்சாயுங் காலை
மதிபோல் அழிந்துபொறா மற்றவனும் சுற்றப்
பதியோ ருடன்கூடப் பண்ணியமர் மேற்சென்
றெதிர்போர் விளைப்பதற்கே எண்ணித் துணிந்தெழுந்தான்.

தெளிவுரை : கதிரவன் மேலே வரவரத் தன் ஒளி குன்றி மங்கும் நிலவு போல் குறைவடைந்து பொறாமை மேற்கொண்ட அந்த அதிசூரனும் தன் சுற்றத்தாரையும் மற்ற ஊராரையும் ஒன்று சேர்த்து ஏனாதிநாதர் மேல் சென்று எதிர்த்துப் போர் செய்யத் துணிந்து எழுந்தான்.

616. தோள்கொண்ட வல்லாண்மைச் சுற்றத் தொடுந்துணையாம்
கோள்கொண்ட போர்மள்ளர் கூட்டத் தொடும்சென்று
வாள்கொண்ட தாயம் வலியாரே கொள்வதென
மூள்கின்ற செற்றத்தால் முன்கடையில் நின்றழைத்தான்.

தெளிவுரை : தோளின் வலிய ஆண்மையுடைய உறவினருடனே, தனக்குத் துணையாய்க் கொள்ளப்பட்ட போர் மன்னரின் கூட்டத்துடன் சென்று, ஏனாதிநாதரின் வீட்டின் கடையில் நின்று, வாள்பயிற்றும் தொழில் தாயத்தை அதில் வலியவராய் உள்ளவரே ஏற்றுக் கொள்ளத் தக்கவர் என மிகவும் மூண்டு எழும் சினத்தால் நின்று அழைத்தான்.

617. வெங்கட் புலிகிடந்த வெம்முழையிற் சென்றழைக்கும்
பைங்கட் குறுநரியே போல்வான் படைகொண்டு
பொங்கிப் புறஞ்சூழ்ந்து போர்குறித்து நேர்நின்றே
அங்கட் கடைநின் றழைத்தா னொலிகேளா.

தெளிவுரை : கொடிய கண்களையுடைய புலியிருந்த கொடிய குகையில் சென்று அச்சிங்கத்தைப் போருக்கு வரும்படி அறைகூவி அழைக்கும் சிறிய கண்ணையுடைய குறுநரி போன்ற அதிசூரன், தன் படைத் துணையைக் கொண்டு பொங்கிப் புறத்தில் வளைந்து போரைக் குறித்து நின்றான். இடம் அகன்ற தம் தலை வாயிலில் நின்று போருக்கு அழைத்தவனின் ஒலியைக் கேட்டு,

618. ஆர்கொல் பொரவழைத்தார் என்றரியேற் றிற்கிளர்ந்து
சேர்வு பெறக்கச்சில் செறிந்தவுடை மேல்வீக்கி
வார்கழலுங் கட்டி வடிவாள் பலகைகொடு
போர்முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார்.

தெளிவுரை : போருக்கு என்னை அறைகூவி அழைத்தவர் யார் ? என்று ஆண் சிங்கம் போல் கிளர்ச்சியுடன் எழுந்து, கச்சுக் கட்டிய உடையை இடையில் இறுகக் கட்டி, வீரக் கழலையும் அணிந்து, கூர்மையான வாளையும் கேடயத்தையும் கைக்கொண்டு போர் செய்யத் துணிந்து, தம் இல்லத்தினின்றும் ஏனாதிநாதர் புறப்பட்டார்.

619. புறப்பட்ட போதின்கண் போர்த்தொழில்வாள் கற்கும்
விறற்பெருஞ்சீர்க் காளையர்கள் வேறிடத்தி னின்றார்
மறப்படைவாள் சுற்றத்தார் கேட்டோடி வந்து
செறற்கரும்போர் வீரர்க் கிருமருங்குஞ் சேர்ந்தார்கள்.

தெளிவுரை : அங்ஙனம் ஏனாதிநாதர் புறப்பட்ட சமயத்தில், அவரிடம் போர்த் தொழில் வாட் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் வலிய பெரிய சிறந்த காளையர்களும், முன்னால் பயிற்சி பெற்று வெவ்வேறு இடத்தில் உள்ளவர்களும், கொலை செய்யும் பல படைக் கலங்களும் வாளும் கைக்கொண்ட சுற்றத்தார்களும் அதைக் கேட்டு ஓடிவந்து, போரில் வெல்வதற்கு அரிய சிறந்த வீரரான அவருக்கு இரு பக்கங்களிலும் சேர்ந்தார்கள்.

620. வந்தழைத்த மாற்றான் வயப்புலிப்போத் தன்னார்முன்
நந்தமது வாட்பயிற்று நற்றாயங் கொள்ளுங்கால்
இந்தவெளி மேற்கை வகுத்திருவேம் பொருபடையும்
சந்தித் தமர்விளைத்தால் சாயாதார் கொள்வதென.

தெளிவுரை : தம் வாயிலில் வந்து போருக்கு அறைகூவி அழைத்த அதிசூரன் வெற்றியுடைய ஆண் புலி போன்ற நாயனாரின் முன்னே நின்று, வாள்கலை பயிற்றுதலாகிய நல்ல தாய உரிமையை நாம் கைக் கொண்டு அதன் வருவாயை நாம் பெறும்போது, இந்த வெளியிடத்தில் நம் படை இரண்டும் அணி வகுத்து நின்று சந்தித்துப் போரிட்டால், அதில் வெற்றி பெறுபவரே, அவ் வருவாயைப் பெற்றுக் கொள்வது என்று சொன்னான்.

621. என்றுபகைத் தோனுரைப்ப ஏனாதி நாதரது
நன்றுனக்கு வேண்டுமேல் நண்ணுவன்என் றுள்மகிழ்ந்து
சென்றவன்முன் சொன்ன செருக்களத்துப் போர்குறிப்பக்
கன்றி யிருபடையும் கைவகுத்து நேர்மலைவார்.

தெளிவுரை : இங்ஙனம் தம்மிடம் பகை கொண்டவனான அதிசூரன் சொல்ல, ஏனாதிநாதர், அது நல்லது. நீ விரும்பினால் நான் அவ்வாறே செய்வேன் என்று கூற, மனத்துள் மகிழ்ந்து, அவன் முன்னே குறித்துச் சொன்ன போர்க்களத்துக்குச் சென்று போர் செய்ய நின்றார். இரு படை வீரர்களும் சினந்து அணி வகுத்து எதிர் எதிர் போர் செய்யலாயினர்.

622. மேக வொழுங்குகள் முன்கொடு மின்னிரை தம்மிடை யேகொடு
மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு மேறெதிர் செல்வன
வாக நெடும்பல கைக்குல மாள்வினை வாளுடை யாடவர்
காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர்.

தெளிவுரை : மேகக் கூட்டத்தினை முன்னால் கொண்டும், மின்னல் கூட்டத்தைத் தமக்கு இடையிடையே கொண்டும், வானத்திலும் பூமியிலும் வன்மையுடைய இடியேறு எதிர் எதிரே சென்றதைப் போல், பெரிய கேடயக் கூட்டத்தை ஆளும் தன்மையும் வாளை ஆளும் தொழிலும் கொண்ட போர் வீரர், காக்கைகள் நிறைந்த போர்க் களத்தில் இரு பக்கங்களிலும் எதிர் எதிர் வந்து எதிர்த்தனர்.

623. தாள்கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்க ளடக்கிய
வாளொளி வட்ட முனைந்திட வந்திரு கைகளின் முந்தினர்
வேலொடு வேலெதிர் நீள்வன  மேவிய பாதலம் விட்டுயர்
ஞாலமு றும்பணி வீரர்கள் நாநிமிர் கின்றன வொத்தன.

தெளிவுரை : கால்களில் வீரக் கழலைக் கட்டிய போர் வீரர்கள் கைகளில் தம் உடலை மறைக்கும் ஒளிவட்டமும் வாளுமாகக் கலந்து போர் செய்ய வந்து இருவர் பக்கங்களிலும் முற்பட்டுப் போரிட்டனர். இவ்விரு பக்கங்களிலும் வேற்படையுடன் வேற்படை எதிர்த்துப் போர் செய்பவை, தாம் தாம் இருந்த பாதல உலகத்தை விட்டு நிலவுலகத்தில் பொருந்துகின்ற நாக வீரர்களின் நாக்குகள் மேலே நீள்கின்ற போல் தோன்றின.

624. வெங்கண் விறற்சிலை வீரர்கள் வேறிரு கையிலும் நேர்பவர்
தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவ
பொங்கு சினத்தெரி யிற்புகை போகு கொடிக்கள் வளைத்தெதிர்
செங்கண் விழிக்கனல் சிந்திய சீறு பொறிச்செல வொத்தன.

தெளிவுரை : கொடிய கண்களையுடையவராய் வலிய வில் ஏந்திய வீரர்கள் வேறோரிடத்தில் இரண்டு பக்கங்களிலும் போர் செய்பவராய்த் தங்கள் தங்கள் விற்களினின்றும் செலுத்திய கெடுதல் அற்ற அம்புகள் ஒன்றை ஒன்று நெருங்கி எதிர்க்கின்ற செயல், மிக்க சினத்தில், மூண்ட தீயினின்றும் புகை போகும் மண்டிலங்கள் போல் வளைத்துச் சிவந்த கண்களின் சினத் தீயினின்று எதிர் எதிராக வெளிப்பட்ட சீறித் தெறிக்கும் பொறிகள் போவதைப் போன்று விளங்கின.

625. வாளொடு நீள்கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன
தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன
தாளொடு வார்கழ லிற்றன தாரொடு சூழ்சிர மற்றன
நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர்செய் களத்தினில்.

தெளிவுரை : தங்களுக்கு விதிக்கப்பட்ட நாள் எல்லையுடன் சீறிப்போர் செய்ய வல்ல அந்த வீரர்கள் விரும்பிப் போர் செய்கின்ற அப்போர்க் களத்தில், வாள்களுடன் அவற்றைப் பற்றிய நீண்ட கைகள் துண்டாகி விழுந்து துடித்தன. மார்பில் வேல்கள் பாய்ந்தன. தாம் பாய்ந்து அறுத்த தோள்களுடன் அம்புகள் தரையில் விழுந்தன. வீரர்களின் உடலில் தாக்கி அழுத்திக் கேடயங்கள் அந்தத் தோலுடனே, ஒன்றாய்ப் பதிந்தன. கால்களுடன் அவற்றில் கட்டிய வீரக் கழல்களும் அறுபட்டன. அணிந்த மாலைகளுடன் அவை அணியப்பட்ட தலைகளும் துண்டாயின.

626. குருதியின் நதிகள் பரந்தன குறையுடல் ஓடி யலைந்தன
பொருபடை அறுதுணி சிந்தின புடைசொரி குடருடல் பம்பின
வெருவர எருவை நெருங்கின விசியறு துடிகள் புரண்டன
இருபடை தனினும் எதிர்ந்தவர் எதிரெதிர் அமர்செய் பறந்தலை.

தெளிவுரை : இரு பக்கத்துப் படைகளிலும் போரிடுபவர் எதிர் எதிராக நின்று போர் செய்தலால் அப்போர்க் களத்தில், குருதிப் பெருக்குகள் ஆறுகளைப் போல ஓடின. உடல் குறைகள் ஓடி எங்கும் அலைந்தன. போர்ப்படை வீரர்களின் அறுபட்ட துண்டங்கள் சிந்தின. பக்கங்களில் வெளிவந்த குடல்களுடன் கூடிய உடல்கள் நிரம்பிக் கிடந்தன. அச்சம் கொள்ளும்படி கழுகுகள் ஒன்று கூடின. வார்கள் அறுபட்ட துடிப்பறையில் தரையில் உருண்டன.

627. நீளிடை முடுகி நடந்தெதிர் நேரிரு வரில்ஒரு வன்றொடர்
தாளிரு தொடையற முன்பெயர் சாரிகை முறைமை தடிந்தனன்
வாளொடு விழுமுடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திட
ஆளியி னவனு மறிந்தனன் ஆயினர் பலருள ரெங்கணும்.

தெளிவுரை : நீண்ட தொலைவு விரைந்து எதிர்த்துப் போர் செய்த வீரர் இருவரில், ஒருவன் தன்னைத் தொடர்ந்த பகைவனின் கால்கள் இரண்டு துடைகளுடன் அறுந்து விழுமாறு வெட்டிக் கீழே விழச் செய்தான். இங்ஙனம் வெட்டப்பட்டு விழுகின்ற உடலானது கீழே விழுவதற்கு முன்பு, தான் எடுத்த போர் வாளால் தன்னை வென்றவனது மார்பு இடை பிளந்து அறும்படி வீசச் சிங்கம் போன்ற அவனும் மடிந்தான். இவ்வாறு அந்தப் போர்க்களத்தில் எங்கும் இறந்த வீரர் பலர்.

628. கூர்முனை அயில்கொடு முட்டினர் கூடிமுன் உருவிய தட்டுடன்
நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிரெதிர் குத்தினர்
ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை
போரடு படைகொ டளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர்.

தெளிவுரை : கூர்மையான முனையுடைய வேலுடன் அணுகி எதிர்த்தவர் முன்னால் நீட்டிய பலகையையும் மார்பையும் நேராக ஊடுருவிச் செல்லுமாறு எதிர் எதிராக உரப்பாய்க் குத்தினர்; அதனால் தம்தம் உயிர்கள் நீங்கிய பின்பும் அந்த நிலையிலே நின்றனர். அவ்வாறு நின்றவர், வீரத்தில் இருவரும் ஒப்பாகும் தன்மையைத் தம்தம் போர்ப் படைக் கலங்களைக் கொண்டு அளந்து நிலையிடுவார்போல் விளங்கினர். இத்தகைய நிலையில் அப்போர்க் களத்தில் இறந்த வீரர் அளவற்றவர்.

629. பொற்சிலை வளைய வெதிர்ந்தவர் புற்றர வனைய சரம்பட
விற்படை துணியவும் நின்றிலர் வெற்றிகொள் சுரிகை வழங்கினர்
முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடைநிலை நின்றிட
உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர்சில கண்டர்கள்.

தெளிவுரை : பொன் பூண் இட்ட தம் விற்களை வளைத்துப் போர் செய்தவரில் புற்றினின்று வெளிப்படும் பாம்பைப் போல் மாற்றார் எய்த அம்புகளால் தம் விற்கள் அறுபடவும் போர் ஒழித்து நிற்காதவர்களாகித் தம் வெற்றி வாளை வீசியவர்கள், முன்பு நிறைந்திருந்த தம் பெருவளங்கள் நீங்கிய பின்பும் முன்பு தாம் மேற்கொண்டிருந்த கொடைத் தன்மையிலேயே நிற்கத் தம்மிடம் எஞ்சியுள்ளவற்றையும் கொடுத்து உதவும் வள்ளல் தன்மை உடையவரைப் போன்று விளங்கினர்.

630. அடல்முனை மறவர் மடிந்தவர் அலர்முகம் உயிருள வென்றுறு
படர்சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில்
விடுசுடர் விழிக ளிரும்புசெய் வினைஞர்தம் உலையின் முகம்பொதி
புடைமிடை கரியிடை பொங்கிய புகைவிடு தழலை நிகர்த்தன.

தெளிவுரை : வன்மையுடைய போர் வீரர்களில் மடிந்தவர்களின் மலர்ந்த முகங்கள் உயிர் உள்ளன என்று நினைத்ததால், இறகு விரித்து வந்த காக்கைகள் அவற்றை அணுகாது பக்கத்துச் சென்றன; சுழன்றன. இதனால், அவற்றினிடையிலே, ஒளி வீசி விளங்கும் வீரர்களின் கண்கள் இரும்புத் தொழில் செய்யும் கருங்கொல்லர் தம் உலையில் மேலே பொதிந்து பக்கத்தே நிறைந்த கரியில் பொங்கிய புகை விடுகின்ற தீயைப் போல் விளங்கின.

631. திண்படை வயவர் பிணம்படு செங்கள மதனிடை முன்சிலர்
புண்படு வழிசொரி யுங்குடர் பொங்கிய கழுகு பருந்தொடு
கொண்டெழு பொழுதினும் முன்செயல் குன்றுத லிலர்தலை நின்றனர்
விண்படர் கொடிவிடு பண்பயில் விஞ்சையர் குமரரை வென்றனர்.

தெளிவுரை : திண்ணிய படை வீரர்கள் இறந்த பிணங்கள் விழுந்த சிவந்த களத்தில், முன்னே சிலர், படைக்கலங்களால் புண்பட்ட புண்ணின் வழியே சொரிந்த குடல்களை மிகுதியாய்க் கூடிய கழுகுகள் பற்றி மேலே எழும் காலத்திலும் சலிக்காமல் தம் முன்னைச் செயலான போர் முயற்சியையுடைய வீரர்கள் வானத்தில் செல்கின்ற காற்றாடியை விடும் வித்தியாதரச் சிறுவரைப் போன்று விளங்கினர்.

632. இம்முனைய வெம்போரில் இருபடையின் வாள்வீரர்
வெம்முனையின் வீடியபின் வீடாது மிக்கொழிந்த
தம்முடைய பல்படைஞர் பின்னாகத் தாமுன்பு
தெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்தெழுந்தார்.

தெளிவுரை : இங்ஙனம் நிகழ்ந்த கொடிய போரில் இருபக்கங்களிலும் வீரம் மிக்க படைஞர் கொடிய போர் செய்து பலர் இறந்தனர். பின்பு, இறவாமல் எஞ்சி நின்ற தம் பல வீரர்களும் பின்னிடத், தாம் முன்னால் சென்று போர் செய்பவராய், ஏனாதிநாதர் சினத்துடன் எழுந்தனர்.

633. வெஞ்சினவாள் தீயுமிழ வீரக் கழல்கலிப்ப
நஞ்சணிகண் டர்க்கன்பர் தாமெதிர்ந்த ஞாட்பின்கண்
எஞ்சியெதிர் நின்ற இகல்முனையில் வேலுழவர்
தஞ்சிரமும் தோளுரமும் தாளும் விழத்துணித்தார்.

தெளிவுரை : மிகுந்த சினமுடைய வாளினின்றும் தீயுண்டாகவும், காலில் அணிந்த வீரக்கழல் ஒலிக்கவும், நஞ்சுண்ட கழுத்தை யுடையவரான சிவபெருமானின் அன்பரான ஏனாதி நாதர், தாம் போர்க்களத்தின் முன் சென்று சினந்து எழுந்த போது, முன் இறவாது உயிருடன் இருந்தவர்களாய் அவரை எதிர்த்துப் போரில் நின்ற படை வீரர்களின் தலையும் தோள் வன்மையும் தாள் வலிமையும் தாம் துண்டித்தார்.

634. தலைப்பட்டார் எல்லாரும் தனிவீரர் வாளில்
கொலைப்பட்டார் முட்டாதார் கொல்களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம்போ லாயினார்.

தெளிவுரை : எதிர்த்து வந்தவர் அனைவரும் ஒப்பில்லாத வீரரான ஏனாதிநாதரின் வாளால் கொல்லப்பட்டு இறந்தனர். அதைக் கண்டு வந்து அவரை எதிர்க்காத படை வீரர் போர்க்களத்தை விடுத்து நிலைத்த மெய்யுணர்வின் முன் அலைந்து நீங்கும் ஆர்வம் முதலான குற்றங்கள் போல ஆயினர்.

635. இந்நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால்
தன்னுடைய பல்படைஞர் மீண்டார் தமைக்கொண்டு
மின்னொளிவாள் வீசி விறல்வீரர் வெம்புலியே
றன்னவர்தம் முன்சென் றதிசூரன் நேரடர்ந்தான்.

தெளிவுரை : இத்தகைய கொடிய போர்க்களத்தில் போரைச் செய்ய வந்து, தோற்றுப் போன இழிவைப் பொறுத்துக் கொள்ளாது தன் பல படை வீரர்களில் அஞ்சி மீண்டவர்களைச் சேர்த்துக் கொண்டு, மின்னல் போன்ற ஒளியுடைய வாளை வீசிக் கொடிய புலியைப் போன்ற வன்மையுடைய வீரரான ஏனாதிநாதரின் முன்பு நேராய்ப் போய் அதிசூரன் போர் செய்தான்.

636. மற்றவர்தஞ் செய்கை வடிவாள் ஒளிகாணச்
சுற்றிவரும் வட்டணையில் தோன்றா வகைகலந்து
பற்றிஅடர்க் கும்பொழுதில் தானும் படைப்பிழைத்துப்
பொற்றடந்தோள் வீரர்க் குடைந்து புறகிட்டான்.

தெளிவுரை : அவர் தம் சிறந்த கூரிய வாளின் ஒளி மட்டும் காணுமாறும், சாரிகை சுற்றி வருகின்ற வட்டணையில் தாம் காணாதபடியும், அப்பொருள் கலந்து மூண்டு அந்த அதிசூரனைத் துண்டிக்க வாளை வீச இருந்தபோது, அந்த அதிசூரன் அதனின்றும் தப்பியவனாய்ப் பொன் மாலை அணிந்த பெரிய தோள்களையுடைய வீரரான ஏனாதி நாதருக்குத் தோற்றுப் புறமுதுகிட்டு ஓடினான்.

637. போன அதிசூரன் போரி லவர்க்கழிந்த
மானம்மிக மீதூர மண்டுபடுவான் கண்படான்
ஆனசெயல் ஓரிரவும் சிந்தித் தலமருவான்
ஈனமிகு வஞ்சனையால் வெல்வனென எண்ணினான்.

தெளிவுரை : இவ்வாறு புறம் காட்டி ஓடிய அதிசூரன் போரில் அவர்க்குத் தோற்றதால் ஆன மானவுணர்வு மிகப் பெற்றுத் தரையில் படுத்தவன், உறக்கம் கொள்ளாதவன் ஆனான். இத்தகைய செயலை நினைத்து நினைத்து அந்த ஓர் இரவு முற்றும் எண்ணி மனம் சுழன்று இவ்வாறு போர் செய்வதை விடுத்து, ஈனம் மிகுந்த வஞ்சனைச் செயலால் அவரை வெல்வேன் ! என்று எண்ணியவனாக,

638. சேட்டாருங் கங்குல் புலர்காலைத் தீயோனும்
நாட்டாரைக் கொல்லாதே நாமிருவேம் வேறிடத்து
வாட்டாயங் கொள்போர் மலைக்க வருகவெனத்
தோட்டார்பூந் தாரார்க்குச் சொல்லி வரவிட்டான்.

தெளிவுரை : அந்த நீண்ட இரவு முழுவதும் கழிந்த விடியற் காலத்தில் தீயவனான அந்த அதிசூரனும், நம் போரில் நம் பொருட்டாக நாட்டாரைக் கொல்லாமல், நாம் இருவர் தனியிடத்தில், வாளின் தாய உரிமை கைக் கொள்வதன் பொருட்டாக நிச்சயம் செய்யும் போரினைச் செய்ய வருக என்று பூமாலை அணிந்த ஏனாதி நாதருக்குக் கூறி வரத் தன் ஆளை அனுப்பினான்.

639. இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார்
அவ்வாறு செய்த லழகி தெனவமைந்து
கைவாள் அமர்விளைக்கத் தான்கருதும் அக்களத்தே
வெவ்வாள் உரவோன் வருகவென மேற்கொள்வார்.

தெளிவுரை : இவ்வாறு அதிசூரன் கேட்டு அனுப்பவும் ஏனாதி நாதர் அதனைக் கேட்டு, அவ்வாறு செய்வது நல்லது என்று ஏற்றுக் கொண்டார். கையிலே வாளை எடுத்துப் போர் செய்ய அவன் நினைத்த அந்தப் போர்க்களத்தில் கொடிய வாளையுடைய வலியவனான அவன் வருவானாக என்று சொல்லியனுப்பி, அந்தச் செயலைச் செய்ய மேற்கொண்டவராகி,

640. சுற்றத்தார் யாரும் அறியா வகைசுடர்வாள்
பொற்பலகை யுந்தாமே கொண்டு புறம்போந்து
மற்றவன்முன் சொல்லி வரக்குறித்த அக்களத்தே
பற்றலனை முன்வரவு பார்த்துத் தனிநின்றார்.

தெளிவுரை : ஏனாதிநாதர், தம் உறவினர் முதலிய எவரும் இதனை அறிந்து கொள்ளாதபடி, தாம் ஒருவரே ஒளி பொருந்திய வாளையும், அழகிய பூண் இட்ட கேடயத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து, அதிசூரன் முன் சொல்லிவிட்டு வருமாறு குறித்த அவ்விடத்தில், அவனுக்கு முன்னம் போய், அவனது வருகையை எதிர்பார்த்துத் தனியே நின்றார்.

641. தீங்கு குறித்தழைத்த தீயோன் தீருநீறு
தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும்
ஆங்கவருந் தீங்கிழையார் என்ப தறிந்தானாய்ப்
பாங்கில் திருநீறு பண்டு பயிலாதான்.

தெளிவுரை : வஞ்சனையினால் தீமை செய்ய உள்ளத்தில் குறி வைத்துப் போருக்கு வரும்படி சொன்ன கொடிய அதிசூரன் திருநீறு அணிந்த நெற்றியை யுடையவர்க்கு எவ்விடத்தும் எப்போதும் ஏனாதிநாதர் தீமை செய்யமாட்டார் என்பதை அறிந்தவன். ஆதலால் முன்னம் உண்மையில் திருநீறு பூசி அறியாதவனாக இருந்தும்.

642. வெண்ணீறு நெற்றி விரவப் புறம்பூசி
உண்ணெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன்கொண்டு
வண்ணச் சுடர்வாள் மணிப்பலகை கைக்கொண்டு
புண்ணியப்போர் வீரர்க்குச் சொன்னவி டம்புகுந்தான்.

தெளிவுரை : அதிசூரன் திருவெண்ணீற்றைத் தன் நெற்றி முழுதும் பொருந்தும்படி வெளியே பூசி, மனத்தினுள் வஞ்சனை என்ற கறுப்பையும் உடன் கொண்டு, அழகிய சுடரையுடைய வாளையும் மணிகள் பதித்த கேடயத்தையும் கைகளில் எடுத்துக்கொண்டு, புண்ணியப் போர் வீரரான ஏனாதிநாதருக்குத் தான் சொல்லிவிட்ட அந்த இடத்தில் சென்றான்.

643. வென்றி மடங்கல் விடக்குவர முன்பார்த்து
நின்றாற் போல்நின்றார் நிலைகண்டு தன்னெற்றி
சென்று கிடைப்பளவும் திண்பலகை யால்மறைத்தே
முன்தனிவீ ரர்க்கெதிரே  மூண்டான் மறம்பூண்டான்.

தெளிவுரை : வெற்றி பொருந்திய சிங்கம் தன் உணவுக்குரிய விலங்கு வருவதை எதிர்பார்த்து நின்றதைப் போன்ற நிலையைப் பார்த்து, அவரிடம் சென்று நெருங்க அணுகும் அளவும், தன் நெற்றியை வலிய கேடயத்தால் மறைத்த வண்ணம், முன்பு போய், ஒப்பில்லாத வீரரான அவர்க்கு எதிராய் மறச்செயலை மேற்கொண்ட அதிசூரன் நாயனாரின் அருகில் நெருங்கினான்.

644. அடல்விடையே றென்ன அடர்த்தவனைக் கொல்லும்
இடைதெரிந்து தாள்பெயர்க்கும் ஏனாதி நாதர்
புடைபெயர்ந்த மாற்றான் பலகை புறம்போக்கக்
கடையவன்தன் நெற்றியின்மேல் வெண்ணீறு தாங்கண்டார்.

தெளிவுரை : வலிமையுடைய காளைபோல எதிர்த்து அவனைக் கொல்லத் தக்க சமயத்தைத் தெரிந்து காலை எடுத்து வைத்துச் செல்கின்ற போது, அதிசூரன் தன் நெற்றியை மறைத்திருந்த கேடயத்தை விலக்கவே, கீழானவனான அவன் நெற்றியின் மீது வெண்ணீற்றினை ஏனாதி நாதர் பார்த்தார்.

645. கண்டபொழு தேகெட்டேன் முன்பிவர்மேற் காணாத
வெண்திருநீற் றின்பொலிவு மேற்கண்டேன் வேறினியென்
அண்டர்பிரான் சீரடியார் ஆயினார் என்றுமனங்
கொண்டிவர்தங் கொள்கைக் குறிவழிநிற் பேனென்று.

தெளிவுரை : பார்த்தவுடனே. ஆ! நான் கெட்டேன் ! இதற்கு முன்னர் இவர் நெற்றியின் மீது காணாத திருவெண்ணீற்றின் அழகை இப்போது கண்டேன். வேறு இனி என்ன நினைக்க இருக்கின்றது? தேவர்க்குத் தேவரான எம் பெருமானின் சிறப்புடைய அடியாராக இவர் ஆனார் என்று எண்ணியவராகி இவரது மனம் கொண்ட கொள்கையின் வழி நிற்பேன் என்று எண்ணி,

646. கைவா ளுடன்பலகை நீக்கக் கருதியது
செய்யார் நிராயுதரைக் கொன்றா ரெனுந்தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்கென் றிரும்பலகை
நெய்வா ளுடனடர்த்து நேர்வார்போல் நேர்நின்றார்.

தெளிவுரை : அவனைக் கொல்லும் சமயம் அறிந்து எதிர்க்கக் கையில் ஏந்திய வாளையும் கேடயத்தையும் கைவிட்டுவிட முதலில் நினைத்தார் என்றாலும், ஆயுதம் அற்றவரைக் கொன்றார் என்ற பழி இவர்க்கு வாராதிருக்க வேண்டும் என்று எண்ணி, அந்த வலிய கேடயத்தையும் வாளையும் கொண்டு, எதிர்த்துப் போர் செய்பவரைப் போன்ற தோற்றத்துடன் காட்டி எதிர் நின்றார்.

647. அந்நின்ற தொண்டர் திருவுள்ளம் ஆரறிவார்
முன்னின்ற பாதகனும் தன்கருத்தே முற்றுவித்தான்
இந்நின்ற தன்மை யறிவார் அவர்க்கருள
மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளிநின்றார்.

தெளிவுரை : அங்ஙனம் நின்ற திருத்தொண்டரின் திருவுள்ளக் கிடக்கையை யார் அறிவார்? அவ்வடியாரின் முன் நின்ற அதிசூரனும் தான் எண்ணிய வண்ணமே செய்து முடித்தனன். இதனை அறிந்தவராகி இத்திருத்தொண்டர்க்கு அருள் செய்வதன் பொருட்டாய் மின்னல் போன்ற சடை கொண்ட விடை பாகன் தாமே வெளிப்பட்டு நின்றருளினார்.

648. மற்றினிநாம் போற்றுவதென் வானோர் பிரானருளைப்
பற்றலர்தங் கைவாளால் பாசம் அறுத்தருளி
உற்றவரை யென்றும் உடன்பிரியா அன்பருளிப்
பொற்றொடியாள் பாகனார் பொன்னம் பலமணைந்தார்.

தெளிவுரை : இறைவரின் திருவருள் வகையை நாம் இனிப் போற்றுவது என்னுளது? பகைவரின் கை வாளால் பாசத்தை அறுத்து அருள் செய்து, உற்றவரான நாயனாரை என்றும் தம்முடன் பிரியாதிருக்கும் அன்பு கூடிய நிலையை அடையும் வண்ணம் செய்து, இறைவியை ஒரு பக்கத்தில் கொண்ட எம்பெருமான் தம் பொன்னம்பலத்தை அடைந்தார்.

649. தம்பெருமான் சாத்தும் திருநீற்றுச் சார்புடைய
எம்பெருமான் ஏனாதி நாதர் கழலிறைஞ்சி
உம்பர்பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பும்
நம்பெருமான் செய்தபணி நாம்தெரிந்த வாறுரைப்பாம்.

தெளிவுரை : தம் பெருமான் சாத்துகின்ற திருநீற்றின் சார்பையே சார்பாகக் கொண்ட எம் தலைவரான ஏனாதி நாதரின் திருவடிகளை வணங்கி, கண்ணப்பர் என்ற நம் பெருமானார் தேவ தேவரான திருக்காளத்தி உத்தமர்க்குச் செய்த திருப்பணியை நாம் அறிந்தபடி கூறப் புகுவோம்.

ஏனாதி நாயனார் புராணம் முற்றிற்று.

16. கண்ணப்பநாயனார் புராணம்

பொத்தப்பி என்ற நாட்டில் உடுப்பூர் என்ற ஊரில் வேடரின் தலைவனான நாகன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி தத்தை. அவ்விருவர்க்கும் நீண்ட காலம் மகப்பேறு இல்லாது இருந்தது! அவர்களுக்கு முருகப்பெருமான் அருளால் ஒரு குழந்தை பிறந்தது. அது திண் என இருந்ததால் திண்ணன் எனப்பெயர் இட்டனர். திண்ணனார் வளர்ந்ததும் தக்க பருவத்தில் படைக்கலப் பயிற்சியைப் பெற்றுச் சிறந்தார். அவருக்கு பதினாறு வயது ஆகியது. அப்போது காட்டுப்பன்றிகளும் கரடிகளும் புலிகளும் பிற விலங்குகளும் சோலையையும் தினைப் புனங்களையும் அழிக்கத் தொடங்கின. அதனால் வேடர் நாகனிடம் வந்து செய்தியைக் கூறினார்கள். நாகன் தனக்கு வயதாகி விட்டது. என்றும் தன் மகனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளும்படியும் கூறினான். திண்ணனார் வேடரின் தலைவர் ஆனார். அவர் வேட்டைக்குச் செல்ல இருப்பதைக் கருதி தெய்வங்களுக்கு வழிபாடு நிகழ்த்தப்பட்டது. வேடர்களும் வேட்டை நாய்களும் தொடரத் திண்ணனார் வேட்டைக்குப் புறப்பட்டார். புலி முதலான பல விலங்குகளை அவர் வேட்டையாடினார். பின்னர் ஒரு காட்டுப்பன்றி மேகத்தைப் போல் விரைவாக ஓடியது. அதனை அவர் தொடர்ந்தார். காடானதால் வேடருள் காடனும் நாணனும் தவிர மற்றவர் பிரிந்து பின் தங்கிவிட்டனர். அந்தப் பன்றி நெடுந்தொலைவு ஓடி ஒரு மலைச்சாரலை அடைந்தது. இறுதியில் அதனைத் திண்ணனார் வீழ்த்தினார். காடனும் நாணனும் திண்ணனாரை வணங்கி, இப்பன்றியைச் சுட்டுத் தின்று பசியாறி நம் வேட்டைக்காட்டை அடையலாம் என்றனர். இங்குத் தண்ணீர் எங்குக் கிடைக்கும்? என்று திண்ணனார் வினவினார். நாணன், பக்கத்தில் உள்ள காளத்தி மலையின் அருகில் ஓடும் பொன்முகலி ஆற்றைப் பற்றியுரைத்தான். அங்கே போவோம்! என்றார் திண்ணனார்.

மூவரும் காளத்தி மலைச் சாரலை அடைந்தனர். மலை மீது செல்லும் விருப்பம் திண்ணனாருக்கு உண்டாயிற்று. மேலே சென்றால் குடுமித் தேவர் இருப்பார். நாம் வணங்கலாம்! என்று நாணன் உரைத்தான். திண்ணனார். இந்த மலையைக் கண்டு இதை நெருங்க என் மீது உள்ள பாரம் குறைவதைப் போல் தோன்றுகிறது. இனி நிகழ்வது யாதோ! என்று உரைத்தார். விரைவாகப் பொன்முகலி ஆற்றைக் கடந்தார். மலைச்சாரலை அடைந்தார். அதன் கரையில் உள்ள மரநிழலில் பன்றியை இட்டு அங்குக் காடனைத் தீயை உண்டாக்குமாறு கூறி விட்டு மலை மீது சென்று வருவதாகச் சொல்லி நாணனுடன் திண்ணனார் சென்றார். அங்குக் குடுமித் தேவரைத் திண்ணனார் கண்டார். இறைவரின் அருட்பார்வை அவர் மீது எய்தியது. அளவில்லா அன்பு பெருகக் குடுமித் தேவரை தழுவிக் கொண்டார். நெடுநாள் பிரிந்திருந்த தன் குழந்தையைத் தழுவிக் கொண்ட தாயைப் போல் தழுவிக் கொண்டார். உச்சி மோந்தார். முத்தமிட்டார். நெடுநேரம் பெருமூச்சு விட்டு நின்றார். உடல் புளகம் கொண்டது. கண்கள் நீரைப் பொழிந்தன. வெயிலிடைப்பட்ட மெழுகைப் போல் உருகினார். அவ்விறைவர் மீது பச்சிலை முதலியவற்றை இட்டவர் யார் என்றார் திண்ணனார். நாணன் சிவகோசரியார் பற்றியுரைத்தான். கொடிய காட்டில் நீர் தனியாய் இருக்கின்றீர். கொடிய விலங்குகள் இங்கு இருக்குமே! உம்மைப் பிரிய எனக்கு மனம் இல்லையே! யாது செய்வேன். உமக்குப் பசிக்கும்; ஆகையால் இங்கு இருக்கவும் என்னால் இயலவில்லையே! எனக் கலக்கம் கொண்டார். பின் ஒருவாறு தேறிக் காடன் இருந்த இடத்துக்கு வந்தார். அவன் தான் பன்றி இறைச்சியை அவர் வைத்துவிட்டுச் சென்றபடி பார்த்துக் கொள்ளுமாறு உரைத்தான். அவன் உரைத்ததைத் திண்ணனார் செவியில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் பன்றியிறைச்சியைத் தீயில் வாட்டி அதனில் சுவையான பகுதியை சுவைத்துப் பார்த்து, எடுத்தக் கொண்டார். அவருடைய செயல்கள் காடனுக்கும் நாணனுக்கும் திகைப்பையூட்டின.

பசியிருந்தும் இவர் இவ்விறைச்சியை உண்ணவில்லை. இவருக்குத் தெய்வப் பித்தம் உண்டாகியுள்ளது. இதைத் தீர்க்கத் தேவராட்டியை அழைத்து வர வேண்டும்! என்று எண்ணிச் சென்று விட்டனர். அவர்கள் சென்றதைத் திண்ணனார் அறிந்து கொள்ளவில்லை. அவர் தேக்கிலைக் கல்லையில் ஊனை எடுத்துக் கொண்டு, இறைவரை நீராட்ட ஆற்று நீரை வாயில் கொண்டு, பூக்களைத் தம் தலையில் பெய்து ஒரு கையில் அம்பையும் வில்லையும் எடுத்துக் கொண்டு மேலே சென்றார். வாயில் கொணர்ந்த நீரைத் தம் அன்பை உமிழ்வார் போல் உமிழ்ந்து, பூவைச் சூட்டி நெடுநேரம் பசியுடன் உள்ளீர்! இதனை உண்ணும்! என்று சொல்லி உண்ணச் செய்தார். கதிரவன் மறைய இரவு வந்தது. பின்னர் அவரது பக்கத்தில் நின்று காவலை மேற்கொண்டிருந்தார். விடிந்ததும் திண்ணனார் பிரிய இயலாத உணர்வுடனே பிரிந்து சென்று முன்நாள் போல் இறைச்சி முதலியவற்றை இறைவர்க்குக் கொணரச் சென்றார். அப்போது வழக்கம் போல் குடுமித்தேவர்க்குப் பூசை செய்யும் சிவகோசரியார் வந்தார். அங்கு இறைச்சி எலும்பு முதலியவை இருப்பனவற்றை அவர் கண்டார். இங்ஙனம் செய்தவர் யார்? இறைவரே, தாங்கள் எப்படிப் பொறுத்துக் கொண்டீர்! என்று வருந்தினார். பின்பு அங்குத் தூய்மை செய்து வழக்கம் போல் பூசையைச் செய்தார்; தம் இருப்பிடத்துக்குத் திரும்பினார். இறைச்சியை வேட்டையாடிக் கொணர்ந்த திண்ணனார், அதை வழக்கம் போல் இறைவர்க்கு அளித்தார். அப்போது நாணனும் காடனும் திண்ணனார் பற்றிக் கூறியதைக் கேட்ட நாகன் தேவராட்டியுடன் வந்து அவரைத் தெய்வப் பித்தத்தினின்று தெளிவிக்க முனைந்தனர். அவர்கள் முயற்சியால் திண்ணனாரை மாற்ற இயலாது போயிற்று. ஆதலால் திரும்பினர். இங்ஙனம்  திண்ணனார் நாள்தோறும் செய்து வந்தார். சிவகோசரியாரும் நாள்தோறும் திண்ணனார் செய்ததைப் பார்த்து வருந்தினார். அதை மாற்றிட வேண்டும் என்று இறைவனிடம் முறையிட்டார். இப்படி ஐந்து நாட்கள் நிகழ்ந்தன. ஐந்தாம் நாள் இரவில் சிவகோசரியாரின் துன்பத்தை நீக்க அவருடைய கனவில் தோன்றி அன்பனே! கோயிலில் அசுத்தம் செய்பவன் சாதாரண வேடன் என்று எண்ணாதே! அவனது வடிவம் நம்மிடம் வைத்த அன்பு வடிவம். அவனது அறிவு நம்மை அறியும் அறிவு. அவனது செயல் எல்லாம் எமக்கு இனியவை. அவனது அன்பின் திறத்தை, நாளை நீ வந்து மறைவாய் இருந்தால் உமக்குப் புலப்படுத்துவேன்! என்று அருள் செய்தார்.

இறைவரின் அருளை வியந்தார் சிவகோசரியார். மறுநாள் வழக்கம் போல் வந்து பூசை செய்து அவர் பின்னால் மறைந்திருந்தார். அன்று விடியலில் வழக்கம் போல் இறைச்சி முதலியவற்றைக் கொணரத் திண்ணனார் சென்றார்; திரும்பினார். அவர் தொலைவில் வரும்போதே தீச்சகுனங்கள் தோன்றின. திண்ணனாரின் அன்பின் திறத்தைப் புலப்படுத்த இறைவர் தம் வலக்கண்ணில் குருதி வடியுமாறு விளங்கினார். தொலைவிலேயே அதைக் கண்ட திண்ணனார் ஓடோடி வந்தார். இறைவர் கண்ணுக்குத் தம் கண்ணைத் தோண்டிப் பொருத்தினார். அவ்வளவில் குருதியானது நின்றது! ஆனால் சற்று நேரத்தில் இடக்கண்ணிலும் குருதி வழிய இறைவர் காட்சி தந்தார். திண்ணனார் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை! அதனால் தம் மற்றொரு கண்ணையும் தோண்ட முற்பட்டார். அவ்வளவில் இறைவர் பொறுக்காதவராய்த் தம் ஒரு கையினால் திண்ணனாரின் கைகளைப் பற்றி நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறியருளினார், இறைவர். திண்ணனார் தம் கண்ணைப் பிடுங்க அப்பியதால் கண்ணப்ப என்று அழைத்தார். ஆதலால் திண்ணனார் கண்ணப்பர் ஆனார். சிவகோசரியாரும் தேவர்களும் அந்த அரிய நிகழ்ச்சியைப் பார்த்து வியந்தனர். வானத்தினின்று பூமழை பொழிந்தது! இவ்வாறு சிவன் அருள் பெற்றார் கண்ணப்பர்.

650. மேவலர் புரங்கள் செற்ற   விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக்கா ளத்திக் கண்ணப்பர் திருநா டென்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல்வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை  சூழ்ந்தபொத் தப்பி நாடு.

தெளிவுரை : அடையாதவரின் திரிபுரங்களை அழித்த காளையூர்தியையுடைய வேத வாய்மைக் காவலர் தம் திருக் காளத்திப்பகுதியில் நற்பேறு எய்திய கண்ணப்பரின் திரு நாடாவது, புலவர்கள் புகழ்ந்து போற்றும் நல்ல வளங்கள் பெருகி நிலை பெற்றதும் மலர்கள் மலர்ந்த நீர் நிலைகளும் பூஞ்சோலைகளும் சூழ்ந்ததுமான பொத்தப்பி நாடு என்று உரைப்பர்.

651. இத்திரு நாடு தன்னில் இவர்திருப் பதியா தென்னில்
நித்தில அருவிச் சாரல் நீள்வரை சூழ்ந்த பாங்கர்
மத்தவெங் களிற்றுக் கோட்டு வன்றொடர் வேலி கோலி
ஒத்தபே ரரணஞ் சூழ்ந்த முதுபதி உடுப்பூர் ஆகும்.

தெளிவுரை : இந்த நாட்டில், இவரது திருப்பதி யாது என்றால், முத்துக்களைக் கொழித்து வருகின்ற அருவிகள் ஓடுவதற்கு இடமான சாரல்களையுடைய நீண்ட மலைகள் சூழ்ந்த பக்கத்தில், மதம் பொருந்திய யானைகளின் கொம்புகளால் வன்மையுடைய வேலியை இட்ட அதனால் ஒரே தன்மைத் தான பெரிய மதில் அரணால் சூழப்பட்டு விளங்கும் பழம் பதியான உடுப்பூர் என்பதாம்.

652. குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ்செவி ஞமலி ஆர்த்த
வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கு மெங்கும்.

தெளிவுரை : அப்பதியில் வாழ்பவர் மலை வாழ்பவரான குன்றவர்கள் ஆவார்கள். அந்தப் பதியின் இடம் எங்கும் வளைவான காதுகளைக் கொண்ட நாய்களைக் கட்டிய கூட்டமான விளா மரத்தின் கிளைகளில் வார்களையுடைய வலைகள் பக்கங்களில் தொங்க, காட்டுப் பன்றியும், புலியும், கரடியும், காட்டுப் பசுவும், மான் கூட்டங்களும் என்ற இவற்றின் பார்வை விலங்குகளும் இருந்தன. அன்றியும், இல்லங்களில் முன் பாறை அமைந்த முற்றங்களில் மலை நெல் அரிசியும் உலர வைக்கப்பட்டிருக்கும்.

653. வன்புலிக் குருளை யோடும் வயக்கரிக் கன்றி னோடும்
புன்தலைச் சிறும கார்கள் புரிந்துடன் ஆட லன்றி
அன்புறு காதல் கூர அணையுமான் பிணைக ளோடும்
இன்புற மருவி யாடும் எயிற்றியர் மகளி ரெங்கும்.

தெளிவுரை : அந்தப் பதியின் எங்கும் வன்மையான புலிக் குட்டிகளுடனும் வெற்றி பொருந்திய யானைக் கன்றுகளுடனும், புல்லிய தலையையுடைய வேடச் சிறுவர், விரும்பி விளையாடுதல் நிகழும். அதுவன்றியும் அன்புடன் ஆசை மிக அணைகின்ற பெண் மானுடன் இன்பத்துடன் கூடி விளையாடும் வேட்டுவச் சிறுமியரும் உள்ளனர்.

654. வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டந் தோறும்
கொல்எறி குத்தென் றார்த்துக் குழுமிய வோசை யன்றிச்
சில்லரித் துடியுங் கொம்பும் சிறுகண்ஆ குளியுங் கூடிக்
கல்லெனு மொலியின் மேலும் கறங்கிசை யருவி யெங்கும்.

தெளிவுரை : வெல்லும் படைக்கலமும் அஞ்சாமையும் கடிய சொல்லும் உடைய வேடர் கூட்டங்களில் எங்கும் கொல் எறி, குத்து என்று ஆரவாரித்துக் கூடுதலால் எழும் ஓசைகளே அல்லாது, சில பரல்களையுடைய உடுக்கையும், ஊது கொம்பும், சிறிய முகம் கொண்ட சிறு பறையும் கூடிப் பெருகுகின்ற ஒலியினும் மிகுந்து ஒலித்து ஓடும் அருவிகள் அங்கு எங்கும் உண்டு.

655. ஆறலைத் துண்ணும் வேடர் அயற்புலங் கவர்ந்து கொண்ட
வேறுபல் உருவின் மிக்கு விரவும்ஆன் நிரைக ளன்றி
ஏறுடை வானந் தன்னில் இடிக்குரல் எழிலி யோடு
மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கைமா நிரைக ளெங்கும்.

தெளிவுரை : அவ்வூரில் எங்கும் வழி பறித்து உண்ணுதலைத் தம் தொழிலாகக் கொண்ட வேடர்கள் அயல் புலங்களில் கவர்ந்து வந்த வேறு வேறான பல வடிவினால் மிக்குப் பொருந்திய பசுக் கூட்டங்கள் அல்லாமல், இடியின் குரலுடன் சூழும் மேகங்களுடன் எதிராகிய முழக்கத்தையுடைய மதம் பொருந்திய யானைக் கூட்டங்களும் உண்டு.

656. மைச்செறிந் தனைய மேனி வன்தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடைவன் தோலார்
பொச்சையி னறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற் பகழி வேடர்க் கதிபதி நாக னென்பான்.

தெளிவுரை : மை போன்ற கருமையான மேனியும் வன்மையான தொழிலும் உடைய மறவர் தம்மிடம் அச்சம் அருள் என்ற இரண்டையும் எக்காலத்தும் அடையாதவர் ஆவர். வன்மையான தோலால் ஆன உடையை உடையவர், மலைத் தேனும் ஊன் கலந்த இனிய சோறும் உண்பவராய் நஞ்சு தோயப் பெற்ற தீயம்புகளை உடையவர். இத்தகைய வேடர்களுக்குத் தலைவன் நாகன் எனப்படுவான்.

657. பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைநின் றுள்ளான்
விற்றொழில் விறலின் மிக்கான்  வெஞ்சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை யென்பாள்.

தெளிவுரை : பெற்றிமையால் முன்பு செய்த தவம் உடையவர் ஆயினும், இந்தப் பிறவியில் தான் பிறந்த குலத்தின் சார்பால் குற்றம் செய்வதையே குணமாய்க் கொண்டு வாழ்பவன். உயிர்களுக்குக் கொடுமையே செய்வதில் சிறந்தவன். வில்லாற்றலில் வன்மை கொண்டவன். மிகுந்த சினம் கொண்ட சிங்கம் போன்றவன். அவனுடைய குறிஞ்சி நில வாழ்வில் மனைவியாய் அமைந்தவள் தத்தை எனப்படுபவள் ஆவாள்.

658. அரும்பெறல் மறவர் தாயத் தான்றதொல் குடியில் வந்தாள்
இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவு கோத்துப்
பெரும்புறம் அலையப் பூண்டாள்  பீலியுங் குழையுந் தட்டச்
சுரும்புறு படலை முச்சிச் சூரரிப் பிணவு போல்வாள்.

தெளிவுரை : அவள், பெறுவதற்கு அரிய சிறப்புப் பொருந்திய மறவர் குடிகளுள் ஒன்றான உயர்ந்த குடியில் தோன்றியவள். பெரிய புலிப் பல்லான தாலியை இடையிடையே பல கறைகளைக் கோத்துப் பிடரியின் கீழும் நீண்டு தொங்க அணிந்தவள். மயிற்பீலியும் இலைத் தளிர்களும் மோத, வண்டுகள் மொய்க்கும் மலர் மாலையைச் சூடிய உச்சிக் கொண்டையையுடைய அச்சம் பொருந்திய பெண் சிங்கத்தைப் போன்றவள்.

659. பொருவருஞ் சிறப்பின் மிக்கார் இவர்க்கினிப் புதல்வர்ப் பேறே
அரியதென் றெவருங் கூற அதற்படு காத லாலே
முருகலர் அலங்கற் செவ்வேல் முருகவேள் முன்றிற் சென்று
பரவுதல் செய்து நாளும் பராய்க்கடன் நெறியில் நிற்பார்.

தெளிவுரை : ஒப்பில்லாத சிறப்பால் மிக்க இவர்க்கு இனிப் புதல்வர்ப் பேறு என்பதே கிடைப்பதற்கு அரிது என்று அனைவரும் சொல்ல, அப்புதல்வர் பேற்றிலே கொண்ட ஆசை மிகுதியால் மணம் மிக மலர்ந்த மாலை சூடிய செவ்வேல் ஏந்திய முருக வேளின் கோயில் முற்றத்தில் போய்ப் பரவி நாடோறும் வழிபடும் கடமை பூண்ட நெறியில் நிற்பவராய் ஆகி,

660. வாரணச் சேவ லோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவே லோற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங் காடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை.

தெளிவுரை : சேவற் கோழிகளையும், வரிகளை உடைய மயில்களையும், காணிக்கையாக விடுத்தும், தோரணமாய் மணிகளைத் தொங்க விட்டும், வண்டுகள் மொய்க்கின்ற அழகான கடப்ப மலர் மாலைகளைத் தொங்க விட்டும், போரில் வல்ல அழகான நீளமான வேல் ஏந்திய முருகக் கடவுளுக்குப் புகழ் அமைந்த குரவைக் கூத்தாய்ப் பெரிய அணங்காடல் செய்வித்தும் பெருவிழாச் செய்தனர். அதன் பின்பு,

661. பயில்வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்
கெயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்த ரான
மயிலுடைக் கொற்ற வூர்தி வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளி னாலே.

தெளிவுரை : பொருந்திய வடுக்கள் விளங்கும் உடலை உடைய வேடர்களின் தலைவனான நாகனுக்கு, மதில்களையுடைய முப்புரங்களையும் எரித்த சிவபெருமானின் மகனான வெற்றி பொருந்திய மயில் ஊர்தியையும் கிரவுஞ்ச மலையைப் பிளந்த திண்மையான வேற்படையைக் கொண்ட பெரிய கையையும் கொண்ட வெற்றியுடைய பெருமையில் சிறந்த முருகப் பெருமானின் அருளால்,

662. கானவர் குலம்வி ளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறியாட் டோடும்
ஆனஅத் திங்கள் செல்ல அளவில்செய் தவத்தி னாலே
பான்மதி உவரி ஈன்றால் எனமகப் பயந்த போது.

தெளிவுரை : வேரடது குலம் விளங்குமாறு தத்தை என்பவளின் வயிற்றில் கருப்பம் உண்டாயிற்று. அதனால் குற்றமற்ற பலிகளைத் தந்து கடமையாய் அமைந்த வெறியாட்டுடன் செய்ய, ஒவ்வொன்றாய் மாதங்கள் சென்றன. முன்னம் அளவில்லாமல் செய்த தவத்தால் நல்ல தன்மை கொண்ட நிறைமதியை உவர்க்கடல் பெற்றதைப் போல் தத்தை குழந்தையைப் பெற்றெடுத்தாள். அப்போது,

663. கரிப்பரு மருப்பின் முத்தும் கழைவிளை செழுநீர் முத்தும்
பொருப்பினின் மணியும் வேடர் பொழிதரு மழையே யன்றி
வரிச்சுரும் பலைய வானின் மலர்மழை பொழிந்த தெங்கும்
அரிக்குறுந் துடியே யன்றி அமரர்துந் துபியும் ஆர்த்த.

தெளிவுரை : யானையின் பெரிய கொம்புகளில் தோன்றிய முத்துக்களையும், மூங்கிலில் விளையும் செழுமையான முத்துக்களையும், மலையிலே விளையும் மற்ற மணிகளையும் வேடர் மகிழ்ச்சியால் பெய்யும் மணி மழையே அல்லாது, வரியையுடைய வண்டுகள் எழுந்து பறக்க, வானத்தில் மலர் மழையும் எங்கும் பெய்தது. சில்லரியையுடைய சிறிய உடுக்கைகளே அல்லாது வானவரின் துந்துபிகளும் முழங்கின.

664. அருவரைக் குறவர் தங்கள் அகன்குடிச் சீறூ ராயம்
பெருவிழா எடுத்து மிக்க பெருங்களி கூருங் காலைக்
கருவரை காள மேகம் ஏந்திய தென்னத் தாதை
பொருவரைத் தோள்க ளாரப் புதல்வனை யெடுத்துக் கொண்டான்.

தெளிவுரை : அரிய மலைக் குறவர்களின் பெரிய குடிகள் வாழும் சிறியவூரில் உள்ள மக்கள் கூட்டம் விழாவைக் கொண்டாடி மிக்க மகிழ்ச்சி அடையும் போது, கரிய மலையானது கரிய மேகத்தை மேல் கொண்டு தாங்கியதைப் போன்று, தந்தையான நாகன் போர் செய்கின்ற மலை போன்ற தோள்கள் நிறையுமாறு மகனை எடுத்துக் கொண்டான்.

665. கருங்கதிர் விரிக்கு மேனிக்  காமரு குழவி தானும்
இரும்புலிப் பறழின் ஓங்கி  இறவுள ரளவே யன்றி
அரும்பெறல் உலகம் எல்லாம் அளப்பரும் பெருமை காட்டித்
தருங்குறி பலவுஞ் சாற்றுந் தன்மையில் பொலிந்து தோன்ற.

தெளிவுரை : கரிய கதிர் ஒளியை விரித்து வீசும் அழகான மேனியுடைய அந்தக் குழந்தையும் பெரிய புலிக்குட்டியினைப் போல் மிக்கு ஓங்கி, வேடரால் மட்டுமன்றி உலகம் எல்லாம் அளப்பதற்கரிய பெருமையுடன் கூடிய குறிகள் பலவும் கொண்டு எதிர்காலப் பெருமையை எடுத்துச் சொல்லக் கூடிய தன்மையுடையதாய் விளங்கியது.

666. அண்ணலைக் கையில் ஏந்தற் கருமையால் உரிமைப் பேரும்
திண்ணன்என் றியம்பும் என்னத் திண்சிலை வேட ரார்த்தார்
புண்ணியப் பொருளா யுள்ள பொருவில்சீர் உருவி னானைக்
கண்ணினுக் கணியாத் தங்கள் கலன்பல வணிந்தா ரன்றே.

தெளிவுரை : பெருமை கொண்ட அந்தக் குழந்தை கையால் எடுப்பதற்கரியதாய் இருந்ததால் உரிய பெயரும் திண்ணன் என்று வைத்து அழையுங்கள் என்று நாகன் சொன்னான். வலிய சிலை வேடர் ஆரவாரம் செய்தனர். புண்ணியத்தின் பொருளாய் இருக்கும் ஒப்பில்லாத சிறப்புகளின் வடிவு கொண்ட குழந்தைக்கு, கண்ணுக்கு அழகாகத் தங்களுக்குரிய பல அணிகளையும் அன்றே அணிவித்தனர்.

667. வரையுறை கடவுட் காப்பும் மறக்குடி மரபில் தங்கள்
புரையில்தொல் முறைமைக் கேற்ப பொருந்துவ போற்றிச் செய்து
விரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பிழைத் திடையே கோத்த
அரைமணிக் கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில்.

தெளிவுரை : மலையில் வாழும் கடவுள் காப்பாகத் தம் மறவர் குடி மரபிலே வந்த குற்றம் இல்லாத பழைய வழக்கத்திற்கு ஏற்றபடி பொருந்துபவை எல்லாவற்றையும் விரும்பிச் செய்து, மணம் கமழும் இளந்தளிர்களைச் சூட்டி, மலை வேப்பங்கொட்டைகளை ஒழுங்குபடுத்தி இடையிடையில் அமைத்துக் கோத்த அரையில் அணியும் பலகறை மணிக் கோவையைக் கட்டி, எழில் அமைய வளர்த்தனர். அங்ஙனம் வளர்க்கின்ற காலத்தில்,

668. வருமுறைப் பருவந் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப்
பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க் கெல்லாம்
திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே
அருமையிற் புதல்வர்ப் பெற்ற ஆர்வமுந் தோன்ற உய்த்தார்.

தெளிவுரை : அதன் மேல், முறையாய் வரும் பருவங்கள் தோறும் வளம் கொண்ட விழாவுடன் தெய்வங்களுக்குப் படையலைச் செய்து, அந்தந்தக் காலங்களில் மங்கல வாத்தியங்கள் மேலும் மேலும் ஒலிக்க, வந்து சேர்ந்த வேடர்களுக்கெல்லாம் பெருங்களியாட்டத்தால் மகிழ்ச்சி உண்டாக்கி, அருமையாக மகனைப் பெற்றெடுத்த ஆசையும், வெளிப்படச் சிறப்பு நடத்தினர்.

669. ஆண்டெதிர் அணைந்து செல்ல இடும்அடித் தளர்வு நீங்கிப்
பூண்திகழ் சிறுபுன் குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண் முளவுமுள் அரிந்து கோத்த
நாண்தரும் எயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பில் தூங்க.

தெளிவுரை : முதல் ஆண்டு நிறைந்து அடுத்த ஆண்டு தொடங்கிய பின்பு, இடும் அடியினது தளர்ச்சி நீங்கிச் சிறு நடைப் பருவம் வர, சிறிய புல்லிய மயிர்த்தலையில் பூணாக விளங்கும் புலிநகச் சுட்டியை அணிவித்து, மூண்டு எழுகின்ற சினம் கொண்ட முள்ளம் பன்றியின் முள்ளை அரிந்து இடையிடையில் கயிற்றில் கோத்த புலிப்பல் மாலையை நன்மை மிகுந்த மார்பில் அணிந்து,

670. பாசொளி மணியோ டார்த்த பன்மணிச் சதங்கை ஏங்கக்
காசொடு தொடுத்த காப்புக் கலன்புனை அரைஞாண் சேர்த்தித்
தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன
மாசறு கோலங் காட்டி மறுகிடை யாடும் நாளில்.

தெளிவுரை : பசுமையான ஒளியுடைய மணிகளுடன் மற்றப் பல மணிகளையும் கோத்த சதங்கை ஒலிக்க, காசுடன் கட்டிய அணிகள் புனைந்த அரை நாணையும் அணிந்து, ஒளி பொருந்திய யானைக் கொம்பால் ஆன தண்டையும், மணிகள் பொருந்திய குதம்பையும் பொருந்த இவ்வாறு குற்றம் இல்லாத கோலத்தைக் காண்பவர்க்குக் காட்டிக் கொண்டு வீதியில் விளையாடும் நாளில்,

671. தண்மலர் அலங்கல் தாதை தாய்மனங் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில் புனிதமாந் திருவாய் நீரில்
உண்ணனைந் தமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ்சொல்
வண்ணமென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார்.

தெளிவுரை : குளிர்ந்த பூமாலை அணிந்த தந்தையும் தாயும் உள்ளம் மகிழ்ந்திடக் குறுநடை நடந்து வந்து, புண்ணியமான கங்கை நீரினும் தூய்மையான வாய் நீரிலே உள்ளே நனைந்து அமிழ்தமாக ஊறி மேலே வழிகின்ற இனிய மழலைச் சொற்களை அழகான மென்மையான சிவந்த வாயைக் குதட்டிக் கூறி வளர்ந்து வரலானார்.

672. பொருபுலிப் பார்வைப் பேழ்வாய் முழையெனப் பொற்கை நீட்டப்
பரிவுடைத் தந்தை கண்டு பைந்தழை கைக்கொண் டோச்ச
இருசுடர்க் குறுகண் தீர்க்கும் எழில்வளர் கண்ணீர் மல்கி
வருதுளி முத்தம் அத்தாய் வாய்முத்தங் கொள்ள மாற்றி.

தெளிவுரை : போரிடுகின்ற புலியான பார்வை விலங்கின் திறந்த அகலமான வாயைச் சிறிய குகை என்று எண்ணித் தம் அழகிய கையை நீட்ட, அன்புடைய தந்தை அதைக் கண்டு அன்பு கொண்டு பசுந்தழை கொண்டு ஓங்கவே, சூரிய, சந்திரர் என்ற இரண்டு சுடர்களுக்கு உள்ள துன்பத்தைத் தீர்க்கும் எழில் வளரும் கண்களின் நீர் நிரம்பி வெளிப்படுகின்ற துளியான முத்தை அந்தத் தாயான தத்தை வாய் முத்தத்தால் மாற்றியும்,

673. துடிக்குற டுருட்டி யோடித் தொடக்குநாய்ப் பாசஞ் சுற்றிப்
பிடித்தறுத் தெயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல்
அடிச்சிறு தளிராற் சிந்தி அருகுறு சிறுவ ரோடும்
குடிச்சிறு குரம்பை யெங்கும் குறுநடைக் குறும்பு செய்து.

தெளிவுரை : உடுக்கை போன்ற குறட்டை உருட்டி ஓடியும், நாயைக் கட்டிய கயிற்றைச் சுற்றிப் பிடித்து அறுத்தும், வேட்டைச் சிறுவர் விளையாடக் கட்டிய சிறிய இல்லங்களைத் தம் தளிர் போன்ற சிறிய கால்களால் அழித்தும், பக்கத்தில் கூடிய வேடச் சிறுவருடன் கூடி அந்தச் சிறு குடியில் பொருந்திய குடில்களில் எங்கும் குறுநடை குறும்பு விளையாடல்களைச் செய்தும்,

674. அனையன பலவும் செய்தே ஐந்தின்மே லான ஆண்டில்
வனைதரு வடிவார் கண்ணி மறச்சிறு மைந்த ரோடும்
சினைமலர்க் காவு ளாடிச் செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த
புனைமருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற் போகி.

தெளிவுரை : இவ்வாறு பலவகையான விளையாடல்களையும் செய்து ஐந்தாண்டு நிரம்பியது. அதன்பின் ஆறாம் ஆண்டில் வனையப் படுவதாய் அமைந்த வாரையும் கண்ணியையும் கொண்டு வீரம் மிக்க வேட்டுவச் சிறாருடன் பூக்கள் நிறைந்த கிளைகளையுடைய மரங்கள் வளர்ந்த பூஞ்சோலைகளிலே விளையாடியும், குடிகள் மிக்க குறிச்சியினைச் சுற்றி யானைக் கொம்புகளால் அமைக்கப்பட்ட உழலையுடைய வேலிப்புறத்தை அடுத்த சிறிய காட்டில் போய் உழலை கடந்து செல்லும் மக்களுக்கு வழியைத் தந்து சுழன்று பின்தன் முன்னை நிலையில் நிற்பதாக அமைந்த அமைப்பு

675. கடுமுயற் பறழி னோடும் கானஏ னத்தின் குட்டி
கொடுவரிக் குருளை செந்நாய் கொடுஞ்செவிச் சாப மான
முடுகிய விசையி லோடித் தொடர்ந்துடன் பற்றி முற்றத்
திடுமரத் தாளிற் கட்டி வளர்ப்பன எண்ணி லாத.

தெளிவுரை : மிகுந்த வேகமுடைய முயல் குட்டியுடன், காட்டுப் பன்றிக் குட்டியும் புலிக் குட்டியும், வளைந்த காதினையுடைய செந்நாய்க் குட்டியும் என்ற இவற்றை விரைவாகச் செல்லும் வேகத்தால் பின் தொடர்ந்து போய் ஓடிப் பிடித்துத் தம் வாயில் முற்றத்தில் உள்ள மரத்திலே கட்டி, இவ்வாறு திண்ணனார் வளர்த்த விலங்குகள் பலவாகும்.

676. அலர்பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையு மாட்டிக்
குலமுது குறத்தி யூட்டிக் கொண்டுகண் துயிற்றிக் கங்குல்
புலரஊன் உணவு நல்கிப் புரிவிளை யாட்டின் விட்டுச்
சிலமுறை யாண்டு செல்லச் சிலைபயில் பருவஞ் சேர்ந்தார்.

தெளிவுரை : வேடர் குலத்திலே தோன்றிய முதியவளான குறத்தி, கதிரவன் ஒளி விளங்கும் பகற்காலம் கழிந்த மாலைப் போதில் கடுகின் புகையைச் சுற்றி உணவு ஊட்டி, இம்மகவை எடுத்து ஓரிடத்தில் வைத்து உறங்கச் செய்து, இரவானது நீங்கிய பின்னர் ஊன் உணவு தந்து பின் அது செய்யும் விளையாட்டில் பழகுமாறு செய்து, இவ்வாறு சில ஆண்டுகள் செல்ல இவர் வில் கலை கற்கின்ற பருவத்தை அடைந்தார்.

677. தந்தையும் மைந்த னாரை நோக்கித்தன் தடித்த தோளால்
சிந்தையுள் மகிழப் புல்லிச் சிலைத்தொழில் பயிற்ற வேண்டி
முந்தையத் துறையின் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி
வந்தநாட் குறித்த தெல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான்.

தெளிவுரை : மகன் விற் கலை பயிலும் பருவத்தை அடைந்ததைத் தந்தை பார்த்து, உள்ளம் மகிழ்ந்து தன் பெருத்த தோள்களால் அவரைத் தழுவிக் கொண்டு, அவருக்கு வில் தொழிலைப் பயில்விக்க எண்ணி, முதலில் அத்துறையில் வல்லவரை அழைத்துக் கூட்டி, அவர்களுடனே ஆராய்ந்து நல்ல நாளைக் குறித்து, அதனை மறவரான வேடர்களுக்குக் கூறினான்.

678. வேடர்தங் கோமான் நாகன் வென்றிவேள் அருளாற் பெற்ற
சேடரின் மிக்க செய்கைத்  திண்ணன்விற் பிடிக்கின் றான்என்
றாடியல் துடியுஞ் சாற்றி யறைந்தபே ரோசை கேட்டு
மாடுயர் மலைக ளாளும் மறக்குலத் தலைவ ரெல்லாம்.

தெளிவுரை : வேடரின் மன்னனான நாகன், வெற்றியுடைய முருகப் பெருமானின் திருவருளால் பெற்ற அறிவுடையாரினும் மிக்குச் சிறந்த செயலையுடைய திண்ணனார் வில்கலை பயிலத் தொடங்குகின்றார் என்று வெற்றியுடைய உடுக்கையை ஒலிக்கச் செய்து, சொன்னார்கள். அந்த ஓசையைக் கேட்ட பக்கத்து மலைகளை ஆள்கின்ற மறக்குலத் தலைவர்கள் அனைவரும்,

679. மலைபடு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்
கொலைபுரி களிற்றின் கோடும்  பீலியின் குவையும் தேனும்
தொலைவில்பல் நறவும் ஊனும் பலங்களுங் கிழங்குந் துன்றச்
சிலையுடை வேடர் கொண்டு திசைதொறும் நெருங்க வந்தார்.

தெளிவுரை : மலையில் விளையும் பொருள்களான மணியும் பொன்னும் முத்தும் பிறவற்றையும் புலித்தோலும் கொலை செய்யும் யானைக் கொம்பும், மயிற் பீலியின் சுமையும், தேனும், அளவில்லாத பலவகை ஊனும் பழங்களும் கிழங்குகளும் என்ற இவற்றைச் செறிந்த விற் பயிற்சி மிக்க வேடர்களும் , எடுத்துக் கொண்டு பல திக்குகளினின்றும் நெருங்கி வந்தனர்.

680. மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தா ரெங்கும்
பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க்கடன் பலவும் நேர்ந்து
வில்விழா எடுக்க வென்று விளம்பினன் வேடர் கோமான்.

தெளிவுரை : மேலே சொன்ன வண்ணம் வளங்கள் எல்லாம் நிறைந்திடலால், தனக்கு மாறு இல்லாத அந்தச் சிறியவூரின் எல்லைக்குள் அடங்கிடாதபடி எங்கும் ஒன்று கூடியவராகிக் கொண்டு வந்தனர். எங்கும் பல பெரிய சுற்றத்தவர் கூடிப் பாராட்டத் தெய்வத்துக்கு வழிபாடு பலவும் செய்து வில் விழா எடுப்பீராக என்று வேடரின் தலைவன் நாகன் கூறினான்.

681. பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்தத்
தேனலர் கொன்றை யார்தம் திருச்சிலைச் செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சம் ஆக்கிட அவர்க்கே பின்னும்
கானஊன் அமுத மாக்கும் சிலையினைக் காப்புச் சேர்த்தார்.

தெளிவுரை : வினைஞர் உரிய தன்மையில் படைக்கலத்தை அமைத்துத் தர, தேனுடன் மலர்கின்ற கொன்றை மலரை அணிந்த சிவபெருமானின் வில்லான மேருமலையானது அவர்க்குப் பாற்கடல் அமுதை நஞ்சாக்க, இவரது கையில் வந்தபோது அதற்குப் பரிகாரமாக அவருக்கே பின்பு காட்டு ஊனைத் திருவமுதாக்குகின்ற வில்லைக் காப்புச் சேர்த்தனர்.

682. சிலையினைக் காப்புக் கட்டும் திண்புலி நரம்பிற் செய்த
நலமிகு காப்பு நன்னாள் நாகனார் பயந்த நாகர்
குலம்விளங் கரிய குன்றின் கோலமுன் கையிற் சேர்த்தி
மலையுறை மாக்க ளெல்லாம் வாழ்த்தெடுத் தியம்பி னார்கள்.

தெளிவுரை : வில்லைக் காப்புக் கட்டிய அந்த வன்மையுடைய புலி நரம்பாலே செய்யப்பட்ட காப்பினை, நன்மைமிக்க நல்ல வேளையில், வேடர்குலம் விளங்கத் தோன்றிய அரிய மலை போன்ற திண்ணனாரின் அழகான முன் கையில் கட்டி, மலை வாழ்பவரான அந்த வேடர் எல்லாரும் தம் மரபுக்குரிய வாழ்த்தினை எடுத்துக் கூறி வாழ்த்தினார்.

683. ஐவன அடிசில் வெவ்வே றமைத்தன புற்பாற் சொன்றி
மொய்வரைத் தினைமென் சோறு மூங்கில்வன் பதங்கள் மற்றும்
கைவினை எயின ராக்கிக் கலந்தவூன் கிழங்கு துன்றச்
செய்வரை யுயர்ப்ப வெங்கும் கலந்தனர் சினவில் வேடர்.

தெளிவுரை : மலையரிசிச் சோறும் வேறு வேறு வகையான புல் அரிசிச் சோறும், அடர்ந்த மலையில் விளைந்த தினையின் மென்மையான சோறும், மூங்கிலின் வலிய அரிசிச் சோறும் சமைக்கின்ற தொழில் வல்லவரான வேடர்கள் சமைத்து அவற்றொடு கலந்து தசையும் கிழங்குகளும் சேரச் செய் குன்றைப் போல் குவித்தனர். எவ்விடத்தும் சினம் மிக்க வில் வேடர்கள் உண்ணக் கூடினர்.

684. செந்தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து
வெந்தஊன் அயில்வார் வேரி விளங்கனிக் கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி நசையொடும் மிசைவார் வெவ்வே
றந்தமி லுணவின் மேலோர் ஆயினர் அளவி லார்கள்.

தெளிவுரை : வேடர்கள் அளவற்றவர். அவர்கள் செந்தினையினது மாவும் தேனும் கலந்து உண்பார்; தேனில் தோய்ந்து வெந்த இறைச்சியை உண்பார்; விளாம்பழத்தைத் தேன் கலந்து பிசைந்து கவளமாகச் செய்து உண்பார்; இறந்த ஈயல் உணவை விருப்பத்துடன் உண்பார். இங்ஙனம் வேறு வேறான அளவில்லாத பல உணவுகளிலும் மேலானவர்களாக ஆயினர், வேடர்.

685. அயல்வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி யிருப்பின் உள்ளார்
இயல்வகை உணவி லார்ந்த எயிற்றியர் எயின ரெல்லாம்
உயர்கதி ருச்சி நீங்க ஒழிவில்பல் நறவு மாந்தி
மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார்.

தெளிவுரை : பக்கத்தில் உள்ள மலையினின்று வந்தவரும், இந்த அரிய உடுப்பூரில் சிறுகுடி இருப்பில் உள்ளவரும், இத்தகைய இயல்பு கொண்ட அவ்வுணவை நிறைய உண்டு தேக்கிய வேடிச்சியரும் வேடரும் ஆன எல்லாரும் வானத்தில் உயர்ந்த கதிரவனின் செலவில் உச்சிப்போது கழிய, அளவில்லாத பல வகைப்பட்ட தேனையும் குடித்து, அதனால் மயக்கம் பொருந்திய களியாட்டத்தில் பெருகி, வரிவில் விழாக் கொண்டாடலாயினர்.

686. பாசிலைப் படலை சுற்றிப் பன்மலர்த் தொடையல் சூடிக்
காசுடை வடத்தோல் கட்டிக் கவடிமெய்க் கலன்கள் பூண்டு
மாசில்சீர் வெட்சி முன்னா வருந்துறைக் கண்ணி சூடி
ஆசில்ஆ சிரியன் ஏந்தும் அடற்சிலை மருங்கு சூழ்ந்தார்.

தெளிவுரை : பச்சிலையால் ஆன படலைகளைச் சுற்றிப் பல வகை மலர் மாலைகளைச் சூடி, மணிகள் கட்டிய வடத் தோலை மேலே கட்டி, உடலில் பலகறைகளால் ஆன அணிகளை அணிந்து, குற்றம் இல்லாத சிறப்புக் கொண்ட வெட்சி முதலாகக் கூறப்பட்டனவாகித் தாம் மேற்கொண்டு வரும் அந்த அந்தத் துறைகளுக்குரிய மாலைகளை அணிந்து, குற்றம் நீங்கப் பெற்ற வில் ஆசிரியன் ஏந்திய வலிய வில்லினது பக்கத்தில் சேர்ந்தனர்.

687. தொண்டக முரசும் கொம்பும் துடிகளுந் துளைகொள் வேயும்
எண்திசை நிறைந்து விம்ம எழுந்தபே ரொலியி னோடும்
திண்திறல் மறவ ரார்ப்புச் சேண்விசும் பிடித்துச் செல்லக்
கொண்டசீர் விழவு பொங்கக் குறிச்சியை வலங்கொண் டார்கள்.

தெளிவுரை : தொண்டகப் பறையும், கொம்பும், உடுக்கையும் துளையுடைய மூங்கில் வாத்தியமும் எட்டுத் திக்குகளிலும் நிரம்பி எழுந்து ஒலிக்க, அவற்றால் உண்டான பேரோசையோடும் கூடித் திண்மையான வல்லமையுடைய வீரர்களின் ஆரவாரம் நீண்ட வானத்தில் நிரம்பிச் செல்ல அத்திருவிழா சிறப்பு மிக அவ்வூரை வலமாக வந்தனர்.

688. குன்றவர் களிகொண் டாடக் கொடிச்சியர் துணங்கை யாடத்
துன்றிய மகிழ்ச்சி யோடும் சூரர மகளி ராட
வென்றிவில் விழவி னோடும் விருப்புடை ஏழாம் நாளின்
அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்றை.

தெளிவுரை : வேடர்கள் இங்ஙனம் வரிக்கூத்து ஆட வேடிச்சியர் துணங்கைக் கூத்து ஆட, மிகவும் மகிழ்ச்சியுடனும் அச்சம் தருகின்ற தெய்வ மகளிர் ஆட, வெற்றி தரும் வில் விழாவை நாள்தோறும் கொண்டாடினர். ஏழாம் நாளில் முந்தைய நாட்களைவிட இருமடங்கு அதிகமாய் அக்கொண்டாட்டங்களை நன்கு செய்தனர். பின்னர்,

689. வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க  மருங்குபல் லியங்க ளார்ப்பத்
தங்கள்தொல் மரபின் விஞ்சைத் தனுத்தொழில் வலவர் தம்பால்
பொங்கொளிக் கரும்போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித் தார்கள்.

தெளிவுரை : கதிரவன் வான வெளியில் உச்சியில் பொருந்திய போதில், எங்கும் மங்கல வாழ்த்து நிறையவும், பக்கங்களில் மங்கல வாத்தியங்கள் ஒலிக்கவும், அந்த வேடர்கள் தம் பழைய மரபிலே வந்த வில் கலை பயிற்றும் வல்லமை மிக்கவரிடம், ஒளிரும் கரிய போர் செய்வதில் வல்ல காளை போன்ற திண்ணானாரைப் போர் செய்ய வில்லைப் பிடிக்கச் செய்தனர்.

690. பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன்முன் செய்த
விற்றொழிற் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும்
அற்றைநாள் தொடங்கி நாளும் அடற்சிலை யாண்மை முற்றக்
கற்றன ரென்னை யாளும் கானவர்க் கரிய சிங்கம்.

தெளிவுரை : என்னை ஆள்கின்ற வேடர் குலத்தில் அரியவராய்த் தோன்றிய ஆண் சிங்கம் போன்ற திண்ணனார், அழகிய பெரிய மலைச் சாரலில் விருப்பம் மிக்க வில் தொழில் களத்தில் சேர்ந்து விதிப்படி முறையாக வணங்கிப் பொருந்திய அன்றைய நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் வன்மையுடைய வில்லைக் கையாளும் தொழிலை முற்றுப் பெறுமாறு கற்று நிரம்பினார்.

691. வண்ணவெம் சிலையு மற்றப் படைகளும் மலரக் கற்றுக்
கண்ணகன் சாயல் பொங்கக் கலைவளர் திங்க ளேபோல்
எண்ணிரண் டாண்டின் செவ்வி எய்தினார் எல்லை யில்லாப்
புண்ணியந் தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவு போல்வார்.

தெளிவுரை : அளவில்லாத சிவ புண்ணியங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தோன்றி மேல் மேலும் வளர்வதைப் போன்ற பொலிவுள்ளரான திண்ணனார், அழகிய விருப்பம் தரும் விற்கலைகளையும், அதனுடன் இனமான மற்றப் படைகளின் கலைகளையும் நிறையக் கற்று, அழகு மேன்மேல் பெருக எல்லாக் கலைகளும் நிரம்பி நிற்கும் திங்களைப் போல் பதினாறு வயது ஆகும் பருவத்தை அடைந்தார்.

692. இவ்வண்ணந் திண்ணனார் நிரம்பு நாளில்
இருங்குறவர் பெருங்குறிச்சிக் கிறைவ னாய
மைவண்ண வரைநெடுந்தோள் நாகன் தானும்
மலையெங்கும் வனமெங்கும் வரம்பில் காலம்
கைவண்ணச் சிலைவேட்டை யாடித் தெவ்வர்
கணநிரைகள் பலகவர்ந்து கானங் காத்து
மெய்வண்ணந் தளர்மூப்பின் பருவ மெய்தி
வில்லுழவின் பெருமுயற்சி மெலிவா னானான்.

தெளிவுரை : இப்படித் திண்ணனார் பதினாறு வயதுப் பருவம் நிரம்பிய போது, வன்மையில் பெரிய குறவர் வாழும் பெருமை வாய்ந்த சீறூர்த் தலைவனான கரிய மலை போன்ற பெருந்தோள்களையுடைய நாகனும், மலைகளில் எங்கும் காடுகளில் எங்கும் அளவில்லாத காலங்கள் கையில் ஏந்திய வில்லால் வேட்டையாடியும் பகைக் கூட்டத்தவரின் பசுக் கூட்டங்கள் பலவற்றைக் கவர்ந்தும் தனக்குரிய காடுகளைக் காத்தும், உடலில் தளர்ச்சியுண்டாக்கும் முதுமைப் பருவத்தை அடைந்து வில் தொழில் முயற்சியில் குறைவு உடையவன் ஆனான்.

693. அங்கண்மலைத் தடஞ்சாரற் புனங்க ளெங்கும்
அடலேனம் புலிகரடி கடமை ஆமா
வெங்கண்மரை கலையொடுமான் முதலா யுள்ள
மிருகங்கள் மிகநெருங்கி மீதூர் காலைத்
திங்கள்முறை வேட்டைவினை தாழ்த்ததென்று
சிலைவேடர் தாமெல்லாம திரண்டு சென்று
தங்கள்குல முதற்றலைவ னாகி யுள்ள
தண்தெரியல் நாகன்பால் சார்ந்து சொன்னார்.

தெளிவுரை : அழகான இடங்களைக் கொண்ட மலைச் சாரல்களும் காடுகளுமான எல்லா விடங்களிலும் வலிய காட்டுப் பன்றியும், புலி, கரடி, காட்டுப் பசு, மரை, மான் முதலான விலங்குகளும் மிகவும் நெருங்கி மேற்சென்று அழிக்கத் தொடங்கின. அப்போது திங்கள் தோறும் வேட்டைச் செயல் நிகழாமல் காலம் தாழ்த்தமையால் இந்தக் கொடியவை உண்டாயின என்று வில் ஏந்திய வேடர் எல்லாரும் ஒன்று கூடிப் போய்த் தங்கள் குலத் தலைவனாய் உள்ள குளிர்ச்சியான மாலை அணிந்த நாகனிடம் வந்து கூறினர்.

694. சொன்னவுரை கேட்டலுமே நாகன் தானும்
சூழ்ந்துவருந் தன்மூப்பின் தொடர்வு நோக்கி
முன்னவர்கட் குரைசெய்வான் மூப்பி னாலே
முன்புபோல் வேட்டையினின் முயல கில்லேன்
என்மகனை உங்களுக்கு நாத னாக
எல்லீருங் கைக்கொண்மி னென்ற போதில்
அன்னவரு மிரங்கிப்பின் மகிழ்ந்து தங்கோன்
அடிவணங்கி இம்மாற்றம் அறைகின் றார்கள்.

தெளிவுரை : தன்னிடம் வந்து வேடர் கூறிய சொல்லைக் கேட்டலும், நாகனும் தன்னைச் சூழ்ந்து வரும் மூப்பின் தொடர்ச்சியைப் பார்த்து, அவ்வேடர்களை நோக்கிக் கூறுவானாகி, மூப்புக் காரணமாக முன் போல் வேட்டையாடும் முயற்சியில் வலிமை இல்லாதவன் ஆனேன். ஆகவே, என் மகனை உங்களுக்குத் தலைவனாக ஏற்றுக் கொள்ளுங்கள் ! என்று அவன் கூறிய போதில், அவர்களும் நாகனின் முதுமையின் பொருட்டு இரங்கிப், பின்பு மகிழ்ந்து, தம் தலைவனான நாகனை நோக்கி இத்தகைய சொற்களைச் சொல்லலாயினர்.

695. இத்தனைகா லமும்நினது சிலைக்கீழ்த் தங்கி
இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம் இன்னும்
அத்தநின தருள்வழியே நிற்ப தல்லால்
அடுத்தநெறி வேறுளதோ அதுவே யன்றி
மெய்த்தவிறல் திண்ணனைஉன் மரபில் சால
மேம்படவே பெற்றளித்தாய் விளங்கு மேன்மை
வைத்தசிலை மைந்தனைஈண் டழைத்து நுங்கள்
 வரையாட்சி யருளென்றார் மகிழ்ந்து வேடர்.

தெளிவுரை : வேடர்கள், இவ்வளவு காலமும் உன் சிலையாட்சியின் கீழ்த் தங்கி இனிதாய் உண்டு தீமையின்றி வாழ்ந்தோம் தலைவ ! நீ கட்டளையிட்ட வழியே இனி அமைந்து நிற்கின்றதல்லாமல் வேறு நெறியுண்டோ? அதுவேயன்றி, உடன் வன்மை மிகவும் உடைய திண்ணனை உன் மரபில் மிகவும் மேன்மை ஏற்படவே பெற்று அளித்தாய். விளங்கும் மேன்மை வாய்ந்த வில்லை ஏந்திய உன் மகனை இங்கு அழைத்து உங்களுக்குரிய மலையாட்சி உரிமையை அவனுக்குத் தந்தருளுக ! என்று மகிழ்ந்து கூறினர்.

696. சிலைமறவ ருரைசெய்ய நாகன் தானும்
திண்ணனைமுன் கொண்டுவரச் செப்பி விட்டு
மலைமருவு நெடுங்கானிற் கன்னி வேட்டை
மகன்போகக் காடுபலி மகிழ வூட்டத்
தலைமரபின் வழிவந்த தேவ ராட்டி
தனையழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்று
நிலைமையவள் தனக்குரைப்ப நரைமூ தாட்டி
நெடிதுவந்து விருப்பினொடுங் கடிது வந்தாள்.

தெளிவுரை : வில் வேடர் மேற்கண்ட வண்ணம் கூற, நாகனும், திண்ணனைத் தன் முன் அழைத்துக் கொண்டு வருமாறு சொல்லி விட்டு, மலைகள் பொருந்திய பெருங் காட்டில் என் மகன் வேட்டைக்குப் போவதற்காகக் காட்டுத் தெய்வங்கள் மகிழுமாறு பலிகளை ஊட்ட, எங்கள் மரபில் வழிவழியாக வந்த தேவராட்டியை அழையுங்கள் என்று சொல்ல, அங்குள்ளவர்கள் போய் அந்நிலைமையை அப்படியே அத்தேவராட்டிக்குக் கூறினர். நரை மூதாட்டியான அவளும் பெரிதும் மகிழ்ந்து விருப்புடனே விரைவாக வந்தாள்.

697. கானில்வரித் தளிர்துதைந்த கண்ணி சூடிக்
கலைமருப்பின் அரிந்த குழை காதிற் பெய்து
மானின்வயிற் றரிதாரத் திலக மிட்டு
மயிற் கழுத்து மனவுமணி வடமும் பூண்டு
தானிழிந்து திரங்கிமுலை சரிந்து தாழத்
தழைப்பீலி மரவுரிமேற் சார வெய்திப்
பூநெருங்கு தோரைமல சேடை நல்கிப்
போர்வேடர் கோமானைப் போற்றி நின்றாள்.

தெளிவுரை : தேவராட்டி வரிகள் பொருந்திய காட்டுத் தளிர்களால் ஆன மாலையைச் சூடிக் கலைமான் கொம்பினின்று அரிந்து எடுத்த காதணியை அணிந்து, மான் வயிற்றில் தோன்றிய கத்தூரிப் பொட்டை இட்டு, மயில் கழுத்துப் போன்ற சங்கு மணி மாலை பூண்டு, முலை தொங்கித் திரங்கிச் சரிந்து தாழ, இடையில் கட்டிய மரவுரி மேல் தழையுடன் மயில் இறகும் தொங்க, வந்து சேர்ந்து, பூவும் மலை நெல்லும் சேர்ந்த அட்சதையைத் தந்து போரில் வல்ல நாகனை வணங்கி நின்றாள்.

698. நின்றமுது குறக்கோலப் படிமத் தாளை
நேர்நோக்கி அன்னைந நிரப்பு நீங்கி
நன்றினிதி னிருந்தனையோ என்று கூறும்
நாக னெதிர் நலம்பெருக வாழ்த்தி
நல்ல மென்தசையும் ஈயலொடு நறவும் வெற்பில்
விளைவளனும் பிறவளனும் வேண்டிற் றெல்லாம்
அன்றுநீ வைத்தபடி பெற்று வாழ்வேன்
அழைத்தபணி என்னென்றாள் அணங்கு சார்ந்தாள்.

தெளிவுரை : தன் எதிரில் நின்ற குறத்தியின் கோலத்துடன் விளங்கிய தேவராட்டியை நேராகப் பார்த்து தாயே ! நீ வறுமையினின்றும் நீங்கி இனிது வாழ்கின்றாயோ? என்று வினவினான். அவனுக்கு நன்மையுண்டாக ! என வாழ்த்தி, நல்ல மென்மையான ஊனும் ஈசலும் தேனும் மலையில் தோன்றிய வளங்களும் மற்ற வளங்களும் ஆகிய எனக்குத் தேவையானவற்றை யெல்லாம் முன்பு நீ வகுத்து வைத்த நிபந்தப்படி குறைவில்லாது பெற்று வாழ்ந்து வருகின்றேன் ! என்னை அழைத்த காரியம் யாது ! என்று வினவினாள்.

699. கோட்டமில்என் குலமைந்தன் திண்ணன் எங்கள்
குலத்தலைமை யான்கொடுப்பக் கொண்டு பூண்டு
பூட்டுறுவெஞ் சிலைவேடர் தம்மைக் காக்கும்
பொருப்புரிமை புகுகின்றான் அவனுக் கென்றும்
வேட்டைவினை யெனக்குமே லாக வாய்த்து
வேறுபுலங் கவர்வென்றி மேவு மாறு
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக்
காடுபலி ஊட்டென்றான் கவலை யில்லான்.

தெளிவுரை : நிலை தவறாத என் குல மகனான திண்ணன் எம் குலவுரிமையான தலைமையை நான் கொடுக்க, அதனை ஏற்றுத் தலைமை தாங்கி, நாண் பூட்டிய கொடிய வில்லையுடைய வேடர்களைக் காவல் செய்கின்ற மலையாளும் உரிமையை மேற்கொள்கின்றான். அவனுக்கு, எனக்கு மேலாக வேட்டைத் தொழில் வாய்த்திடும் படியும், மாறுபட்ட அயல் புலங்களைக் கவரும்படி வெற்றி ஏற்படவும் காட்டில் வாழும் தெய்வங்கள் விரும்பியுண்ணும்படி வழிபாடு செய்வாயாக ! என்று கவலை இல்லாத நாகன் சொன்னான்.

700. மற்றவன்தன் மொழிகேட்ட வரைச்சூ ராட்டி
மனமகிழ்ந்திங் கன்போடு வருகின் றேனுக்
கெற்றையினுங் குறிகள்மிக நல்ல வான
இதனாலே உன்மைந்தன் திண்ண னான
வெற்றிவரிச் சிலையோன்நின் அளவி லன்றி
மேம்படுகின் றான்என்று விரும்பி வாழ்த்திக்
கொற்றவன தெய்வங்கள் மகிழ வூட்ட
வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள்.

தெளிவுரை : அவ்வாறு உரைத்த நாகனின் சொல்லைக் கேட்ட தேவராட்டி,, இங்கு அன்புடன் வரும் எனக்கு முன் எக்காலத்திலும் காணப்படாத நல்ல குறிகள் ஏற்பட்டன. அதனால் வெற்றி பொருந்திய வில் ஏந்திய திண்ணன் உன் அளவில் மட்டும் அமையாது மேம்படுவான் என்று விரும்பி வாழ்த்தி, வெற்றி தரும் காட்டுத் தெய்வங்கள் மகிழும்படி பலி ஊட்டுவதற்கு வேண்டியவற்றை யெல்லாம் கைக்கொண்டு சென்றாள்.

701. தெய்வநிகழ் குறமுதியாள் சென்ற பின்பு
திண்ணனார் சிலைத்தாதை அழைப்பச்சீர்கொள்
மைவிரவு நறுங்குஞ்சி வாசக கண்ணி
மணிநீல மலையொன்று வந்த தென்னக்
கைவிரவு சிலைவேடர் போற்ற வந்து
காதல்புரி தாதைகழல் வணங்கும் போதில்
செவ்வரைபோல் புயமிரண்டுஞ் செறியப் புல்லிச்
செழும்புலித்தோ லிருக்கையின்முன் சேர வைத்தான்.

தெளிவுரை : தேவராட்டி சென்ற பின்பு, வில்லையுடைய தந்தை அழைக்கக் கேட்டுச் சிறப்புடைய கரிய நல்ல குடுமியையும் மணம் கமழும் மாலையையும் உடைய ஒரு நீல மணி மலை வந்தாற் போன்று திண்ணனார் கையிலே பொருந்திய வில்லையுடைய வேடர் பலரும் போற்ற வந்து, தம்மிடம் அன்பு கொண்ட தந்தையின் அடிகளை வணங்கியபோது தந்தையான நாகன் நேர்மை பெற்ற மலையைப் போல் உயர்ந்த இரண்டு தோள்களையும் பொருந்தத் தழுவிச் செழுமையான புலித்தோல் இருக்கையில் தன் முன் வீற்றிருக்கும்படி செய்தான்.

702. முன்னிருந்த மைந்தன்முகம் நோக்கி நாகன்
மூப்பெனைவந் தடைதலினால் முன்பு போல
என்னுடைய முயற்சியினால் வேட்டை யாட
இனிஎனக்குக் கருத்தில்லை எனக்கு மேலாய்
மன்னுசிலை மலையர்குலக் காவல் பூண்டு
மாறெறிந்து மாவேட்டை யாடி என்றும்
உன்னுடைய மரபுரிமை தாங்கு வாயென்
றுடைதோலும் சுரிகையுங்கைக் கொடுத்தா னன்றே.

தெளிவுரை : தன் முன் அமர்ந்திருந்த மைந்தரான திண்ணனாரின் முகத்தைப் பார்த்து, என்னை முதுமை வந்து அடைந்ததால், முன் காலத்தில் போல் என் முயற்சியால் வேட்டையாட இனி எனக்கு எண்ணம் இல்லை. என்னை விட மேலாக நீ நிலைபெற்ற இவ்வேடர் குலக் காவலை மேற்கொண்டு பகைவர்களை வென்று விலங்குகளை வேட்டையாடி உன் மரபுரிமையான தலைமையை எப்போதும் தாங்குவாயாக ! என்று வாழ்த்துக் கூறித் தன் அரச அடையாளமான உடை தோலையும், வாளையும் அவர் கைகளில் அப்போதே தந்தான்.

703. தந்தைநிலை உட்கொண்டு தளர்வு கொண்டு
தங்கள்குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
வந்தகுறை பாடதனை நிரப்பு மாறு
மனங்கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல்வணங்கி முறைமை தந்த
முதற்சுரிகை உடைதோலும் வாங்கிக் கொண்டு
சிந்தைபரங் கொளநின்ற திண்ண னார்க்குத்
திருத்தாதை முகமலர்ந்து செப்பு கின்றான்.

தெளிவுரை : தம் தந்தையின் நிலையை மனத்துள் கொண்டு அதனால் பரிவு கொண்டு, பின்பு தங்கள் குலத் தலைமைக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டப்படுவதான குறையைப் போக்குதல் வேண்டும் என்று உள்ளத்தில் கொண்ட குறிப்பினால், தந்தையின் சொல்லை மறுக்காமல் மேற்கொண்டு, தம் முன்னவனான அவனது கழலை வணங்கி, அவன் தந்த வாளையும் உடை தோலையும் ஏற்றுக் கொண்டு, தம் உள்ளம் பரம் கொள்ள நின்ற திண்ணனார்க்கு அவரது தந்தை முக மலர்ந்து கூறுவானாயினன்.

704. நம்முடைய குலமறவர் சுற்றத் தாரை
நான்கொண்டு பரித்த தன்மேல் நலமே செய்து
தெம்முனையி லயற்புலங்கள் கவர்ந்து கொண்டு
திண்சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய்
வெம்முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்
விரைந்துநீ தாழாதே வேட்டை யாட
இம்முரண்வெஞ் சிலைவேடர் தங்க ளோடும்
எழுகவென விடைகொடுத்தான் இயல்பில் நின்றான்.

தெளிவுரை : நம் குலத்தவரான வேடர்களையும் உறவினர்களையும் நான் கொண்டு தாங்கிய அதனைவிட மேலாக அவர்களுக்கு நன்மையைச் செய்து, பகை முனையில் அயல் புலங்களைக் கவர்ந்து, அதனால் கைக்கொண்ட வலிய வில்லால் விளையும் வளம் குறையாத சிறப்புடன் வாழ்வாயாக ! விரும்பத்தக்க வேட்டை முனையில் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும். நீ காலம் தாழ்க்காமல் வேட்டை ஆடுவதற்கு இந்த வலிய கொடிய வில் வேடர்களுடன் புறப்படுக ! என்று நாகன் திண்ணனார்க்கு விடை அளித்தான்.

705. செங்கண்வயக் கோளரியே றன்ன திண்மைத்
திண்ணனார் செய்தவத்தின் பெருமை பெற்ற
வெங்கண்விறல் தாதைகழல் வணங்கி நின்று
விடைகொண்டு புறம்போந்து வேட ரோடும்
மங்கலநீர்ச் சுனைபடிந்து மனையின் வைகி
வைகிருளின் புலர்காலை வரிவிற் சாலைப்
பொங்குசிலை அடல்வேட்டைக் கோலங் கொள்ளப
புனைதொழிற்கை வினைஞருடன் பொலிந்து புக்கார்.

தெளிவுரை : சிவந்த விழிகளையுடைய வெற்றி பொருந்திய ஆண் சிங்கம் போன்ற வன்மையுடைய திண்ணனார், செய்த தவத்தின் பெருமை பெற்ற கொடிய கண்ணும் ஆற்றலும் உடைய தந்தையின் அடிகளில் நிலமுற வீழ்ந்து அடியை வணங்கினான். எழுந்து நின்று, விடைபெற்று, வெளியே சென்றார்; வேடர்களோடும் போய்ப் பின்பு மங்கலமான நீர்ச்சுனையில் நீராடினார்; மனையில் தங்கிப் பொருந்திய இருள் புலர்கின்ற விடியற் காலத்தில் விற்சாலையில் வில்லைக் கொண்டு செய்யும் வலிய வேட்டைக் கோலத்தைக் கொள்வதற்காக அலங்காரம் செய்யும் கையையுடைய பணி மக்களுடன் மகிழ்ந்து புகுந்தார்.

706. நெறிகொண்ட குஞ்சிச் சுருள்துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறிகொண்ட கண்ணிக்கிடை மொய்யொளிப் பீலி சேர்த்தி
வெறிகொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறிகொண்ட வண்டின்குலம் சீர்கொளப் பின்பு செய்து.

தெளிவுரை : நெறிப்பையுடைய தலைமயிரைச் சுருள்கள் போல் நேராய் நிமிர்ந்து நிற்குமாறு மேலே தூக்கிக் கட்டி, அதில் இலைத் தளிரால் ஆன மாலையைச் சாத்தி, அதற்கு இடையே நெருங்கிய ஒளியுடைய மயில் இறகைச் சேர்த்து, மணமுடைய முல்லை மாலையுடன் குறிஞ்சி மலரையும் வெட்சிப் பூவையும், நிறைந்த வண்டினம் மொய்க்குமாறு சிறப்பாய் அவற்றின் பின்பு சேருமாறு செய்து,

707. முன்னெற்றி யின்மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னிற்புரி கொண்ட மயிர்க்கயி றாரச் சாத்தி
மின்னிற்றிகழ் சங்கு விளங்குவெண் டோடு காதின்
மன்னிப்புடை நின்றன மாமதி போல வைக.

தெளிவுரை : முன் நெற்றியின் மேல் மயில் இறகின் அடியிலே இடையிடையே குன்றி மணிகளை உடன் வைத்து முறுக்கிய மயிர்க்கயிற்றைப் பொருந்தி யிருக்கச் சாத்தி, மின் போல் ஒளிரச் சங்கால் செய்த, விளங்கும் வெண்ணிறத் தோடு காதில் பொருந்தி இரண்டு பக்கமும் நின்றனவாய்ப் பெரிய முழு மதியைப் போன்று பொருந்தியிருக்க வைத்து,

708. கண்டத்திடை வெண்கவ டிக்கதிர் மாலை சேரக்
கொண்டக்கொடு பன்மணி கோத்திடை ஏனக் கோடு
துண் டப்பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல்
தண்டைச்செயல் பொங்கிய சன்னவீ ரந்த யங்க.

தெளிவுரை : கழுத்தில், வெண்மையான பலகறைகளால் ஆன ஒளி மாலையைப் பொருந்தக் கொண்டு, சங்கு மணிகளுடன் பலவகை மணிகளையும் கோத்து அவற்றிடையே பன்றிக் கொம்புகள் பிறைபோல் தொங்க வைத்து, இவற்றை வேங்கைப் புலியின் வலிய தோலில் பதித்துத் தட்டையான வடிவம் அமையச் செய்த சன்ன வீரம் என்ற வெற்றி மாலை விளங்கிட,

709. மார்பிற்சிறு தந்த மணித்திரள் மாலை தாழத்
தாரிற்பொலி தோள்வல யங்கள் தழைத்து மின்னச்
சேர்விற்பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கைக்
கார்விற்செறி நாணெறி கைச்செறி கட்டி கட்டி.

தெளிவுரை : மார்பில், யானைக் கொம்பால் ஆன சிறு மணிகளின் மாலை தாழ்ந்து தொங்க, மாலைகளால் விளக்கம் உடைய தோளில், வாகுவலையம் என்கின்ற அணிகள் விளங்க, பொருந்திய கங்கணமானது தன் மேல் விளங்கும் முன் கையில், வில்லில் பூட்டிய நாணை மேக ஒலிபோல எறிவதற்கு உதவும் கைக் கோதையைக் கட்டி,

710. அரையிற்சர ணத்துரி யாடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளல கார்த்து விளிம்பு சேர்த்தி
நிரையிற்பொலி நீளுடை தோல்சுரி கைப்பு றஞ்சூழ்
விரையிற்றுவர் வார்விசி போக்கி அமைத்து வீக்கி.

தெளிவுரை : இடையில், மேலே மயில் இறகு பொருந்திய புலித்தோல் ஆடையின் மீது கடல் அலைகளில் பொருந்தும் வெண்மையான பலகறைகளைக் கோத்து விளிம்பாய் ஓரத்தில் கட்டி, வரிசையாய் விளங்கும் நீண்ட உடை தோலையும் வாளின் பக்கத்துச் சூழ்கின்ற மணமுடன் துவர் ஏற்றிய வாரையும் சேரக் கட்டும் விசியைப் பூட்டி அமைத்துக் கட்டி,

711. வீரக்கழல் காலின் விளங்க அணிந்து பாதம்
சேரத்தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்
பாரப்பெரு வில்வலங் கொண்டு பணிந்து திண்ணன்
சாரத்திருத் தாள்மடித் தேற்றி வியந்து தாங்கி.

தெளிவுரை : காலில், வீரக்கழல் விளங்குமாறு பூண்டு திருப் பாதங்களில், பொருந்தத் தொடும் நீடு செருப்பு விருப்பு வாய்ப்ப, பாரமான பெரிய வில்லை வலங் கொண்டு வணங்கி, திண்ணனார், தம் தாள் பொருந்த வைத்து வளைத்து நாண் ஏற்றி வியந்து தாங்கி,

712. அங்கப்பொழு திற்புவ னத்திடர் வாங்க ஓங்கித்
துங்கப்பெரு மாமழை போன்று துண்ணென் றொலிப்ப
வெங்கட்சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்
செங்கைத்தலத் தால்தட விச்சிறு நாண்எ றிந்தார்.

தெளிவுரை : அங்கு அப்போது உலகத்தின் துன்பமானது நீங்கவும், ஓங்கி யுயர்ந்த பெரிய கரிய மேகம் போன்று துண் என்று ஒலிக்கவும், கொடிய சினம் பொருந்திய கண் உடைய பெரிய விலங்குகள் நீங்கவும், தம் செங்கைத் தலத்தால் தடவி வில்லில் சிறு நாண் ஒலி செய்தார்,

713. பல்வேறு வாளிபுதை பார்த்துடன் போத ஏவி
வில்வேட ராயத் துடிமேவி ஒலிக்கு முன்றில்
சொல்வேறு வாழ்த்துத் திசைதோறுந் துதைந்து விம்ம
வல்லேறு போல்வார் அடல்வாளி தெரிந்து நின்றார்.

தெளிவுரை : வலிய சிங்கத்தைப் போன்ற திண்ணனார் பல வகைப்பட்ட அம்புகளை அம்புக் கூட்டில் தேர்ந்து எடுத்துக் கொண்டார்; தம்முடன் வரும்படி வேவுகாரர்க்குச் சொன்னார். வில் வேடர் கூட்டங்களின் சிறிய துடிகள் ஒலிக்கும் முன்றிலில் வந்தார். பலரும் சொல்கின்ற பல்வேறு வாழ்த்தொலிகளும் எல்லாத் திக்குகளிலும் நெருங்கி நிறைய வன்மையான அம்புகளை ஆராய்ந்து நின்றார்.

714. மானச்சிலை வேடர் மருங்கு நெருங்கு போதில்
பானற்குல மாமல ரிற்படர் சோதி யார்முன்
தேனற்றசை தேறல் சருப்பொரி மற்று முள்ள
கானப்பலி நேர்கட வுட்பொறை யாட்டி வந்தாள்.

தெளிவுரை : பெரிய வில்லைக் கைக்கொண்ட வேடர் வேட்டைக்கு ஆயத்தமாகத் திண்ணனாரின் பக்கத்தை நெருங்கினர். அப்போது பெருந் தொகுதியான நீலோற்பலப் பூக்களின் ஒளியைப் போன்று வீசும் நீல ஒளியையுடைய திண்ணனாரின் முன்பு, தேனும், நல்ல தசையும், கள்ளும், சருவும், பொரியும் மற்றும் அவை போன்றவையுமாகிய பொருள்களால் காடுறை தெய்வங்களுக்குப் பலியூட்டிய தேவராட்டி அங்கு வந்தாள்.

715.  நின்றெங்கு மொய்க்குஞ்சிலை வேடர்கள் நீங்கப் புக்குச்
சென்றங்கு வள்ளல்திரு நெற்றியிற் சேடை சாத்தி
உன்தந்தை தந்தைக்கும் இந்நன்மை கள்உள்ள வல்ல
நன்றும்பெரி துன்விறல் நம்மள வன்றி தென்றாள்.

தெளிவுரை : அவ்வாறு வந்த தேவராட்டி அங்கு எங்கும் நெருங்கி நின்ற வேடர்கள் ஒதுங்க, வள்ளலான திண்ணனாரின் பக்கத்தில் சென்று, அவரின் நெற்றியில் அட்சதை சாத்தி, உன் தந்தை தந்தைக்கும் இந்த நன்மைகள் உள்ளன அல்ல. உனது வன்மை மிகவும் பெரியது. நம்மளவில் இது அடங்காது என்று வாழ்த்திச் சொன்னாள்.

716. அப்பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை யாட்டி தன்னைச்
செப்பற்கரி தாய சிறப்பெதிர் செய்து போக்கிக்
கைப்பற்றிய திண்சிலைக் கார்மழை மேக மென்ன
மெய்ப்பொற்புடை வேட்டை யின்மேற்கொண் டெழுந்து போந்தார்.

தெளிவுரை : திண்ணனார், அங்ஙனம் வாழ்த்துக் கூறிய தேவராட்டியைக் கூறுவதற்கரிய பெருஞ்சிறப்புகள் செய்து அனுப்பினார். பின் வலிய வில்லைக் கையில் ஏந்திய கார் காலத்து மழை முகில்போல், உண்மையான பொலிவு கொண்ட வேட்டையினை மேற்கொண்டு புறப்பட்டார்.

717. தாளில்வாழ் செருப்பர்தோல் தழைத்தநீடு தானையார்
வாளியோடு சாபம்மேவு கையர்வெய்ய வன்கணார்
ஆளியேறு போலஏகும் அன்ணலார்முன் எண்ணிலார்
மீளிவேடர் நீடுகூட்டம்  மிக்குமேல் எழுந்ததே.

தெளிவுரை : அங்ஙனம் வேட்டையை மேற்கொண்டு புறப்பட்ட ஆண் சிங்கம் போன்ற திண்ணனார் முன்பு, கால்களில் அணிந்த செருப்பு உடையவராய், விரிந்த தோலை மேலே கட்டிய நீண்ட ஆடை உடையவராய், அம்புகளுடன் வில் ஏந்திய கைகளையுடையவராய், அஞ்சாமையுடையவராய், எண்ணற்ற கொடிய கூட்டம் மிகுதியாய்ப் புறப்பட்டது.

718. வன்தொடர்ப்பி ணித்தபாசம் வன்கைமள்ளர் கொள்ளவே
வென்றிமங்கை வேடர்வில்லின மீதுமேவு பாதமுன்
சென்றுநீளு மாறுபோல்வ செய்யநாவின் வாயவாய்
ஒன்றொடொன்று நேர்படாமல் ஓடுநாய்கள் மாடெலாம்.

தெளிவுரை : வன்மையுடைய சங்கிலியால் கட்டிய கயிற்றை வேடர்கள் வலிய கைகளில் பிடித்திருந்ததால், நாய்கள், வேடர்களின் வில்லில் பொருந்தும் வெற்றித் திருமகளின் அடியானது முன்னம் சென்று நீள்வது போல், சிவந்த நாக்குகள் தொங்கிய வாளை உடையனவாய்ப் பக்கங்களில் எங்கும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாமல் ஓடின.

719. போர்வலைச் சிலைத்தொழிற் புறத்திலே விளைப்பவச்
சார்வலைத் தொ டக்கறுக்க ஏகும்ஐயர் தம்முனே
கார்வலைப் படுத்தகுன்று கானமா வளைக்கநீள்
வார்வலைத் திறஞ்சுமந்து வந்தவெற்பர் முந்தினார்.

தெளிவுரை : வேட்டைப் போர்க்குரிய வலைத் தொழிலையும் வில்தொழிலையும் பக்கத்தில் செய்ய, அந்தச் சார்பாகிய வலையின் கட்டினை அறுக்குமாறு போகின்ற பெருமையுடைய திண்ணனாரின் முன்னர், மேகங்கள் சூழ்ந்த மலைகளிலும் விலங்குகளை வளைப்பதற்காக நீளமானவார்களையும் வலை வகைகளையும் சுமந்து கொண்டு வந்த வேடர்கள் திண்ணனாரின் முன்னால் சென்றனர்.

720. நண்ணிமாம றைக்குலங்கள் நாடவென்று நீடுமத்
தண்ணிலா அடம்புகொன்றை தங்குவேணி யார்தமைக்
கண்ணினீடு பார்வையொன்று கொண்டு காணும் அன்பர்முன்
எண்ணில்பார்வை கொண்டுவேடர் எம்மருங்கும் ஏகினார்.

தெளிவுரை : பெருமை பொருந்திய வேதங்கள் ஒன்று கூடித் தேடும்படி நீடுகின்ற அந்தக் குளிர்ந்த நிலவும், அடம்பப் பூவும் கொன்றை மலரும் தங்கும் சடையுடையவரான சிவ பெருமானைத் தம் கண்ணின் நீண்ட பார்வை கொண்டு காண்கின்ற அன்பரான திண்ணனார் முன் எண்ணற்ற பார்வைகளுடன் வேடர்கள் எல்லாப் பக்கங்களிலும் சென்றனர்.

721. கோடுமுன் பொலிக்கவும் குறுங்கணா குளிக்குலம்
மாடுசென் றிசைப்பவும் மருங்குபம்பை கொட்டவும்
சேடுகொண்ட கைவிளிச் சிறந்தவோசை செல்லவும்
காடுகொண் டெழுந்தவேடு கைவளைந்து சென்றதே.

தெளிவுரை : ஊது கொம்பு வாத்தியங்கள் முன்னால் முழங்கவும், குறுகிய முகமுடைய பறைகள் பக்கங்களில் போய் ஒலிக்கவும், பக்கத்தில் பம்பை கொட்டவும், தொகையாய்க் கூடிய கைத்தட்டுகளினால் உண்டான சிறப்புடைய ஓசை செல்லவும், பெருந்திரளாய் எழுந்த வேடர் கூட்டம் பல பக்கமும் வளைந்து சென்றது.

722. நெருங்குபைந் தருக்குலங்கள் நீடுகாடு கூடநேர்
வருங்கருஞ் சிலைத்தடக்கை மானவேடர் சேனைதான்
பொருந்தடந் திரைக்கடல் பரப்பிடைப் புகும்பெருங்
கருந்தரங்க நீள்புனல் களிந்திகன்னி யொத்ததே.

தெளிவுரை : நெருக்கமான பசுமரக் கூட்டங்கள் பெருகிய காட்டை அடைவதற்கு நேர் வருகின்ற கரிய வில் ஏந்திய பெரிய கைகளையுடைய வலிய படையானது, அலைகின்ற பெரிய அலைகளை உடைய கடல் பரப்பின் இடையே புகுகின்ற பெரிய கரிய அலைகளைக் கொண்ட மிக்க நீர் பொருந்திய காளிந்தியாறு போல் விளங்கியது.

723. தென்றிசைப் பொருப்புடன் செறிந்தகானின் மானினம்
பன்றிவெம் மரைக்கணங்கள் ஆதியான பல்குலம்
துன்றிநின்ற வென்றடிச் சுவட்டின்ஒற்றர் சொல்லவே
வன்தடக்கை வார்கொடெம் மருங்கும் வேடரோடினார்.

தெளிவுரை : தெற்குத் திக்கில் உள்ள மலையுடன் கூடிய காட்டில், மான் இனங்களும் பன்றிகளும் கொடிய மரையினங்களும் முதலான பலவகை விலங்குக் கூட்டங்கள் நெருங்கிக் கூடி நின்றன என்று அவற்றின் அடிச் சுவட்டினால் அறிந்து வந்த ஒற்றர்கள் தெரிவித்தனர். தெரிவிக்கவே, வார்களைத் தம் பெரிய கைகளில் கொண்டு எல்லாப் பக்கங்களிலும் வேடர்கள் சென்றனர்.

724. ஒடியெறிந்து வாரொழுக்கி யோசனைப் பரப்பெலாம்
நெடியதிண் வலைத்தொடக்கு நீளிடைப் பிணித்துநேர்
கடிகொ ளப் பரந்தகாடு காவல்செய் தமைத்தபின்
செடிதலைச் சிலைக்கைவேடர் திண்ணனார்முன் நண்ணினார்.

தெளிவுரை : காட்டின் மரக் கிளைகளை வெட்டியும் வாரை நீளக்கட்டியும் யோசனை அளவுள்ள காட்டின் பரப்பு முழுவதும் நீண்ட திண்மையான வலையின் கட்டுகளை நீண்ட வெளிகளில் கட்டி, பார்ப்பவர் அஞ்சும்படி பரந்த காட்டை நேராகக் காவல் செய்து முடித்த பின்பு, சிறிய புதர்போன்ற தலையையுடைய வில் பிடித்த கையினரான வேடர்கள் திண்ணனார் முன்னர் வந்து கூடினர்.

725. வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடிமுன்
மஞ்சலைக்கு மாமலைச் சரிப்புறத்து வந்தமா
அஞ்சுவித் தடர்க்குநாய்கள் அட்டமாக விட்டுநீள்
செஞ்சரத்தி னோடுசூழல் செய்தகானுள் எய்தினார்.

தெளிவுரை : தாம் விருப்புக் கொள்ளத் தக்க வில்லை ஏந்திய கையையுடைய வீரரான திண்ணனாரும் மற்ற வேடர்களுடனே கூடி, முன் மேகம் தவழும் பெரிய மலைச் சாரல்களில் புறத்தில் வந்த விலங்குகளை, அஞ்சி வெளியே வந்து ஓடுமாறு செய்து, நாய்களைப் பல பக்கங்களிலும் ஓடச் செய்து, நீண்ட செம்மையான அம்புகளுடன், காவல் செய்யப்பட்ட காட்டில் புகுந்தனர்.

726. வெய்யமா எழுப்பஏவி வெற்பராயம் ஓடிநேர்
எய்யும்வாளி முன்தெரிந்து கொண்டுசெல்ல எங்கணும்
மொய்குரல் துடிக்குலங்கள் பம்பைமுன் சிலைத்தெழக்
கைவிளித் ததிர்த்துமா எழுப்பினார்கள் கானெலாம்.

தெளிவுரை : மேற்சொன்ன வண்ணம் கொடிய விலங்குகளை எழுப்பும்படி நாய்களை ஏவி, வேடர் கூட்டம் ஓடி, நேரே எய்தற்குரிய அம்புகளை முன்னே ஆராய்ந்து எடுத்துக் கொண்டு போக, எவ்விடங்களிலும் மொய்த்த குரலையுடைய உடுக்கைகளும் பம்பைகளும் முன்னே பேரோசை செய்தபடி எழ, அதனோடு கைதட்டியும் வாயினால் உரப்பிக் கூவியும் காடெங்கும் பதுங்கியிருந்த விலங்குகளை அவற்றின் மறைவான இருப்பிடங்களினின்று வெளிப்படச் செய்தனர்.

727. ஏனமோடு மானினங்கள் எண்குதிண் கலைக்குலம்
கானமேதி யானைவெம் புலிக்கணங்கள் கான்மரை
ஆனமாவ னேகமா வெருண்டெழுந்து பாயமுன்
சேனைவேடர் மேலடர்ந்து சீறிஅம்பில் நூறினார்.

தெளிவுரை : காட்டுப் பன்றிகளுடன் மான் வகைகள், கரடிகள், வன்மையான கலைமான் கூட்டங்கள், காட்டு எருமைகள், யானைகள், கொடிய புலிக் கூட்டங்கள், காட்டு மரைகள் என்னும் இவ்விலங்குகள் பலவாய் அஞ்சி எழுந்து சீறி முன் வந்து பாய்தலும் வேடர்கள் அவற்றை எதிர்த்துச் சீறி அம்புகளால் வீழ்த்தினர்.

728. தாளறுவன இடைதுணிவன தலைதுமிவன கலைமா
வாளிகளொடு குடல்சொரிதர மறிவனசில மரைமா
நீளுடல்விடு சரமுருவிட நிமிர்வனமிடை கடமா
மீளிகொள்கணை படுமுடலெழ விழுவனபல உழையே.

தெளிவுரை : கலைமான்களில் பல கால் அற்றன; இடை துண்டுபட்டன; தலை துண்டுபட்டன; மரை இனத்துள் சில, உடலுள் பாய்ந்த அம்புகளுடன் குடல் வெளியே சரிய இறந்து பட்டன. கூட்டமான காட்டுமாக்கள் நீண்ட உடலுள் வேடர் செலுத்திய அம்புகள் பாய்ந்து ஊடுருவிச் செல்லச் செயலற்று வருத்தத்துடன் நிமிர்ந்தன. பல உழை மான்கள் வன்மையான அம்புகள் தைத்தலால் உடல் துள்ள விழுந்தன.

729. வெங்கணைபடு பிடர்கிழிபட விசைஉருவிய கயவாய்
செங்கனல்விட அதனொடுகணை செறியமுன்இரு கருமா
அங்கெழுசிரம் உருவியபொழு தடலெயிறுற அதனைப்
பொங்கியசின மொடுகவர்வன புரைவனசில புலிகள்.

தெளிவுரை : ஒரு பன்றியின் பிடரானது அம்பினால் கிழிந்தது. அதனால் பிளவான புண்ணின்று இரத்தம் வெளிப்பட்டது; மேலும் அம்புகள் நெருங்கிப் பாய்ந்தன. அவை தலையினது வழி உருவி அப்பன்றியையும் இழுத்துக் கொண்டு எதிரே பாய்ந்து திறந்து ஓடிவந்த புலியின் பற்களின் இடையே ஊடுருவின. இங்ஙனம் இப்பன்றி புலி வாயில் அம்பால் இழுத்துச் செல்லப்படுதல் புலியானது அப்பன்றியைக் கவர்ந்து செல்வதைப் போல் தோன்றியது.

730.  பின்மறவர்கள் விடுபகழிகள் பிறகுறவயி றிடைபோய்
முன்னடுமுக மிசையுறுவிட முடுகியவிசை யுடனக்
கொன்முனையடு சரமினமெதிர் குறுகியமுக முருவத்
தன்னெதிரெதிர் பொருவனநிகர் தலையனபல கலைகள்.

தெளிவுரை : பல கலைமான்கள், பின்புறத்திலிருந்து வேடர்கள் எய்த அம்புகள் தம் உடலின் பின்பக்கத்தில் தைக்க, அந்த அம்புகள் அவற்றின் வயிற்றிடையே ஊடுருவிப் போய் முன்பக்கம் முகத்தின் நடுவில் உருவிட, மிகுந்த வேகத்துடன் விடப்பட்ட அம்புகள், எதிரே ஓடிய மானின் நெருங்கிய முகத்திலும் பாய்ந்து தைத்து அதனையும் ஊடுருவியது. அதனால் அந்த இருவகை மான்களும் ஒன்றை ஒன்று எதிர் எதிர் முட்டிப் போர் செய்வன போன்ற தலைகளை உடையனவாய் விளங்கின.

731. கருவரையொரு தனுவொடுவிசை கடுகியதென முனைநேர்
குரிசில்முன்விடும் அடுசரமெதிர் கொலைபயில்பொழு தவையே
பொருகரியொடு சினவரியிடை புரையறவுடல் புகலால்
வருமிரவொடு பகலணைவன எனமிடையுமவ் வனமே.

தெளிவுரை : கரிய மலை ஒன்று ஒரு வில்லுடனே ஓடிவந்தது எனக் கூறுமாறுவேட்டையாட நேர்வந்த அண்ணலான திண்ணனார், முன்னால் எதிர்த்து நின்று எய்கின்ற அம்புகள் எதிர்ப்பட்ட விலங்குகளைக் கொலை செய்யும் போது, அந்த அம்புகள் போர் செய்யும் யானைகளோடும் சினம் மிக்க சிங்கங்களின் நடுவேயும் இடைவெளி இல்லாமல் அவற்றின் உடலில் புகுந்தன. அதனால் அக்காடு பின்னால் வர இருக்கும் இரவுகளுடன் பகல்கள் சேர்ந்தது போல் விளங்கின.

732. நீளிடைவிசை மிசைகுதிகொள நெடுமுகில்தொட எழுமான்
தாளுறுகழல் மறவர்கள்விடு சரநிரைதொடர் வனதாம்
வாள்விடுகதிர் மதிபிரிவுற வருமெனவிழும் உழையைக்
கோளொடுபயில் பணிதொடர்நிலை கொளவுளவெதிர் பலவே.

தெளிவுரை : நீண்ட வான வெளியில் வேகத்துடனே மேலே குதித்துப் பெரிய மேகங்களைத் தொடுமாறு எழுகின்ற மான்களைக் காலில் பொருந்திய வீரக் கழலையுடைய வீரர்கள் விடும் அம்பு வரிசைகள் தொடர்ந்தன. அவ்வாறு தொடர்பவை, ஒளிவீசும் கதிர்களையுடைய சந்திரனைப் பிரிய நேரும் என்று அந்தச் சந்திர மண்டலத்தினின்று கீழே விழுந்த மானைப் பற்றுகின்ற தன்மையுடன் இராகு என்ற பாம்பு தொடர்ந்து வரும் நிலைமையைக் கண் எதிரே காண்பது போலாம்.

733. கடல்விரிபுனல் கொளவிழுவன கருமுகிலென நிரையே
படர்வொடுசெறி தழைபொதுளிய பயில்புதல்வன மதன்மேல்
அடலுறுசரம் உடலுறவரை அடியிடம்அல மரலால்
மிடைகருமரை கரடிகளொடு விழுவனவன மேதி.

தெளிவுரை : கொல்லும் அம்புகள் உடலில் தைத்தலால் மலைச்சாரலில் அடிநிலை கொள்ளாது சுழல்வதால் வரிசையாய்ப் படர்ந்து செறிந்த தழைகள் நிறைந்த நெருங்கிய புதர்களையுடைய அந்தக் காட்டில், கடலில் பரந்துள்ள நீரைக் கொள்ள விழுந்து படியும் மேகக் கூட்டத்தைப் போல், கூட்டமான கரிய மரைகளும் கரடிகளும் என்னும் இவற்றுடன் காட்டெருமைகள் வீழ்ந்தன.

734. பலதுறைகளின் வெருவரலொடு பயில்வலையற நுழைமா
உலமொடுபடர் வனதகையுற உறுசினமொடு கவர்நாய்
நிலவியவிரு வினைவலையிடை நிலைசுழல்பவர் நெறிசேர்
புலனுறுமன னிடைதடைசெய்த பொறிகளின்அள வுளவே.

தெளிவுரை : பல வழிகளினின்றும் கட்டிய வலைகள் அறுமாறு பயத்துடன் நுழைகின்ற விலங்குகள் கல்வழியில் செல்ல முற்பட்டன. அவற்றை, தடைபடுமாறு மிக்க சினத்துடன் நாய்கள் பிடித்தன. பிறப்பு இறப்புகளில் கட்டுகின்ற இரு வினைகளான வலையிடையிலே அகப்பட்டுத் தம் நிலை கலங்கிச் சுழல்பவரின் நன்னெறி சேரும் மெய்யறிவில் செல்லும் உள்ளத்தை, அவ்வாறு செல்ல வொட்டாமல் தடை செய்கின்ற ஐம்பொறிகளைப் போல அவை விளங்கின.

735. துடியடியன மடிசெவியன  துறுகயமுனி தொடரார்
வெடிபடவிரி சிறுகுருளைகள் மிகைபடுகொலை விரவார்
அடிதளர்வுறு கருவுடையன அணைவுறுபிணை அலையார்
கொடியனஎதிர் முடுகியும்உறு கொலைபுரிசிலை மறவோர்.

தெளிவுரை : கொடிய விலங்குகளை எதிராக ஓடிச் சென்று அவற்றைக் கொலை செய்கின்ற வில் வேடர்கள் பறை போன்ற கால்களையுடையனவும் மடிந்த காதுகளை உடையனவும் ஆகி நெருங்கி வரும் யானைக் கன்றுகளின் மீது வேட்டையாடும் செயலைச் செய்ய மாட்டார்கள். அடி தளர்தற்குக் காரணமான கருப்பம் கொண்டனவாய்த் தள்ளாடி வருகின்ற பெண் விலங்குகளுக்கும் துன்பம் செய்யமாட்டார்கள்.

736. இவ்வகைவரு கொலைமறவினை எதிர்நிகழ்வுழி அதிரக்
கைவரைகளும் வெருவுறமிடை கானெழுவதொர் ஏனம்
பெய்கருமுகி லெனஇடியொடு பிதிர்கனல்விழி சிதறி
மொய்வலைகளை அறநிமிர்வுற முடுகியகடு விசையில்.

தெளிவுரை : இங்ஙனம் வரும் கொலைத் தொழிலான மறத் தொழிலையுடைய வேட்டை நிகழ்ந்தது. அப்போது யானைகளும் அஞ்சத் தக்க முறையில் நெருக்கமான காடும் அதிரும்படி எழுவதான ஒரு பன்றி இடிக்குரலோடும் மழை பெய்யும் கரியமுகில் போல் முழக்கம் செய்து, வெளிப்பட்ட கண்களினிறும் தீ உமிழ்ந்து, கட்டிய நெருக்கமான வலைகள் அறுந்து போகுமாறு கிளம்பி, மிக்க விரைவுடன் ஓடியது.

737. போமதுதனை அடுதிறலொடு பொருமறவர்கள் அரியே
றாமவர்தொடர் வுறும்விசையுடன் அடிவழிசெலும் அளவில்
தாமொருவரு ம் அறிகிலரவர் தனிதொடர்வுழி அதன்மேல்
ஏமுனையடு சிலைவிடலைகள் இருவர்கள்அடி பிரியார்.

தெளிவுரை : ஓடுகின்ற அந்தப் பன்றியைக் கொல்லும் வலிமையுடன் போர் செய்யும் வேடர்களுக்கு ஆண் சிங்கமான திண்ணனார் தொடர்ந்து சென்று பிடிக்கும் வேகத்துடன் அப்பன்றி செல்லும் அடியின் சுவடு பற்றிச் செல்லும்போது, மற்ற வேடர் ஒருவரும் அறியாதபடி, தாம் தனியாகவே தொடர்ந்து போனார். அப்படிப் போகும் போது, அம்பால் வேட்டை முனையில் கொல்கின்ற வில்லைக் கைக் கொண்டவராய் உள்ள இயல்புடைய காளையரான இருவேடர்,

738. நாடியகழல் வயவர்களவர் நாணனும்நெடு வரிவில்
காடனும்எனும் இருவருமலை காவலரொடு கடிதில்
கூடினர்விடு பகழிகளொடு கொலைஞமலிகள் வழுவி
நீடியசரி படர்வதுதரு நீழலின்விரை கேழல்.

தெளிவுரை : நாடிய வீரக்கழல்கள் கட்டிய அந்த நெடிய வில்லையுடைய நாணனும் காடனும் என்னும் அந்த இருவரும் மலைக் காவலரான திண்ணனாரோடு விரைவில் கூடி, எய்கின்ற அம்புகளையும் கொலை செய்யும் நாய்களையும் தப்பி, நீண்ட மலைச் சாரலில் மரங்களின் நிழலில் விரைவுடன் அப்பன்றி தொடரலாயிற்று.

739. குன்றியைநிகர் முன்செறஎரி கொடுவிழிஇடி குரல்நீள்
பன்றியும்அடல் வன்றிறலொடு படர்நெறிநெடி தோடித்
துன்றியதொரு குன்றடிவரை சுலவியநெறி சூழல்
சென்றதனிடை நின்றதுவலி தெருமரமரம் நிரையில்.

தெளிவுரை : குன்றிமணியைப் போன்றனவாய் முன்னே வெளிப்பட்ட எரிகின்ற இயல்புடைய கொடிய கண்களையும், இடி போன்று ஒலிக்கும் குரலையும் உடைய பெரிய பன்றியும், மிக்க வன்மையுடன் ஓடுகின்ற வழியிலே, நீண்ட தொலைவு ஓடிப் பொருந்திய ஒரு குன்றினது அடியில் மலையைச் சுற்றியுள்ள சூழலிலே சென்று, மேலும் செல்வதற்குரிய வன்மை இழந்து, அங்கிருந்த மரக் கூட்டத்திடையே நின்றது.

740. அத்தருவளர் சுழலிடையடை அதனிலையறி பவர்முன்
கைத்தெரிகணை யினிலடுவது கருதலர்விசை கடுகி
மொய்த்தெழுசுடர் விடுசுரிகையை முனைபெறஎதிர் உருவிக்
குத்தினருடல் முறிபடவெறி குலமறவர்கள் தலைவர்.

தெளிவுரை : கொலைச் செயல் கொண்ட வேடர் குலத்தவரின் தலைவரான திண்ணனார், அந்த மரங்கள் வளர்ந்த சூழலில், அப்பன்றியின் இயல்பை முன் அறிந்து, தம் கையில் தேர்ந்து எடுத்து எய்யும் அம்புகளால் கொல்ல எண்ணாமல், வேகத்துடன் அப்பன்றியை நெருங்கி எதிர்த்து நேரே போர் செய்ய எண்ணி (கொல்ல எண்ணி) நெருங்கிய ஒளி வீசும் உடை வாளை எதிரில் உருவி, அதன் உடலானது துண்டாக்கும்படிக் குத்தினார்.

741. வேடர்தங் கரிய செங்கண் வில்லியார் விசையிற் குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன்
காடனே இதன்பின் இன்று காதங்கள் பலவந் தெய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ என்றவர் அடியில் தாழ்ந்தார்.

தெளிவுரை : வேடர்களின் தலைவரான கருமையான மேனியும் சிவந்த கண்ணுமுடைய திண்ணனார் விசையுடன் குத்தியதால் பக்கத்தில் உள்ள இரண்டு துண்டுகளாய் விழுந்த பன்றியை நாணன் பார்த்தான். காடனோ ! இன்று இப்பன்றியின் பின்னே பல காதங்கள் கடந்து வந்து களைப்புக் கொண்டோம். வீரரான இவர் கொன்றார். அச்சோ ! என்று நாணன் கூறினான். பின் அந்த இருவரும் திண்ணனாரை வணங்கினர்.

742. மற்றவர் திண்ண னார்க்கு மொழிகின்றார் வழிவந் தாற்ற
உற்றது பசிவந் தெம்மை உதவிய இதனைக் காய்ச்சிச்
சற்றுநீ அருந்தி யாமும் தின்றுதண் ணீர்கு டித்து
வெற்றிகொள் வேட்டைக் காடு குறுகுவோம் மெல்ல என்றார்.

தெளிவுரை : பின்னும் அவர்கள் திண்ணனாரைப் பார்த்து நீண்ட வழியைக் கடந்து வந்ததால், மிகுந்த பசி வந்து எங்களை அடைந்தது. எனவே, இப்பன்றியைத் தீயில் சுட்டுச் சிறிது நீ உண்டு, நாங்களும் தின்று நீரைக் குடித்து வெற்றியுடைய வேட்டைக் காட்டை நாம் மெல்லப் போய் அடைவோம் ! என்று கூறினர்.

743. என்றவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றுமிவ் வனத்தி லுள்ள தென்றுரை செய்ய நாணன்
நின்றவிப் பெரிய தேக்கின் அப்புறஞ் சென்றால் நீண்ட
குன்றினுக் கயலே ஓடும் குளிர்ந்தபொன் முகலி என்றான்.

தெளிவுரை : என இங்ஙனம் அந்தக் காடனும் நாணனும் சொல்லத், திண்ணனார் அவர்களைப் பார்த்து, இந்தக் காட்டுக்குள்ளே தண்ணீர் எங்கே இருக்கின்றது? என்று வினவினார். வினவ, முன்னால் உள்ள தேக்க மரச் சோலையைக் கடந்து சென்றால், அங்கு நீண்ட குன்றின் பக்கத்தில் குளிர்ந்த பொன்முகலி ஆறு ஓடுகின்றது என்று நாணன் விடை கூறினான்.

744. பொங்கிய சினவில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையிற் கண்டார்
செங்கண்ஏ றுடையார் வைகும் திருமலைச் சாரற் சோலை.

தெளிவுரை : மேலும் மேலும் சினம் எழுகின்ற இயல்புடைய வில் கைக் கொண்ட வேடனான நாணன் இவ்வாறு சொன்னவுடன் திண்ணனார், நாம் அங்கே போகலாம் ! இந்தப் பன்றியை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார். தாமும் அந்தப் பொன்முகலி ஆற்றை நோக்கிச் சென்றார். அரைக் காவதத் தொலைவு சென்ற பின்பு சிவந்த கண்ணையுடைய காளையூர்தியினரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்காளத்தி மலைச் சாரலில் உள்ள சோலையைப் பார்த்தனர்.

745. நாணனே தோன்றும் குன்றில் நண்ணுவேம் என்ன நாணன்
காணநீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக்கா ளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர் இருப்பர்கும் பிடலாம் என்றான்.

தெளிவுரை : நாணனே, முன்னே தோன்றும் மலையில் செல்வோம் ! என்று திண்ணனார் கூறினார், நாணன், நீ அங்கே காணச் சென்றாயாயின், நல்ல காட்சியே காணப்படும் ! வானத்தில் உயர்ந்து நிற்கும் இந்தத் திருக்காளாத்தி மலையின்மீது எழுந்து செம்மையுறக் கோணத்தை இல்லாமற் செய்யும் குடுமித் தேவர் இருப்பார். நாம் வணங்கலாம் என்று மொழிந்தான்.

746. ஆவதென் இதனைக் கண்டிங் கணைதொறும் என்மேல் பாரம்
போவதொன் றுளது போலும் ஆசையும் பொங்கி மேன்மேல்
மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும்
தேவரங் கிருப்ப தெங்கே போகென்றார் திண்ண னார்தாம்.

தெளிவுரை : இவ்வாறு ஆவது ஏன்? இந்த மலையைக் கடந்து இங்கு நெருங்கிச் செல்லுந்தோறும் என்மீது உள்ள பாரம் குறைவதைப் போன்ற அனுபவம் எனக்கு ஏற்படுகின்றது. ஆசையும் பெருகி மேலும் மேலும் பொருந்திய மனமும் வேறொரு விருப்பம் கொண்டதாக விரைவுடன் செல்கின்றது. அங்கே இறைவரின் இருப்பிடம் எங்குள்ளது? போவாயாக ! எனத் திண்ணனார் கூறினார்.

747. உரைசெய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து
கரைவளர் கழையின் முத்தும் காரகில் குறடுஞ் சந்தும்
வரைதரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும்
திரைகள்முன் திரட்டி வைத்த திருமுக லியினைச் சார்ந்தார்.

தெளிவுரை : இங்ஙனம் திண்ணனார் கூறி விரைவுடன் சென்றார். நாணனும் காடனும் உடன் சென்றனர்; கரையில் இரண்டு பக்கத்தும் உயர்ந்து வளரும் மூங்கிலின் முத்துக்களையும், கார் அகில் கட்டைகளையும், சந்தன மரங்களையும், மலையில் விளையும் மற்ற மணிகளையும், பொன்னையும், வைரத்தையும், மணல் குவியல்களில் எவ்விடத்தும் அலைகளால் முன் திரட்டி வைத்த திருமுகலி (பொன் முகலி) ஆற்றினை அடைந்தனர்.

748. ஆங்கதன் கரையின் பாங்கோர் அணிநிழற் கேழ லிட்டு
வாங்குவிற் காடன் தன்னை மரக்கடை தீக்கோல் பண்ணி
ஈங்குநீ நெருப்புக் காண்பாய்  இம்மலை யேறிக் கண்டு
நாங்கள்வந் தணைவோ மென்று நாணனும் தாமும் போந்தார்.

தெளிவுரை : அந்தப் பொன் முகலி ஆற்றின் கரையின் பக்கத்தில் ஒரு அமைதியான மரநிழலில் பன்றியின் உடலை வைத்துவிட்டு, வளைந்த வில்லை ஏந்திய காடனைப் பார்த்து. திண்ணனார், இங்கு நீ தீக்கடை கோலால் தீயை யுண்டாக்குவாயாக ! இந்த மலை மீது ஏறிச் சென்று பார்த்து விட்டு வருவோம் ! என்று கூறி நாணனும் தாமும் சென்றார்.

749. அளிமிடை கரைசூழ் சோலை அலர்கள்கொண் டணைந்த ஆற்றின்
தெளிபுன லிழிந்து சிந்தை தெளிவுறுந் திண்ண னார்தாம்
களிவரு மகிழ்ச்சி பொங்கக்  காளத்தி கண்டு கொண்டு
குளிர்வரு நதியூ டேகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார்.

தெளிவுரை : வண்டுகள் மொய்க்கின்ற கரையைச் சூழ்ந்த சோலைகளின் மலர்களைத் தாங்கிக் கொண்டு அணைந்த பொன்முகலி ஆற்றினது தெளிவான நீரில் இறங்கிச் சிந்தை தெளியும் திண்ணனார் களிப்புக்கு ஏதுவான மகிழ்ச்சி மேன்மேலும் பொங்கத் திருக்காளத்தி மலையைக் கண்டு கொண்டே குளிர்ச்சியுடன் ஓடிவரும் அந்தப் பொன்முகலி ஆற்றின் இடையே சென்று உயர்ந்த மலைச் சாரலைச் சேர்ந்தார்.

750. கதிரவ னுச்சி நண்ணக் கடவுள்மால் வரையி னுச்சி
அதிர்தரு மோசை ஐந்தும் ஆர்கலி முழக்கங் காட்ட
இதுவென்கொல் நாணா வென்றார்க் கிம்மலைப் பெருந்தேன் சூழ்ந்து
மதுமலர் ஈக்கள் மொய்த்து மருங்கெழும் ஒலிகொல் என்றான்.

தெளிவுரை : கதிரவன் வானத்தின் உச்சியை அடையக் கடவுள் தன்மை கொண்ட அந்தப் பெரிய மலையினது உச்சியில் ஒலிக்கின்ற தேவ துந்துபிகள் கடல் ஒலி போல் ஒலிக்க, நாணனே ! இது என்ன? என்று திண்ணனார் கேட்டார். அவர்க்கு, இம்மலையில் பெருந் தேன் கூட்டத்தைச் சூழ்ந்து தேன் பொருந்திய மலர்களிலிருந்து வரும் தேனீக்கள் மொய்த்துப் பின் பக்கங்களில் மீள எழுவதால் உண்டான ஒலி போலும் ! என்று நாணன் சொன்னான்.

751. முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்ப மான
அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி
மன்பெருங் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி
என்புநெக் குருகி உள்ளத் தெழுபெரு வேட்கை யோடும்.

தெளிவுரை : முன்னம் செய்த தவத்தினால் முடிவில்லாத இன்பமான அன்பை எடுத்துக் காட்டிட, அளவில்லாத அவாப் பெருகி நிலையான பெருங் காதலாக பக்தியாகச் சிறக்க, வள்ளன்மை யுடையவரான சிவபெருமானின் மலையை நோக்கி எலும்புகள் உள்ளே உருக, உண்டான பேராசையுடனும்,

752.  நாணனும் அன்பும் முன்பு நளிர்வரை ஏறத் தாமும்
பேணுதத் துவங்க ளென்னும் பெருகுசோ பானம் ஏறி
ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர்
நீணிலை மலையை ஏறி நேர்படச் செல்லும் போதில்.

தெளிவுரை : நாணனும் அன்பும் தமக்கு முன்னே மலை மேல் ஏறிச் செல்ல, திண்ணனாரும் பேணுகின்ற தத்துவங்கள் என்னும் பெருகும் படிகளை ஏறிச், சக்தியே வடிவமான சிவத்தைச் சாரச் செல்கின்ற சிவயோகிகள் போல், எம்பெருமானின் உயர்ந்த மலையை ஏறி நேர்படச் சென்ற போது,

753. திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்த அருள்திரு நோக்க மெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில்அன் புருவம் ஆனார்.

தெளிவுரை : அவ்வாறு சென்ற திண்ணனார், பிறைமதி அணிந்த சடையையுடைய எம்பெருமானைக் காண்பதற்கு முன்னமே, அங்கணரின் கருணைமிக்க அருள் கொண்ட திருப்பார்வை இத்திண்ணனார் மீது பொருந்தியது. பொருந்த, முந்தைய பிறவிகளின் சார்பானது இவரை விட்டு நீங்க, அவற்றினின்று அகன்று நீங்கி விரிந்த ஒளியின் நிழலில் ஒப்பில்லாத அன்பே தம் உருவமாய் ஆனார்.

754. மாகமார் திருக்கா ளத்தி மலையெழு கொழுந்தா யுள்ள
எகநா யகரைக் கண்டார் எழுந்தபே ருவகை அன்பின்
வேகமா னதுமேற் செல்ல மிக்கதோர் விரைவி னோடு
மோகமா யோடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்.

தெளிவுரை : வானத்தை அளாவி நிறைத்தோங்கித் திருக்காளத்தி மலையில் எழுகின்ற கொழுந்தாகியுள்ள ஏக நாயகரான சிவபெருமானைத் திண்ணனார் கண்களால் கண்டார். அக்காட்சியால் எழுந்த பெரிய மகிழ்ச்சியான அன்பின் வேகமானது மேற் செல்ல மிக்க விரைவுடனும், மோகம் கொண்டு ஓடிச் சென்றார்; அப்பெருமானைத் தழுவிக் கொண்டார்; உச்சி மோந்து நின்றார்.

755. நெடிதுபோ துயிர்த்து நின்று நிறைந்தெழு மயிர்க்கால் தோறும்
வடிவெலாம் புளகம் பொங்க மலர்க்கண்ணீர் அருவி பாய
அடியனேற் கிவர்தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று
படியிலாப் பரிவு தானோர் படிவமாம் பரிசு தோன்ற.

தெளிவுரை : நீண்ட நேரம் அவ்வாறு மோந்து நின்று, தன் உடல் மயிர்க்கால் எங்கும் புளங்காங்கிதம் பெருகவும், மலர் போன்ற கண்களினின்று நீர் அருவியைப் போல் பாய்ந்து ஓடவும் அடியவனுக்கு இவர்தான் அகப்பட்டார்; அச்சோ ! என்னே வியப்பு ! என்று தமக்குள் சொல்லி ஒப்பில்லாத அன்பே ஒருவடிவம் கொண்டது என்னும்படி தோன்ற,

756. வெம்மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதி யார்போல்
கைம்மலை கரடி வேங்கை அரிதிரி கானந் தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரு மின்றிக் கெட்டேன்
இம்மலைத் தனியே நீரிங் கிருப்பதே என்று நைந்தார்.

தெளிவுரை : கொடிய வேடர் குலத்தில் வந்த வேட்டுவச் சாதியாரைப் போல், யானை, புலி, கரடி, சிங்கம் முதலிய கொடிய விலங்குகள் திரிகின்ற இக்காட்டில், உமக்குத் துணையாய் உள்ளவர் எவரும் இல்லாமல் நீவிர், மலை மீது இருப்பதோ? ஓ நான் கெட்டேன் ! என்று சொல்லி மனம் வருந்தினர்.

757. கைச்சிலை விழுந்த தோரார் காளையார் மீள இந்தப்
பச்சிலை யோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற
அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான்.

தெளிவுரை : காளை போன்ற தம் கையினின்று வில்லானது விழுந்ததை உணராதவராகி மீண்டும், இப்பச்சிலையுடன் பூவும் பறித்துக் கொணர்ந்து இட்டு, நீரையும் வார்த்து, நல்ல இச்செயலைச் செய்தவர் யாரோ? என்றார். என்று அவர் சொல்லவும், பக்கத்தில் நின்ற வில் ஏந்திய நாணனும், நான் அறிந்துள்ளேன் என்று சொல்லலானான்.

758. வன்திறல் உந்தை யோடு மாவேட்டை யாடிப் பண்டிக்
குன்றிடை வந்தோ மாகக் குளிர்ந்தநீ ரிவரை யாட்டி
ஒன்றிய இலைப்பூச் சூட்டி ஊட்ளறைந்தோர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும் அவன்செய்தா னாகு மென்றான்.

தெளிவுரை : வலிய ஆற்றலையுடைய உன் தந்தையுடன் வேட்டையாடி முன் ஒரு காலத்தில் இந்த மலையிடத்தில் வந்தோம். அப்போது குளிர்ந்த நீரால் இவரை நீராட்டி, ஒன்றிய இலையையும் பூவையும் சூட்டி, உணவும் ஊட்டி (படைத்து) முன்னே சில சொற்களைச் சொல்லி, ஒரு பார்ப்பான் இதனை அன்று செய்தான். எனவே இன்றும் அவனே செய்தவனாக இருத்தல் வேண்டும் என இயம்பினான் நாணன்.

759. உண்ணிறைந் தெழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில்
திண்ணனார் திருக்கா ளத்தி நாயனார்க் கினிய செய்கை
எண்ணிய இவைகொ லாமென் றிதுகடைப் பிடித்துக் கொண்டவ்
அண்ணலைப் பிரிய மாட்டா தளவில் ஆதரவு நீட.

தெளிவுரை : மனத்தில் நிறைந்து எழுந்த தேனும், இடையீடு இல்லாது பெருகிய அளவில்லாத அன்பால் திருக்காளத்தி நாயனாரான குடுமித் தேவருக்கு, இனிய செயல்கள் என்பவை இவைதாம் போலும் ! என்று திண்ணனார் எண்ணினார். அதனையே தாமும் செய்ய மேற்கொண்டார். ஆனால் அண்ணலாரான குடுமித் தேவரைப் பிரிய மாட்டாதவராய் அளவில்லாத அன்பு பெருக,

760. இவர்தமைக் கண்டே னுக்குத் தனியராய் இருந்தார் என்னே
இவர்தமக் கமுது செய்ய இறைச்சியும் இடுவா ரில்லை
இவர்தமைப் பிரிய ஒண்ணா தென்செய்கேன் இனியான் சால
இவர்தமக் கிறைச்சி கொண்டிங் கெய்தவும் வேண்டு மென்று.

தெளிவுரை : இவரைக் கண்ட எனக்கு இவர் இங்குத் தனியாய் இருந்தார். என்னே! இவர் உண்பதற்கு இறைச்சி இடுபவரும் இல்லை ! இவரை நான் பிரிந்து செல்லவும் முடியாது. நான் என்ன செய்வேன்? இனி நான் இவருக்கு வேண்டுமளவு இறைச்சியைக் கொண்டு வந்து சேர்க்கவும் வேண்டும் என நினைத்து,

 761. போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப் போவர்
காதலின் நோக்கி நிற்பர்  கன்றகல் புனிற்றாப் போல்வர்
நாதனே அமுது செய்ய  நல்லமெல் லிறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவே னென்பார்.

தெளிவுரை : சற்றுத் தொலைவு செல்வார்; மீண்டும் வருவார். இறைவரைத் தழுவிக் கொள்வார். மீளவும் பிரிந்து செல்வார். காதலுடன் பார்த்தபடி நிற்பார். கன்றை விட்டுப் பிரிகின்ற ஈன்றணிமையுடைய பசுவைப் போல்வார். இறைவனே ! தாங்கள் அமுது செய்ய இறைச்சியை நானே குற்றம் இல்லாமல் ஆராய்ந்து அமைத்துக் கொண்டு இங்கு வருவேன் எனச் சொல்வார்.

762. ஆர்தம ராக நீரிங் கிருப்பதென் றகல மாட்டேன்
நீர்பசித் திருக்க இங்கு நிற்கவுங் கில்லேன் என்று
சோர்தரு கண்ணீர் வாரப் போய்வரத் துணிந்தா ராகி
வார்சிலை எடுத்துக் கொண்டு மலர்க்கையால் தொழுது போந்தார்.

தெளிவுரை : நீவிர், உமக்கு எவரைத் துணையாய்க் கொண்டு இங்கு இருப்பீர்? என்ற எண்ணத்தால் உம்மைப் பிரிந்து செல்ல மாட்டேன். நீர் பசியுடன் இருக்க இங்கு நிற்கவும் நான் பொறுக்க மாட்டேன் ! எனக் கூறித் தளர்கின்ற கண்ணீர் விடாது பெருகிய, ஒருவாறு சென்று வரத் துணிவு அடைந்தவராய்ப் பெரிய வில்லை எடுத்துக் கொண்டு, தம் மலர் போன்ற கைகளால் குடுமித் தேவரை வணங்கிச் சென்றார்.

763. முன்புநின் றரிதில் நீங்கி மொய்வரை யிழிந்து நாணன்
பின்புவந் தணைய முன்னைப் பிறதுறை வேட்கை நீங்கி
அன்புகொண் டுய்ப்பச் செல்லும் அவர்திரு முகலி ஆற்றின்
பொன்புனை கரையி லேறிப் புதுமலர்க் காவிற் புக்கார்.

தெளிவுரை : குடுமித் தேவரின் திருமுன்பினின்றும் இவ்வாறு அரிதாய் நீங்கி, மலையினின்று கீழே இறங்கி, நாணன் பின்னால் வர, வேற்றுத் துறைகளில் ஆசை நீங்கி, அன்பானது தம்மைப் பிடித்து உந்திச் செலுத்தச் செல்லும் அத்திண்ணனார், திருமுகலி ஆற்றின் பொன் திரண்டு அழகு கொழிக்கும் அந்தப் பக்கக் கரையில் ஏறிப் புதிய பூக்கள் மலர்ந்து நிறைந்த பூஞ்சோலையுள் புகுந்தார்.

764. காடனும் எதிரே சென்று தொழுதுதீக் கடைந்து வைத்தேன்
கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை யெல்லாம்
மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்துநாம் போகைக் கின்று
நீடநீர் தாழ்த்த தென்னோ என்றலும் நின்ற நாணன்.

தெளிவுரை : அங்கு நின்ற காடனும் எதிரே வந்து திண்ணனாரை வணங்கி, தீக் கடைந்து வைத்தேன். கொம்பையுடைய பன்றியின் உறுப்புக்களை எல்லாம் உங்கள் அடையாளப்படி அங்கிருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று நாம் மீண்டு திரும்பிச் செல்வதற்குக் காலம் தாழ்க்கும்படி நீர் தாமதமானதற்கு என்ன காரணம்? என்று வினவினான். பக்கத்தில் நின்ற நாணன்,

765. அங்கிவன் மலையில் தேவர் தம்மைக்கண் டணைத்துக் கொண்டு
வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும் பென்ன நீங்கான்
இங்குமத் தேவர் தின்ன இறைச்சிகொண் டேகப் போந்தான்
நங்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க் கென்றான்.

தெளிவுரை : அங்கு மலையின் உச்சியில், உள்ள குடுமித் தேவரைக் கண்டு இவன் அவரை அணைத்துக் கொண்டு வங்கினைப் பிடித்துக் கொண்ட வலிய உடும்பைப் போல நீங்காதவன் ஆனான். இங்கேயும், அத்தேவர் உண்பதற்கு இறைச்சியைக் கொண்டு போவதற்காகவே வந்தான். இவன் நம் குலத் தன்மையைக் கைவிட்டு விட்டான். அந்தக் குடுமித் தேவர்க்கே இவன் ஆளானான் என்று உரைத்தான்.

766. என்செய்தாய் திண்ணா நீதான் என்னமால் கொண்டாய் எங்கள்
முன்பெரு முதலி யல்லை யோவென முகத்தை நோக்கார்
வன்பெரும் பன்றி தன்னை  எரியினில் வதக்கி மிக்க
இன்புறு தசைகள் வெவ்வே றம்பினால் ஈர்ந்து கொண்டு.

தெளிவுரை : திண்ணனே ! நீ என்ன செயலைச் செய்தாய் ! நீதான் என்ன மயக்கம் கொண்டாய் ! நீ எங்களின் பெருந்தலைவன் அல்லையோ ! என்று காடன் வினவ, திண்ணனார் அவன் முகத்தையும் பார்க்காதவராகி வலிய பெரிய பன்றியை நெருப்பில் இட்டு மென்மையாக வேக வைத்து மிகுந்த இன்பம் உடைய தசைகளை வெவ்வேறாக அம்பினால் அரிந்து எடுத்துக் கொண்டு,

767. கோலினிற் கோத்துக் காய்ச்சிக் கொழுந்தசை பதத்தில் வேவ
வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச்
சாலவும் இனிய எல்லாம் சருகிலை யிணைத்த கல்லை
ஏலவே கோலிக் கூட அதன்மிசை இடுவா ரானார்.

தெளிவுரை : கோலில் கோத்து வதக்கி அந்தக் கொழுப்பையுடைய சதைகள் நல்ல பதத்தில் வெந்திட, அவற்றின் இனிய சுவையை முன் காண்பதற்காக வாயில் வைத்துப் பல்லால் அதுக்கிச் சுவை பார்த்து, அவற்றிலே மிகவும் இனிமையானவற்றையெல்லாம் முன்னமே இலைச் சருகுகளால் கல்லை தைத்து அதில் அவற்றை வைப்பாராயினர்.

768. மருங்குநின் றவர்கள் பின்னும் மயல்மிக முதிர்ந்தான் என்னே
அரும்பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கிவே றுமிழா நின்றான்
பெரும்பசி யுடைய னேனும் பேச்சிலன் எமக்கும் பேறு
தரும்பரி சுணரான் மற்றைத்  தசைபுறத் தெறியா நின்றான்.

தெளிவுரை : பக்கத்தில் நின்றவர்களான நாணனும் காடனும் இவன் மேலும் மயக்கம் கொண்டவன் ஆனான். அரிதாகப் பெற்ற இப்பன்றியின் இறைச்சியை வேக வைத்து மென்று பார்த்து வெளியே உமிழ்கின்றான். தான் மிகுந்த பசியை உடையவனே ஆனாலும் உண்ணவில்லை. பெற்ற இப்பன்றி இறைச்சியை எங்களுக்குத் தரும் இயல்பை அறியாதவன் ஆனான்.

769. தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன்மற் றிதனைத் தீர்க்கல்
ஆவதொன் றறியோந் தேவ ராட்டியை நாக னோடு
மேவிநாங் கொணர்ந்து தீர்க்க வேண்டும்அவ் வேட்டைக் கானில்
ஏவலாட் களையுங் கொண்டு போதுமென் றெண்ணிப் போனார்.

தெளிவுரை : இந்தத் திண்ணன் தெய்வ மயக்கம் கொண்டான். இம்மயக்கத்தைத் தீர்க்கும் வழி ஒன்றையும் நாம் அறியோம். நாம் திரும்பி ஊருக்குச் சென்று தேவராட்டியை நாகனுடன் அழைத்து வந்து, இதனைத் தீர்க்க வேண்டும். அந்த வேட்டைக் காட்டில் உள்ள மற்ற ஏவலாட்களையும் கூட்டிக் கொண்டு ஊருக்குப் போவோம் என்று எண்ணிச் சென்றனர்.

770. கானவர் போன தோரார் கடிதினில் கல்லை யின்கண்
ஊனமு தமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி
மாநதி நன்னீர் தூய வாயினிற் கொண்டு கொய்த
தூநறும் பள்ளித் தாமம் குஞ்சிமேல் துதையக் கொண்டார்.

தெளிவுரை : திண்ணனார் தம்முடன் வந்த காடனும் நாணனும் திரும்பி ஊருக்குச் சென்று விட்டதை உணராதவராய், விரைவில் கல்லையில் ஊன் உணவை வைத்து எடுத்து, குடுமித் தேவரை நீராட்ட எண்ணித் தம் தூயவாயில் பொன்முகலி என்ற பெரிய ஆற்றின் நல்ல நீரைக் கொண்டு, பறித்த தூய்மையான திருப்பள்ளித் தாமங்களைத் தம் தலை மயிரில் நிறையக் கொண்டவராய்,

771. தனுவொரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப்
புனிதமெல் லிறைச்சி நல்ல போனகம் ஒருகை யேந்தி
இனியஎம் பிரானார் சாலப் பசிப்பரென் றிரங்கி யேங்கி
நனிவிரைந் திறைவர் வெற்பை நண்ணினார் திண்ண னார்தாம்.

தெளிவுரை : கொடிய அம்புடன் வில்லை ஒரு கையில் எடுத்துக் கொண்டு கல்லையில் வைத்து எடுத்த தூய மென்மையான இறைச்சியான நல்ல ஊன் உணவை ஒரு கையில் எடுத்து, இனிய எம் இறைவன் மிகவும் பசியுடன் இருப்பார், என்று இரக்கம் கொண்டு வருந்தி, மிகவும் விரைந்து, குடுமித் தேவரின் மலையைச் சேர்ந்தார்.

772. இளைத்தனர் நாய னார்என் றீண்டச்சென் றெய்தி வெற்பின்
முளைத்தெழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில்
வளைத்தபொற் செருப்பால் மாற்றி வாயில்மஞ் சனநீர் தன்னை
விளைத்தஅன் புமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார்.

தெளிவுரை : தம் தலைவரான இறைவர் பசியால் இளைத்தார் என்று விரைவாகப் போய், மலையில் தோன்றிய முதல்வரான அவரைப் பார்த்து, அவரது திருமுடிமீது இருந்த மலர்களைத் தாம் காலில் பூண்ட அழகிய செருப்பால் மாற்றித் திருவாயில் இருந்த திருமஞ்சன நீரைத் தம்மிடம் உண்டான அன்பை உமிழ்வாரைப் போலக் குற்றமற்ற இறைவரின் திருமுடிமீது விட்டார்.

773. தலைமிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங்கா ளத்தி
மலைமிசைத் தம்பி ரானார் முடிமிசை வணங்கிச் சாத்திச்
சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை
இலைமிசைப் படைத்த ஊனின் திருவமு தெதிரே வைத்து.

தெளிவுரை : வில்லின் மீது விளங்கிய செம்மையான கையையுடைய திண்ணனார் தம் தலையின் மீது, குடுமியில் சுமந்து வந்த திருப்பள்ளித் தாமததைக் காளத்தி மலையின் மீது எழுந்தருளிய தம் பெருமானின் திருமுடியின்மீது வணங்கிச் சாத்தி, சேர்த்துத் தைத்த இலைச் சருகான கல்லையில் வைத்திருந்த ஊனான திருவமுதை எதிரில் வைத்து.

774. கொழுவிய தசைக ளெல்லாம் கோலினில் தெரிந்து கோத்தங்
கழலுறு பதத்திற் காய்ச்சிப் பல்லினா லதுக்கி நாவிற்
பழகிய இனிமை பார்த்துப் படைத்தஇவ் விறைச்சி சால
அழகிது நாய னீரே அமுதுசெய் தருளும் என்றார்.

தெளிவுரை : கொழுப்புடைய ஊனையெல்லாம் தெரிந்து அரிந்துஎடுத்துக் கோலில் கோத்துத் தீயில் பதம் உண்டாக வாட்டிய பின், பல்லால் அதுக்கி, பழகிய நாவால் சுவை ஆராய்ந்து, பார்த்துப் படைத்த இந்த இறைச்சி மிகவும் சிறந்தது. தாங்கள் இதனை உண்டருளும் ! என்றார்.

775. அன்னவிம் மொழிகள் சொல்லி அமுதுசெய் வித்த வேடர்
மன்னனார் திருக்கா ளத்தி மலையினார்க் கினிய நல்லூன்
இன்னமும் வேண்டு மென்னும் எழுபெருங் காதல் கண்டு
பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான்.

தெளிவுரை : இத்தகைய சொற்களைச் சொல்லி ஊனமுது ஊட்டிய வேடர் தலைவரின் உள்ளத்தில் திருக்காளத்தி மலை இறைவருக்கு இனிய நல்ல ஊன் இன்னமும் வேண்டும் என்று உண்டாகும் பெரிய ஆசையைக் கண்டு, தன் பல நீண்ட கைகளையும் குவித்துக் கொண்டு கதிரவன் மலையில் மறைந்தான்.

776. அவ்வழி யந்தி மாலை அணைதலும் இரவு சேரும்
வெவ்விலங் குளவென் றஞ்சி மெய்ம்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித் திருக்கையில் சிலையும் தாங்கி
மைவரை யென்ன ஐயர் மருங்குநின் றகலா நின்றார்.

தெளிவுரை : அப்போது அந்திமாலை வரவும், இரவிலே சேரும் கொடிய விலங்குகள் இங்கு உள்ளன என்று அஞ்சி, உண்மையினின்றும் வேறுபடாத சிறந்த அன்பை உள்ளத்தில் கொண்டு, அழகிய கையில் வில்லைத் தாங்கிக் குடுமித் தேவரின் பக்கத்தினின்றும் கரிய மலைபோல் நீங்காமல் திண்ணனார் நின்றார்.

777. சார்வருந் தவங்கள் செய்தும் முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற் கரியார் தம்மை
ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற் கண்டு கொண்டே
நேர்பெற நோக்கி நின்றார் நீளிருள் நீங்க நின்றார்.

தெளிவுரை : சேர்வதற்கரிய தவங்களைச் செய்தும், மேகங்கள் தவழும் மலைகளையும் காடுகளையும் அடைந்தும், முனிவர்களும் தேவர்களும் காண்பதற்கு அரியவரான இறைவனை, ஆசை முன்னே பெருகிட ஆராத அன்பினாலே பார்த்த வண்ணமே நேர் பெற நோக்கி நின்றார்.

778. கழைசொரி தரளக் குன்றில் கதிர்நில வொருபாற் பொங்க
முழையர வுமிழ்ந்த செய்ய மணிவெயில் ஒருபால் மொய்ப்பத்
தழைகதிர்ப் பரிதியோடும சந்திரன் தலைஉ வாவில்
குழையணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும்.

தெளிவுரை : மூங்கில்கள் சொரியும் முத்துக் கூட்டங்களின் கதிரான நிலவு ஒரு பக்கம் பெருகி விரிவதாலும், குகைகளில்வாழும் பாம்புகள் உமிழ்ந்த சிவந்த மாணிக்கங்களின் சிவந்த சுடர் ஒரு பக்கம் நெருங்குதலாலும், அத்தோற்றமானது, சந்திரன், தழைத்த கதிர்களையுடைய கதிரவனுடன் கூடிக் குழை அணி அணிந்த இறைவரின் இந்த மாலையை அமாவாசி நாளில் தரிசிக்க வந்தாற்போல விளங்கியது.

779. விரவுபன் மணிகள் கான்ற விரிசுடர்ப் படலை பொங்க
மரகதம் ஒளிகொள் நீல மணிகளும் இமைக்குஞ் சோதி
பொரவிரு சுடருக் கஞ்சிப் போயின புடைகள் தோறும்
இரவிரு ளொதுங்கி னாலே போன்றுள தெங்கும் எங்கும்.

தெளிவுரை : அங்குப் பல வகை மணிகளும் வெளியிட்ட விரிந்த கதிர்ப் பரப்பு பரவுதலால், மரகதமணிகளும் ஒளியுடைய நீல மணிகளும் வெளியிடும் ஒளியானது, இரண்டு சுடர்களைக் கதிரவன் சந்திரன் என்ற இருவரும் போரிட, அதற்கு அஞ்சி ஒளிந்துபோன பக்கம் எல்லாம் இரவும் இருளும் ஒதுங்கியதைப் போன்ற தோற்றம் காணப்பட்டது.

780. செந்தழல் ஒளியில் பொங்கும் தீபமா மரங்க ளாலும்
மந்திகள் முழையில் வைத்த மணிவிளக் கொளிக ளாலும்
ஐந்தும்ஆ றடக்கி யுள்ளார் அரும்பெருஞ் சோதி யாலும்
எந்தையார் திருக்கா ளத்தி மலையினில் இரவொன் றில்லை.

தெளிவுரை : சிவந்த தீச் சுடரின் ஒளியைப் போல் மிகுந்த ஒளி வீசும் பெரிய சோதி மரங்களின் ஒளியினாலும், குரங்குகள் தம் கற்குகைகளில் தமக்கு விளக்காய் வைத்த முத்து மணிகளின் ஒலிகளாலும், ஐம்புலன்களையும் அடங்கிய முனிவரின் அரிய பெரிய சோதியினாலும் எம்பெருமானான சிவ பெருமானின் திருக்காளத்தி மலையில் இரவு பொருந்துவதில்லை.

781. வருங்கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமம் சென்று
சுருங்கிட அறிந்த புள்ளின சூழ்சிலம் போசை கேட்டுக்
கருங்கட லென்ன நின்ற கண்துயி லாத வீரர்
அரும்பெறல் தம்பி ரானார்க் கமுதுகொண் டணைய வேண்டி.

தெளிவுரை : முன்னிரவு நீங்கி அதனுடன் இருள் பொருந்திய யாமமும் பொய் இரவானது கருங்கியது. அதை அறிந்த தொகுதியான பறவைகள் ஒலிப்பதைக் கேட்டு, கடல் போல் உறக்கம் கொள்ளாமல் இருந்த திண்ணனார், தாம் பெறுவதற்கு அரியவராய்ப் பெற்ற தம் பெருமானுக்கு அமுது தேடிக் கொண்டு வர எண்ணி,

782. ஏறுகாற் பன்றி யோடும் இருங்கலை புனமான் மற்றும்
வேறுவே றினங்கள் வேட்டை வினைத்தொழில் விரகி னாலே
ஊறுசெய் காலம் சிந்தித்  துருமிகத் தெரியாப் போதின்
மாறடு சிலையுங் கொண்டு வள்ளலைத் தொழுது போந்தார்.

தெளிவுரை : செங்குத்தான மலைகளிலும் ஏறுகின்ற காலையுடைய பன்றியுடன், பெரிய கலையும், காட்டு மான்களும், மற்றப் பலவகையான விலங்குகளும் என்ற இவற்றை வேட்டைத் தந்திரச் செயாலால் கொன்று கைப்படுத்துவதற்குரிய காலத்தை நினைத்து, உருவம் மிகத் தெரியாத பொழுதான விடியற் காலையில், பகையை அழிக்க வல்ல வில்லையும் கைக்கொண்டு வள்ளலாரான குடுமித் தேவரை வணங்கிச் சென்றார்.

783. மொய்காட்டும் இருள்வாங்கி முகங்காட்டுந் தேர்இரவி
மெய்காட்டும் அன்புடைய வில்லியார் தனிவேட்டை
எய்காட்டின் மாவளைக்க இட்டகருந் திரையெடுத்துக்
கைகாட்டு வான்போலக் கதிர்காட்டி யெழும்பொழுதில்.

தெளிவுரை : செறிந்த இருளை நீக்கி முகத்தைக் காட்டும் தேரில் வருகின்ற கதிரவன், உண்மையான அன்புடைய திண்ணனார் ஒப்பில்லாத வேட்டையில் எய்கின்ற காட்டு விலங்குகளைக் கொல்வதற்கு வில் வளைக்க, அவற்றை மறைத்து முன்னே இட்ட கரிய திரையை நீக்கி அவற்றைக் கண்டு கொள்க என்று கையினைக் காட்டுபவனைப் போன்று கதிர்களைக் காட்டி மேல் எழுப்பும் சமயத்தில்,

784. எய்தியசீர் ஆகமத்தில் இயம்பியபூ சனைக்கேற்பக்
கொய்தமல ரும்புனலும் முதலான கொண்டணைந்தார்
மைதழையுங் கண்டத்து மலைமருந்தை வழிபாடு
செய்துவருந் தவமுடைய முனிவர்சிவ கோசரியார்.

தெளிவுரை : சிறப்புடைய சிவாகமங்களில் கூறப்பட்ட சிவ பூசை விதிகளுக்கு ஏற்றவாறு கொய்த மலர்களும், எடுத்துக் கொண்ட மஞ்சள் நீரும் முதலில் பூசைக்குரிய பொருள்களைக் கொண்டு, நஞ்சு பொருந்திய கழுத்தினையுடைய அந்த மலையில் எழும் மருந்தான காளத்திநாதரை நியமப் படி வழிபாடு செய்து வருதலான தவம்மிக்க சிவகோசரியார் என்ற முனிவர் வந்து சேர்ந்தார்.

785. வந்துதிரு மலையின்கண் வானவர்நா யகர்மருங்கு
சிந்தைநிய மத்தோடும் செல்கின்றார் திருமுன்பு
வெந்தஇறைச் சியும்எலும்பும் கண்டகல மிதித்தோடி
இந்தஅனு சிதங்கெட்டேன் யார்செய்தார் என்றழிவார்.

தெளிவுரை : திருமலையிலே வந்து தேவரின் தலைவரான இறைவரின் அருகில் சிந்தையினது நியமப்படி செல்பவரான அம்முனிவர் வெந்த இறைச்சியும் எலும்பும் திருமுன்பு கிடப்பதைப் பார்த்துத் தொலைவில் தாண்டி மிதித்து ஓடி, ஒ! கெட்டேன் ! இந்த அநுசிதத்தைச் செய்தவர் யார் என்று வருந்துவாராகி,

786. மேவநேர் வரஅஞ்சா வேடுவரே இதுசெய்தார்
தேவதே வேசனே திருமுன்பே இதுசெய்து
போவதே இவ்வண்ணம் புகுதநீர் திருவுள்ளம்
ஆவதே எனப்பதறி அழுதுவிழுந் தலமந்தார்.

தெளிவுரை : இறைவர் திருமுன்பு நேர் பொருந்த வருவதற்கு அஞ்சாத வேடர்களே இதைச் செய்தார் ஆக வேண்டும். தேவர்களுக்கெல்லாம் தேவனே ! உம் திருமுன்பேயும் இத்தகைய செயலைச் செய்து போவதா? இங்ஙனம் அவர்கள் செய்து விட்டுப் போவதற்குத் தாங்கள் திருவுள்ளம் கொள்வதா?

787. பொருப்பிலெழுஞ் சுடர்க்கொழுந்தின் பூசனையும் தாழ்க்கநான்
இருப்பதினி என்என்றவ் இறைச்சியெலும் புடன்இலையும்
செருப்படியும் நாயடியும் திருவலகால் மாற்றியபின்
விருப்பினொடுந் திருமுகலிப் புனல்மூழ்கி விரைந்தணைந்தார்.

தெளிவுரை : மலையின்மீது தோன்றிய சுடர்க் கொழுந்தான காளத்தியப்பரின் பூசை தாழ்க்கும்படி நான் இங்கே இருப்பதென்ன? எனச் சிவகோசரியார் நினைத்தார்; அந்த எலும்பையும் இறைச்சியையும் அவற்றுடன் கிடந்த இலையையும் செருப்படி நாயடிகளின் சுவடுகளையும் திருவலகினால் (துடைப்பத்தால்) நீக்கினார்; பின்பு, விருப்பத்துடன் திருமுகலி ஆற்றில் நீராடி விரைவுடன் வந்தார்.

788. பழுதுபுகுந் ததுதீரப் பவித்திரமாம் செயல்புரிந்து
தொழுதுபெறு வனகொண்டு தூயபூ சனைதொடங்கி
வழுவில்திரு மஞ்சனமே முதலாக வரும்பூசை
முழுதுமுறை மையின்முடித்து முதல்வனார் கழல்பணிந்தார்.

தெளிவுரை : சிவகோசரியார் பழுது ஏற்பட்டதால் உண்டான தீங்கைத் தீர்ப்பதற்குரிய செயல்களைச் செய்து, வணங்கி, பூசைக்குரியவற்றை அமைத்துக் கொண்டு, நாளும் நாளும் வழக்கப்படி செய்கின்ற தூய்மையான பூசையைத் தொடங்கிக் குற்றம் இல்லாத திருமுழுக்கு ஆட்டுதல் முதலான பூசைச் செயல்கள் எல்லாவற்றையும் ஆகமங்களில் விதித்த முறைப்படி செய்து இறைவன் திருவடியை வணங்கினார்.

789. பணிந்தெழுந்து தனிமுதலாம் பரனென்று பன்முறையால்
துணிந்தமறை மொழியாலே துதிசெய்து சுடர்த்திங்கள்
அணிந்தசடை முடிக்கற்றை அங்கணரை விடைகொண்டு
தணிந்தமனத் திருமுனிவர் தபோவனத்தி னிடைச்சார்ந்தார்.

தெளிவுரை : அடங்கிய மனமுடைய சிவகோசரியாரான முனிவர், இறைவனை வணங்கி எழுந்து, எல்லார்க்கும் சிவபெருமானே முழு முதற் கடவுள் ஆவார் என்று பல வகையாலும் துணிந்து ஓலமிடும் வேத மந்திரங்களால் துதித்து, சுடரையுடைய பிறைச் சந்திரனை அணிந்த சடை முடியையுடைய இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு, தாம் தவம் செய்யும் காட்டிடத்தை அடைந்தார்.

790. இவ்வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனியிப்பால்
மைவண்ணக் கருங்குஞ்சி வனவேடர் பெருமானார்
கைவண்ணச் சிலைவளைத்துக் கான்வேட்டை தனியாடிச்
செய்வண்ணத் திறம்மொழிவேன் தீவினையின் திறம்ஒழிவேன்.

தெளிவுரை : இவ்வாறு சிவகோசரியார் என்ற முனிவர் சென்றார். இனி, காட்டில் மையின் நிறம் உடைய கரிய குடுமியைக் கொண்ட வேடர்க்கெல்லாம் தலைவர் கையால் அழகான வில்லை வளைத்துத் தனியாய் வேட்டையாடிய செயல் திறத்தை உரைப்பேன். அதனால் தீ வினையின் திறத்தைப் போக்கிக் கொள்வேன்.

791. திருமலையின் புறம்போன திண்ணனார் செறிதுறுகல்
பெருமலைக ளிடைச்சரிவில் பெரும்பன்றி புனம்மேய்ந்து
வருவனவுந் துணிபடுத்து மானினங்கள் கானிடைநின்
றொருவழிச்சென் றேறுதுறை ஒளிநின்று கொன்றருளி.

தெளிவுரை : அக்காளத்தி மலையின் புறம்பாகச் சென்ற திண்ணனார் செறிந்த நீண்ட கற்களையுடைய பெரிய மலையின் சரிவில் புனங்களை மேய்ந்து வருகின்ற பெரிய பன்றிகளைக் கொன்றார்; காட்டினின்று ஒரு வழியாகச் சென்று ஏறும் மான் வகைகளை அங்கு அவை தம்மை அறியாத வண்ணம் மறைவிடத்தில் நின்று கொன்றார்.

792. பயில்விளியால் கலையழைத்துப் பாடுபெற ஊடுருவும்
அயில்முகவெங் கணைபோக்கி அடியொற்றி மரையினங்கள்
துயிலிடையிற் கிடையெய்து தொடர்ந்துகட மைகளெய்து
வெயில்படுவெங் கதிர்முதிரத் தனிவேட்டை வினைமுடித்தார்.

தெளிவுரை : கலைமான் போல் கூப்பிடும் பயில் ஓசையால் கூவி, அவை நெருங்கிய போது அவை வருந்துமாறு உடலில் ஊடுருவிச் செல்லும் கூர்மையான முனையையுடைய கொடிய அம்புகளை எய்தார்; அடிச் சுவடுகளால் கண்டு மரைக் கூட்டம் உறங்கும் இடத்தில் அவற்றைக் கொன்றார்; மான்களைக் கொன்றார்; இங்ஙனம் கதிரவனின் வெம்மையான கதிர்கள் முதிரத் தனியாய் வேட்டைத் தொழிலைச் செய்து முடித்தார்.

793. பட்டவன விலங்கெல்லாம் படர்வனத்தில் ஒருசூழல்
இட்டருகு தீக்கடைகோல் இருஞ்சுரிகை தனையுருவி
வெட்டிநறுங் கோல்தேனும் மிகமுறித்துத் தேக்கிலையால்
வட்டமுறு பெருங்கல்லை  மருங்குபுடை படவமைத்தார்.

தெளிவுரை : திண்ணனார் இவ்வாறு வேட்டையில் பட்ட விலங்களையெல்லாம் காட்டில் ஒரு சூழலில் பக்கத்தில் வைத்து, வன்மையான உடைவாளை உருவித் தீக்கடை கோலை வெட்டி எடுத்து, நல்ல கொம்புத் தேனையும் வேண்டிய அளவு எடுத்துத் தேக்கிலையால் வட்டமான கல்லைகளை உள்ளிடம் பெரிய குழிவு அமையுமாறு செய்து கொண்டார்.

794. இந்தனத்தை முறித்தடுக்கி எரிகடையும் அரணியினில்
வெந்தழலைப் பிறப்பித்து மிகவளர்த்து மிருகங்கள்
கொந்திஅயில் அலகம்பாற் குட்டமிட்டுக் கொழுப்பரிந்து
வந்தனகொண் டெழுந்தழலில் வக்குவன வக்குவித்து.

தெளிவுரை : விறகுக் கட்டைகளை ஒடித்து அடுக்கித் தீக்கடை கோலால் தீயையுண்டாக்கி வளர்த்து, விலங்குகளை அம்பினால் துண்டுபடுத்தி, கொழுப்புகளை, பகுதிகளை அரித்து எடுத்து, மூண்டெரியும் தீயில் வதக்க வேண்டியவற்றை வதக்கி,

795. வாயம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்தவற்றின்
ஆயவுறுப் பிறைச்சியெலாம் அரிந்தொருகல் லையிலிட்டுக்
காயநெடுங் கோல்கோத்துக் கனலின்கண் உறக்காய்ச்சித்
தூயதிரு அமுதமைக்ககச் சுவைகாணல் உறுகின்றார்.

தெளிவுரை : கூரிய அம்பால் அழிப்பதும் வகுப்பதும் ஆகிய செயல்களைச் செய்து, விலங்குகளில் பல உறுப்புகளின் ஊனையெல்லாம் அரிந்து எடுத்து, வேறு ஒரு கல்லையில் வைத்துத் தீயில் காயுமாறு நீண்ட கோலிலே கோத்துத் தீயில் காய்ச்சி, தூய திருவமுதாக அமைத்தற்காகச் சுவைத்துச் சுவை காண்பவராகி,

796. எண்ணிறந்த கடவுளருக் கிடுமுணவு கொண்டூட்டும்
வண்ணஎரி வாயின்கண் வைத்ததெனக் காளத்தி
அண்ணலார்க் காம்பரிசு தாஞ்சோதித் தமைப்பார்போல்
திண்ணனார் திருவாயில் அமைத்தார்ஊன் திருவமுது.

தெளிவுரை : எண்ணில்லாத தேவர்களுக்கு இடும் உணவைக் கொண்டு சென்று ஊட்டும் சிவந்த தீக்கடவுளின் வாயில் வைத்ததைப் போல் காளத்திநாதருக்கு ஆகின்ற தன்மையைத் தாம் சோதித்து அமைப்பதற்காகத் திண்ணனார் தம் வாயில் ஊனான உணவை இட்டார்.

797. நல்லபத முறவெந்து நாவின்கண் இடுமிறைச்சி
கல்லையினிற் படைத்துத்தேன் பிழிந்துகலந் ததுகொண்டு
வல்விரைந்து திருப்பள்ளித் தாமமுந்தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்புபோல் உடன்கொண்டு வந்தணைந்தார்.

தெளிவுரை : நன்கு பதம் பொருந்த வெந்த பின்பு நாவில் இட்டுச் சுவை கண்ட ஊன் பகுதிகளைக் கல்லையில் வைத்துத் தேனடையைப் பிழிந்து கலந்த பின்பு அதை அமுதமாக அமைத்துக் கொண்டும், மிகவும் விரைவாய் முன் நாள் போல் திருப்பள்ளித் தாமமும் தூய திருமஞ்சன நீரும் எடுத்துக் கொண்டு திண்ணனார் விரைவாக வந்து நெருங்கினார்.

798. வந்துதிருக் காளத்தி மலையேறி வனசரர்கள்
தந்தலைவ னார்இமையோர் தலைவனார் தமையெய்தி
அந்தணனார் பூசையினை முன்புபோ லகற்றியபின்
முந்தைமுறை தம்முடைய பூசனையின் செயல்முடிப்பார்.

தெளிவுரை : வந்து திருக்காளத்தி மலையின் மீது ஏறி வேடர் தலைவரான திண்ணனார், தேவர் தலைவரான சிவபெருமானை அடைந்து, சிவகோசரியாரின் பூசைப் பொருள்களை யெல்லாம் முன் நாள்போல் அகற்றிய பின்பு, முன்பு செய்த முறைபோலவே தம் பூசைச் செயலை முடிப்பவராய்,

799. ஊனமுது கல்லையுடன் வைத்திதுமுன் னையின்நன்றால்
ஏனமொடு மான்கலைகள் மரைகடமை யிவையிற்றில்
ஆனவுறுப் பிறைச்சியமு தடியேனுஞ் சுவைகண்டேன்
தேனுமுடன் கலந்ததிது தித்திக்கும் எனமொழிந்தார்.

தெளிவுரை : ஊனான அமுதத்தை இறைவரின் முன்னம் வைத்து, இது நேற்றுக் கொணர்ந்ததைவிட நல்லது. பன்றி இறைச்சியுடன் மான், கலை கடமை என்ற இவ்வகைகளில் ஏற்ற இறைச்சி உணவாக்கப்பட்டது. நானும் இவற்றின் சுவை கண்டேன். தேனுடன் இது கலக்கப்பெற்றது. இது தித்திக்கும் என்று கூறினார்.

800. இப்பரிசு திருவமுது செய்வித்துத் தம்முடைய
ஒப்பரிய பூசனைசெய் தந்நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல்வந் தெழும்அன்பால் காளத்தி
அப்பர்எதிர் அல்லுறங்கார் பகல்வேட்டை யாடுவார்.

தெளிவுரை : திண்ணனார் இவ்வாறு குடுமித் தேவருக்கு உணவு படைத்துத் தம் ஒப்பில்லாத பூசையைச் செய்து அவ்வழியில் ஒழுகுவார் ஆனார். எப்போதும், மேலும் மேலும் வந்து எழுகின்ற காதலால் இரவில் இறைவரின் திரு முன்பு உறங்க மாட்டார். பகலில் அவர் வேட்டையாடுவார்.

801. மாமுனிவர் நாள்தோறும் வந்தணைந்து வனவேந்தர்
தாமுயலும் பூசனைக்குச் சாலமிகத் தளர்வெய்தித்
தீமையென அதுநீக்கிச் செப்பியஆ கமவிதியால்
ஆமுறையில் அருச்சனைசெய் தந்நெறியில் ஒழுகுவரால்.

தெளிவுரை : பெருமுனிவரான சிவகோசரியார் நாள்தோறும் அணைந்து வன அரசரான திண்ணனார் செய்கின்ற பூசைக்கு மிக மிகத் தளர்ச்சி அடைந்து, அதைத் தீமை எனக் கொண்டு ஆகமங்களில் சொன்னபடி விலக்கி, செய்ய வேண்டிய முறைப்படி பூசை செய்து, அந்நெறியில் ஒழுகி வரலானார்.

802.  நாணனொடு காடனும்போய் நாகனுக்குச் சொல்லியபின்
ஊணும்உறக் கமுமின்றி அணங்குறைவா ளையுங்கொண்டு
பேணுமக னார்தம்பால் வந்தெல்லாம் பேதித்துக்
காணுநெறி தங்கள்குறி வாராமற் கைவிட்டார்.

தெளிவுரை : நாணனும் காடனும் சென்று, நிகழ்ந்தவற்றை நாகனுக்குக் கூறினர். பின் உணவும் உறக்கமும் இல்லாமல், தேவராட்டியையும் உடன் அழைத்துக்கொண்டு அவர்கள் வந்தனர். தம்மையே மறந்து இறைவனையே வணங்குகின்ற மகனான திண்ணனாரிடம் தாம் அறிந்தவாறெல்லாம் அவரது மனத்தை மாற்றும் முறையிலே தாங்கள் எண்ணிய குறியின் வசத்தில் அவர் வாராத காரணத்தால் அவரைக் கைவிட்டு அகன்று சென்றனர்.

803. முன்புதிருக் காளத்தி முதல்வனார் அருள்நோக்கால்
இன்புறுவே தகத்திரும்பு பொன்னானாற் போல்யாக்கைத்
தன்பரிசும் வினையிரண்டும் சாருமலம் மூன்றுமற
அன்புபிழம் பாய்த்திரிவார் அவர்கருத்தின் அளவினரோ.

தெளிவுரை : முன்னம் திருக்காளத்திநாதரின் அருள் நோக்கம் எய்தியதால் இன்பம் அடைகின்ற வேதியினால் இரும்பு பொன் ஆனாற்போல யாக்கையின் தன்மையும் வினைகள் இரண்டும் சாரும் மலம் மூன்றும் அறுதலால், முன்னைய பசு போத உணர்வு மாறிச் சிவபோத வடிவமாகத் திகழ்பவரான திண்ணனார் தம் தந்தை நாகனும் தேவராட்டியும் முதலான வன வேடர்களின் கருத்தளவில் அமைவாரோ !

804. அந்நிலையில் அன்பனார் அறிந்தநெறி பூசிப்ப
மன்னியஆ கமப்படியால் மாமுனிவர் அருச்சித்திங்
கென்னுடைய நாயகனே இதுசெய்தார் தமைக்காணேன்
உன்னுடைய திருவருளால் ஒழித்தருள வேண்டுமென.

தெளிவுரை : அந்நிலையில் குடுமித் தேவரின் அன்பரான திண்ணனார் தாம் அறிந்த வழியில் இறைவரைப் பூசிக்க, நிலைபெற்ற ஆகம விதிப்படி மாமுனிவரான சிவகோசரியார் அருச்சனை செய்து, எம் நாயகரே! இவ்விடத்து இத்தகைய செயல்களைச் செய்தவரை நான் காணேன். உம் திருவருளால் இதனை ஒழித்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்து கொண்டார்.

805. அன்றிரவு கனவின்கண் அருள்முனிவர் தம்பாலே
மின்திகழுஞ் சடைமவுலி வேதியர்தா மெழுந்தருளி
வன்திறல்வே டுவன்என்று மற்றவனை நீநினையேல்
நன்றவன்தன் செயல்தன்னை நாமுரைப்பக் கேள்என்று.

தெளிவுரை : அவ்வாறு அவர் வேண்டிக் கொள்ளவும், அன்றிரவு அருள் முனிவரிடத்தில் கனவில் மின் போல் விளங்கும் சடை முடியுடைய வேதியரான சிவபெருமான் எழுந்தருளி, நீ அவனை வலிய திறல் உடைய வேடன் என்று எண்ணாதே ! அவனது நல்ல செயலை நான் சொல்லக் கேட்பாயாக ! எனத் தொடங்கி,

806. அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும்
அவனுடைய நிலைஇவ்வா றறிநீயென் றருள்செய்வார்.

தெளிவுரை : அவனுடைய வடிவம் முழுவதும் நம்மிடம் வைத்த அன்பு மயமேயாகும் எனவும், அவனது அறிவு முழுவதும் நம்மை அறியும் அறிவேயாகும் எனவும், அவனுடைய செயல்கள் எவையேயாயினும் அவையெல்லாம் நமக்கு இனியனவாகும் எனவும் சொல்லி, அவனது நிலைமை இத்தகைய இயல்பு கொண்டது என்று நீ அறிவாயாக ! என்று அருள் செய்பவராக,

807. உனக்கவன்தன் செயல்காட்ட நாளைநீ யொளித்திருந்தால்
எனக்கவன்தன் பரிவிருக்கும் பரிசெல்லாம் காண்கின்றாய்
மனக்கவலை ஒழிகென்று மறைமுனிவர்க் கருள்செய்து
புனற்சடிலத் திருமுடியார் எழுந்தருளிப் போயினார்.

தெளிவுரை : நாளைக்கு நீ நம் பக்கத்தில் அவன் காணாத வண்ணம் மறைந்திருந்தாயானால். அவனுடைய செயல்களை நாம் உமக்குக் காட்ட, அவற்றினின்று என்னிடம் அவனுடைய அன்பு இருக்கும் விதத்தையெல்லாம் காண்பாய் ! உன் உள்ளக் கவலையை ஒழிப்பாயாக ! என்று பெருமுனிவரான சிவகோசரியாருக்கு அருள் செய்து, கங்கையைச் சூடிய சிவபெருமான் மறைந்தருளினார்.

808. கனவுநிலை நீங்கியபின் விழித்துணர்ந்து கங்குலிடைப்
புனைதவத்து மாமுனிவர் புலர்வளவும் கண்துயிலார்
மனமுறும்அற் புதமாகி வரும்பயமும் உடனாகித்
துனைபுரவித் தனித்தேர்மேல் தோன்றுவான் கதிர்தோன்ற.

தெளிவுரை : செய்கின்ற தவத்தையுடைய சிவகோசரியார் கனவு நிலையினின்று நீங்கி, நனவு நிலையை அடைந்து, கனவில் கண்ட பொருளை யுணர்ந்து, பொழுது விடியும் வரை உறங்காதவராய், உள்ளத்தில் மிக்க அற்புதமும், அது முடுக்கியதனால் உண்டாகும் பயமும் உடன் உடையவராய் இருந்தார். பின் விரைவுடைய குதிரை பூட்டப்பட்ட தனித் தேரின்மீது தோன்றும் கதிரவனின் கதிர்கள் தோன்றிய அளவிலே,

809. முன்னைநாள் போல்வந்து திருமுகலிப் புனல்மூழ்கிப்
பன்முறையும் தம்பிரான் அருள்செய்த படிநினைந்து
மன்னுதிருக் காளத்தி மலையேறி முன்புபோல்
பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார்.

தெளிவுரை : முன் நாள் போல் வந்து, திருமுகலி ஆற்று நீரில் முழுகித் தமக்குப் பெருமானான காளத்திநாதர் கனவிலே அருள் செய்த படியைப் பலமுறையும் எண்ணிய வண்ணமே, நிலைபெற்ற திருக்காளத்தி மலையில் ஏறி, முன் போல் அந்த இறைவரை வழிபாடு செய்து பின்பக்கத்தில் ஒளிந்திருந்தார்.

810. கருமுகி லென்ன நின்ற கண்படா வில்லி யார்தாம்
வருமுறை ஆறாம் நாளில் வரும்இர வொழிந்த காலை
அருமறை முனிவ னார்வந் தணைவதன் முன்னம் போகித்
தருமுறை முன்பு போலத் தனிப்பெரு வேட்டை யாடி.

தெளிவுரை : கரிய மேகம் போல் நின்று கொண்டிருந்து இரவு முழுதும் உறங்காமல் வில்லை கையில் ஏந்திய வீரரான திண்ணனார், ஆறாம் நாள் விடியற்காலையில் அரிய மறையில் வல்ல சிவகோசரியார் திருக்காளத்தி மலைக்குப் பூசை செய்ய வருவதற்கு முன்னம், அம்மலையை விட்டு நீங்கிப் பெரிய வேட்டையாடி,

811. மாறில்ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலுஞ் சென்னி
ஏறுநாண் மலரும் வெவ்வே றியல்பினில் அமைத்துக் கொண்டு
தேறுவார்க் கமுத மான செல்வனார் திருக்கா ளத்தி
ஆறுசேர் சடையார் தம்மை அணுகவந் தணையா நின்றார்.

தெளிவுரை : ஒப்பில்லாத இறைச்சியையும் தூய திருமஞ்சன நீரையும் திருமுடியில் அணியத் தக்க அன்று மலர்ந்த மலர்களையும் வெவ்வேறான தன்மையில் எடுத்துக் கொண்டு, தம் இயல்புகளை நன்றாகத் தெளிந்து உணரும் அன்பர்களுக்கு அமுதம் போன்ற சிவபெருமானை அடையத் திண்ணனார் விரைந்து வரலானார்.

812. இத்தனை பொழுதுந் தாழ்த்தேன் எனவிரைந் தேகு வார்முன்
மொய்த்தபல் சகுன மெல்லாம் முறைமுறை தீங்கு செய்ய
இத்தகு தீய புட்கள் ஈண்டமுன் உதிரங் காட்டும்
அத்தனுக் கென்கொல் கெட்டேன் அடுத்ததென் றணையும் போதில்.

தெளிவுரை : இவ்வளவு நேரமும் தாழ்ந்து விட்டேன் என நினைத்து விரைவாகச் செல்லும் திண்ணனாரின் முன்பு கூடிய சகுனங்கள் பலவும் தீமையுண்டு என்பதை அறிவித்தன. அதனால், தீமை காட்டும் இத்தகைய புன் சகுனங்கள் முன்னே நெருங்கி இரத்தக் குறியைக் காட்டுகின்றன. அவற்றால் என் தலைவரான சிவபெருமானுக்கு நேர்ந்தது யாதோ ! என்று உள்ளம் தடுமாற்றம் கொண்டவராக இறைவரை நெருங்கிச் சென்றபோது,

813. அண்ணலார் திருக்கா ளத்தி அடிகளார் முனிவ னார்க்குத்
திண்ணனார் பரிவு காட்டத் திருநய னத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத் தேஅவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல்விரைந் தோடி வந்தார்.

தெளிவுரை : பெருமை பொருந்திய குடுமித்தேவர் சிவகோசரியாருக்குத் திண்ணனாரின் அன்பின் இயல்பைக் காட்டத் தம் திருக்கண்களுள் ஒன்றில் துண் என்று குருதி பாய்ந்து, வெளியே ஓடி வழியும் படியான தோற்றத்துடன் இருந்தார். அழகிய கொடிய வில்லையுடைய திண்ணனார் அதைத் தொலைவில் கண்டு மிகவும் விரைவாக ஓடி வந்தார்.

814. வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக்
கொந்தலர் பள்ளித் தாமங் குஞ்சிநின் றலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்.

தெளிவுரை : இங்ஙனம் வந்த பசுமையான மாலை சூடிய மார்புடைய திண்ணனார், இறைவரது திருக்கண்ணினின்று வடிந்த குருதியைக் கண்டார்; மயக்கம் அடைந்தார்; வாயில் கொண்ட நல்ல திருமஞ்சன நீர் சிதறி விழவும், கையினின்றும் ஊனமுதம் வில்லுடனே சிதறி விழவும், கொத்தாக விரியும் திருப் பள்ளித் தாமம் குடுமியினின்று குலைந்து அலைந்து தளரவும் இப்படி உள்ளம் குலைந்து பதைத்து விழுந்தார்.

815. விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வ
தொழிந்திடக் காணார் செய்வ தறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்துபோய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னா
எழுந்தனர் திசைக ளெங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும்.

தெளிவுரை : விழுந்த திண்ணனார் எழுந்து சென்று இறைவரது கண்ணினின்று குருதியைத் துடைத்தார். எனினும் குருதி பாய்வது நிற்கக் காணவில்லை. செய்வது இன்னது ! என்று அறியவில்லை பெருமூச்சு விட்டுச் செயலிழந்து போய் விழுந்தார்; பின்பு உள்ளம் தேறுதல் அடைந்து இதைச் செய்தவர் யார்? என்று நினைத்து எழுந்தார்; எல்லாத் திக்குகளையும் பார்த்தார்; தம் வில்லையும் கையில் எடுத்தார்.

816. வாளியுந் தெரிந்து கொண்டிம் மலையிடை எனக்கு மாறா
மீளிவெம் மறவர் செய்தார் உளர்கொலோ விலங்கின் சாதி
ஆளிமுன் னாகி யுள்ள விளைத்தவோ அறியே னென்று
நீளிருங் குன்றச் சாரல் நெடிதிடை நேடிச் சென்றார்.

தெளிவுரை : தக்க அம்புகளைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு, இந்த மலையில் எனக்கு மாறாக வன்மையுடைய கொடிய வேடர்கள் செய்தார்களோ? சிங்கம் முதலான விலங்குகள் செய்தனவோ? அறியேன் ! என நினைத்து, நீண்ட மலையின் சாரலில் நெடுந்தொலைவு தேடிச் சென்றார்.

817. வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கும் எங்கும்
நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத் தோடு நிறைமலர்ப் பாதம் பற்றி
மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார.

தெளிவுரை : அவ்வாறு தேடிச் சென்ற திண்ணனார், வேடர்களைக் காணார்; கொடிய விலங்குகளைப் பக்கத்தில் எங்குத் தேடியும் காணார்; திரும்பவும் தம் இறைவனிடம் வந்து பெருந் துக்கத்துடன் நிறைந்த மலர்ப்பாதங்களைப் பிடித்துப் பக்கம் பொருந்தக் கட்டிக் கொண்டு கண்ணீர் வடியக் கதறினார்.

818. பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க் கடுத்த தென்னோ
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க் கடுத்த தென்னோ
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க் கடுத்த தென்னோ
ஆவதொன் றறிகி லேன்யான் என்செய்கேன் என்று பின்னும்.

தெளிவுரை : பாவியேன் இறைவர்க்கு நான் பார்த்தபடி நிகழ்ந்தது எதுவோ? உயிரினும் இனிய எங்கள் இறைவனுக்கு இது உண்டானது எதுவோ? செய்யக் கூடிய ஒன்றையும் நான் அறியேன் ? என்று கதறி மீளவும் எண்ணிப் பார்ப்பவராய்,

819. என்செய்தால் தீரு மோதான் எம்பிரான் திறத்துத் தீங்கு
முன்செய்தார் தம்மைக் காணேன் மொய்கழல் வேட ரென்றும்
மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்குமெய் மருந்து தேடிப்
பொன்செய்தாழ் வரையிற் கொண்டு வருவன்நான் என்று போனார்.

தெளிவுரை : என்ன செய்தால் இது தீருமோ? எம் இறைவனிடத்து இத்தீங்கு முன் செய்தவரைக் காணேன், நெருங்கிய வீரக்கழலை அணிந்த வீரர்களின் ஒளியுடைய கொடிய அம்பால் உண்டான புண்களை எப்போதும் தீர்க்கும் நிச்சயமான மருந்துகளைப் பொன் திகழும் தாழ்வரை இடத்திருந்து தேடிக் கொண்டு வருவேன் ! என்று கூறிச் சென்றார்.

820.  நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்க ளெங்கும்
இனத்திடைப் பிரிந்த செங்கண் ஏறென வெருக்கொண் டெய்திப்
புனத்திடைப் பறித்துக் கொண்டு பூதநா யகன்பால் வைத்த
மனத்தினுங் கடிது வந்து மருந்துகள் பிழிந்து வார்த்தார்.

தெளிவுரை : திண்ணனார் மருந்து மூலிகைகளும் அவை இருக்குமிடங்களையும் எண்ணிப் பார்த்தவராய் வெவ்வேறாக நெருங்கிய காடுகளில் எங்கும், தன் இனத்திடமிருந்து பிரிந்த சிவந்த கண்ணையுடைய காளையைப் போல் அச்சத்துடன் சென்று, காடுகளில் மருந்து மூலிகைகளைப் பறித்துக் கொண்டு, பூதங்களின் தலைவரான காளத்தியப்பரிடம் தாம் கொண்ட மனத்தின் விரைவைவிட வேகமாக வந்து அந்த மருந்துகளைப் பிழிந்து அவரது கண்ணில் வார்த்தார்.

821. மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்கா ளத்திக்
கொற்றவர் கண்ணிற் புண்ணீர் குறைபடா திழியக் கண்டே
இற்றையின் நிலைமைக் கென்னோ இனிச்செய லென்று பார்ப்பார்
உற்றநோய் தீர்ப்ப தூனுக் கூனெனும் உரைமுன் கண்டார்.

தெளிவுரை : இங்ஙனம் பிழிந்து வார்த்த மருந்தினால் குடுமித் தேவரின் கண்ணின் புண்ணினின்று வரும் இரத்தம் குறைவின்றி முன் போன்றே வழிந்தது. அதைத் திண்ணனார் கண்டு இந்நாளின் நிலைமைக்குத் தீர்வாக இனிச்செய்வது என்னோ? என்று ஆராய்பவர் ஊனே ஊனுக்கு உற்ற நோய் நீக்குவது என்ற பழமொழி தம் நினைவில் முன்வர உணர்ந்தார்.

822. இதற்கினி என்கண் அம்பால் இடந்தப்பின் எந்தை யார்கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கு மென்று
மதர்த்தெழும் உள்ளத் தோடு மகிழ்ந்துமுன் னிருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணில் அப்ப.

தெளிவுரை : என் கண்ணை அம்பால் பெயர்த்து எடுத்து இறைவரின் திருக்கண்ணில் அப்பினால் எம்பெருமானுக்கு நேர்ந்த இத்தீங்கிற்கு அதுவே மருந்துமாகிப் புண்ணினின்று வழியும் இரத்தம் நிற்கவும் கூடும் என்று நினைத்துக்களித்த உள்ளத்தவராய் மிக்க மகிழ்ச்சியுடன் இறைவரின் திருமுன்பு நின்று கொண்டு தம் கண்ணைத் தம் அம்பால் அடியுடன் பெயர்த்தெடுத்து இறைவனின் திருக்கண்ணில் அப்பிய அளவில்,

823.  நின்றசெங் குருதி கண்டார் நிலத்தினின் றேறப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்து மாடி
நன்றுநான் செய்த இந்த மதியென நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பி னாலே உன்மத்தர் போல மிக்கார்.

தெளிவுரை : இறைவரின் கண்ணினின்று வடிந்த இரத்தம் நிற்பதைக் கண்டார். அந்தப் பெரு மகிழ்ச்சியால் நிலத்தினின்று உயரப் பாய்ந்து குதித்தார். மலை போன்று வளர்ந்த தம் தோள்களைத் தட்டினார். கூத்தும் ஆடி நான் செய்த இந்த அறிவுடைய செயல் நன்று ! எனச் சிரிப்புத் தோன்ற மிக்க மகிழ்ச்சியாய் உன்மத்தர் போல் ஆனார்.

824. வலத்திருக் கண்ணில் தங்கண் அப்பிய வள்ள லார்தம்
நலத்தினைப் பின்னும் காட்ட  நாயனார் மற்றைக் கண்ணில்
உலப்பில்செங் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்
குலப்பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்.

தெளிவுரை : தலைவரான இறைவர்தம் வலத் திருக் கண்ணில், தம் வலக் கண்ணைத் தோண்டி அப்பிய வள்ளலாரான கண்ணப்ப நாயனாரது சிறப்பை மீண்டும் சிவகோசரியாருக்கு எடுத்துக் காட்ட, தம் மற்றக் கண்ணான இடக் கண்ணில் இடைவிடாது இரத்தம் பாய்ந்து சுழியுமாறு செய்தார். இந்த உலகத்தில் வேடர் குலம் செய்த பெரிய தவம் காரணமாக வந்து தோன்றிய கொள்கையினால் தேவரை விட மேலானவரான திண்ணனார்,

825. கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தி யார்கண் ணொன்று
புண்தரு குருதி நிற்க மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டும்மற் றிதனுக் கஞ்சேன் மருந்துகைக் கண்டே னின்னும்
உண்டொரு கண்அக் கண்ணை இடந்தப்பி யொழிப்பே னென்று.

தெளிவுரை : அதைக் கண்டு ஓ ! நான் கெட்டேன் எம் காளத்தியப்பரின் கண்களில் ஒன்றில் வெளிப்பட்ட குருதி வராமல் நின்று விட மற்ற கண்ணில் குருதி பொங்கி வடிகின்றது. இந்நோய் தீர்க்கும் மருந்தினை நான், என் அனுபத்தில் கண்டேன். வரத்தகாத இது வந்ததற்காக நான் அஞ்சமாட்டேன். எனக்கு இன்னும் ஒரு கண் உள்ளது. அந்தக் கண்ணையும் தோண்டி இறைவர் கண்ணில் அப்பி அந்நோயைத் தீர்ப்பேன் ! எனத் துணிந்து,

826. கண்ணுதல் கண்ணில் தங்கண் இடந்தப்பிற் காணும் நேர்பா
டெண்ணுவார் தம்பி ரான்தன் திருக்கண்ணில் இடக்கா லூன்றி
உண்ணிறை காத லோடும் ஒருதனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணி லூன்றத் தரித்திலர் தேவ தேவர்.

தெளிவுரை : தம் இடக்கண்ணைத் தோண்டி நெற்றியில் கண்ணையுடைய தேவரின் கண்ணில் அப்பினால் உண்டாகும் இடையூற்றை எண்ணியவராய்த் திண்ணனார். தம் பெருமானின் அத்திருக்கண்ணிலே அடையாளமாகத் தம் இடக் காலை வைத்து ஊன்றிக் கொண்டு உள்ளத்தில் நிறைந்து எழுகின்ற விருப்பத்துடனே ஒப்பில்லாத அம்பு எடுத்து அதனைத் தம் கண்ணில் ஊன்றவே தேவர்களுக்கெல்லாம் தேவரான இறைவர் மனம் பொறாதவர் ஆனார்.

827. செங்கண்வெள் விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக்கா ளத்தி அற்புதர் திருக்கை யன்பர்
தங்கண்முன் னிடக்குங் கையைத் தடுக்கமூன் றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக் கண்ணப்ப நிற்க வென்றே.

தெளிவுரை : சிவந்த கண்ணையுடைய வெண்மையான காளையை ஊர்தியாக உடையவரும், திண்ணனாரை ஆட் கொண்டவருமான திருக்காளத்தி நாதரின் அற்புதத் திருக்கை இலிங்கத்தினின்றும் தோன்றி, அம்பால் கண்ணைத் தோண்ட முயன்ற அவரது கையைத் தடுத்திட, பாம்பைக் கங்கணமாகக் கொண்ட இறைவரின் அமுதமான திருவாக்கு மூன்று முறை கண்ணப்ப நிற்க என்றது.

828. கானவர் பெருமா னார்தங் கண்ணிடந் தப்பும் போதும்
ஊனமு துகந்த ஐயர் உற்றுமுன் பிடிக்கும் போதும்
ஞானமா முனிவர் கண்டார் நான்முகன் முதலா யுள்ள
வானவர் வளர்பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப.

தெளிவுரை : வேடர் தலைவரான கண்ணப்பர், தம் கண்ணைத் தோண்டி இறைவரின் கண்ணில் அப்பிய காலத்தும், அவர் ஊட்டிய ஊனமுதை உவந்து கொண்டு அருளிய குடுமித்தேவர் அவர் மற்ற இடக் கண்ணைத் தோண்ட முயலும் கையினைத் தோண்டுவதற்கு முன்பாகவே பொருந்திப் பிடித்த காலத்தும், ஞானப் பெருமுனிவரான சிவகோசரியார் கண்டார். வேதங்கள் ஒலிக்க, நான்முகன் முதலிய தேவர்கள் கற்பகப் புது மலர் மழை பொழிந்தனர்.

829. பேறினி யிதன்மேல் உண்டோ பிரான்திருக் கண்ணில் வந்த
ஊறுகண் டஞ்சித் தங்கண் இடந்தப்ப உதவுங் கையை
ஏறுயர்த் தவர் தங் கையால் பிடித்துக்கொண் டென்வ லத்தின்
மாறிலாய் நிற்க வென்று மன்னுபே ரருள்பு ரிந்தார்.

தெளிவுரை : தம் இறைவனின் திருக்கண்ணில் ஏற்பட்ட இடையூற்றைக் கண்டு அஞ்சித் தம் இடக்கண்ணைத் தோண்டி அப்புதற்கு உதவிய கண்ணப்பரின் கையை, காளைக் கொடியை உயர்த்திய காளத்தியப்பர் தம் கையால் பிடித்துக் கொண்டு, ஒப்பில்லாதவனே ! என் வலப்பக்கத்தில் நீ இருப்பாயாக ! என்று நிலை பெற்ற திருவருளைச் செய்தார். ஆதலால் இனி இதன் மேல் பெறத்தக்க பேறு உண்டோ?

830. மங்குல்வாழ் திருக்கா ளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர்
தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர்தாள் தலைமேற் கொண்டே
கங்கைவாழ் சடையார் வாழும் கடவூரிற் கலய னாராம்
பொங்கிய புகழின் மிக்கார் திருத்தொண்டு புகல லுற்றேன்.

தெளிவுரை : முகில் வாழ்வதற்கு இடமான திருக்காளத்தி மலையில் எழுந்தருளிய இறைவரின் திருக்கண்ணில் கண்ட புண்ணில் வரும் குருதியைத் தம் கண்ணினால் போக்கும் பேறு பெற்ற தலைவரான கண்ணப்ப நாயனார் திருவடிகளை எம் தலையில் சூடி, கங்கை தங்கிய திரு முடியையுடைய சிவபெருமான் எழுந்தருளிய திருக்கடவூரில் கலயனாராகிய, மிக்க புகழால் மேம்பட்டவரின் திருத் தொண்டினை இனிச் சொல்லத் தொடங்குகிறேன்.

கண்ணப்பா நாயனார் புராணம் முற்றிற்று.

17. குங்குலியக்கலயநாயனார் புராணம்

சோழநாட்டில் உள்ள ஊர் திருக்கடவூர், அவ்வூரில் கலயர் என்ற சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் இறைவர்க்கு இடும் தூபத்துக்குக் குங்குலியத்தை அளித்து வந்தார். அதனால் அவர் குங்குலியக் கலயர் என அழைக்கப் பெற்றார். இறைவன் அருளால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. தம்மிடம் இருந்த ஆடு, வீடு முதலானவற்றை விற்றுத் தாம் மேற்கொண்டிருந்த தொண்டைத் தவறாது செய்து வந்தார். ஒருகால் அவரை நாடி வந்தனர் உறவினர். அவர்களும் மனைவியும் பசியால் வாட்ட முற்றனர். அப்போது அவருடைய மனைவி தம் தாலியை விற்று நெல் வாங்கி வரும்படிச் சொன்னார். அந்தத் தாலியைப் பெற்றுக் கொண்டு குங்குலியக் கலயர் சென்றார். அப்போது அவர் எதிரே ஒரு வணிகன் குங்குலிய மூட்டையுடன் வந்தான். அதைக் குங்குலியம் என்று அறிந்து கொண்டதும் தாலியைத் தந்து அதைப் பெற்றுக் கொண்டார் கலயர். வீட்டைப் பற்றி அவர் அறவே மறந்து விட்டார். ஆனால் இறைவர் குங்குலியக் கலயரின் வீட்டின் நிலையை மறப்பாரா? இறைவர் அருளால் குங்குலியக் கலயரின் வீட்டில் செல்வம் நிரம்பியது. இறைவர் குங்குலியக் கலயரின் மனைவியரின் கனவில் தோன்றி வீட்டில் செல்வம்  நிறைந்திருப்பதை உணர்த்தினார். உறக்கத்தினின்றும் விழித்தெழுந்து அம்மையார், தம் கணவர்க்கும் உறவினர்க்கும் உணவு சமைக்கலானார். இறைவர் வீட்டில் செல்வம் நிறைந்திருப்பதை நாயனார்க்கும் உணர்த்தி வீட்டில் சென்று பசியாறுமாறு உரைத்தார். தம் இல்லத்துக்குச் சென்று உணவு உண்டு பசியாறினார் குங்குலியக் கலயர்.

திருப்பனந்தாள் என்ற தலத்தில் இறைவரின் திருமேனி சற்றுச் சாய்ந்த வாறிருந்தது. அம்மேனியை நிமிர்த்தி வணங்க வேண்டும் என்று மன்னன் எண்ணினான். பல யானைகளைப் பூட்டி நிமிர்த்த எண்ணினான். எண்ணம் நிறைவேறவில்லை. அந்நிகழ்ச்சியைக் குங்குலியக்கலயர் அறிந்தார். தாமும் இறைவர் மேனியை நிமிர்த்த ஈடுபட எண்ணினார். தம் உடலில் கயிற்றின் ஒருமுனையைக் கட்டி மற்றொரு முனையை இறைவரின் திருமேனியல் கட்டினார்; இறைவரைத் துதித்து இழுத்தார். அன்பெனும் பிடியுள் அகப்படும் இறைவர், குங்குலியர் இழுத்த அளவில் திருமேனி நிமிரப் பெற்றார். மன்னனும் மக்களும் மற்றவரும் மகிழ்ந்தனர். மன்னன் குங்குலியக் கலய நாயனாரை வணங்கினான். சில நாட்கள் அங்குத் திருப்பணி செய்து பின்பு திருக்கடவூர்க்குச் சென்றார். அவ்வூர்க்குத் திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் வந்தனர். அவர்க்குத் திருவமுது செய்வித்துக் குங்குலியக்கலயர் மகிழ்ந்தார். அவரது தொண்டு பற்றி, இறைவர் தம் அடியில் அவர் சேர, அருள் செய்தார்.

831. வாய்ந்தநீர் வளத்தா லோங்கி மன்னிய பொன்னி நாட்டின்
ஏய்ந்தசீர் மறையோர் வாழும் எயிற்பதி யெறிநீர்க் கங்கை
தோய்ந்தநீள் சடையார் பண்டு தொண்டர்மேல் வந்த கூற்றைக்
காய்ந்தசே வடியார் நீடி யிருப்பது கடவூ ராகும்.

தெளிவுரை : நீர் உள்ளத்தால் உண்டான வளத்தால் சிறந்து ஓங்கி நிலைபெற்ற காவிரியாறு பாய்கின்ற சோழ நாட்டில் சிறந்த வேதியர்கள் வாழ்கின்ற மதிலையுடைய ஊர். அலைவீசும் நீர் பொருந்திய கங்கையை அணிந்த நீண்ட சடையையுடையவரும், தொண்டரான மார்க்கண்டேயர் மீது உயிர் கொள்வதற்காக வந்த கூற்றுவனை உதைத்த சிவந்த திருவடியினை யுடையவருமான இறைவன் நிலைபெற வாழ்வதான திருக்கடவூர் என்பதாகும்.

832. வயலெலாம் விளைசெஞ் சாலி வரம்பெலாம் வளையின் முத்தம்
அயலெலாம் வேள்விச் சாலை அணையெலாங் கழுநீர்க் கற்றை
புயலெலாங் கமுகின் காடப் புறமெலாம் அதன்சீர் போற்றல்
செயலெலாந் தொழில்க ளாறே செழுந்திருக் கடவூ ரென்றும்.

தெளிவுரை : செழிப்பும் வளமும் கொண்ட அந்தத் திருக்கடவூரில் எக்காலத்தும் வயல்களில் எல்லாம் விளைகின்ற நெற்பயிர் விளங்கும். வயல் வரப்புகளில் எங்கும் சங்குகளும் அவை ஈன்ற முத்துகளும் விளங்கும். வயல்களின் பக்கங்களில் எல்லாம் வேள்விச் சாலைகள் விளங்கும். அணைகளில் எங்கும் செங்கழுநீர் மலர்க்கூட்டம் விளங்கும். காட்டைப் போன்ற பாக்கு மரங்களின் உச்சிகளில் எல்லாம் மேகங்கள் விளங்கும். அவற்றின் வெளியிடங்கள் எல்லாம் அதன் சிறப்பைப் போற்றுவர். அங்கு செய்பவையெல்லாம் ஆறுதொழில்களே ஆகும்.

833. குடங்கையின் அகன்ற உண்கண் கடைசியர் குழுமி யாடும்
இடம்படு பண்ணை தோறும் எழுவன மருதம் பாடல்
வடம்புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கைச்
சடங்குடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல்.

தெளிவுரை : உள்ளங்கை போன்ற அகலமான மை பூசப்பெற்ற விழிகளையுடைய பள்ளப் பெண்கள் கூடி ஆடுவதற்கு இடமான அகன்ற இடத்தை உடைய பண்ணைகள் தோறும் மருதப் பண்பாடும் ஓசை எழுந்து ஒலிக்கும். வடமாகப் புரித்து முறுக்கிய பூணூல் அணிந்த மார்பையுடைய மறையவர் வேதச் சடங்குகள் செய்யும் இடங்கள் தோறும் சாம வேதத்தின் பாடல் ஓசை ஒலிக்கும்.

834. துங்கநீள் மருப்பின் மேதி படிந்துபால் சொரிந்த வாவிச்
செங்கயல் பாய்ந்து வாசக் கமலமும் தீம்பால் நாறும்
மங்குல்தோய் மாடச் சாலை மருங்கிறை யொதுங்கு மஞ்சும்
அங்கவை பொழிந்த நீரும் ஆகுதிப் புகைப்பால் நாறும்.

தெளிவுரை : சிறந்த நீண்ட கொம்புகளையுடைய எருமைகள் தோய்ந்து பால் சொரிந்த நீர் நிலைகளில் செங்கயல் மீன்கள் பாய்வதால் அந்த நீர் தெறித்த மணம் கமழும் தாமரை மலர்களும் அந்த இனிய பாலின் மணமே உடையனவாக இருக்கும். மேகம் தவழும் உயர்ந்த மாளிøயுடைய வேள்விச் சாலைகளின் பக்கத்தில் சிறிது ஒதுங்கும் மேகங்களும், அவை பெய்த நீரும், ஆகுதிப் புகையின் மணம் கொண்டதாக விளங்கும்.

835. மருவிய திருவின் மிக்க வளம்பதி அதனில் வாழ்வார்
அருமறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார்
பெருநதி அணியும் வேணிப் பிரான்கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்க மிக்கார்.

தெளிவுரை : பொருந்திய செல்வத்தால் மிக்க வளம் கொண்ட அந்த நகரத்தில் வாழும் அரிய மறை விதிப்படி பூணூல் அணிந்த மார்பையுடைய அந்தணர் கலயர் என்ற அழைக்கப்படுவார். அவர், கங்கையாற்றை அணியும் சடையையுடைய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி நாளும் உருகிய அன்புமிக்க உள்ளத்தையுடையவரும் சைவ ஒழுக்கம் மிக்கவரும் ஆவார்.

836. பாலனாம் மறையோன் பற்றப் பயங்கெடுத் தருளு மாற்றால்
மாலுநான் முகனுங் காணா வடிவுகொண் டெதிரே வந்து
காலனார் உயிர்செற் றார்க்குக் கமழ்ந்தகுங் குலியத் தூபம்
சாலவே நிறைந்து விம்ம இடும்பணி தலைநின் றுள்ளார்.

தெளிவுரை : அந்தணச் சிறுவரான மார்க்கண்டேய முனிவர் தழுவிக் கொண்டதால், அவரது அச்சம் முழுவதையும் அழித்து அருள் செய்த முறையால், திருமாலும் நான்முகனும் காணாத வடிவத்தைக் கொண்டு வெளிப்பட்டுக் காலனை உதைத்து உருட்டி அக்கூற்றுவனின் உயிரைப் போக்கிய சிவபெருமானுக்கு, மணம் மிகுந்த குங்குலியத் தூபத்தை மிகவும் நிறைந்து வீசம்படியாக இடும் திருப்பணியில் சிறந்து நின்றவர் ஆனார். (குங்குலியம்-ஒருவகை மரப்பிசின்; இதனைத் தூளாக்கித் தீயில் இட்டுப் புகைத்தால் நல்ல மணம் உண்டாகும். இறைவனுக்குத் தூபமாகப் பயன்படுவது.)

837. கங்கைநீர் கலிக்கும் சென்னிக் கண்ணுதல் எம்பி ராற்குப்
பொங்குகுங் குலியத் தூபம் பொலிவுறப் போற்றிச் செல்ல
அங்கவ ரருளி னாலே வறுமைவந் தடைந்த பின்னும்
தங்கள்நா யகர்க்குத் தாமுன் செய்பணி தவாமை யுய்த்தார்.

தெளிவுரை : அவர், கங்கையாற்றின் நீர் ஒலிப்பதற்கு இடமான திருமுடியையும் நெற்றிக்கண்ணையும் உடைய எம்பெருமானுக்கு மேன்மேலும் செறிந்து பரந்து கிளம்பும் குங்குலிய தூபத்தை சிறப்புற்று விளங்குமாறு செலுத்தி வந்தார். அத்தகைய காலத்தில், இறைவரது திருவருளால் அவருக்கு வறுமை வந்து சேர்ந்தது. அதன் பின்னும் தம் இறைவனுக்குத் தாம் அந்த வறுமை வருவதற்கும் முன்னம் செய்து வந்த திருப்பணியினின்று தவறாது அதைச் செய்து வந்தார்.

838. இந்நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல
நன்னிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும்
பன்னெடுந் தனங்கள் மாளப் பயில்மனை வாழ்க்கை தன்னின்
மன்னிய சுற்றத் தோடு மக்களும் வருந்தி னார்கள்.

தெளிவுரை : இங்ஙனம் கலயர் ஒழுகி வந்த காலத்தில் வறுமை மிகவும் அதிகமானது. ஆதலால் தம் நல்ல நிலங்களையெல்லாம் விற்றும், நாடியுள்ள அடிமைகளை விற்றும் (தாம் மேற்கொண்ட பணி செய்தார்;) இங்ஙனம் அவர் தம் பெரிய செல்வங்கள் எல்லாம் தீர்ந்து போயின. அதனால் பொருந்திய இல்வாழ்க்கையில் சுற்றத்தாருடனே மக்களும் வருந்தினர்.

839. யாதொன்றும் இல்லை யாகி இருபக லுணவு மாறிப்
பேதுறும் மைந்த ரோடும் பெருகுசுற் றத்தை நோக்கிக்
காதல்செய் மனைவி யார்தங் கணவனார் கலய னார்கைக்
கோதில்மங் கலநூல் தாலி கொடுத்துநெற் கொள்ளு மென்றார்

தெளிவுரை : உணவுக்குரிய வழி ஒன்றும் இல்லாது போயிற்று இரண்டு பகல் உணவு இல்லாது வருந்தும் மைந்தர்களோடும் பெருகிய சுற்றத்தாரையும் பார்த்து, நாயனாரின் மனைவியார், தம் கணவரான கலயனாரின் கையில் குற்றமற்ற மங்கலக் கயிற்றில் உள்ள பொன்தாலியைத் தந்து இதற்கு நெல்லை வாங்கி வாருங்கள் என்றார்.

840. அப்பொழு ததனைக் கொண்டு நெற்கொள்வான் அவரும் போக
ஒப்பில்குங் குலியங் கொண்டோர் வணிகனும் எதிர்வந் துற்றான்
இப்பொதி யென்கொல் என்றார் உள்ளவா றியம்பக் கேட்டு
முப்புரி வெண்ணூல் மார்பர் முகமலர்ந் திதனைச் சொன்னார்.

தெளிவுரை : அப்போது அந்தத் தாலியைக் கொண்டு, நெல்லை வாங்குவதற்காக குங்கிலியக்கலயர் சென்றார். அப்போது அவர் எதிரே ஒரு வணிகன் குங்குலியப் பொதியுடன் (மூட்டையுடன்) எதிரே வந்து சேர்ந்தான். இந்த மூட்டை யாது? என்று கேட்ட அக்கலயருக்கு, அவ்வணிகன் உள்ளபடி சொன்னான். அதைக் கேட்டுப் பூணூல் அணிந்த மார்பையுடைய அவர் முகமலர்ச்சியுடன் சொல்வாரானார்.

841. ஆறுசெஞ் சடைமேல் வைத்த அங்கணர் பூசைக் கான
நாறுகுங் குலியம் ஈதேல் நானின்று பெற்றேன் நல்ல
பேறுமற் றிதன்மே லுண்டோ பெறாப்பேறு பெற்று வைத்து
வேறினிக் கொள்வ தென்னென் றுரைத்தெழும் விருப்பின் மிக்கார்.

தெளிவுரை : கங்கையைச் சிவந்த சடை மீது வைத்த அங்கண்ணரான சிவபெருமானின் பூசைக்கு ஏற்ற நறுமணம் உள்ள குங்குலியம் இதுவாயின், நான் பெரும்பேற்றைப் பெற்றவன் ஆவேன். பெறுவதற்கரிய இப்பேற்றைப் பெற்ற பின்பும், இனிப் பெறத்தக்க வேறு பேறு யாதுளது? என்று எழும் விருப்பத்தில் மிக்கவராய்.

842. பொன்தரத் தாரு மென்று புகன்றிட வணிகன் தானும்
என்தர விசைந்த தென்னத் தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்தெழு களிப்பி னோடும்.

தெளிவுரை : கலயர், அவ்வணிகனைப் பார்த்து, நான் உமக்குப் பொன்னைத் தர நீர் எமக்கு இந்த குங்குலியத்தைத் தாரும் என்று சொன்னார். அவ்வணிகனும் தாங்கள் எதனைக் கொடுக்க எண்ணியுள்ளீர்? என்றான். கலயர் தம்மிடம் இருந்த பொன் தாலியைத் தந்தார். அப்போதே அவன் அந்தத் தாலியை வாங்கிக் கொண்டு குங்குலிய மூட்டையைத் தந்தான். அதைப் பெற்றுக்கொண்ட கலயர், அங்கே சற்றும் நில்லாமல் உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடன் விரைவாகச் சென்றார்.

843. விடையவர் வீரட் டானம் விரைந்துசென் றெய்தி என்னை
உடையவர் எம்மை யாளும் ஒருவர்தம் பண்டா ரத்தில்
அடைவுற ஒடுக்கி யெல்லாம் அயர்த்தெழும் அன்பு பொங்கச்
சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர் தமக்கொப் பில்லார்.

தெளிவுரை : தமக்கு ஒப்பில்லாத கலயர், காளையூர்தியையுடைய சிவபெருமானின் வீரட்டானத் திருக்கோயிலுக்கு விரைவாய்ச் சென்று என்னை அடிமையாக உடையவரும் நம்மை ஆள்கின்ற ஒருவருமாகிய இறைவரின் பண்டாரத்தில் அந்தக் குங்குலிய மூட்டையை அளித்துச் சேமித்துப் பின்பு எல்லாவற்றையும் மறந்து எழுகின்ற அன்பு மிக்கு எழ, அந்தச் சடையரின் மலர் போன்ற அடிகளைத் துதித்த வண்ணம் அங்கே இருந்தார்.

844. அன்பரங் கிருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன்
தன்பெரு நிதியந் தூர்த்துத் தரணிமேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும் பொருவில்பல் வளனும் பொங்க
மன்பெரும் செல்வ மாக்கி வைத்தனன் மனையில் நீட.

தெளிவுரை : இறைவனிடம் அன்புகொண்ட கலயர் அங்கே வீரட்டானத்தில் இருந்தார். அச்சமயத்தில், இறைவரது திருவருளால், குபேரன் தன் பெருஞ்செல்வத்தைப் பூமியில் நெருங்கும்படிக் கொண்டு வந்து, கலயரது திருமனையில் எங்கும் நீடியிருக்கும்படிப் பொன் நிரம்பிய குவைகளும் நெல்லும் ஒப்பில்லாத பிற வளங்களும் மேன்மேல் பொங்க நிலைத்த பெரிய செல்வமாக வைத்தான்.

845. மற்றவர் மனைவி யாரும் மக்களும் பசியால் வாடி
அற்றைநா ளிரவு தன்னில் அயர்வுறத் துயிலும் போதில்
நற்றவக் கொடிய னார்க்குக் கனவிடை நாதன் நல்கத்
தெற்றென உணர்ந்து செல்வங் கண்டபின் சிந்தை செய்வார்.

தெளிவுரை : இங்ஙனம் இருந்த கலயரின் மனைவியாரும் மக்களும் பசியால் வாட்டம் அடைந்து அன்று இரவு அயர்ந்து உறங்கினர். அப்போது நல்ல தவத்தின் கொடி போன்ற மனைவியாருக்குக் கனவில் இறைவர் இவ்விளைவுகளை உணர்த்தியருளினார். அம்மனைவியார் எழுந்து கனவில் கண்டவாறு அங்கிருந்த செல்வங்களையெல்லாம் பார்த்தபின் பின்வருமாறு எண்ணலானார்.

846. கொம்பனா ரில்ல மெங்கும் குறைவிலா நிறைவிற் காணும்
அம்பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலா யுள்ள
எம்பிரான் அருளாம் என்றே இருகரங் குவித்துப் போற்றித்
தம்பெருங் கணவ னார்க்குத் திருவமு தமைக்கச் சார்ந்தார்.

தெளிவுரை : கொம்பு போன்ற அந்த அம்மையார் தம் இல்லம் முழுவதும் குறைவற்ற நிறைவினால் காணப்பட்ட அழகிய பொற் குவியலும், நெல்லும், அரிசியும் முதலான எல்லாம் எம்பெருமானின் திருவருளே ஆகும் என்று எண்ணி, இரு கைகளும் தலை மீது குவித்துத் துதித்து, தம் நாயகரான ஒப்பில்லாத பெரிய கணவர்க்கு உணவு சமைக்கச் சமையல் அறையை அடைந்தார்.

847. காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலய னாராம்
ஆலுமன் புடைய சிந்தை அடியவ ரறியு மாற்றால்
சாலநீ பசித்தாய் உன்தன் தடநெடு மனையில் நண்ணிப்
பாலின்இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக வென்றார்.

தெளிவுரை : கூற்றுவனை உதைத்து உருட்டிய சிவந்த காலையுடைய இறைவர் கலயனாராகிய, திருவடியில் நிறைந்த அன்பு பூண்ட உள்ளமுடையவர் அறியுமாறு, நீ மிகவும் பசித்தாய்! உன் அகன்ற பெரிய வீட்டில் சேர்ந்து பாலுடன் கலந்த இனிய உணவை உண்டு பசித்துன்பம் நீங்குவாயாக! என்று அருளினார்.

848. கலயனார் அதனைக் கேளாக் கைதொழு திறைஞ்சிக் கங்கை
அலைபுனற் சென்னி யார்தம் அருள்மறுத் திருக்க அஞ்சித்
தலைமிசைப் பணிமேற் கொண்டு சங்கரன் கோயில் நின்று
மலைநிகர் மாட வீதி மருங்குதம் மனையைச் சார்ந்தார்.

தெளிவுரை : அங்ஙனம் இறைவன் அருளியதைக் கலயனார் கேட்டுக் கைகளால் தொழுது, கங்கையைக் கூடிய தலையையுடைய எம்பெருமானின் திருவருளை மறுத்துத் தம் இல்லத்துக்குச் செல்லாது கோயிலில் தங்கியிருக்க அஞ்சியவராய், அவ்விறைவரின் பணியைத் தலை மேற்கொண்டு, இறைவரின் கோயிலினின்று வெளிப்பட்டுப் போந்து மலை போன்ற மாடங்கள் நிறைந்த வீதியை அடைந்து, அங்குத் தம் இல்லத்தைச் சேர்ந்தார்.

849. இல்லத்தில் சென்று புக்கார் இருநிதிக் குவைகள் ஆர்ந்த
செல்வத்தைக் கண்டு நின்று திருமனை யாரை நோக்கி
வில்லொத்த நுதலாய் இந்த விளைவெலாம் என்கொல் என்ன
அல்லொத்த கண்டன் எம்மான் அருள்தர வந்த தென்றார்.

தெளிவுரை : கலயனார் தம் இல்லத்தை அடைந்து உள்ளே புகுந்தார். பெரிய செல்வக் குவியல்களுடன் மற்ற செல்வங்கள் எல்லாவற்றையும் பார்த்து வில் போன்ற நெற்றியையுடைய பெண்ணே! இவையெல்லாம் எவ்வாறு இங்கு வந்தன என வினவினார். அவர், கரிய இருள் போன்ற நிறம் கொண்ட நீலகண்டரான எம்பெருமான் தர இச்செல்வம் எல்லாம் வந்தன! என்று உரைத்தார்.

850. மின்னிடை மடவார் கூற மிக்கசீர்க் கலய னார்தாம்
மன்னிய பெருஞ்செல் வத்து வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளுந் தன்மைத் தெந்தைஎம் பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம் என்றுகை தலைமேற் கொண்டார்.

தெளிவுரை : மின்னை ஒத்த இடைகொண்ட அந்த அம்மையார் இவ்வாறு கூறினார். சிறப்புமிக்க கலயனார் நிலைபெற்ற பெருஞ்செல்வங்களின் வளம் மிக்க சிறப்பைப் பார்த்து, என்னையும் ஆட்கொண்டருளும் தன்மைக்கு எந்தையும் எம்பெருமானும் ஈசனுமான சிவபெருமானின் திருவருள் இருந்தவாறு தான் என்னே! எனக் கைகளைத் தலைமேற் கொண்டு துதித்தார்.

851. பதுமநற் றிருவின் மிக்கார் பரிகலந் திருத்திக் கொண்டு
கதுமெனக் கணவ னாரைக் கண்ணுதற் கன்ப ரோடும்
விதிமுறை தீபம் ஏந்தி மேவும்இன் அடிசில் ஊட்ட
அதுநுகர்ந் தின்பம் ஆர்ந்தார் அருமறைக் கலய னார்தாம்.

தெளிவுரை : தாமரையில் வீற்றிருக்கும் நல்ல இலக்குமியை விடச் சிறந்த அம்மையார். உண்கலமான வாழைக் குருத்தைத் திருத்தி அமைத்துக் கொண்டு விரைவாகத் தம் கணவரைச் சிவபெருமானின் அன்பருடனும் விதிப்படி தீபம் முதலியவை ஏந்திப் பூசை செய்து, இனிய அமுதைப் படைத்தார். அரிய வேதத்தில் வல்ல அவரும்  அதனை உண்டு இன்பம் அடைந்தார்.

852. ஊர்தொறும் பலிகொண் டுய்க்கும் ஒருவன தருளி னாலே
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர்நெய் பாலால்
ஆர்தரு காதல் கூர அடியவர்க் குதவும் நாளில்.

தெளிவுரை : கலயர், ஊர்கள் தோறும் போய்ப் பிச்சை ஏற்றவரான சிவபெருமானின் திருவருளால் இந்தவுலகம் நிறைந்த செல்வம் உடைய தன்மையில் மிகுந்து, சிறந்த அமுதினை நல்ல கறி, தயிர், நெய், பால் என்னும் இவற்றுடன் மிகுந்த அன்புடன் சிவனடியார்களுக்கு உதவி வந்தார். அந்நாளில்,

853. செங்கண்வெள் ளேற்றின் பாகன் திருப்பனந் தாளின் மேவும்
அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம்
பொங்கித்தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர்நில் லாமைக்
கங்குலும் பகலும் தீராக் கவலையுற் றழுங்கிச் செல்ல.

தெளிவுரை : சிவந்த கண்ணையுடைய வெள்ளை எருதின் பாகரான திருப்பனந்தாள் என்ற தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவரை நேரே நிற்க வைத்து வணங்க வேண்டும் என்ற அரசனின் ஆசை பொங்கித் தம் யானை முதலியவை எல்லாம் பூட்டவும் இறைவரின் திருமேனி நேராக நில்லாததால், அம்மன்னன் இரவும் பகலும் நீங்காத கவலை அடைந்து உள்ளம் வருந்த, (திருப்பனந்தாளில் உள்ள லிங்க வடிவம் சாய்ந்திருந்தது. அதை நேரே நிற்க வைக்க வேண்டும் எனச் சோழ மன்னன் நினைத்தான்.)

854. மன்னவன் வருத்தங் கேட்டு மாசறு புகழின் மிக்க
நன்னெறிக் கலய னார்தாம் நாதனை நேரே காணும்
அந்நெறி தலைநின் றான்என் றரசனை விரும்பித் தாமும்
மின்னெறித் தனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார்.

தெளிவுரை : அந்தச் சோழ மன்னனின் வருத்தத்தைக் கேள்விப்பட்டுக் குற்றம் இல்லாத புகழையுடைய நல்ல நெறியில் ஒழுகுகின்ற கலயனார், இறைவனை நேரே காண வேண்டும் என்ற நெறியில் நின்றான் என்று அம்மன்னனை விரும்பி, மின்னலானது நெறிவும் செறிவும் கொண்டது போன்ற சடை முடியையுடைய விகிர்தரான சிவபெருமானை வணங்குவதற்கு வந்தார்.

855. மழுவுடைச் செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று
தொழுதுபோந் தன்பி னோடும் தொன்மறை நெறிவ ழாமை
முழுதுல கினையும் போற்ற மூன்றெரி புரப்போர் வாழும்
செழுமலர்ச் சோலை வேலித் திருப்பனந் தாளிற் சேர்ந்தார்.

தெளிவுரை : கலயனார், மழு என்ற படைக்கலத்தையுடைய கையினரான இறைவர் எழுந்தருளிய பக்கத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்று வணங்கினார். மேற் போந்தார்; எல்லவுலகங்களையும் காத்தற் பொருட்டு மறைவிதியினின்று தவறாது ஆகவனீயம் முதலான மூன்று தீக்களையும் வளர்த்துக் காத்து வரும் மறையோர் வாழ்கின்ற செழுமையான மலர்ச் சோலை சூழ்ந்த திருப்பனந்தாள் என்ற தலத்தை அடைந்தார்.

856. காதலால் அரசன் உற்ற வருத்தமுங் களிற்றி னோடும்
தீதிலாச் சேனை செய்யும் திருப்பணி நேர்ப டாமை
மேதினி மிசையே எய்த்து வீழ்ந்திளைப் பதுவும் நோக்கி
மாதவக் கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி.

தெளிவுரை : சோழ மன்னன் தான் கொண்ட ஆசையினால் எய்திய வருத்தத்தையும் யானைகளுடன் குற்றம் அற்ற படைகளும் தாம் செய்யும் திருப்பணி முடிவு பெறாமையால் நிலத்தில் களைத்து விழுந்து இளைப்பதையும், மாதவரான கலயனார் பார்த்து மனத்தில் வருத்தம் கொண்டார்.

857. சேனையும் ஆனை பூண்ட திரளுமெய்த் தெழாமை நோக்கி
யானுமிவ் விளைப்புற் றெய்க்கும் இதுபெற வேண்டு மென்று
தேனலர் கொன்றை யார்தம் திருமேனிப் பூங்கச் சேய்ந்த
மானவன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்த லுற்றார்.

தெளிவுரை : கலயனார், படைகளும் யானைகளைக் கொண்ட கூட்டமும் இளைத்து மேல் எழமாட்டாது இருக்கின்ற நிலையைப் பார்த்து, நானும் இத்தகைய இளைப்பினைப் பொருந்தி மெலிகின்ற இப்பேற்றைப் பெற வேண்டும் என்று மனத்தில் எண்ணினார். தேன் நிறையப் பெற்று மலர்கின்ற கொன்றை மலரைச் சூடிய சிவபெருமானின் திருமேனியில் பூண்ட பூங்கச்சில் பொருந்திய பெரிய வலிய கயிற்றைப் பூட்டித் தம் கழுத்தினால் வருந்தி இழுக்கத் தொடங்கினார்.

858. நண்ணிய ஒருமை யன்பின் நாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்தபின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலய னார்தம் ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்.

தெளிவுரை : ஒருமை பொருந்திய அன்பு நாரால் இயன்ற கயிற்றால் திண்மையுடைய தொண்டர் பூட்டி இளைப்படைந்த பின்பும், அக்கருத்துக்கு மாறுபட்டு, முன் போலவே சாய்ந்து நிற்பது என்பது இறைவர்க்கு முடியுமோ? கலயனாரின் உள்ளத்தில் எழுந்த ஒருமைப்பாட்டைக் கண்ட அப்போதே பெருமையுடைய இறைவர் நேரே நின்றார். வானவரும் வானத்தில் மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர்.

859. பார்மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில்பூ மாரி
தேர்மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம்
கார்பெறு கானம் போலக் களித்தன கைகள் கூப்பி
வார்கழல் வேந்தன் தொண்டர் மலரடி தலைமேல் வைத்து

தெளிவுரை : தேவர்கள் பூமியின் மீது எங்கும் நெருங்கும்படி கற்பக மலர் மழையைப் பரப்பிப் பொழிந்தனர். தேர்கள் மிக்க மன்னனின் படைகளும் யானைகளும் ஆகிய அவையெல்லாம் மேகத்தைக் கண்ட சோலை போல மகிழ்ந்தன. கட்டிய வீரக்கழலையுடைய மன்னன் கைகளைக் கூப்பித் தொழுது கலயனாரின் மலர் போன்ற அடிகளைத் தலை மேற்கொண்டு வணங்கினான்.

860. விண்பயில் புரங்கள் வேவ வைதிகத் தேரின் மேருத்
திண்சிலை குனிய நின்றார் செந்நிலை காணச் செய்தீர்
மண்பகிர்ந் தவனுங் காணா மலரடி யிரண்டும் யாரே
பண்புடை யடியார் அல்லால் பரிந்துநேர் காண வல்லார்.

தெளிவுரை : வானத்தில் பறக்கும் திரிபுரங்களும் வேகுமாறு வேதக் குதிரை பூண்ட தேரில் மேருமலையை வன்மையுடைய வில்லாகக் கொண்டு வளைத்து நின்ற சடையப்பரின் (இறைவரின்) நேராக நிமிர்ந்து நிற்கும் நிலையை அடியேன் கண்டு வணங்கும்படிச் செய்தருளினீர்! மண்ணைத் தோண்டிக் கொண்டு சென்ற திருமாலும் தேடிக் காண முடியாத (இறைவரின்) மலர் போன்ற திருவடிகளைப் பண்புமிக்க அடியவர்களல்லாமல், வேறு எவரே அன்பால் நேர் காண வல்லவர் ஆவார்?

861. என்றுமெய்த் தொண்டர் தம்மை ஏத்தியங் கெம்பி ரானுக்
கொன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து
நின்றவெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகரில் அன்பர்
மன்றிடை யாடல் செய்யும் மலர்க்கழல் வாழ்த்தி வைகி.

தெளிவுரை : என இங்ஙனம் சோழ மன்னன் உண்மையான தொண்டரான குங்குலியக் கலய நாயனாரைத் துதித்து, அத்தலத்தில் இறைவர்க்குப் பொருந்திய மற்றத் திருப்பணிகள் பலவற்றையும் செய்தான். பின்னர் நிலைத்த வெண்கொற்றக் குடையையுடைய அம்மன்னன் தன் நகரத்துக்குச் சென்றான். அதன் பின்பும் ஒப்பில்லாத கலயனாரும் பொன்னம்பலத்தில் ஆடுகின்ற மலர் போன்ற அடிகளை வாழ்த்தி வணங்கி அங்குத் தங்கி,

862. சிலபகல் கழிந்த பின்பு திருக்கட வூரில் நண்ணி
நிலவுதம் பணியில் தங்கி நிகழுநாள் நிகரில் காழித்
தலைவராம் பிள்ளை யாரும் தாண்டகச் சதுர ராகும்
அலர்புகழ் அரசும் கூட அங்கெழுந் தருளக் கண்டு.

தெளிவுரை : சில நாட்கள் கழிந்த பின்னர், அங்கு நின்றும் சென்று திருக்கடவூரை அடைந்து, நிலையான தம் பணியில் ஒழுகி வரும் நாளில், ஒப்பில்லாத சீர்காழியில் தோன்றிய தலைவரான திருஞான சம்பந்தரான ஆளுடைய பிள்ளையாரும் தாண்டக வேந்தரான மிக்க புகழைக் கொண்ட ஆளுடைய அடிகளும் அங்கு ஒன்றாக எழுந்தருளுவதை அறிந்து,

863. மாறிலா மகிழ்ச்சி பொங்க எதிர்கொண்டு மனையில் எய்தி
ஈறிலா அன்பின் மிக்கார்க் கின்னமு தேற்கும் ஆற்றால்
ஆறுநற் சுவைகள் ஓங்க அமைத்தவர் அருளே அன்றி
நாறுபூங் கொன்றை வேணி நம்பர்தம் அருளும் பெற்றார்.

தெளிவுரை : ஒப்பில்லாத மகிழ்ச்சி பொங்க, அவ்விருவரையும் எதிர்கொண்டு அழைத்து வந்து, தம் இல்லத்தை அடைந்து, அளவில்லாத அன்பின் மிக்க ஆறு சுவைகளும் பொருந்த அமைத்து உண்ணச் செய்து, அவர்களின் திருவருளைப் பெற்றார். அவ்வாறு பெற்றதே அல்லாமல், மணமுடைய அழகிய கொன்றை மலர் அணிந்த சிவபெருமானின் திருவருளையும் பெற்றார்.

864. கருப்புவில் லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கெழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து சிவபத நிழலில் சேர்ந்தார்.

தெளிவுரை : கலயனார் கரும்பை வில்லாக உடைய மன்மதனையும் கூற்றுவனையும் தண்டித்த சிவபெருமான் வீற்றிருக்குக்கும் திருக்கடவூரில் நிலைபெற வாழ்ந்து, விருப்பத்துடன் கூடிய மேன்மேலும் மிகுந்து எழும் ஆசை அதிகப்படவே, ஒருமைப்பட்ட உள்ளநிலை உண்டானதால் தமக்குப் பொருந்திய திருப்பணிகள் பலவற்றையும் செய்து, சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்தார்.

865. தேனக்க கோதை மாதர் திருநெடுந் தாலி மாறிக்
கூனல்தண் பிறையி னார்க்குக் குங்குலி யங்கொண் டுய்த்த
பான்மைத்திண் கலய னாரைப் பணிந்தவர் அருளி னாலே
மானக்கஞ் சாறர் மிக்க வண்புகழ் வழுத்த லுற்றேன்.

தெளிவுரை : தேன்சிந்தும் மலர் மாலை சூடிய மனைவியின் தாலியைத் தந்து வளைந்த குளிர்ந்த பிறைச் சந்திரனைச் சூடிய இறைவர்க்கு ஏற்ற குங்குலியத் தூபத் திருப்பணியானது முட்டுப்படாது செய்த பான்மையையும் திண்மையையும் உடைய கலயனாரைப் பணிந்து, அவரது அருளின் துணையால், மானக்கஞ்சாற நாயனாரின் மிக்க வன்மையுடைய திருத்தொண்டை இனித் துதிக்கத் தொடங்குகின்றேன்.

குங்குலியக் கலய நாயனார் புராணம் முற்றுப்பெற்றது.

18. மானக்கஞ்சாற நாயனர் புராணம்

சோழநாட்டின் தலங்களுள் ஒன்று கஞ்சாறூர். அவ்வூரில் வேளாளர் குடியில் மானக்கஞ்சாறர் தோன்றினார். அந்தக் குடியானது மன்னர் படைக்குத் தலைமை தாங்கும் இயல்புடையது, அக்குடியில் தோன்றிய கஞ்சாறர் தம் வருமானத்தைச் சிவனடியார்க்காகச் செலவிட்டார். இறைவரின் அருளால் அவர்க்குப் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தை வளர்ந்து மணப்பருவத்தை அடைந்தது. அந்தப் பெண்ண ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நல்ல நாளில் திருமணம் செய்யக் குறிக்கப்பட்டது. அந்நாளில் தக்கவாறு மாளிகை அழகு செய்யப்பட்டது. கலிக்காமர் அம்மங்கையை மணம் செய்து கொள்ளும் பொருட்டு வந்தார். அவருடைய உறவினரும் வந்தனர். மானக்கஞ்சாறரின் மனநிலையை உலகுக்கு அறிவிக்க இறைவர் எண்ணினார். மாவிரத வடிவத்துடன் இறைவர் மானக்கஞ்சாறரிடம் வந்தார். இங்கு என்ன நிகழ்கின்றது? என வினவினார். அதைக் கேட்ட மானக்கஞ்சாறர் என் மகளின் திருமணம் நிகழ்கின்றது என்றுரைத்தார். உரைத்து உள்ளே சென்று தம் மகளை அழைத்து வந்து இறைவரை வணங்கச் சொன்னார். தம்மை வணங்கிய அம்மங்கையின் கூந்தலைப் பார்த்து இந்த மங்கையின் கூந்தல் எமக்குப் பஞ்சவடி (மயிரால் ஆகிய பூணூல்) ஆகும் என்றார். இவர் இவ்வாறு கேட்க நான் புண்ணியம் செய்தேனோ! என்று கூறி அரிவாளால் அம்மங்கையின் கூந்தலை அரிந்து மகாவிரதியாரான இறைவரிடம் நீட்டினார். விரதியார் அங்கு இல்லை! இறைவர் உமையொருபாகராகக் காட்சியளித்துத் தம் திருவருள் நிறைந்த திருமுன்பு தம் கருணையைத் துதிக்கும் பெரும் பேற்றை அவர்க்கு அளித்தார்.

கலிக்காம! நீ மனம் தளர வேண்டா! இப்பெண்ணுக்கு மீண்டும் கூந்தலைத் தந்தோம் என்று இறைவர் அருள் செய்தார். மானக்கஞ்சாறரின் மகள் கூந்தல் முன்போல் வளர்ந்தது. கலிக்காமர் அம்மங்கையை மணந்து கொண்டு தம் ஊர்க்குத் திரும்பினார்.

866. மேலாறு செஞ்சடைமேல் வைத்தவர்தாம் விரும்பியது
நூலாறு நன்குணர்வோர் தாம்பாடும் நோன்மையது
கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகும்
காலாறு வயற்கரும்பின் கமழ்சாறூர் கஞ்சாறூர்.

தெளிவுரை : தேன் கூடுகளில் கட்டப்பட்ட தேன் கொம்புகளின் வழியே பாய, கொழுத்து விளைந்த பழங்களின் சாறு ஒழுக, இரண்டும் கூடி வாய்க்கால் போல் ஆன ஒழுக்கு, வயலில் விளைந்த கரும்பின் சாறானது பெருகிய ஆற்றைச் சேர்ந்து, அதனை மணம் செய்கின்ற ஊரானது கஞ்சாறு என்பதாகும். அது, வான் கங்கையாற்றினைச் சடையில் அணிந்த சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருப்பதும், தமிழ் நூல்களைக் கற்றவர்களால் பாடிப் புகழப்படும் விருப்பமுடையதும் ஆகும்.

867. கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்தொதுங்கி
உண்ணீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்துமலர்க் கண்சிவக்கும்
தண்ணீர்மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த வளவயல்கள் உளஅயல்கள்.

தெளிவுரை : கருங்குவளை மலர் போன்ற கண்களையுடைய உழவப் பெண்களால் பறித்துக் களையப்படுகின்ற களைகளில் தப்பி ஒரு பக்கத்தில் ஒதுங்கி, நீர் உள்ளே புகுந்ததால் செழித்து நின்று பூவின் சிவப்பு மிகுந்து காட்டும் தண்ணீர்ப் பூவான மென்மையான செங்கழுநீர்ப் பூக்களுக்கு, பெரு நெற்கதிர்கள் வணங்குகின்ற, மண்ணும் நீரும் என்ற இரண்டு வகைப்பட்ட வளமும் சிறந்து விளங்கும் வளமை மிக்க வயல்கள் அங்கு எங்கும் விளங்கும்.

868. புயல்காட்டுங் கூந்தல்சிறு புறங்காட்டப் புனமயிலின்
இயல்காட்டி இடைஒதுங்க இனங்காட்டும் உழத்தியர்கண்
முயல்காட்டும் மதிதோற்கும் முகங்காட்டக் கண்மூரிக்
கயல்காட்டுந் தடங்கள்பல கதிர்காட்டுந் தடம்பணைகள்.

தெளிவுரை : பிடரியானது மேகங்களைப் போன்ற கூந்தலைக் காட்டவும், இடையானது காட்டில் உள்ள மயிலின் இயலைக் காட்டி ஒருபக்கம் அசையக் கூட்டமாய் அங்குப் பயிலும் உழத்தியருடைய முயல் கறையைக் காட்டும் சந்திரனைத் தோற்கச் செய்கின்ற முகங்களைக் காட்ட, கொழுத்த கயல் மீன்கள் அவர்களின் கண்களைக் காட்டுவதற்கு இடமான நீர் நிலைகள், நெற்கதிர்களை மேலே காட்டி நிற்கின்ற பெரிய வயல்களில் உள்ளன.

869. சேறணிதண் பழனவயல் செழுநெல்லின் கொழுங்கதிர்போய்
வேறருகு மிடைவேலிப் பைங்கமுகின் மிடறுரிஞ்சி
மாறெழுதிண் குலைவளைப்ப வண்டலைதண் டலையுழவர்
தாறரியும் நெடுங்கொடுவாள் அனையவுள தனியிடங்கள்.

தெளிவுரை : சேற்றையுடைய அழகிய குளிர்ந்த மருத நிலத்தைச் சார்ந்த வயல்களில் விளைந்த செழிப்பையுடைய நெல்லின் கொழுத்த கதிர் மேலே சென்று, அந்த வயலின் பக்கத்தில் வேறாக அடுத்துள்ள நெருங்கியுள்ள வேலிப்பக்கம் பசிய பாக்கு மரத்தின் கழுத்து வரை வளர்ந்து மாறாய் எழுந்த அவற்றின் குலையை வளைத்தன. அவை வண்டுகள் உள்ள சோலையில் வாழ்கின்ற உழவர் குலைகளை அரிகின்ற நீண்ட அரிவாள்களைப் போன்றனவாய் ஒவ்வோர் இடங்களில் விளங்கின.

870. பாங்குமணிப் பலவெயிலும் சுலவெயிலும் உளமாடம்
ஞாங்கரணி துகிற்கொடியும் நகிற்கொடியும் உளவரங்கம்
ஓங்குநிலைத் தோரணமும் பூரணகும் பமும்உளவால்
பூங்கணைவீ தியில்அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு.

தெளிவுரை : பக்கங்களில் மாளிகைகள் பல மணி நிறங்களும் சூழ்ந்த மதில்களும் உடையனவாய் உள்ளன. அவற்றின் பக்கங்களில் மேடைகள் அழகான துணியால் ஆன கொடிகளும் நகிலையுடைய கொடி (போன்ற பெண்)களும் பெற்றனவாய் உள்ளன. வீதி வழியே செல்பவரின் புலன்களைப் பூங்கணைகள் மயங்கச் செய்யும் சில தெருக்கள் மிகவும் உயர்ந்த தோரணங்களும் நிறைகுடங்களும் உள்ளனவாக உள்ளன.

871. மனைசாலும் நிலையறத்தின் வழிவந்த வளம்பெருகும்
வினைசாலும் உழவுதொழில் மிக்கபெருங் குடிதுவன்றிப்
புனைசாயல் மயிலனையார் நடம்புரியப் புகல்முழவங்
கனைசாறு மிடைவீதிக் கஞ்சாறு விளங்கியதால்.

தெளிவுரை : அணிகளை அணிந்த சாயலால் மயில் போன்ற பெண்கள் நடமாட, அதற்கு ஏற்ப ஒலிக்கும் முழவுகள் முழங்கும் விழாச் சிறப்புகளையுடைய வீதிகளையுடையது கஞ்சாறூர். அது பொருந்திய நிலைத்த இல்லறத்தின் வழியிலே வந்த வளங்கள் எல்லாம் உடையவையும் உழவுத் தொழிலான நல்வினை பூண்ட பெருமையுடையனவுமாகிய குடிகள் நிறைந்து விளக்கம் பெற்று விளங்கியது.

872. அப்பதியிற் குலப்பதியாய் அரசர்சே னாபதியாம்
செப்பவருங் குடிவிளங்கத் திருஅவதா ரஞ்செய்தார்
மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தார் விழுமியவே ளாண்குடிமை
வைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார்.

தெளிவுரை : மெய்ப்பொருளை அறிந்து அதனை எப்போதும் சிந்தித்து உணர்வில் கொண்டவரும், மேலான வேளாள மரபின் சேம வைப்பைப் போன்ற மேன்மை கொண்டவருமான மானக்கஞ்சாறனார் அந்தப் பதியில் வழிவழி வாழ்கின்ற மேன்மை கொண்டவராய் மன்னரின் படைத்தலைவராகிய சுட்டிச் சொல்லத்தக்க குடி விளங்குமாறு திருவவதாரம் செய்தார்.

873. பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பனிமதியின்
அணிவுடைய சடைமுடியார்க் காளாகும் பதம்பெற்ற
தணிவில்பெரும் பேறுடையார் தம்பெருமான் கழல்சார்ந்த
துணிவுடைய தொண்டர்க்கே ஏவல்செயுந் தொழில்பூண்டார்.

தெளிவுரை : அவர் பணிவு கொண்ட வடிவத்தை உடையவர்; பாம்புடன் குளிர் சந்திரனைச் சூடிய சடைமுடியையுடைய இறைவர்க்கு ஆளாகும். தகுதியுடைய குறைவற்ற பெரும்பேற்றையுடையவர். தம் பெருமான் திருவடிகளைச் சார்பாகவுடைய துணிவு கொண்ட தொண்டர்களுக்குப் பணிசெய்யும் தொழிலை மேற்கொண்டவர்.

874. மாறில்பெருஞ் செல்வத்தின் வளம்பெருக மற்றதெலாம்
ஆறுலவுஞ் சடைக்கற்றை அந்தணர்தம் அடியாராம்
ஈறில்பெருந் திருவுடையார் உடையாரென் றியாவையுநேர்
கூறுவதன் முன்னவர்தம் குறிப்பறிந்து கொடுத்துள்ளார்.

தெளிவுரை : ஒப்பில்லாத பெருஞ்செல்வத்தின் வளங்கள் எல்லாம் பெருக அவை யாவும், கங்கையாற்றைச் சூடிய சடைமுடியுடைய இறைவரின் அடியவர்களான முடிவற்ற பெருஞ்செல்வம் உடையவர்களே உடையவர்கள் ஆவார்கள் என்று மனத்தில் எண்ணி, அவற்றையெல்லாம் அவர்கள் தம்மிடம் கூறுவதற்கு முன்பே, அவர்களின் உள்ளக் கருத்தினை அறிந்து தந்து வந்தார்.

875. விரிகடல்சூழ் மண்ணுலகில் விளக்கியஇத் தன்மையராம்
பெரியவர்க்கு முன்சிலநாள் பிள்ளைப்பே றின்மையினால்
அரியறியா மலர்க்கழல்கள் அறியாமை யறியாதார்
வருமகவு பெறற்பொருட்டு மனத்தருளால் வழுத்தினார்.

தெளிவுரை : பரந்த கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில் விளங்கிய இத்தன்மையுடையவரான அந்தப் பெரியவர்க்கு முன் சில காலம் பிள்ளைப் பேறு இல்லாதிருந்தது. அதனால் திருமாலும் அறியாத மலரடிகளை அறியாமையை அறியாதவரான (அறிந்தவரான) அவர், பிள்ளைப் பேற்றை முன்னிட்டுத் திருவருள் தூண்டுதலால் உள்ளத்தால் (இறைவரின் அக்கழல்களைத்) துதித்தார்.

876. குழைக்கலையும் வடிகாதில் கூத்தனார் அருளாலே
மழைக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி யார்தம்பால்
இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த இப்பிறவிக் கொடுஞ்சூழல்
பிழைக்குநெறி தமக்குதவப் பெண்கொடியைப் பெற்றெடுத்தார்.

தெளிவுரை : குழையை அணிந்து அசையும் வடிந்த காதையுடைய நடராசப் பெருமானின் திருவருளால், மழை பெய்வதற்கு உதவி செய்யும் பெருங் கற்பையுடைய மனைவியிடமாக, செய்வினைப் பயன்களால் சூழப்பட்ட இந்தப் பிறவி என்ற கொடிய சூழலினின்றும் பிழைக்கும் வழியைத் தமக்கு உதவக் கொடியைப் போன்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

877. பிறந்தபெரு மகிழ்ச்சியினால் பெருமூதூர் களிசிறப்பச்
சிறந்தநிறை மங்கலதூ ரியம்முழங்கத் தேவர்பிரான்
அறந்தலைநின் றவர்க்கெல்லாம் அளவில்வளத் தருள்பெருக்கிப்
புறந்தருவார் போற்றிசைப்பப் பொற்கொடியை வளர்க்கின்றார்.

தெளிவுரை : பெண் பிறந்த பெரிய மகிழ்ச்சியினால், பெரிய அந்தப் பழவூர் களிப்பில் மிகவும் சிறக்கச் சிறப்பையும் இசையின் நிறைவையும் கொண்ட மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, சிவநெறியில் நின்ற அடியார்களுக்கெல்லாம் அளவற்ற வளமான கொடைகளைப் பெருகச் செய்து, குழந்தையைப் பாதுகாக்கும் செவிலியர்கள் வாழ்த்த, பொன் கொடி போன்ற அக்குழந்தையை வளர்க்கலானார்.

878. காப்பணியும் இளங்குழவிப் பதம்நீங்கிக் கமழ்சுரும்பின்
பூப்பயிலும் சுருட்குழலும் பொலங்குழையும் உடன்தாழ
யாப்புறுமென் சிறுமணிமே கலையணிசிற் றாடையுடன்
கோப்பமைகிண் கிணியசையக் குறுந்தளிர்மெல் லடியொதுங்கி.

தெளிவுரை : காப்பை அணிகின்ற இளங்குழந்தைப் பருவத்தை கடந்து வண்டுகள் மொய்க்கின்ற மணமுடைய பூக்களை முடிக்கும் சுருண்ட கூந்தலும் பொன் குண்டலமும் ஒருங்கு கூடித் தாழ்ந்து தொங்க, கட்டிய மென்மையான சிறிய மணிகளையுடைய மேகலை அணிந்த சிற்றாடையுடன் கோக்கப்பட்ட கிண்கிணி அசையச் சிறிய தளிர் போன்ற மென்மையான அடிகளால் ஒதுங்கி நடந்தது.

879. புனைமலர்மென் கரங்களினால் போற்றியதா தியர்நடுவண்
மனையகத்து மணிமுன்றில் மணற்சிற்றில் இழைத்துமணிக்
கனைகுரல்நூ புரம்அலையக் கழல்முதலாப் பயின்றுமுலை
நனைமுகஞ்செய் முதற்பருவம் நண்ணினள்அப் பெண்ணமுதம்.

தெளிவுரை : பெண் அமுதமான அவள், தம்மை வளர்க்கும் செவிலியர் சூழ அவர்களுக்கிடையில் வீட்டின் அழகிய முற்றத்தில் மலர் போன்ற மென்மையான கையால், சிறிய மணல் வீடு கட்டியும், பரல் மணிகள் ஒலிக்கும் அடிச்சிலம்புகள் அசைந்து ஓசை செய்யும்படி கழல் ஆடுதல் முதலான விளையாடல்களைச் செய்தும், முலைகள் அரும்பைப் போல் அரும்பும் பேதைப் பருவத்தை அடைந்தாள்.

880. உறுகவின்மெய்ப் புறம்பொலிய ஒளிநுசுப்பை முலைவருத்த
முறுவல்புறம் அலராத முகிண்முத்த நகையென்னும்
நறுமுகைமென் கொடிமருங்குல் நளிர்ச்சுருள்அம் தளிர்ச்செங்கை
மறுவில்குலக் கொழுந்தினுக்கு மணப்பருவம் வந்தணைய.

தெளிவுரை : பொருந்தும் அழகு திருமேனியில் வெளிப்பக்கத்தில் விளங்க, மின்னல் போன்ற இடையைப் பெருத்த முலைகள் வருத்த, புன்சிரிப்பு வெளியே புலப்படாதனவும் தோன்றிய முத்தைப் போன்றனவும் ஆகிய பற்கள் என்ற நல்ல அரும்பினையும் மென்மையான கொடி போன்ற இடையையும் சுருண்ட கூந்தலையும் அழகான தளிர் போன்ற சிவந்த கையையும் உடைய, குற்றம் இல்லாத குலத்தில் உண்டான கொழுந்தைப் போன்ற அப்பெண்ணுக்கு மணம் செய்யும் பருவம் வந்து பொருந்தியது. பொருந்த,

881. திருமகட்கு மேல்விளங்குஞ் செம்மணியின் தீபமெனும்
ஒருமகளை மண்ணுலகில் ஓங்குகுல மரபினராய்க்
கருமிடற்று மறையவனார் தமராய கழல்ஏயர்
பெருமகற்கு மகட்பேச வந்தணைந்தார் பெருமுதியோர்.

தெளிவுரை : இலக்குமிக்கு மேலாய் விளங்கும் செம்மணி விளக்கைப் போன்ற ஒப்பில்லாத அந்தப் பெண்மணியாரை, இந்த உலகத்தில் ஓங்கும் வேளாண் குலத்தில் ஒத்த மரபில் வந்தவராய், நீலகண்டத்தையுடைய சிவபெருமானுக்கு அன்பரான வீரக்கழல் அணிந்த ஏயர் கோன் கலிக்காமருக்கு மணம் பேசப் பெரியோர் வந்தனர்.

882. வந்தமூ தறிவோரை மானக்கஞ் சாறனார்
முந்தைமுறை மையின்விரும்பி மொழிந்தமணத் திறங்கேட்டே
எந்தமது மரபினுக்குத் தகும்பரிசால் ஏயுமெனச்
சிந்தைமகிழ் வுறஉரைத்து மணநேர்ந்து செலவிட்டார்.

தெளிவுரை : அங்ஙனம் மணம் பேசுதற்கு வந்த முதிர்ந்த அறிவுடையவர்களை மானக் கஞ்சாறானார் முந்தையோரின் முறைப்படி விருப்பத்துடன் வரவேற்று, அவர்கள் பேசிய மணத்திறம் பற்றிய பேச்சுக்களைக் கேட்டு எம்மரபுக்குத் தக்க தன்மையினால் இது பொருந்துவதாகும் என்ற உள்ளம் மகிழும்படி கூறித் தம் மகளை மணம் செய்து கொடுக்கச் சம்மதித்து அவர்களைச் செல்ல விடுத்தார்.

883. சென்றவருங் கஞ்சாறர் மணமிசைந்த படிசெப்பக்
குன்றனைய புயத்தேயர் கோனாரும் மிகவிரும்பி
நின்றநிலை மையினிரண்டு திறத்தார்க்கும் நேர்வாய
மன்றல்வினை மங்கலநாள் மதிநூல்வல் லவர்வகுத்தார்.

தெளிவுரை : சென்ற முதியவரும் மானக் கஞ்சாறனார் மணத்துக்குச் சம்மதம் தெரிவித்தார் என்ற செய்தியைச் சொல்ல, குன்று போன்று உயர்ந்த தோள்களையுடைய ஏயர்கோன் நாயனாரும், அதைக் கேட்டு மிக்க விருப்பம் கொண்டு நின்றார். நிற்க, இந்நிலையில் இருதிறத்தவருக்கும் பொருத்தமான மணம் செய்வதற்குரிய மங்கல நாளைச் சோதிட நூலில் வல்லவர் குறித்தனர்.

884. மங்கலமாம் செயல்விரும்பி மகட்பயந்த வள்ளலார்
தங்குலநீள் சுற்றமெலாம் தயங்குபெருங் களிசிறப்பப்
பொங்கியவெண் முளைப்பெய்து பொலங்கலங்கள் இடைநெருங்கக்
கொங்கலர்தண் பொழில்மூதூர் வதுவைமுகங் கோடித்தார்.

தெளிவுரை : மணமகளைப் பெற்ற வள்ளலாரான மானக் கஞ்சாறனார், மங்கலத்துக்குரிய செயல்களைச் செய்ய விரும்பித் தம் குலத்தில் உள்ள மிக்க உறவினர் எல்லாரும் பெருமகிழ்ச்சி கொள்ளப் பொங்கிய வெண்முறை சாத்தி, பொற்கலங்களிடையே நெருங்க, மணம் மிக்க குளிர்ந்த சோலைகளையுடைய அந்தப் பழமையான நகரத்தைத் திருமணக் கோலம் பொருந்துமாறு அணி செய்தனர்.

885. கஞ்சாறர் மகட்கொடுப்பக் கைப்பிடிக்க வருகின்ற
எஞ்சாத புகழ்ப்பெருமை ஏயர்குலப் பெருமானும்
தஞ்சால்பு நிறைசுற்றந் தலைநிறைய முரசியம்ப
மஞ்சாலும் மலர்ச்சோலைக் கஞ்சாற்றின் மருங்கணைய.

தெளிவுரை : மானக் கஞ்சாறனார் தம் மகளைக் கொடுக்க, அப்பெண்ணை மனைவியராக ஏற்றுக் கைப்பற்ற வருகின்ற குறையாத புகழையும் பெருமையையும் உடைய ஏயர் குலத்தலைவரான கலிக்காமரும், அவர் தம் சுற்றத்தார் எல்லாரும் நெருங்கி நிறைய, இன்னியங்கள் எல்லாம் இசைப்ப, மேகங்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கஞ்சாறூரின் அண்மையில் வர,

886. வள்ளலார் மணமவ்வூர் மருங்கணையா முன்மலர்க்கண்
ஒள்ளிழையைப் பயந்தார்தம் திருமனையில் ஒருவழியே
தெள்ளுதிரை நீருலகம் உய்வதற்கு மற்றவர்தம்
உள்ளநிலைப் பொருளாய உம்பர்பிரான் தாமணைவார்.

தெளிவுரை : வள்ளலாரின் மண எழுச்சி அந்தக் கஞ்சாறூரின் பக்கத்தில் வந்து சேர்வதற்கு முன்னம், பூப்போன்று விழியுடைய ஒளி பொருந்திய அணிகளை அணிந்த பெண்ணைப் பெற்றவரின் இல்லத்தில், ஒருவழியாய், தெளிவான நீர் அலைகளையுடைய நீரால் சூழப்பட்ட உலகம் உய்வதன் பொருட்டாக அவருடைய மனத்தின் நிலைப்பொருளான சிவபெருமான் அணைவராய்,

887. முண்டநிறை நெற்றியின்மேல் முண்டித்த திருமுடியில்
கொண்டசிகை முச்சியின்கண் கோத்தணிந்த எற்புமணி
பண்டொருவன் உடலங்கம் பரித்தநாள் அதுகடைந்த
வெண்தரளம் எனக்காதின் மிசையசையுங் குண்டலமும்.

தெளிவுரை : திரிபுண்டரமாக வெண்ணீற்றை அணிந்த நெற்றியின் மீது, மழித்த திருமுடியில் வைத்த சிகையின் நுனியில் கோத்து அணிந்திட்ட எலும்பு மணியும், முன் காலத்தில் திருமாலின் உடலின் முழு எலும்பைக் கொண்ட நாளிலே, அந்த எலும்பைக் கடைந்தெடுத்த வெண்மையான முத்துக்களைப் போல் விளங்கும் காதில் அசையும் குண்டலமும்,

888. அவ்வென்பின் ஒளிமணிகோத் தணிந்ததிருத் தாழ்வடமும்
பைவன்பேர் அரவொழியத் தோளிலிடும் பட்டிகையும்
மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலும்மனச்
செவ்வன்பர் பவமாற்றுந் திருநீற்றுப் பொக்கணமும்.

தெளிவுரை : அந்த எலும்பால் ஆன ஒளியுடைய மணிகளைக் கோத்து அணிந்த தாழ்வடமும், படத்தையுடைய வலிய பாம்பு நீங்கத் தோளில் இடுகின்ற யோகப் பட்டையான உத்தரியமும், கருமயிரால் கயிறாய் முறுக்கப்பட்ட பூணூலும் செம்மையான மனத்தை உடைய அடியவர்களின் பிறவியைப் போக்குகின்ற வெண் நீற்றுப்பையும்

889. ஒருமுன்கைத் தனிமணிகோத் தணிந்தவொளிர் சூத்திரமும்
அருமறைநூற் கோவணத்தின் மிசையசையும் திருவுடையும்
இருநிலத்தின் மிசைதோய்ந்த எழுதரிய திருவடியும்
திருவடியில் திருப்பஞ்ச முத்திரையுந் திகழ்ந்திலங்க.

தெளிவுரை : ஒரு முன்கையில் ஓர் எலும்பு மணியைக் கோத்து அணிந்து கொண்டுள்ள கயிறும், அரிய வேதநூல்களான கோவணத்தின் மேல் கட்டிய திருவுடையும், பெரிய நிலத்தில் தோய்ந்த எழுதுதற்கரிய திருவடியும், திருவடியில் பஞ்ச முத்திரையும் மிக விளங்க,

890. பொடிமூடு தழலென்னத் திருமேனி தனிற்பொலிந்த
படிநீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்க்
கொடிநீடு மறுகணைந்து தம்முடைய குளிர்கமலத்
தடிநீடும் மனத்தன்பர் தம்மனையி னகம்புகுந்தார்.

தெளிவுரை : நெருப்பின் மேல் மூடிய சாம்பலைப் போல், திருமேனியின் மீது விளங்கிய அழிவற்ற இயல்பையுடைய வெண்ணீற்றை நிறையப் பூசிய தன்மையுடையவராகி, மிகுந்த கொடிகள் விளங்கிய தெருவை அடைந்து, தம் குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகள் நிலையாய்த் தங்குவதற்கு இடமான மனத்தையுடைய அன்பரான மானக்கஞ்சாற நாயனாரின் இல்லத்தில் புகுந்தார்.

891. வந்தணைந்த மாவிரத முனிவரைக்கண் டெதிரெழுந்து
சிந்தைகளி கூர்ந்துமகிழ் சிறந்தபெருந் தொண்டனார்
எந்தைபிரான் புரிதவத்தோர் இவ்விடத்தே யெழுந்தருள
உய்ந்தொழிந்தேன் அடியேன்என் றுருகியஅன் பொடுபணிந்தார்.

தெளிவுரை : வந்து சேர்ந்த மா விரதரான முனிவரை (இறைவரை)க் கண்டு, அவர் முன்பு எழுந்து நின்று, உள்ளம் களித்து மகிழ்ந்த தொண்டரான மானக் கஞ்சாறனார், எம் தலைவரான செய்யும் தவமுடைய எம்பெருமான் இங்கு எழுந்தருளுவதால் அடியேன் உய்ந்தேன் என்று உள்ளம் உருகிய அன்புடன் அவரை வணங்கினார்.

892. நற்றவராம் பெருமானார் நலமிகும்அன் பரைநோக்கி
உற்றசெயல் மங்கலமிங் கொழுகுவதென் எனஅடியேன்
பெற்றதொரு பெண்கொடிதன் வதுவையெனப் பெருந்தவரும்
மற்றுமக்குச் சோபனம்ஆ குவதென்று வாய்மொழிந்தார்.

தெளிவுரை : நல்ல தவத்தவராய் வந்த இறைவர் நன்மை மிகும் அன்பரான மானக்கஞ்சாறானாரைப் பார்த்து, இங்கு மங்கலம் அமைய நிகழ்கின்ற செயல் யாது? என்று வினவினார். அதற்கு நாயனார், அடியேன் பெற்ற ஒரு பெண்ணின் மணநிகழ்ச்சி இதுவாகும் என்று விடையிருத்தார்.

893. ஞானச்செய் தவரடிமேற் பணிந்துமனை யகம்நண்ணி
மானக்கஞ் சாறனார் மணக்கோலம் புனைந்திருந்த
தேனக்க மலர்க்கூந்தல் திருமகளைக் கொண்டணைந்து
பானற்கந் தரமறைத்து வருமவரைப் பணிவித்தார்.

தெளிவுரை : ஞான வடிவுடையவராய்ச் செய்யும் தவக்கோலம் தாங்கியவரின் அடியில் விழுந்து வணங்கி, தம் இல்லத்துள் சென்று, மணக்கோலம் பூண்டிருந்த தேன் பொருந்திய புதிதாய் மலர்ந்த பூக்கள் அணிந்த மகளை உடன் அழைத்துக் கொண்டு வந்து நீலகண்டத்தை மறைத்துக் கொண்டு வந்த இறைவரின் திருவடியில் விழுந்து வணங்கச் செய்தார்.

894. தஞ்சரணத் திடைப்பணிந்து தாழ்ந்தெழுந்த மடக்கொடிதன்
மஞ்சுதழைத் தெனவளர்ந்த மலர்க்கூந்தற் புறம்நோக்கி
அஞ்சலிமெய்த் தொண்டரைப்பார்த தணங்கிவள்தன் மயிர்நமக்குப்
பஞ்சவடிக் காமென்றார் பரவஅடித் தலங்கொடுப்பார்.

தெளிவுரை : தம்மை வணங்குபவர்க்குத் தம் திருவடியைக் கொடுப்பவரான சிவபெருமான், தம் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்து நின்ற இளமையுடைய கொடி போன்ற மேகம் தழைத்ததைப் போல் தழைத்து வளர்ந்த பூவணிந்த கூந்தலின் பக்கத்தைப் பார்த்து, வணங்கி நின்ற உண்மையான தொண்டரான மானக்கஞ்சாறனாரப் பார்த்து அணங்கைப் போன்ற இவளது தலைமயிர் நமக்குப் பஞ்சவடிக்கு ஆகும் என்றார். (பஞ்சவடி-மயிர்க் கயிற்றால் அமைந்த பூணூல் வடம்.)

895. அருள்செய்த மொழிகேளா அடற்சுரிகை தனையுருவிப்
பொருள்செய்தா மெனப்பெற்றேன் எனக்கொண்டு பூங்கொடிதன்
இருள்செய்த கருங்கூந்தல் அடியிலரிந் தெதிர்நின்ற
மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தி னிடைநீட்ட.

தெளிவுரை : இங்ஙனம் இறைவர் கூறியதைக் கேட்ட மானக்கஞ்சாறர் வன்மையுடைய தம் உடை வாளை உருவி, இதனைப் பொருட்படுத்தி (இது) பஞ்சவடிக்கு உதவும் எனக்கூறப்பெற்றேன்! என்று உள்ளத்தில் எண்ணி, பூங்கொடியைப் போன்ற மகளின் இருள் போன்ற கரிய கூந்தலை அரிந்து, எதிரே நின்ற, மயக்கம் செய்யும் பிறப்பை அறுப்பவரின் மலர் போன்ற கையில் அளிக்க,

896. வாங்குவார் போல்நின்ற மறைப்பொருளாம் அவர்மறைந்து
பாங்கின்மலை வல்லியுடன் பழையமழ விடையேறி
ஓங்கியவிண் மிசைவந்தார் ஒளிவிசும்பின் நிலம்நெருங்கத்
தூங்கியபொன் மலர்மாரி தொழும்பர்தொழு தெதிர்விழுந்தார்.

தெளிவுரை : அதனை வாங்குவதைப் போல் நின்ற மறைபொருளான இறைவர் மறைந்தருளினார். பக்கத்தில் நின்ற பார்வதியம்மையாருடன், தம் பழைய காளையின் மீது ஏறி, மேல் ஓங்கிய வானத்தின் மேல் வெளிப்பட்டுத் தோன்றியருளினார். ஒளி பொருந்திய வானமும் நிலமும் நிறைய அழகிய கற்பக மலர் மழை பெய்தது. மானக் கஞ்சாறர் வணங்கி நேரே நிலத்தில் பொருந்த விழுந்தார்.

897. விழுந்தெழுந்து மெய்ம்மறந்த மெய்யன்பர் தமக்குமதிக்
கொழுந்தலைய விழுங்கங்கை குதித்தசடைக் கூத்தனார்
எழும்பரிவு நம்பக்கல் உனக்கிருந்த பரிசிந்தச்
செழும்புவனங் களிலேறச் செய்தோமென் றருள்செய்தார்.

தெளிவுரை : கீழே விழுந்து எழுந்த மெய் மறந்து நின்ற மெய்யன்பருக்குப் பிறைமதி அலையும்படி பெருகி விழுகின்ற கங்கையாறு பெருகிய சடையையுடைய கூத்தனார், உமக்கு எம்மிடம் எழும் அன்பின் தன்மையை இந்தச் செழும்புவனத்தில் பொருந்துமாறு செய்தோம் என்று அருள் செய்தார்.

898. மருங்குபெருங் கணநாதர் போற்றிசைப்ப வானவர்கள்
நெருங்கவிடை மேல்கொண்டு நின்றவர்முன் நின்றவர்தாம்
ஒருங்கியநெஞ் சொடுகரங்கள் உச்சியின்மேற் குவித்தையர்
பெருங்கருணைத் திறம்போற்றும் பெரும்பேறு நேர்பெற்றார்.

தெளிவுரை : பக்கங்களில் உள்ள கணநாதர் போற்றவும், தேவர்கள் நெருங்கி வரவும், காளையூர்தியின் மீது அமர்ந்து வந்து நின்ற பெருமான் முன் நின்ற மானக் கஞ்சாறனார் ஒன்றுபட்ட மனத்துடன், கைகளை உச்சி மீது கூப்பிக் கொண்டு, இறைவனின் பெரிய அருள் திறத்தை எந்நாளும் துதிக்கும் பெரும் பேற்றினைப் பெற்றார்.

899. தொண்டனார் தமக்கருளிச் சூழ்ந்திமையோர் துதிசெய்ய
இண்டைவார் சடைமுடியார் எழுந்தருளிப் போயினார்
வண்டுவார் குழற்கொடியைக் கைப்பிடிக்க மணக்கோலங்
கண்டவர்கள் கண்களிப்பக் கலிக்காம னார்புகுந்தார்.

தெளிவுரை : தம் அன்பரான மானக்கஞ்சாறருக்கு இவ்வாறு அருள் செய்த பின்பு, தேவர்கள் சூழ்ந்து துதிக்க, இண்டை மாலையணிந்த நீண்ட சடையையுடைய சிவபெருமான் மறைந்தருளினார். வண்டுகள் மொய்த்தற்கு இடமான கூந்தலையுடைய மகளை மணம் செய்து கொள்ளும் பொருட்டு, மணக்கோலத்தைக் கண்டவரின் கண்கள் களிப்படையுமாறு ஏயர்கோன் கலிக்காமர் வந்து சேர்ந்தார்.

900. வந்தணைந்த ஏயர்குல மன்னவனார் மற்றந்தச்
சிந்தைநினை வரியசெயல் செறிந்தவர்பால் கேட்டருளிப்
புந்தியினில் மிகவுவந்து புனிதனார் அருள்போற்றிச்
சிந்தைதளர்ந் தருள்செய்த திருவாக்கின் திறங்கேட்டு.

தெளிவுரை : வந்து சேர்ந்த ஏயர்கோன் கலிக்காமர் உள்ளத்தாலும் நினைப்பதற்கு அரியதான அச்செயலை அங்குக் கூடியிருந்தவர்களின் பால் கேட்டறிந்து உள்ளத்தில் மகிழ்ச்சியடைந்து, இறைவர் செய்த திருவருளைப் போற்றித் துதித்துப் பின்பு உள்ளம் தளர்ந்து அருள் செய்த திருவாக்கின் திறத்தைக் கேட்டு,

901. மனந்தளரும் இடர்நீங்கி வானவர்நா யகரருளால்
புனைந்தமலர்க் குழல்பெற்ற பூங்கொடியை மணம்புணர்ந்து
தனம்பொழிந்து பெருவதுவை உலகெலாந் தலைசிறப்ப
இனம்பெருகத் தம்முடைய எயின்மூதூர் சென்றணைந்தார்.

தெளிவுரை : மனம் தளர்ந்ததால் உண்டான துன்பம் நீங்கியவராய்த் தேவ தேவரின் திருவருளால் முன் அணிந்திருந்த வண்ணமே பூக்கள் அணிந்த கூந்தலை வளரப்பெற்ற பூங்கொடி போன்ற மகளை மணம் செய்து செல்வத்தை எல்லார்க்கும் தந்து திருமண மகிழ்ச்சி உலகு எங்கும் ஓங்கிச் சிறக்கச் செய்து, சுற்றத்தவர் கூடிப் பெருகத் தம் மதில் சூழ்ந்த பழையவூரைப் போய் அடைந்தார்.

902. ஒருமகள் கூந்தல் தன்னை
வதுவைநாள் ஒருவர்க் கீந்த
பெருமையார் தன்மை போற்றும்
பெருமைஎன் அளவிற் றாமே
மருவிய கமரிற் புக்க
மாவடு விடேலென் னோசை
உரிமையால் கேட்க வல்லார்
திறமினி யுரைக்க லுற்றேன்.

தெளிவுரை : ஒரு மகளின் கூந்தலை அவரது திருமண நாளில் மாவிரதியாரிடம் அரிந்து நீட்டிய பெருமையுடைய மானக்கஞ்சாறரின் திறத்தை வியந்து துதிக்கும் பெருமை என் அளவில் அடங்குவதோ! அடங்காது. பொருந்திய நிலத்தின் வெடிப்பில் சிதறிய மாவடுவினை இறைவர் ஏற்றுக்கொண்ட விடேல் என்னும் ஓசையினை உரிமையால் கேட்க வல்லவரான அரிவாட்டாய நாயனாரின் சரிதத்தை இனிப் பேசத் தொடங்குகின்றேன்.

மானக்கஞ்சாற நாயனார் புராணம் முற்றிற்று.

19. அரிவாட்டாய நாயனார் புராணம்

சோழநாட்டில் உள்ள கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குடியில் தாயனார் என்பவர் ஒருவர் தோன்றினார். அவர் இறைவர்க்குச் செந்நெல் அரிசியும் செங்கீரையும் மாவடுவும் நாள்தோறும் தந்து வந்தார். அவரது இயல்பை உலகத்துக்கு உணர்த்த இறைவர் எண்ணினார். அதனால் அவர் வறுமையடையுமாறு செய்தார். எனினும் அவர் தாம் மேற்கொண்டிருந்த பணியைக் கைவிடவில்லை. கூலி வேலை செய்து தம் கடமையை நிறைவேற்றி வந்தார். கூலியாய்ச் செந்நெல் கிடைக்குமானால் அதனை இறைவர்க்குத் தந்து, கார் நெல் கிடைக்குமானால் அதைத் தம் உணவுக்கு வைத்துக் கொள்வார். இவ்வாறு இருக்கும் நாளில் அவ்வூர் வயலில் எல்லாம் செந்நெல்லே விளையும்படி அருள் செய்தார். எனவே அவர்க்குச் செந்நெல்லே கிடைக்க அதை இறைவர் திருவமுதுக்குத் தந்து வந்தார். அதனால் அவரது மனைவியார் தோட்டத்தில் உள்ள கீரையைப் பறித்து வந்து உணவாய்ப் படைத்தார். நாயனார் அதை உண்டு முன் போல் கடமையை செவ்வனே செய்து வந்தார். இவ்வாறாக அவர் பணியைச் செய்து வந்த நாள்களில் ஒருநாள் செந்நெல் அரிசி, மாவடு, செங்கீரை என்பனவற்றை எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றார். அவருடைய மனைவியார் ஒரு மட்கலத்தில் பஞ்சகவ்வியத்தை எடுத்துக் கொண்டு பின்னால் போனார். தாயனார் பசியால் வாட்டம் அடைந்திருந்ததால் தளர்ந்து விழப்போனார். அப்போது அவருடைய மனைவியார் பஞ்சகவ்வியத்தை மூடியிருந்த தம் கையால் அவரை அணைத்தார்.

அவ்வாறு அணைத்ததும் கூடையில் இருந்த செந்நெல்லரிசி, மாவடு, செங்கீரை முதலியவை நிலவெடிப்பில் விழுந்து விட்டன. தாயனார் அதைக் கண்டு, இனிக் கோயிலுக்குச் செல்வதில் பயனில்லை எனத் தளர்ந்தார். யான் கொணரும் இவற்றை இறைவர் உண்டருளும் பேற்றைப் பெற்றேனில்லையே! என்று வருந்தி அரிவாளால் என் கழுத்துடன் ஊட்டியை அரிவேன் என்று அரியத் தொடங்கினார். (அரிவாளால் ஊட்டியை அரிந்த தாயனார் ஆதலால் அரிவாள் தாயனார் ஆனார்) ஊட்டியை அரியும் அவரது கையைத் தடுக்கும் இறைவரது கையும், மாவடுவைக் கடிக்கின்ற விடேல் என்ற ஓசையும் நில வெடிப்பினின்று எழுந்தன. இறைவரது திருக்கை தம்மைப் பற்றிக் கொண்டதால் தாயனார் மகிழ்ந்தார். நீ செய்த செயல் நன்று! நின் மனைவியுடன் என் உலகத்துக்கு வருக என்று இறைவர் அருள் செய்தார்.

903. வரும்பு னற்பொன்னி நாட்டொரு வாழ்பதி
சுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
விரும்பு மென்க ணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன்சொரி யுங்கண மங்கலம்.

தெளிவுரை : நீர் ஓடி வருகின்ற காவிரி ஆறு பாயும் நாட்டில் வாழ்வுடைய ஒரு பதி, சுரும்புகள் வண்டுகளுடன் சூழ்ந்து ஒலிக்க விரும்பப்படும் மென்மையான கணுக்களையுடைய வாய் விட்டு நீளும் கரும்பு தேனைச் சொரிவதற்கு இடமானது கணமங்கலம் என்ற ஊராகும்.

904. செந்நெ லார்வயற் கட்டசெந் தாமரை
முன்னர் நந்துமிழ் முத்தம் சொரிந்திடத்
துன்னு மள்ளர்கைம் மேற்கொண்டு தோன்றுவார்
மன்னு பங்கய மாநிதி போன்றுளார்.

தெளிவுரை : செந்நெல் பயிர்கள் நிறைந்த வயல்களில் களை என்று எண்ணிப் பறித்து எறியப்பட்ட தாமரை மலர்களை, அவற்றில் முன்பு சங்கு ஈன்ற முத்துக்களைச் சொரியும்படி நெருங்கிய உழவர்கள் கையில் எடுத்துக் கொண்டு தோன்றலால், அவ்வுழவர்கள் பங்கய மாநிதி (பதுமநிதி) என்ற நிதியை ஏந்திய தேவர்களைப் போல் விளங்கினர்.

905. வளத்தில் நீடும் பதியதன் கண்வரி
உளர்த்தும் ஐம்பா லுடையோர் முகத்தினும்
களத்தின் மீதுங் கயல்பாய் வயல்அயல்
குளத்தும் நீளுங் குழையுடை நீலங்கள்.

தெளிவுரை : வளமையால் மிக்க அந்தவூரில் வண்டுகள் குடையும் கூந்தலையுடைய பெண்களின் முகத்திலும், காதணியை எட்டுகின்ற நீல மலர் போன்ற கண்கள் நீண்டு விளங்கும்; அவர்களின் கழுத்தின் மேலும் குழைவாய்ச் செய்யப்பட்ட நீலமணி அணிகள் விளங்கும். கயல் மீன்கள் பாய்வதற்கு இடமான வயல்களின் பக்கத்தில் உள்ள நீர் நிலையிலும் குழைகளையுடைய நீலமலர்கள் நீளப்படர்ந்து பூக்கும்.

906. அக்கு லப்பதி தன்னில் அறநெறித்
தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார்
தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கிய
மிக்க செல்வத்து வேளாண் தலைமையார்.

தெளிவுரை : அந்ந நல்ல ஊரில் தகுதியுடைய பெருமையுடைய இல்வாழ்வில் தங்கியவர் பழைமையாகக் கூடிய பெருநிதியால் மிக்க செல்வம் நிறைந்த வேளாண்மையில் தலைவர் ஆகியவர்.

907. தாய னாரெனும் நாமந் தரித்துளார்
சேய காலந் தொடர்ந்தும் தெளிவிலா
மாய னார்மண் கிளைத்தறி யாதஅத்
தூய நாண்மலர்ப் பாதந் தொடர்ந்துளார்.

தெளிவுரை : அவர் தாயனார் என்ற பெயரை பூண்டவர். நீண்டகாலம் தொடர்ந்திருந்தும் தெளிவில்லாத திருமால் மண்ணைத் தோண்டிச் சென்று தேடியும் அறியாத அந்தத் தூய புதிய மலர் போன்ற திருவடிகளைத் தொடர்ந்துள்ளவர் ஆவார்.

908. மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று
செந்நெல் இன்னமு தோடுசெங் கீரையும்
மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந்
தன்ன வென்றும் அமுதுசெய் விப்பரால்.

தெளிவுரை : தாயனார், விளங்கும் சிவந்த சடையையுடைய வேதியரான சிவபெருமானுக்கு ஆகும் என்று செந்நெல் அரிசியின் இனிய சோற்றுடன் செங்கீரையும், நிலைத்த பசுங்கொத்தான மாவடுவையும் கொண்டு அவற்றை ஒவ்வொரு நாளும் நியதியாய் அமுது செய்விப்பார்.

909. இந்த நன்னிலை இன்னல்வந் தெய்தினும்
சிந்தை நீங்காச் செயலின் உவந்திட
முந்தை வேத முதல்வ ரவர்வழி
வந்த செல்வம் அறியாமை மாற்றினார்.

தெளிவுரை : இந்த நல்ல திருத்தொண்டைத் துன்பம் வந்த காலத்திலும் உள்ளத்தில் விடாது பற்றிச் செய்து முடிப்பதைத் தாம் மகிழ்ந்து மேற்கொண்டிருந்த அவரைத் தம்மிடத்தே வைக்க, வேதங்களின் முதல்வரான சிவபெருமான், அவர்க்கு வழிவழி உண்டான மிகுந்த செல்வங்களை, அவை சென்ற வழி காண இயலாத வண்ணம் மாற்றியருள் செய்தார்.

910. மேவு செல்வங் களிறுண் விளங்கனி
ஆவ தாகி அழியவும் அன்பினால்
பாவை பாகர்க்கு முன்பு பயின்றஅத்
தாவில் செய்கை தவிர்ந்திலர் தாயனார்.

தெளிவுரை : தம்மிடம் பொருந்தியிருந்த செல்வங்கள் யாவும் யானை உண்ட விளங்கனி போல அழியவும், உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்டவர்க்கு அன்பினால் முன்னம் செய்து பழகிய அந்தக் குற்றம் இல்லாத தொண்டைத் தாயனார் கைவிட்டாரல்லர்.

911. அல்லல் நல்குர வாயிடக் கூலிக்கு
நெல்ல றுத்துமெய்ந் நீடிய அன்பினால்
நல்ல செந்நெலிற் பெற்றன நாயனார்க்
கொல்லை யின்னமு தாக்கொண் டொழுகுவார்.

தெளிவுரை : துன்பத்தை அளிக்கும் வறுமை ஏற்படவே, கூலிக்கு நெல்லறுத்தும், உண்மையின் நீடிய அன்பினால் அந்தக் கூலி கொண்டு நல்ல செந்நெல்லில் பெற்றவற்றைச் சிவபெருமானுக்கு விரைவில் இனிய திருவமுதாக ஆக்கி ஒழுகலானார்.

912. சாலி நேடி அறுத்தவை தாம்பெறும்
கூலி யெல்லாந் திருவமு தாக்கொண்டு
நீல நெல்லரி கூலிகொண் டுண்ணுநாள்
மால யற்கரி யாரது மாற்றுவார்.

தெளிவுரை : செந்நெல் தேடிச் சென்று அறுத்துக் கூலியாகப் பெற்ற செந்நெல்லை எல்லாம் இறைவனுக்குத் திருவமுதாக அமைத்து, கார் நெல்லை அரிந்து பெற்ற கூலியான கார் நெல்லால் தாம் உணவாக்கிக் கொண்டு வாழ்ந்து வந்தார். அக்காலத்தில், திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரியவரான இறைவர் அதை மாற்றுபவராய்.

913. நண்ணிய வயல்கள் எல்லாம் நாடொறும் முன்னங் காண
வண்ணவார் கதிர்ச்செஞ் சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி கொண்டிஃ தடியேன் செய்த
புண்ணிய மென்று போத அமுதுசெய் விப்பா ரானார்.

தெளிவுரை : (இறைவர்) பொருந்திய வயல்களில் எல்லாம் நாள்தோறும் முன் காணுமாறு அழகிய நீண்ட கதிர்களைக் கொண்ட செந்நெல் மட்டும் விளைவதாய் ஆக்கிட, அதைக் கண்டு பெருமையுடைய தாயனார், இது நான் செய்த புண்ணியமேயாகும் என்று மனம் மகிழ்ந்து, அதை அறுத்த கூலியான செந்நெல்லைக் கொண்டு இறைவரை நிரம்ப அமுது செய்விப்பார் ஆனார்.

914. வைகலும் உணவி லாமை மனைப்படப் பையினிற் புக்கு
நைகர மில்லா அன்பின் நங்கையார் அடகு கொய்து
பெய்கலத் தமைத்து வைக்கப் பெருந்தகை யருந்தித் தங்கள்
செய்கடன் முட்டா வண்ணந் திருப்பணி செய்யும் நாளில்.

தெளிவுரை : நாள்தோறும் உணவு இல்லாததால் குறையாக அன்பையுடைய மனைவியார், வீட்டின் கொல்லையில் புகுந்து கையால் பறிக்கும் இலைகளைப் பறித்துச் சமைத்து உண்கலத்தில் இட, அதையுண்டு, தாங்கள் நியதியாய்ச் செய்து வந்த திருத்தொண்டின் கடமை தவறாதபடி திருப்பணி செய்து வந்தார். அந்நாளில்,

915. மனைமருங் கடகு மாள வடநெடு வான மீனே
அனையவர் தண்ணீர் வார்க்க அமுதுசெய் தன்ப னாரும்
வினைசெயல் முடித்துச் செல்ல மேவுநா ளொருநாள் மிக்க
முனைவனார் தொண்டர்க் கங்கு நிகழ்ந்தது மொழியப் பெற்றேன்.

தெளிவுரை : வீட்டின் பக்கத்தில் இருந்த இலைக்கறிகள் இல்லாது போயின. அருந்ததி போன்ற கற்பினையுடைய மனைவியார், தண்ணீரை வார்க்க அதனையே நாயனார் உண்பார். உண்டு, தம் திருத்தொழிலையும் செயலையும் செய்து முடித்து வந்தார். இவ்வாறு கழிந்த நாட்களுள் ஒரு நாள், இறைவரின் தொண்டரான நாயனார்க்கு அங்கு நிகழ்ந்ததை இனி எடுத்துச் சொல்லும் பேறு பெற்றேன்.

916. முன்புபோல் முதல்வ னாரை அமுதுசெய் விக்க மூளும்
அன்புபோல் தூய செந்நெல் அரிசிமா வடுமென் கீரை
துன்புபோம் மனத்துத் தொண்டர் கூடையிற் சுமந்து போகப்
பின்புபோம் மனைவி யார்ஆன் பெற்றஅஞ் சேந்திச் சென்றார்.

தெளிவுரை : முன்போல் இறைவரை அமுது செய்விக்க மூண்டு எழுகின்ற அன்பு போலவே, செந்நெல் அரிசியினையும் மாவடுவையும் மென்மையான செங்கீரையையும் துன்பம் நீங்கிய மனத்தைக் கொண்ட தொண்டரான தாயனார், கூடையில் வைத்துச் சுமந்து கொண்டு போக, அவரது பின்னால் போகும் மனைவியார் ஆன் ஐந்து என்ற பஞ்சகவ்வியத்தை மண்கலத்தில் கொண்டு கையில் எடுத்துக் கொண்டு பின்னால் சென்றார்.

917. போதரா நின்ற போது புலர்ந்துகால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார் மட்கல மூடு கையால்
காதலால் அணைத்தும் எல்லாங் கமரிடைச் சிந்தக் கண்டு
பூதநா யகர்தந் தொண்டர் போவதங் கினிஏன் என்று.

தெளிவுரை : இங்ஙனம் தாயனார் சென்றபோது உடல் வாடியிருந்ததால் கால் தளர்ந்து தப்பி, வருந்தி வீழலானார். அத்தகையவரை ஆனைந்து கொண்ட மண்கலத்தை மூடும் கையினால் விழாமல் காக்கும் ஆசையால் மனைவியார் அவரை அணைத்ததும் செந்நெல் அரிசி மாவடு செங்கீரை ஆகிய எல்லாம் தரைப்பிளவிலே வீழ்ந்தன. அதைக் கண்டு, சிவபெருமானின் தொண்டரான தாயனார், இனி ஏன் அங்குப் போக வேண்டும் என்று,

918. நல்லசெங் கீரை தூய மாவடு அரிசி சிந்த
அல்லல்தீர்த் தாள வல்லார் அமுதுசெய் தருளும் அப்பே
றெல்லையில் தீமை யேனிங் கெய்திடப் பெற்றி லேனென்
றொல்லையி லரிவாள் பூட்டி ஊட்டியை அரிய லுற்றார்.

தெளிவுரை : நல்ல செங்கீரையும் தூய மாவடுவும் அரிசியும் சிந்திவிட்டதால் துன்பத்தை நீக்கி ஆட்கொள்பவரான சிவபெருமான் அவற்றை அமுது செய்து அதற்கு அருள்கின்ற அப்பேற்றை அளவற்ற தீமையுடைய நான் பெறவில்லையே! என்று விரைவில் அரிவாளைப் பூட்டித் தம் கழுத்தின் முன் பகுதியை அரியத் தொடங்கியவராய்,

919. ஆட்கொள்ளும் ஐயர் தாமிங் கமுதுசெய் திலர்கொ லென்னாப்
பூட்டிய அரிவாள் பற்றிப் புரையற விரவு மன்பு
காட்டிய நெறியி னுள்ளந் தண்டறக் கழுத்தி னோடே
ஊட்டியும் அரியா நின்றார் உறுபிறப் பரிவார் ஒத்தார்.

தெளிவுரை : என்னை ஆட்கொள்ளும் இறைவர் தாம் இங்கு அமுது செய்தாரிலையே என்று கழுத்தில் பூட்டிய அரிவாளைப் பிடித்துக் கொண்டு, பொருந்திய பிறப்பை அரிவார் போல, குற்றம் நீங்கிப் பொருந்தும் அன்பு காட்டிய வழியில் நெஞ்சங் குழல் பிளவு பட்டு அறுமாறு கழுத்துடன் மிடற்றை அரியலானார்.

920. மாசறு சிந்தை யன்பர் கழுத்தரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற அம்பலத் தாடு மையர்
வீசிய செய்ய கையும் மாவடு விடேல்வி டேலென்
றோசையுங் கமரி னின்றும் ஒக்கவே எழுந்த வன்றே.

தெளிவுரை : குற்றத்தை அறுக்கும் உள்ளம் உடைய தாயனார் தம் கழுத்தை அரிகின்ற அரிவாளைப் பற்றும் குற்றம் அற்ற வன்மையுடைய கையினது செயலைத் தடுக்க அம்பலத்தில் ஆடும் இறைவரின் வீசிய செய்ய இடக்கையும், மாவடுவினது விடேல் விடேல் என்ற ஓசையும் நிலவெடிப்பினின்று அப்போதே, ஒரு சேர எழுந்தது.

921. திருக்கைசென் றரிவாள் பற்றுந் திண்கையைப் பிடித்த போது
வெருக்கொடங் கூறு நீங்க வெவ்வினை விட்டு நீங்கிப்
பெருக்கவே மகிழ்ச்சி நீடத் தம்பிரான் பேணித் தந்த
அருட்பெருங் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று.

தெளிவுரை : அங்ஙனம் எழுந்த இறைவரின் திருக்கை சென்று, அரிவாளைப் பிடித்த நாயனாரின் வலிய கையைப் பிடித்தது. அப்போது, அவர் அஞ்சினர்; அப்போதே அரிவாளால் உண்டான புண் நீங்கிக் கொடிய வினையும் விட்டு நீங்கி, மிகுதியான மகிழ்ச்சி நீடத் தம் பெருமானார் தம்மைக் காத்த அருட்பெருங்கருணையை நோக்கிக் கைகளை அஞ்சலியாகக் குவித்து நின்று,

922. அடியனேன் அறிவி லாமை கண்டும்என் னடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்திங் கமுதுசெய் பரனே போற்றி
துடியிடை பாக மான தூயநற் சோதி போற்றி
பொடியணி பவள மேனிப் புரிசடைப் புராண போற்றி.

தெளிவுரை : அடியேனின் அறிவில்லாத தன்மையைக் கண்டும் என் அடிமையை வேண்டிப் பொருட்படுத்தி நிலத்தின் மேல் வெடிப்பிலே வந்து இங்கு அமுது செய்கின்ற இறைவனே, போற்றி! துடி போன்ற இடையையுடைய உமாதேவியாரை ஒரு பக்கத்தில் கொண்ட தூய சோதியே போற்றி! திருநீற்றினை அணிந்த பவளம் போன்ற மேனியையும் புரிசடையையும் உடைய பழையவனே, போற்றி!

923. என்றவர் போற்றி செய்ய இடபவா கனராய்த் தோன்றி
நன்றுநீ புரிந்த செய்கை நன்னுத லுடனே கூட
என்றும்நம் உலகில் வாழ்வாய் என்றவ ருடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர் மழவிடை உகைத்துச் சென்றார்.

தெளிவுரை : என்று தாயனார் துதிக்க, காளைவாகனராய் வெளிப்பட்டுக் காட்சி தந்து, நீ செய்த செயல் நன்று! நல்ல நெற்றியையுடைய மனைவியுடன் என்றும் நீங்காமல் நம் உலகத்தில் வாழ்வாயாக! என்று அருள் செய்து, அம்பலத்தில் ஆடும் இறைவர், அவர் தம்முடனே நண்ண, தம் இளைய விடையை இவர்ந்து சென்றருளினார்.

924. பரிவுறு சிந்தை யன்பர் பரம்பொரு ளாகி யுள்ள
பெரியவ ரமுது செய்யப் பெற்றிலே னென்று மாவின்
வரிவடு விடேலெ னாமுன் வன்கழுத் தரிவாள் பூட்டி
அரிதலால் அரிவாட் டாயர் ஆயினார் தூய நாமம்.

தெளிவுரை : அன்பு பொருந்திய உள்ளத்தை உடைய தாயனார், பரம்பொருளை இறைவர் இங்கு அமுது செய்தருளும் பேற்றை நான் பெறவில்லை! என்று கொண்டு வரியையுடைய மாவுடுவின் விடேல் என்ற ஓசையைக் கேட்பதற்கு முன்பு, தம் வன்கழுத்தை அரிவாளைப் பூட்டி அரிதலால் அரிவாள் தாயர் என்ற தூய பெயரை உடையவர் ஆனார்.

925. முன்னிலை கமரே யாக முதல்வனார் அமுது செய்யச்
செந்நெலின் அரிசி சிந்தச் செவியுற வடுவி னோசை
அந்நிலை கேட்ட தொண்டர் அடியிணை தொழுது வாழ்த்தி
மன்னும்ஆ னாயர் செய்கை அறிந்தவா வழுத்த லுற்றேன்.

தெளிவுரை : செந்நெல் அரிசி முதலியவை சிந்த, அவை சிதறிய அந்தக் கமரே முன்னிலையாய் இறைவர் அமுது செய்தருள, அந்நிலையில் மாவடுவினது விடேல் என்ற ஓசையைக் கேட்டதாகிய பேறு பெற்ற தொண்டரான தாயானாரின் திருவடியை வணங்கித் துதித்து, நிலைபெற்ற ஆனாயரின் செயலை அறிந்தவாறு துதிக்கத் தொடங்குகின்றேன்.

அரிவாட்டாய நாயனார் புராணம் முற்றுப் பெற்றது.

20. ஆனாய நாயனார் புராணம்

மழ நாட்டில் மங்கலம் என்ற ஊரில் ஆயர் குலத்தில் ஆனாயர் என்பவர் தோன்றினார். அவர் தம் ஏவலருடன் கூடிப் பசுக்கூட்டத்தைக் காட்டுக்குக் கொண்டு சென்று மேய்த்தும், இசை நூலில் கூறியபடி திருவைந்தெழுத்தைக் குழலில் இசைத்தும் வந்தார். கார் காலத்தில் ஒருநாள் அவர் பசுக்கூட்டங்களை ஓட்டிக் கொண்டு காட்டுக்குச் சென்றார். அங்கு ஒரு கொன்றை மரம். அது பூங்கொத்துகளை உடையதாய்ச் சிவபெருமானைப் போன்ற தோற்றம் உடையதாய் விளங்கியது. அதைப் பார்த்தார். ஆனாயர் மனம் உருகினார். திருவைந்தெழுத்தைக் குழலிசையில் இசைத்தார். அந்த இசை உயிர்களின் செவிகளில் தேவதாருவின் தேனை அமிழ்தத்துடன் கலந்து வார்த்ததைப் போல் விளங்கியது. புற்களை மேய்ந்த பசுக்கூட்டங்கள் அசை போடாமல் அவரை அடைந்து மெய்ம்மறந்து நின்றன. பாலைக் குடித்துக் கொண்டிருந்த கன்றுகள் எல்லாம் பால் குடித்தலை விட்டு இசையைக் கேட்டு நின்றன. எருதுகளும் மான் முதலான விலங்குகளும் உடல் புளகித்து வந்து சேர்ந்தன. ஆடும் மயில் கூட்டங்களும் தம் ஆடலை மறந்து அவர் பக்கத்தில் வந்து சேர்ந்தன. மற்றப் பறவை இனங்களும் அவரது இசையால் உருகி நின்றன. மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இடையர் எல்லாம் தம் தொழிலை மறந்து இசையைக் கேட்டனர். வித்தியாதரர், சாரணர், கின்னரர், தேவர் முதலானவர் இசை கேட்க, விமானங்களில் ஏறி வந்தனர். தேவ மகளிர் தம் கையால் அமுது ஊட்டும் பவளவாய்க் கிளிகளுடன் விமானங்களிலிருந்து ஏழிசையைப் பாடுகின்றனர். பாம்பு, மயில், சிங்கம், யானை, புலி என்பவை தம் தம் பகையை மறந்து இசை கேட்டு ஒன்று சேர்ந்திருந்தன. அந்த இசையைக் கேட்ட இறைவர் உமையொரு பாகராய்க் காட்சியளித்து, நீ உள்ள இந்த நிலையிலேயே எம் உலகத்தை அடைவாயாக! என்று அருள் செய்தார்.

926. மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற
நீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர்நாடு.

தெளிவுரை : மேல் மழ நாடு எனக்கூறப்படும் நீர்வளம் மிக்க நாடு, பக்கங்களில் பரவும் மணமுடைய அழகிய சோலைகளில் வான் சந்திரன் வந்து ஏறவும், சூடு அடிக்கும் நெல்லரிகள் பரப்பப்பட்ட பண்ணையின் வரம்புகளில் வண்டுகள் ஏறவும், மேன் மேல் அடுக்கப்பட்ட உயர்ந்துள்ள வைக்கோற் போர்களில் மேகங்கள் இளைத்து ஏறவும், நிலை பெற்ற வளத்தை உடையதாகும்.

927. நீவி நிதம்ப உழத்தியர் நெய்க்குழல் மைச்சூழல்
மேவி யுறங்குவ மென்சிறை வண்டு விரைக்கஞ்சப்
பூவி லுறங்குவ நீள்கயல் பூமலி தேமாவின்
காவின் நறுங்குளிர் நீழ லுறங்குவ கார்மேதி.

தெளிவுரை : கொய்சகம் வைத்த ஆடையை மேலே உடுத்திய அல்குலையுடைய உழத்தியரின் நெய் பூசப்பட்ட கரிய கூந்தலைப் பொருந்திய, மென்மையான சிறகையுடைய வண்டுகள் உறங்கும். மணமுடைய தாமரைப் பூவில் நீண்ட கயல் மீன்கள் உறங்கும். தேமாஞ் சோலையினது நறிய மணமும் குளிர்ச்சியுமுடைய நிழலில் கரிய எருமைகள் உறங்கும்.

928. வன்னிலை மள்ளர் உகைப்ப வெழுந்த மரக்கோவைப்
பன்முறை வந்தெழும் ஓசை பயின்ற முழக்கத்தால்
அன்னம் மருங்குறை தண்டுறை வாவி யதன்பாலைக்
கன்னல் அடும்புகை யால்முகில் செய்வ கருப்பாலை.

தெளிவுரை : கரும்பு ஆலைகள் வன்மையால் உழவர் செலுத்த எழுந்த இணை மரங்கள் பலமுறையும் சுற்றி வருவதால் எழும் ஓசை பயின்ற முழக்கத்தாலும், பக்கங்களில் அன்னங்கள் தங்கும் குளிர்ந்த துறையை உடைய நீர் நிலைகளின் பக்கத்தில் கருப்பஞ்சாறு காய்ச்சும் புகையினாலும் மேகத்தின் தோற்றமும் போன்ற தன்மையுடையனவாய் விளங்கும்.

929. பொங்கிய மாநதி நீடலை உந்து புனற்சங்கம்
துங்க விலைக்கத லிப்புதல் மீது தொடக்கிப்போய்த்
தங்கிய பாசடை சூழ்கொடி யூடு தவழ்ந்தேறிப்
பைங்கமு கின்தலை முத்தம் உதிர்க்குவ பாளையென.

தெளிவுரை : பெருகிய பெரிய ஆற்றில் நீண்ட அலைப்புனல் செலுத்திய சங்குகள், பெரிய இலைகளையுடைய வாழைப்புதரின் மேலே தொடர்ந்து போய், அந்த வாழையின் பசுமையான இலைகளைச் சுற்றியிருக்கும் கொடிகளின் வழியே தவழ்ந்து பசிய பாக்க மரத்தின் உச்சியில் ஏறிச் சேர்ந்து அவ்விடத்தில் அவற்றின் பாளைகள் பூவை உதிர்ப்பதைப் போன்று முத்துக்களை உதிர்க்கும்.

930. அல்லி மலர்ப்பழ னத்தயல் நாகிள ஆன்ஈனும்
ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று
கொல்லை மடக்குல மான்மறி யோடு குதித்தோடும்
மல்கு வளத்தது முல்லை யுடுத்த மருங்கோர்பால்.

தெளிவுரை : உள்ளிதழ் நிறைந்த மலர்களையுடைய வயல்களின் அருகில் ஒரு பக்கத்திலே முல்லைப்பகுதி சூழ்ந்த பக்க நிலம் விளங்கும் மிக்க இளமையுடைய பசு ஈன்ற, அசைத்தலால் முல்லை நிலத்தில் உள்ள மரம் செடி கொடிகளின் தலையினை விரைவில் உழக்கும் இளங்கன்று, கொல்லையில் உள்ள கூட்டமான கன்றுகளுடன் கூடிக் குதித்து ஓடும் நில வளத்தையுடையது.

931. கண்மலர் காவிகள் பாய இருப்பன கார்முல்லைத்
தண்ணகை வெண்முகை மேவு சுரும்பு தடஞ்சாலிப்
பண்ணை எழுங்கயல் பாய விருப்பன காயாவின்
வண்ண நறுஞ்சினை மேவிய வன்சிறை வண்டானம்.

தெளிவுரை : கார் காலத்தில் மலரும் முல்லைக் கொடியின் குளிர்ந்த பல்போன்ற வெண்மையான மலர்களில் உள்ள வண்டுகள், கண்களைப் போல் மலரும் மலர்களில் பாய்வன போல் இருந்தன. காயா மரத்தின் அழகிய செழித்த கிளைகளில் உள்ள நாரைகள், பெரிய நெற்பயிரையுடைய வயல்களினின்றும் மேல் எழுந்து துள்ளும் கயல் மீன்களின் மீது பாய்வனபோல் இருந்தன.

932. பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேலோடும்
வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம்
அங்கது மண்ணின் அருங்கல மாக அதற்கேயோர்
மங்கல மானது மங்கல மாகிய வாழ்மூதூர்.

தெளிவுரை : மரக்கொம்பின் பக்கத்தில் வண்டுகள் அலைவதற்கு இடமான சோலைகளில் மேலே வானவீதியில் செல்லும் கதிரவனின் வெம்மை வாய்ந்த கிரணங்கள் தங்குமாறு விளங்கிய நன்மையுடைய மேல் மழநாடு என்னும் அந்த நாடு இம்மண் உலகத்துக்கு அணியாய் விளங்கியது. நல்வாழ்வு அளிக்கின்ற திருமங்கலம் என்ற பெரிய பழைய ஊரானது அந்த நாட்டுக்கு ஒப்பில்லாத மங்கலமாக விளங்கியது.

933. ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே
தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும்
செப்ப வுயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர்மேவும்
அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்.

தெளிவுரை : அந்தப் பழமையான ஊர் ஒப்பில்லாத பெருங்குடிகள் நீண்ட காலமாய் இருந்து வருகின்ற தன்மையினால் ஒரு காலத்திலும் நீங்காமல், தவறாத வளங்கள் எல்லாம் பெருகச் செய்து அறங்களைச் செய்கின்ற இயல்புடனே எடுத்துக்காட்டாகச் சொல்லும்படி உயர்ந்த சிறப்பால் மிக்கதாகும். அங்ஙனம் சிறப்புப் பொருந்திய அந்தப் பதியில் நிலைத்த ஆயர் குலத்தைச் சார்ந்தவர் ஆனாயர்..

934. ஆயர் குலத்தை விளக்கிட வந்துத யஞ்செய்தார்
தூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்
வாயினில் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலில்
பேயுட னாடு பிரானடி யல்லது பேணாதார்.

தெளிவுரை : அவர், ஆயர்குலத்தை விளக்கம் செய்ய இந்த உலகத்தில் தோன்றியவர் ஆவார். தூய்மையான ஒளி வீசுகின்ற திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றார். வாக்காலும் உண்மைபெறத் துதிக்கும் உள்ளத்தாலும் செயல் வகையாலும் பேயுடன் ஆடுகின்ற சிவபெருமான் திருவடிகளையே அல்லாமல் வேறொன்றையும் போற்றார்.

935. ஆனிரை கூட அகன்புற விற்கொடு சென்றேறிக்
கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்தெங்கும்
தூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூநீருண்
டூனமில் ஆயம் உலப்பில பல்க அளித்துள்ளார்.

தெளிவுரை : ஆனாயர் பசுக்கூட்டங்களை, அகன்ற முல்லை நிலக் காட்டுக்கு ஒன்றாய்க் கொண்டு போய்க் காட்டில் உள்ள கொடிய விலங்குகளாலும் பொருந்தும் நோய்களாலும் வரும் துன்பங்களை நீக்கிக் காத்து, எவ்விடத்தும் தூய்மையான நல்ல மென்மையான புல்லை மேய்ந்து விரும்பும் தூய நீரைக் குடித்துக் குற்றம் இல்லாதவாறு பசுக்கூட்டங்கள் அளவில்லாமல் பெருகும்படி காத்து வந்தார்.

936. கன்றொடு பால்மறை நாகு கறப்பன பாலாவும்
புன்தலை மென்சினை ஆனொடு நீடு புனிற்றாவும்
வென்றி விடைக்குல மோடும் இனந்தொறும் வெவ்வேறே
துன்றி நிறைந்துள சூழ லுடன்பல தோழங்கள்.

தெளிவுரை : கன்றுகளுடனே பால் கறத்தல் மாறிய இளம் பசு, பால் கறக்கும் பசு, சிறிய மயிர் உள்ள தலையையும் மென்மையையும் உடைய சினைப்பசு, ஈன்றணிமையுடைய பசு என்ற இவையும், வெற்றியுடைய காளைகளின் கூட்டத்துடன் இவ்வாறு இனங்கள் தனித்தனியாக நெருங்கி நிறைந்துள்ள இடங்களுடன் கூடிய பல தொழுவர்கள் விளங்கின.

937. ஆவின் நிரைக்குலம் அப்படி பல்க அளித்தென்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம்பேணும்
காவலர் தம்பெரு மானடி அன்புறு கானத்தின்
மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேற்கொண்டார்.

தெளிவுரை : பசுக்களின் தொகுதிகள் அங்ஙனம் பெருகுமாறு காப்பாற்றி, கோவலர்களாகிய இடையர்கள் என்றும் தம் சொல்லின்படியே நடந்து தம் ஏவல்களைச் செய்து நிற்க ஆயர்குலத்தைக் காக்கும் சான்றோரான ஆனாயர், சிவபெருமானின் திருவடிகளில் அன்பு பொருந்திய இசையுடனே துளைக்கருவிக் குழல் இசைப்பதை மேற்கொண்டார்.

938. முந்தைமறை நூன்மரபின் மொழிந்தமுறை யெழுந்தவேய்
அந்தமுதல் நாலிரண்டில் அரிந்துநரம் புறுதானம்
வந்ததுளை நிரையாக்கி வாயுமுதல் வழங்குதுளை
அந்தமில்சீ ரிடையீட்டின் அங்குலியெண் களின்அமைத்து.

தெளிவுரை : பழைமையான இசைக்கலை வேத நூல்களில் சொன்ன மரபின்படி எழுந்து வளர்ந்துள்ள மூங்கிலில், நுனியில் நான்கு பங்கிலும் அடியில் இரண்டு பங்கிலும் அரிந்து இடைப்பட்ட பகுதியை எடுத்து, சுரங்கள் எழும் தானங்களின் வந்த துளைகளின் வரிசையை ஏற்படுத்தி முதலில் காற்று உண்டாக்கும் துளையையும் கேடில்லாத சிறப்பையுடைய இடைவெளி ஒவ்வோர் அங்குல அளவிலே துளைகள் செய்து,

939. எடுத்தகுழற் கருவியினில் எம்பிரான் எழுத்தைந்தும்
தொடுத்தமுறை யேழிசையின் சுருதிபெற வாசித்துத்
தடுத்தசரா சரங்களெலாம் தங்கவருந் தங்கருணை
அடுத்தஇசை யமுதளித்துச் செல்கின்றார் அங்கொருநாள்.

தெளிவுரை : இவ்வாறு அமைக்கப்பட்ட வேய்ங்குழலான துளை இசைக் கருவியில், எம்பெருமானின் திருஐந்தெழுத்தையும் தொடுத்து முறையில் வரும் ஏழிசை கருதி பெறுமாறு இசைத்து, அதனால் வேறு வழியில் செல்லாமல் இசையால் தடுக்கப்பட்ட சராசரங்கள் எல்லாம் பொருந்த வரும் தம் கருணையோடு கூடிய இசையமுதத்தை அளிப்பவரானார் ஆனாய நாயனார், அங்கு ஒருநாளில்,

940. வாசமலர்ப் பிணைபொங்க மயிர்நுழுதி மருங்குயர்ந்த
தேசுடைய சிகழிகையில் செறிகண்ணித் தொடைசெருகிப்
பாசிலைமென் கொடியின்வடம் பயிலநறு விலிபுனைந்து
காசுடைநாண் அதற்கயலே கருஞ்சுருளின் புறங்கட்டி.

தெளிவுரை : மணம் கமழும் மலர் மாலை விளங்கிக் காட்ட மயிரைக் கோதிப் பக்கத்தில் மேல் உயருமாறு விளக்கமாய் எடுத்து முடித்திட்ட சிகை முடியில், நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மலர் மாலையைச் சூடி, பசுமையான இலையுடைய மென்மையான கொடியாலான மாலையில் நறுவிலியைப் புனைந்து, பொன் காசுகள் கட்டிய கயிற்றாலே கரிய மயிர் முடியின் புறத்தைக் கட்டி,

941. வெண்கோடல் இலைச்சுருளிற் பைந்தோட்டு விரைத்தோன்றித்
தண்கோல மலர்புனைந்த வடிகாதின் ஒளிதயங்கத்
திண்கோல நெற்றியின்மேல் திருநீற்றின் ஒளிகண்டோர்
கண்கோடல் நிறைந்தாராக் கவின்விளங்க மிசையணிந்து.

தெளிவுரை : வெண்காந்தள் இலைச்சுருளில் பச்சை இதழும் மணமும் கொண்ட செங்காந்தளின் குளிர்ச்சியான அழகிய மலரைச் சூடிய காதின் ஒளி விளங்கித் திண்மையான அழகான நெற்றியின்மீது பூசிய வெண்ணீற்றின் ஒளியானது பார்ப்பவரின் கண்களைக் கொள்ளும்படி அழகு விளங்க உடலின் மேலே அணிந்து,

942. நிறைந்தநீ றணிமார்பின் நிரைமுல்லை முகைசுருக்கிச்
செறிந்தபுனை வடந்தாழத் திரள்தோளின் புடையலங்கல்
அறைந்தசுரும் பிசையரும்ப அரையுடுத்த மரவுரியின்
புறந்தழையின் மலிதானைப் பூம்பட்டுப் பொலிந்தசைய.

தெளிவுரை : நிறைவாய்த் திருநீற்றினைப் பூசிய மார்பில் வரிசையாய் முல்லை அரும்பைச் சுருக்கி நெருக்கமாக கட்டப்பட்ட மாலையானது தாழ்ந்து தொங்க, பருத்த தோள்களின் மீது அணிந்த மாலையின் மலர்கள், அவற்றில் மொய்த்து வண்டுகள் பாடிய இசையினால் மலர, அரையில் உடுத்த மரவுரி ஆடையின் வெளிப்பக்கத்தில் தழைகளால் ஆன பாட்டைப் போன்று விளங்கும் மேலாடை அழகாக அசைய,

943. சேவடியில் தொடுதோலும் செங்கையினில் வெண்கோலும்
மேவுமிசை வேய்ங்குழலும் மிகவிளங்க வினைசெய்யும்
காவல்புரி வல்லாயர் கன்றுடைஆன் நிரைசூழப்
பூவலர்தார்க் கோவலனார் நிரைகாக்கப் புறம்போந்தார்.

தெளிவுரை : சிவந்த திருவடியில் செருப்பும், சிவந்த கையிலே வெண்மையான கோலும் பொருந்திய இசையை அளிக்கின்ற வேய்ங்குழலும் விளக்கம் செய்ய, தம் ஏவலின் படி தொழில் செய்கின்ற காவலை மேற்கொண்ட ஆயர்களும் கன்றுகளுடன் கூடிய பசுக்கூட்டங்களும் தம்மைச் சூழ்ந்து வர, அரும்புகள் மலர்கின்ற மாலையை அணிந்த ஆனாயர் ஆனிரையை மேய்ப்பதற்கு வெளியே வந்தார்.

944. நீலமா மஞ்ஞை ஏங்க நிரைக்கொடிப் புறவம் பாடக்
கோலவெண் முகையோ முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட
ஆலுமின் னிடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள்
ஞாலநீ டரங்கி லாடக் காரெனும் பருவ நல்லாள்.

தெளிவுரை : நீலநிறம் கொண்ட பெரிய மயில்கள் அகவவும், வரிசையான கொடிகளில் உள்ள வண்டுகள் முல்லைப் பண்ணைப் பாடவும், இந்திர கோபமான வாயில் வெண்மையான அழகிய முல்லையரும்புகள் புன்முறுவல் செய்யவும், அசையும் மின்னலான இடையும், சூழ்கின்ற மாலைப்பொழுதான கொங்கை அசையவும், உலகம் என்ற பெரிய அரங்கத்தில் ஆடுவதற்குக் காலம் என்ற பருவத்தையுடைய மங்கையானவள் வந்தாள்.

945. எம்மருங்கும் நிரைபரப்ப எடுத்தகோல் உடைப்பொதுவர்
தம்மருங்கு தொழுதணையத் தண்புறவில் வருந்தலைவர்
அம்மருங்கு தாழ்ந்தசினை அலர்மருங்கு மதுவுண்டு
செம்மருந்தண் சுரும்புசுழல் செழுங்கொன்றை மருங்கணைந்தார்.

தெளிவுரை : எல்லாப் பக்கங்களிலும் பசுக்கூட்டங்களைப் பரவியிருக்கச் செய்து, மேய்ப்பதற்காக எடுத்த கோலையுடைய ஆயர்கள் தம் பக்கத்தில் தொழுதபடி வர, முல்லைக் காட்டில் வரும் தலைவரான ஆனாயர் அங்குக் கீழே தாழ்ந்த மரக்கிளைகளில் பூத்த பூக்களில் தேனைக் குடித்து மிக்க களிப்பைப் பொருந்தும் வண்டுகள் சுழன்று சுற்றிக் கொள்ளும் செழுமையான கொன்றை மரத்தின் பக்கத்தை அடைந்தார்.

946. சென்றணைந்த ஆனாயர் செய்தவிரைத் தாமமென
மன்றல்மலர்த் துணர்தூக்கி மருங்குதாழ் சடையார்போல்
நின்றநறும் கொன்றையினை நேர்நோக்கி நின்றுருகி
ஒன்றியசிந் தையிலன்பை உடையவர்பால் மடைதிறந்தார்.

தெளிவுரை : அவ்வாறு அங்குச் சேர்ந்த ஆனாயர் கையால் செய்யப்பட்ட மலர் மாலையைப் போல மணம் கமழும் மலர்களாகிய கொத்தைத் தொங்கவிட்டு, பக்கங்களில் தாழ்ந்து விளங்குகின்ற சடைகளையுடைய சிவபெருமானைப் போன்று நிறை மணம் கொண்ட கொன்றை மரத்தை நேராகப் பார்த்து உள்ளம் உருகி, தம்மவரான சிவபெருமானிடத்தில் ஒன்றுபட்ட உள்ளத்தினின்று எழும் அன்பின் மடையைத் திறந்தார்.

947. அன்பூறி மிசைப்பொங்கும் அமுதஇசைக் குழலொலியால்
வன்பூதப் படையாளி எழுத்தைந்தும் வழுத்தித்தாம்
முன்பூதி வருமளவின் முறைமையே யெவ்வுயிரும்
என்பூடு கரைந்துருக்கும் இன்னிசைவேய்ங் கருவிகளில்.

தெளிவுரை : அன்பின் உள்ளே ஊறி மேலே எழும் அமுதமான இசையை அளிக்கின்ற குழலின் ஓசையால், வன்மையான பூதகணப் படைகளை ஆள்கின்ற இறைவரின் திருவைந்தெழுத்தையும் துதித்து, தாம் முன் இசைத்து வரும் முறைப்படியே எவ்வுயிர்களையும் எலும்பையும் உருக்க வல்லதான இனிய ஓசை தரும் வேய்ங் குழற் கருவிகளில்,

948. ஏழுவிரல் இடையிட்ட இன்னிசைவங் கியமெடுத்துத்
தாழுமலர் வரிவண்டு தாதுபிடிப் பனபோலச்
சூழுமுரன் றெழநின்று தூயபெருந் தனித்துளையில்
வாழியநந் தோன்றலார் மணியதரம் வைத்தூத.

தெளிவுரை : ஏழு விரல்கள் இடையீடு உண்டாகத் துளை செய்யப்பட்ட இனிய இசைக் கருவியை எடுத்துத் தாழ்கின்ற மலர்களில் வண்டுகள் மகரந்தத்தைப் பிடிப்பதைப் போல் சூழ் துளைகளிலும், முரலுதல் எழுதல் நிற்றல் என்பன செய்து, தூய பெரிய துளையில், நம் ஆனாயர் அழகிய உதட்டை வைத்து ஊத,

949. முத்திரையே முதலனைத்தும் முறைத்தானஞ் சோதித்து
வைத்ததுளை ஆராய்ச்சி வக்கரனை வழிபோக்கி
ஒத்தநிலை யுணர்ந்ததற்பின் ஒன்றுமுதல் படிமுறையால்
அத்தகைமை ஆரோசை அமரோசை களின்அமைத்தார்.

தெளிவுரை : முத்திரைத் துளை முதலாக முறையான தானங்களை ஆராய்ந்து, இசை நூல்களில் விதித்த அளவிலே அமைத்திட்ட மற்றத் துளைகளை ஆராய்ச்சி செய்வதான வக்கரனையின் வழிப்பட்ட விரல்களை முறைப்படி செலுத்தி இசை ஒத்திருப்பதைக் கண்ட பின்னர், சட்சம் முதலாக நிடாதம் வரைக்கும் வரிசையாக அத்தன்மையாய் எச்சும் தக்கும் ஆகிய ஓசைகளில் அமைத்து,

950. மாறுமுதற் பண்ணின்பின் வளர்முல்லைப் பண்ணாக்கி
ஏறியதா ரமும்உழையும் கிழமைகொள இடுந்தானம்
ஆறுலவுஞ் சடைமுடியார் அஞ்செழுத்தி னிசைபெருகக்
கூறியபட் டடைக்குரலாங் கொடிப்பாலை யினில்நிறுத்தி.

தெளிவுரை : மாறி வரும் சுரங்களையுடைய குறிஞ்சிப் பண்ணின் பின் முல்லைப் பண்ணை ஆக்கி, பாலை யாழுக்குப் பொருந்திய தாரமும் உழையும் கிழமை கொள்ளும்படி இடும் தானங்களிலே, கங்கையாறு பொருந்துதற்கு இடமான சடைமுடியுடைய சிவபெருமானின் திருவைந்தெழுத்தின் இசை பெருகுமாறு கூறப்பட்ட இளியைக் குரலாக உடைய கொடிப் பாலையில் நிறுத்தி,

951. ஆயஇசைப் புகல்நான்கின் அமைந்தபுகல் வகையெடுத்து
மேயதுளை பற்றுவன விடுப்பனவாம் விரல்நிரையில்
சேயவொளி யிடையலையத் திருவாள னெழுத்தஞ்சுந்
தூயஇசைக் கிளைகொள்ளுந் துறையஞ்சின் முறைவிளைத்தார்.

தெளிவுரை : இசையில் உள்ள புகல் நான்கிலும் கொடிப்பாலைக்கு அமைந்த திறத்தை எடுத்துச் சுரம் எழும்பும் ஏழுதுளைகளில் விரல்களை மூடுவதும் எடுப்பதுமாகிய செயல்களால் இசையின் செவ்விய ஒளி இடையிலே சஞ்சரித்து விளங்கச் சிவபெருமானின் திருவைந்தெழுத்தும் தூய இசையின் ஏற்ற பகுப்பைக் கொள்ளும் ஐந்து துறைகளின் ஏற்ற முறையை விளைத்தவராய்,

952. மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன்முறையால்
தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரல்தொழில்கள் அளவுபெற அசைத்தியக்கிச்
சுந்தரச்செங் கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண.

தெளிவுரை : மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் (மெலிவு, சமன், வலிவு என்ற மூன்று வகையான கருதியிலும்) சுரதானத்துக்குக்குரிய துளைகளை முறையே மென்மையாகவும் சமமாகவும் வன்மையாகவும் மூடி இடையிட்ட துளைகளை உரிய அளவைப் பெறுமாறு அசைத்தும் இயக்கியும், சிவந்த கனி போன்ற உதடும் குழலின் துளைவாயும் ஒன்றுபட்டுக் கூடி இயங்க,

953. எண்ணியநூற் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும்
வண்ணஇசை வகையெல்லாம் மாதுரிய நாதத்தில்
நண்ணியபா ணியலும் தூக்குநடை முதற்கதியில்
பண்ணமைய எழுமோசை எம்மருங்கும் பரப்பினார்.

தெளிவுரை : இசை நூல்களில் அளவுபடுத்திய பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம் என்ற இசை வகைகள் எல்லாம் மதுரத்தையுடைய ஒலியில் அமைந்த தாளமும் இசையும் தூக்கும் நடை முதலிய கதிகளோடு பண் பொருத்தமுற எழும் ஓசையை எல்லாப் புறத்திலும் பரவச் செய்தார்.

954. வள்ளலார் வாசிக்கும் மணித்துளைவாய் வேய்ங்குழலின்
உள்ளுறைஅஞ் செழுத்தாக ஓங்கியெழும் மதுரவொலி
வெள்ளநிறைந் தெவ்வுயிர்க்கும் மேலமரர் தருவிளைதேன்
தெள்ளமுதின் உடன்கலந்து செவிவார்ப்ப தெனத்தேக்க.

தெளிவுரை : ஆனாயர் வாசிக்கும் அழகிய துளையுடைய வேய்ங்குழலில் இறைவரின் திருநாமமான திருவைந்தெழுத்தினை உள்ளுறையாய்க் கொண்டு ஒழுக்கு எடுத்து எல்லாப் பக்கங்களிலும் பெருகி எழும் இனிய இசை ஒலியின் வெள்ளமானது நிறைந்த எல்லா உயிர்களிடமும், மேன்மை வாய்ந்த தேவரின் கற்பக மரத்தில் விளைந்த தேனைத் தெளிவான அமுதத்துடன் கலந்து செவி வழியாய் வார்ப்பதைப் போல் விளங்கியது.

955. ஆனிரைகள் அறுகருந்தி அசைவிடா தணைந்தயரப்
பானுரைவாய்த் தாய்முலையில் பற்றுமிளங் கன்றினமும்
தானுணவு மறந்தொழியத் தடமருப்பின் விடைக்குலமும்
மான்முதலாம் கான்விலங்கும் மயிர்முகிழ்த்து வந்தணைய.

தெளிவுரை : முன்பு புல்லை மேய்த்த பசுக்கூட்டங்கள் பின் அசை போடாமல் இவரது பக்கமாகச் சேர்ந்து தம்மை மறந்து நின்றன. தாய் முலையைப் பற்றிப் பால் குடித்துக் கொண்டிருந்ததால் பால் நுரையுடன் கூடிய வாயையுடைய பசுங்கன்றின் கூட்டமும், பால் குடிக்கும் செயலைத் தாம் மறந்தன. கொம்புகளையுடைய எருதுக்கூட்டமும், மான் முதலிய காட்டு விலங்குகளும் மயிர்க் கூச்செறிந்து வந்து பக்கத்தில் சேர்ந்து நின்றன.

956. ஆடுமயில் இனங்களும்அங் கசைவயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி யிசைநிறைந்த உள்ளமொடு புள்ளினமும்
மாடுபடிந் துணர்வொழிய மருங்குதொழில் புரிந்தொழுகும்
கூடியவன் கோவலரும் குறைவினையின் துறைநின்றார்.

தெளிவுரை : ஆடும் இயல்புடைய மயில் கூட்டமும் அசைவில்லாது அங்குப் பக்கத்தில் வந்து கூடின; காதுகளின் வழியே சென்ற இசை நிறைந்த உள்ளத்துடன் பறவைக் கூட்டங்களும் பக்கத்தில் பொருந்தி வந்து தம் உணர்வு நீங்கின. பக்கத்தில் ஏவல் செய்து வரும் கூட்டமான வலிய ஆயர்களும் தாம் செய்து வந்த ஏவல் தொழில்களை முழுதும் செய்யாமல் (ஆனாயரின்) இசைக் கேட்ட அளவில் தாம் மேற்கொண்டிருந்த செயலைக் குறையாய் விட்டு வந்தனர்.

957. பணிபுவனங் களிலுள்ளார் பயில்பிலங்கள் வழியணைந்தார்
மணிவரைவாழ் அரமகளிர் மருங்குமயங் கினர்மலிந்தார்
தணிவிலொளி விஞ்சையர்கள் சாரணர்கின் னரர்அமரர்
அணிவிசும்பில் அயர்வெய்தி விமானங்கள் மிசையணைந்தார்.

தெளிவுரை : ஆனாயரின் இசையைக் கேட்டதால் நாகர் உலகத்தில் உள்ளவர்கள் தாம் முன்னம் வந்து பழக்கப்பட்ட பாதலப் பிலங்களின் வழியாய் இங்கு வந்து சேர்ந்தனர். அழகிய மலைகளில் வாழ்கின்ற தெய்வ மகளிர் அந்த இசையால் மயங்கிப் பக்கத்தில் வந்து நெருங்கினர். குறைவற்ற ஒளியையுடைய வித்தியாதர்களும் சாரணர்களும், கின்னரர்களும், தேவர்களும் தாங்கள் வாழும் வான் நிலைகளிலிருந்து இசைக்கு வயப்பட்டவராய்த் தம்மை மறந்து விமானங்களில் வந்து சேர்ந்தனர்.

958. சுரமகளிர் கற்பகப்பூஞ் சோலைகளின் மருங்கிருந்து
கரமலரின் அமுதூட்டுங் கனிவாய்மென் கிள்ளையுடன்
விரவுநறுங் குழலலைய விமானங்கள் விரைந்தேறிப்
பரவியஏழ் இசையமுதஞ் செவிமடுத்துப் பருகினார்.

தெளிவுரை : தேவ மங்கையர் கற்பகப் பூஞ்சோலைகளின் பக்கத்திலிருந்து தாமரை மலர் போன்ற தம் கைகளால் அமுது ஊட்டும் கனியுடைய வாய் பொருந்திய மென்மையான கிளிகளுடன் தம் கூந்தல் அலையுமாறு தங்கள் தங்கள் விமானங்களில் விரைந்து ஏறி வந்து பரந்து பட்டுச் சென்ற ஏழிசை அமுதத்தை அருந்தினர்.

959. நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றாய் நயத்தலினால்
மலிவாய்வெள் ளெயிற்றரவம் மயில்மீது மருண்டுவிழும்
சலியாத நிலைஅரியுந் தடங்கரியும் உடன்சாரும்
புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும். 

தெளிவுரை : வருந்துகின்றவரும் அதனால் வருத்தப்படுபவரும் உணர்ச்சி ஒன்றான அந்த இசையை விரும்பியதால் வாயில்மிக்க பற்களையுடைய பாம்பு அந்த இசையினால் மயங்கித் தன் பகையான மயிலின் மேல் விழும், சலியாத நிலையுடைய சிங்கமும் பெரிய யானையுடன் கூடின. புலியினது வாயின் பக்கத்தில், புல்லை வாயில் கொண்ட மானும் சேர்ந்தது.

960. மருவியகால் விசைத்தசையா மரங்கள்மலர்ச் சினைசலியா
கருவரைவீழ் அருவிகளுங் கான்யாறுங் கலித்தோடா
பெருமுகிலின் குலங்கள்புடை பெயர்வொழியப் புனல்சோரா
இருவிசும்பி னிடைமுழங்கா எழுகடலு மிடைதுளும்பா.

தெளிவுரை : அந்த இசை காரணமாக, கண்ணுக்குப் புலனாகாத காற்றானது விசையுடன் இயங்காது, மரங்களில் உள்ள மலர்களுடன் கூடிய கிளைகளும் அசையாமல் இருந்தன. கரியமலையினின்று விழும் அருவிகளும் காட்டாறுகளும் ஒலித்து ஓடவில்லை! பெரிய முகில் கூட்டங்களும் இயக்கம் இல்லாது மழை நீரைப் பெய்யவில்லை! அவை வானில் ஒலியை எழுப்பா! ஏழு கடல்களும் துளும்பா!

961. இவ்வாறு நிற்பனவுஞ் சரிப்பனவும் இசைமயமாய்
மெய்வாழும் புலன்கரண மேவியவொன் றாயினவால்
மொய்வாச நறுங்கொன்றை முடிச்சடையார் அடித்தொண்டர்
செவ்வாயின் மிசைவைத்த திருக்குழல்வா சனையுருக்க.

தெளிவுரை : பொருந்திய மணம் கொண்ட நறுமணம் உடைய கொன்றை மலரைச் சூடிய முடிச்சடையைக் கொண்ட சிவபெருமானின் அடித்தொண்டரான ஆனாய நாயனார் சிவந்த வாயில் வைத்து இசைத்த திருக்குழல் ஒலி உள்ளே புகுந்து உருக்குவதால், இங்ஙனம் இயங்காத பொருள்களும் இயங்கும் உயிர்களும் இசைமயமேயாகித் தம் உடலும் அதில் வாழும் புலன்களும் கரணங்களும் இசையான ஒரு தன்மையை அடைந்தன.

962. மெய்யன்பர் மனத்தன்பின் விளைத்தஇசைக் குழலோசை
வையந்தன் னையும்நிறைத்து வானந்தன் வயமாக்கிப்
பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவில் நடம்புரியும்
ஐயன்தன் திருச்செவியின் அருகணையப் பெருகியதால்.

தெளிவுரை : மெய்யன்பரான ஆனாயரின் அன்பால் விளைந்த குழலின் இசை ஒலியானது இந்த உலகத்தை நிறைத்தது. வான் உலகத்தையும் தன்வயமாக்கியது. பொய் அன்பினுக்கு எட்டாதவரும் பொன்னம்பலத்தில் திருக்கூத்து ஆடுபவருமாகிய எம்பெருமானது திருச்செவியின் பக்கத்தில் அணையுமாறு அந்த இசை பொருந்தியது.

963. ஆனாயர் குழலோசை கேட்டருளி அருட்கருணை
தானாய திருவுள்ளம் உடையதவ வல்லியுடன்
கானாதி காரணராம் கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார் மதிநாறும் சடைதாழ.

தெளிவுரை : ஆனாய நாயனாரின் குழலோசையைக் கேட்டு அருள் பொதிந்த திருவுள்ளத்தினைக் கொண்ட தவ வல்லியான உமையம்மையாருடனே இசைக்கெல்லாம் முதற்காரணமான சிவபெருமான் காளையூர்தியின் மீது இவர்ந்து எழுந்தருளி, பிறைமதி இருத்தற்கு இடமான சடையானது தாழும்படி, வான் வீதி வழியே வந்து சேர்ந்தார்.

964. திசைமுழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன்நெருங்கி
மிசைமிடைந்து வரும்பொழுது வேற்றொலிகள் விரவாமே
அசையவெழுங் குழல்நாதத் தஞ்செழுத்தால் தமைப்பரவும்
இசைவிரும்புங் கூத்தனார் எழுந்தருளி யெதிர்நின்றார்.

தெளிவுரை : எல்லாத் திசைகளிலிருந்தும் தேவர்களுக்கு முன்னம் மேல் நெருங்கிச் சென்ற சிவகணநாதர்கள் வரும் போது, குழலின் ஓசைக்கு மாறான பிற ஒலிகள் இøயில் புகுந்து கலவாமல், ஒலியலையாக அசைய எழுகின்ற குழலின் இசையில் அமைத்த திருவைந்தெழுத்தால் தம்மைப் பரவித் துதிக்கின்ற அருட்கூத்தனாரான சிவபெருமான் முன்கூறிய வண்ணம் எழுந்தருளி எதிரே நின்றருளினார்.

965. முன்னின்ற மழவிடைமேல் முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப்பெரியோர் திருக்குழல்வா சனைகேட்க
இந்நின்ற நிலையேநம் பாலணைவாய் எனஅவரும்
அந்நின்ற நிலைபெயர்ப்பார் ஐயர்திரு மருங்கணைந்தார்.

தெளிவுரை : அங்ஙனம் ஆனாயர் முன்னம் எழுந்தருளி நின்ற இளமையாகிய விடையின் மீது வந்த முதல்வரான சிவபெருமான், செம்மையுடைய உள்ளத்தையுடைய சான்றோரான ஆனாயரின் திருக்குழல் ஒலியை எப்போதும் தாம் கேட்டுக் கொண்டிருப்பதற்காக, இங்கு நின்ற நிலைமையிலேயே எம்மிடத்தில் நீ வருவாயாக! என்றருளிச் செய்தனர். ஆனாயரும் அப்படியே அங்கு நின்ற அந்த நிலையினின்று நீங்கி இறைவனின் திருமருங்கில் சேர்ந்தார்.

966. விண்ணவர்கள் மலர்மாரி மிடைந்துலக மிசைவிளங்க
எண்ணிலரு முனிவர்குழாம் இருக்குமொழி எடுத்தேத்த
அண்ணலார் குழற்கருவி அருகிசைத்தங் குடன்செல்லப்
புண்ணியனார் எழுந்தருளிப் பொற்பொதுவின் இடைப்புக்கார்.

தெளிவுரை : வானவர் பொழிந்த கற்பக மலர் மழை நெருங்கி உலகத்தில் விளங்கவும், எண்ணில்லாத அரிய முனிவர் கூட்டங்கள் மறைகளால் துதிக்கவும், பெருமையுடைய ஆனாயர் குழலிசையை இசைத்தபடி பக்கத்திலே செல்லவும், புண்ணியரான சிவபெருமான் அங்கு நின்று எழுந்தருளிப் பொன்னம்பலத்தில் புகுந்தருளினார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி

967. தீதுகொள் வினைக்கு வாரோம் செஞ்சடைக் கூத்தர் தம்மைக்
காதுகொள் குழைகள் வீசும் கதிர்நில விருள்கால் சீப்ப
மாதுகொள் புலவி நீக்க மனையிடை இருகாற் செல்லத்
தூதுகொள் பவராம் நம்மைத் தொழும்புகொண் டுரிமை கொள்வார்.

தெளிவுரை : பரவை நாச்சியார் கொண்டிருந்த ஊடலைப் போக்குதற்காகச் சிவந்த சடையையுடைய சிவபெருமானை, செவியில் அணிந்த குழைகள் வீசுகின்ற நிலவு ஒளி இருளைப் போக்க, பரவை நாச்சியாரின் திருமாளிகைக்கு இரண்டு முறை போகுமாறு, அவரைத் தூதராய் ஏவல் கொள்பவரான ஆளுடைய நம்பியான சுந்தரர், நம்மை அடிமையாகக் கொள்வதற்கு உரியவர் ஆவர். எனவே, தீமையுடைய வினையின் வழியதான பிறவியில் யாம் சேர மாட்டோம்.

ஆனாய நாயனார் புராணம் முற்றிற்று.

இலைமலிந்த சருக்கம் முற்றிற்று.

 
மேலும் பனிரெண்டாம் திருமறை »
temple news
பன்னிரு திருமுறைகளில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் 12வது ... மேலும்
 
temple news
12ம் திருமுறையில் சேக்கிழாரால் பாடப்பட்ட திருத்தொண்டர் புராணம் 4286 பாடல்களும், அதன் தெளிவுரையும் கீழே ... மேலும்
 
temple news
4. மும்மையால் உலகாண்ட சருக்கம் இச்சருக்கத்தில் மூர்த்தியார், முருகர், உருத்திர பசுபதியார், திருநாளைப் ... மேலும்
 
temple news
1501. அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணிசண்பைமைம்மலி கண்டத் தண்டர் பிரானார் மகனாரும்கொய்ம்மலர் வாவித் ... மேலும்
 
temple news
இரண்டாம் காண்டம் 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் 34. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் சைவ சமயம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar