Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் ... 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-5 | திருத்தொண்டர் புராணம் 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் ...
முதல் பக்கம் » பனிரெண்டாம் திருமறை
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-4 | திருத்தொண்டர் புராணம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 செப்
2011
05:09

1501. அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணிசண்பை
மைம்மலி கண்டத் தண்டர் பிரானார் மகனாரும்
கொய்ம்மலர் வாவித் தென்திரு வாரூர் கும்பிட்டே
உம்முடன் வந்திங் குடன்அமர் வேன்என் றுரைசெய்தார்.

தெளிவுரை : அந்தச் சொன் மாலையான தமிழ்ப் பதிகத்தைக் கேட்டு அழகிய சீகாழியில் தோன்றிய நீலகண்டம் கொண்ட தேவர் தலைவரின் மகனாரான ஞானசம்பந்தரும் அரும்புகள் மலரும் பொய்கைகளையுடைய தென் திருவாரூர்க்குச் சென்று வணங்கி அதன் பின்பு மீண்டு வந்து உம்முடன் கூடி உடன் அமர்வேன் என இயம்பினார்.

1502. மாமதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச்செந்
தாமரை யோடைச் சண்பையர் நாதன் தான்ஏக
நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத் தொடுபுக்கார்
பூமலர் வாசத் தண்பணை சூழும் புகலூரில்.

தெளிவுரை : பெரிய மதில் சூழ்ந்த திருவாரூர்த் தியாகராசரை அங்குச் சென்று வணங்குவதற்குச் செந்தாமரை ஓடையையுடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் சென்றார். நாவில் பொருந்தும் வாக்குத் தலைவரான நாவுக்கரசரும் மிக்க ஆசையுடனே மலர்கள் மலர்தலால் மணம் கமழும் குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட புகலூரில் புகுந்தார்.

1503. அத்திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தம்
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டுந் தெளிவெள்ளம்
மொய்த்திழி தாரைக் கண்பொழி நீர்மெய்ம் முழுதாரப்
பைத்தலை நாகப் பூண்அணி வாரைப் பணிவுற்றார்.

தெளிவுரை : அந்தப் பழையவூரில் வீற்றிருக்கும் திருநாவுக்கரசரும் தம் உள்ளத்தில் நிறைவாகித் தேக்கித் தெளிந்த வெள்ளமாகக் கூர்ந்து வழியும் தாரையாய்க் கண்களினின்றும் பொழியும் நீர் உடல் முழுதும் நிரம்பப் பொருந்த, நச்சுப் பையைக் கொண்ட தலையையுடைய பாம்பைப் பூணாகப் பூண்ட சிவபெருமானைப் பணிந்தார்.

1504. தேவர் பிரானைத் தென்புக லூர்மன் னியதேனைப்
பாவியல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடும்
மேவிய காலந் தோறும் விருப்பிற் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி செய்தங் குறைகின்றார்.

தெளிவுரை : தேவர்களுக்கெல்லாம் தலைவரை, அழகிய புகலூரில் நிலைபெற்று எழுந்தருளிய தேன் போன்றவரைப் பாக்களின் இயல்பு முற்றும் பொருந்திய தமிழ் மாலைகளைப் பாடி, அன்புடனே பொருந்திய காலங்களில் எல்லாம் விருப்புடன் வணங்கி, நீங்குதல் இல்லாத திருப்பணிகளைச் செய்து கொண்டு அங்குத் தங்குபவராகி,

1505. சீர்தரு செங்காட் டங்குடி நீடுந் திருநள்ளா
றார்தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி
வார்திகழ் மென்முலை யாளொரு பாகன் திருமருகல்
ஏர்தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்.

தெளிவுரை : அப்பெருமான் சிறப்புடைய திருச்செங்காட்டங்குடி, திருநீடும் நள்ளாறு, பூமரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருச்சாத்த மங்கை அயவந்தி, கச்சுப் பொருந்திய கொங்கையையுடைய அம்மையை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானின் திருமருகல் என்னும் இவற்றையெல்லாம் அன்புடன் சென்று வணங்கி இன்பம் அடைந்தார்.

1506. அப்படிச் சின்னாள் சென்றபின் ஆரூர் நகராளும்
துப்புறழ் வேணிக் கண்ணுத லாரைத் தொழுதிப்பால்
மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்தெங்கள்
பொற்புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில்.

தெளிவுரை : அங்ஙனம் சில நாட்கள் சென்றன, பின்பு, திருவாரூர்த் திருநகரை ஆளும் பவளம் போன்ற சடையையுடைய நெற்றிக் கண்ணரான இறைவரைத் தொழுது கொண்டு, மெய்ப்பொருளான ஞானத்தை உண்டருளிய சீகாழியில் தோன்றிய முப்புரிநூல் அணிந்த மார்பினரான எம் ஆளுடைய பிள்ளையாரும் திருப்புகலூருக்கு வந்தார்.

1507. பிள்ளையார் எழுந்தருளப் பெருவிருப்பால் வாகீசர்
உள்ளம்மகிழ்ந் தெதிர்கொண்டங் குடனுறையு நாளின்கண்
வள்ளலார் சிறுத்தொண்டர் மற்றவர்பால் எழுந்தருள
எள்ளருஞ்சீர் நீலநக்கர் தாமும்எழுந் தருளினார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் அங்ஙனம் வந்தாராக, பெரு விருப்புடன் நாவுக்கரசர் உள்ளம் மகிழ்ந்து அவரை எதிர்கொண்டு அழைத்து, வந்து திருப்புகலூரிலே அவருடன் கூடித் தங்கியிருந்தார். அவ்வாறு இருந்த நாட்களில் வள்ளலாரான சிறுத்தொண்டர் அவ்விரு பெருமக்களிடத்து வந்தார். பின்பு கெடுதல் இல்லாத சிறப்புடைய நீலநக்க நாயனாரும் அங்கு வந்து கூடினார்.

1508. ஆங்கணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம்
ஓங்குபுகழ் முருகனார் திருமடத்தில் உடனாகப்
பாங்கில்வரும் சீரடியார் பலருமுடன் பயில்கேண்மை
நீங்கரிய திருத்தொண்டின் நிலையுணர்ந்து நிகழ்கின்றார்.

தெளிவுரை : அவ்வாறு வந்த சிறுத்தொண்ட நாயனார் திருநீலநக்க நாயனார் என்னும் அவர்களோடும் அந்தத் தலத்தில் அந்தணரான மிக்க புகழுடைய முருக நாயனாரின் மடத்தில் ஒன்று கூடியவராய், அந்தப் பான்மையில் வரும் சிறப்புடைய அடியவர் பலரும் உடன் பயிலும் அன்பின் சிறப்பால் வரும் நீங்குவதற்கரிய திருத்தொண்டின் நிலையுணர்ந்து நிகழ்கின்றாராய்,

1509. திருப்பதிகச் செழுந்தமிழின் திறம்போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர் பொற்றாளில்
விருப்புடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்துரைத்தங்
கொருப்படுசிந் தையினார்கள் உடனுறைவின் பயன்பெற்றார்.

தெளிவுரை : திருப்பதிகங்களான செழுந்தமிழின் இயல்பைத் துதித்து, மகிழ்ந்து, மலையரசனின் மகளாரான பார்வதியம்மையாரை இடப்பாகத்தில் கொண்ட சிவபெருமானின் திருவடிகளில் மிக்க அன்புடைய திருத்தொணடரின் பெருமையை விரிவாகப் பேசி, அதனால் ஒன்றுபடும் மனம் உடையவராய், அடியாருடன் உறைதலால் வரும் சிவானந்தமான பெரும் பயனைப் பெற்றனர்.

1510. அந்நாளில் தமக்கேற்ற திருத்தொண்டின் நெறியாற்ற
மின்னார்செஞ் சடைஅண்ணல் மேவுபதி எனைப்பலவும்
முன்னாகச் சென்றேத்தி முதல்வன்தாள் தொழுவதற்குப்
பொன்னாரும் மணிமாடப் பூம்புகலூர் தொழுதகன்றார்.

தெளிவுரை : அத்தகைய நாட்களில் தங்களுக்கு ஏற்றதான திருத்தொண்டினைச் செய்வதற்காக மின்போல் விளங்கும் சிவந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் தலங்கள் பலவற்றிலும் சென்று போற்றி, முதல்வரின் திருவடிகளைத் தொழுவதன் பொருட்டு அழகிய மணிகளையுடைய மாளிகைகள் நிறைந்த பூம்புகலூரைத் தொழுது புறப்பட்டவராய்,

1511. திருநீல நக்கடிகள் சிறுத்தொண்டர் முருகனார்
பெருநீர்மை அடியார்கள் பிறரும்விடை கொண்டேக
ஒருநீர்மை மனத்துடைய பிள்ளையா ருடன்அரசும்
வருநீர்செஞ் சடைக்கரந்தார் திருஅம்பர் வணங்கினார்.

தெளிவுரை : திருநீலநக்கரும், சிறுதொண்ட நாயனாரும், முருக நாயனாரும், பெருமையுடைய மற்ற அடியார்களும், மற்றவரும் விடைபெற்றுக் கொண்டு சென்றனர். ஒன்றுபட்ட உள்ளத்தவர்களான ஆளுடைய பிள்ளையாரும், ஆளுடைய அரசும், வானின்றும் இறங்கி வரும் கங்கைப் பெருக்கைச் சிவந்த நடையில் மறைத்து வைத்த இறைவரின் திருவம்பர் தலத்தை வணங்கினர்.

1512. செங்குமுத மலர்வாவித் திருக்கடவூர் அணைந்தருளிப்
பொங்கியவெங் கூற்றடர்த்த பொன்னடிகள் தொழுதேத்திக்
குங்குலியக் கலயனார் திருமடத்தில் குறைவறுப்ப
அங்கவர்பால் சிவனடியா ருடன்அமுது செய்தார்கள்.

தெளிவுரை : செங்குமுத மலர்கள் மலரும் பொய்கைகளையுடைய திருக்கடவூரினைச் சேர்ந்து, சினம் மிகுந்து வந்த கூற்றுவனை உதைத்த இறைவரின் பொற்பாதங்களை வணங்கி, குங்குலியக் கலய நாயனாரின் திருமடத்தில் எழுந்தருளினார். அவர் அடியார்க்கு வேண்டியனவற்றையெல்லாம் அளிக்க, அம்மடத்தில் அவருடன் எழுந்தருளி, ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் கூடிய சிவனடியார்களுடன் உணவு கொண்டருளினர்.

1513. சீர்மன்னுந் திருக்கடவூர்த் திருமயா னமும்வணங்கி
ஏர்மன்னும் இன்னிசைப்பாப் பலபாடி இனிதமர்ந்து
கார்மன்னுங் கறைக்கண்டர் கழலிணைகள் தொழுதகன்று
தேர்மன்னும் மணிவீதித் திருவாக்கூர் சென்றணைந்தார்.

தெளிவுரை : அவ்விருவரும், சீர் பொருந்திய திருக்கடவூர்த் திருமயானம் என்ற தலத்தினும் போய் வணங்கி, அழகுடைய இனிய இசை கொண்ட தேவாரப் பாடல்கள் பலவற்றையும் பாடி வணங்கி, இனிதாய் அங்கு வீற்றிருந்தனர். மேகத்தின் தன்மை பொருந்திய நீலகண்டரின் திருவடிகளை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டுத் தேர் பொருந்திய திருஆக்கூரில் போய்ச் சேர்ந்தனர்.

1514. சார்ந்தார்தம் புகலிடத்தைத் தான்தோன்றி மாடத்துக்
கூர்ந்தார்வம் உறப்பணிந்து கோதில்தமிழ்த் தொடைபுனைந்து
வார்ந்தாடுஞ் சடையார்தம் பதிபலவும் வணங்கியுடன்
சேர்ந்தார்கள் தம்பெருமான் திருவீழி மிழலையினை.

தெளிவுரை : தம்மை வந்து அடைந்தவர்க்கு அடைக்கலத்தைத் தந்து விளங்கும் சிவபெருமானை அந்தப் பதியில் உள்ள தான் தோன்றி மடம் என்னும் கோயிலுள் கண்டு, மிக்க அன்பு பொருந்த வணங்கிக் குற்றம் இல்லாத தமிழ்த் தொடைமாலை பாடி அங்கிருந்து புறப்பட்டு, அசைந்து ஆடும் சடையுடைய இறைவர் வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் போய் வணங்கிப் பின்னர் அவ்விருவரும் தம் பெருமானின் திருவீழிமிழலையைச் சேர்ந்தனர்.

1515. வீழி மிழலை வந்தணைய
மேவு நாவுக் கரசினையும்
காழி ஞானப் பிள்ளையையும்
கலந்த உள்ளக் காதலினால்
ஆழி வலவன் அறியாத
அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர்கொண்டு
வணங்க வணங்கி உள்புக்கார்.

தெளிவுரை : திருவீழி மிழலையில் வந்து முதலில் சேர்ந்த நாவுக்கரசரையும், பின்னால் வந்த ஞானசம்பந்தப் பெருமானையும், அன்பு கலந்த உள்ளத்தில் எழுந்த ஆசையால், சக்கரப் படையை உடைய திருமாலும் அறியாத சிவபெருமானின் அடியார்களும் மறையோர்களும் நகர்ப்புறத்து வந்து எதிர்கொண்டு வணங்கத் தாங்களும் அவர்களை வணங்கி அந்தத் தலத்துள் புகுந்தனர்.

1516. மாட வீதி அலங்கரித்து
மறையோர் வாயின் மணிவிளக்கு
நீடு கதலி தழைப்பூகம்
நிரைத்து நிறைபொற் குடமெடுத்துப்
பீடு பெருகும் வாகீசர்
பிள்ளை யாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண்ணிழிந்த
கோயில் வாயில் சென்றணைந்தார்.

தெளிவுரை : அந்தணர்கள் மாட வீதியினை அலங்காரம் செய்து, தம் மாளிகையின் வாயில்களில் மணி விளக்குகளையும், வாழைகளையும், இலை செறிந்த பாக்குகளையும் வரிசை பெற வைத்தும், நீர் நிறைந்த பொற்குடங்களை ஏந்தியும், பெருமை மிக, நாவுக்கரசர் ஆளுடைய பிள்ளையார் தொண்டர்கள் ஆகியோர் அங்கு வந்து கூடும்படி மகிழ்ந்து விண் இழி விமானத்தையுடை திருக்கோயிலின் வாயிலை அடைந்தார்கள்.

1517. சென்றுள் புகுந்து திருவீழி
மிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த
கோயில் வலமா வந்துதிரு
முன்றில் வணங்கி முன்னெய்தி
முக்கட் செக்கர்ச் சடைமவுலி
வென்றி விடையார் சேவடிக்கீழ்
விழுந்தார் எழுந்தார் விம்மினார்.

தெளிவுரை : கோயிலுள் போய்ப் புகுந்து திருவீழிமிழலையை விரும்பி வீற்றிருக்கும் செம்பொன் மேருமலையை வில்லாகவுடைய சிவபெருமான் மகிழ்ந்த கோயிலை வலமாகச் சுற்றி வந்து, முற்றத்திலே வணங்கி, திருமுன்பு சேர்ந்து, மூன்று கண்களையும் சிவந்த வானம் போன்ற சடைமுடியையும் வெற்றி பொருந்திய காளையூர்தியையும் உடைய அப்பெருமானின் திருவடியின் கீழே விழுந்து வணங்கி எழுந்து நாவுக்கரசர் விம்மினார்.

1518. கைகள் குவித்துக் கழல்போற்றிக்
கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியுங் கண்ணருவி
விரவப் பரவுஞ் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார்
தீங்கு நெறிசேர் கின்றார்என்
றுய்யு நெறித்தாண் டகம்மொழிந்தங்
கொழியாக் காதல் சிறந்தோங்க.

தெளிவுரை : இரண்டு கைகளையும் தலைமீது குவித்து அடிகளை வணங்கி, உள்ளமானது நிரம்பிக் கலந்த அன்பால் கரைந்து உருகத் திருமேனியிலே வழியும் கண்ணீர் அருவியைப் போல் ஆக, துதிக்கின்ற சொல் மாலையான பதிகம் சிவந்த சடையையுடைய பெருமானை அடையாதவர் தீங்கு நெறிக்கே சேர்கின்றார் என்னும் கருத்துக் கொண்டதாய் உய்யும் நெறியைக் காட்டும் திருத்தாண்டகத்தைப் பாடி அங்கிருந்து நீங்க முடியாத காதல் மேலே ஓங்கி எழ,

1519. முன்னாள் அயனுந் திருமாலும்
முடியும் முதலும் காணாத
பொன்னார் மேனி மணிவெற்பைப்
பூநீர் மிழலை யினில்போற்றிப்
பன்னாள் பிரியா நிலைமையினால்
பயிலக் கும்பிட் டிருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில்
இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.

தெளிவுரை : முன்காலத்தில் நான்முகனும் திருமாலும் முடிவும் முதலும் அறிய இயலாது நீண்ட பொன்னார் மேனியையுடைய மணி மாலையான இறைவரை அழகிய நீர் வளம் கொண்ட திருவீழிமிழலையில் வணங்கி, பல நாட்களும் பிரியாது இருக்கும் பண்பால், நாவுக்கரசர் பயிலக் கும்பிட்டுக் கொண்டிருப்பவராய், அக்காலத்தில் மறையவர் வாழும் அப்பதியில் உண்மை அருந்தவத்தவர்களான அந்த இருவரும், அடியார்களும் தங்கியிருந்தனர்.

1520. சீரின் விளங்குந் திருத்தொண்டர்
இருந்து சிலநாள் சென்றதற்பின்
மாரி சுருங்கி வளம்பொன்னி
நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவருகி
நிலவும் பலமன் னுயிர்களெலாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில்
படர்கூர் வறுமை பரந்ததால்.

தெளிவுரை : சிறப்பால் விளங்கும் தொண்டர்கள் அவ்வாறு சில நாட்கள் கழிந்த பின்னர் மழை வளம் சுருங்கியதால், நாள் பொய்யாது அளிக்கும் வளமுடைய காவிரி நீர் தரும் பருவத்தில் தாராமல் மாறுதல் அடைந்தது. அடையவே, அதனால் நீரால் விளையத் தக்க உணவுப்பொருள் குறைந்தது; உணவால் வாழ்கின்ற உயிர்கள் எல்லாம், உலகின் மிக்க வறுமை காரணமாகத் துன்பம் மிகுதி அடையும் வறுமை பரவியது.

1521. வையம் எங்கும் வற்கடமாய்ச்
செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார்
தமக்கும் நாவுக் கரசருக்கும்
கையில் மானும் மழுவுமுடன்
காணக் கனவில் எழுந்தருளிச்
செய்ய சடையார் திருவீழி
மிழலை உடையார் அருள்செய்வார்.

தெளிவுரை : உலகம் எங்கும் வற்கட காலமாய் ஆக, உலகத்து உயிர்கள் பசியால் வருந்தத் துன்பப்பட்டு அலையும் நாளில், சிவந்த சடையையுடையவரான திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர், தம் கைகளில் மானும் மழுவும் காணும்படியாக ஞானசம்பந்தருக்கும் நாவுக்கரசருக்கும் கனவிலே தோன்றி அருள் செய்பவராய்,

1522. கால நிலைமை யால்உங்கள்
கருத்தில் வாட்ட முறீர்எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்
களிக்க அளிக்கின் றோம்என்று
கோலங் காண எழுந்தருளிக்
குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
வைத்தார் மிழலை நாயகனார்.

தெளிவுரை : வறியகாலம் காரணமாக உண்டாகும் வேறுபாட்டால் உங்கள் கருத்தில் வாட்டம் அடைய மாட்டீர். இருந்தாலும் உங்களை வழிபடும் அடியார்களுக்குத் தருவதற்காக உங்களுக்கு அளிக்கின்றோம் எனக்கூறித் தம் திருக்கோல முழுமையும் அவர்கள் கண்டுகொண்டிருக்கும் போதே மறைந்து, திருவீழி மிழலை இறைவர், விளங்கும் பெருமையுடைய அந்தப் பெருமக்களுக்காக உலகம் அறியும்படி நாள்தோறும் படிக்காசு வைத்தருளினார்.

1523. விண்ணின் றிழிந்த விமானத்தின்
கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண்டகையார்
தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள் தொறுங்காசு
படிவைத் தருள நானிலத்தில்
எண்ணில் அடியா ருடன்அமுது
செய்தங் கிருந்தார் இருவர்களும்.

தெளிவுரை : வானத்தினின்று இறங்கிய விமானமான அந்தக் கோயிலுள் கிழக்கிலே திருமுன்பு உள்ள பீடத்திலும் மேற்கில் உள்ள பீடத்திலும் ஞானசம்பந்தருக்கும் நாவுக்கரசருக்கும் வணங்க வரும் நாள்தோறும் பெருமையுடைய வீழிமிழலை நாதர் படியாகக் காசை வைத்தருள, இவ்வுலகத்தில் எண்ணற்ற அடியார்களுடன் உணவு உண்டு அவ்விருவரும் அங்குத் தங்கியிருந்தனர்.

1524. அல்லார் கண்டத் தண்டர்பிரான்
அருளால் பெற்ற படிக்காசு
பல்லா றியன்ற வளம்பெருகப்
பரமன் அடியா ரானார்கள்
எல்லாம் எய்தி உண்கவென
இரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறிட்டார்
துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்.

தெளிவுரை : கரிய கழுத்தையுடைய தேவ தேவரான இறைவரின் திருவருளால் படியாய்ப் பெற்ற காசினால் பலவாறு பொருந்திய வளங்கள் பொருந்தியதால், முழுமுதற் கடவுளான சிவபெருமானின் அடியவர் எல்லாரும் வந்து உணவு உண்ணுக என்று எடுத்துச் சொல்லி, நாளின் இருபோதும் சாற்றுவித்துச் சொல்லினால் தெரிவித்து, உணவு இட்டனர். அதனால் துன்பம் மிகும் வறுமை நோயைத் தொலைத்திட்டனர்.

1525. ஈசர் மிழலை இறையவர்பால்
இமையப் பாவை திருமுலைப்பால்
தேசம் உய்ய உண்டவர்தாம்
திருமா மகனார் ஆதலினால்
காசு வாசி யுடன்பெற்றார்
கைத்தொண் டாகும் அடிமையினால்
வாசி யில்லாக் காசுபடி
பெற்று வந்தார் வாகீசர்.

தெளிவுரை : உமையம்மையாரின் திருமுலைப் பால் உலகம் உய்யும் பொருட்டு உண்ட திருமகனாரானவர் ஆதலால், ஈசரான மிழலை நாதரிடத்து வாசியுடன் செல்லும் காசினைப் பெற்றார். திருநாவுக்கரசர் கைத்திருத் தொண்டு செய்கின்ற அடிமையாவார், ஆதலால் அவர் வாசி இல்லாத காசினைப் படியாய்ப் பெற்றார்.

1526. ஆறு சடைமேல் அணிந்தருளும்
அண்ணல் வைத்த படிக்காசால்
ஈறி லாத பொருளுடைய
இருவ ருடைய திருமடங்கள்
சோறு நாளுந் தொண்டர்மகிழ்ந்
துண்ண உண்ணத் தொலையாதே
ஏறு பெருமை புவிபோற்ற
இன்புற் றிருக்கும் அந்நாளில்.

தெளிவுரை : கங்கையாற்றைச் சடைமீது அணியும் பெருமையுடைய இறைவர் வைத்த படிக்காசின் உதவியால் முடிவு இல்லாத பொருளைப் பெற்றவர்களான இரு பெருமக்களின் மடங்களிலும், தொண்டர்கள் மகிழ்ந்து நாளும் உணவு உண்ணச் சிவனடியார்கள் மகிழ்ச்சியுடன் நாள்தோறும் வந்து சோறு உண்ண உண்ணவும், குறைவின்றி ஓங்கி வளரும் பெருமையை உலகம் போற்ற இன்பம் அடைந்திருந்த அந்த நாட்களில்,

1527. காலந் தவறு தீர்ந்தெங்கும்
கலிவான் பொழிந்து புனல்கலந்து
ஞாலம் எல்லாம் குளிர்தூங்கி
உணவு பெருகி நலஞ்சிறப்ப
மூல அன்பர் இருவர்களும்
மொழிமா லைகளும் பலசாத்தி
நீல கண்டர் உறைபதிகள்
பிறவும் வணங்க நினைவுற்றார்.

தெளிவுரை : கால நிலைமையான வறுமை நீங்கி ஒலிக்கும் மேகம் மழை பொழிந்து நீர் பெருகிப் பரவி உலகம் எங்கும் குளிர்ச்சி மிகுந்து உணவுப்பொருள்கள் பெருக விளைந்து நன்மைநிலை சிறந்து விளங்கியது. அதனால் உலகம் நன்மை அடைவதற்குக் காரணமாக நின்ற அந்தப் பெருமக்கள் இருவரும் மொழிமாலையான தேவாரப் பதிகங்கள் பலவற்றையும் பாடிச் சாத்தித் திருநீலகண்டரான இறைவர் எழுந்தருளிய மற்றத் தலங்களும் போய் வணங்க வேண்டும் என்று எண்ணினார்.

1528. வாய்ந்த மிழலை மாமணியை
வணங்கிப் பிரியா விடைகொண்டு
பூந்தண் புனல்சூழ் வாஞ்சியத்தைப்
போற்றிப் புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த அன்பி னாலிறைஞ்சி
இசைவண் டமிழ்கள் புனைந்துபோய்ச்
சேர்ந்தார் செல்வத் திருமறைக்கா
டெல்லை இல்லாச் சீர்த்தியினார்.

தெளிவுரை : அரிதில் கிடைக்கப் பெற்ற திருவீழிமிழலையின் பெருமணியைப் போன்ற இறைவரை வணங்கிப் பிரிய இயலாதபடி விடைபெற்றுக்கொண்டு அழகான குளிர்ந்த நீரினாலே சூழப்பட்ட திருவாஞ்சியத்தைப் போய்த் துதித்துத் தூயரான சிவபெருமான் வெளிப்பட நிலையாய் எழுந்தருளிய மற்றத் தலங்களையும் அன்பால் போய்த் தொழுது இசையும் வளமையுமுடைய தமிழ்ப் பதிகங்களைப் பாடி மேல் சென்று அளவில்லாத சிறப்புக் கொண்ட அந்த இருபெருமக்களும் செல்வமுடைய திருமறைக்காட்டைச் சென்றடைந்தனர்.

1529. மன்றல் விரவு மலர்ப்புன்னை
மணஞ்சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறுஞ் சிறுமடவார்
முத்தங் கொழிக்கும் மறைக்காட்டுக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த
கோயில் புகுந்து வலங்கொண்டு
சென்று சேர்ந்தார் தென்புகலிக்
கோவும் அரசுந் திருமுன்பு.

தெளிவுரை : மணம் பொருந்திய மலர்களையுடைய புன்னையின் மணம் கமழ்கின்ற சோலையையுடைய உப்பளத்தின் முற்றங்கள் எங்கும் சிறுமியர் முத்துக்களைக் கொழிக்கும் சிறப்புடைய திருமறைக்காட்டில், பொன் மேரு மலையை வில்லாகக் கொண்ட இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற கோயிலுள் புகுந்து வலமாக வந்து அழகிய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் நாவரசரும் இறைவரின் திரு முன்பு போய்ச் சேர்ந்தனர்.

1530. பரவை ஓதக் கழிக்கானற்
பாங்கு நெருங்கும் அப்பதியில்
அரவச் சடைஅந் தணனாரை
அகில மறைகள் அர்ச்சனைசெய்
துரவக் கதவந் திருக்காப்புச்
செய்த அந்நாள் முதல்இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற
மணிநீள் வாயில் வணங்குவார்.

தெளிவுரை : கடற்கரையின் நீர்கொண்ட கழிக்கானலின் பக்கத்தில் நெருங்கியுள்ள அத்தலத்தில் பாம்பு ஆடுகின்ற சடையையுடைய மறையவரான சிவபெருமானை வேதங்கள் எல்லாம் வழிபட்டு வலிய கதவினைத் திருக்காப்பிட்டு மூடிய அந்நாள் முதலாக இந்நாள் வரையிலும் திறக்கப்படாமல் அடைந்தபடியே இருக்கின்ற அழகிய நீண்ட வாயிலை வணங்குபவர்களாகி,

1531. தொல்லை வேதந் திருக்காப்புச்
செய்த வாயில் தொடர்வகற்ற
வல்ல அன்பர் அணையாமை
மருங்கோர் வாயில் வழியெய்தி
அல்லல் தீர்ப்பார் தமையருச்சிப்
பார்கள் தொழுவா ராம்படிகண்
டெல்லை யில்லாப் பெரும்புகழார்
இதனை அங்குக் கேட்டறிந்தார்.

தெளிவுரை : பழைய மறைகள் திருக்காப்பிட்ட திருவாயிலில் பூட்டிய நிலையை நீக்கவல்ல அன்பர்கள் வாராததால், அதன் பக்கத்தில் உள்ள ஒரு வாயிலின் வழியே போய்த்துயரம் எல்லாவற்றையும் போக்கும் சிவபெருமானை, அன்பர்களாயும் தொழுவார்களாயும் உள்ள முறைமையைப் பார்த்து, அளவுள் படாத பெரும் புகழையுடைய ஞானசம்பந்தரும் நாவரசரும் மேற்கூறிய செய்தியை அங்குள்ளவர் கூறக் கேட்டு அறிந்தனர்.

1532. ஆங்கப் பரிசை அறிந்தருளி
ஆழித் தோணி புரத்தரசர்
ஓங்கு வேதம் அருச்சனைசெய்
உம்பர் பிரானை உள்புக்குத்
தேங்கா திருவோம் நேர்இறைஞ்சத்
திருமுன் கதவந் திருக்காப்பு
நீங்கப் பாடும் அப்பரென
நீடுந் திருநா வுக்கரசர்.

தெளிவுரை : அப்போது அந்த இயல்பை அவர்கள் அறிந்து, கடல் வெள்ளத்தில் மிதந்த திருந்தோணிபுரத்து மன்னரான ஆளுடைய பிள்ளையார், அப்பரே! உயர்ந்த வேதங்கள் வழிபட்ட தேவ தேவரான இறைவனைக் கோயிலுள் புகுந்து தடையின்றி நாம் இருவரும் நேர்வாயிலில் வணங்குவதற்காகத் திருமுன்புள்ள கதவு திருக்காப்பு நீங்குமாறு பாடியருளுக! எனச்சொல்ல, புகழால் நீடும் நாவரசரும்,

1533. உண்ணீர் மையினால் பிள்ளையார்
உரைசெய் தருள அதனாலே
பண்ணி னேரு மொழியாள்என்
றெடுத்துப் பாடப் பயன்துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு
நீக்கத் தாழ்க்கத் திருக்கடைக்காப்
பெண்ணீர் இரக்கம் ஒன்றில்லீர்
என்று பாடி இறைஞ்சுதலும்.

தெளிவுரை : ஞானசம்பந்தப் பெருமான் உள்ளத்தில் பொருந்திய அன்பால் இவ்வாறு உரைத்தருளினார். அதுப் பற்றிப் பண்ணைப் பொருந்திய மொழியாள் எனத்தொடங்கிப் பாடவும் அந்தப் பதிகப் பாடலின் பயனை அனுபவிக்கும் பொருட்டுத் திருக்கதவத்தைத் திருக்காப்பு நீக்கித் திறப்பதற்குத் தாழ்க்கத் திருக்கடைக் காப்பில் எண்ணீர்! இரக்கம் ஒன்று இல்லீர் என்று நாவரசர் பாடி வணங்கிய அளவில்,

1534. வேத வனத்தின் மெய்ப்பொருளின்
அருளால் விளங்கு மணிக்கதவங்
காதல் அன்பர் முன்புதிருக்
காப்பு நீங்கக் கலைமொழிக்கு
நாதர் ஞான முனிவருடன்
தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கெழுந்த
தும்பர் ஆர்ப்பும் மறையொலியும்.

தெளிவுரை : திருமறைக் காட்டில் விளங்கும் மெய்ப்பொருளாகிய இறைவரின் திருவருளினால், விளங்கும் மணிக்கதவானது, பக்தியுடைய அன்பர்களின் முன் திருக்காப்பு நீங்கவே, கலை மொழியின் வேந்தரான நாயனாரான ஞான முனிவரான சம்பந்தருடன் தொழுது விழுந்து பணிந்தார். உலகில் கடலோசையை விடத் தேவர்களின் ஆரவாரமும் வேத ஒலியும் கூடி மேலே எழுந்தது.

1535. அன்பர் ஈட்டங் களிசிறப்ப
ஆண்ட அரசும் சிவக்கன்றும்
இன்ப வெள்ளத் திடைமூழ்கி
எழுந்துள் புகுந்து தம்பெருமான்
முன்பு பணிந்து போற்றிசைத்துப்
பரவி மொழிமா லைகள்பாடி
என்பு கரைய உள்ளுருகி
இறைஞ்சி அரிதிற் புறத்தணைந்தார்.

தெளிவுரை : அடியார்களின் கூட்டமானது பெருமகிழ்ச்சியடைய ஞானசம்பந்தரும் நாவரசரும் பேரின்பப் பெருக்கில் திளைத்து, எழுந்து உள்ளே புகுந்து, தம் பெருமானின் திருமுன்பு பணிந்து போற்றித் துதித்துப் பதிகங்களைப் பாடி எலும்பும் கரைய மனம் உருகிப் பணிந்து அங்கிருந்து அரிதாய் நீங்கிக் கோயிலின் வெளியே வந்தனர்.

1536. புறம்பு நின்ற வாகீசர்
புனிதர் அருளால் இக்கதவந்
திறந்தும் அடைத்துஞ் செல்லுநெறி
திருந்த மலையாள் திருமுலையிற்
கறந்த ஞானங் குழைத்தமுது
செய்த புகலிக் கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும்வகை
நீரும் பாடி அருளுமென.

தெளிவுரை : மேலே கூறியபடி கோயிலின் வாயில் பக்கத்தை அடைந்து, நாவரசர் இறைவரின் திருவருளால் இந்தக் கதவு திறந்தும் அடைத்தும் இயங்கும் நெறியில் திருத்துக என உள்ளத்தில் எண்ணி உமையம்மையாரின் திருமுலைப்பாலில் சிவஞானம் குழைத்துண்ட சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தரைப் பார்த்து அருளால் நிறைந்த இக்கதவு மூடும் வகையை நீங்கும்படியருளுக! எனக்கூற,

1537. சண்பை ஆளுந் தமிழ்விரகர்
தாமும் திருநா வுக்கரசர்
பண்பின் மொழிந்த உரைகொண்டு
பதிகம் பாடும் அவ்வளவில்
கண்பொற் பமைந்த நுதற்காள
கண்டர் அருளால் கடிதுடனே
திண்பொற் கதவந் திருக்காப்புச்
செய்த தெடுத்த திருப்பாட்டில்.

தெளிவுரை : சீகாழித்தலைவரான ஞானசம்பந்தர், நாவுக்கரசர் அன்பால் கூறியருளிய சொல்லினால், அங்ஙனமே பதிகம் பாடும் அவ்வளவில், கண்ணின் அழகு அமைந்த நெற்றியினையுடைய இறைவரின் அருளால் உடன் மிகுந்த விரைவுடன் பதிகம் தொடங்கிய முதல் திருப்பாட்டிலேயே திண்மையான அழகான கதவு திறக்காப்பிட்டது (மூடியது).

1538. அதுகண் டுடைய பிள்ளையார்
தாமும் ஆண்ட அரசும்மகிழ்ந்
திதுநம் பெருமான் அருள்செய்யப்
பெற்றோம் என்றங் கிறைஞ்சியபின்
பதிகம் நிரம்பப் பிள்ளையார்
பாடித் தொழுது பணிவுற்றார்
எதிர்பொற் றிருவா யிலின்வழக்கம்
என்றும் நிகழ்ச்சி எய்தியதால்.

தெளிவுரை : அங்ஙனம் பாடிய அப்பாட்டில் கதவு காப்புச் செய்த (மூடிய) அதனைப் பார்த்து ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் மகிழ்ந்து நம் இறைவன் இதனை அருள் செய்யப் பெற்றோம் என வணங்கினர். பின்பு, ஞானசம்பந்தர் தொடங்கிய பதிகத்தைப் பாடி முடித்தார். இறைவரின் திரு முன்பு உள்ள அவ்வாயிலின் கதவுதிறக்கவும் மூடவுமான உள்ள நிகழ்ச்சி அன்று முதலாக என்றும் நிகழ்ந்தது.

1539. அங்கு நிகழ்ந்த அச்செயல்கண்
டடியார் எல்லாம் அதிசயித்துப்
பொங்கு புளகம் எய்திடமெய்
பொழியுங் கண்ணீர் பாய்ந்திழிய
எங்கும் நிகரொன் றில்லாத
இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலிப் பெருந்தகையும்
அரசும் மடத்தில் நண்ணியபின்.

தெளிவுரை : அங்கு நிகழ்ந்த அச்செயலைப் பார்த்துத் தொண்டர்கள் எல்லாம் அதிசயம் அடைந்து உடல் முழுவதும் மயிர்ப் புளகம் உண்டாக, கண்களினின்றும் அன்பு நீர் பொழிந்து வழிய, எங்கும் ஒன்றாலும் நிகர் இல்லாத இரு பெரு மக்களின் பாதங்களையும் வணங்கினர். நம் சீர்காழித் தலைவரும் அரசுகளும் மடத்தில் போய்ச் சேர்ந்தனர்.

1540. அரிதில் திறக்கத் தாம்பாட
அடைக்க அவர்பா டியஎளிமை
கருதி நம்பர் திருவுள்ளம்
அறியா தயர்ந்தேன் எனக்கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தில்
ஒருபால் அணைந்து பேழ்கணித்து
மருவும் உணர்வில் துயில்கொண்டார்
வாய்மை திறம்பா வாகீசர்.

தெளிவுரை : தாம் கதவு திறக்குமாறு மிக அரிதில் முயன்று பாடவும், கதவு மூடிக்கொள்ள ஞானசம்பந்தர் பாடியதன் எளிமையை (முதல் பாட்டிலேயே மூடியதைப்) பார்த்து, இறைவரின் திருவுள்ளக் கிடக்கையை அறியாமல் திகைத்தேன் என்று கவலையடைந்து மிகவும் அச்சம் கொண்டு மடத்தில் ஒரு பக்கத்தில் அணைந்து, கண் மூடிக்கொண்டு, உணர்வுடைய நிலையில் துயின்றவரான உண்மை நிலையில் வழுவாத நாவரசர்,

1541. மன்னுஞ் செல்வ மறைக்காட்டு
மணியின் பாதம் மனத்தின்கண்
உன்னித் துயிலும் பொழுதின்கண்
உமையோர் பாகம் உடையவர்தாம்
பொன்னின் மேனி வெண்ணீறு
புனைந்த கோலப் பொலிவினொடுந்
துன்னி அவர்க்கு வாய்மூரில்
இருப்போந் தொடர வாவென்றார்.

தெளிவுரை : செல்வம் பொருந்திய திருமறைக் காட்டின் மணியைப் போன்றவரான இறைவனின் திருவடிகளை மனத்தில் வைத்து ஊன்றி எண்ணிக்கொண்டு
உறங்கும் போது, நாயனார் காண்பதற்கு, பொன்னார்ந்த மேனியில் வெண்ணீறு பூசிய திருக்கோலப் பொலிவுடனே உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட இறையவர் தாமே எழுந்தருளி, நாம் திருவாய்மூரில் இருப்போம். அங்குத் தொடர்ந்து வா! எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

1542. போதம் நிகழ வாஎன்று
போனார் என்கொல் எனப்பாடி
ஈதெம் பெருமான் அருளாகில்
யானும் போவேன் என்றெழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு
விரைந்து போக அவர்முன்னே
ஆதி மூர்த்தி முன்காட்டும்
அவ்வே டத்தால் எழுந்தருள.

தெளிவுரை : நாவரசர், அறிதுயிலினின்று விழிப்பு நிலை எய்த, என்னை அங்கே வா! என்று சொல்லிச் சென்றார். அஃது என்னவோ! என்ற கருத்துக் கொண்ட திருக்குறுந்தொகை பதிகம் பாடி, இதுவே எமது பெருமானின் அருளாக அமையுமாயின், அந்த ஆணையின்படியே நானும் போவேன்! என்று துணிந்து எழுந்து, திருமறைக் காட்டினின்று புறப்பட்டு விரைவாக அகன்று சென்றார். செல்ல, ஆதி முதல்வரான இறைவர் தாம் முன்பு காட்டிய அதே கோலத்துடன் நாயனாரின் முன்பு எழுந்தருளிப் போக,

1543. சீரார் பதியி னின்றெழுந்து
செல்லுந் திருநா வுக்கரசர்
ஆரா அன்பில் ஆரமுதம்
உண்ண எய்தா வாறேபோல்
நீரார் சடையார் எழுந்தருள
நெடிது பின்பு செல்லுமவர்
பேரா ளரைமுன் தொடர்ந்தணையப்
பெறுவார் எய்தப் பெற்றிலரால்.

தெளிவுரை : சிறந்த அந்தத் தலத்தினின்று புறப்பட்டுப் போகும் நாவரசர், அடங்காத அன்பினால் நிறைந்த அமுதம் கையில் கிடைக்கப் பெற்றும் வாயில் உண்ணக் கிடைக்கப் பெறாøம் போல் கங்கை பொருந்திய சடை உடைய பெருமான் முன்னே எழுந்தருள, நெடுந்தொலைவு பின்னே தொடர்ந்து செல்பவர். பெருமையுடைய அவரை விரையச் சேர முயல்பவராகவும் அவரைக் கிட்டப் பெறவில்லை.

1544. அன்ன வண்ணம் எழுந்தருளி
அணித்தே காட்சி கொடுப்பார்போல்
பொன்னின் கோயில் ஒன்றெதிரே
காட்டி அதனுட் புக்கருளத்
துன்னுந் தொண்டர் அம்மருங்கு
விரைந்து தொடரப் போந்தபடி
மன்னும் புகலி வள்ளலார்
தாமுங் கேட்டு வந்தணைந்தார்.

தெளிவுரை : சிவபெருமான் அங்ஙனம் எழுந்தருளிய பக்கத்தில் காட்சி தருபவர் போல் பொன்மயமான திருக்கோயில் ஒன்றை அவர்க்கு முன்னதாகத் தோன்றும்படி செய்து அதற்குள் புகுந்தருளினார். அவரை அடைய நெருங்கி வரும் நாவரசர் விரைவாக அவரைத் தொடரவும், இவ்வாறு அவர் சென்றதை நிலைபெற்ற சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் கேட்டு அங்கு வந்து சேர்ந்தார்.

1545. அழைத்துக் கொடுபோந் தணியார்போல்
காட்டி மறைந்தார் எனஅயர்ந்து
பிழைத்துச் செவ்வி அறியாதே
திறப்பித் தேனுக் கேயல்லால்
உழைத்தா மொளித்தால் கதவந்தொண்
டுறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார்
தாமிங் கெப்பால் மறைவதென.

தெளிவுரை : என்னை வா! என்று அழைத்துக் கொண்டு வந்து அருகில் கூட வருபவரைப் போலக் காட்டி மறைந்து விட்டார் என எண்ணி, தங்கள் செவ்வியை அறியாமல் பிழை செய்து வந்து கதவு திறக்கச் செய்த எனக்குப் பக்கத்திலிருந்து தாங்கள் மறைத்தருளலாமே அல்லாது திருத்தொண்டின் உறைப்பு விளங்கப் பாடி அந்தக் கதவை அடையுமாறு செய்த தழைத்த தன்மை கொண்ட சொல்லுடைய ஞானசம்பந்தர் உப்பாலில் உள்ளார். தாங்கள் இனி மறைந்தருளுவது எப்படி? என்று பாட,

1546. மாட நீடு திருப்புகலி
மன்னர் அவர்க்கு மாலயனும்
நேடி இன்னங் காணாதார்
நேரே காட்சி கொடுத்தருள
ஆடல் கண்டு பணிந்தேத்தி
அரசுங் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்றெடுத்துப்
பரமர் தம்மைப் பாடினார்.

தெளிவுரை : மாளிகைகள் பொருந்திய சீகாழியின் மன்னவரான ஞானசம்பந்தருக்குத் திருமாலும் நான்முகனும் தேடி இன்னமும் காண முடியாதவரான சிவபெருமான் வெளிப்பட்டு நேரே காட்சி தந்தருள அக்கூத்தைப் பிள்ளையார் பார்த்துப் பணிந்து துதித்து நாவுக்கரசரும் காணுமாறு காட்டியருளுதலும், நாவரசர் கண்டு பாட அடியார் எனத் தொடங்கி இறைவனைப் பாடிட

1547. பாடுந் தமிழ்மா லைகள்கொண்டு
பரமர் தாமும் எழுந்தருள
நீடுந் திருவாய் மூரடைந்து
நிலவுங் கோயில் வலஞ்செய்து
சூடும் பிறையார் பெருந்தொண்டர்
தொழுது போற்றித் துதிசெய்து
நாடுங் காதல் வளர்ந்தோங்க
நயந்தந் நகரில் உடனுறைந்தார்.

தெளிவுரை : அங்ஙனம் அவர் பாடிய தமிழ்ப் பதிகங்களை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் மறைந்திடப் பிறையைச் சூடும் சிவபெருமானின் தொண்டரான நாவரசர் நீடும் திருவாய்மூரை அடைந்து நிலை பெற்ற கோயிலை வலம் வந்து தொழுதும் போற்றியும் துதி செய்தும் அன்பு வளர்ந்து பெருக விரும்பி அத்திருநகரில் ஞானசம்பந்தருடன் தங்கியிருந்தார்.

1548. ஆண்ட அரசும் பிள்ளையார்
உடனே அங்கண் இனிதமர்ந்து
பூண்ட காதல் பொங்கியெழ
வாய்மூர் அடிகள் அடிபோற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை
சாத்தி ஞான முனிவரொடு
மீண்டு வந்து திருமறைக்காட்
டெய்தி விமலர் தாள்பணிந்தார்.

தெளிவுரை : நாவரசர் ஞானசம்பந்தருடனே அந்தத் தலத்தில் இனிதாய் வீற்றிருந்து பொருந்திய காதல் மேன்மேல் எழுந்து பொங்கத் திருவாய்மூரின் பெருமானுடைய பொற்பாதங்களைத் துதித்து, மிக்க அன்பால் திருப்பதிகத் தமிழ் மாலைகளைப் பாடியருளி, ஞான முனிவரான சம்பந்தரோடும் மீண்டருளி வந்து திருமறைக்காட்டை அடைந்து குற்றமற்ற இறைவரின் திருவடிகளைப் பணிந்தார்.

1549. ஆதி முதல்வர் தமைப்பணிந்தங்
கான பணிசெய் தமருநாள்
சீத மதிவெண் குடைவளவர்
மகளார் தென்னன் தேவியார்
கோதில் குணத்துப் பாண்டிமா
தேவி யார்முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர்வந்தார்
புகலி வேந்தர் தமைக்காண.

தெளிவுரை : ஆதி முதல்வரான வேதாரணியத்து இறையவரை வணங்கித் தம்மால் இயன்ற திருப்பணிகளைச் செய்து கொண்டு அங்கு நாயனார் தங்கியிருக்கும் நாள்களில், குளிர்ந்த சந்திரன் மேலே கவிழ்ந்தது போன்ற வெண்கொற்றக் குடையினையுடைய சோழர்க்கு மகளாரும் பாண்டிய மன்னர்க்கு மனைவியாரும் ஆன குற்றம் இல்லாத குணத்தில் சிறந்த பாண்டிமா தேவியராலும் அவர் திருமுன்பு பணி செய்யும் குலச்சிறையாராலும் செல்ல விடுத்த சிலர், சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரைக் காண்பதற்காக வந்தனர்.

1550. வந்து சிவனார் திருமறைக்கா
டெய்தி மன்னு வேணுபுரி
அந்த ணாளர் தமக்கறிவித்
தவர்பால் எய்தி அடிவணங்கச்
சிந்தை மகிழ்ந்து தீதின்மை
வினவத் தீங்கும் முளவாமோ
இந்த உலகம் உயவந்தீர்
இருதாள் நினைவார்க் கென்றுரைப்பார்.

தெளிவுரை : அங்ஙனம் அனுப்பப்பட்டவர் வந்து சிவபெருமானின் திருமறைக்காட்டில் ஞானசம்பந்தரின் மடத்தைச் சேர்ந்து நிலைபெற்ற சீகாழி மறையவர் பெருமானான அந்தச் சம்பந்தருக்குத் தாம் வந்த செய்தியைத் தெரிவித்து விடுக்கப்பட்டு அவர் முன்பு சேர்ந்து அவருடைய அடிகளை வணங்க, அவர் திருவுள்ளம் மகிழ்ந்து தீமையில்லாமையை உசாவ, இந்த உலகம் உய்யத் திருஅவதாரம் செய்த தங்கள் திருவடிகளை நினைப்பவர்க்குத் தீமையும் உண்டோ? எனத்தொடங்கி சொல்பவராகி,

1551. சைவ நெறிவை திகம்நிற்கச்
சழக்கு நெறியைத் தவமென்னும்
பொய்வல் அமணர் செயல்தன்னைப்
பொறுக்க கில்லோம் எனக்கேட்டே
அவ்வன் தொழிலோர் செயல்மாற்றி
ஆதி சைவ நெறிவிளங்கத்
தெய்வ நீறு நினைந்தெழுந்தார்
சீர்கொள் சண்பைத் திருமறையோர்.

தெளிவுரை : மறைகளில் சொல்லப்பட்ட சைவ நெறியானது விளங்கி நிற்கவும், அதை அடையாமல் குற்றம் உடைய அவநெறியைத் தவநெறி என்று கூறும் பொய்மையில் வல்ல சமணர்களின் கொடிய செயல்களை மாற்றி ஆதி சைவநெறி விளங்க வேண்டும் என்று தெய்வ நீற்றின் துணையை நினைந்து கொண்டு சிறப்புடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் அங்குச் செல்லத் துணிவு கொண்டராக,

1552. ஆய பொழுது திருநாவுக்
கரசு புகலி ஆண்டகைக்குக்
காய மாசு பெருக்கியுழல்
கலதி அமணர் கடுவினைசெய்
மாயை சாலம் மிகவல்லார்
அவர்மற் றென்னை முன்செய்த
தீய தொழிலும் பலகெட்டேன்
செல்ல இசையேன் யான்என்றார்.

தெளிவுரை : அச்சமயத்தில் நாவுக்கரசர், சீகாழி ஆண் தகையாரான ஞானசம்பந்தரிடம் உடலின் அழுக்கைக் கழுவாமல் பெருக்கிக் கொண்டே திரியும் தீயவரான சமணர்கள் கொடுமை செய்யும் வஞ்சனைகளில் மிகவும் வல்லமை உடையவர்கள். அவர்கள் எனக்கு முன் நாளில் செய்த கொடுமைகளும் பல ஆகும். ஐயோ! பிள்ளாய்! தாங்கள் அங்குச் செல்ல நான் சம்மதியேன்! என்று அருள் செய்தார்.

1553. என்று கூற எல்லையிலா
நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்துடையேன்
அங்குத் தீங்கு புரிஅமணர்
நின்ற நிலைமை அழிவித்துச்
சைவ நெறிபா ரித்தன்றி
ஒன்றுஞ் செய்யேன் ஆணைஉம
தென்றார் உடைய பிள்ளையார்.

தெளிவுரை : எனத் திருநாவுக்கரசர் சொல்ல, ஞானசம்பந்தர், அளவில்லாத திருநீற்றைப் போற்றுகின்ற அவ்விருவரையும் அங்குச் சென்று காண வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றேன். அங்கு அத்தீமைகளைச் செய்கின்ற சமணர்களின் நிலைமையை அழிவித்துச் சைவ நெறியை வளர்த்தன்றி வேறு ஒரு செயலும் செய்ய மாட்டேன்! உம் ஆணை! என்று அருளிச் செய்தவராய்,

1554. போமா துணிந்து நீர்அங்குப்
போதப் போதா அவ்வமணர்
தீமா யையினை யானேபோய்ச்
சிதைத்து வருகின் றேன்என்ன
ஆமா றெல்லாம் உரைத்தவரை
மறுக்க மாட்டா தரசிருப்பத்
தாமா தரவால் தமிழ்நாட்டில்
போனார் ஞானத் தலைவனார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் பாண்டிய நாட்டுக்குச் செல்லும் நிலையைத் துணிந்து, நீவிரும் அங்கு வருதல் வேண்டா! அச்சமணர்களின் தீய வஞ்சனைகளை யெல்லாம் யானே போய் அழிவித்து வருகின்றேன்! என்று கூறிய, அந்தப் பிள்ளையாரை மறுத்துக் கூற மாட்டாதவர் ஆகி, நாவுக்கரசர் அங்கு தங்கச் சிவஞானத் தலைவரான சம்பந்தர் அவரைப் பிரித்து தாம் மட்டும் மிக்க அன்புடன் பாண்டிய நாட்டுக்கு வந்தார்.

1555. வேணு புரக்கோன் எழுந்தருள
விடைகொண் டிருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில்
புனிதர் தம்மைப் போற்றிசைத்துப்
பேணி இருந்தங் குறையுநாள்
பெயர்வார் வீழி மிழலையமர்
தாணு வின்தன் செய்யகழல்
மீண்டுஞ் சார நினைக்கின்றார்.

தெளிவுரை : சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் அங்ஙனம் பாண்டிய நாட்டில் எழுந்தருளவே, அவரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்குத் தங்கியிருந்த திருநாவுக்கரசு நாயனார் தாம் கொண்ட அன்பினால் திருமறைக் காட்டில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கிப் போற்றித் திருப்பணி செய்து அங்குத் தங்கியிருந்தார். அக்காலத்தில், அங்கிருந்து புறப்பட்டுச் செல்வாராகித் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் சிறந்த திருவடிகளை மீளவும் அடைந்து வணங்க நினைப்பவராய்,

1556. சோலை மறைக்காட் டமர்ந்தருளுஞ்
சோதி அருள்பெற் றகன்றுபோய்
வேலை விடமுண் டவர்வீழி
மிழலை மீண்டுஞ் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகைக்கா
ரோணம் பிறவுந் தாம்பணிந்து
சாலு மொழிவண் டமிழ்பாடித்
தலைவர் மிழலை வந்தடைந்தார்.

தெளிவுரை : சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் சோதியான சிவபெருமானின் திருவருளைப் பெற்று அங்கிருந்து நீங்கிச் சென்று கடலில் உண்டான நஞ்சினை உண்ட சிவபெருமானின் திருவீழிமிழலையை மீண்டும் அடைவேன் என்று எண்ணிக் கொண்டு உலகத்தில் விளங்கிய திருநாகைக் காரோணத்தையும் அதைப் போன்ற மற்றத் தலங்களையும் வணங்கிச் சால்புடைய மொழி வண்மையையுடைய திருப்பதிகங்களைப் பாடத்தலைவரின் திருவீழி மிழலையை அடைந்தார்.

1557. வீழி மிழலை தனைப்பணிந்து
வேத முதல்வர் தாமிருப்ப
ஆழி வலமேந் தியஅரியால்
ஆகா சத்தின் நின்றிழிந்த
வாழி மலர்ந்த கோயில்தனில்
மன்னும் பொருளைப் போற்றிசைத்துத்
தாழும் நாளிற் பிறபதியும்
பணியுங் காதல் தலைநிற்பார்.

தெளிவுரை : அங்ஙனம் திருவீழிமிழலையை வந்து அடைந்த நாயனார் அப்பதியின் வெளியே சென்று, மறையின் முதல்வரான சிவபெருமான் வீற்றிருப்பதற்காக விண் உலகத்தினின்றும் கீழே கொணரப்பட்டு நிலைபெற விளங்கிய கோயிலில் நிலைபெற்று விளங்கும் இறைவரைத் துதித்து விரும்பியிருந்தார். அக்காலத்தில், அவர் மற்றத் தலங்களையும் போய் வணங்க வேண்டும் என்ற ஆசையுடையராய்,

1558. பூவிற் பொலியும் புனற்பொன்னிக்
கரைபோய்ப் பணிவார் பொற்பமைந்த
ஆவுக் கருளும் ஆவடுதண்
டுறையார் பாதம் அணைந்திறைஞ்சி
நாவுக் கரசர் ஞானபோ
னகர்க்குச் செம்பொன் ஆயிரமும்
பாவுக் களித்த திறம்போற்றிப்
போந்து பிறவும் பணிகின்றார்.

தெளிவுரை : இவ்வுலகத்தில் விளங்கும் நீரையுடைய காவிரியாற்றின் கரை வழியாய்ச் சென்று பல பதிகளையும் வணங்கியவாறே செல்பவரான நாவுக்கரசர், அழகமைந்த பசு வடிவத்துடன் அமைந்த உமையம்மையாருக்கு அருள் செய்த திருவாவடுதுறை இறைவரின் திருவடிகளைச் சேர்ந்து வணங்கி, ஞான அமுது உண்ட சம்பந்தப் பெருமானுக்கு அவரது பாடலுக்காக அங்கே இறைவர் ஆயிரம் பொன்னைத் தந்தருளிய திறத்தை வைத்துத் துதித்து, அங்கிருந்து புறப்பட்டு மற்ற பதிகளை வணங்கிச் செல்லலானார்.

1559. செய்ய சடையார் பழையாறை
எய்த அதனில் செல்பொழுதின்
மையல் அமணர் மறைத்தவட
தளியின் மன்னுஞ் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுதருளக்
கண்ட வாற்றால் அமணர்கள்தம்
பொய்கொள் விமானம் எனக்கேட்டுப்
பொறாத உள்ளம் மிகப்புழுங்கி.

தெளிவுரை : அங்ஙனம் செல்பவரான நாவரசர், சிவந்த சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளிய பழையாறை என்னும் பதியைச் சேரச் செல்லும் போது, மயக்கம் உடைய சமணர்கள் மறைத்த பழையாறை வடதளிக்கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை நாயனார் கைகூப்பித் தொழுத அளவில், திருவுள்ளத்துள் அறிந்தமையால் வினவி, அது சமணர்கள் வஞ்சனையால் செய்த விமானம் என்று அங்குள்ளவரிடம் கேட்டுப் பொறுக்க இயலாத உள்ளத்தில் புழுக்கம் அடைந்து,

1560. அந்த விமானந் தனக்கருகா
ஆங்கோர் இடத்தின் பாங்கெய்திக்
கந்த மலருங் கடிக்கொன்றை
முடியார் செய்ய கழலுன்னி
மந்த அமணர் வஞ்சனையால்
மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்
பந்தங் கொண்ட குண்டர்திறம்
பாற்றும் என்று பணிந்திருப்பார்.

தெளிவுரை : அங்ஙனம் அறிந்து கொண்ட அந்தப் பொய்மை கொண்ட விமானத்தில் அண்மையில் அங்கு ஓரிடத்தின் பக்கமாகச் சேர்ந்து, மணமுடைய இதழ்கள் அலரும் கொன்றை மாலை சூடிய முடியையுடைய சிவபெருமானின் திருவடிகளை நினைந்து, அறிவற்றவர்களான சமணர்கள் வஞ்சனையால் மறைத்த வஞ்சத்தை ஒழித்துச் சைவத்திறம் விளங்காமல் மறைத்த சமணர்களின் திறத்தை அழிப்பீராக! என வேண்டிக்கொண்டு வணங்கியிருப்பவர் ஆனார்.

1561. வண்ணங் கண்டு நான்உம்மை
வணங்கி யன்றிப் போகேனென்
றெண்ண முடிக்கும் வாகீசர்
இருந்தார் அமுது செய்யாதே
அண்ண லாரும் அதுவுணர்ந்தங்
கரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ண மாக மன்னனுக்குக்
கனவில் அருளிச் செய்கின்றார்.

தெளிவுரை : நான் உம் திருமேனியைக் கண்ணால் கண்டால் அன்றி அப்பால் போக மாட்டேன் என்று முறையிட்டு உறுதி கொண்டு, தம் நினைவை எண்ணியபடி முடிக்கும் நாவரசர் உணவு கொள்ளாமல் பட்டினியாய் இருந்தார். இறைவரும் அதனைத் தம் உள்ளத்துள் கொண்டு, அத்தலத்தில் நாவுக்கரசர் வணங்குவதற்காக மன்னனுக்குக் கனவில் தோன்றி உறுதியாய் அருள் செய்கின்றவராய்,

1562. அறிவில் அமணர் நமைமறைப்ப
இருந்தோம் என்றங் கடையாளக்
குறிகள் அறியச் செய்தருளி
நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமையழித்து
நீக்கிப் போக்கென் றருள்புரியச்
செறிவில் அறிவுற் றெழுந்தவனுஞ்
செங்கை தலைமேற் குவித்திறைஞ்சி.

தெளிவுரை : அறிவற்ற சமணர்கள் நம் கோயிலை மறைக்க நாம் அதனுள்ளே இருந்தோம் என இறைவர் உரைத்தும் அந்த இடத்தைக் காணக்கூடிய அடையாளக் குறிகளையும் அருள் செய்து, நம்மை நாவரசர் வணங்குவதற்காக, நல்ல நெறியில்லாத சமணர்களை அழித்து அங்கிருந்து அகலச் செய்வாயாக! என்று அருள் செய்தார். துயில் நீங்கி, எழுந்து அதனை நனவில் அறிந்து கொண்ட மன்னனும் தன் செங்கையைத் தலைமீது கூப்பி,

1563. கண்ட வியப்பு மந்திரிகட்
கியம்பிக் கூடக் கடிதெய்தி
அண்டர் பெருமான் அருள்செய்த
அடையா ளத்தின் வழிகண்டு
குண்டர் செய்த வஞ்சனையைக்
குறித்து வேந்தன் குலவுபெருந்
தொண்டர் தம்மை அடிவணங்கித்
தொக்க அமணர் தூர்அறுத்தான்.

தெளிவுரை : மன்னன், தான் கனவில் கண்ட வியப்பான காட்சியியல்பை அமைச்சர்களுக்குச் சொன்னான்; அவர்களுடன் தானும் விரைவாய் அந்த இடத்துக்குச் சென்றான்; சிவபெருமான் அருளிய அடையாளங்களின் வழியே அங்குச் சிவ வடிவத்தைப் பார்த்தான்; சமணக் கீழாவனவர் செய்த வஞ்சனையின் பொருட்டு, அந்த வஞ்சனையை வெளிப்படச் செய்த நாவரசரின் திருவடிகளை வணங்கி, அங்கிருந்த சமணர்களான புதர்களை அவன் அழித்தான்.

1564. ஆனை இனத்தில் துகைப்புண்ட
அமணா யிரமும் மாய்ந்ததற்பின்
மேன்மை அரசன் ஈசர்க்க
விமான மாக்கி விளக்கியபின்
ஆன வழிபாட் டர்ச்சனைக்கு
நிபந்தம் எல்லாம் அமைத்திறைஞ்ச
ஞான அரசும் புக்கிறைஞ்சி
நாதர் முன்பு போற்றுவார்.

தெளிவுரை : யானையினால் அழிக்கப்பட்ட சிறிய தூர்போல் மன்னனின் ஆட்களினால் அழிக்கப்பட்ட அந்தச் சமணர் பள்ளியில் தங்கிய ஆயிரம் சமணக் குருமார்களும் அழிந்த பின்பு, மன்னன் அந்த இடத்தைச் சிவபெருமானுக்கு உரிய விமானமாக ஆக்கி உரியபடி விளங்கச் செய்தான். பின்பு, சிவாகமத்தில் விதித்த முறைப்படி வழிபாடான பூசனைக்கு வேண்டிய நிபந்தங்களையெல்லாம் அமைக்கச் செய்தான். பின் நாவரசரை வணங்கினான். ஞான வள்ளலான நாவரசரும் அக்கோயிலுக்குள் புகுந்து இறைவரின் திருமுன்பு நின்று போற்றுவராய்.

1565. தலையின் மயிரைப் பறித்துண்ணுஞ்
சாதி அமணர் மறைத்தாலும்
நிலையி லாதார் நிலைமையினால்
மறைக்க ஒண்ணு மோஎன்னும்
விலையில் வாய்மைக் குறுந்தொகைகள்
விளம்பிப் புறம்போந் தங்கமர்ந்தே
இலைகொள் சூலப் படையார்சேர்
இடங்கள் பிறவுந் தொழஅணைவார்.

தெளிவுரை : தம் தலைமயிரையெலாம் பறித்து, நின்று உண்ணும் இயல்பு கொண்ட கூட்டத்தவரான சமணர்கள் மறைத்தாலும், உண்மை நிலை இல்லாதவரான அவர்கள் தம் சிற்றறிவின் நிலைமையினால் மறைத்து வைத்திட முடியுமோ? என்னும் கருத்துக் கொண்ட விலை மதிப்பதற்கரிய வாய்மையுடைய திருக்குறுந்தொகையைப் பாடினார்; வெளியே வந்தார்; அங்குத் தங்கி இருந்தார். பின்பு, மூன்று இலை வடிவான சூலப்படை ஏந்திய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் மற்றப் பதிகளையும் அவர் வணங்கச் செல்லலானார்.

1566. பொங்கு புனலார் பொன்னியினில்
இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்கிறைஞ்சித்
தமிழ்மா லைகளுஞ் சாத்திப்போய்
எங்கும் நிறைந்த புகழாளர்
ஈறில் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருவானைக்
காவின் மருங்கு சென்றணைந்தார்.

தெளிவுரை : பொங்கி வருகின்ற காவிரியின் இரண்டு கரைகளிலும் போர் செய்யவல்ல காளையூர்தியைக் கொண்ட சிவபெருமான் நிலைத்து விளங்கி வீற்றிருக்கும் பல பதிகளிலும் புகுந்து வணங்கினார்; தமிழ் மாலைகளையும் பாடினார்; மேலும் சென்று எங்கும் நிறைந்த புகழையுடைய அவர், முடிவில்லாத தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச் செங்கண் விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகில் போய்ச் சேர்ந்தார்.

1567. சிலந்திக் கருளுங் கழல்வணங்கிச்
செஞ்சொல் மாலை பலபாடி
இலங்கு சடையார் எறும்பியூர்
மலையும் இறைஞ்சிப் பாடியபின்
மலர்ந்த சோதி திருச்சிராப்
பள்ளி மலையுங் கற்குடியும்
நலங்கொள் செல்வத் திருப்பராய்த்
துறையுந் தொழுவான் நண்ணினார்.

தெளிவுரை : நாவரசர் திருவானைக்கா என்ற அத்தலத்தில் சிலந்திக்கு அருளிய இறைவரின் திருவடிகளை வணங்கிப் பல செஞ்சொல் மாலைகளைப் பாடி, விளங்கும் சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளிய திருவெறும்பியூர் மலையையும் வணங்கித் திருப்பதிகத்தைப் பாடினார். பின்பு, விரிந்த பேரொளியுடைய திருச்சிராப்பள்ளி மலையையும், திருக்கற்குடி மலையையும், நன்மையுடைய திருப்பராய்த் துறையையும் வணங்கும் பொருட்டாகச் செல்லலானார்.

1568. மற்றப் பதிகள் முதலான
மருங்குள் ளனவுங் கைதொழுது
பொற்புற் றமைந்த திருப்பணிகள்
செய்து பதிகங் கொடுபோற்றி
உற்ற அருளால் காவிரியை
ஏறி ஒன்னார் புரமெரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீ
லியினைச் சென்று சேர்கின்றார்.

தெளிவுரை : மேலும் அத்தலங்கள் முதலாக அருகில் உள்ள மற்றத் தலங்களையும் வணங்கி, அழகு பொருந்த அமைந்த கைத்தொண்டுகளையும் ஆற்றித் திருப்பதிகம் பாடித்துதித்து, பொருந்திய திருவருளால், காவிரியாற்றைக் கடந்து ஏறிப் போய், முப்புரங்கள் அழியும்படி எரித்த இறைவர் வீற்றிருக்கும் திருப்பைஞ்ஞீலியைச் சென்று சேர்கின்ற நாயனார்,

1569. வழிபோம் பொழுது மிகஇளைத்து
வருத்தம் உறநீர் வேட்கையொடும்
அழிவாம் பசிவந் தணைந்திடவும்
அதற்குச் சித்தம் அலையாதே
மொழிவேந் தருமுன் எழுந்தருள
முருகார் சோலைப் பைஞ்ஞீலி
விழியேந் தியநெற் றியினார்தந்
தொண்டர் வருத்தம் மீட்பாராய்.

தெளிவுரை : வழியில் போகும்போது மிகவும் இளைப்பை அடைந்து வருத்தம் உற, நீர் வேட்கையுடன் அழிவு செய்யும் பசிவந்து சேரவும் அதற்கு மனம் அலையாது நாவரசர் முன்னோக்கிச் செல்ல, மணம் கொண்ட சோலைகளையுடைய திருப்பைஞ்ஞீலி என்ற பதியுள் வீற்றிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் தம் தொண்டரின் வருத்தத்தை நீக்குபவராய்,

1570. காவுங் குளமும் முன்சமைத்துக்
காட்டி வழிபோங் கருத்தினால்
மேவுந் திருநீற் றந்தணராய்
விரும்பும் பொதிசோ றுங்கொண்டு
நாவின் தனிமன் னவர்க்கெதிரே
நண்ணி இருந்தார் விண்ணின்மேல்
தாவும் புள்ளும் மண்கிழிக்குந்
தனிஏ னமுங்காண் பரியவர்தாம்.

தெளிவுரை : வானத்தில் பறக்கும் அன்னப்பறவையும் மண்ணைத் தோண்டும் பன்றியுமான நான்முகன், திருமால்களால் காண்பதற்கு அரியவரான அப்பெருமான் ஒரு சோலை, ஒரு குளம் என்ற இவற்றைப் படைத்து, வழிகாட்டிச் செல்லும் எண்ணம் உடையவராய்த் திருநீற்றை அணிந்த அந்தணராகி விரும்பும் கட்டுச் சோற்றினையும் எடுத்துக் கொண்டு நாவரசர் வரும்வழி எதிரில் தங்கியிருந்தார்.

1571. அங்கண் இருந்த மறையவர்பால்
ஆண்ட அரசும் எழுந்தருள
வெங்கண் விடைவே தியர்நோக்கி
மிகவும் வழிவந் திளைத்திருந்தீர்
இங்கென் பாலே பொதிசோறுண்
டிதனை உண்டு தண்ணீர்இப்
பொங்கு குளத்தில் குடித்திளைப்புப்
போக்கிப் போவீர் எனப்புகன்றார்.

தெளிவுரை : அவ்வாறு வழியில் தங்கியிருந்த அந்தணரிடம் (இறைவரிடம்) ஆளுடைய அரசு வந்து சேர, கொடிய கண்ணையுடைய காளையூர்தியுடைய இறைவர் அவரைப் பார்த்து வழியைக் கடந்து வந்த வருத்தத்தால் மிகவும் இளைப்பை அடைந்தீர். இங்கு என்னிடத்தில் கட்டுச்சோறு உண்டு. இச்சோற்றை உண்டும் இந்தக் குளத்தின் நீரைக் குடித்தும் உம் இளைப்பைப் போக்கிக் கொள்வீர் எனக் கூறினார்.

1572. நண்ணுந் திருநா வுக்கரசர்
நம்பர் அருள்என் றறிந்தார்போல்
உண்ணும் என்று திருமறையோர்
உரைத்துப் பொதிசோ றளித்தலுமே
எண்ண நினையா தெதிர்வாங்கி
இனிதா அமுது செய்தினிய
தண்ணீர் அமுது செய்தருளித்
தூய்மை செய்து தளர்வொழிந்தார்.

தெளிவுரை : அங்கு வந்தடைந்த நாவரசரும் இது இறைவரின் திருவருள் எனக்கொண்டு முன்னம் அறிமுகமானவர் போல் காட்டி உண்பீராக! எனக்கூறி வேதியரான இறைவர் கட்டுச்சோற்றை அளித்தவுடனே, மேல் ஏதும் நினையாதவராய், முன்னே ஏற்றுக்கொண்டு இனிமையாய் உணவு உண்டு, இனிய நீரையும் பருகித் தூய்மையும் செய்து, தம் தளர்வை நீக்கிக் கொண்டார்.

1573. எய்ப்பு நீங்கி நின்றவரை
நோக்கி இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர்போவ
தென்றார் அரசும் அவர்க்கெதிரே
செப்பு வார்யான் திருப்பைஞ்ஞீ
லிக்குப் போவ தென்றுரைப்ப
ஒப்பி லாரும் யான்அங்குப்
போகின் றேன்என் றுடன்போந்தார்.

தெளிவுரை : இளைப்பு நீங்கிய அரசினை அங்கு வந்திருந்த அந்தணரான இறைவர் பார்த்து இனிமேல் நீவிர் எங்குச் செல்கின்றீர்? என வினவினார். நாவரசர் அதற்கு மறுமொழியாகக் கூறுவதற்கரிய சிவபெருமானின் திருப்பைஞ்ஞீலி என்ற தலத்துக்குப் போகின்றேன் எனக் கூறினார். ஒப்பில்லாத இறைவரான அந்தணரும் நானும் அங்கு தான் போகின்றேன்! என்று உடன் சென்றார்.

1574. கூட வந்து மறையவனார்
திருப்பைஞ் ஞீலி குறுகியிட
வேடம் அவர்முன் மறைத்தலுமே
மெய்ம்மைத் தவத்து மேலவர்தாம்
ஆடல் உகந்தார் அடியேனைப்
பொருளா அளித்த கருணைஎனப்
பாடல் புரிந்து விழுந்தெழுந்து
கண்ணீர் மாரி பயில்வித்தார்.

தெளிவுரை : உடன் வந்த மறையவர், திருப்பைஞ்ஞீலியை அணுக, அதுவரையில் காட்டி வந்த உருவத்தை அவரது முன் நின்று மறைத்துக் கொள்ளவும், மெய்த்தவம் விளங்கும் மேன்மையுடைய நாவரசர் கூத்த! அடியேனையும் ஒரு பொருளாக வைத்து இவ்வாறு எனக்கு அளித்த பெருங்கருணை இருந்தவாறு தான் என்னே! எனப்பாடிக் கீழே விழுந்து வணங்கி எழுந்து கண்ணீர் மழை பொழிந்து சிவானந்தத்தில் திளைத்தார்.

1575. பைஞ்ஞீ லியினில் அமர்ந்தருளும்
பரமர் கோயில் சென்றெய்தி
மைஞ்ஞீ லத்து மணிகண்டர்
தம்மை வணங்கி மகிழ்சிறந்து
மெய்ஞ்ஞீர் மையினில் அன்புருக
விரும்புந் தமிழ்மா லைகள்பாடிக்
கைஞ்ஞீ டியதந் திருத்தொண்டு
செய்து காதல் உடனிருந்தார்.

தெளிவுரை : திருப்பைஞ்ஞீலியில் விரும்பி எழுந்தருளியிருக்கும் இறைவரின் கோயிலைப் போய் அடைந்து கரிய அழகிய நீலகண்டரான இறைவரை வணங்கி, மிகக் களிப்படைந்து உண்மைப் பண்பின் நீடிய அன்பானது உள் உருக, விரும்பும் தமிழ் மாலைகளான தேவாரப் பதிகங்களைப் பாடிச் சிறப்புடைய கைத் தொண்டைச் செய்து பக்தியுடனே அந்தத் தலத்தில் தங்கியிருந்தார்.

1576. நாதர் மருவுந் திருமலைகள்
நாடும் பதிகள் பலமிகவும்
காதல் கூரச் சென்றிறைஞ்சிக்
கலந்த இசைவண் டமிழ்பாடி
மாதொர் பாகர் அருளாலே
வடபால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்ததிரு
வண்ணா மலையை நண்ணினார்.

தெளிவுரை : நாவரசர் இறைவர் வீற்றிருக்கும் திருமலைகளும் நாடும் மிகப் பல பதிகளும் மிக்க அன்பு பொருந்தச் சென்று வணங்கி, இசை கலந்த விருப்பம் மிக்க தமிழ்ப்பதிகங்களைப் பாடித் தையல் பாகரின் திருவருளால் வடக்குத் திக்கு நோக்கிச் சென்று முதல் தேவரான சிவபெருமான் வீற்றிருக்கும் திருவண்ணாமலையை அடைந்தார்.

1577. செங்கண் விடையார் திருவண்ணா
மலையைத் தொழுது வலங்கொண்டு
துங்க வரையின் மிசையேறித்
தொண்டர் தொழும்புக் கெதிர்நிற்கும்
அங்கன் அரசைப் பணிந்தெழுந்து
திளைத்துத் திருநா வுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு
மேலாம் பெருமை சாதித்தார்.

தெளிவுரை : நாவுக்கரசர் சிவந்த விழிகளையுடைய காளையை யூர்தியாய்க் கொண்ட சிவபெருமானின் இடமான திருவண்ணாமலையை வணங்கி, அப்பெரிய மலைமீது ஏறி, தொண்டர்கள் அன்பு கூர்ந்து செய்யும் அடிமைத் திறத்திற்கு முன் நின்றருளும் அருளுடைய அரசரான சிவபெருமானை வணங்கி எழுந்து ஆனந்தத்தில் முழுகி, இங்ஙனம் வழிபட்டு இன்புற்று, உலகில் தங்கும் பிறவியே இந்த உலகை நீங்கித் தங்கும் வீடு பேற்று உலகத்துக்கு மேலானது என்ற பெருமையை அனுபூதியாகக் கொண்டார்.

1578. அண்ணா மலைமேல் அணிமலையை
ஆரா அன்பின் அடியவர்தங்
கண்ணார் அமுதை விண்ணோரைக்
காக்கக் கடலில் வந்தெழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானைக்
கும்பிட் டுருகுஞ் சிந்தையுடன்
பண்ணார் பதிகத் தமிழ்பாடிப்
பணிந்து பரவிப் பணிசெய்தார்.

தெளிவுரை : அண்ணாமலையின் மீது விளங்கும் அணிமலையை, அடங்காத அன்பையுடைய அடியவர் கண்ணால் அனுபவிக்கும் அமுதம் போன்றவரை, தேவர்களைக் காப்பதற்காகப் பாற்கடலில் எழுந்து வந்த யாவராலும் உண்ணத்தகாத நஞ்சை உண்டருளிய பெருமானை, வணங்கி உருகும் உள்ளத்தோடும் பண் நிறைந்த தமிழ்திருப் பதிகத்தைப் பாடிப் பணிந்து துதிசெய்து திருப்பணிகள் செய்தார்.

1579. பணியார் வேணிச் சிவபெருமான்
பாதம் போற்றிப் பணிசெயுநாள்
மணியார் கண்டத் தெம்பெருமான்
மண்மேல் மகிழும் இடமெங்கும்
தணியாக் காதல் உடன்சென்று
வணங்கித் தக்க பணிசெய்வார்
அணியார் தொண்டைத் திருநாட்டில்
அருளால் அணைவார் ஆயினார்.

தெளிவுரை : பாம்புகளை அணியாய் அணிந்த சிவபெருமானின் திருவடிகளை வணங்கித் திருப்பணிகளை நாவுக்கரசர் செய்து கொண்டிருந்தார். அந்நாட்களில், நீலகண்டத்தையுடைய எம் இறைவர் இந்தப் பூவுலகில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பதிகள் எங்கும் போய்த் தணியாத காதலுடன் வணங்கி ஏற்ற திருப்பணிகளைச் செய்பவரான நாவரசர் அழகிய திருத்தொண்டை நாட்டில் திருவருள் செலுத்தச் செல்பவராய்,

1580. காதல் செய்யுங் கருத்தினுடன்
காடும் மலையும் கான்யாறும்
சூத மலிதண் பணைப்பதிகள்
பலவுங் கடந்து சொல்லினுக்கு
நாதர் போந்து பெருந்தொண்டை
நன்னாட் டெய்தி முன்னாகச்
சீத மலர்மென் சோலைசூழ்
திருவோத் தூரில் சென்றடைந்தார்.

தெளிவுரை : அன்பு மிகுந்த பணிகள் செய்யும் கருத்துடனே காடுகளையும் மலைகளையும் காட்டாறுகளையும் மாஞ்சோலைகள் நிறைந்த குளிர்ந்த வயல்களையுடைய நகரங்கள் பலவற்றையும் கடந்து, நாவரசர், பெரிய தொண்டை நாட்டை அடைந்து முதலில் குளிர்ந்த மென்மையான மலர்கள் நிறைந்த பூஞ்சோலைகளால் சூழப்பட்ட திருவோத்தூரைப் போயடைந்தார்.

1581. செக்கர்ச் சடையார் திருவோத்தூர்த்
தேவர் பிரானார் தங்கோயில்
புக்கு வலங்கொண் டெதிர்இறைஞ்சிப்
போற்றிக் கண்கள் புனல்பொழிய
முக்கட் பிரானை விரும்புமொழித்
திருத்தாண் டகங்கள் முதலாகத்
தக்க மொழிமா லைகள்சாத்திச்
சார்ந்து பணிசெய் தொழுகுவார்.

தெளிவுரை : சிவந்த சடையையுடையவரான திருவோத்தூரில் வீற்றிருக்கின்ற இறைவரின் கோயிலுக்குள் புகுந்து வலமாகச் சுற்றி வந்து, திருமுன்பு வணங்கி துதிகள் செய்து, கண்கள் ஆனந்தக் கண்ணீர் பொழிய நின்று  மூன்று கண்களையுடைய அப்பெருமானை விரும்பிப் பாடுகின்ற தாண்டகங்கள் முதலான தகுந்த சொன் மாலைகளைப் பாடிச் சாத்திச் சிவபெருமானுக்குத் திருப்பணிகளைச் செய்து ஒழுகுபவராய் விளங்கினார்.

1582. செய்ய ஐயர் திருவோத்தூர்
ஏத்திப் போந்து செழும்புவனம்
உய்ய நஞ்சுண் டருளும்அவர்
உறையும் பதிகள் பலவணங்கித்
தையல் தழுவக் குழைந்தபிரான்
தங்குந் தெய்வப் பதியென்று
வையம் முழுதும் தொழுதேத்தும்
மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.

தெளிவுரை : (நாவுக்கரசர்) சிவந்த சடையையுடைய இறைவரின் திருவோத்தூரினை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டுப் போய், செழுமையான உலகங்கள் எல்லாம்  உய்யுமாறு நஞ்சை உண்டருளிய அப்பெருமான் இனிதாய் அமர்கின்ற பல தலங்களையும் துதித்துச் சென்று, உமையம்மையார் தழுவத் திருமேனியை குழைந்து காட்டிய சிவபெருமான் வீற்றிருக்கும் தெய்வத் தலம் என உலகங்கள் எல்லாம் வணங்கித் துதிக்கின்ற மதில் சூழ்ந்த காஞ்சி நகரத்தின் பக்கத்தை அடைந்தார்.

1583. ஞாலம் உய்யத் திருவதிகை
நம்பர் தம்பேர் அருளினால்
சூலை மடுத்து முன்னாண்ட
தொண்டர் வரப்பெற் றோமென்று
காலை மலருங் கமலம்போற்
காஞ்சி வாணர் முகமெல்லாம்
சால மலர்ந்து களிசிறப்பத்
தழைத்த மனங்கள் தாங்குவார்.

தெளிவுரை : உலகம் உய்யும் பொருட்டுத் திருவதிகைப் பெருமான் தம் பேரருளினால் சூலை நோயைத் தந்து நேரே ஆட்கொள்ளப்பட்ட அடியாரான நாவுக்கரசர் இங்கு எழுந்தருளி வரும் பேறு பெற்றோமா என்று எண்ணிக் கொண்டு, காஞ்சி நகரத்தில் உள்ளவர் தம் முகங்கள் எல்லாம் காலையில் பூக்கும் தாமரை போல் மிகவும் மலர்ச்சி பெற்றுத் தழைத்த மனத்துடன்,

1584. மாட வீதி மருங்கெல்லாம்
மணிவா யில்களில் தோரணங்கள்
நீடு கதலி யுடன்கமுகு
நிரைத்து நிறைபொற் குடந்தீபம்
தோடு குலவு மலர்மாலை
சூழ்ந்த வாசப் பந்தர்களும்
ஆடு கொடியு முடனெடுத்தங்
கணிநீள் காஞ்சி அலங்கரித்தார்.

தெளிவுரை : மாடவீதிகளின் பக்கங்களில் எல்லாம் அழகான வாயில்களில் எங்கும், தோரணங்களும் பொருந்தும் வாழை மரங்களுடனே பாக்குகளையும் வரிசையாய்க் கட்டி நிறைகுடம், தீபங்கள், இதழ்கள் பொருந்திய மலர் மாலைகள் ஆகியவற்றை எல்லாமும் எடுப்பித்து, அங்கு அழகிய நீண்ட காஞ்சி நகரத்தை மேலும் அலங்காரம் செய்தனர்.

1585. தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள
எழுந்து சொல்லுக் கரசர்பால்
கொண்ட வேட்கைப் பொலிவினொடுங்
குலவும் வீதிப் பணிசெய்யும்
அண்டர் அறிதற் கரியதிரு
அலகு முதலாம் அவையேந்தி
இண்டை புனைந்த சடைமுடியார்க்
கன்பர் தம்மை எதிர்கொண்டார்.

தெளிவுரை : இதற்கு என்று மேற்கொண்ட திருக்கோலப் பொலிவுடன் வரவேற்பதற்காக, நாவுக்கரசர் வரும் வழியில் தொண்டர்களுடன் கூடி எழுந்து போய், விளங்கும் திருவீதிப் பணி செய்யும் தேவரும் அறிவதற்கு அரிய திருவலகு முதலியவற்றை எடுத்துக் கொண்டு, இண்டை மாலை சூடிய சடையுடைய பெருமானார்க்கு அன்பரான அவரை எதிர் கொண்டனர்.

1586. எதிர்கொண் டிறைஞ்சுஞ் சீரடியார்
தம்மை இறைஞ்சி எழுந்தருளி
மதில்கொண் டணிந்த காஞ்சிநகர்
மறுகுட் போந்து வானநதி
குதிகொண் டிழுந்த சடைக்கம்பர்
செம்பொற் கோயில் குறுகினார்
அதிர்கொண் டலைநேர் மணிமிடற்றார்
ஆண்ட திருநா வுக்கரசர்.

தெளிவுரை : ஒலிக்கும் மேகம் போன்ற நீலமணி போன்ற கண்டரான இறைவரான ஆட்கொள்ளப்பட்ட நாவரசர், எதிர்கொண்டு வரவேற்று வணங்கும் சிறந்த அடியவரைத் தாமும் எதிரே வணங்கி, மதில் சூழ்ந்த அழகிய காஞ்சி நகரத்தின் திருவீதியுள் புகுந்து, வான் கங்கை குதிக்கும் சடையையுடைய ஏகாம்பநாதர் செம்பொன் கோயிலை அடைந்தார்.

1587. திருவா யிலினைப் பணிந்தெழுந்து
செல்வத் திருமுன் றிலைஅணைந்து
கருவார் கச்சி ஏகம்பர்
கனக மணிமா ளிகைசூழ்ந்து
வருவார் செம்பொன் மலைவல்லி
தழுவக் குழைந்த மணிமேனிப்
பெருவாழ் வினைமுன் கண்டிறைஞ்சிப்
பேரா அன்பு பெருகினார்.

தெளிவுரை : கோபுரத் திருவாயிலைக் கீழே விழுந்து வணங்கி எழுந்து, உள்ளே சென்று, செல்வம் நிறைந்த முற்றத்தை அடைந்து, அருள் கருவையுடைய கச்சி மாநகரத்தின் ஏகாம்பரநாதரின் அழகிய பொன் மாளிகையினைச் சுற்றி வலம் வருபவரான நாவுக்கரசர், செம்பொன் மலையரசனின் மகளான காமாட்சியம்மையார் தழுவக் குழைந்து காட்டிய அழகிய திருமேனியையுடைய பெருவாழ்வான ஏகம்பரை முன்பு கண்டு வணங்கிப் பேராத அன்புமிக்கவரானார்.

1588. வார்ந்து சொரிந்த கண்ணருவி
மயிர்க்கால் தோறும் வரும்புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப
அன்பு கரைந்தென் புள்ளலைப்பச்
சேர்ந்த நயனம் பயன்பெற்றுத்
திளைப்பத் திருவே கம்பர்தமை
நேர்ந்த மனத்தில் உறவைத்து
நீடும் பதிகம் பாடுவார்.

தெளிவுரை : நாவுக்கரசர் பெருகி வழியும் கண்ணீர் மழையானது மயிர்க்கால் எங்கும் வரும் புளகம் நிறைந்த திருமேனியின் புறத்தை அலைக்கவும், அன்பு மேலீட்டினால் உள்ளமானது கரைந்து எலும்பினுள்ளும் அலைக்கவும், பெறத்தக்க பயனைப் பெற்றுக் கண்கள் திளைக்கவும், ஏகம்பநாதரை நேர்ந்த மனத்தினுள் பொருந்தக் கொண்டு நீடும் திருப்பதிகம் பாடுவார் ஆனார்.

1589. கரவாடும் வன்னெஞ்சர்க்
கரியானை என்றெடுத்துப்
பரவாய சொல்மாலைத்
திருப்பதிகம் பாடியபின்
விரவார்தம் புரம்எரித்த
விடையவனார் வெள்ளெயிற்றின்
அரவாரம் புனைந்தவர்தந்
திருமுன்றிற் புறத்தணைந்தார்.

தெளிவுரை : கரவாடும் வன்நெஞ்சர்க் கரியானை என்று எடுத்துத் தொடங்கும் போற்றுதலான சொன்மாலைத் திருப்பதிகம் பாடிய பின்னர்ப், பகைவரின் முப்புரங்களை எரித்தவரும், வெண்மையான பற்களையுடைய பாம்பு மாலை அணிந்தவருமான இறைவர் கோயிலின் முன் பக்கத்தை நாவரசர் அடைந்தார்.

1590. கையார்ந்த திருத்தொண்டு கழியமிகுங் காதலொடும்
செய்யாநின் றேஎல்லாச் செந்தமிழ்மா லையும்பாடி
மையார்ந்த மிடற்றர்திரு மயானத்தை வலங்கொண்டு
மெய்யார்வ முறத்தொழுது விருப்பினொடு மேவுநாள்.

தெளிவுரை : கையால் செய்கின்ற உழவாரத் திருத்தொண்டை மிகப்பெரும் பக்தியுடன் செய்து கொண்டே பலப்பல வகையாலான எல்லா வகையான தமிழ்ப் பதிகங்களையும் பாடி திருநீலகண்டரின் கச்சி திருமயானத்தையும் வலமாக வந்து, உண்மை நிறைவான ஆர்வம் பொருந்தத் தொழுது, விருப்புடன் அங்குத் தங்கியிருந்த நாளில்,

1591. சீர்வளரு மதில்கச்சி நகர்த்திருமேற் றளிமுதலா
நீர்வளருஞ் சடைமுடியார் நிலவியுறை ஆலயங்கள்
ஆர்வமுறப் பணிந்தேத்தி ஆய்ந்ததமிழ்ச் சொல்மலரால்
சார்வுறுமா லைகள்சாத்தித் தகுந்தொண்டு செய்திருந்தார்.

தெளிவுரை : சிறப்புப் பெருகும் மதிலுடைய திருக்கச்சி மேற்றளி முதலாகக் கங்கை தங்கிய சடைமுடியான் நிலைபெற வீற்றிருக்கும் கோயில்களை ஆர்வத்துடன் வணங்கி, ஆய்ந்த தமிழ்ச்சொல் மாலைகளால் சார்பு பொருந்தும் மாலைகளான திருப்பதிகங்களைச் சாத்தித் தக்க தொண்டுகளைச் செய்து அங்கே தங்கியிருந்தார்.

1592. அந்நகரில் அவ்வண்ணம் அமர்ந்துறையும் நாளின்கண்
மன்னுதிரு மாற்பேறு வந்தணைந்து தமிழ்பாடிச்
சென்னிமிசை மதிபுனைவார் பதிபலவுஞ் சென்றிறைஞ்சித்
துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்தபெருங் காதலினால்.

தெளிவுரை : அந்தக் காஞ்சி நகரத்தில் அவ்வாறு நாவுக்கரசர் தங்கியிருந்தபோது, நிலைபெற்ற திருமாற் பேற்றுக்குச் சென்று திருப்பதிகம் பாடித் தலையில் பிறைச் சந்திரனை அணிந்த பெருமானின் திருத்தலங்கள் பலவற்றையும் போய் வணங்கி, முன் தொடர்ந்து பெருங்காதல் காரணமாகத் திரும்பவும் காஞ்சி நகரத்தை வந்து சேர்ந்தார்.

1593. ஏகம்பன் காண்அவனென் எண்ணத்தான் எனப்போற்றிப்
பாகம்பெண் ணுருவானைப் பைங்கண்விடை உயர்த்தானை
நாகம்பூண் உகந்தானை நலம்பெருகுந் திருநீற்றின்
ஆகந்தோய் அணியானை அணைந்துபணிந் தின்புற்றார்.

தெளிவுரை : கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே என்று துதித்து, இடப்பாகத்தில் உமையம்மையையுடைய இறைவரைப் பாம்புகளை அணியாய் அணிந்தவரை நன்மை பெருகும் திருநீற்றை நிறையப் பூசிய திருமேனியின் அழகு உடையவரைச் சேர்ந்து வணங்கி நாவுக்கரசர் இன்பம் அடைந்தார்.

1594. திருக்கச்சி ஏகம்பம் பணிந்தேத்தித் திங்களார்
நெருக்கச்செஞ் சடைக்கணிந்தார் நீடுபதி தொழநினைவார்
வருக்கைச்செஞ் சுளைபொழிதேன் வயல்விளைக்கும் நாட்டிடைப்போய்ப்
பருக்கைத்திண் களிற்றுரியார் கழுக்குன்றின் பாங்கணைந்தார்.

தெளிவுரை : காஞ்சி தலத்தையும் ஏகம்பர் கோயிலையும் வணங்கித் துதித்துப் பிறைச் சந்திரனைத் தம் செறிந்த செஞ்சடைக் கற்றையில் அணிந்த இறைவர் நிலைபெற எழுந்தருளிய மற்றத் தலங்களைப் போய்த் தொழுது வணங்க எண்ணியவராய்ப் பலாக் கனிகளின் செம்மையான சுளைகள் பொழிந்த தேன் பெருகி வயலில் உள்ள பயிரை விளையச் செய்யும் அந்த நாட்டில் சென்று பருத்த கையையுடைய வலிய யானையின் தோலையுடையவரின் திருக்கழுக்குன்றத்தின் பக்கத்தைப் போய்ச் சேர்ந்தார்.

1595. நீடுதிருக் கழுக்குன்றில் நிருத்தனார் கழல்வணங்கிப்
பாடுதமிழ்த் தொடைபுனைந்து பாங்குபல பதிகளிலுஞ்
சூடுமிளம் பிறைமுடியார் தமைத்தொழுது போற்றிப்போய்
மாடுபெருங் கடலுடுத்த வான்மியூர் வந்தணைந்தார்.

தெளிவுரை : நாவுக்கரசர் நிலைத்த செல்வம் உடைய கழுக்குன்றத்தில் வீற்றிருக்கும் கூத்தரின் திருவடிகளை வணங்கிப்பாடும் தமிழ் மாலையான தேவாரத்தினால் சிவபெருமானைப் புனைந்து பக்கத்தில் உள்ள பல தலங்களுக்முஞூ போய்ப் பிறையைச் சூடும் முடிகொண்ட இறைவரை வணங்கித் துதித்து மேலே போய்ப் பக்கத்தில் கடலால் சூழப்பட்ட திருவான்மியூர் என்னும் தலத்தைச் சேர்ந்தார்.

1596. திருவான்மி யூர்மருந்தைச் சேர்ந்துபணிந் தன்பினொடும்
பெருவாய்மைத் தமிழ்பாடி அம்மருங்கு பிறப்பறுத்துத்
தருவார்தங் கோயில்பல சார்ந்திறைஞ்சித் தமிழ்வேந்தர்
மருவாரும் மலர்ச்சோலை மயிலாப்பூர் வந்தடைந்தார்.

தெளிவுரை : திருவான்மியூரில் வீற்றிருக்கும் மருந்து நாதரைச் சேர்ந்து பணிந்து, அன்புடன் பெரு வாய்மையுடைய தமிழ்ப்பதிகம் பாடி, அப்பக்கத்தில் பிறவியை அறுத்து வீடு பேற்றை அருளும் இறைவரின் பல தலங்களையும் அடைந்து வணங்கித் தமிழ் மன்னரான நாவுக்கரசர் மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த மயிலாப்பூரை வந்து சேர்ந்தார்.

1597. வரைவளர்மா மயிலென்ன மாடமிசை மஞ்சாடும்
தரைவளர்சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள்வணங்கி
உரைவளர்மா லைகள்அணிவித் துழவாரப் படையாளி
திரைவளர்வே லைக்கரைபோய்த் திருவொற்றி யூர்சேர்ந்தார்.

தெளிவுரை : மலைமீது வளரும் பெரிய மயிலைப் போன்ற மாடங்களின் மீது மேகம் தவழ்கின்ற, உலகில் வளரும் சிறப்புடைய திருமயிலாப்பூரில் வீற்றிருக்கின்ற சங்கரரின் பாதங்களை வணங்கி, உரை பெருகும் தமிழ் மாலைகளைச் சாத்தி, உழவாரப் படையையுடைய நாவரசர், அலைகள் தவழ்கின்ற கடற்கரை வழியே போய்த் திருவொற்றியூரை அடைந்தார்.

1598. ஒற்றியூர் வளநகரத் தொளிமணிவீ திகள்விளக்கி
நற்கொடிமா லைகள்பூகம் நறுங்கதலி நிரைநாட்டிப்
பொற்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து
மற்றவரை எதிர்கொண்டு கொடுபுக்கார் வழித்தொண்டர்.

தெளிவுரை : வளமை வாய்ந்த திருவொற்றியூர் நகரின் ஒளியுடைய அழகிய வீதிகளை விளக்கி, நல்ல கொடிகளையும் மாலைகளையும் பாக்கும் வாழைகளுமான இவற்றை வரிசையாய், நாட்டிப் பொன்னால் ஆன நிறைகுடங்களையும் தூபங்களையும் விளக்குகளையும் அழகுற அமைத்து, நாவுக்கரசரை வரவேற்று நகரத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர், தொண்டர்கள்.

1599. திருநாவுக் கரசரும்அத் திருவொற்றி யூர்அமர்ந்த
பெருநாகத் திண்சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப்புக்
கொருஞானத் தொண்டருடன் உருகிவலங் கொண்டடியார்
கருநாமந் தவிர்ப்பாரைக் கைதொழுது முன்வீழ்ந்தார்.

தெளிவுரை : திருõவுக்கரசரும் அந்தத் திருவொற்றியூரில் அமர்ந்த போர் செய்வதற்குரிய திண்மையான வில்லையுடைய பெருமானின் கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்து, ஒருமைப்பட்ட ஞானத்தையுடைய அத்தொண்டர்களுடன் உள்ளம் உருகி, வலமாய் வந்து, அடியாரின் பிறவி என்ற பெயரைத் தவிர்க்கும் பெருமானைக் கை தொழுது திருமுன்பு விழுந்தார்.

1600. எழுதாத மறைஅளித்த எழுத்தறியும் பெருமானைத்
தொழுதார்வ முறநிலத்தில் தோய்ந்தெழுந்தே அங்கமெலாம்
முழுதாய பரவசத்தின் முகிழ்த்தமயிர்க் கால்மூழ்க
விழுதாரை கண்பொழிய விதிர்ப்புற்று விம்மினார்.

தெளிவுரை : எழுதாத மறையை அளித்தருளிய எழுத்தறியும் பெருமானைத் தொழுது, அன்பு மிகப்பெற்று, நிலம் தோய்ந்து வணங்கி, எழுந்து உடல் முழுதும் மயிர்ப் புளகம் கொள்ளத் திளைத்து கண்கள் தாரையாய் நீரைப் பொழிய உடல் விதிர்த்து விம்மியவராய்.

1601. வண்டோங்கு செங்கமலம் எனஎடுத்து மனமுருகப்
பண்தோய்ந்த சொற்றிருத்தாண் டகம்பாடிப் பரவுவார்
விண்தோய்ந்த புனற்கங்கை வேணியார் திருவுருவங்
கண்டோங்கு களிசிறப்பக் கைதொழுது புறத்தணைந்தார்.

தெளிவுரை : வண்டோங்கு செங்கமலம் எனத்தொடங்கி, உள்ளம் உருகப் பண் பொருந்திய சொற்களான திருத்தாண்டகப் பதிகத்தைப் பாடி வணங்குபவர், வான் கங்கையைச் சடையில் தரித்த இறைவரின் திருவடியைக் கண்டு கொண்டு, பெருகிய ஆனந்தம் மிகக் கைதொழுது கோயிலின் புறத்தை அடைபவராய்.

1602. விளங்குபெருந் திருமுன்றில் மேவுதிருப் பணிசெய்தே
உளங்கொள்திரு விருத்தங்கள் ஓங்குதிருக் குறுந்தொகைகள்
களங்கொள்திரு நேரிசைகள் பலபாடிக் கைதொழுது
வளங்கொள்திருப் பதியதனில் பலநாள்கள் வைகினார்.

தெளிவுரை : விளங்கும் பெருமையுடைய திருமுற்றத்தில் பொருந்திய திருப்பணிகள் செய்து, மனத்தில் கொண்ட திருவிருத்தங்களும், ஓங்கும் திருக்குறுந்தொகைகளும், கண்டத்தை இடமாகக் கொண்டு பாடப்படும் திருநேரிசைகளும் ஆகிய பலவற்றையும் பாடிக் கைகளால் தொழுது வளம் பொருந்திய அந்தத் திருவொற்றியூரில் பல நாள்கள் தங்கியிருந்தார்.

1603. அங்குறையு நாளின்கண் அருகுளவாம் சிவாலயங்கள்
எங்குஞ்சென் றினிதிறைஞ்சி ஏத்துமவர் இறையருளால்
பொங்குபுனல் திருவொற்றி யூர்தொழுது போந்துமையாள்
பங்குடையார் அமர்ந்ததிருப் பாசூராம் பதியணைந்தார்.

தெளிவுரை : அங்குத் தங்கியிருந்த நாட்களில் பக்கத்தில் உள்ள சிவாலயங்கள் எங்கும் போய் வணங்கித் துதிக்கின்ற அவர், சிவபெருமானின் அருளாய், பெருகும் நீரையுடைய திருவொற்றியூரைத் தொழுது போய், உமையை ஒரு பகுதியில் கொண்ட சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருப்பாசூர் என்ற பதியை அடைந்தார்.

1604. திருப்பாசூர் நகரெய்திச் சிந்தையினில் வந்தூறும்
விருப்பார்வம் மேற்கொள்ள வேயிடங்கொண் டுலகுய்ய
இருப்பாரைப் புரமூன்றும் எரித்தருள எடுத்ததனிப்
பொருப்பார்வெஞ் சிலையாரைத் தொழுதெழுந்து போற்றுவார்.

தெளிவுரை : திருநாவுக்கரசர் திருப்பாசூர் என்ற பதியை அடைந்து உள்ளத்தில் ஊறுகின்ற விருப்பம் மேலே எழ, உலகம் கண்டு உய்யும் பொருட்டு அப்பதியில் மூங்கிலை இடமாகக் கொண்டு வெளிப்பட எழுந்தருளி இருப்பவரான இறைவரை, திரிபுரங்களை எரித்திடவும் அதில் அன்பர் மூவர்க்கும் அருள் செய்யவும் ஒப்பற்ற மேரு என்ற வில்லையுடையவரை, நிலத்தில் விழுந்து வணங்கி, தொழுபவராய்,

1605. முந்திமூ வெயில்எய்த முதல்வனார் எனவெடுத்துச்
சிந்தைகரைந் துருகுதிருக் குறுந்தொகையும் தாண்டகமும்
சந்தநிறை நேரிசையும் முதலான தமிழ்பாடி
எந்தையார் திருவருள்பெற் றேகுவார் வாகீசர்.

தெளிவுரை : முந்தி மூவெயில் எய்த முதல்வனார் எனத்தொடங்கி, உள்ளம் கரைந்து உருகும் தன்மையுடைய திருக்குறுந்தொகைப் பதிகத்தையும், திருத்தாண்டகப் பதிகத்தையும் சந்தம் நிறைந்த திருநேரிசை முதலான தமிழ்ப் பதிகங்களையும் பாடி, நாவுக்கரசர், எம் இறைவரின் திருவருளைப் பெற்றவராய்,

1606. அம்மலர்சீர்ப் பதியைஅகன் றயல்உளவாம் பதிஅனைத்தின்
மைம்மருவுங் களத்தாரை வணங்கிமகிழ் வொடும்போற்றி
மெய்ம்மைநிலை வழுவாத வேளாள விழுக்குடிமைச்
செம்மையினார் பழையனூர்த் திருஆல வனம்பணிந்தார்.

தெளிவுரை : அந்த அழகான சிறந்த திருப்பதியை நீங்கிப் பக்கத்தில் உள்ள பதிகள் எல்லாவற்றையும் போய், நாவரசர் நஞ்சு விளங்கும் கண்டம் உடைய இறைவனை வணங்கி மகிழ்வோடும் துதித்துப் பின்னர், மெய்ம்மை நிலையினின்றும் சற்றும் தவறாத மேன்மையும், நெறியில் வாழும் தூயகுடியையும் செம்மையும் உடையவர்களான வேளாளப் பெருமக்கள் வாழ்கின்ற பழையனூர்த் திருவாலங்காட்டைப் பணிந்து,

1607. திருவாலங் காடுறையுஞ் செல்வர்தாம் எனச்சிறப்பின்
ஒருவாத பெருந்திருத்தாண் டகம்முதலாம் ஓங்குதமிழ்ப்
பெருவாய்மைத் தொடைமாலை பலபாடிப் பிறபதியும்
மருவார்வம் பெறவணங்கி வடதிசைமேல் வழிக்கொள்வார்.

தெளிவுரை : திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே! என்று முடியும், என்றும் நீங்காத சிறப்புடைய பெருந்திருத்தாண்டகப் பதிகம் முதலாய் ஓங்கும் பெருவாய்மைத் தமிழ் மாலைகள் பலவற்றையும் பொருந்தும் ஆசை கொள்ள வணங்கி அங்கிருந்து வடதிக்கு நோக்கிச் செல்லலானார்.

1608. பல்பதியும் நெடுங்கிரியும் படர்வனமுஞ் சென்றடைவார்
செல்கதிமுன் அளிப்பவர்தந் திருக்காரிக் கரைபணிந்து
தொல்கலையின் பெருவேந்தர் தொண்டர்கள்பின் உம்பர்குழாம்
மல்குதிருக் காளத்தி மாமலைவந் தெய்தினார்.

தெளிவுரை : பல பதிகளிலும் பெரிய மலைகளிலும் படர்ந்த காடுகளிலும் போய் அடைபவராகி உயிர் செல்லும் கதியை முன் அளிப்பவராகிய இறைவர் வீற்றிருக்கின்ற திருக்காரிகரை என்ற தலத்தை வணங்கிப் பழமையான கலை ஞானங்களின் மன்னரான நாயனார், தேவர் கூட்டங்கள் தொண்டர்களின் பின்னே பொருந்தியுள்ள திருக்காளத்தி என்ற பெரிய மலையைப் போய் அடைந்தனர்.

1609. பொன்முகலித் திருநதியின் புனிதநெடுந் தீர்த்தத்தில்
முன்முழுகிக் காளத்தி மொய்வரையின் தாழ்வரையில்
சென்னியுறப் பணிந்தெழுந்து செங்கண்விடைத் தனிப்பாகர்
மன்னுமலை மிசையேறி வலங்கொண்டு வணங்குவார்.

தெளிவுரை : நாவுக்கரசர் பொன் முகலி என்ற ஆற்றின் புனிதமான நீரில் மூழ்கித் திருக்காளத்தித் தொடர்மலைகளின் தாழ்வரையில் தலையானது நிலம் பொருந்த வணங்கி எழுந்து சிவந்த கண்ணை உடைய விடையினை ஊர்தியாய்க் கொண்ட ஒப்பற்ற பெருமான் நிலையாய் எழுந்தருளிய அந்த மலையின் மீது ஏறி வலமாய் வந்து வணங்குபவராய்,

1610. காதணிவெண் குழையானைக் காளத்தி மலைக்கொழுந்தை
வேதமொழி மூலத்தை விழுந்திறைஞ்சி எழுந்துபெருங்
காதல்புரி மனங்களிப்பக் கண்களிப்பப் பரவசமாய்
நாதனைஎன் கண்ணுளான் எனுந்திருத்தாண் டகம்நவின்றார்.

தெளிவுரை : காதில் அணிந்த வெண்மையான சங்குக் குழையுடையவரை, திருக்காளத்தி மலையின் கொழுந்து போல்பவரை, வேத மொழியின் மூலமானவரைக் கீழே விழுந்து வணங்கி எழுந்து மிக்க ஆசையுடைய உள்ளம் களிப்படையவும் கண் களிக்கவும் பரவசப்பட்டு இறைவரை வணங்கி என் கண் உளான் என்ற முடிவுடைய திருத்தாண்டகத்தைப் பாடினார்.

1611. மலைச்சிகரச் சிகாமணியின் மருங்குறமுன் னேநிற்கும்
சிலைத்தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்திறைஞ்சி
அலைத்துவிழுங் கண்ணருவி ஆகத்துப் பாய்ந்திழியத்
தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்.

தெளிவுரை : மலையுச்சியில் சிகாமணியாய் முளைத்து எழுந்தருளிய இறைவரின் பக்கத்தில் பொருந்த முன்பு நிற்கும் வில்லேந்திய கையையுடைய கண்ணப்ப நாயனாரின் திருவடிகளைச் சேர்ந்து வணங்கிப் பெருகி வரும் கண்ணீர் அருவி போல் மேனியில் பாய்ந்து இழியத் தலைமீது கூப்பிய கைகளுடன் வணங்கி வெளியே வந்து சேர்ந்தார்.

1612. சேணிலவு திருமலையில் திருப்பணியா யினசெய்து
தாணுவினை அம்மலைமேல் தாள்பணிந்த குறிப்பினால்
பேணுதிருக் கயிலைமலை வீற்றிருந்த பெருங்கோலம்
காணுமது காதலித்தார் கலைவாய்மைக் காவலனார்.

தெளிவுரை : மிகவும் உயர்ந்த அந்த மலையில் திருத்தொண்டுகளைச் செய்து இறைவரை அம்மலை மீது வழிபட்ட குறிப்பின் காரணமாகப் பேணும் திருக்கயிலை மலையில் இறைவர் வீற்றிருக்கின்ற பெருங்கோலத்தைப் பார்க்கும் அதைக் கலை வாய்மை விரும்பும் நாயனார் விரும்பினார்.

1613. அங்கண் மாமலை மேல்ம ருந்தை
வணங்கி யாரரு ளான்மிகப்
பொங்கு காதலின் உத்த ரத்திசை
மேல்வி ருப்பொடு போதுவார்
துங்க மால்வரை கானி யாறு
தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால்விடை அண்ணல் மேவு
திருப்ப ருப்பதம் எய்தினார்.

தெளிவுரை : அருள் நோக்கம் உடைய அந்த மலையின் மீது வீற்றிருக்கும் மருந்தான இறைவரை வணங்கி அவருடைய நிறைந்த திருவருள் பெற்றமையால் மேன்மேல் மிகவும் பொங்கும் காதலால் வடக்குத் திக்கு நோக்கிப் போவாராய்ப் பெரியனவாய் மலைகளையும் காட்டாறுகளையும் தொடர்ந்துள்ள நாடுகளையும் கடந்து சென்ற பின் சிவந்த கண்ணையுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பருப்பதத்தைச் சேர்ந்தார்.

1614. மான விஞ்சையர் வான நாடர்கள்
வான்இ யக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்ன காதிபர்
காம சாரிக ளேமுதல்
ஞான மோனிகள் நாளும் நம்பரை
வந்தி றைஞ்சி நலம்பெறுந்
தான மான திருச்சி லம்பை
வணங்கி வண்டமிழ் சாற்றினார்.

தெளிவுரை : வன்மை பொருந்திய வித்தியாதரரும், விண்ணுலகத் தேவர்களும், வானத்தில் இயங்கும் இயக்கர்களும், சித்தர்களும், பாடலில் வல்ல கின்னரர்களும், நாக உலகத்தவரும், தம் விருப்பின்படி உலவுகின்ற தேவச் சாதியனரும் என்ற இவர் முதலாகச் சிவஞானிகளாய் உள்ள மௌனிகளும் நாள்தோறும் வந்து இறைவரை வணங்கி நன்மை அடைகின்ற இடமான திருப்பருப்பதத்தை வணங்கி வளமான தமிழ் மாலை பாடினார்.

1615. அம்ம ருங்குக டந்து போமவர்
ஆர்கொள் சூல அயிற்படைச்
செம்மல் வெண்கயி லைப்பொ ருப்பைநி
னைந்தெ ழுந்ததொர் சிந்தையால்
எம்ம ருங்குமொர் காத லின்றி
இரண்டு பாலும் வியந்துளோர்
கைம்ம ருங்கணை யுந்தெ லுங்கு
கடந்து கன்னடம் எய்தினார்.

தெளிவுரை : அங்கிருந்து அகன்று போகின்றவர் திரிசூலமான கூர்மையான படையை ஏந்திய ஆத்தி மாலையைச் சூடிய இறைவரின் வெண்மையான திருக்கயிலாய மலையை நினைத்து எழுந்த ஒரு சிந்தையினால் எவ்விடத்தும் வேறு எந்த ஆசையும் இல்லாது, இருபக்கங்களிலும் தம் ஆர்வம் கண்டு வியப்புக் கொண்ட அடியார்கள் பக்கத்தில் வந்து சேரத் தெலுங்கு நாட்டைக் கடந்து கருநட (கன்னட) நாட்டை அடைந்தவராய்,

1616. கருந டங்கழி வாகஏகிய
பின்க லந்தவ னங்களும்
திருந தித்துறை யாவை
யும்பயில் சேண்நெ டுங்கிரி
வட்டையும் பெருந லங்கிளர்
நாடும் எண்ணில பிற்ப
டச்செறி பொற்பினால் வருநெ
டுங்கதிர் கோலு சோலைய
மாள வத்தினை நண்ணினார்.

தெளிவுரை : திருநாவுக்கரசர் கருநட (கன்னட) நாட்டின் எல்லை முடிந்த இடத்தைச் சேர்ந்த பின் கலந்துள்ள நாடுகளும் ஆற்றின் துறைகள் எல்லாமும் பயின்று நெடுந்தொலைவு நீண்டு செல்கின்ற மலை வழிகளும் பெருநலங்களைத் தரும் நாடுகளும் ஆகிய இவை எண்ணில்லாதவை பிற்பட்டொழியுமாறு மரங்கள் செறிந்து அழகுற வளர்ந்த இயல்பாய் மேல்வரும் ஞாயிறு வலமாகச் செல்கின்ற பூஞ்சோலைகளையுடைய மாளவ நாட்டை அடைந்தவராய்,

1617. அங்கு முற்றிஅ கன்று போகி
அருஞ்சு ரங்கள் இகந்துசென்று
எங்கு மிக்க அறங்கள் நீடும்
இலாட பூமி யிகந்துபோய்
மங்குல் சுற்றிய வெற்பி னோடு
வனங்கள் யாறு கடந்தயற்
பங்க யப்பழ னத்து மத்திம
பைதி ரத்தினை எய்தினார்.

தெளிவுரை : அந்த இடம் முழுவதையும் கடந்து போய் அரிய காடுகளைக் கடந்து சென்று எங்கெங்கும் மிகுதியான அறச்சாலைகள் அமைந்துள்ள இலாட நாட்டையும் (வங்காள நாட்டின் ஒருபகுதி) தாண்டிச் சென்று மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த மலைகளுடனே காடுகளையும் ஆறுகளையும் கடந்து அருகில் தாமரைகள் மலரும் வயல்களையுடைய மத்திம பைதிரம் என்னும் நாட்டை அடைந்தார்.

1618. அன்ன நாடுக டந்து கங்கை
அணைந்து சென்று வலங்கொளும்
மின்னு வேணியர் வார ணாசி
விருப்பி னோடு பணிந்துடன்
பின்ன ணைந்தவர் தம்மை அங்கண்
ஒழிந்து கங்கை கடந்துபோய்
மன்னு காதல்செய் நாவின் மன்னவர்
வந்து கற்சுரம் முந்தினார்.

தெளிவுரை : அந்த மத்திம நாட்டையும் கடந்து, கங்கையாறு வந்து வலமாக வரும் ஒளி பொருந்திய சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள வாரணாசியை (காசியை) விருப்புடன் வணங்கி வழிபட்டுத் தம்முடன் பின்பற்றி வந்த அடியவர்களை அவ்விடத்தில் விடுத்துக் கங்கைக் கரையை விட்டு மேற்சென்று பொருந்திய பக்தி செய்கின்ற நாவுக்கரசர் மலைக் கானல்களை அடைந்தார்.

1619. மாக மீதுவ ளர்ந்த கானக
மாகி எங்கும் மனித்தரால்
போக லாநெறி யன்றி யும்புரி
கின்ற காதல் பொலிந்தெழச்
சாக மூலப லங்கள் துய்ப்பன
வுந்த விர்ந்து தனித்துநேர்
ஏகி னாரிர வும்பெ ருங்கயி
லைக்கு லக்கிரி எய்துவார்.

தெளிவுரை : வானத்தை அளாவுமாறு உயரமாக வளர்ந்த பெருங்காடாகி எங்கும் மனிதர்களால் போவதற்கு அரிய வழியாய் இருந்த போதும், இடைவிடாது உண்டாகின்ற காதல் மிக்கு மேல் ஓங்குவதால் இலை சருகுகருள் கிழங்குகளும் பழங்களும் என்னும் இவற்றை உண்பதையும் விடுத்துத் தனியாய் நேரே பெரிய கயிலாயமான ஒப்பில்லாத மலையை அடையும் பொருட்டு இரவுக் காலத்திலும் தங்காமல் செல்வாரானார்.

1620. ஆய வாரிரு ளின்கண் ஏகுமவ்
அன்பர் தம்மைஅ ணைந்துமுன்
தீய வாயவி லங்கு வன்தொழில்
செய்ய அஞ்சின நஞ்சுகால்
வாய நாகம ணிப்ப ணங்கொள்வி
ளக்கெ டுத்தன வந்துகால்
தோய வானவ ராயி னுந்தனி
துன்ன ருஞ்சுரம் முன்னினார்.

தெளிவுரை : அத்தகைய செறிந்த இருளில் மேலே செல்லும் அன்பரைத் தீய விலங்குகள் நெருங்கிக் கொடுஞ் செயலைச் செய்ய, அச்சம் கொண்டன. நஞ்சை உமிழும் வாயையுடைய நாகங்கள் தம் படங்களில் உள்ள மணிகளை ஏந்தி விளக்கெடுத்தன. தேவரேயாயினும் இங்கு வந்து கால் வைத்துப் பெயர்க்கத் தனியே சேர்வதற்கு அஞ்சுகின்ற காடுகளை நாவரசர் முன் அடைந்தவராக,

1621. வெங்க திர்ப்பக லக்க டத்திடை
வெய்ய வன்கதிர் கைபரந்
தெங்கு மிக்கபி ளப்பி னாகர்தம்
எல்லை புக்கெரி கின்றன
பொங்க ழல்தெறு பாலை வெந்நிழல்
புக்க சூழல் புகும்பகல்
செங்க திர்க்கனல் போலும் அத்திசை
திண்மை மெய்த்தவர் நண்ணினார்.

தெளிவுரை : அந்தக் காட்டில் கொடிய பகலில் கதிரவனின் கதிர்கள் மிகவும் எப்பக்கமும் பரவுவதால் எங்கும் மிகுதியாய் உள்ளவனவாகிய பிளவுகளிடையே கீழே நாக உலக எல்லைவரை புகுந்து எரிகின்றன. பொங்கும் தீயில் வெப்பத்தினால் அழிவு செய்யும் பாலையினது வெவ்விய நிழல் புகுந்த இடத்தில் புகும் பகலோனின் செவ்விய கதிர்களின் வெம்மையை ஒத்துள்ள அந்தத் திக்கில் திண்மையுடைய மெய்த் தவத்தவரான நாவரசர் சென்றடைந்தார்.

1622. இங்ங னம்இர வும்ப கற்பொழு
தும்ம ருஞ்சுரம் எய்துவார்
பங்க யம்புரை தாள்ப ரட்டள
வும்ப சைத்தசை தேயவும்
மங்கை பங்கர்தம் வெள்ளி மால்வரை
வைத்த சிந்தை மறப்பரோ
தங்க ரங்க ளிரண்டு மேகொடு
தாவி ஏகுதல் மேவினார்.

தெளிவுரை : இவ்வாறு இரவும் பகலும் கடப்பதற்கரிய பெருஞ்சுரத்தில் செல்பவரான நாவுக்கரசு நாயனார், தாமரை மலர் போன்ற தம் திருவடிகள் பரடுவரை தசை தேய்ந்து போகவும், உமையொரு பாகரின் பெரிய வெள்ளிமலையின் மீது ஊன்ற வைத்த நினைவை மறந்து விடுவாரோ? தம் இரண்டு கைகளையுமே கொண்டு தாவிச் செல்பவரானார்.

1623. கைக ளும்மணி பந்த சைந்துற
வேக ரைந்து சிதைந்தபின்
மெய்க லந்தெழு சிந்தை அன்பின்
விருப்பு மீமிசை பொங்கிட
மொய்க டுங்கனல் வெம்ப ரற்புகை
மூளு மத்த முயங்கியே
மைகொள் கண்டர்தம் அன்பர் செல்ல
வருந்தி உந்தினர் மார்பினால்.

தெளிவுரை : கைகளும் மணிக்கட்டுகள் அசைந்து போகும்படி தேய்ந்து சிதைந்த பின்பு, மெய்யுடன் கலந்து எழும் சிந்தையில் அன்பால் ஆகிய பெருவிருப்பம் மேலும் மேலும் அதிகரிக்க, நெருங்கிய தீப்போலும் பரற்கல்லின் புகையானது எழும் வழியை அடைந்து, நீலகண்டரான சிவபெருமானின் அடியாரான நாவுக்கரசு நாயனார் மேல் செல்வதற்காக மார்பால் வருத்தத்துடன் உந்திச் சென்றவராய்,

1624. மார்ப முந்தசை நைந்து சிந்தி
வரிந்த என்பு முரிந்திட
நேர்வ ருங்குறி நின்ற சிந்தையின்
நேசம் ஈசனை நேடுநீடு
ஆர்வம் அங்குயிர் கொண்டு கைக்கும்
உடம்ப டங்கவும் ஊன்கெடச்
சேர்வ ரும்பழு வம்பு ரண்டு
புரண்டு சென்றனர் செம்மையோர்.

தெளிவுரை : மார்புத் தசைகள் தேய்ந்து சிதறி ஒன்றுடன் ஒன்று வரிந்து கட்டப்பட்ட மார்பின் எலும்புகளும் முரிந்திட, அடைதற்கரிய குறிக்கோள் நிலைபெற்று நின்ற உள்ளத்தே கொண்ட அன்பு சிவபெருமானைக் காண வேண்டும் என்ற நிலைத்த ஆர்வமானது, அங்கு உயிரால் செலுத்துகின்ற உடல் முழுதும் தசைகள் கெடும்படியாய்ச் சேர்வதற்கு அரிய காட்டில் செம்மை நெறி நிற்பவரான நாவுக்கரசர் புரண்டு சென்றனர்.

1625. அப்பு றம்புரள் கின்ற நீளிடை
அங்கம் எங்கும் மரைந்திடச்
செப்ப ருங்கயி லைச்சி லம்படி
சிந்தை சென்றுறு மாதலால்
மெய்ப்பு றத்தில் உறுப்ப ழிந்தபின்
மெல்ல உந்து முயற்சியுந்
தப்பு றச்செய லின்றி அந்நெறி
தங்கி னார்தமி ழாளியார்.

தெளிவுரை : அதன்பின் புரண்டு செல்கின்ற நீண்ட வழியின் இடையில் உடல் முழுதும் தேய்ந்து போகவே, செல்வதற்கரிய கயிலாய மலையில் திருவுள்ளம் போய் சேருமாதலால், திருமேனியின் புறத்து உறுப்புக்கள் அழிந்த பின்பு மெல்ல மெல்ல உந்திச் செல்லும் முயற்சியும் நீங்கிட, வேறு செய்யும் செயல் அற்றவராய் அந்த நெறியில் தமிழ் வல்லுநரான நாவுக்கரசு நாயனார் தங்கியிருந்தார்.

1626. அன்ன தன்மையர் கயிலையை அணைவதற் கருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேற் பின்னையும் வழுத்த
நன்னெ டும்புனல் தடமும்ஒன் றுடன்கொடு நடந்தார்
பன்ன கம்புனை பரமரோர் முனிவராம் படியால்.

தெளிவுரை : அத்தன்மையினரான நாவுக்கரசர் நிலையான இனிய தமிழ்ப் பதிகங்களை உலகில் மேலும் துதித்தற் பொருட்டாய் கயிலையைச் சென்று அடைவதற்கு அருள் செய்யாதவராய், நல்ல பெரிய நீர் மிக்க ஒரு பொய்கையையும் தாம் ஏற்படுத்திக் கொண்டு ஒரு முனிவரான திருவுருவத்துடன் பாம்பைச் சூடிய சிவபெருமான் நடந்து வந்தார்.

1627. வந்து மற்றவர் மருங்குற அணைந்துநேர் நின்று
நொந்து நோக்கிமற் றவர்எதிர் நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ்வுறுப் பழிந்திட வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத் தெய்திய தென்என இசைத்தார்.

தெளிவுரை : அங்ஙனம் வந்தவர் பக்கத்தில் பொருந்தச் சேர்ந்து நேரே நின்று வருந்தி, அவரைப் பார்த்து, அவரும் தம்மை எதிர் நோக்கச் சொல்வாராய், உம் உடல் உறுப்புகள் எல்லாம் சிந்தி அழிந்திடுமாறு வருந்திய திறத்துடன் இந்தக் கொடிய பாலையில் வந்தது என்ன காரணத்தால் என வினவினார்.

1628. மாசில் வற்கலை ஆடையும் மார்பில்முந் நூலுந்
தேசு டைச்சடை மவுலியும் நீறும்மெய் திகழ
ஆசின் மெய்த்தவ ராகிநின் றவர்தமை நோக்கிப்
பேச உற்றதோர் உணர்வுற விளம்புவார் பெரியோர்.

தெளிவுரை : அழுக்கு இல்லாத மரவுரி ஆடையும், திருமார்பில் பூணூலும், ஒளி பொருந்திய சடைமுடியும் உடம்பில் விளங்கும் வெண் திருநீறும் ஆக இவ்வாறு விளங்கும் வெண் திருநீறும் ஆக இவ்வாறு விளங்கக் குற்றம் இல்லாத மெய்ம் முனிவராய் நின்ற இறைவரைப் பார்த்துப் பெரியோரான நாவுக்கரசர் பேசுதற்குப் பொருந்திய ஓர் உணர்ச்சி தோன்ற உரைப்பாராய்,

1629. வண்டு லாங்குழல் மலைமக ளுடன்வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும்அப் பரிசவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடுங் காதலின் அடைந்தேன்
கொண்ட என்குறிப் பிதுமுனி யேஎனக் கூற.

தெளிவுரை : வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய உமையம்மையாருடன் வடகயிலாய மலையில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் அத்தன்மையை அவருடைய அடியவனான நான் கண்டு வணங்க வேண்டும் என்ற விருப்புடன் ஆசை மிகக் கொண்டேன். முனிவரே என் உள்ளம் கொண்ட குறிப்பு இதுவாகும்! என்று சொல்ல,

1630. கயிலை மால்வரை யாவது காசினி மருங்கு
பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற் கெளிதோ
அயில்கொள் வேற்படை அமரரும் அணுகுதற் கரிதால்
வெயில்கொள் வெஞ்சுரத் தென்செய்தீர் வந்தென விளம்பி.

தெளிவுரை : பெரிய கயிலை மலையானது இவ்வுலகத்து மக்கள் சென்று அடைவதற்கு எளியதோ? கூர்மையான வேற்படையையுடைய தேவர் முதலியவரும் போய் அடைய இயலாத அருமையுடையதாகும். வெம்மை மிக்க கொடிய இப்பாலை வனத்திடை வந்து என்ன செயல் செய்து விட்டீர் என்று சொல்லி

1631. மீளும் அத்தனை உமக்கினிக் கடன்என விளங்கும்
தோளும் ஆகமும் துவளுமுந் நூல்முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைகண் டல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டுமீ ளேன்என மறுத்தார்.

தெளிவுரை : இங்கிருந்து மீண்டு செல்வீராக! அவ்வளவே இனி உமக்குக் கடனாவது! என்று விளங்கும் தோளிலும் மேனியிலும் கிடந்து துவள்கின்ற முப்புரி நூலையுடைய முனிவரான இறைவர் உரைத்தார். உரைக்க, என்னை ஆளும் நாயகரின் திருக்கயிலையில் இருக்கும் கோலத்தைக் கண்டபின் அல்லது அழியும் இயல்புடைய இந்த என் உடலைக் கொண்டு திரும்பிச் செல்ல மாட்டேன் என்று திருநாவுக்கரசு நாயனார் சொன்னார்.

1632. ஆங்கு மற்றவர் துணிவறிந் தவர்தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பிடைக் கரந்துநீள் மொழியால்
ஓங்கு நாவினுக் கரசனே எழுந்திர்என் றுரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கைகொண் டெழுந்தொளி திகழ்வார்.

தெளிவுரை : அங்கு நாவுக்கரசரின் துணிவை உலகம் அறிந்து உய்யுமாறு தாம் எண்ணி, அவர் தம்மை இன்னார் என அறிந்து கொள்ளும்படி நீங்குகின்ற முனிவரான இறைவர் வானத்தில் மறைந்து நீண்ட தம் வாக்கான அசரீரியால், உயர்ந்த நாவுக்கரசனே! எழுந்திரு! எனக் கூறினார். ஊறுகள் எல்லாம் நீங்கிய உடலுடனே எழுந்து ஒளியில் விளங்குவார் ஆகி,

1633. அண்ண லேஎனை ஆண்டுகொண் டருளிய அமுதே
விண்ணி லேமறைந் தருள்புரி வேதநா யகனே
கண்ணி னால்திருக் கயிலையில் இருந்தநின் கோலம்
நண்ணி நான்தொழ நயந்தருள் புரிஎனப் பணிந்தார்.

தெளிவுரை : பெருமையுடையவரே! எனை ஆண்டு கொண்டருளிய அமுதே! வானத்தில் மறைந்து அருள் செய்யும் வேதநாயகனே! திருக்கயிலை மலையில் வீற்றிருந்தருளும் உம் திருக்கோலத்தை அடைந்து நான் கண்ணால் கண்டு வணங்கும்படியாக விரும்பி அருள் செய்வீராக! எனக் கூறி வேண்டிக் கொண்டு கீழே விழுந்து பணிந்தார். பணிய,

1634. தொழுதெ ழுந்தநற் தொண்டரை நோக்கிவிண் தலத்தில்
எழுபெ ருந்திரு வாக்கினால் இறைவர்இப் பொய்கை
முழுகி நம்மைநீ கயிலையில் இருந்தஅம் முறைமை
பழுதில் சீர்த்திரு வையாற்றிற் காண்எனப் பணித்தார்.

தெளிவுரை : அங்ஙனம் வணங்கி எழுந்து நின்ற நல்தொண்டரான நாயனாரைப் பார்த்து, வானத்தினின்றும் எழும் தம் அசரீரியான பெருவாக்கினால், இந்தப் பொய்கையில் முழுகி, நாம் திருக்கயிலையில் வீற்றிருக்கும் அம்முறையையே நம்மைக் குற்றம் இல்லாத சிறப்புடைய திருவையாற்றிலே சென்று காண்பாயாக! என்று முதல்வரான சிவபெருமான் ஆணையிட்டருளினார்.

1635. ஏற்றி னார்அருள் தலைமிசைக் கொண்டெழுந் திறைஞ்சி
வேற்று மாகிவிண் ணாகிநின் றார்மொழி விரும்பி
ஆற்றல் பெற்றவர் அண்ணலார் அஞ்செழுத் தோதிப்
பாற்ற டம்புனற் பொய்கையில் மூழ்கினார் பணியால்.

தெளிவுரை : மேற்கூறியபடி வெளிப்பட்ட காளையையுடைய சிவபெருமானின் திருவருளைத் தலைமேற்கொண்டு, எழுந்து வணங்கி வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி எனத் தொடங்கும் திருப்பதிகத்தினால் விருப்புடனே துதித்து, திருவருள் வன்மை பெற்ற நாவுக்கரசு நாயனார், இறைவரின் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டு பான்மை பெற்ற பெரிய நல்ல நீர்ப் பொய்கையில் மூழ்கினார்.

1636. ஆதி தேவர்தந் திருவருள் பெருமையார் அறிவார்
போத மாதவர் பனிவரைப் பொய்கையில் மூழ்கி
மாதொர் பாகனார் மகிழும்ஐ யாற்றிலோர் வாவி
மீது தோன்றிவந் தெழுந்தனர் உலகெலாம் வியப்ப.

தெளிவுரை : ஆதி தேவரான சிவபெருமானின் திருவருட் பெருமையை எவர் அறிவார்? உலகம் எல்லாம் வியப்பு அடையுமாறு ஞானத் தவமுனிவரான நாவுக்கரசு நாயனார் பனி மலையில் விளங்கிய அந்தப் பொய்கையில் முழுகி, உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருவையாற்றில் ஒரு பொய்கையின் மேல் வந்து எழுந்தார்.

1637. வம்பு லாமலர் வாவியின் கரையில்வந் தேறி
உம்பர் நாயகர் திருவருட் பெருமையை உணர்வார்
எம்பி ரான்தருங் கருணைகொல் இதுஎன இருகண்
பம்பு தாரைநீர் வாவியிற் படிந்தெழும் படியார்.

தெளிவுரை : மணம் கமழ்கின்ற பூக்கள் பொருந்திய பொய்கையின் கரையில் வந்து மேல் ஏறி, சிவபெருமானின் பெருமையைத் தன் அனுபவத்தில் உணர்பவராகி, எம் இறைவர் அருளும் கருணை இதுவோ? என்று இரண்டு கண்களினின்றும் ததும்பிப் பொங்கித் தாரையாய் வழிகின்ற கண்ணீரின் பொய்கையுள் மூழ்கி எழுகின்ற தன்மை உடையவர் போன்றவராய் ஆகி,

1638. மிடையும் நீள்கொடி வீதிகள் விளங்கிய ஐயா
றுடைய நாயகர் சேவடி பணியவந் துறுவார்
அடைய அப்பதி நிற்பவுஞ் சரிப்பவு மான
புடைஅ மர்ந்ததந் துணையொடும் பொலிவன கண்டார்.

தெளிவுரை : நெருங்கும் நீண்ட கொடிகள் கட்டிய வீதிகளால் விளங்கும் திருவையாற்றில் எழுந்தருளும் இறைவரின் திருவடிகளை வணங்கும் பொருட்டாக வருகின்ற நாவுக்கரசர் அக்காலத்தில் நிற்பவையும் உலவுபவையும் ஆகிய சரம், அசரம் ஆகிய எல்லாம் அருகில் விளங்கிய தத்தம் பெண்ணுடன் கூடி விளங்கும் தோற்றத்தைக் கண்டவராகி,

1639. பொன்ம லைக்கொடி யுடன்அமர் வெள்ளியம் பொருப்பில்
தன்மை யாம்படி சத்தியுஞ் சிவமுமாஞ் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான் கோயில்முன் வந்தார்.

தெளிவுரை : திருக்கயிலை மலையில் பொன்மலை ஈன்ற கொடி போன்ற பார்வதியம்மையாருடன் விரும்பி வீற்றிருக்கும் தன்மை இங்கும் ஆகும் வண்ணம், சக்தியும் சிவமும் ஆகிய தன்மையில் பற்பல யோனிகள் எல்லாம் விளங்கும் முறைமையைக் கண்டு வணங்கியபடியே நிலைபெற்ற முனிவரான திருநாவுக்கரசர் தம் இறைவரது திருக்கோயில் முன்னம் வந்தார்.

1640. காணும் அப்பெருங் கோயிலுங் கயிலைமால் வரையாய்ப்
பேணு மால்அயன் இந்திரன் முதற்பெருந் தேவர்
பூணும் அன்பொடு போற்றிசைத் தெழும்ஒலி பொங்கத்
தாணு மாமறை யாவையுந் தனித்தனி முழங்க.

தெளிவுரை : தோன்றும் அந்தப் பெரிய கோயிலே பெரிய கயிலாய மலையாக, இறைவரின் பணிக்கு எதிர்பார்த்திருக்கும் திருமால், நான்முகன், இந்திரன் முதலான தேவர்கள் எல்லாம் உள்ளத்து நிலைபெறப் பொருந்திய அன்புடன் துதிக்க, அதனால் எழுகின்ற ஒலி எங்கும் நிறையவும், அழிவற்ற பெரிய வேதங்கள் யாவையும் தனித்தனியே ஒலிக்கவும்,

1641. தேவர் தானவர் சித்தர்விச் சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக்
காவி வாள்விழி அரம்பையர் கானமும் முழவும்
தாவில் ஏழ்கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப.

தெளிவுரை : தேவர்களும் அசுரர்களும் சித்தர்களும் வித்தியாதரர்களும் இயக்கர்களும் பொருந்தும் மாதவர்களும் மாமுனிவர்களும் என்னும் இவர்கள் பக்கங்களில் எங்கும் நிறைந்து விளங்கவும், குவளை மலரையும் வாளையும் போன்ற கண்களையுடைய தேவ அரம்பையர்களின் கீதமும் மத்தளங்களின் ஒலியும் அழிவில்லாத ஏழு கடல்கள் ஒலியினும் அதிகமாகப் பேரொலி செய்யவும்,

1642. கங்கை யேமுதல் தீர்த்தமாங் கடவுள்மா நதிகள்
மங்க லம்பொலி புனற்பெருந் தடங்கொடு வணங்க
எங்கும் நீடிய பெருங்கண நாதர்கள் இறைஞ்சப்
பொங்கி யங்களால் பூதவே தாளங்கள் போற்ற.

தெளிவுரை : கங்கை முதலான தூய்மையான தெய்வத் தன்மையுடைய பெரிய நதிகள் மங்கல நீர் நிறைந்த பெருந்தடங்களாக வந்து வணங்கவும், எவ்விடத்தும் பரந்த பெரிய சிவகணத்தலைவர் வணங்கவும், ஒலியால் பெரும் பலவகை வாத்தியங்கள் முழக்கிப் பூத வேதாளங்களும் போற்றவும்,

1643. அந்தண் வெள்ளிமால் வரையிரண் டாம்என அணைந்தோர்
சிந்தை செய்திடச் செங்கண்மால் விடைஎதிர் நிற்ப
முந்தை மாதவப் பயன்பெறு முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடுவிடை யாடிமுன் நணுக.

தெளிவுரை : அழகும் குளிர்ச்சியும் உடைய பெரிய வெள்ளி மலைகள் இரண்டாம் என்று அங்கு வந்தவர் எண்ணும்படி சிவந்த கண்ணையுடைய திருமாலான காளை முன்னே நிற்கவும்,  முன் நாளில் அத்தலத்தில் செய்த பெருந்தவப்பயனாகப் பெறும் முதன்மையால் மகிழ்ந்து எம் நந்திபெருமான் சிவபெருமானுக்கும் அவரை வழிபட வரும் மற்றவர்க்கும் நடுவில் நடந்து முன்னால் நிற்கவும்,

1644. வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப் பவளவெற் பெனஇடப் பாகம்
கொள்ளு மாமலை யாளுடன் கூடவீற் றிருந்த
வள்ள லாரைமுன் கண்டனர் வாக்கின்மன் னவனார்.

தெளிவுரை : வெள்ளி மலைமீது மரகதக் கொடியுடனே விளங்கும் தெளிந்த பேரொளியுடைய பவள மலை என்று கூறும்படியாய் இடப்பாகத்தைக் கைக்கொண்ட உமையம்மையாருடன் கூடி வீற்றிருக்கும் வள்ளலான சிவபெருமானைத் திருநாவுக்கரசு நாயனார் தம் கண் முன்னம் கண்டார்.

1645. கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து
கொண்டு கைகுவித் தெதிர்விழுந் தெழுந்துமெய் குலைய
அண்டர் முன்புநின் றாடினார் பாடினார் அழுதார்
தொண்ட னார்க்கங்கு நிகழ்ந்தன யார்சொல வல்லார்.

தெளிவுரை : அவ்வாறு கண்ட ஆனந்தக் கடலைத் தம் கண்களாலும் முகந்து கொண்டவராய்க் கைகளைத் தம் தலைமீது குவித்துத் திருமுன்பு விழுந்து, பின் எழுந்து, உடல் எல்லாம் அசையும்படி உலகத்தலைவரான சிவபெருமான் திருமுன்பு நின்று கொண்டு, திருநாவுக்கரசு நாயனார் ஆடியவரும் பாடியவரும் அழுதவருமாய் அத்தொண்டருக்கு அங்கு அப்போது நிகழ்ந்தவனவாகிய அற்புத நிலைகளைச் சொல்ல வல்லவர் யார்?

1646. முன்பு கண்டுகொண் டருளின்ஆர் அமுதுண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவிலா ஆர்வம்முன் பொங்கப்
பொன்பி றங்கிய சடையரைப் போற்றுதாண் டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர்.

தெளிவுரை : தன் முன் நேரே கண்டு கொண்டு, திருவருளான அரிய அமுதத்தை உண்ணும்படி கேடற்ற அன்பையுடைய வரும் அளவில்லாத ஆசை முன்னே ததும்பப் பொன்மயமான சடையையுடைய சிவபெருமானைப் போற்றும் திருத்தாண்டகங்களை இன்பம் பெருகும்படி பாடித் துதித்தார்.

1647. ஆய வாறுமற் றவர்மனங் களிப்புறக் கயிலை
மேய நாதர்தந் துணையொடும் வீற்றிருந் தருளித்
தூய தொண்டனார் தொழுதெதிர் நிற்கஅக் கோலம்
சேய தாக்கினார் திருவையா றமர்ந்தமை திகழ.

தெளிவுரை : அவ்வாறு ஆனதை நாயனாரின் உள்ளம் மகிழுமாறு திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் இறைவர் தம் துணைவியாருடன் வீற்றிருந்து, தூயவரான திருத்தொண்டனார் வணங்கிக் கொண்டு எதிரில் நின்று கொண்டிருக்க, திருவையாற்றில் எழுந்தருளி இருக்கும் தன்மை வெளிப்பட, விளங்குமாறு முன் காட்டியருளிய அந்தக் கயிலாயக் கோலத்தைச் சேய்மையாகுமாறு செய்தார்.

1648. ஐயர் கோலம்அங் களித்தகன் றிடஅடித் தொண்டர்
மையல் கொண்டுளம் மகிழ்ந்திட வருந்திமற் றிங்குச்
செய்ய வேணியர் அருளிது வோஎனத் தெளிந்து
வையம் உய்ந்திடக் கண்டமை பாடுவார் மகிழ்ந்து.

தெளிவுரை : சிவபெருமான் இங்ஙனம் திருக்கயிலையில் இருந்த கோலத்தை அங்குக் காணும்படி அளித்து மறைந்தருளினார். திருவடித் தொண்டை மேற்கொண்டிருந்த திருநாவுக்கரசு நாயனார் மயங்கி, உள்ளத்தில் முன் போலவே இன்னும் மகிழ்ச்சி பெற்றிருக்கும் வண்ணம் வேண்டி வருந்தி இனி இங்குச் சிவந்த சடையையுடைய இறைவரின் திருவருள் இவ்வளவு தானோ? என்று தெளிவு கொண்டு, உலகம் உய்யும் பொருட்டுத் தாம் கண்ட செய்தியை மகிழ்வுடன் பாடுபவராகி,

1649. மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண்டமிழ்ச் சொல்லால்
குலவு திருப்பதி கங்கள்
வேத முதல்வர்ஐ யாற்றில்
விரவுஞ் சராசரம் எல்லாங்
காதல் துணையொடுங் கூடக்
கண்டேன் எனப்பாடி நின்றார்.

தெளிவுரை : மாதர்ப் பிறைக் கண்ணி யானை மலையான் மகளோடும் எனத் தொடங்குகின்ற குற்றம் அற்ற, குளிர் தமிழ்ச் சொல்லால் ஆன திருப்பதிகங்களை மறை முதல்வரான இறைவரைத் திருவையாற்றிலே பொருந்தும் சஞ்சரிப்பவும் நிற்பவுமான உயிர்கள் யாவையும் காதல் பொருந்திய தம் துணைகளுடனே கூடக்கண்டேன் என்று கருத்துப் புலப்படப் பாடுகின்றவராய்,

1650. கண்டு தொழுது வணங்கிக்
கண்ணுத லார்தமைப் போற்றிக்
கொண்ட திருத்தாண் டகங்கள்
குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி
வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான்திரு வையா
றமர்ந்தனர் நாவுக் கரசர்.

தெளிவுரை : இவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் கண்டும் தொழுதும் வணங்கியும் நெற்றியில் கண்ணுடைய சிவபெருமானைப் போற்றியும், திருத்தாண்டகங்களும் குறுந்தொகையும் திருநேரிசையும், அன்புடைய திருவிருத்தங்களும் முதலான பதிகங்களைப் பாடியும் சிவபெருமானுடைய திருவையாற்றில் தங்கியிருந்தார்.

1651. நீடிய அப்பதி நின்று
நெய்த்தான மேமுத லாக
மாடுயர் தானம் பணிந்து
மழபாடி யாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை
பகர்ந்து பணிசெய்து போற்றித்
தேடிய மாலுக் கரியார்
திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.

தெளிவுரை : நிலைபெற்ற அந்தத் திருவையாற்றுத் தலத்தினின்றும் திருநெய்த்தானம் முதலாகப் பக்கத்தில் உள்ள பதிகளை வணங்கித் திருமழபாடிக்குப் போய் இறைவரை வணங்கிப் பாடிய செந்தமிழ் மாலைகளான திருப்பதிகங்கள் பாடித் திருப்பணிகளையும் செய்து துதித்துப் பின்பு, தேடிய திருமாலுக்கும் அரியவரான சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருப்பூந்துருத்தியை அடைந்தார்.

1652. சேர்ந்து விருப்பொடும் புக்குத்
திருநட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலங்கொண் டிறைஞ்சித்
தம்பெரு மான்திரு முன்பு
நேர்ந்த பரிவொடுந் தாழ்ந்து
நிறைந்தொழி யாஅன்பு பொங்க
ஆர்ந்தகண் ணீர்மழை தூங்க
அயர்வுறுந் தன்மைய ரானார்.

தெளிவுரை : அத்திருப்பூந்துருத்தியை நாயனார் அடைந்து, விருப்பத்துடன் அதனுள் புகுந்து, இறைவர் அருட்கூத்து இயற்றி வெளிப்பட எழுந்தருளிய கோயிலைச் சார்ந்து வலம் வந்து வணங்கித் தம் பெருமானின் முன் தாழ்ந்து வணங்கி, உள் நிறைந்து நீங்காத அன்பு மேலும் மேலும் பெருக, அதனால் நிறைந்து வெளியாகும் கண்ணீர் என்னும் மழை பொழியத் தம் வயமிழந்த நிலைபெறும் தன்மையை அடைந்தவராகி,

1653. திருப்பூந் துருத்தி அமர்ந்த
செஞ்சடை யானைஆன் ஏற்றுப்
பொருப்பூர்ந் தருளும் பிரானைப்
பொய்யிலி யைக்கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத் தோடு
மேவிய காதல் விளைப்ப
இருப்போந் திருவடிக் கீழ்நாம்
என்னுங் குறுந்தொகை பாடி.

தெளிவுரை : திருப்பூந்துருத்தியில் விரும்பி எழுந்தருளிய சிவந்த சடையுடைய சிவபெருமானை, காளையான பெருமலையின் மீது எழுந்தருளி வரும் பெருமானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று விருப்பம்பொருந்தும் திருத்தாண்டகத்துடன் பொருந்திய அன்பு மேன்மேல் விளையச் செய்ய, இருப்போம் பாடி சேவடிக்கீழ் நாம் இருப்பதே என்னும் முடியும் கருத்தும் கொண்டு போற்றும் திருக்குறுந்தொகைப் பதிகத்தைப் பாடி,

1654. அங்குறை யுந்தன்மை வேண்டி
நாமடி போற்றுவ தென்று
பொங்கு தமிழ்ச்சொல் விருத்தம்
போற்றிய பாடல் புரிந்து
தங்கித் திருத்தொண்டு செய்வார்
தம்பிரா னார்அருள் பெற்றுத்
திங்களும் ஞாயிறும் தோயும்
திருமடம் அங்கொன்று செய்தார்.

தெளிவுரை : அந்தத் திருப்பூந்துருத்தியில் சில காலம் தங்கி இருக்க வேண்டும் என்னும் நிலைமையைப் பெறும் உட்குறிப்புடன் நாமடி போற்றுவதே என்ற கருத்துடன் பொங்கும் தமிழச் சொற்களாலே ஆன திருவிருத்தம் என்னும் பாடலைப் பாடி, அப்பதியில் கைத் தொண்டு செய்வாராகித் தம் பெருமானின் அருளைப் பெற்றுச் சந்திரனும் சூரியனும் தோயும் தன்மையுடைய ஒரு மடத்தைக் கட்டினார்.

1655. பல்வகைத் தாண்டகத் தோடும்
பரவுந் தனித்தாண் டகமும்
அல்லல் அறுப்பவர் தானத்
தடைவு திருத்தாண் டகமும்
செல்கதி காட்டிடப் போற்றுந்
திருஅங்க மாலையும் உள்ளிட்
டெல்லையில் பன்மைத் தொகையும்
இயம்பினர் ஏத்தி இருந்தார்.

தெளிவுரை : பலவகையான தாண்டகங்களுடன் சிவபெருமானைத் துதிக்கின்ற தனித் தாண்டகமும், பிறவித் துன்பத்தைப் போக்குகின்ற சிவபெருமான் விளக்கமாக எழுந்தருளும் தானங்களைக் கூறும் அடைவுள்ள திருத்தாண்டகமும், உயிர்கள் செல்ல வேண்டிய கதியைக் காட்டுவதற்காகத் துதிக்கும் திருவங்கமாலையும் என்னும் இவை உள்ளிட்ட அளவில்லாத பலவகைத் தொகைப் பதிகங்களையும் அருளிச் செய்தவராய்ப் போற்றி அங்கே தங்கியிருந்தார்.

1656. பொன்னிவலங் கொண்டதிருப் பூந்துருத்தி அவர்இருப்பக்
கன்மனத்து வல்அமணர் தமைவாதில் கட்டழித்துத்
தென்னவன்கூன் நிமிர்த்தருளித் திருநீற்றின் ஒளிகண்டு
மன்னியசீர்ச் சண்பைநகர் மறையவனார் வருகின்றார்.

தெளிவுரை : காவிரியாறு வலமாகச் சூழ்கின்ற திருப்பூந்துருத்தியில் அவர் இருப்பக் கல் போன்ற மனமுடைய கடிய வலிய சமணர்களை வாதில் வென்று, அவர்களின் பொய்க்கட்டுகளை அழித்துப் பாண்டியனின் கூனை நிமிர்த்தி, அவனுக்கு ஞான உபதேசம் செய்து, திருநீற்றின் விளக்கம் ஓங்கச் செய்து, நிலையான சிறப்புக் கொண்ட சீகாழியில் தோன்றியருளிய மறையவரான திருஞானசம்பந்தர் வருபவராய்,

1657. தீந்தமிழ்நாட் டிடைநின்றும் எழுந்தருளிச் செழும்பொன்னி
வாய்ந்தவளந் தருநாட்டு வந்தணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர்இருந் தமைகேட்டு விரைந்தவர்பால் செல்வன்எனப்
பூந்துருத்தி வளம்பதியின் புறம்பணையில் வந்தணைந்தார்.

தெளிவுரை : இனிய தமிழ் நாடான பாண்டிய நாட்டினின்று புறப்பட்டுச் செழிப்பையுடைய காவிரியாறானது வாய்ப்பான வளங்களை எல்லாம் தரும் சோழநாட்டில் வந்து சேர்ந்தவரான ஞானசம்பந்தர், திருநாவுக்கரசு நாயனார் அந்தத் திருப்பூந்துருத்தியான வளமான நகரின் புறத்தில் உள்ள வயல்கள் சூழ்ந்த இடத்தில் வந்து சேர்ந்தார்.

1658. சண்பைவருந் தமிழ்விரகர் எழுந்தருளத் தாங்கேட்டு
மண்பரவும் பெருங்கீர்த்தி வாகீசர் மனமகிழ்ந்து
கண்பெருகுங் களிகொள்ளக் கண்டிறைஞ்சுங் காதலினால்
எண்பெருகும் விருப்பெய்த எழுந்தருளி எதிர்சென்றார்.

தெளிவுரை : சீகாழிப் பதியில் தோன்றிய தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் எழுந்தருளி வர, அச்செய்தியை உலகம் போற்றும் புகழுடைய நாவுக்கரசர் தாம் கேட்டு மனம் மகிழ்ந்து நேரில் கண்டு கும்பிட வேண்டும் என்னும் ஆசையினால் உள்ளத்தில் பெருகும் விருப்பம் பொருந்த எதிரே சென்றார்.

1659. காழியர்கோன் வரும்எல்லை கலந்தெய்திக் காதலித்தார்
சூழுமிடைந் திடுநெருக்கிற் காணாமே தொழுதருளி
வாழியவர் தமைத்தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத்
தாழும்உடல் இதுகொண்டு தாங்குவன்யான் எனத்தரித்தார்.

தெளிவுரை : சீகாழியில் தோன்றிய தமிழ் வல்லலுநரான ஞானசம்பந்தர் வருகின்ற அப்போது, திருக்கூட்டத்துடன் கூடிச் சேர்ந்து அன்பு உடையவராகிச் சூழ்ந்து நெருங்கிய கூட்டத்தின் நெருக்கத்துள் ஞானப்பிள்ளையார் தம்மைக் காணாத வண்ணம் அவரை வணங்கி வாழ்வைத் தரவந்த பிள்ளையாரைத் தாங்கும் முத்துச் சிவிகையைத் தாங்கி வருபவருடன் தாழ்ந்த இவ்வுடலைக் கொண்டு நானும் சுமப்பேன் என்று உள்ளத்துள் நினைத்து,

1660. வந்தொருவர் அறியாமே மறைந்தவடி வொடும்புகலி
அந்தணனார் ஏறியெழுந் தருளிவரும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகையினைத் தாங்குவா ருடன்தாங்கிச்
சிந்தைகளிப் புறவருவார் தமையாருந் தெளிந்திலரால்.

தெளிவுரை : வந்து மற்றொருவரும் அறிந்து கொள்ளாத வண்ணம் மறைவான வடிவத்துடனும் சீகாழி அந்தணரான ஞானசம்பந்தர் அமர்ந்து வரும் அழகான மணிச் சிவிகையைச் சுமப்பவர்களுடன் தாமும் ஒருவராய்த் தாங்கித்தம் உள்ளம் மிக மகிழ்ச்சி பொருந்த வருவாரான திருநாவுக்கரசு நாயனாரை ஒருவரும் அறிந்து கொண்டவர் இலர்.

1661. திருஞான மாமுனிவர் அரசிருந்த பூந்துருத்திக்
கருகாக எழுந்தருளி எங்குற்றார் அப்பர்என
உருகாநின் றுஉம்அடியேன் உம்அடிகள் தாங்கிவரும்
பெருவாழ்வு வந்தெய்தப் பெற்றிங்குற் றேன்என்றார்.

தெளிவுரை : திருஞான முனிவரான சம்பந்தப் பெருமான், திருநாவுக்கரசு நாயனார் தங்கியிருந்த திருப்பூந்துருத்திக்கு அருகில் எழுந்தருளிச் சிவிகையில் இருந்தபடியே, அப்பர் எங்குத் தங்கியிருக்கின்றார்? என்று வினவ, உள்ளம் மிகவுருகி, உம் அடியவன் உம் திருவடிகளைச் சுமக்கும் பெருவாழ்வு கிடைக்கப் பெற்று இங்கு இருக்கின்றேன் என்று சிவிகையைத் தாங்கி வரும் அந்நிலையிலே விடை கூறியருளினார்.

1662. பிள்ளையார் அதுகேளாப் பெருகுவிரை வுடன்இழிந்தே
உள்ளமிகு பதைப்பெய்தி உடையஅர சினைவணங்க
வள்ளலார் வாகீசர் அவர்வணங்கா முன்வணங்கத்
துள்ளுமான் மறிக்கரத்தார் தொண்டரெலாந் தொழுதார்த்தார்.

தெளிவுரை : திருஞானசம்பந்தர் அம்மொழிகளைக் கேட்டவுடனே, மிக்க விரைவுடன் கீழே இழிந்தருளித் திருவுள்ளத்தில் அச்சத்துடன் மிக்க பதைப்பை அடைந்து ஆளுடைய அரசை வணங்க, வள்ளலாரான திருநாவுக்கரசரும் அவர் வணங்குவதற்கு முன்னம் தாம் அவரை வணங்க, அந்த அருள் நிகழ்ச்சியைக் காணும் பேறு பெற்ற, துள்ளும் மான் ஏந்திய கையையுடைய சிவபெருமானின் அடியவர் எல்லோரும் வணங்கி அர என்ற ஓசையை எழுப்பினர்.

1663. கழுமலக்கோன் திருநாவுக் கரசருடன் கலந்தருளிச்
செழுமதியந் தவழ்சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின்
மழுவினொடு மான்ஏந்து திருக்கரத்தார் மலர்த்தாள்கள்
தொழுதுருகி இன்புற்றுத் துதிசெய்தங் குடனிருந்தார்.

தெளிவுரை : சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் திருõநவுக்கரசு நாயனாருடன் கூடிப் பிறைச்சந்திரன் தவழும் செழிப்புடைய சோலைகள் சூழ்ந்த திருப்பூந்துருத்தி என்ற திருப்பதியில் எழுந்தருளிய மழுவுடன் மானை ஏற்ற திருக்கையையுடைய இறைவரின் மலரடிகளை வணங்கி, மனம் உருகி, இன்பம் அடைந்து துதிகள் செய்து, அந்தப் பதியில் உடன் எழுந்தருளி இருந்தார்.

1664. வல்அமணர் தமைவாதில் வென்றதுவும் வழுதிபால்
புல்லியகூன் நிமிர்த்ததுவும் தண்பொருந்தப் புனல்நாட்டில்
எல்லையிலாத் திருநீறு வளர்த்ததுவும் இருந்தவத்தோர்
சொல்லஅது கேட்டுவந்தார் தூயபுகழ் வாகீசர்.

தெளிவுரை : கொடிய சமணரை வாதில் வென்றதையும் பாண்டியனிடத்தில் முன்பு பொருந்தியிருந்த கூனை நிமிர்த்தியருளியதையும், குளிர்ந்த தாமிரபரணி ஆற்றின் நீர்பாயும் பாண்டிய நாட்டில் அளவில்லாத சிறப்புடைய திருநீற்றின் நெறியைப் பெருகச் செய்ததையும், பெருந்தவத்தையுடைய ஞானசம்பந்தர் எடுத்துக் கூற, அதனைத் தூய புகழையுடைய திருநாவுக்கரசர் கேட்டுத் திருவுள்ளம் மகிழ்ந்தார்.

1665. பண்புடைய பாண்டிமா தேவியார் தம்பரிவும்
நண்புடைய குலச்சிறையார் பெருமையும்ஞா னத்தலைவர்
எண்பெருக வுரைத்தருள எல்லையில்சீர் வாகீசர்
மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்.

தெளிவுரை : கற்பின் தன்மையும் சிவபெருமானிடம் கொண்ட அன்பின் பண்பும் உடைய மங்கையர்க்கரசி அம்மையாரின் அன்பின் திறத்தையும் ஞானசம்பந்தர் விருப்பம் உண்டாகக் கூறியருள, அளவில்லாத சிறப்புடைய திருநாவுக்கரசர் உலகில் விளக்கம் பொருந்திய தமிழ்நாடு எனக்கூறப்படும் பாண்டிய நாட்டைப் போய்க் காண்பதற்கு விருப்பம் கொண்டவர் ஆனார்.

1666. பிரமபுரத் திருமுனிவர் பெருந்தொண்டை நன்னாட்டில்
அரனுறையுந் தானங்கள் அணைந்திறைஞ்சிப் பாடுவதற்
குரனுடைய திருநாவுக் கரசர் உரை செய்தருளப்
புரமெரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுதகன்றார்.

தெளிவுரை : பிரம்மபுரத்தில் (சீகாழியில்) தோன்றிய ஞானசம்பந்தரைப் பெரிய தொண்டை நாட்டில் சிவபெருமான் விரும்பி எழுந்தருளுமுஞூ திருப்பதிகளைச் சேர்ந்து வணங்கித் தேவாரப் பதிகங்களைப் பாடும்படி வல்லவரான திருநாவுக்கரசர் சொல்லியருள, அதன்படி இசைந்து, முப்புரங்களை எரித்த சிவபெருமானின் மகனான ஞானசம்பந்தரும் திருப்பூந்துருத்தியை வணங்கிப் புறப்பட்டார்.

1667. ஆண்டஅர சங்கணர்சீர் அருள்பெற்றப் பதிநின்றும்
பாண்டிநாட் டெழுந்தருளும் பான்மையராய்த் தென்திசைபோய்க்
காண்டகைய திருப்புத்தூர் பணிந்தேத்திக் கதிர்மதியம்
தீண்டுகொடி மதில்மதுரைத் திருவால வாய்சேர்ந்தார்.

தெளிவுரை : இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட நாவுக்கரசர், சிவபெருமானின் அருளைப் பெற்றுக்கொண்டு அந்தத் திருப்பூந்துருத்தியினின்றும் நீங்கிப் பாண்டிய நாட்டிற்குச் செல்லும் எண்ணம் கொண்டவராகித் தெற்குத் திக்கு நோக்கிச் சென்று காணத்தக்க சிறப்பையுடைய திருப்புத்தூரினை வணங்கித் துதித்துச் சந்திரனின் கதிர்கள் தங்குவதற்கு இடமான கொடிகள் கட்டப்பட்டு விளங்கும் மதிலையுடைய திருவாலவாய் (மதுரையை) அடைந்தார்.

1668. சென்றணைந்து மதுரையினில் திருந்தியநூற் சங்கத்துள்
அன்றிருந்து தமிழாராய்ந் தருளியஅங் கணர்கோயில்
முன்றிலினை வலங்கொண்டு முன்னிறைஞ்சி உள்புக்கு
வன்றனிமால் விடையாரை வணங்கிமகிழ் வொடுந்திளைத்தார்.

தெளிவுரை : திருநாவுக்கரசர் மதுரை நகரத்துள் போய்ச் சேர்ந்து, திருத்தமுடைய நூல்களையுடைய புலவர் கூடிய சங்கத்தினுள் முன் நாளில் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்தருளிய இறைவரின் திருக்கோயிலின் முன் பக்கத்தை வலமாகச் சூழ்ந்து வெளியே திருமுன்பு விழுந்து வணங்கிக் கோயிலுக்குள் புகுந்து வலிய ஒப்பில்லாத பெரிய காளையையுடைய சொக்கநாதப் பெருமானை வணங்கி மகிழ்ச்சியுள் முழுகி, ஆனந்த அனுபவத்தை எய்தினார்.

1669. எய்தியபே ரானந்த இன்பத்தின் இடைஅழுந்தி
மொய்திகழுஞ் சடையானை முளைத்தானை என்றெடுத்துச்
செய்தவத்தோர் தாண்டகச்செந் தமிழ்பாடிப் புறத்தணைவார்
கைதொழுது பணிந்தேத்தித் திருவுள்ளங் களிசிறந்தார்.

தெளிவுரை : அங்ஙனம் தாம் பொருந்திய ஆனந்த அனுபவமான இன்பத்துள் முழுகிக் கற்றையாக மொய்த்து விளங்கும் சடையை உடைய பெருமானை முளைத்தானை எனத்தொடங்கும் திருத்தாண்டகத் தமிழ்ப்பதிகத்தால் துதித்துப் புறத்தில் சேர்பவராகி, செய்யும் தவத்தை உடையவரான நாயனார் கைகளால் தொழுது வணங்கித் துதித்துத் திருவுள்ளத்தில் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

1670. சீர்திகழும் பாண்டிமா தேவியார் திருநீற்றின்
சார்வடைய கூன்நிமிர்ந்த தென்னவனார் தம்முடனே
பார்பரவுங் குலச்சிறையார் வாகீசர் தமைப்பணிவுற்
றாரகிலாக் காதல்மிக அடிபோற்ற அங்கிருந்தார்.

தெளிவுரை : சிறப்புடன் விளங்கும் மங்கையர்க்கரசியம்மை யாரும் திருநீற்றின் சார்பு அடைதலால் கூன் நிமிரப்பெற்ற நின்ற சீர் நெடுமாறனாரும் என்னும் இவர்களுடனே உலகம் போற்றும் குலச்சிறையாரும் தம்மை வந்து பணிந்து நிரம்புதல் பெறாது பெருகிய காதல் மிகுந்தபடி தாம் திருவடிகளைப் போற்றி நிற்கத் திருநாவுக்கரசு நாயனார் அங்குத் தங்கியிருந்தார்.

1671. திருவால வாய்அமர்ந்த செஞ்சுடரைச் செழும்பொருள்நூல்
தருவானை நேரிசையும் தாண்டகமும் முதலான
பெருவாய்மைத் தமிழ்பாடிப் பேணுதிருப் பணிசெய்து
மருவார்தம் புரம்எரித்தார் பூவணத்தை வந்தடைந்தார்.

தெளிவுரை : திருவாலவாயில் வீற்றிருக்கும் செழுமையான செழுஞ்சுடர் போன்ற வரை, செழுமையான அகப்பொருள் நூல் தந்தவரை, திருநேரிசையும், திருத்தாண்டகமும் முதலான பெருவாய்மையுடைய தமிழ்ப் பதிகங்களைப் பாடி, விரும்பும் திருப்பணிகளைச் செய்து, அதன்பின் பகைவரின் திரிபுரங்களை எரித்த சிவபெருமானின் திருப்பூவணத்தை நாவுக்கரசர் அடைந்தவராய்,

1672. கொடிமாடம் நிலவுதிருப் பூவணத்துக் கோயிலினுள்
நெடியானுக் கறிவரியார் நேர்தோன்றக் கண்டிறைஞ்சி
வடிவேறு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப்போய்ப்
பொடிநீடு திருமேனிப் புனிதர்பதி பிறபணிவார்.

தெளிவுரை : கொடிகள் கட்டப்பெற்ற மாடங்கள் நிறைந்த திருப்பூவணத்தின் கோயிலுள் திருமாலுக்கும் அரியவரான சிவபெருமான் வெளிப்பட்டருளக் கண்டு வணங்கி, வடிவேறு திரிசூலம் என்ற தொடக்கம் உடைய திருத்தாண்டகப் பதிகத்தால் துதித்துச் சென்று, திருநீறு நிறைந்த திருமேனியையுடைய புனிதரான சிவபெருமானின் திருத்தலங்கள் மற்றவற்றையும் வணங்கி,

1673. தென்னிலங்கை இராவணன்தன் சிரம்ஈரைந் துந்துணித்த
மன்னவனாம் இராமனுக்கு வரும்பெரும்பா தகந்தீர்த்த
பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்துபோய்ப் பெருமகிழ்ச்சி
துன்னிமனங் கரைந்துருகத் தொழுதெழுந்தார் சொல்லரசர்.

தெளிவுரை : தெற்கில் உள்ள இலங்கை மன்னனான இராவணனின் தலைகள் பத்தையும் துண்டித்த மன்னனான ராமனுக்கு அதனால் வரும் பெரும் பாதகத்தைத் தீர்த்த சிவபெருமானைப் போய் வணங்க எண்ணிச் சென்று மிக்க மகிழ்ச்சி உண்டாகவும் மனம் கரைந்து உருகவும் திருநாவுக்கரசர் தொழுது எழுந்தாராய்,

1674. தேவர்தொழுந் தனிமுதலைத் திருவிரா மீச்சுரத்து
மேவியசங் கரனைஎதிர் நின்றுவிருப் புறுமொழியால்
பாவுதிரு நேரிசைகள் முதலான தமிழ்பாடி
நாவரசர் திருத்தொண்டு நலம்பெருகச் செய்தமர்ந்தார்.

தெளிவுரை : வானவர் வணங்கும் ஒப்பில்லாத முதல்வரை, திரு இராமேச்சுரத்தில் வீற்றிருக்கும் சங்கரரை, திருமுன்பு நின்று விருப்பம் மிக்க சொற்களால் நிறைந்த திருநேரிசை முதலான தமிழ்ப் பதிகங்களைப் பாடித் திருநாவுக்கரசு நாயனார் நன்மை பொருந்தும்படி திருத்தொண்டைச் செய்து அங்குத் தங்கியிருந்தார்.

1675. அங்குறைந்து கண்ணுதலார் அருள்சூடி அகன்றுபோய்ப்
பொங்குதமிழ்த் திருநாட்டுப் புறம்பணைசூழ் நெல்வேலி
செங்கண்விடை யார்மன்னுந் திருக்கானப் பேர்முதலா
எங்குநிகழ் தானங்கள் எல்லாம்புக் கிறைஞ்சுவார்.

தெளிவுரை : அந்த இராமேச்சுரத்தில் பல நாள்கள் தங்கியிருந்து சிவபெருமானின் விடைபெற்று அங்கிருந்து நீங்கிப் போய்ப் பொங்கும் தமிழ்த் திருநாட்டில் புறம்பணையால் சூழப்பட்ட திருநெல்வேலியும் சிவந்த கண்ணையுடைய காளையூர்தியினரான இறைவர் வீற்றிருக்கின்ற திருக்கானப்பேர் முதலாக, அந்நாட்டில் எங்கும் பொருந்திய தலங்கள் எல்லாவற்றிலும் போய்த் தொழுபவராகி,

1676. தொழுதுபல வகையாலும் சொற்றொடைவண் டமிழ்பாடி
வழுவில்திருப் பணிசெய்து மனங்கசிவுற் றெப்பொழுதும்
ஒழுகியகண் பொழிபுனலும் ஓவாது சிவன்தாள்கள்
தழுவியசிந் தையில்உணர்வுந் தங்கியநீர் மையிற்சரித்தார்.

தெளிவுரை : பல பதிகளிலும் போய் வணங்கிப் பலவகையாலும் அமைந்த சொற்றொடைகளான வளமுடைய தமிழ்ப் பதிகங்களைப் பாடிக் குற்றமற்ற திருப்பணிகளைச் செய்து உள்ளம் உருகி, எல்லாக் காலத்திலும் நீர் ஒழுகும் கண்களையும், நீங்காமல் சிவபெருமானின் திருவடிகளை உணர்ச்சியில் தழுவிக் கொண்ட சிந்தையுமாக இவ்வாறு ஒழுகி வந்தார்.

1677. தேம்பொழில்சூழ் செந்தமிழ்நாட் டினில்எங்குஞ் சென்றிறைஞ்சிப்
பாம்பணிவார் தமைப்பணிவார் பொன்னிநா டதுஅணைந்து
வாம்புனல்சூழ் வளநகர்கள் பின்னும்போய் வணங்கியே
பூம்புகலூர் வந்தடைந்தார் பொய்ப்பாசம் போக்குவார்.

தெளிவுரை : தேன் பொழியும் செந்தமிழ் நாட்டில் எங்கும் போய் அங்கங்குள்ள பாம்பணியும் இறைவரை வணங்கியவராய்ப் பொன்னியாறு பாயும் சோழ நாட்டைச் சேர்ந்து தாவும் நீரையுடைய வளநகர்களைப் பின்னும்போய் வணங்கி, பொய்யான பற்றை ஒழிப்பவரான திருநாவுக்கரசர் பூம்புகலூர் என்னும் தலத்தை வந்தடைந்தார்.

1678. பொய்கைசூழ் பூம்புகலூர்ப் புனிதர்மலர்த் தாள்வணங்கி
நையுமனப் பரிவோடு நாள்தோறுந் திருமுன்றில்
கைகலந்த திருத்தொண்டு செய்துபெருங் காதலுடன்
வைகுநாள் எண்ணிறந்த வண்டமிழ்மா லைகள்மொழிவார்.

தெளிவுரை : நீர் நிலையில் சூழ்ந்த பூம்புகலூரில் வீற்றிருக்கும் இறைவரின் மலரடிகளை வணங்கி, நெகிழ்ந்து கரையும் மனத்தில் எழும் அன்புடனே நாள்தோறும், திருமுற்றத்தில் அன்புடைய கைத்தொண்டுகள் செய்து மிக்க காதலுடன் தங்கியிருந்தார். அந்நாளில் எண் இல்லாத வளமை மிக்க தமிழ் மாலைகளை அருளிச் செய்வாராகி,

1679. நின்றதிருத் தாண்டகமும் நீடுதனித் தாண்டகமும்
மன்றுறைவார் வாழ்பதிகள் வழுத்துதிருத் தாண்டகமும்
கொன்றைமலர்ச் சடையார்பால் குறைந்தடைந்த நேரிசையுந்
துன்றுதனி நேரிசையும் முதலான தொடுத்துரைத்தார்.

தெளிவுரை : நின்ற திருத்தாண்டகமும், நீடிய தமிழ்த் திருத்தாண்டப் பதிகங்களும், அம்பலத்தில் ஆடும் இறைவர் வீற்றிருக்கின்ற திருப்பதிகளை வணங்கிப் போற்றுகின்ற ÷க்ஷத்திரக் கோவைத் திருத்தாண்டகமும், கொன்றை மலர் சூடிய சடையுடைய சிவபெருமானிடம் குறைந்து அடையும் கருத்தினை உட்கொண்ட குறைந்த திருநேரிசைப் பதிகங்களையும், பொருந்திய தனித் திருநேரிசைப் பதிகங்களையும் இவை முதலிய பலவற்றையும் சேர்த்து அமைத்தருளியதுடன்,

1680. ஆருயிரின் திருவிருத்தம் தசபுரா ணத்தடைவும்
பார்பரவும் பாவநா சப்பதிகம் பன்முறையும்
நேர்படநின் றறைகூவுந் திருப்பதிகம் முதற்பிறவும்
பேரருளின் கடல்அளிக்கும் பெருமானைப் பாடினார்.

தெளிவுரை : ஆருயிர்த் திருவிருத்தமும் தசபுராணத் திருப்பதிகமும், உலகம் போற்றி உய்யும் பாவநாசத் திருப்பதிகமும், பலமுறையும் நேர்படும்படி நின்று இறைவரைக் கருதிச் சரக்கறையோ என்று அறைகூவும் சரக்கறைத் திருப்பதிகமும் என்று இவை முதலான பதிகங்களால், பேரருட்கடலை அடியார்க்கு அளிக்கும் சிவபெருமானைப் பாடியருளினார்.

1681. அந்நிலைமை தனில்ஆண்ட அரசுபணி செய்யஅவர்
நன்னிலைமை காட்டுவார் நம்பர்திரு மணிமுன்றில்
தன்னில்வரும் உழவாரம் நுழைந்தவிடந் தானெங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்திலங்க அருள்செய்தார்.

தெளிவுரை : அந்நிலைமையில் திருநாவுக்கரசர் திருப்பணி செய்ய அவருடைய நன்நிலைமையை உலகறியக் காட்டுவாராகிச் சிவபெருமான் அழகிய முற்றத்தில் திருப்பணிக்காக உழவாரம் நுழைந்த இடம் எல்லாம் பொன்னினொடு நவமணிகள் வெளிப்பட்டு விளங்குமாறு அருள் செய்தார்.

1682. செம்பொன்னும் நவமணியும் சேண்விளங்க ஆங்கெவையும்
உம்பர்பிரான் திருமுன்றில் உருள்பருக்கை யுடன்ஒக்க
எம்பெருமான் வாகீசர் உழவாரத் தினில்ஏந்தி
வம்பலர்மென் பூங்கமல வாவியினில் புகஎறிந்தார்.

தெளிவுரை : செம்பொன்னும் நவமணிகளும் நெடுந்தொலைவிலும் ஒளி வீச, எம் தலைவரான திருநாவுக்கரசர், சிவபெருமானின் திருமுன்றிலில் உருள்கின்ற மற்றப் பருக்கைக் கற்களுடன் ஒத்தலால் அவ்விடத்தில் விளங்கிய அவை எல்லாவற்றையும் உழவாரப் படையில் ஏந்திச் சென்று மணம் வீச மலர்கின்ற பூக்களான தாமரைகள் மலரும் பொய்கையில் புகும்படி வீசி எறிந்தார்.

1683. புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறுபா டிலாநிலைமை துணிந்திருந்த
நல்லோர்முன் திருப்புகலூர் நாயகனார் திருவருளால்
வில்லோடு நுதல்மடவார் விசும்பூடு வந்திழிந்தார்.

தெளிவுரை : புல்லுடனும் கல்லுடனும் பொன்னுடனும் மணிகளுடனும் வேறுபாடு இல்லை என்னும் நிலையைத் துணிந்து மனம் சிறிதும் மாறுதல் இல்லாது இருந்த நல்லோரான நாயனாரின் முன்பு, திருப்புகலூர் இறைவரின் திருவருளால் வில்லைத் தோற்கடிக்கும் புருவங்கள் வளைந்து அசைவதற்கு இடமான நெற்றியையுடைய பெண்கள் வான் உலகத்தினின்றும் வான் வழியாய் வந்து இறங்கினர்.

1684. வானகமின் னுக்கொடிகள் வந்திழிந்தால் எனவந்து
தானநிறை சுருதிகளில் தகும்அலங்கா ரத்தன்மை
கானஅமு தம்பரப்பும் கனிவாயில் ஒளிபரப்பப்
பானல்நெடுங் கண்கள்வெளி பரப்பிஇசை பாடுவார்.

தெளிவுரை : வானத்தில் உள்ள மின்னற்கொடிகள் வந்து கீழே இறங்கியவை போல வந்து, உரிய தானங்களினின்று நிறைந்து வரும் சுருதியால் உண்டாகும் தக்க இனிமையுடன் இசையமுதத்தைப் பரவச் செய்கின்ற கொவ்வைக் கனியைப் போன்ற வாயால் ஒளி விளங்க, நீல மலர் போன்ற நீண்ட கண்களை வெளியில் பரப்பி, இங்ஙனம் இசையைப் பாடலானார்.

1685. கற்பகப்பூந் தளிரடிபோங் காமருசா ரிகைசெய்ய
உற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடுங் கைபெயரப்
பொற்புறும்அக் கையின்வழி பொருகயற்கண் புடைபெயர
அற்புதப்பொற் கொடிநுடங்கி ஆடுவபோல் ஆடுவார்.

தெளிவுரை : கற்பக மரத்தின் இளந்தளிர்கள் போன்ற அடிகள், செல்கின்ற அழகிய சாரிகை செய்யவும், செங்கழுநீர் மலர் அரும்பு போல் மென்மையான விரல்களால்  வர்த்தனையுடன் சுழற்றிக் கைகள் பெயரவும், அழகு பொருந்தும் அக்கைகளின் வழியே பொரும் கயல் மீன் போன்ற கண்கள் புடை பெயர்ந்து செல்லவும், பொன்னால் ஆன கொடிகள் ஒசிந்து ஆடுபவை போல ஆடுவாராகி,

1686. ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்றணைவார் குழல்அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர் ஒளிபெருக
நீடுவார் துகிலசைய நிற்பாரும் ஆயினார்.

தெளிவுரை : ஆடுபவர்களும் பாடுபவர்களும் மலர்களை மழைபோல மேலே பொழிபவர்களும் தழுவுபவர்களும் போல் பக்கத்தில் வந்து சேர்பவர்களும் கூந்தல் அவிழவும் இடை துவளவும் ஓடுபவர்களும் மன்மதனுடன் மீள்பவர்களும் காம ஒளி பெருகக் காணும்படி நீண்ட உடை நழுவ நிற்பவர்களும் இவ்வாறு பல திறப்பட்ட செயல்களைச் செய்பவர்கள் ஆயினர்.

1687. இத்தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல்புரிய
அத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா அன்புருகும்
மெய்த்தன்மை உணர்வுடைய விழுத்தவத்து மேலோர்தம்
சித்தநிலை திரியாது செய்பணியின் தலைநின்றார்.

தெளிவுரை : இங்ஙனம் அரம்பையர்கள் எல்லா விதத்திலும் காம செயல்களைச் செய்யவும் அத்தனின் திருவடியின் கீழ்ப்பதிய வைத்த நினைவு நீங்காத அன்பினால் உருகும் மெய்த்தன்மை உணர்ச்சியுடைய தூய தவத்தில் நிற்கும் மேலோரான நாவுக்கரசர் தம் உள்ளத்தின் நிலைமையினின்று மாறுபடாமல் தாம் செய்து வரும் பணியில் உறைந்து நின்றுவராகி,

1688. இம்மாயப் பவத்தொடக்காம் இருவினைகள் தமைநோக்கி
உம்மால்இங் கென்னகுறை உடையேன்யான் திருவாரூர்
அம்மானுக் காளானேன் அலையேன்மின் நீர்என்று
பொய்ம்மாயப் பெருங்கடலுள் எனுந்திருத்தாண் டகம்புகன்றார்.

தெளிவுரை : இந்த மாயை தொடர்பான பிறவியின் தொடக்கத்தில் விழுந்தும் இருவினைகள் வடிவமாய் வந்த அந்த நங்கையரைப் பார்த்து உம்மால் இங்கு எனக்கு ஆக வேண்டிய குறையாது உளது? நான் திருவாரூர் அம்மானுக்கு ஆளானேன், நீங்களே வீணே அலைய வேண்டாம்! என்று கருத்துடைய பொய்ம் மாயக் கடலுள் எனத் தொடங்கும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடினார்.

1689. மாதரவர் மருங்கணைய வந்தெய்தி மதனவசக்
காதலவர் புரிந்தொழுகுங் கைதவங்கள் செய்திடவும்
பேதமிலா ஓருணர்விற் பெரியவரைப் பெயர்விக்க
யாதும்ஒரு செயலில்லா மையில்இறைஞ்சி எதிரகன்றார்.

தெளிவுரை : அத்தேவ மங்கையர் நாயனார் அருகில் வந்து காம வயப்பட்ட காதலை உடையவர் செய்யும் வஞ்சனைகளையெல்லாம் செய்யவும், தம் நிலையினின்று பிறழாத ஒருமைப்பட்ட உணர்வையுடைய பெரியவரான நாயனாரை அந்நிலையினின்று உள்ளத்தின் நிலையை மாற்றுவதற்கு வேறு எவ்விதமான செயலும் செய்ய இயலாமையால், இறைஞ்சி அங்கிருந்து அகன்று சென்றனர்.

1690. இந்நிலைமை உலகேழும் எய்தஅறிந் தியல்பேத்த
மன்னியஅன் புறுபத்தி வடிவான வாகீசர்
மின்னிலவும் சடையார்தம் மெய்ப்பொருள்தான் எய்தவரும்
அந்நிலைமை அணித்தாகச் சிலநாள்அங் கமர்ந்திருந்தார்.

தெளிவுரை : இந்த நிலைமையை ஏழ் உலகமும் அறிந்து துதிக்க, நிலைபெற்ற அன்பு பொருந்திய பத்தியின் உருவமேயாகி நின்ற திருநாவுக்கரசர், ஒளியுடைய சடையையுடைய சிவபெருமானின் மெய்ப்பொருளையே பொருந்த வருகின்ற அந்நிலைமை அண்மை உடையதாக, சில நாட்கள் அத்தலத்தில் தங்கியிருந்தார்.

1691. மன்னியஅந் தக்கரணம் மருவுதலைப் பாட்டினால்
தன்னுடைய சரணான தமியேனைப் புகலூரன்
என்னையினிச் சேவடிக்கீழ் இருத்திடும்என் றெழுகின்ற
முன்னுணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பலமொழிந்தார்.

தெளிவுரை : இறைவரின் திருவடியில் நிலைபெற்ற அறிவு இச்சை செயல்கள் பொருந்திய சேர்வால் தம்மை அடைக்கலமாக அடைந்திடும் தமியேனான என்னைப் புகலூர் இறைவர் இனித் தமது சேவடியின் கீழ் இருக்கச் செய்வார் என்ற கருத்துடன் முன்னைப் பிறவியின் உணர்வு சார, அந்த உள்ள எழுச்சியினால் பல திருவிருத்தங்களைப் பாடினார்.

1692. மண்முதலாம் உலகேத்த மன்னுதிருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் எனப்புகன்று
நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டஅர சமர்ந்திருந்தார்.

தெளிவுரை : இந்த மண் உலகம் முதலான எல்லா உலகங்களும் போற்றிடும்படி நிலைபெறும் திருத்தாண்டகத்தைப் புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன்! எனப் புகன்று சென்று அடைதற்கரிய சிவானந்தத்துடன் பரமஞான வடிவே ஆகிப் பெருமையுடைய சிவபெருமானின் சேவடிக்கீழ் திருநாவுக்கரசர் எழுந்தருளி மீளாது இருந்தார்.

1693. வானவர்கள் மலர்மாரி மண்நிறைய விண்ணுலகின்
மேனிறைந்த ஐந்துபே ரியவொலியும் விரிஞ்சன்முதல்
யோனிகளா யினஎல்லாம் உளநிறைந்த பெருமகிழ்ச்சி
தானிறைந்த சித்திரையிற் சதயமாந் திருநாளில்.

தெளிவுரை : அவ்வாறு திருநாவுக்கரசர் அமர்ந்திருந்த சித்திரை மாதத்துச் சதயத் திருநாளில் தேவர்கள் பெய்த மலர் மழையானது இவ்வுலகத்தில் நிறைய, வான் உலகத்தின் மேல் எங்கும் ஐவகைத் துந்துபியின் ஒலியும் மேலே நிறைந்தன. நான்முகன் முதலான எல்லாவித யோனி பேதங்களில் வந்த எல்லா உயிர்களும் தமக்குள் உயிர்க்கு உயிராய் நிறைவாகப் பெற்றதால் பெருமகிழ்ச்சி நிறையப் பெற்றன.

1694. அடியனேன் ஆதரவால் ஆண்டஅர சின்சரிதப்
படியையான் அறிந்தபடி பகர்ந்தேன்அப் பரமுனிவன்
கடிமலர்மென் சேவடிகள் கைதொழுது குலச்சிறையார்
முடிவில்புகழ்த் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்.

தெளிவுரை : ஆண்ட அரசின் வரலாற்றை அந்த முனிவர்கள் மணமுடைய மலர் போன்ற மென்மையான சிவந்த திருவடிகளைக் கையாரத் தொழுது, அத்துணையினால் அவருடைய அடியேன் அறிந்த வகையால் எடுத்துரைத்தேன். அந்த மேலான முனிவரின் மணமுடைய மலர் போன்ற மென்மையான திருவடிகளைக் கையால் தொழுது, குலச்சிறை நாயனாரின் முடிவு இல்லாத புகழுடைய திருத்தொண்டின் முயற்சித் திறத்தைச் சொல்கின்றேன்.

திருநாவுக்கரசு நாயனார் புராணம் முற்றிற்று.

28. குலச்சிறை நாயனார் புராணம்

மணமேற்குடி என்பது பாண்டிய நாட்டில் உள்ள ஊராகும். அந்தவூரில் தான் குலச்சிறை நாயனார் தோன்றினார். அவர் கூன் பாண்டியனின் அமைச்சர். அவர் சிவனடியார்களிடம் அன்பு பூண்டவர். பாண்டிய மன்னனின் மனைவியாரான மங்கையர்க்கரசியாரின் சிவத்தொண்டுக்கு உறுதுணையாய் நின்றவர். கீழ்மையான பொய்ச் சமயமான சமண சமயத்தை ஒழித்துச் சைவம் வளர்ந்தோங்கக் காரணமானவர். திருஞான சம்பந்தரின் திருவடிகளை வணங்கியவர். வாதத்தில் தோற்ற சமண சமயத்தினரைக் கழுவில் ஏற்றியவர். சுந்தரர் இவரைப் பெருநம்பி என்று சிறப்பித்துப் பாராட்டியுள்ளார்.

1695. பன்னு தொல்புகழ்ப் பாண்டிநன் னாட்டிடைச்
செந்நெ லார்வயல் தீங்கரும் பின்னயல்
துன்னு பூகப் புறம்பணை சூழ்ந்தது
மன்னு வண்மையி னார்மண மேற்குடி.

தெளிவுரை : புகழ்ந்து பேசப்படும் பழைமையான புகழையடைய நன்மையுடைய பாண்டிய நாட்டில், செந்நெல் நிரம்பிய வயல்களும், கரும்புப் பயிர்களின் பக்கத்தில் செறிவான பாக்கு மரங்களும் கொண்ட புற இடங்களும் கொண்ட நிலைபெற்ற வளமை வாய்ந்த நகரமானது மணமேற்குடி என்பதாகும்.

1696. அப்ப திக்கு முதல்வர்வன் றொண்டர்தாம்
ஒப்ப ரும்பெரு நம்பிஎன் றோதிய
செப்ப ருஞ்சீர்க் குலச்சிறை யார்திண்மை
வைப்பி னால்திருத் தொண்டில் வழாதவர்.

தெளிவுரை : அந்தப் பதிக்கு முதல்வர் வன்றொண்டப் பெருந்தகையார் (சுந்தரர்). ஒப்பில்லாத பெருநம்பி என்று போற்றிய சொல்வதற்கரிய சிறப்பையுடையவர் குலச் சிறையார் ஆவார். அவர் திண்ணிய தன்மையால் திருத் தொண்டின் திறத்தினின்று தவறாதவர் ஆவார்.

1697. கார ணங்கண் ணுதற்கன்பர் என்னவே
வார மாகி மகிழ்ந்தவர் தாள்மிசை
ஆரும் அன்பொடு வீழ்ந்தஞ் சலிமுகிழ்த்
தீர நன்மொழி எய்த இசைத்துளார்.

தெளிவுரை : அக்குலச்சிறையார், சிவபெருமானுக்கு அன்பர்களை அவன் அருள் பெறுதற்குக் காரணமாவர் என்று துணிந்ததால், அன்பு நிறைந்து மகிழப்பெற்று அவருடைய திருவடிகளில் மிக்க அன்புடன் விழுந்து கைகள் குவித்துத் தொழுது அன்புடன் கலந்த நல்ல சொற்களைச் சொல்பவராய் விளங்கினார்.

1698. குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற் கன்பர் எனப்பெறில்
செறிவு றப்பணிந் தேத்திய செய்கையார்.

தெளிவுரை : குலச்சிறையார் குறிக் கொண்ட நான்கு குலத்தவராய் இருப்பினும், நெறிப்படி அந்தந்தக் குலங்களினின்றும் நீங்கியவர் ஆயினும், சிவபெருமானிடத்தில் தம் அறிவு நிலைபெற்ற அன்பர் என்று அறியப்படாமல், மனம் செறியும்படி கூடிப் பணிந்து துதிக்கும் செயலை உடையார் ஆவர்.

1699. உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்
அலகில் தீமையர் ஆயினும் அம்புலி
இலகு செஞ்சடை யார்அடி யாரெனில்
தலமு றப்பணிந் தேத்துந் தகைமையார்.

தெளிவுரை : உலகநெறியில் மக்கள் ஆம் என்று கொள்ளும் நன்மையுடையவராயினும், அங்ஙனம் உலகர் அன்று என்று தீமைகள் அளவின்றி உடையவர்களாயினும், பிறைச் சந்திரன் விளங்கும் சிவந்த சடையையுடைய சிவ பெருமானது அடியார்கள் ஆயினால், நிலம் பொருந்த வீழ்ந்து வணங்கிப் போற்றும் தன்மையை அக்குலச்சிறையார் உடையவராய் இருந்து வந்தார்.

1700. பண்பின் மிக்கார் பலராய் அணையினும்
உண்ப வேண்டி ஒருவர் அணையினும்
எண்பெ ருக்கிய அன்பால் எதிர்கொண்டு
நண்பு கூர்ந்தமு தூட்டும் நலத்தினார்.

தெளிவுரை : அவர், பண்பால் மிக்கவர், பெருங்கூட்டத்தவர் ஆக வந்தாலும், உண்பனவற்றை விரும்பி ஒருவராய் வந்தாலும், எண்ணுதலில் மிகுதிபட்ட அன்பின் திறம் காரணமாக, எதிர்கொண்டு அழைத்து வந்து, அன்புமிக்குத் திருவமுது ஊட்டும் இயல்பை மேற்கொண்டிருந்தார்.

1701. பூதி கோவணம் சாதனத் தாற்பொலிந்
தாதி தேவர்தம் அஞ்செழுத் தாமவை
ஓது நாவணக் கத்தால் உரைப்பவர்
பாதம் நாளும் பரவிய பண்பினார்.

தெளிவுரை : அக்குலச்சிறையார் திருநீறும் கோவணமும் உருத்திராக்கமும் ஆன சிவ சின்னங்களால் பொலிவு பொருந்திய ஆதிதேவரான சிவபெருமானின் திருவைந்தெழுத்தான அவற்றை ஓதுகின்ற நாவின் வணக்கத்தினால் சொல்பவரின் திருவடிகளை ஒவ்வொரு நாளும் துதிக்கும் இயல்பை உடையவர்.

1702. இன்ன நல்லொழுக் கத்தினார் ஈறில்சீர்த்
தென்ன வன்நெடு மாறற்குச் சீர்திகழ்
மன்னு மந்திரி கட்குமே லாகியார்
ஒன்ன லர்ச்செற் றுறுதிக்கண் நின்றுளார்.

தெளிவுரை : இத்தகைய நல்ல ஒழுக்கத்தில் நின்ற அவர் முடிவற்ற சிறப்பையுடைய பாண்டியரான நின்ற சீர் நெடுமாறர்க்குச் சிறப்புச் செய்து விளங்கிய அமைச்சர்களுள் மேம்பட்டு நிற்பவர். பகைவர்களை அழித்து உறுதி பயக்கும் துறையிலே நிலை நின்றவர்.

1703. ஆய செய்கைய ராயவர் ஆறணி
நாய னார்திருப் பாதம் நவின்றுளார்
பாய சீர்புனை பாண்டிமா தேவியார்
மேய தொண்டுக்கு மெய்த்தொண்டர் ஆயினார்.

தெளிவுரை : அவர் அத்தகைய செயலை உடையவராய்க் கங்கையைத் தலையில் சூடிய தலைவரான சிவபெருமானின் திருவடிகளையே இடைவிடாமல் சொல்லும் தன்மை கொண்டவர். எங்கும் பரவிய புகழையுடைய மங்கையர்க்கரசி அம்மையாரின் பொருந்திய திருத் தொண்டுக்கு உண்மைத் தொண்டராக விளங்கினார்.

1704. புன்ன யத்தரு கந்தர்பொய் நீக்கவும்
தென்னன் நாடு திருநீறு போற்றவும்
மன்னு காழியர் வள்ளலார் பொன்னடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்.

தெளிவுரை : நன்மையால் குறைவுடைய சமணர்களின் பொய்ம்மையை நீக்கவும், பாண்டியநாடு திருநீற்று நெறியைப் போற்றவும் பொருந்திய சீகாழியின் வள்ளலான ஞானசம்பந்தரின் பொன்னார்ந்த திருவடிகளைத் தலையில் சூட்டி மகிழ்ந்த சிறப்புக் கொண்டவர்.

1705. வாதில் தோற்ற அமணரை வன்கழுத்
தீது நீங்கிட ஏற்றுவித் தார்திறம்
யாது போற்றினேன் மேலினி ஏத்துகேன்
வேத நீதி மிழலைக் குறும்பர்தாள்.

தெளிவுரை : வாதத்தில் தோற்ற சமணர்களை வன்மையான கழு மரத்திலே தீமை நீங்குமாறு ஏற்றுவித்த குலச்சிறையாரின் இயல்புகளை இதுகாறும் எந்த அளவில் போற்றினேன்? (ஒன்றையும் போற்றவில்லை!) இனி, வேத நீதி விளங்கும் பெருமிழலைக் குறும்ப நாயனாரின் திருவடிகளைப் போற்றுப் புகுகின்றேன்.

குலச்சிறை நாயனார் புராணம் முற்றிற்று.

29. பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம்

மிழலை என்ற நாட்டில் பெரு மிழலை என்ற ஊரில் குறும்பர் மரபில் ஓர் அடியார் தோன்றினார். அவரே பெருமிழலைக் குறும்ப நாயனார். அவர் சிவனடியார்களை உபசரிக்கும் பண்புடையவராய் விளங்கினார். சுந்தரரின் பண்புகளை அறிந்து அவரை உடலாலும் உள்ளத்தாலும் வழிபட்டார். அதனால் அட்டமா சித்திகள் அவர்க்குக் கைகூடின. சுந்தரர் கயிலாயத்துக்குச் செல்லும் நாளை அவர் அறிந்தார். அவரைப் பிரிந்து நான் வாழேன். அவர் கயிலாயம் செல்வதற்கு முன்னம் நான் இறப்பேன் என்று தம் யோக வன்மையால் உயிர் வளியைச் சந்திர மண்டலத்தில் செலுத்திப் பிரணவத்தால் கபாலத்தைத் திறந்து சுந்தரர் கயிலாயம் அடைவதற்கு முன் கயிலாயத்தை அடைந்தார்.

1706. சூத நெருங்கு குலைத்தெங்கு பலவு பூகஞ் சூழ்புடைத்தாய்
வீதி தோறும் நீற்றினொளி விரிய மேவி விளங்குபதி
நீதி வழுவா நெறியினராய் நிலவுங் குடியால் நெடுநிலத்து
மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை.

தெளிவுரை : மிழலை நாட்டில் பெருமிழலை என்னும் ஊர் மாமரமும், நெருங்கிய குலைகளையுடைய தென்னையும், பலாவும், கமுகுகளும் சூழும், சுற்றுப்புறப் பனைகளையுடையதாகி வீதிதோறும் திருநீற்றின் ஒளி பெருகப் பொருந்தி விளங்கும்பதியாகும். வேத நீதியினின்று வழுவாத நல்லொழுக்கத்தில் நின்ற குடிகளின் பெருமையால், பெரியவுலகில் விளங்கும் பழைமையுடையது.

1707. அன்ன தொன்மைத் திருப்பதிக்கண் அதிபர் மிழலைக் குறும்பனார்
சென்னி மதியம் வைத்தவர்தம் அடியார்க் கான செய்பணிகள்
இன்ன வண்ணம் என்றவர்தாம் உரையா முன்னம் எதிரேற்று
முன்னம் உவந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன்கொள்வார்.

தெளிவுரை : அத்தகைய பழைமையுடைய நகரத்தில் குறுநில மன்னரான மிழலைக் குறும்பர், தலையில் பிறையைச் சூடிய இறைவரின் அடியார்களுக்கு ஆன பணிவிடைகளை யெல்லாம் இன்னின்னவை என்றும் இன்னின்னவாறு என்றும் அவர்கள் தாம் எடுத்துச் சொல்லாத முன்னமே எதிர்கொண்டு விருந்தாக ஏற்று அவர்களின் குறிப்பை யுணர்ந்து செய்பவராய் முதிர்ந்த அறிவுபெற்ற பயனை அடைவாராய்.

1708. தொண்டர் பலரும் வந்தீண்டி உண்ணத் தொலையா அமுதூட்டிக்
கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்துக் குறைந்தடைவார்
வண்டு மருவுங் குழலுமையாள் கேள்வன் செய்ய தாளென்னும்
புண்ட ரீகம் அகமலரில் வைத்துப் போற்றும் பொற்பினார்.

தெளிவுரை : சிவத்தொண்டர்கள் பலரும் வந்து கூடி உண்ண உண்ணத் தொலையாதபடி உணவை உண்பித்தும், எடுத்துக் கொண்டு செல்லுமாறு செல்வங்களை அள்ளிக் கொடுத்தும், தம்மைச் சிறியவராய் வைத்து நடந்து கொள்வார். வண்டுகள் மொய்த்த கூந்தலையுடைய உமையம்மையாருக்குக் கணவரின் சிவந்த திருவடித் தாமரைகளைத் தம் நெஞ்சத் தாமரையில் வைத்துப் போற்றும் இயல்பு உடையவர்.

1709. இத்தன் மையராய் நிகழுநாள் எல்லை இல்லாத் திருத்தொண்டின்
மெய்த்தன் மையினை உலகறிய விதியால் வணங்கி மெய்யடியார்
சித்தம் நிலவுந் திருத்தொண்டத் தொகைபா டியநம் பியைப்பணிந்து
நித்தன் அருள்பெற் றவர்பாதம் நினைக்கும் நியமத் தலைநின்றார்.

தெளிவுரை : இத்தன்மை உடையவராய் விளங்கும் நாளில், அளவுபடாத அவரது திருத்தொண்டின் திறத்தை உலகம் அறியும் பொருட்டு, உண்மை அடியாரது உள்ளத்துள் நீங்காமல் நின்று விளங்கும் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தை விதிப்படி வணக்கம் செய்து, அதனைப் பாடிய சுந்தரரை வணங்கி, நித்தரான சிவபெருமானின் அருள் கூடியதால், அவருடைய திருவடிகளை நியமமாக நினைக்கின்ற நிலையில் சிறந்து விளங்கினார்.

1710. மையார் தடங்கண் பரவையார் மணவா ளன்தன் மலர்க்கழல்கள்
கையால் தொழுது வாய்வாழ்த்தி மனத்தால் நினைக்குங் கடப்பாட்டில்
செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாளிணைக்கீழ்
உய்வான் சேர உற்றநெறி இதுவே என்றன் பினில்உய்த்தார்.

தெளிவுரை : மை பூசப்பெற்ற பெரிய கண்களை யுடைய பரவையாரின் கணவரான சுந்தரின் மலரடிகளைக் கையால் வணங்கி வாயினால் துதித்து மனத்தால் சிந்திக்கும் கடமைப்பாட்டில் நின்று திருமகள் கணவனான திருமாலும் நான்முகனும் அறியாத சிவந்த பொன் போன்ற திருவடிகளின் கீழ் உய்யுமாறு சேர்வதற்குப் பொருந்திய நெறிதான் இதுவாகும் என்று எண்ணி அன்பால் செலுத்தி வருவாரானார்.

1711. நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணிமாதி சித்தி யான அணைந்ததற்பின்
மூளும் காத லுடன்பெருக முதல்வர் நாமத் தஞ்செழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார்.

தெளிவுரை : நாள்தோறும் சுந்தரரின் திருநாமங்களைக் கூறிய அந்நலம் காரணமாக, தாம் கைக்கொண்டு ஏவல் கொள்ளும் தன்மையால் அணிமா முதலான எட்டுவகைச் சித்திகளும் கை வரப்பெற்று, அதன்பின், மூள்கின்ற அன்பு மேன்மேல் பெருகுதலால். முழுமுதற் பொருளான சிவ பெருமானின் திருவைந்தெழுத்துமே, சுற்றமும் பொருளும் உணர்வுமாகும் என்ற தன்மை கைகூடப் பெற்ற தன்மையை அடைந்தார்.

1712. இன்ன வாறே இவர்ஒழுக ஏறு கொடிமேல் உயர்த்தவர்தாம்
பொன்னின் கழல்கள் மண்ணின்மேல் பொருந்த வந்து வழக்குரைத்து
மன்னும் ஓலை அவைமுன்பு காட்டி ஆண்ட வன்றொண்டர்
சென்னி மதிதோய் மாடமலி கொடுங்கோள் ஊரைச் சேர்வுற்றார்.

தெளிவுரை : இங்ஙனமாக இவர் ஒழுகிவர, காளைக் கொடியை உயர்த்திய சிவபெருமான் தம் பொன் போன்ற இனிய அடிகள் மண்ணில் பொருந்துமாறு நடந்து வந்து வழக்காடி, நிலைபெற்ற மூல ஓலையை அவைமுன் காட்டித்தடுத்தாட் கொள்ளப்பட்ட வன்றொண்டர், உச்சியின் மீது நிலவு தோயும்படி உயர்ந்த மாடங்கள் நிறைந்த கொடுங்கோளூரைச் சேர்ந்தார்.

1713. அஞ்சைக் களத்து நஞ்சுண்ட அமுதைப் பரவி அணைவுறுவார்
செஞ்சொல் தமிழ்மா லைகள்மொழியத் தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வடகயிலைப் பொருப்பில் எய்த வரும்வாழ்வு
நெஞ்சில் தெளிய இங்குணந்தார் நீடு மிழலைக் குறும்பனார்.

தெளிவுரை : திருவஞ்சைக் களம் என்ற தலத்தில் நஞ்சை உண்ட இறைவரைத் துதித்து வருபவர் செஞ்சொல் தமிழ் மாலையான தேவாரத் திருப்பதிகம் பாடியருள, சிவ பெருமானின் அருளால் மேகங்களால் விளங்கும் வட கயிலாய மலையில் சேரும் வாழ்வை உள்ளத்தில் தெளிந்து கொண்டவராக, அதனை இங்கிருந்தே மிழலைக் குறும்பர் உணர்ந்தார்.

1714. மண்ணில் திகழும் திருநாவல் ஊரில் வந்த வன்றொண்டர்
நண்ணற் கரிய திருக்கயிலை நாளை எய்த நான்பிரிந்து
கண்ணிற் கரிய மணிகழிய வாழ்வார் போல வாழேன்என்
றெண்ணிச் சிவன்தாள் இன்றேசென் றடைவன் யோகத் தாலென்பார்.

தெளிவுரை : விளங்கும் திருநாவலூரில் இம்மண் உலகில் அவதரித்த சுந்தரர் மற்றவரால் அடைவதற்கரிய திருக் கயிலையை நாளைச் சென்றடையவும், கண்ணின் கருமணி நீங்கிய பின்னும் வாழ்பவர்களைப் போல் நான் பிரிந்து வாழேன் ! என்று மனத்தில் எண்ணி அதனால் யோக நெறியின் மூலம் சிவனடியை இன்றே அடைவேன் எனத் துணிந்தாராகி,

1715. நாலு கரணங் களும்ஒன்றாய் நல்ல அறிவு மேற்கொண்டு
காலும் பிரம நாடிவழிக் கருத்துச் செலுத்தக் கபாலநடு
ஏல வேமுன் பயின்றநெறி எடுத்த மறைமூ லந்திறப்ப
மூல முதல்வர் திருப்பாதம் அடைவார் கயிலை முன்னடைந்தார்.

தெளிவுரை : மனம் முதலிய கரணங்களுள் நான்கும் ஒன்றாக நல்ல அறிவை மேற்கொண்டு உணர்ச்சியானது சுழுமுனை வழியே பிராண வாயுவைச் செலுத்தக், கபால நடுவில் பொருந்தும்படி முன்னே தாம் பயின்ற நெறியால் எடுத்த பிரணவ மந்திரமானது பிரமரந்திர வாயிலைத் திறக்க, அந்த வழியின் மூலம் சிவபெருமானின் திருவடிகளை அடைபவராய்த் திருக்கயிலை மலையை, நம்பி ஆரூரர் வந்து சேர்வதற்கு முன்னே சேர்ந்தார்.

1716. பயிலச் செறிந்த யோகத்தால் பரவை கேள்வன் பாதமுறக்
கயிலைப் பொருப்பர் அடியடைந்த மிழலைக் குறும்பர் கழல்வணங்கி
மயிலைப் புறங்கொள் மென்சாயல் மகளிர் கிளவி யாழினொடுங்
குயிலைப் பொருவுங் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்.

தெளிவுரை : பயிலும் தொழிலை மிகச் செறிவுறச் செய்து வந்த முயற்சியின் துணையால் பரவையம்மையாரின் கணவரான சுந்தரரின் திருவடிகளைப் பிரியாது பொருந்துதற்குக் கயிலை மலைக்கு இறைவரான சிவபெருமானின் திருவடியை அடைந்த பெருமிழலைக் குறும்பரின் திருவடிகளை வணங்கி, அவற்றின் துணையால் மயிலின் சாயலைப் புறம் கண்ட மகளிரான, யாழுடன் குயிலின் இசையையும் ஒத்துச் சொற்கள் ஒலிக்கும் தன்மையுடைய காரைக் காலம்மையாரின் பெருமையை இனிச் சொல்வேன்.

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் முற்றிற்று.

30. காரைக்காலம்மையார் புராணம்

காரைக்கால் என்ற வளம் பெருகும் சோழ நாட்டிலே தனதத்தனார் என்பவருக்கு புனிதவதி என்னும் ஒரு மகள் இருந்தாள். நாகப்பட்டிணத்தில் வசித்து வந்த பரமதத்தன் என்ற வணிக குல மகனுககுத் திருமணம் செய்து வைத்தார் தனதத்தனார். இருவரும் இல்லற‌ெமென்னும் நல்லறமதை இனிதே நடத்தி வந்தனர். அத்தோடு கூட பரமதத்தன் வணிகத் தொழிலைப் பண்போடும் நேர்மையோடும் நடத்தி வந்தான். புனிதவதி இறைவனிடம் கொண்டுள்ள பக்தி நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. எந்நேரமும் சிவனடியார் திருநாமத்தைப் போற்றி வழிபடுவதிலேயே இருந்தாள். ஒருநாள் பரமதத்தன் கடையில் இருக்கும்பொழுது, அன்புடைய ஒருவர் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றார். பரமதத்தன் அம் மாங்கினிகளை ஆள் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதி அந்த இரண்டு மாங்கனிகளையும் வாங்கி வைத்துக் கொண்‌டாள். புனிதவதி பிற்பகல் உணவிற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தாள். அப்போது வாயிலில் சிவனடியார் ஒருவர் நிற்பதைக் கண்டாள்; அன்போடு அவரை வரவேற்று பக்குவமாகச் சமைத்த சோற்றை மட்டும் பறிமாறி கறியமுதிற்குப் பதிலாக மாம்பழங்களில் ஒன்றை இட்டாள். அடியார் சென்ற சற்று நேரத்திற்கெல்லம் வழக்கம்போல் பரமதத்தன் நண்பகல் உணவிற்காக வீட்டிற்கு வந்து சேர்ந்தான். புனிதவதி முறையோடு அமுது படைத்து மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு இட்டார். மிக சுவையாக இருந்ததால் மற்றொரு மாங்கனியையும் கொண்டு வா! என்று பணித்தான். ஒரு நிமிடம் என்ன செய்வதென்று புரியõமல் இறைவனை வேண்டினாள். அப்போது இறைவனின் திருவருளால் அதி மதுரக்கனி ஒன்று அம்மையாரின் கைகளில் வந்து தங்கியது. தனக்காக திருவருள் புரிந்த அரனாரை மனதில் தியானித்தபடியே மாங்கனியைக் கொண்டு வந்து கணவன் இலையில் பறிமாறினாள். அதனையுண்ட பரமதத்தன் முன் உண்ட கனியை விட இக்கனி தனிச்சுவையுடன் இருக்கக் கண்டு புனிதவதி ! இக்கனி, அமுதத்தைப் போன்ற சுவையுடையதாக இருக்கிறதே. தேவர்களுக்கும் , மூவர்களுக்கும் கிட்டாத கனிபோல் அல்லவோ தோன்றுகிறது இஃது ஏது உனக்கு? என்று வினவினான். கலக்கம் கொண்ட அவர் உண்மையை கணவரிடம் மறைக்காது இம்மதுர மாங்கனி இறைவன் திருவருளால் கிடைத்தது என்று கூறினாள். அதைக் கேட்ட பரமதத்தன் அப்படியாயின் இன்னொரு மாங்கனியைத் தருவித்துத் தா! என்றான். அம்மையார் இறைவனிடம் மீண்டும் ஒரு கனியை வேண்டினார். இறைவர் அதை அளிக்க புனிதவதி மகிழ்ச்சியோடு மாங்கனியைக் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்தாள். வியப்பு மேலிட, மாங்கனியைப் பரமதத்தன் வாங்கினான். அக்கனி உடனே மாயமாக அனர் கையிலிருந்து மறைந்தது. அதைப் பார்த்ததும், பரமதத்தன் பயந்து நடுநடுங்கினான். தன் மனைவி புனிதவதி மனிதப் பிறவி அல்ல, தெய்வீகத தன்மை பொருந்தியவள் என்பதை உணர்ந்தான்.

வெளியூர் சென்று பொருள் சேர்க்கப் போவதாகக் கூறி மனைவியிடமும், மாமனிடமும் விடைபெற்றுப் புறப்பட்டான். வாணிபத் தறையில் தனக்குள்ள தனித் திறமையால் ஓரிரு வாரத்துள் நிரம்பச் செல்வம் ‌சேர்த்துக் கொண்டு, பாண்டிய நாடு திரும்பினான் பரமதத்தன். அவன் காரைக்காலுக்குச் செல்ல விரும்பாததால் பாண்டிய நாட்டிலுள்ள வேறு ஒரு பட்டனத்தில் தங்கி அவ்வூரிலுள்ள வணிகன் ஒருவரின் புதல்வியை திருமணம் செய்து கொண்டான். தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பரமதத்தன் தான் மனத்தால் வழிபடும் புனிதவதியின் பெயரை சூட்டி மகிழ்ந்தான். பரமதத்தன் பண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, எப்படியோ சுற்றத்தார்கள் மூலம் புனிதவதிக்குத் தெரியவந்தது. சுற்றத்தார்கள் புனிதவதியை எப்படியும் பரமதத்தனோடு சேர்ப்பது என்று அவனிடம் அழைத்துச் சென்றனர்.  சற்றும் எதிர்பாராமல் தன் முதல் மனைவி இப்படி வந்ததும் பரமதத்தன் அஞ்சினான். ஒருவாறு மனதைத் திடப்படுத்தி கொண்டு, அவர்கள் என்னிடம் வரும் முன்பு அவர்கள் இருக்கும் இடத்திற்கு நான் செல்வேன் என்று கருத்தி்ல் கொண்டான்.

இரண்டாவது மனைவியுடனும், குழந்தைய புனிதவதியுடனும் புனிதவதி தங்கியுள்ள இடத்திற்குப் புறப்பட்டான் பரமதத்தன். புனிதவதி தங்கியிருக்கும் இடத்தை அடைந்த பரமதத்தன், விரைந்து சென்‌று மனைவி மகளுடன் புனிதவதியார் பாதங்களில், வீழ்ந்து வணங்கி எழுந்தான். அடி‌யேன் உமது திருவருளால் இனிது வாழ்கிறேன் இச்சிறு குழந்தைக்கு அம்மையாரின் திருநாமத்தையே சூட்டியிருக்கிறேன். அருள் புரிய வேண்டும் என்று கூறினான். கணவனின் செயல் கண்டு புனிதவதி அஞ்சி ஒதுங்கி நின்றாள். பரமதத்தனின் செயல்கண்டு திகைத்துப்போன சுற்றத்தார் அவனிடம், மனைவியின் காலடியில் விழக் காரணம் ‌என்னவென்று கேட்டனர். இவர் மனிதப் பிறவியினர் அல்லர். தெய்வம்; ஆதலான் இவரை நீங்களும் வணங்குங்கள் என்றான். பரமதத்தன் மொழிந்‌ததைக் கேட்டு அனைவரும் திகைத்து நின்றனர். கணவனின் முடிவு புனிதவதியின் மனத்தில் பெரும் வேதனையைக் கொடுத்தது. எம்பெருமானே ! அம்ப‌லவாணரே! என் கணவருக்காக இதுவரையில் தாங்கி நின்ற இந்த வனப்புமிகு ‌எழில் உடம்பு எனக்குத் தேவையில்லை. இவ்வடிவமைக்குப் பேய் வடிடு தந்து அருளுதல் வேண்டும என்று வேண்டியவாறு பரமனைத் துதித்தாள். இறைவன் புனிதவதி வேண்டி நின்றதுபோல் அவளுக்குப் பேய் வடிவைக் கொடுத்து அருளினார். தேவர்கள் மலர் மழை பொழிந்தனர்.

இறைவன் அருளால் அம்மையார் நல்ல தமிழ் புலமை பெற்று அருட்கவியாக மாறி அற்புதத் திருவந்தாதியும், திரு இரட்டை மணிமாலை என்னும் திருப்பிரபந்தத்தையும் பாடினார். புனிதவதி, காரைக்கால் அம்மையார் என்று அனைவராலும் அழைக்கலாயினார்! திருக்கயிலை மலையை, பாதத்தினால் மிதித்து நடந்து செல்வதற்கு அஞ்சிய அம்மையார், தலையால் நடந்து மகிழ்ச்சி‌ மேலிட கயிலை மலைமீதேறிச் சென்றார். அப்போது உமையம்மையார் தலைகீழாக எலும்புக்கூடு ஒன்று நடந்து வருகின்றது. இதன் அன்புதான் என்னே! என்றார். இவர் நம்மைப் போற்றும் தாய், இவர் இவ்வடிவத்தை நம்மை வேண்டிப் பெற்றார் என்றார். பின் தம்மை நாடிவரும் அந்த அம்மையாரைப் பார்த்துச் சிவபெருமான் அம்மையே! என்றார். காரைக்கால் அம்மையார் அப்பா என்று கூறி அவரது அடிகளில் விழுந்தார். என்னிடம் வேண்டுவது யாது? என்று வினவினார். புனிதவதியார் நான் இனி பிறவாதிருக்க வேண்டும். பிறவி உளதாயின் உம்மை மறவாதிருக்க வேண்டும். மேலும் நான் வேண்டுவது நீவிர் ஆடும்போது மகிழ்வுடன் உம் அடியில் இருக்கும் பேறு எனக்கு வேண்டும் என்று கூறினார். திருவாலங்காட்டில் ஆடும் திருநடனத்தைக் கண்டு பாடிய வண்ணம் இரு! என அருள் செய்தார். இறைவர் பணித்த வண்ணமே திருவாலங்காட்டைத் தலையால் நடந்து போயடைந்து, இறைவர் நடனத்தைக் கண்டு கொங்கை திரங்கி என்ற மூத்த திருப்பதிகத்தையும் பாடினார். இறைவரின் திருவடிக்கீழ் அவர் என்றும் இருக்கலானார்.
 
1717. மானமிகு தருமத்தின் வழிநின்று வாய்மையினில்
ஊனமில்சீர்ப் பெருவணிகர் குடிதுவன்றி ஓங்குபதி
கூனல்வளை திரைசுமந்து கொண்டேறி மண்டுகழிக்
கானல்மிசை உலவுவளம் பெருகுதிருக் காரைக்கால்.

தெளிவுரை : வளைந்த சங்குகளைக் கடல் அலைகள் சுமந்து எடுத்துக் கொண்டு மேல் ஏறி, அடுத்து நிறைந்த கழிக் கானல்களில் உலவும் வளம் பெருக உள்ள திருக்காரைக்கால் என்ற ஊர் மானம் மிக்க தருமநெறியில் நடந்து வாய்மையினின்றும் தவறாத சிறப்புடைய பெருவணிகர் குடிகள் நெருங்கி விளங்கும் பதியாகும்.

1718. வங்கமலி கடற்காரைக் காலின்கண் வாழ்வணிகர்
தங்கள்குலத் தலைவனார் தனதத்த னார்தவத்தால்
அங்கவர்பால் திருமடந்தை அவதரித்தாள் எனவந்து
பொங்கியபே ரழகுமிகப் புனிதவதி யார்பிறந்தார்.

தெளிவுரை : மரக் கலங்கள் மிக்க கடற்கரையில் உள்ள காரைக்கால் நகரில் வாழும் வணிகர் குலத் தலைவரான தனதத்தன் என்பவரின் தவத்தால் அங்கு அவரிடத்தில் பராசக்தி அவதரித்தாள் என்னுமாறு புனிதவதியார் வந்து பிறந்தார்.

1719. வணிகர்பெருங் குலம்விளங்க வந்துபிறந் தருளியபின்
அணிகிளர்மெல் லடிதளர்வுற்று அசையுநடைப் பருவத்தே
பணியணிவார் கழற்கடிமை பழகிவரும் பாங்குபெறத்
தணிவில்பெரு மனக்காதல் ததும்பவரும் மொழிபயின்றார்.

தெளிவுரை : வணிகர்களின் பெருங்குலம் விளங்குமாறு இம்மண்ணுலகில் அக்குலத்தில் வந்து தோன்றிய பின்னர், அணி பெருகும் மென்மையான திருவடிகள் தளர்நடை கற்கும் பருவத்தில், பாம்புகளை அணியும் சிவபெருமான் திருவடிகளில் அடிமைத்தொழில் பழகி வரும் பான்மை பெறுவதற்கு அடங்காத உள்ளத்து ஆசை மேலோங்க வரும் சொற்களைப் பயின்றார்.

1720. பல்பெருநற் கிளைஉவப்பப் பயில்பருவச் சிறப்பெல்லாம்
செல்வமிகு தந்தையார் திருப்பெருகுஞ் செயல்புரிய
மல்குபெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர்பால்
அல்கியஅன் புடன்அழகின் கொழுந்தெழுவ தெனவளர்வார்.

தெளிவுரை : பெருமையுடைய பல நல்ல உறவினர் மகிழ்ச்சியடையுமாறு, மேலே சொன்ன வண்ணம் வரும் பருவங்கள் தோறும், சிறப்புக்கள் எல்லாவற்றையும், திருப் பெருகும் சடங்குகளான செயல்களை எல்லாம் செல்வம் மிகுந்த தந்தையார் தனதத்தனார் செய்தார். அங்ஙனம் செய்ய, பொருந்திய நிறைந்த பெரும் பாராட்டுகளுடன் வளர்கின்றவரான புனிதவதியம்மையார் காளை யூர்தியையுடைய சிவ பெருமானிடத்தில் மிக்க அன்புடனே கூடிய அழகுடன் கொழுந்து எழுந்து வளர்ந்தாற் போல வளர்வார் ஆனார்.

1721. வண்டல்பயில் வனஎல்லாம் வளர்மதியம் புனைந்தசடை
அண்டர்பிரான் திருவார்த்தை அணையவரு வனபயின்று
தொண்டர்வரின் தொழுதுதா தியர்போற்றத் துணைமுலைகள்
கொண்டுநுசுப் பொதுங்குபதங் கொள்கையினிற் குறுகினார்.

தெளிவுரை : மற்றச் சிறுமியருடன் வண்டல் விளையாட்டயரும் மகளிர் விளையாட்டுகளில் எல்லாம் பிறைச் சந்திரனை அணிந்த சடையை யுடைய தேவ தேவரின் திருவார்த்தைகள் பொருந்த வருவனவாகப் பயின்றும், சிவன் அடியார்கள் வரின் அவர்களை வணங்கியும், இப்படி, வளர்ப்புத் தாயார் பாதுகாத்திட, இரண்டு முலைகளைக் கொண்டு இடை துவளும் பருவம் கொண்ட வயதின் பருவத்தை அடைந்தார்.

1722. நல்லவென உறுப்புநூ லவர்உரைக்கும் நலம்நிரம்பி
மல்குபெரு வனப்புமீக் கூரவரு மாட்சியினால்
இல்லிகவாப் பருவத்தில் இவர்கள்மர பினுக்கேற்குந்
தொல்குலத்து வணிகர்மகள் பேசுதற்குத் தொடங்குவார்.

தெளிவுரை : உடல் கூற்று வல்லுநர் இவை இவை நல்லவை என்று எடுத்துக் கூறும் நலங்கள் எல்லாம் நிரம்பப்பெற்ற, பொருந்திய பேரழகு மேலும் மேலும் மிகுதியாய் வளர்கின்ற பண்பினாலே வீட்டினின்று வெளியே செல்லக் கூடாத பருவம் வர, இவர்களது மரபுக்குப் பொருந்தும் பழங்குடியில் வந்த வாணிகர் மணம் செய்து கொள்ளப் பெண் பேசத் தொடங்கினர்.

1723. நீடியசீர்க் கடல்நாகை நிதிபதியென் றுலகின்கண்
பாடுபெறு புகழ்வணிகன் பயந்தகுல மைந்தனுக்குத்
தேடவருந் திருமரபில் சேயிழையை மகட்பேச
மாடமலி காரைக்கால் வள நகரின் வரவிட்டார்.

தெளிவுரை : சிறப்பு மிக்க கடற்கரையில் உள்ள பட்டின மான நாகைப் பட்டினத்தில் நிதிபதி என்ற பெயருடன் உலகில் பெருமை பெறும் புகழ் பொருந்திய வணிகன் பெற்ற குலமகனுக்கு, ஒத்த மரபில் தேட வருகின்ற குலத்தில் வந்த இந்த அம்மையாரைப் பெண் பேசும் பொருட்டு, மாடங்கள் நிறைந்த காரைக்கால் என்னும் நகரில் அறிவுடைய பெரியோர்கள் அனுப்பப்பட்டு வந்தனர்.

1724. வந்தமூ தறிவோர்கள் மணங்குறித்தம் மனைபுகுந்து
தந்தையாந் தனதத்தன் தனைநேர்ந்து நீபயந்த
பைந்தொடியை நிதிபதிமைந் தன்பரம தத்தனுக்கு
முந்தைமர பினுக்கேற்கும் முறைமைமணம் புரிகென்றார்.

தெளிவுரை : அங்ஙனம் அனுப்பட்டு வந்த முதிய அறிவினர் மணம் பேசப் பெண் குறித்த மனையில் புகுந்து, பெண்ணின் தந்தையான தனதத்தனை அடைந்து, நீ பெற்ற பெண்ணை நிதிபதியின் மகனுக்கு முந்தையோர் மரபினுக்குப் பொருந்துகின்ற முறையாலே மணம் செய்க எனக் கூறினர்.

1725. மற்றவனும் முறைமையினால் மணம்இசைந்து செலவிடச் சென்
றுற்றவர்கள் உரைகேட்ட நிதிபதியும் உயர்சிறப்புப்
பெற்றனன் போல் உவந்துதனிப் பெருமகற்குத் திருமலியுஞ்
சுற்றமுடன் களிகூர்ந்து வதுவைவினைத் தொழில்பூண்டான்.

தெளிவுரை : அங்ஙனம் மணம் பேச வந்தவர் சொல்லக் கேட்ட அந்தத் தனதத்தனும் அவர்கள் சொன்னபடியே மணம் இசைவது எவ்வகையாலும் முறைமையுடைய காரணத்தால் மணம் செய்வதற்கு சம்மதித்துத் தன் இசைவை அறிவித்து அவர்களைப் போகச் செய்ய, அங்ஙனமே சென்று சேர்ந்தவர்கள் கூறியதைக் கேட்ட நிதிபதியும், உயர்ந்த பெருஞ்சிறப்பைப் பெற்றவனைப் போல் மகிழ்ந்து தன் தனிப் பெரும் மகனுக்குச் செல்வம் மிக்க சுற்றத்தாருடன் கூடி மணத்துக்குரிய செயலைச் செய்லானான்.

1726. மணமிசைந்த நாளோலை செலவிட்டு மங்கலநாள்
அணையவது வைத்தொழில்கள் ஆனவெலாம் அமைவித்தே
இணரலங்கல் மைந்தனையும் மணவணியின் எழில்விளக்கிப்
பணைமுரசம் எழுந்தார்ப்பக் காரைக்கால் பதிபுகுந்தார்.

தெளிவுரை : மகளைப் பெற்றவர் மணத்துக்குச் சம்மதித்ததால் மணநாள் குறித்து மண ஓசைலை அனுப்பி, மணத்தைச் செய்யும் நாள் வந்து சேர, மணச் சடங்குக்குரிய செயல்கள் எல்லாவற்றையும் பொருந்துமாறு அமைத்து வைத்துக், கொத்தாகப் பொருந்திய மலர் மாலையையுடைய மணமகனையும் மணக்கோலம் புனையும் அணிகளால் அழகுபடுத்திக் கூட்டமான மணமுரசு முதலான வாத்தியங்கள் ஒலிக்க, மண எழுச்சி எழுந்து காரைக்கால் நகரத்தில் நிதிபதியும் அவனுடைய சுற்றத்தாரும் புகுந்தனர்.

1727. அளிமிடைதார்த் தனதத்தன் அணிமாடத் துள்புகுந்து
தெளிதருநூல் விதிவழியே செயல்முறைமை செய்தமைத்துத்
தளிரடிமென் நகைமயிலைத் தாதவிழ்தார்க் காளைக்குக்
களிமகிழ்சுற் றம்போற்றக் கலியாணஞ் செய்தார்கள்.

தெளிவுரை : அங்ஙனம் காரைக்கால் என்ற நகரத்துக்கு வந்தவர், வண்டுகள் மொய்க்கும் மாலையைச் சூடிய தனதத்தனின் அழகு பொருந்திய மாளிகையுள் சேர்ந்து தெளிவைத் தரும் அறநூல்களின் விதிப்படியே மணத்துக்கு முன்பு செய்யத் தக்க சடங்குகளை எல்லாம் செய்து முடித்து, தளிர் போன்ற திருவடிகளையும் மயிலின் சாயலையும் உடைய புனிதவதியம்மையாரை மாலை சூட்டிக் காளை போன்ற பரமதத்தனுக்குக் களி மகிழ் சுற்றத்தவர் திருமணம் செய்தனர்.

1728. மங்கலமா மணவினைகள் முடித்தியல்பின் வைகுநாள்
தங்கள்குடிக் கொருபுதல்வி ஆதலினால் தனதத்தன்
பொங்கொலிநீர் நாகையினிற் போகாமே கணவனுடன்
அங்கண்அமர்ந் தினிதிருக்க அணிமாடம் மருங்கமைத்தான்.

தெளிவுரை : மங்கலமான திருமணச் சடங்குகளையும் அவை பற்றிய மற்றச் செயல்களையும் முடித்து இல் வாழ்க்கையில் இயல்பின் வாழும் நாளில், தனதத்தன் தங்கள் குடிக்குப் புனிதவதியார் ஒரே மகள் ஆதலால், தம்மைப் பிரிந்து பொங்கும் ஒலியுடைய கடற்கரையில் உள்ள நாகைப்பட்டினத்துக்குச் செல்லாது, அவர், கணவருடனே அந்தக் காரைக்கால் நகரத்திலேயே தங்கி இனிதாய் இல்வாழ்வு வாழ்ந்திருக்கப் பக்கத்தில் அழகிய மாளிகையை அமைத்தான்.

1729. மகட்கொடையின் மகிழ்சிறக்கும் வரம்பில்தனங் கொடுத்ததற்பின்
நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பில் நிதிபதிதன் குலமகனும்
தகைப்பில்பெருங் காதலினால் தங்குமனை வளம்பெருக்கி
மிகப்புரியுங் கொள்கையினில் மேம்படுதல் மேவினான்.

தெளிவுரை : மகளைத் திருமணம் செய்து தந்த அதனால் மிகவும் மகிழ்ச்சி பெருகுவதற்குக் காரணமான அளவற்ற செல்வங்களையெல்லாம் தனதத்தன் தந்தான். பின், ஒப்பில்லாத சிறப்புடைய நிதிபதியின் மகனான பரமதத்தனும் அடங்காத பெரு விருப்பத்தால் மனையில் தங்கி இல்வாழ்வில் வரும் எல்லா வகை வளங்களையும் தன் மரபுக்கு ஏற்ற முயற்சிகளால் பெருக்கி, மிகுதியாக்கும் வணிகச் செயலால் மேன்மையான நிலையை அடைந்தான்.

1730. ஆங்கவன்தன் இல்வாழ்க்கை அருந்துணையாய் அமர்கின்ற
பூங்குழலார் அவர்தாமும் பொருவிடையார் திருவடிக்கீழ்
ஓங்கியஅன் புறுகாதல் ஒழிவின்றி மிகப்பெருகப்
பாங்கில்வரு மனையறத்தின் பண்புவழா மையில்பயில்வார்.

தெளிவுரை : அந்த இல்லத்தில் அவனுடைய இல்வாழ்க்கைத் துணைவியாய் அமர்ந்து பூங்குழலையுடைய புனிதவதியாரும் போர் செய்கின்ற காளையூர்தியையுடைய சிவபெருமானின் திருவடிகளின்கீழ் மிக்க அன்பு பொருந்திய காதல் இடையறாது மேன்மேலும் பெருகும்படி நல்ல பான்மையுடன் வரும் இல்லறத்தின் பண்பு பிறழாது ஒழுகி வந்தார்.

1731. நம்பரடி யார்அணைந்தால் நல்லதிரு அமுதளித்தும்
செம்பொன்னும் நவமணியுஞ் செழுந்துகிலும் முதலான
தம்பரிவி னாலவர்க்குத் தகுதியின்வேண் டுவகொடுத்தும்
உம்பர்பிரான் திருவடிக்கீழ் உணர்வுமிக ஒழுகுநாள்.

தெளிவுரை : புனிதவதியார் இறைவரின் அடியார் தம் இல்லத்தை நாடி வந்தால் நல்ல உணவை அளித்தும் செம் பொன்னும் நவமணிகளும் செழுமையான ஆடைகளும் என்ற இவை முதலானவற்றைத் தந்தும் தேவ தேவரான சிவபெருமான் திருவடியின் கீழ் வைத்த உணர்வு மேன் மேல் பெருகும்படி ஒழுகி வந்தார், அந்நாளில்,

1732. பாங்குடைய நெறியின்கண் பயில்பரம தத்தனுக்கு
மாங்கனிகள் ஓரிரண்டு வந்தணைந்தார் சிலர்கொடுப்ப
ஆங்கவைதான் முன்வாங்கி அவர்வேண்டுங் குறையளித்தே
ஈங்கிவற்றை இல்லத்துக் கொடுக்கவென இயம்பினான்.

தெளிவுரை : தம் ஒழுக்க நெறியில் ஒழுகும் பரமதத்தனிடம் வந்து சேர்ந்த சிலர் அவனுக்கு ஓர் இரண்டு மாம்பழங்கள் கொடுக்க, அங்கு அவற்றைத் தான் வாங்கிக் கொண்டு, அவன் அவர்கள் வேண்டிய செயல்களை முடித்துக் கொடுத்து, இங்கு இப்பழங்களை வீட்டில் கொண்டு போய்க் கொடுக்க ! எனத் தன் பணிமக்களிடம் கூறினான்,

1733. கணவன்தான் வரவிடுத்த கனியிரண்டுங் கைக்கொண்டு
மணமலியும் மலர்க்கூந்தல் மாதரார் வைத்ததற்பின்
பணஅரவம் புனைந்தருளும் பரமனார் திருத்தொண்டர்
உணவின்மிகு வேட்கையினால் ஒருவர்மனை உட்புகுந்தார்.

தெளிவுரை : அங்ஙனம் தன் கணவன் அனுப்பிய இரண்டு பழங்களையும் கைகளில் பெற்றுக் கொண்டு மணம் கமழும் கூந்தலையுடைய புனிதவதி அம்மையார் தம் இல்லத்தில் வைத்தார். பின்பு. படத்தையுடைய பாம்புகளை அணிகின்ற சிவபெருமானின் தொண்டர் ஒருவர் மிக்க விருப்புடன் அந்த இல்லத்துக்கு வந்தார்.

1734. வேதங்கள் மொழிந்தபிரான் மெய்த்தொண்டர் நிலைகண்டு
நாதன்தன் அடியாரைப் பசிதீர்ப்பேன் எனநண்ணிப்
பாதங்கள் விளக்கநீர் முன்னளித்துப் பரிகலம்வைத்
தேதந்தீர் நல்விருந்தா இன்னடிசில் ஊட்டுவார்.

தெளிவுரை : நான்கு வேதங்களையும் அருளிய சிவபெருமானின் மெய்த் தொண்டர் மிகவும் பசித்த நிலையைக் கண்டு, சிவனடியாரை விரைவாகப் பசி தீர்க்க உணவு அளிப்பேன் என்று போய், முதலில் பாதம் தூய்மை செய்தற்பொருட்டு நீரை அளித்து உண்ணும் வாழை இலையைத் திருத்தி இட்டு, குற்றம் நீங்கும் நல்ல விருந்தாகக் கொண்டு இனிய அடிசிலை உண்பிக்க,

1735. கறிஅமுதங் குதவாதே திருஅமுது கைகூட
வெறிமலர்மேல் திருவனையார் விடையவன்தன் அடியாரே
பெறலரிய விருந்தானால் பேறிதன்மேல் இல்லையெனும்
அறிவினராய் அவரமுது செய்வதனுக் காதரிப்பார்.

தெளிவுரை : மணம் கமழும் தாமரை மலர்மீது வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற புனிதவதியார் அப்போது கறியமுது உதவாமல் திருவமுது மட்டும் கைக் கூடப் பெற்ற நிலையில் இருக்க (கறிகள் சமைக்கப் பெறாமல் சாதம் மட்டும் சமைத்த நிலையில் இருக்க), சிவபெருமானின் அடியாரே தேடிப் பெறுவதற்கு அரிய விருந்தாய் இங்கு வந்து கிட்டுவாரானால், இதன் மேலும் பெறத்தக்க பேறு இல்லை ! என்னும் துணிவுடையவராய், அவர் உணவு உண்பதற்குரிய செயலை அன்புடன் செய்பவராய்,

1736. இல்லாளன் வைக்கவெனத் தம்பக்கல் முன்னிருந்த
நல்லநறு மாங்கனிகள் இரண்டினில்ஒன் றைக்கொண்டு
வல்விரைந்து வந்தணைந்து படைத்துமன மகிழ்ச்சியினால்
அல்லல்தீர்ப் பவர்அடியார் தமையமுது செய்வித்தார்.

தெளிவுரை : தம் கணவன் இவற்றை வைக்க ! என்று அனுப்பிடத் தம்மிடத்தில் முன்னர் இருந்த நல்ல இனிய பழங்கள் இரண்டில் ஒன்றைக் கொண்டு, மிகவும் விரைந்து வந்து சேர்ந்து, இலையில் பரிமாறி, உள்ள மகிழ்ச்சியுடனும் துன்பம் துடைக்கும் இறைவரின் அடியாரை உணவு உண்ணச் செய்தார்.

1737. மூப்புறும்அத் தளர்வாலும் முதிர்ந்துமுடு கியவேட்கைத்
தீப்பசியின் நிலையாலும் அயர்ந்தணைந்த திருத்தொண்டர்
வாய்ப்புறுமென் சுவையடிசில் மாங்கனியோ டினிதருந்திப்
பூப்பயில்மென் குழல்மடவார் செயலுவந்து போயினார்.

தெளிவுரை : முதுமையால் வரும் அந்தத் தளர்ச்சியாலும், முதிர்ந்து பெருகிய உணவு பெறும்விருப்பத்தை எழுவிக்கும் வயிற்றுத் தீயின் செயலால் உண்டான பசியின் நிலையாலும், தளர்ச்சி கொண்டு அங்கு வந்து சேர்ந்த திருத்தொண்டர் வாய்ப்பான மென்மையான சுவையுடைய தாய்ப் பெற்ற அந்த உணவை, அத்தன்மையான பழத்துடனும் இனிதாய் உண்டு, மலர்கள் பொருந்திய மென்மையான கூந்தலையுடைய அம்மையாரின் அன்புமிக்க செயலுக்கு மகிழ்ந்து சென்றார்.

1738. மற்றவர்தாம் போயினபின் மனைப்பதியா கியவணிகன்
உற்றபெரும் பகலின்கண் ஓங்கியபேர் இல்எய்திப்
பொற்புறமுன் நீராடிப் புகுந்தடிசில் புரிந்தயிலக்
கற்புடைய மனையாருங் கடப்பாட்டில் ஊட்டுவார்.

தெளிவுரை : அந்த அடியார் போன பின்பு அந்த இல்லத் தலைவனான பரமதத்தன் நண்பகலில் மிகப் பெரிய அந்த வீட்டில் வந்து சேர்ந்து அழகு பொருந்தக் குளித்து உட் புகுந்து உணவை விரும்பி உண்ண எண்ணினானாக. கற்புடைய புனிதவதியாரும் தம் மனைக் கடமை முறைப்படி தம் கணவனை உண்ணச் செய்ய எண்ணினார்.

1739. இன்னடிசில் கறிகளுடன் எய்துமுறை இட்டதற்பின்
மன்னியசீர்க் கணவன்தான் மனையிடைமுன் வைப்பித்த
நன்மதுர மாங்கனியில் இருந்ததனை நறுங்கூந்தல்
அன்னமனை யார்தாமும் கொடுவந்து கலத்தளித்தார்.

தெளிவுரை : இனிய திருவமுதைக் கறிவகைகளுடன் பொருந்தும் முறையில் பரிமாறிய பின்பு நிலைபெற்ற சிறப்பினையுடைய கணவனான பரமதத்தன் தான் முன்பு இல்லத்திடை வைக்கும்படி அனுப்பிவைத்தபடி நல்ல சுவை பொருந்திய மாங்கனிகளில் எஞ்சி நின்ற ஒன்றை நறுமணம் கமழும் கூந்தலையுடைய அம்மையாரும் கொணர்ந்து இலையில் இட்டார்.

1740. மனைவியார் தாம்படைத்த மதுரமிக வாய்ந்தகனி
தனைநுகர்ந்த இனியசுவை ஆராமைத் தார்வணிகன்
இனையதொரு பழம்இன்னும் உளததனை இடுகவென
அனையதுதாங் கொண்டுவர அணைவார்போல் அங்ககன்றார்.

தெளிவுரை : மனைவியார் தாம் கொண்டு வந்து, கலத்தில் இட்ட மிக்க இனிமையுடைய அந்த மாங்கனியை சுவைத்த தன் சுவையினால், ஆசை நிரம்பாததால், மாலை சூடிய வாணிகனான பரமதத்தன் இது போன்று இன்னொரு பழம் உள்ளது ! அதையும்இடுக! என்று சொல்ல, அதனைத் தாம் கொண்டு வரச் செல்பவர் போல் அங்கிருந்து நீங்கினார்.

1741. அம்மருங்கு நின்றயர்வார் அருங்கனிக்கங் கென்செய்வார்
மெய்ம்மறந்து நினைந்துற்ற விடத்துதவும் விடையவர்தாள்
தம்மனங்கொண் டுணர்தலுமே அவரருளால் தாழ்குழலார்
கைம்மருங்கு வந்திருந்த ததிமதுரக் கனியொன்று.

தெளிவுரை : அந்தப் பக்கத்தில் நின்று மனத்தளர்ச்சி அடைவார்; பின் அரிய கனி பெறும் வழிதான் வேறு என்ன என்று தம்மையும் மறந்து நினைந்து, துன்பம் அடையும் இடத்தில்வந்து உதவும் காளையை ஊர்தியாக உடைய சிவபெருமான் திருவடிகளைத் தம் மனத்தில் முற்றும் பொருந்த வைத்து உணர்வில் பொருந்த வைத்தவுடனே அப்பெருமானின் திருவருளால் தாழும் கூந்தலையுடைய அம்மையாரின் கையில் மிக்க இனிய கனி ஒன்று வந்து பொருந்தியது.

1742. மற்றதனைக் கொடுவந்து மகிழ்ந்திடலும் அயின்றதனில்
உற்றசுவை அமுதினுமேற் படவுளதா யிடஇதுதான்
முன்தருமாங் கனியன்று மூவுலகிற் பெறற்கரிதால்
பெற்றதுவே றெங்கென்று பெய்வளையார் தமைக்கேட்டான்.

தெளிவுரை : அவ்வாறு தம் கையில் வந்த பழத்தைக் கொண்டு வந்து மகிழ்வுடன் பரமதத்தனின் இலையில் இடவும், அதனை உண்டு அதில் பொருந்திய சுவையானது அமுதத்தைவிட மேலானதாக விளங்கவே, இது முன்பு தந்த மாங்கனியன்று, மூன்று உலகங்களிலும் பெறுவதற்கு அரியது. இதைப் பெற்றது வேறு எங்கு? எனப் பரமதத்தன் அம்மையாரைக் கேட்டனன்.

1743. அவ்வுரைகேட் டலும்மடவார் அருளுடையார் அளித்தருளும்
செவ்வியபேர் அருள்விளம்புந் திறமன்றென் றுரைசெய்யார்
கைவருகற் புடைநெறியால் கணவன்உரை காவாமை
மெய்வழியன் றெனவிளம்பல் விடமாட்டார் விதிர்ப்புறுவார்.

தெளிவுரை : தாம் சிறிதும் எதிர்பாராத அந்த வினாவைக் கேட்கவும், அம்மையார், தம்மிடம் அருள் உடைய இறைவர் தமக்கு அருளிய அருளிப்பாடு மற்றவரிடம் சொல்லத் தக்க தன்று என்ற நிலைமையால் அதனை அவர் கூறவும் மாட்டாமல், கற்பு நெறியினால் கணவன் சொல்லைச் சோர்வுபடாது காவாது விடுதல் மெய்ந்நெறி அன்று என்ற நிலைமையினால் அதனைச் சொல்லுதலை விடவுமாட்டார். இவையிரண்டுக்கும் இடைப்பட்ட நடுக்கம் உடையவராகி,

1744. செய்தபடி சொல்லுவதே கடனென்னுஞ் சீலத்தால்
மைதழையுங் கண்டர்சே வடிகள்மனத் துறவணங்கி
எய்தவருங் கனியளித்தார் யார்என்னுங் கணவனுக்கு
மொய்தருபூங் குழல்மடவார் புகுந்தபடி தனைமொழிந்தார்.

தெளிவுரை : எங்ஙனமாயினும் நிகழ்ந்தவாறே சொல்லுவதே கடமையாம் என்னும் சீலத்தைத் துணிந்ததால், பெருமையுடைய கழுத்தையுடைய சிவபெருமானின் திருவடிகளை மனத்துள் வைத்துக் கொண்டு சுவை பொருந்துமாறு கொணர்ந்த அந்தக் கனியை அளித்தவர் யாவர்? என வினவிய தம் கணவனுக்குப் பூங்குழலையுடைய அம்மையார் அக்கனி வந்த வரலாற்றை உள்ளவாறே எடுத்துக் கூறினார்.

1745. ஈசனருள் எனக்கேட்ட இல்இறைவன் அதுதெளியான்
வாசமலர்த் திருவனையார் தமைநோக்கி மற்றிதுதான்
தேசுடைய சடைப்பெருமான் திருவருளேல் இன்னமும்ஓர்
ஆசில்கனி அவனருளால் அழைத்தளிப்பாய் எனமொழிந்தான்.

தெளிவுரை : கனியளித்தது ஈசன் அருளே என்பதைக் கேட்ட இல்லத்துக்குரிய அவ்வாணிகன், அந்த உண்மையில் மனம் தெளியானாய் மணம் கமழும் மலரில் எழுந்தருளிய இலக்குமியைப் போன்ற அம்மையாரை நோக்கி, இந்தக் கனி ஒளியுடைய சடையுடைய சிவபெருமானின் திருவருளால் பெறப்பட்டது என்பது உண்மையாய் இருக்குமானால் இன்னமும் குற்றமற்ற இதைப் போன்ற கனி ஒன்றை அவர் அருளால் பெற்றுத் தருவாயாக ! எனக் கூறினான்.

1746. பாங்ககன்று மனைவியார் பணியணிவார் தமைப்பரவி
ஈங்கிதளித் தருளீரேல் என்னுரைபொய் யாம்என்ன
மாங்கனியொன் றருளால்வந் தெய்துதலும் மற்றதனை
ஆங்கவன்கைக் கொடுத்தலுமே அதிசயித்து வாங்கினான்.

தெளிவுரை : அம்மையார் அங்கிருந்து அகன்று சென்று பாம்புகளை அணியும் சிவபெருமானைத் துதித்து, இப்போது இதை அளிக்காது போனால் நான் முன்னம் சொன்ன சொல் பொய்யாகும் ! என்று வேண்டினார். இறைவர் திருவருளால் ஒரு மாம்பழம் வந்து அவர் கையில் பொருந்தியது. பொருந்தவும் அவர் அக்கனியை அவ்விடத்தில் அந்த வாணிகன் கையிலே தரவும், அவன் வியந்து அதனை வாங்கினான்.

1747. வணிகனுந் தன்கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயமேற் கொள்ள உள்ளமுந் தடுமா றெய்தி
அணிகுழல் அவரை வேறோர் அணங்கெனக் கருதி நீங்குந்
துணிவுகொண் டெவர்க்குஞ் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில்.

தெளிவுரை : அக்கனியை வாங்கிய அவ்வணிகனும் தன் கையில் புகுந்த மாங்கனியைப் பின் காணாதவன் ஆனான். தணியாத அச்சம் ஏற்படவே உள்ளம் தடுமாறி அழகிய கூந்தலையுடைய அம்மையாரை மனிதர் அல்லாத வேறு ஒரு தெய்வம் எனக் கருதி, அதனை எவர்க்கும் சொல்லாதவனாய் அம்மையாரிடம் தொடர்பு இன்றி ஒழுகி வந்தான். அந்நாளில்,

1748. விடுவதே எண்ண மாக மேவிய முயற்சி செய்வான்
படுதிரைப் பரவை மீது படர்கலங் கொண்டு போகி
நெடுநிதி கொணர்வேன் என்ன நிரந்தபல் கிளைஞ ராகும்
வடுவில்சீர் வணிக மாக்கள் மரக்கலஞ் சமைப்பித் தார்கள்.

தெளிவுரை : அம்மையாரை விட்டு நீங்குவதையே எண்ணமாகக் கொண்டு அதற்கு ஏற்ற முயற்சியைச் செய்பவனாய் அலைகளையுடைய கடலின் மேல் செல்லும் கப்பலைக் கொண்டு சென்று பெருஞ்செல்வம் திரட்டிக் கொணர்வேன் எனக் கூறவே நெருங்கிய பல சுற்றத்தவரான குற்றம் அற்ற சிறப்புடைய வாணிக மாக்கள் அதன் பொருட்டு மரக்கலத்தைச் செய்வித்தனர்.

1749. கலஞ்சமைத் ததற்கு வேண்டும் கம்மிய ருடனே செல்லும்
புலங்களில் விரும்பும் பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றிச்
சலந்தரு கடவுட் போற்றித் தலைமையாம் நாய்கன் தானும்
நலந்தரு நாளில் ஏறி நளிர்திரைக் கடல்மேற் போனான்.

தெளிவுரை : மரக்கலத்தைச் செய்து முடித்துக் கொண்டு கப்பல் செலுத்துவதற்குரிய மீகாமன் முதலான தொழில் வல்லாளருடனே, சென்று வாணிகம் செய்யும் கடல் கடந்த நாடுகளில் விரும்பும் பண்டங்களுக்குப் பொருந்துவனவற்றை நிறைய ஏற்றிக் கொண்டு, கடல் தெய்வத்தை வழிபட்டு, அவ்வாணிகத் தலைவனான வணிகனும் நல்ல நாளில் பயணம் கொண்டு கலத்தில் ஏறிக் குளிர்ந்த அலைகளையுடைய கடலின் மீது பயணம் புறப்பட்டுப் போனான்.

1750. கடல்மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயந் தன்னில்
அடைவுறச் சென்று சேர்ந்தங் களவில்பல் வளங்கள் முற்றி
இடைசில நாள்கள் நீங்க மீண்டும்அக் கலத்தில் ஏறிப்
படர்புனற் கன்னி நாட்டோர் பட்டினம் மருங்கு சார்ந்தான்.

தெளிவுரை : கடலின் மீது மரக்கலத்தைச் செலுத்தித் தான் எண்ணிய நாட்டில் சேரும்படி செலுத்திப் போய்ச் சேர்ந்து, அங்கு அளவில்லாத பலவளங்களையும் நிறைத்துக் கொண்டு இவ்வாறு இடையில் சில நாட்கள் செல்ல மீண்டும் அந்த மரக்கலத்தில் ஏறிக்கொண்டு, படரும் புனலையுடைய பாண்டிய நாட்டில் ஒரு கடற்கரைப் பட்டினத்தின் பக்கத்தில் சார்ந்தான்.

1751. அப்பதி தன்னில் எய்தி அலகில்பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பில்மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப்புகழ் விளங்கும் அவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற
செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்.

தெளிவுரை : அந்த நகரத்தில் ஏறிச் சென்று தான் கொணர்ந்த அளவில்லாத பலவகைப் பொருள்களால் ஆன ஒப்பற்ற பெருஞ் செல்வங்களையெல்லாம் ஒரு வழியாகச் சேர்ந்து மேலும் மேலும் சேமித்து மெய்யான புகழையுடைய அந்த ஊரார் விரும்பும்படி ஒரு வணிகன் பெற்ற சொல்வதற்கரிய கன்னியைச் செல்வம் பெருக மணம் செய்து கொண்டான்.

1752. பெறலருந் திருவி னாளைப் பெருமணம் புணர்ந்து முன்னை
அறலியல் நறுமென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம்
புறமொரு வெளியு றாமற் பொதிந்தசிந் தனையி னோடு
முறைமையின் வழாமை வைகி முகமலர்ந் தொழுகு நாளில்.

தெளிவுரை : பெறுவதற்கரிய இலக்குமியைப் போன்ற அப்பெண்ணைப் பெருவிழாவுடன் திருமணம் செய்து, முன் மணம் செய்து கொண்ட கரிய மணலின் ஒழுங்கு போன்ற நறுமணம் கொண்ட மென்மையான கூந்தலையுடைய தெய்வம் போன்ற புனிதவதி அம்மையாரிடம் தான் செய்த வஞ்சனையைப் புறத்தில் சற்றும் வெளிப்படாதபடி மறைத்து வைத்துள்ள மனத்துடன், மற்ற எல்லாவற்றிலும் முறைமை வழுவாது வாழ்ந்து முகமலர்ச்சியுடன் இருந்து வரும் நாளில்,

1753. முருகலர் சோலை மூதூர் அதன்முதல் வணிக ரோடும்
இருநிதிக் கிழவன் என்ன எய்திய திருவின் மிக்குப்
பொருகடற் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்குப் போலோர் பெண்கொடி அரிதிற் பெற்றான்.

தெளிவுரை : மணம் வீசுகின்ற பூஞ்சோலைகளை உடைய பழமையான அந்த ஊரில் முதன்மையான வணிகர்களுடன் கூடிக் குபேரனைப் போல் பொருந்திய செல்வத்தால் மிகுந்து, அலைகள் பொருகின்ற கடலில் கப்பலைச் செலுத்தி, வாணிகம் செய்யும் புகழ் கொண்ட அவ்வணிகன் தன் மனைவியிடம் ஒளி பெருகும் விளக்கினைப் போல் ஒரு பெண் மகவை அரிதாகப் பெற்றான்.

1754. மடமகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான்முன்
புடனுறை வஞ்சி நீத்த ஒருபெரு மனைவி யாரைத்
தொடர்வற நினைந்து தெய்வத் தொழுகுலம் என்றே கொண்டு
கடனமைத் தவர்தம் நாமங் காதல்செய் மகவை இட்டான்.

தெளிவுரை : அவன், பெண் குழந்தையைப் பெற்று அதற்குப் பெயரிடும் மங்கலச் சடங்கு முதலியவற்றைச் செய்ய நினைத்து, தான் முன் உடன் வாழ்தலை அஞ்சி நீத்துவிட்டு வந்த ஒப்பற்ற பெருமனைவியாரை இல்லறத்தொடர்பு அறநினைந்து தெய்வத் தன்மை கொண்ட தொழுவதற்குரிய பொருளாவார் என்றே துணிந்து, உரிய சடங்குகளைச் செய்து, அவரது புனிதவதியார் என்ற பெயரைத் தன் பெண் குழந்தைக்கும் சூட்டினான்.

1755. இன்னிலை இவன்இங் கெய்தி இருந்தனன் இப்பால் நீடும்
கன்னிமா மதில்சூழ் மாடக் காரைக்கால் வணிக னான
தன்னிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பி னோடு மனையறம் புரிந்து வைக.

தெளிவுரை : இத்தகைய நிலைமையுடன் பரமதத்தன் இருந்தான். இப்பக்கம் நீண்ட கெடுதல் இல்லாத பெரிய மதில் சூழ்ந்த மாடங்களையுடைய காரைக்காலின் வணிகனான, தனக்கு ஒப்பில்லாத செல்வம் உடைய தனதத்தனின் மகளான புனிதவதியம்மையாரும் நிலை பெற்ற கற்புடன் இல்லறம் புரிந்து தங்க,

1756. விளைவளம் பெருக்க வங்க மீதுபோம் பரம தத்தன்
வளர்புகழ்ப் பாண்டி நாட்டோர் மாநகர் தன்னில் மன்னி
அளவில்மா நிதியம் ஆக்கி அமர்ந்தினி திருந்தான் என்று
கிளரொளி மணிக்கொம் பன்னார் கிளைஞர்தாங் கேட்டா ரன்றே.

தெளிவுரை : பெருகும் ஒளியுடைய மணிகளையுடைய ஒரு கொம்பைப் போன்ற புனிதவதி அம்மையாரின் உறவினர், வாணிகத்தால் விளைக்கப்படும் வளங்களைப் பெருக்குதற் பொருட்டு மரக்கலத்தின் மீது ஏறிச் சென்ற பரமதத்தன், வளரும் புகழையுடைய பாண்டிய நாட்டில் ஒரு நகரில் தங்கி, அளவில் பெருஞ் செல்வங்களை ஆக்கி அங்கு நிலையாய் விரும்பி இனிதாய் இருந்தான் என்று தாங்கள் கேள்விப்பட்டனர்.

1757. அம்மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத் தாரும்
தம்முறு கிளைஞர்ப் போக்கி அவன்நிலை தாமும் கேட்டு
மம்மர்கொள் மனத்த ராகி மற்றவன் இருந்த பாங்கர்க்
கொம்மைவெம் முலையி னாளைக் கொண்டுபோய் விடுவ தென்றார்.

தெளிவுரை : அத்தகைய சொல்லைக் கேட்ட போதே அம்மையாருடைய உறவினர் நெருங்கிய கிளைஞர்களை விடுத்து, அவ்வணிகனின் நிலையைத் தாமும் கேட்டறிந்து கொண்டு, துன்பம் கொண்ட மணமுடையவர்களாகி, அவன் இருந்த இடத்தில் பருத்த வெம் முலையினராகிய புனிதவதி யம்மையாரைக் கொண்டு போய் விடுவது கடமையாகும் என்று உரைத்தனர்.

1758. மாமணிச் சிவிகை தன்னில் மடநடை மயில்அன் னாரைத்
தாமரைத் தவிசில் வைகுந் தனித்திரு என்ன ஏற்றிக்
காமரு கழனி வீழ்த்துக் காதல்செய் சுற்றத் தாரும்
தேமொழி யவருஞ் சூழச் சேணிடைக் கழிந்து சென்றார்.

தெளிவுரை : பெரிய அழகிய பல்லக்கில் மடப்பம் உடைய நடையுடைய மயில் போன்ற புனிதவதி யம்மையாரைத் தாமரை இருக்கையில் வீற்றிருக்கும் தனித் திருவினார் போன்று ஏற்றிக் கொண்டு, அழகிய திரையைச் சூழ்வித்து அன்பு செய்கின்ற உறவினர்களும் இனிய மொழியையுடைய தோழியர் முதலான பெண்களும் சூழ்ந்து செல்ல நெடுந் தொலைவு பல நாட்கள் கடந்து போயினர்.

1759. சிலபகல் கடந்து சென்று செந்தமிழ்த் திருநா டெய்தி
மலர்புகழ்ப் பரம தத்தன் மாநகர் மருங்கு வந்து
குலமுதல் மனைவி யாரைக் கொண்டுவந் தணைந்த தன்மை
தொலைவில்சீர்க் கணவ னுக்குச் சொல்லிமுன் செல்ல விட்டார்.

தெளிவுரை : பலநாட்கள் கடந்து சென்று, செந்தமிழ்நாடான பாண்டிய நாட்டை அடைந்து, மலரும் புகழையுடைய பரமதத்தன் இருந்த பட்டினத்தின் பக்கம் வந்து, குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து தாம் அணைந்துள்ள செய்திகளை எல்லாம் தொலைவில்லாத சிறப்புடைய அவன் அறியுமாறு முன்னே கூறியனுப்பினர்.

1760. வந்தவர் அணைந்த மாற்றங் கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச் செழுமணம் பின்பு செய்த
பைந்தொடி தனையுங் கொண்டு பயந்தபெண் மகவி னோடும்
முந்துறச் செல்வேன் என்று மொய்குழ லவர்பால் வந்தான்.

தெளிவுரை : அங்ஙனம் வந்தவர் தம் நகரத்தைச் சேர்ந்த சொல்லைக் கேட்டதும், பரமதத்தனும் உள்ளத்தில் அச்சம் கொண்டு செழுமை யுடைய திருமணத்தைப்பின் நாளில், செய்து கொண்ட மனைவியையும் பெற்றெடுத்த பெண் மகவுடன் கொண்டு, அவர்கள் இங்கே வருவதற்கு முன்பு நான் அங்கே செல்வேன் ! என எண்ணி அம்மையாரிடம் வந்தான்.

1761. தானும்அம் மனைவி யோடும் தளர்நடை மகவி னோடும்
மானிளம் பிணைபோல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான்உம தருளால் வாழ்வேன் இவ்விளங் குழவி தானும்
பான்மையால் உமது நாமம் என்றுமுன் பணிந்து வீழ்ந்தான்.

தெளிவுரை : பரமதத்தன் என்ற வணிகனும் அந்த மனைவியோடும் தளர்நடைப் பருவத்தில் உள்ள பெண் குழந்தையோடும், மானின் இளம் பிணைபோல் நின்ற மனைவியாரின் அடிகளில் வீழ்ந்து வணங்கி, நான் உம் அருளால் வாழ்வேன் ! இந்த இளங் குழந்தைக்கு அப்பான்மை பற்றி உம் திருப்பெயரையே சூட்டியுள்ளேன் ! எனக் கூறி, அவர் முன்பு மீண்டும் பணிந்து நிலம் பொருந்த வீழ்ந்தான்.

1762. கணவன்தான் வணங்கக் கண்ட காமர்பூங்கொடிய னாரும்
அணைவுறுஞ் சுற்றத் தார்பால் அச்சமோ டொதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி உன்திரு மனைவி தன்னை
மணமலி தாரி னாய்நீ வணங்குவ தென்கொல் என்றார்.

தெளிவுரை : தம் கணவர் தம்மை வணங்கியதைக் கண்ட அழகிய பூங்கொடி போன்ற புனிதவதி யம்மையாரும் பக்கத்தே பொருந்தி நின்ற சுற்றத்தாரிடம் அச்சத்துடன் ஒதுங்கி நின்றார். உணர்வு பொருந்தும் சுற்றத்தார் வெட்கம் அடைந்து, மணம் மிக்க மாலையை அணிந்த நீ உன் மனைவியை வணங்குவது ஏன்? என வினவினர்.

1763. மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெருந் தெய்வ மாதல் நானறிந் தகன்ற பின்பு
பெற்றஇம் மகவு தன்னைப் பேரிட்டேன் ஆத லாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும்போற்றுதல் செய்மின் என்றான்.

தெளிவுரை : பரமதத்தன் தன்னை நோக்கி அவ்வாறு வினவிய சுற்றத்தாரைப் பார்த்து, இவர் மனிதப் பிறவியுடையவர் அல்லர். நல்ல பெருந்தெய்வம் ஆவார். அவ்வாறு தெய்வமாதலை நான் அறிந்து அவரை நீங்கி வந்த பின்பு பெற்ற இம் மகவுக்கு அவர் பெயரைச் சூட்டினேன். ஆதலால் இவருடைய பொன்னடிகளை வணங்கினேன். அதுபோலவே நீங்களும் வணங்குங்கள் ! என்று சொன்னான்.

1764. என்றபின் சுற்றத் தாரும் இதுவென்கொல் என்று நின்றார்
மன்றலங் குழலி னாரும் வணிகன்வாய் மாற்றங் கேளாக்
கொன்றைவார் சடையி னார்தங் குரைகழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வுகொண் டுரைசெய் கின்றார்.

தெளிவுரை : என்று இங்ஙனம் பரமதத்தன் கூறவும், உறவினர் இஃது என்ன? என்று ஒன்றும் தோன்றாமல் நின்றனர். மணம் தங்கிய கூந்தலையுடைய புனிதவதி அம்மையாரும், வணிகன் கூறிய சொல்லைக் கேட்டு, கொன்றை மலரைச் சூடிய நீண்ட சடையுடைய சிவபெருமானின் ஒலிக்கும் கழலை அணிந்த பொற் பாதங்களை வணங்கித் துதித்து மனம் ஒன்றிய அக நோக்கின் மிக்க உள் உணர்ச்சியை மேற் கொண்டு சொல்லலானார்.

1765. ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி இவனுக் காகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங் குன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடி வடியே னுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர்தாள் பரவி நின்றார்.

தெளிவுரை : இங்கு இவ் வணிகன் தம் மனத்தில் கொண்ட கொள்கை, இது. இனிமேல் இவனுக்காகத் தாங்கிய வனப்பு மிக்க தசைப்பொதிந்த சுமையை இங்குக் கழித்துவிட்டு உன்னிடத்து அவ்வுலகத்தில் நின் அடிகளைப் போற்றும் பேய் வடிவத்தை அடியவளான எனக்கு, நற்பாங்கு கொள்ள அருள் வேண்டும் என்று வேண்டி இறைவரின் அடிகளைத் துதித்து நின்றார்.

1766. ஆனஅப் பொழுது மன்றுள் ஆடுவார் அருளி னாலே
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனடை வனப்பை எல்லாம் உதறிஎற் புடம்பே யாக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்குபேய் வடிவ மானார்.

தெளிவுரை : இங்ஙனம் புனிதவதி அம்மையார் வணங்கி நின்றபோது, அம்பலத்தில் ஆடுபவரின் அருளால், மேலான நெறிதரும் உணர்வு மிகுதலால், தாம் வேண்டிய அதையே பெறுவாராகி, உடம்பில் தசையும் அதனை இடமாகக் கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, எலும்புக் கூடான உடலே தம் மேனியாகிட, மேல் உலகமும் எல்லாம் வணங்கத் தக்க பேயான சிவ கண நாதரின் வடிவம் உள்ளவர் ஆனார்.

1767. மலர்மழை பொழிந்த தெங்கும் வானதுந் துபியின் நாதம்
உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம் குணலையிட் டனமுன் னின்ற
தொலைவில்பல் சுற்றத் தாருந் தொழுதஞ்சி அகன்று போனார்.

தெளிவுரை : அப்போது எங்கும் மலர் மழை பொழிந்தது ! தெய்வ துந்துபியின் முழக்கம் உலகத்தில் எல்லாம் நிறைந்து பெருகத் தேவர்களும் முனிவர்களும் கலந்து மகிழ்ந்தனர். பூதகணங்கள் எல்லாம் குணலைக் கூத்து ஆடின. முன்னால் நின்ற குறை வில்லாத பல சுற்றத்தாரும் தொழுது அஞ்சி நீங்கிச் சென்றனர்.

1768. உற்பவித் தெழுந்த ஞானத் தொருமையின் உமைகோன் தன்னை
அற்புதத் திருவந் தாதி அப்பொழு தருளிச் செய்வார்
பொற்புடைச் செய்ய பாத புண்டரீ கங்கள் போற்றும்
நற்கணத் தினில்ஒன் றானேன் நான்என்று நயந்து பாடி.

தெளிவுரை : உள்ளே தோன்றி மேல் எழுந்த ஒருப்பட்ட ஞானத்தால் தையல் பாகரான சிவபெருமானைத் துதித்து, அற்புதத் திருவந்தாதியை அப்போதே பாடி அருளத் தொடங்கி, அழகிய சிவந்த பாத தாமரைகளைப் போற்றுகின்ற நல்ல சிவ பூதங்களுள் நானும் ஒன்றாயினேன் என விரும்பியபடி பாடினார்.

1769. ஆய்ந்தசீர் இரட்டை மாலை அந்தாதி யெடுத்துப் பாடி
ஏய்ந்தபேர் உணர்வு பொங்க எயிலொரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலைமால் வரையை நண்ண
வாய்ந்தபேர் அருள்முன் கூர வழிபடும் வழியால் வந்தார்.

தெளிவுரை : அதன் பின்பு சிறப்புடைய இரட்டை மணி மாலையையும் அந்தாதித் தொடையாக அமையப் பாடினார். பின்பு பொருந்திய பேருணர்வு மேலும் மேலும் பெருகி எழுதலால், மதில்களையுடைய மூன்று புரங்களையும் முன்நாளில் எரித்த சிவபெருமான் வீற்றிருக்கின்ற பெரிய கயிலாய மலையைப் போய் அடையும் பொருட்டு வாய்ப்பான பேரருள் முன்னே கூடுதலால் வழிபடுகின்ற வழியால் வந்தார்.

1770. கண்டவர் வியப்புற் றஞ்சிக் கையகன் றோடு வார்கள்
கொண்டதோர் வேடத் தன்மை உள்ளவா கூறக் கேட்டே
அண்டர்நா யகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மை
எண்டிசை மாக்க ளுக்கியான் எவ்வுரு வாயென் என்பார்.

தெளிவுரை : அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட பேய் வடிவத்தைக் கண்டவர் வியப்படைந்து அச்சம் கொண்டு அங்கிருந்து நீங்கி ஓடலாயினர். அக்கோலத்தைத் தாம் கண்டவாறே உள்ளபடி சொல்லக் கேட்டு எல்லாத் தேவர்களுக்கும் தலைவரான சிவபெருமான் என்னை அறிவாராகில் உண்மை அறியாநிலையில் எட்டுத் திக்கில் உள்ள ஐயறிவுடைய மாக்களுக்கு நான் எந்தக் கோலம் தாங்கினதாகக் காணப்பட்டாலும் அதனால் எனக்கு ஆவது என்? என்று சொல்பவராய்.

1771. வடதிசைத் தேசம் எல்லாம் மனத்தினும் கடிதிற் சென்று
தொடையவிழ் இதழி மாலைச் சூலபா ணியனார் மேவும்
படரொளிக் கயிலை வெற்பிற் பாங்கணைந் தாங்குக் காலின்
நடையினைத் தவிர்ந்து பார்மேல் தலையினால் நடந்து சென்றார்.

தெளிவுரை : வடதிசையில் உள்ள நாடுகளை எல்லாம் மனத்தின் வேகத்தைவிட அதிக வேகமாய்க் கடந்து சென்று மாலை போல மலர்கின்ற கொன்றை மாலை சூடிய சூலம் ஏந்திய திருக்கையையுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் பரவும் ஒளியுடைய திருக்கயிலை மலையின் பக்கத்தை அடைந்து அங்குக் காலால் நடந்து செல்வதை விட்டு நிலத்தின் மேல் தலையால் நடந்து சென்றார்.

1772. தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி
மலையின்மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலையிளந் திங்கட் கண்ணிக் கண்ணுதல் ஒருபா கத்துச்
சிலைநுதல் இமைய வல்லி திருக்கண்நோக் குற்ற தன்றே.

தெளிவுரை : தலையால் நடந்து போய்ச் சிவபெருமான் வீற்றிருக்கும் வெள்ளி மலையான கயிலைமயிலையில் ஏறும் போது, மகிழ்ச்சி மிகுதலால் அன்பானது மேல் மேல் அதிகரித்தலால் ஒரு கலையுடன் நின்ற இளமையுடைய பிறைச்சந்திரன் ஆன மாலையைச் சூடிய நெற்றிக் கண்ணரின் ஒரு பாகத்தில் அமர்ந்த வில்லைப் போன்ற நெற்றியையுடைய உமையம்மையாரின் திருக்கண் பார்வை அப்போதே பொருந்தியது.

1773. அம்பிகை திருவுள் ளத்தின் அதிசயித் தருளித் தாழ்ந்து
தம்பெரு மானை நோக்கித் தலையினால் நடந்திங் கேறும்
எம்பெரு மான்ஓர் எற்பின் யாக்கைஅன் பென்னே என்ன
நம்பெரு மாட்டிக் கங்கு நாயகன் அருளிச் செய்வான்.

தெளிவுரை : உமையம்மையார் தம் உள்ளத்தில் அதிசயம் கொண்டு விரும்பித் தம் தலைவரான சிவபெருமானைப் பார்த்து தலையால் நடந்து இம்மலை மீது ஏறி வரும் ஓர் எலும்புக்கூடு பெற்ற அன்புதான் என்னே ! என வினவ, நம் பெருமாட்டியான உமையம்மையார்க்கு அருள் செய்வாராய்,

1774. வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்.

தெளிவுரை : எம் பெருமான், உமையே ! நீ சொல்லியவாறு வரும் இவள் நம்மைப் பேணும் அம்மையே ஆவாள். இந்தப் பேய் வடிவத்தை நம்மை வேண்டிப் பெற்றுக் கொண்டார் ! எனக் கூறியருளினார். அப்போது பக்கத்தில் அம்மையார் நெருங்கவே அவரைப் பார்த்து நம் அம்மையே ! என்ற செம்மைதரும் ஒப்பில்லாத ஒரு சொல்லை உலகம் எல்லாம் உய்யும் பொருட்டு அருளினார்.

1775. அங்கணன் அம்மை யேஎன் றருள்செய அப்பா என்று
பங்கயச் செம்பொற் பாதம் பணிந்துவீழ்ந் தெழுந்தார் தம்மைச்
சங்கவெண் குழையி னாருந் தா மெதிர் நோக்கி நம்பால்
இங்குவேண் டுவதென் என்ன இறைஞ்சிநின் றியம்பு கின்றார்.

தெளிவுரை : சிவபெருமான் அம்மையே என்று அழைத்திட அப்பா ! என்று ஆர்வத்துடன் சொல்லிக்கொண்டு தாமரை போன்ற பொன் திருப்பாதங்களில் பணிந்து விழுந்து எழுந்து நின்ற அவரைச் சங்கினால் ஆன வெண்மையான குழையை அணிந்த சிவபெருமானும் எதிர்நோக்கி இங்கு நம்மிடம் விரும்பும் வரம் யாது? என்று வினவினார். அம்மையார் மகிழ்ந்து நின்று சொல்லலானார்.

1776. இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.

தெளிவுரை : எக்காலத்தும் கெடுதல் இல்லாத இன்ப அன்பை வேண்டிக்கொண்டு பின்னும் வேண்டுவாராய் இனி நான் பிறவாதிருக்கும் வரம் வேண்டும். மீண்டும் பிறவி உளதாயின், உன்னை என்றும் மறவாதிருக்கும் வரம் வேண்டும், அறவா ! நான் மேலும் வேண்டுவது தேவரீர் அருட்கூத்து ஆடும்போது மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டு உம் திருவடியின் கீழ் இருக்கும் பேறு ஆகும் ! எனவுரைத்தார்.

1777. கூடுமா றருள்கொ டுத்துக் குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர் நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண் டானந்தஞ் சேர்ந்தெப் போதும்
பாடுவாய் நம்மை என்றான் பரவுவார் பற்றாய் நின்றான்.

தெளிவுரை : தம் திருவடியின் கீழ்க் கூடியிருக்கும் பேற்றை அருளித், துதிக்கின்றவர்களுக்குப் பற்றுக் கோடாய் நிற்கும் இறைவர், விளக்கமுடைய தெற்குத் திக்கில் எப்போதும் அழியாத வாழ்வு தரும் பழையனூர் என்னும் பழைய பதியில் நிலவும் திருவாலங்காட்டில் நாம் ஆடும் பெருங்கூத்தை நீ கண்டு எப்போதும் ஆனந்தத்துடன் கூடி நம்மைப் பாடிக் கொண்டிருப்பாயாக ! என அருள் செய்தார்.

1778. அப்பரி சருளப் பெற்ற அம்மையுஞ் செம்மை வேத
மெய்ப்பொரு ளானார் தம்மை விடைகொண்டு வணங்கிப் போந்து
செப்பரும் பெருமை அன்பால் திகழ்திரு வாலங் காடாம்
நற்பதி தலையி னாலே நடந்துபுக் கடைந்தார் அன்றே.

தெளிவுரை : அத்தகைய வரம் அருளப் பெற்றவரான அம்மை யாரும் வேதங்களில் செம் பொருள் என்றும் சத்து என்றும் கூறப்படும் இறைவரிடம் விடைபெற்றுக் கொண்டு வணங்கிச் சென்று கூறுவதற்கரிய பேரன்பினால் விளங்கும் நல்ல திருத்தலத்தைத் தலையினால் நடந்து சென்று கோயிலுள் புகுந்து திருமுன்பை அடைந்தார்.

1779. ஆலங்கா டதனில் அண்ட முறநிமிர்ந் தாடு கின்ற
கோலங்காண் பொழுது கொங்கை திரங்கிஎன் றெடுத்துத் தங்கு
மூலங்காண் பரியார் தம்மை மூத்தநற் பதிகம் பாடி
ஞாலங்கா தலித்துப் போற்றும் நடம்போற்றி நண்ணு நாளில்.

தெளிவுரை : மேல் அண்டங்களில் பொருந்தத் தம் திருவடியை மேலே உயர்த்தி ஆடும் கூத்தின் கோலத்தைக் காணப் பெற்ற அப்போது கொங்கை திரங்கி எனத் தொடங்கி, தாம் தங்கும் மூலத்தைக் காண்பதற்கு அரியவரான இறைவரை நன்மையுடைய மூத்த திருப்பதிகத்தைப் பாடி, அன்பு கொண்டு போற்றும் திருக்கூத்தைப் போற்றிக் கொண்டு தங்கியிருக்கும் நாளில்,

1780. மட்டவிழ்கொன் றையினார்தந் திருக்கூத்து முன்வணங்கும்
இட்டமிகு பெருங்காதல் எழுந்தோங்க வியப்பெய்தி
எட்டிஇல வம்ஈகை எனஎடுத்துத் திருப்பதிகங்
கொட்டமுழ வங்குழகன் ஆடுமெனப் பாடினார்.

தெளிவுரை : மணம் கமழ்கின்ற கொன்றை மலர் மாலையை யுடைய இறைவரின் திருக்கூத்தை நேரே வணங்கப் பெற்ற விருப்பம் மிகும் பேராசையானது மேலும் மேலும் பெருகி மிகுந்திட, வியப்பு அடைந்து, எட்டி இலவம் எனத் தொடங்கி கொட்ட முழவம் குழகன் ஆடும் என்ற முடிவினையுடைய திருப்பாட்டுக்களால் திருப்பதிகத்தைப் பாடினார்.

1781. மடுத்தபுனல் வேணியினார் அம்மையென மதுரமொழி
கொடுத்தருளப் பெற்றாரைக் குலவியதாண் டவத்திலவர்
எடுத்தருளுஞ் சேவடிக்கீழ் என்றுமிருக் கின்றாரை
அடுத்தபெருஞ் சீர்பரவல் ஆரளவா யினதம்மா.

தெளிவுரை : கங்கை நீரைத் தங்க வைத்த சடையையுடைய சிவபெருமான் அம்மையே ! என்று இனிய சொல்லைக் கூறியருளும் பேறு பெற்றவரை அண்டம் பொருந்த விளங்கிய அவரது திருக்கூத்தில் அவரது தூக்கியருள்கின்ற சேவடியின் கீழ் என்றும் நீங்காது எழுந்தருளியிருக்கும் பேறு பெற்றவரைப் பொருந்திய பெருஞ் சிறப்பை போற்றும் செயல் யாவருடைய அளவுள் படுவது? ஒருவர் அளவிலும் படாது ! இது அற்புதம் !

1782. ஆதியோ டந்த மில்லான் அருள்நடம் ஆடும் போது
கீதமுன் பாடும் அம்மை கிளரொளி மலர்த்தாள் போற்றிச்
சீதநீர் வயல்சூழ் திங்க ளூரில்அப் பூதி யாராம்
போதமா முனிவர் செய்த திருத்தொண்டு புகலல் உற்றேன்.

தெளிவுரை : முதலும் முடிவும் இல்லாத இறைவர் அருட் கூத்து ஆடும்போது கீதத்தை முன் பாடும் அம்மையாரின் ஒளியுடைய மலரடிகளைத் துதித்துக் கொண்டு, அத்துணையினால், குளிர்ந்த நீர் வளம் வாய்ந்த வயல்கள் சூழ்ந்த திங்களூரில் வாழ்ந்த அப்பூதியார் என்னும் ஞானமா முனிவர் செய்த திருத் தொண்டைக் கூறத் தொடங்குகிறேன்.

காரைக்காலம்மையார் புராணம் முற்றிற்று.

31. அப்பூதியடிகள் நாயனார் புராணம்

திங்களூர் என்பது சோழநாட்டில் உள்ளதாகும். அந்தவூரில் அந்தணர் மரபில் அப்பூதி அடிகளார் என்பவர் தோன்றினார். அவர் திருநாவுக்கரச நாயனாரிடம் பேரன்பு பூண்டவர். ஆதலால் தம் மைந்தர், வீட்டில் உள்ள பொருள்கள், பசுக்கள், தண்ணீர்ப் பந்தல், மடம் முதலியவற்றிற்குத் திருநாவுக்கரசு என்ற பெயரை வைத்திருந்தார். திருநாவுக்கரசர் திருப்பழனத்தை வணங்கி மற்றப் பதிகளையும் வணங்கிடத் திங்களூர் வழியாய் வந்தார். வழியில் தண்ணீர்ப் பந்தல்; அது திருநாவுக்கரசு பந்தல் என்ற பெயரில் விளங்கியது. அதைப் பார்த்த நாவரசர் அங்கிருந்தவர்களை நோக்கி, இப்பந்தலுக்குத் திருநாவுக்கரசு எனப் பெயரிட்டவர் யார்? என்றார். அதற்கு அவர்கள் அவர் அப்பூதியடிகள் என்றனர். நாவரசர் அவர் இப்போது எங்கே? என்றனர். அவர் தம் வீட்டுக்கு இப்போதுதான் சென்றார் என்று அவர்கள் விடையிறுத்தனர். சிவனடியார் தம்மை நாடி வந்துள்ளதாக அறிந்து அப்பூதியடிகள் அவரை வணங்கினார். அப்பூதியடிகளிடம் தாம் யாரென்றுக் காட்டிக் கொள்ளாமல், நீங்கள் வைத்துள்ள தண்ணீர்ப் பந்தலைப் பார்த்தோம். அதற்கு உம் பெயரை வைக்காமல் வேறொருவரின் பெயர் வைத்திருக்க காரணம் யாது? என்று வினவினார். சமணருடன் சேர்ந்த மன்னனின் சூழ்ச்சியைத் தம் தொண்டினால் வென்ற திருநாவுக்கரசர் பெயர் இது! இதுவா வேறொரு பெயர். இத்தகைய கேள்வியைக் கேட்கும் நீவீர் யார்? என்று அப்பூதியடிகள் சினந்தார். சமணப் படுகுழியிலிருந்து ஏறச் சூலை நோய் தந்து இறைவர் ஆட்கொண்ட தெளிந்த உணர்வில்லாத சிறியென் யான்! என்றார் நாவுக்கரசர். உடனே இரு கைகளும் தலைமேல் குவியக் கண்கள் நீரைப் பொழிய, உடல் புளகாங்கிதம் அடைய, நிலத்தில் விழுந்து நாவரசரின் திருவடிகளைத் தம் முடியில் சூடிக்கொண்டார். நாவரசர் அவரை வணங்கித் தழுவிக் கொண்டார். உள்ளே மனைவி மக்கள் சுற்றத்தார் முதலியவரை அழைத்து வந்து நாவரசரை வணங்கச் செய்தார். பின்பு தம் இல்லத்தில் உணவு உண்டருள வேண்டும் என வேண்டிக் கொண்டார். நாவுக்கரசர் அதற்கு இசைந்தார்.

நல்ல உணவு சமைக்கப் பெற்றது, தம் மூத்த மகனை அழைத்து வாழைக்குருத்தை அறுத்து வரும்படி ஏவினார். திருநாவுக்கரசரான மூத்த மகன் வாழை இலைக்குருத்தை அறுக்கும்போது கையில் பாம்பு சுற்றிக்கொண்டு கடித்தது. அவன் பாம்பை உதறிவிட்டு வாழையிலையைக் கொண்டு சென்று கொடுத்துவிட்டு நிகழ்ந்ததைக் கூறிவிட்டு உயிர் விட்டான். அவன் இறந்து விட்டதைப் பெற்றோர் மறைத்துவிட்டு, நாவரசரை உணவு உண்ண அழைத்தனர். நாவுக்கரசர் மூத்த மகனையும் அழைக்கும்படி உரைத்தார். அவன் இப்போது இங்கு உதவான்! என்றார் அப்பூதியார். ஐயம் கொண்ட நாவுக்கரசர் உண்மையை உரைக்குமாறு வினவினார். நிகழ்ந்ததை மறைக்க முடியாமல் சிவனடியார்க்கு உண்மையை உரைத்தார் அப்பூதியார். நாவரசர் இறந்து கிடந்த மகனைப் பார்த்தார். நீவிர் செய்தது நன்றாக உள்ளது! என்று சொல்லி, அம்மகனின் உடலைக் கோயிலுக்குள் கொணரச் செய்து, ஒன்று கொலாம் என்ற பதிகம் பாடினார். பாம்பின் நஞ்சு நீங்கி உறக்கத்தினின்று எழுபவனைப் போல் எழுந்தான் மூத்த திருநாவுக்கரசு. நாவரசர் விபூதிச் செல்வத்தை அளித்தார். நாவரசர் உணவு உண்ணக் காலம் தாழ்ந்ததே என்று பெற்றோர் வருந்தினர். அனைவரும் உணவு உண்டருளினர். நாவுக்கரசர் பாடிய பதிகத்தில் அப்பூதியாரின் தொண்டைச் சிறப்பித்துப் பாடிச் சென்றார். அப்பூதியார் அருட்செல்வம் பெற்று வாழ்ந்து மன்றுள் ஆடும் மாமணியைச் சேர்ந்து மகிழ்ந்தார்.

1783. தாண்டவம் புரிய வல்லதம்பிரா னாருக் கன்பர்
ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார்
ஆண்டசீர் அரசின் பாதம் அடைந்தவர் அறியா முன்னே
காண்டகு காதல் கூரக் கலந்தஅன் பினராய் உள்ளார். 

தெளிவுரை : அப்பூதி அடிகள் பெருங்கூத்து இயற்றுவதில் வல்ல சிவபெருமானுக்கு அன்புடையார்; பொருந்திய புகழை உடையவர். அளவில்லாத தவத்தால் மிக்கவர். சிவபெருமானால் ஆட்கொள்ளபட்ட சிறப்பு மிக்க திருநாவுக்கரசு நாயனாரின் திருவடிகளையே சார்பாக அடைந்து அவர் தம்மை அறியாத முன்பே காணத் தக்க காதல் மிக்கதால் உள்ளம் கலந்த அன்புடையவராய் விளங்கினார்.

1784. களவுபொய் காமம் கோபம்முதலிய குற்றங் காய்ந்தார்
வளமிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப்பால் உள்ள
அளவைகள் நிறைகோல் மக்கள் ஆவொடு மேதி மற்றும்
உளவெலாம் அரசின் நாமஞ் சாற்றும்அவ் வொழுகல் ஆற்றார்.

தெளிவுரை : களவு, பொய், காமம், சினம் முதலான எல்லாக் குற்றங்களையும் ஒழித்தவர். வளமை வாய்ந்த இல்லற வாழ்க்கையில் நின்றவர். வீட்டில் உள்ள முகத்தல் நீட்டல் முதலான அளவுக் கருவிகளும் துலைக்கோல் முதலிய அளவைக் கருவிகளும் மைந்தரும் பசுக்களுடனே எருமைகளும் மற்றும் உள்ள எல்லாமும் திருநாவுக்கரசு நாயனாரின் திருப் பெயர் சூட்டி அழைக்கும் அந்த ஒழுக்க நெறியில் நின்றவர்.

1785. வடிவுதாங் காணா ராயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர்
அடிமையுந் தம்பி ரானார் அருளுங்கேட் டவர்நா மத்தால்
படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலா யுள்ள
முடிவிலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில்.

தெளிவுரை : திருவடிவத்தைத் தானும் காணாத வராயினும் நிலைபெற்ற சிறப்பையுடைய திருநாவுக்கரசு நாயனாரின் திருத்தொண்டின் திறத்தையும் இறைவர் வைத்த திருவருளினையும் கேட்டு, அவரது திருப்பெயரால் வழங்கும் திருமடங்களும் தண்ணீர்ப் பந்தல்களும் முதலாக உள்ள முடிவில்லாத அறங்களைச் செய்து அந்நியதியில் அமைந்து வாழ்ந்து வரும் நாளில்,

1786. பொருப்பரையன் மடப்பிடியி னுடன்புணருஞ் சிவக்களிற்றின்
திருப்பழனம் பணிந்துபணி செய்திருநா வுக்கரசர்
ஒருப்படுகா தலிற்பிறவும் உடையவர்தம் பதிவணங்கும்
விருப்பினொடுந் திங்களூர் மருங்குவழி மேவுவார்.

தெளிவுரை : மலையரசனின் மகளான இளம் பிடியைப் போன்ற உமையம்மையாருடன் அணையும் சிவக்களிற்றின் திருப்பழனம் என்னும் தலத்தைப் பணிந்து திருப்பணி செய்யும் மற்றத் திருநாவுக்கரசு தன்னை, உடைய இறைவரின் மற்றத் தலங்களையும் ஒன்றுபட்ட காதலால் வணங்கும் விருப்பினோடும் திங்களூரின் பக்கத்தே வருவாராய்,

1787. அளவில்சனஞ் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய் உறுவேனில் பரிவகற்றிக்
குளநிறைந்த நீர்த்தடம்போல் குளிர்தூங்கும் பரப்பினதாய்
வளமருவும் நிழல்தருதண் ணீர்ப்பந்தர் வந்தணைந்தார்.

தெளிவுரை : அளவற்ற மக்கள் சென்று கொண்டிருத்தலை ஒழியாத நல்ல வழியினது கரையில், அருள் உடைய பெரியோர்களின் உள்ளத்தைப் போல் குளிர்ந்த அருள் தன்மை உடையதாய், வேனிலின் வெம்மையைப் போக்கிக் குளமும் நிறைந்த நீரையுடைய தடமும் போல் குளிர்மை நீங்காது முழுவதும் தங்கும் பரப்பைக் கொண்டதாய் வளம் வாய்ந்த நிழலைத் தரும் தண்ணீர்ப் பந்தலை வந்தடைந்தார்.

1788. வந்தணைந்த வாகீசர் மந்தமா ருதசீதப்
பந்தருடன் அமுதமாந் தண்ணீரும் பார்த்தருளிச்
சிந்தைவியப் புறவருவார் திருநாவுக் கரசெனும்பேர்
சந்தமுற வரைந்ததனை எம்மருங்குந் தாங்கண்டார்.

தெளிவுரை : அங்கு வந்து அடைந்த திருநாவுக்கரசு நாயனார், குளிர்ந்த மென்மையாக வீசும் இளந்தென்றல் காற்றையுடைய குளிர்ந்த பந்தலுடனே அமுதமான தண்ணீரும் பார்த்துத், தம் உள்ளத்தில் வியப்புக் கொள்ள வருபவர், திருநாவுக்கரசு என்னும் பெயரை அழகு பொருந்த எழுதியதை அங்கே எல்லாப் பக்கங்களிலும் தாம் கண்டார்.

1789. இப்பந்தர் இப்பெயரிட் டிங்கமைத்தார் யார்என்றார்க்
கப்பந்தர் அறிந்தார்கள் ஆண்டஅர செனும்பெயரால்
செப்பருஞ்சீர் அப்பூதி அடிகளார் செய்தமைத்தார்
தப்பின்றி எங்குமுள சாலைகுளங் காவென்றார்.

தெளிவுரை : இந்தப் பந்தலுக்கு இந்தப் பெயரைச் சூட்டி அமைத்தவர் யார்? என வினவிய திருநாவுக்கரசு நாயனார்க்கு, அந்தப் பந்தலைப் பற்றி அறிந்த அங்கு இருந்தவர், ஆண்ட அரசு, என்னும் பெயரால் சொல்வதற்கரிய சிறப்புடைய அப்பூதி அடிகளார் என்பவர் செய்து அமைத்தார். தவறுதல் எதுவும் இன்றி இன்னும் இங்ஙனமே சாலை, குளம், சோலை என்னும் இவைகளும் எங்கும் உள்ளன ! என்று இயம்பினர்.

1790. என்றுரைக்க அரசுகேட் டிதற்கென்னோ கருத்தென்று
நின்றவரை நோக்கிஅவர் எவ்விடத்தார் எனவினவத்
துன்றியநூல் மார்பரும்இத் தொல்பதியார் மனையின்கண்
சென்றனர்இப் பொழுததுவும் சேய்த்தன்று நணித்தென்றார்.

தெளிவுரை : என அவர்கள் சொல்ல, நாவுக்கரசர் அதனைக் கேட்டு, இதற்கு என்ன கருத்து ! எனத் தமக்குள் வினவிக்கொண்டு, அங்கிருந்தவர்களைப் பார்த்து, அப்பூதி அடிகளார் எங்கு இருக்கின்றார்? என்று வினவ, பூணூல் பொருந்திய மார்பையுடைய அவரும் இந்தப் பழைய பதியினர். இப்போதுதான் அவர் தம் மனைக்குச் சென்றார். அவரது மனையும் நெடுந் தொலைவில் உள்ளதன்று. பக்கத்தில் தான் உள்ளது ! என்று அவர்கள் கூறினர்.

1791. அங்ககன்று முனிவரும்போய் அப்பூதி அடிகளார்
தங்குமனைக் கடைத்தலைமுன் சார்வாக உள்ளிருந்த
திங்களூர் மறைத்தலைவர் செழுங்கடையில் வந்தடைந்தார்
நங்கள்பிரான் தமர்ஒருவர் எனக்கேட்டு நண்ணினார்.

தெளிவுரை : அந்த இடத்தினின்று நீங்கி முனிவரான நாவுக்கரசரும் போய், அப்பூதி அடிகளார் வாழ்கின்ற இல்லத்தின் முன் கடை வாயிலை அடைந்தார். வீட்டுள் இருந்த திங்களூர் வேதியரான அப்பூதி அடிகள் செழிப்பான தம் மனையின் முன், வாசலில், தம் சிவபெருமானின் அடியவர் வந்துள்ளார் எனக் கூறக் கேட்டு, மனையின் உள் இருந்து முன் வாயிலுக்கு வந்து சேர்ந்தார்.

1792. கடிதணைந்து வாகீசர் கழல்பணிய மற்றவர்தம்
அடிபணியா முன்பணியும் அரசின்எதிர் அந்தணனார்
முடிவில்தவஞ் செய்தேன்கொல் முன்பொழியுங் கருணைபுரி
வடிவுடையீர் என்மனையில் வந்தருளிற் றென்என்றார்.

தெளிவுரை : அப்பூதி அடிகள் விரைவாய் வந்து திருநாவுக்கரசரின் திருவடிளை வணங்குவதற்கு முன்பே தாம் வணங்கும் திருநாவுக்கரசர் முன்பு மறையவரான அப்பூதி அடிகளார், முன்னே பொழிகின்ற அருள் செய்யும் திருவடிவை உடைய பெரியீர் ! முடிவற்ற தவத்தை நான் முன்னம் செய்திருந்தேன் போலும் ! அதனால் என் மனையில் தாங்கள் எழுந்தருளினீர் ! தங்கள் வருகை என்னே அதிசயம் ! என்று வினவினர்.

1793. ஒருகுன்ற வில்லாரைத் திருப்பழனத் துள்ளிறைஞ்சி
வருகின்றோம் வழிக்கரையில் நீர்வைத்த வாய்ந்தவளம்
தருகின்ற நிழல்தண்ணீர்ப் பந்தருங்கண் டத்தகைமை
புரிகின்ற அறம்பிறவும் கேட்டணைந்தோம் எனப்புகல்வார்.

தெளிவுரை : ஒப்பில்லாத பெரிய மேரு மலையை வில்லாக உடைய சிவபெருமானைத் திருப்பழனம் என்னும் தலத்தில் வணங்கிக் கொண்டு வருகின்றோம். வரும் வழியின் கரையிலே நீவிர் அமைத்திருக்கின்ற வாய்ப்புடைய வளத்தைத் தருகின்ற நிழல் பொருந்திய தண்ணீர்ப் பந்தரைக் கண்டும் அத்தன்மையால் செய்கின்ற அறங்கள் பிறவற்றையும் கேட்டும் இங்கு வந்து சேர்ந்தோம் ! எனப் புகன்றவர் மேலும்,

1794. ஆறணியுஞ் சடைமுடியார் அடியார்க்கு நீர்வைத்த
ஈறில்பெருந் தண்ணீர்ப்பந் தரில்நும்பேர் எழுதாதே
வேறொருபேர் முன்னெழுத வேண்டியகா ரணம்என்கொல்
கூறும்என எதிர்மொழிந்தார் கோதில்மொழிக் கொற்றவனார்.

தெளிவுரை : கங்கையை அணிந்த சடையையுடைய இறைவரின் அடியார்களுக்காக நீவிர் அமைத்த முடிவற்ற பெருமை கொண்ட தண்ணீர்ப் பந்தலில் உம் பெயரை எழுதாமல் வேறு ஒரு பெயரை முன் எழுத வேண்டிய காரணம் என்ன ? கூறுவீராக ! எனக் குற்றம் அற்ற சொல்லாக எதிர் மொழிந்தார்.

1795. நின்றமறை யோர்கேளா நிலையழிந்த சிந்தையராய்
நன்றருளிச் செய்திலீர் நாணில்அமண் பதகருடன்
ஒன்றியமன் னவன்சூட்சி திருத்தொண்டின் உறைப்பாலே
வென்றவர்தந் திருப்பேரோ வேறொருபேர் எனவெகுள்வார்.

தெளிவுரை : அங்கே நின்ற அப்பூதி அடிகளார் நாவுக்கரசர் உரைத்ததைக் கேட்டு, உள்ளத்தின் நிலை அழிந்தவராகி, நீவிர் நல்ல மொழிகளைக் கூறவில்லை ! நாணம் இல்லாத சமணர்களான சண்டாளர்களுடன் சேர்ந்த மன்னன் செய்த சூழ்ச்சிகளை எல்லாம் வென்ற திருத்தொண்டின் உறைப்பையே துணையாகக் கொண்டு வென்ற அவரது திருப்பெயரோ வேறொரு பேர் எனக் கூறத்தக்கது ? எனச் சினம் கொள்வாராகி,

1796. நம்மையுடை யவர்கழற்கீழ் நயந்ததிருத் தொண்டாலே
இம்மையிலும் பிழைப்பதென என்போல்வா ருந்தெளியச்
செம்மைபுரி திருநாவுக் கரசர்திருப் பெயரெழுத
வெம்மைமொழி யான்கேட்க விளம்பினீர் எனவிளம்பி.

தெளிவுரை : நம்மை உடையவரான சிவபெருமானின் திருவடிகளின் கீழ்ச் செய்யும் திருத் தொண்டினால் இம்மையிலும் நாம் உறுதியைப் பெறுவது என்று எம்மைப் போன்றவரும் தெளியுமாறு செம்மை மேற்கொண்ட திருநாவுக்கரசரின் திருப்பெயரை நான் எழுதிடவும் கொடிய சொற்களை யான் கேட்கும்படி கூறினீர் ! எனக் கூறி,

1797. பொங்குகடல் கல்மிதப்பில் போந்தேறும் அவர்பெருமை
அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் யாருளரே
மங்கலமாந் திருவேடத் துடன்நின்றிவ் வகைமொழிந்தீர்
எங்குறைவீர் நீர்தாம்யார் இயம்பும்என இயம்பினார்.

தெளிவுரை : பொங்கும் கடலைக், கல்லினையே மிதவையாகக் கொண்டு கரையேறிய அவர் பெருமையைச் சிவபெருமானது புவனத்தில் அறியாதவர் எவரேனும் உள்ளனரோ? மங்கலமான திருக்கோலத்துடன் நின்றும் இவ்வாறு உரைத்தீர் ! நீவீர் எவ்விடத்தில் உள்ளவர் ? நீர் தாம் யார் ? சொல்லுக ! என இயம்பினர்.

1798. திருமறையோர் அதுமொழியத் திருநாவுக் கரசர்அவர்
பெருமையறிந் துரைசெய்வார் பிறதுறையி னின்றேற
அருளுபெருஞ் சூலையினால் ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும்உணர் வில்லாத சிறுமையேன் யான்என்றார்.

தெளிவுரை : திருவுடைய மறையவரான அப்பூதி அடிகளார் அவ்வாறு உரைக்கக் கேட்டு அவர் பெருமையை அறிந்து நாவுக்கரசர் விடை சொல்வாராய், மற்றச் சமயத் துறையினின்று ஏறும் பொருட்டு அருள் செய்து, பெருஞ்சூலை நோயை அளித்து இறைவர் ஆட்கொள்ள அடைந்து உய்திபெற்ற தெளிவு கொண்ட உணர்வில்லாத சிறுமையினை உடையேன் யான் ! எனக் கூறினார்.

1799. அரசறிய உரைசெய்ய அப்பூதி அடிகள்தாம்
கரகமல மிசைகுவியக் கண்ணருவி பொழிந்திழிய
உரைகுழறி உடம்பெல்லாம் உரோமபுள கம்பொலியத்
தரையின்மிசை வீழ்ந்தவர்தஞ் சரணகம லம்பூண்டார்.

தெளிவுரை : இவ்வாறு நாவுக்கரசர் அப்பூதி அடிகள் அறிய உரைத்தருளிச் செய்யவே, உண்மையை அறிந்து கொண்ட அப்பூதி அடிகள், கைம் மலர்கள் தாமே தலை மீது குவிந்து கொள்ளவும் கண்களினின்றும் நீர் அருவி போல் பாய்ந்து வழியவும், சொல் தடுமாறிடவும், உடல் முழுவதும் மயிர்ப் புளகத்தை அடைந்து நிலத்தில் உடல் பொருந்த விழுந்து அவருடைய திருவடித் தாமரைகளைத் தலையில் பொருந்தப் பூண்டார்.

1800. மற்றவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்தருள
அற்றவர்கள் அருநிதியம் பெற்றார்போல் அருமறையோர்
முற்றவுளங் களிகூர முன்னின்று கூத்தாடி
உற்றவிருப் புடன்சூழ ஓடினார் பாடினார்.

தெளிவுரை : அங்ஙனம் விழுந்த திருவடி பூண்ட அப்பூதி அடிகளைத் திருநாவுக்கரசர் தாமும் எதிர் வணங்கி, அவரை எடுத்தருளவே அரிய வேதியரான அப்பூதியார் வறியவரானவர் தேடிய பெரிய நிதியத்தைப் பெற்றதைப் போல உள்ளம் முழுவதும் பெருமகிழ்ச்சி கூர்ந்து அவர் முன்பு நின்று ஆனந்தக் கூத்தாடி மிக்க விருப்பத்துடன் அவரைச் சூழ்ந்து ஓடினார்; பாடினார்.

1801. மூண்டபெரு மகிழ்ச்சியினால் முன்செய்வ தறியாதே
ஈண்டமனை அகத்தெய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்டஅர செழுந்தருளும் ஓகைஉரைத் தார்வமுறப்
பூண்டபெருஞ் சுற்றமெலாங் கொடுமீளப் புறப்பட்டார்.

தெளிவுரை : பெரிய மகிழ்ச்சி மூண்டதால் முன்னர்ச் செய்யக் கூடியது இது என்பதையும் அறியாதவராய், இல்லத்துக்குள் விரைந்து போய், மனைவியார்க்கும் மக்களுக்கும் வீட்டில் உள்ள மற்றச் சுற்றத்தார்க்கும் ஆண்ட அரசுகள் வந்திருக்கும் செய்தியை உரைத்து, ஆசை மிக அன்பு பூண்ட அப்பெருஞ் சுற்றத்தார் எல்லாரையும் தம்முடன் அழைத்துக் கொண்டு வெளியில் வந்து,

1802. மனைவியா ருடன்மக்கள் மற்றுமுள்ள சுற்றத்தோர்
அனைவரையுங் கொண்டிறைஞ்சி ஆராத காதலுடன்
முனைவரைஉள் ளெழுந்தருளு வித்தவர்தாள் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கள்மேல் தெளித்துள்ளும் பூரித்தார்.

தெளிவுரை : மனைவியாருடன் மக்களும் மற்றும் உள்ள உறவினர்களும் முதலான எல்லாரையும் கொண்டு வந்து வணங்கிக் குறையாத ஆசையுடன் தலைவரான நாவுக்கரசரை முன்னே எழுந்தருளச் செய்து, அவருடைய திருவடிகளை விளக்கும் மலர்கள் இட்ட புனித நீரைத் தங்கள் தலைமீது தெளித்துக் கொண்டு அதனை உள்ளேயும் நிறைத்தார் (பருகினார்).

1803. ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பினுடன்
வாசநிறை திருநீற்றுக் காப்பேந்தி மனந்தழைப்பத்
தேசம்உய்ய வந்தவரைத் திருவமுது செய்விக்கும்
நேசம்உற விண்ணப்பம் செயஅவரும் அதுநேர்ந்தார்.

தெளிவுரை : தக்க இருக்கையில் நாவுக்கரசரை அமரும்படி செய்து, செய்ய வேண்டிய அருச்சனை தூப தீபம் முதலியவற்றை விதிப்படி விரும்பிச்  செய்து, மிக்க விருப்புடனே மணம் உடைய திருநீற்றுக் காப்பு நிறைந்த திருநீற்று மடக்கை அவர்க்கு உபசாரமாக, அவர்க்கு முன் ஏந்தி, மனம் தழைத்து ஓங்க, உலகம் உய்யுமாறு திருவவதாரம் செய்த நாயனாரைத் திருவமுது செய்விக்கும் அன்புமிக அவரிடம் வேண்டிக் கொண்டனர். அவரும் அதற்குச் சம்மதித்தார்.

1804. செய்தவர் இசைந்த போது திருமனை யாரை நோக்கி
எய்திய பேறு நம்பால் இருந்தவா றென்னே என்று
மைதிகழ் மிடற்றி னான்தன் அருளினால் வந்த தென்றே
உய்தும்என் றுவந்து கொண்டு திருவமு தாக்கல் உற்றார்.

தெளிவுரை : தவத்தில் பெரிய திருநாவுக்கரசர் உணவு கொள்ளச் சம்மதித்தபோது, அப்பூதி அடிகள் தன் மனைவியாரைப் பார்த்து, நம்மிடத்துப் பொருந்திய பேறு நம்மிடம் இருந்தவாறுதான் என்னே ! எனச் சொல்லி மேலும் கருமையுடைய திருவருளால் திருக்கண்டத்தையுடைய சிவபெருமானின் திருவருளால் இது வந்தது என்று போற்றி நாம் உய்வோம் ! என்று தமக்குள் மகிழ்ந்து எண்ணிக் கொண்டு திருவமுது அமைக்கத் தொடங்கினார்,

1805. தூயநற் கறிக ளான அறுவகைச் சுவையால் ஆக்கி
ஆயஇன் னமுதும் ஆக்கி அமுதுசெய் தருளத் தங்கள்
சேயவர் தம்மில் மூத்த திருநாவுக் கரசை வாழை
மேயபொற் குருத்துக் கொண்டு வாஎன விரைந்து விட்டார்.

தெளிவுரை : தூய்மையான நல்ல கறி வகைகள் ஆறு சுவைகளும் பொருந்துமாறு சமைத்து, இனியதான அமுதையும் ஆக்கி, தம் மைந்தருள் மூத்த திருநாவுக்கரசைப் பார்த்து, வாழையின் நல்ல ஒரு குருத்தை அரிந்து கொண்டு வா! என்று விரைவுபடுத்தி அனுப்பி வைத்தார்.

1806. நல்லதாய் தந்தை ஏவ நான்இது செயப்பெற் றேன்என்
றொல்லையில் அணைந்து தோட்டத் துள்புக்குப் பெரிய வாழை
மல்லவங் குருத்தை ஈரும் பொழுதினில் வாள ராஒன்
றல்லல்உற் றழுங்கிச் சோர அங்கையில் தீண்டிற் றன்றே.

தெளிவுரை : நல்ல தாயும் தந்தையும் என்ற இருவரும் பணிக்க, அதன்படி நான் இந்தப் பணியைச் செய்யும் பேற்றைப் பெற்றேன் ! என்று மூத்த திருநாவுக்கரசு உள்ளம் மகிழ்ந்து, மிகவும் விரைந்து போய்த் தோட்டத்திற்க்குள் புகுந்து, பெரிய வாழையின் செழித்த அழகிய குருத்தை அரியும்போது ஒளியுடைய பாம்பு ஒன்று துன்பப்பட்டு மயங்கி விழும்படி அவனது உள்ளங் கையில் தீண்டியது.

1807. கையினிற் கவர்ந்து சுற்றிக் கண்ணெரி காந்து கின்ற
பையர வுதறி வீழ்த்துப் பதைப்புடன் பாந்தள் பற்றும்
வெய்யவே கத்தால் வீழா முன்னம்வே கத்தால் எய்திக்
கொய்தஇக் குருத்தைச் சென்று கொடுப்பன்என் றோடி வந்தான்.

தெளிவுரை : கையில் தீண்டி அக் கையையே சுற்றிக் கொண்டு கண்களில் தீயை வீசுகின்ற நச்சுப் பையையுடைய அந்தப் பாம்பைக் கையை உதறி வீழ்த்திவிட்டு, மனப் பதைப்புடனே பாம்பு தீண்டியதால் உண்டானகொடிய வேகத்தால் நான் கீழே விழுவதற்கு முன்பே மிக வேகமாய்ச் சென்று அரிந்த இந்த வாழைக் குருத்தைத் தருவேன் என்று தீர்மானித்து ஓடி வந்தான்.

1808. பொருந்திய விடவே கத்தில் போதுவான் வேகம் முந்த
வருந்தியே அணையும் போழ்து மாசுணங் கவர்ந்த தியார்க்கும்
அருந்தவர் அமுது செய்யத் தாழ்க்கயான் அறையேன் என்று
திருந்திய கருத்தி னோடுஞ் செழுமனை சென்று புக்கான்.

தெளிவுரை : சேர்ந்த விடத்தின் வேகத்தைவிட முன் கூறியவாறு ஓடிச் சென்ற அவனது வேகம் முந்தும்படி வருத்தத்துடன் சேரும்போது, பாம்பு தீண்டியதை அருந்தவரான திருநாவுக்கரசர் அமுது செய்வதற்கு இடையூறாக ஆகும்படி நான் இதனை யாரிடமும் சொல்லமாட்டேன் என்று மனத்தில் எண்ணித் திருத்தமுற்ற கருத்தினோடு செழிப்புடைய இல்லத்திற்குள் புகுந்தனனாய்,

1809. எரிவிடம் முறையே ஏறித் தலைக்கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீந்து
விரியுரை குழறி ஆவி விடக்கொண்டு மயங்கி வீழ்வான்
பரிகலக் குருத்தைத் தாயார் பால்வைத்துப் படிமேல் வீழ்ந்தான்.

தெளிவுரை : அழிக்கும் நஞ்சானது முறையே மேல் ஏறித் தலைக்கொண்ட ஏழாம் வேகத்தை அடைந்த நிலையைப் புறத் தோற்றத்தினும் தெரியும்படி பற்களும் கண்களும் மேனியும் கருகித் தீய்ந்து, விரிவாகப் பேசும் சொற்கள் தடுமாறி உயிர் விடும் நிலை ஏற்படும் நிலை வரவும், அதை விடாமல் தாங்கிக் கொண்டு மயங்கி வீழ்கின்ற மகன் உணவு உண்ணுவதற்கான இலையான வாழைக் குருத்தைத் தாயாரிடம் வைத்து நிலத்தில் விழுந்தான்.

1810. தளர்ந்துவீழ் மகனைக் கண்டு தாயருந் தந்தை யாரும்
உளம்பதைத் துற்று நோக்கி உதிரஞ்சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியுங் கண்டு விடத்தினால் வீந்தான் என்று
துளங்குதல் இன்றித் தொண்டர் அமுதுசெய் வதற்குச் சூழ்வார்.

தெளிவுரை : தாயாரும் தந்தையாரும் மயங்கி விழுகின்ற மகனைப் பார்த்து, உள்ளம் பதைப்பை அடைந்து காரணத்தை அறியக் கூர்ந்து நோக்கி, இரத்தம் வடிந்த வடிவத்தையும் மேனியில் விளங்கிய மற்றக் குறிகளையும் கண்டு நஞ்சினால் இறந்தான் எனத் துணிந்து, சற்றும் மன நடுக்கம் இல்லாமல் அடியவர் அமுது செய்வதற்கேற்ற உபாயத்தை ஆராய்பவராய்,

1811. பெறலரும் புதல்வன் தன்னைப் பாயினுள் பெய்து மூடிப்
புறமனை முன்றிற் பாங்கோர் புடையினில் மறைத்து வைத்தே
அறஇது தெரியா வண்ணம் அமுதுசெய் விப்போம் என்று
விறலுடைத் தொண்ட னார்பால் விருப்பொடு விரைந்து வந்தார்.

தெளிவுரை : (அவர்கள் இருவரும்) பெறுவதற்கரிய மைந்தனைப் பாயுள் வைத்து மூடி, மனையின் வெளி முற்றத்தில் ஒரு பக்கத்தில் மறைத்து வைத்து, இது சிறிதும் தெரியாத படி அவரை நாம் அமுது செய்விப்போமாக ! எனத் துணிந்து, உறுதி கொண்டு, ஆற்றல் உடைய திருநாவுக்கரசரை நோக்கி விருப்போடும் விரைந்து வந்தனர்.

1812. கடிதுவந் தமுது செய்யக் காலந்தாழ்க் கின்ற தென்றே
அடிசிலும் கறியும் எல்லாம் அழகுற அணைய வைத்துப்
படியில்சீர்த் தொண்ட னார்முன் பணிந்தெழுந் தமுது செய்தெங்
குடிமுழு துய்யக் கொள்வீர் என்றவர் கூறக் கேட்டு.

தெளிவுரை : விரைவாய் வந்து, உணவு உண்ணக் காலம் தாழ்க்கின்றது என எண்ணிக் கொண்டு, அடிசிலும் கறிகளும் முதலான எல்லாவற்றையும் அழகு பெற ஒழுங்காய்ப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அதன்பின், ஒப்பில்லாத சிறப்பையுடைய தொண்டர் பெருமான் திருமுன்பு விழுந்து பணிந்து எழுந்து நின்று, இங்கு குடி முழுவதும் உய்யுமாறு அமுது செய்தருளல் வேண்டும் என்று அவர்கள் உரைத்தனர். அதை நாவுக்கரசர் கேட்டு,

1813. அருந்தவர் எழுந்து செய்ய அடியிணை விளக்கி வேறோர்
திருந்தும்ஆ சனத்தில் ஏறிப் பரிகலந் திருத்து முன்னர்
இருந்துவெண் ணீறு சாத்தி இயல்புடை இருவ ருக்கும்
பொருந்திய நீறு நல்கிப் புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்.

தெளிவுரை : அரிய தவத்தவரான அப்பர் செம்மையான தம் அடிகளை விளங்கிக் கொண்டு வேறே ஒரு திருத்திய இருக்கையில் அமர்ந்து, அவர்கள் உண்ணும் இலையைத் திருத்தி இடுவதற்கு முன்னம், அந்த ஆசனத்தில் அமர்ந்து தாம் வெண்ணீற்றை அணிந்து கொண்டு இயல்பின் நின்ற அப்பூதியாருக்கும் அவருடைய மனைவியாருக்கும் பொருந்திய திருநீற்றை அளித்து, மைந்தருக்கும் அத்திருநீற்றை அளிக்கும்போது

1814. ஆதிநான் மறைநூல் வாய்மை அப்பூதி யாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த சேயையுங் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை
யாதும்ஒன் றுரையார் இப்போ திங்கவன் உதவான் என்றார்.

தெளிவுரை : பழைய நான்மறைகளிலும் நூல்களிலும் பயின்ற வாய்மையுடைய ஒழுக்கமுடைய அப்பூதி அடிகளைப் பார்த்து அன்பால் இவர்க்கு மூத்த பிள்ளையையும் முன்னே வெண்ணீறு சாத்துதற்குக் காட்டுக ! என்று உரைத்தார், நிகழ்ந்த செயல் ஒன்றையும் சிறிதும் வெளிப்பட உரையாதவராய் இப்போது இங்கு அவன் உதவான் ! என உரைத்தனர்.

1815. அவ்வுரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திருஉள் ளத்தோர் தடுமாற்றஞ் சேர நோக்கி
இவ்வுரை பொறாதென் உள்ளம் என்செய்தான் இதற்கொன் றுண்டால்
மெய்விரித் துரையும் என்ன விளம்புவார் விதிர்ப்புற் றஞ்சி.

தெளிவுரை : அத்தகைய சொல்லைக் கேட்ட அளவில் அன்பரான நாவுக்கரசரின் உள்ளத்தில் ஒரு தடுமாற்றம் வந்து சேர, அதனை நோக்கி, இந்தச் சொல்லை என் உள்ளம் பொறுத்துக் கொள்ளாது ! அவன் என்ன செய்தனன்? இதற்கு உள்ளுறை ஒன்று உண்டு. உண்மையைக் கூறுக ! என்று அரசு உரைக்கவும், அவர்கள் உடல் நடுக்கம் உற்றனர். உற்று,

1816. பெரியவர் அமுது செய்யும் பேறிது பிழைக்க என்னோ
வருவதென் றுரையா ரேனும் மாதவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டுஞ் சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க் குற்றது பகர்ந்தார் அன்றே.

தெளிவுரை : பெரியவரான நாவுக்கரசர் உணவு உண்டருளும் இப்பெரும் பேறு கிடைக்காது பிழைக்குமாறு இவ்வாறு வருவதும் என்னோ ! என்று எண்ணி உரையார் ஆயினும், பெருந் தவத்தவரான அவர் வினவும்போது வாய்மையை உள்ளவாறு தெரியும்படியாகச் சொல்லிவிட வேண்டும் என்ற சீலத்தால் உள்ளம் உடைந்து வருந்தித் துயரத்துடன் வணங்கி மகனுக்கு நேரிட்டதனை உள்ளவாறு அப்போதே உரைத்தனர்.

1817. நாவினுக் கரசர் கேளா நன்றுநீர் மொழிந்த வண்ணம்
யாவர்இத் தன்மை செய்தார் என்றுமுன் எழுந்து சென்றே
ஆவிதீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம்
பாவிசைப் பதிகம் பாடிப் பணிவிடம் பாற்று வித்தார்.

தெளிவுரை : அவர்கள் உரைத்ததைக் கேட்ட நாவுக்கரசர், நீங்கள் கூறியவண்ணம் நன்றாய் உள்ளது ! இவ்வாறு செய்தவர் உலகத்தில் யார் இருக்கின்றனர்? எனக் கூறி, முன்னாக எழுந்து சென்று, உயிர் நீங்கிய அந்த மைந்தனின் பிணத்தைப் பெருமை யுடையவரான சிவபெருமான் அருள் செய்யுமாறு பாவின் இசையுடைய திருப்பதிகத்தைப் பாடிப் பாம்பின் விடத்தைப் போக்கியருளினார்.

1818. தீவிடம் நீங்க உய்ந்த திருமறை யவர்தஞ் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி விரைந்தெழு வானைப் போன்று
சேவுகைத் தவர்ஆட் கொண்ட திருநாவுக் கரசர் செய்ய
பூவடி வணங்கக் கண்டு புனிதநீ றளித்தார் அன்றே.

தெளிவுரை : தீயைப் போன்ற நஞ்சு இங்ஙனம் நீக்கப் பெற்று ஊய்தி அடைந்த அந்தணரான அப்பூதியாரின் மைந்தனும், பொருந்திய உறக்கத்தினின்றும் நீங்கி விரைவாய் எழுபவனைப் போலக் காளைக் கொடியை உயர்த்திய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட நாவுக்கரசரின் செம்மையுடைய மலர் போன்ற திருவடிகளை வணங்க, அதைப் பார்த்து நாவுக்கரசர் புனிதமான திருநீற்றை அவனுக்கு அளித்தார்.

1819. பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின்
நெறியினைப் போற்றி வாழ்ந்தார் நின்றஅப் பயந்தார் தாங்கள்
அறிவரும் பெருமை அன்பர் அமுதுசெய் தருளு தற்குச்
சிறிதிடை யூறு செய்தான் இவனென்று சிந்தை நொந்தார்.

தெளிவுரை : பிரிந்த உயிரைத் திரும்பவும் பெற்ற பிள்ளையைக் காண்பவர் எல்லாம் தெய்வத் திருத்தொண்டின் செம்மையான நெறிச்சிறப்பைப் போற்றி வாழ்வை அடைந்தனர். அங்கு நின்ற அப்பெற்றோர்கள், அறிதற்கு அரிய பெருமையையுடைய அன்பர் திருவமுது செய்வதற்கு இவன் சிறிது இடையூறு செய்தான் ! என்று உள்ளம் நொந்தனர்.

1820. ஆங்கவர் வாட்டந் தன்னை அறிந்துசொல் அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி அமுதுசெய் தருள வுற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில்மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடுந் தகுவன சமைத்துச் சார்வார்.

தெளிவுரை : அங்ஙனம் அவர்களின் மனவாட்டத்தை அறிந்து, அதனால், திருநாவுக்கரசர் அவர்களுடன் ஓங்கிய இல்லத்தினை அடைந்து, உண்டருளும் பாங்குடன் இருக்க, முப்புரிநூல் மார்பையுடைய அப்பூதியடிகளும் மேற்கொண்ட பெரு மகிழ்ச்சியுடன், அதற்குச் செய்யத் தக்கவற்றை யெல்லாம் அமைத்துச் சார்வார் ஆகி,

1821. புகழ்ந்தகோ மயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித்
திகழ்ந்தவான் சுதையும் போக்கிச் சிறப்புடைத் தீபம் ஏற்றி
நிகழ்ந்தஅக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம்பட மன்னு வித்தார்.

தெளிவுரை : புகழும் கோமயம் கலந்த நீரால் நிலத்தை விளங்க மெழுகி, விளங்கும் வெண் சுண்ணத்தையும் கோலம் பெற இட்டு, சிறப்பான திருவிளக்கை ஏற்றிச் சரித நிகழ்ச்சிக்குக் கருவியாக இருந்த அந்த வாழையின் நீண்ட குருத்தை விரித்து அதனை நீரில் கழுவி, அரிந்த பக்கம் வலப் பக்கமாய் இருக்குமாறு அதை முறைமையாய் இட்டவராகி,

1822. திருந்திய வாச நன்னீர் அளித்திடத் திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மைப் பிள்ளைக ளுடனே நோக்கி
அரும்புதல் வர்களும் நீரும் அமுதுசெய் வீர்இங் கென்ன
விரும்பிய உள்ளத் தோடு மேலவர் ஏவல் செய்வார்.

தெளிவுரை : திருத்தமான மணமுடைய நல்ல நீரைக் கொடுக்கத் திருக்கரத்தைக் கழுவும் பெருந்தவரான திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளைப் பிள்ளைகளுடன் பார்த்து, அரிய மைந்தர்களும் நீவிரும் இங்குப் பக்கத்தில் அமர்ந்து உணவு உண்பீராக ! எனக் கூற, விரும்பிய உள்ளத்துடன் மேலவரான அவர் பணித்தபடி செய்பவராய்,

1823. மைந்தரும் மறையோர் தாமும் மருங்கிருந் தமுது செய்யச்
சிந்தைமிக் கில்ல மாதர்திருவமு தெடுத்து நல்கக்
கொந்தவிழ் கொன்றை வேணிக் கூத்தனார் அடியா ரோடும்
அந்தமி ழாளி யார்அங் கமுதுசெய் தருளி னாரே.

தெளிவுரை : மைந்தரும் மறையவரான அப்பூதி அடிகளும் பக்கத்தில் இருந்து உணவு உண்ண, மனமகிழ்ச்சியுடன் மனைவியார் திருவமுது எடுத்துப் படைக்கக் கொத்தாய் மலர்ந்த கொன்றை மலரை அணிந்த சடையையுடைய அருட் பெருங்கூத்தான சிவபெருமானின் அடியார்களோடும் அழகிய தமிழ்ச் சிங்கத்தைப் போன்ற திருநாவுக்கரசு நாயனார் அங்கு உணவு உண்டருளினார்.

1824. மாதவ மறையோர் செல்வ மனையிடை அமுது செய்து
காதல்நண் பளித்துப் பன்னாள் கலந்துடன் இருந்த பின்றை
மேதகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர்
நாதர்தம் பாதஞ் சேர்ந்து நற்றமிழ்ப் பதிகஞ் செய்தார்.

தெளிவுரை : மாதவம் செய்த மறையவரான அப்பூதியாரின் செல்வம் பொருந்திய இல்லத்தில் இங்ஙனம் உணவு உண்டருளி, அன்பு பெருகிய நட்பின் திறத்தை அளித்தருளிப் பல நாட்கள் மனங் கலந்த ஒருமையுடன் அங்கு இருந்த பின்பு, மேன்மை கொண்ட நாவுக்கரசர் விளக்கம் பொருந்திய திருப்பழனம் என்ற மூதூரில் அமர்ந்தருளிய இறைவரின் திருவடிகளைச் சார்ந்து நல்ல தமிழ்ப் பதிகத்தை அருளிச் செய்து,

1825. அப்பூதி யடிக ளார்தம் அடிமையைச் சிறப்பித் தான்ற
மெய்ப்பூதி அணிந்தார் தம்மை விரும்புசொன் மாலை வேய்ந்த
இப்பூதி பெற்ற நல்லோர் எல்லையில் அன்பால் என்றும்
செப்பூதி யங்கைக் கொண்டார் திருநாவுக் கரசர் பாதம்.

தெளிவுரை : அப்பூதி அடிகளாரின் திருத்தொண்டின் பெருமையினைச் சிறப்பித்துப் பெருமையுடைய திருமேனியில் திருநீற்றை அணிந்த இறைவரை விரும்பும் சொன் மாலையினைத் தொடுத்துச் சாத்திய இந்தப் பெருஞ் செல்வத்தைப் பெறும் பேறு பெற்ற நல்லவரான அந்த அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரின் திருவடிகளே பொருள் என்று கொண்டு, எல்லையற்ற அன்பினால் எப்போதும் எந்நாளும் கூறித் துதிக்கின்ற இந்த ஊதியத்தைக் கையில் பெற்றார்.

1826. இவ்வகை அரசின் நாமம் ஏத்திஎப் பொருளும் நாளும்
அவ்வருந் தவர்பொற் றாளே எனவுணர்ந் தடைவார் செல்லும்
செவ்விய நெறிய தாகத் திருத்தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியங் கண்ணாள் பங்கர் நற்கழல் நண்ணி னாரே

தெளிவுரை : இவ்வகையாய் அவர் திருநாவுக்கரசரின் திருப்பெயரைத் துதித்துக் கொண்டு அடைய வேண்டிய பொருள் எல்லாம் எந்நாளும் அந்தத் தவத்தவரின் அரிய திருவடிகளேயாம் எனவுணர்ந்து, செம்மையான வழி அதுவே யாம் எனக் கொண்டு தில்லை அம்பலத்தில் ஆடுகின்ற மான் போன்ற அழகிய கண்களை யுடைய உமையம்மையாரின் பாகத்தை உடையவரின் நல்ல பொற் பாதங்களை அடைந்தார்.

1827. மான்மறிக் கையர் பொற்றாள் வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மைஅப் பூதி யாராம் வேதியர் பாதம் போற்றிக்
கான்மலர்க் கமல வாவிக் கழனிசூழ் சாத்த மங்கை
நான்மறை நீல நக்கர் திருத்தொழில் நவிலல் உற்றேன்.

தெளிவுரை : மான் கன்றைக் கையில் கொண்ட சிவபெருமானின் பொன்னடிகளைத் திருநாவுக்கரசரின் அடைவாலே பெற்ற மேன்மையுடைய அப்பூதியார் என்னும் அந்தணர் பாதத்தைப் போற்றி, அதன் துணையால் காடு போலத் தாமரைகளையுடைய பொய்கைகள் சூழ்ந்த திருச் சாத்த மங்கையில் தோன்றியருளிய நான்மறையில் வல்ல திருநீலநக்கர் செய்த திருத் தொண்டினைச் சொல்லப் புகுகின்றேன்.

அப்பூதி அடிகள் நாயனார் புராணம் முற்றுப் பெற்றது.

32. திருநீலநக்க நாயனார் புராணம்

காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ளது சாத்தமங்கை என்ற ஊர். அவ்வூரில் அந்தணர் அதிகமாக வாழ்ந்தனர். அந்தணர் வாழ்ந்த அவ்வூரில் தான் திருநீலநக்கர் தோன்றினார். வேதத்தின் உட்பொருளாவது சிவபெருமானை வணங்குவதும் அவருடைய அடியாரை வணங்குவதுமே! என அவர் அறிந்தார். எனவே சிவபெருமானுக்குப் பூசை செய்வதும் அடியாரை உபசரிப்பதும் ஆகிய இரண்டையும் அவர் மேற்கொண்டிருந்தார். அந்தவூரில் அயவந்தி என்ற கோயில் ஒன்று இருந்தது. அங்குப் பூசை செய்ய அவர் தம் மனைவியுடன் சென்றார். பூசை செய்தார். எனினும் அவரது மனம் நிறைவு பெறவில்லை. கோயிலை வலமாக வந்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி இருந்தார். ஒரு சிலந்திப் பூச்சி சிவலிங்கத்தின் மேல் விழுந்தது. அதனை அவருடைய மனைவியார் பார்த்தார். குழந்தை மீது விழுந்த சிலந்தியைத் துரத்தும் தாய்போல் விரைந்து சென்று சிலந்தியை வாயால் ஊதித் துமிந்தார். (துமிதல்-காற்று வாய் நீருடன் செல்லுமாறு ஊதுதல்) அச்செயலைக் கண்ட நாயனார் மனம் துடித்தார். அறிவற்றவளே! நீ இவ்வாறு ஏன் செய்தாய்? என்று சினந்தார். அந்த அம்மையார் இறைவர் மேனிமீது சிலந்தி விழுந்தது. அதனால் இவ்வாறு செய்தேன் என்றார். நீலநக்கர் அவரது செயலைத் தவறாக எடுத்துக் கொண்டு உன்னுடன் வாழேன்; என்றார். மனவருத்தத்துடன் அவர் தாம் மட்டும் வீட்டுக்குச் சென்றார். நாயனாரின் மனைவியார் கோயிலிலேயே படுத்துறங்கினார். அந்த இரவு நாயனாரின் கனவில் இறைவர் தோன்றிச் சிலந்தி விழுந்த பக்கத்தில் உன் மனைவியார் ஊதித் துரத்தினார். அந்தப் பக்கம் தவிர மற்றப் பக்கங்களில் எல்லாம் கொப்புளங்கள் உண்டாகியுள்ளன பார்! என்றார். அதனால் தம் மனைவியாரின் செயல் தவறானதாக இல்லாததை உணர்ந்து மகிழ்ந்தார். ஞானசம்பந்தரைப் பற்றி அவர் அறிந்தார். அவரைக் காண வேண்டும் என்ற அவா எழுந்தது. ஒருகால் ஞானசம்பந்தர் அந்த ஊருக்கு வந்தார். பெரிதும் மகிழ்ந்து ஞானசம்பந்தரை வரவேற்றார். அவருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவருடைய மனைவியாரும் வந்தனர். அவர்களையும் தம் இல்லத்திலேயே வேதிகைப் பக்கத்தில் தங்கி இருக்கச் செய்தார். ஞானசம்பந்தரைத் தம் வீட்டில் விருத்தருத்தி உபசரித்தார். பின் அவருடன் செல்ல விரும்பினார். ஆயினும் ஞானசம்பந்தர் அதற்கு இசையவில்லை. ஆதலால் தம் ஊரிலேயே இருந்தார். ஞானசம்பந்தருக்குத் திருமணம் நிகழ்ந்த போது அம்மணத்துக்குச் சென்று ஞானசம்பந்தருடன் பிறவா நிலையை எய்தினார்.

1828. பூத்த பங்கயப் பொகுட்டின்மேற் பொருகயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடுசூழ் காவிரி நாட்டுச்
சாத்த மங்கைஎன் றுலகெலாம் புகழ்வுறுந் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு.

தெளிவுரை : பூத்த தாமரையின் கொட்டையின் மீது கயல் மீன்கள் துள்ளுகின்ற விளைந்து முதிர்ந்த நெற்பயிர்களான காடு சூழ்கின்ற காவிரி பாயும் சோழ நாட்டில், மங்கலங்கள் வாய்க்கப் பெற்ற அந்தணர்களுக்கு இடமான தலைமையுடைய பதியின் சிறப்பு திருச்சாத்த மங்கையில் அமைவது என்று உலகம் எல்லாம் புகழ்கின்ற தகுதியுடையதாகும்.

1829. நன்மை சாலும்அப் பதியிடை நறுநுதல் மடவார்
மென்ம லர்த்தடம் படியமற் றவருடன் விரவி
அன்னம் முன்துறை ஆடுவ பாடுவ சாமம்
பன்ம றைக்கிடை யுடன்பயிற் றுவபல பூவை.

தெளிவுரை : நலங்கள் பொருந்திய அந்தப் பதியில் நல்ல நெற்றியையுடைய பெண்கள் மென்மையான மலர்களையுடைய பொய்கையில் குளிக்க, அவர்களுடன் ஒருங்கே முன் துறையில் அன்னப்பறவைகள் தாமும் தோய்ந்து ஆடும். வேதம் ஓதும் சிறுவர்களின் கூட்டத்துடன் சாமவேதம் பாடுவனவாகிய பல பூவைகள் அவர்களைப் பிழை நீக்கிக் கற்கும்படிச் செய்யும்.

1830. ஆய்ந்த மெய்ப்பொருள் நீறென வளர்க்கும்அக் காப்பில்
ஏய்ந்த மூன்றுதீ வளர்த்துளார் இருபிறப் பாளர்
நீந்து நல்லறம் நீர்மையின் வளர்க்கும்அத் தீயை
வாய்ந்த கற்புடன் நான்கென வளர்ப்பர்கண் மடவார்.

தெளிவுரை : ஆய்ந்து தெளிந்த உண்மைப் பொருள் திருநீறேயாகும் என்று எண்ணி வளர்த்து வருகின்ற காவலுள், இருபிறப்புடைய அந்தணர்கள் மூன்று தீயினையும் வளர்த்து வருவர். பிறவிக் கடலினின்றும் நீந்தத் துணையாகின்ற நல்ல அறங்களின் தன்மையில் வளர்க்கும் அந்தத் தீயைப், பொருந்திய கற்புத் தீயுடன் கூட்டி நான்கு தீயாகப் போற்றி வளர்ப்பர்.

1831. சீலம் உய்த்தவத் திருமறை யோர்செழு மூதூர்
ஞாலம் மிக்கநான் மறைப்பொருள் விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்தகண் டத்தவர் தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார்.

தெளிவுரை : ஒழுக்கத்தைத் தவறாது மேற் கொண்டு ஒழுகும் மறையவர் வாழும் அத்தலத்தில் இந்த நிலவுலகத்தில் சிறந்த நான்மறைப் பொருளை விளக்கிய நன்மையையுடையவர். நஞ்சை வைத்த மிடற்றையுடைய சிவபெருமானுக்குத் தொண்டு பூண்டு ஒழுகும் அன்புடையவர், அவர் நீல நக்கர் என்று அழைக்கப்படுபவர். அவர் உலகம் புகழச் சிறந்து வாழ்வார் ஆனார்.

1832. வேத உள்ளுறை யாவன விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவரடி யாரையும் நயந்து
பாத அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே
காத லால்அவை இரண்டுமே செய்கருத் துடையார்.

தெளிவுரை : வேதங்களின் உள் உறை பொருளாகக் கிடைப்பவை விரிந்த கங்கைப் புனலைத் தரித்த சடையையுடைய தலைவரான சிவபெருமானையும் அவர் அடியார்களையும் அன்பால் பாத அர்ச்சனை செய்வது, பணிவதுமேயாகும், எனத் தெளிந்து, காதல் மிகுதியால் அவ்விரண்டு செயல்களையுமே செய்யும் வண்ணம் கொண்டவராய்,

1833. மெய்த்த ஆகம விதிவழி வேதகா ரணரை
நித்தல் பூசனை புரிந்தெழு நியமமுஞ் செய்தே
அத்தர் அன்பருக் கமுதுசெய் விப்பது முதலா
எத்தி றத்தன பணிகளும் ஏற்றெதிர் செய்வார்.

தெளிவுரை : உண்மைப் பொருளைப் புலப்படுத்தும் சிவாகமங்களின் விதிப்படியே மறை முதல்வரான சிவ பெருமானையும் வணங்கி, நாள்தோறும் பூசை செய்து எழும் நியமங்களை எல்லாம் முடித்தும் சிவனின் அன்புடையார்க்குத் திரு அமுது செய்விப்பது முதலாக எல்லாத் தன்மையினாலும் கூடிய அடியவர் பணிகளையும் தாமே மேற்கொண்டு செய்பவராகி

1834. ஆய செய்கையில் அமருநாள் ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லைநீ டயவந்தி அமர்ந்த
நாய னாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார்.

தெளிவுரை : இத்தகைய செயல்களில் வழுவாது ஒழுகி வருகின்ற நாளில் ஒரு திருவாதிரை நாளில். பொருந்திய சிவபூசையை விதிப்படி முடித்துக் கொண்ட பின்னர், தூய தொண்டரான அந்த நீல நக்கர் பழைமையாய் நீடியுள்ள அயவந்தி என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருக்கின்ற சிவ பெருமானுக்கு அருச்சனை செய்ய எண்ணினார்.

1835. உறையு ளாகிய மனைநின்றும் ஒருமைஅன் புற்ற
முறைமை யால்வரு பூசைக்கும் முற்றவேண் டுவன
குறைவ றக்கொண்டு மனைவியார் தம்மொடுங் கூட
இறைவர் கோயில்வந் தெய்தினர் எல்லையில் தவத்தோர்.

தெளிவுரை : எல்லை இல்லாத் தவத்தையுடைய திருநீலநக்க நாயனார் தம் இருப்பிடமான வீட்டினின்றும் ஒன்றுபட்ட அன்புடைய முறைமையினால் வரும் பூசையைச் செய்வதற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் குறைவில்லாமல் அமைத்துக் கொண்டு தம் மனைவியாருடன் சிவபெருமானின் திருக்கோயிலில் வந்து சேர்ந்தார்.

1836. அணைய வந்துபுக் கயவந்தி மேவிய அமுதின்
துணைம லர்க்கழல் தொழுதுபூ சனைசெயத் தொடங்கி
இணைய நின்றங்கு வேண்டுவ மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்தஅர்ச் சனைமுறை உய்த்தார்.

தெளிவுரை : அவர் கோயிலின் உள்ளே சேரும்படி வந்து உள்ளே புகுந்த, அயவந்தி என்ற அக்கோயிலில் விளங்க வீற்றிருக்கும் சிவ பெருமானின் இணையடிகளை வணங்கிப் பூசை செய்யத் தொடங்கித் தம்முடன் இணையாக நின்று கொண்டு அங்கு வேண்டுவனவற்றை எல்லாம் மனைவியார் எடுத்துத்தர, உணர்வின் மிக்க அவர் உயர்ந்த பூசைகளை எல்லாம் செய்தார்.

1837. நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார்
மாடு சூழ்புடை வலங்கொண்டு வணங்கிமுன் வழுத்தித்
தேடு மாமறைப் பொருளினைத் தெளிவுற நோக்கி
நாடும் அஞ்செழுத் துணர்வுற இருந்துமுன் நவின்றார்.

தெளிவுரை : தாம் இயற்றிய பெரிய பூசை முடிந்தும் அன்பு நிரம்பாதவரான அவர், இறைவர் வீற்றிருக்கும் உள் புறத்தை வலமாகச் சுற்றி வந்து, நிலத்தில் பொருந்தக் கீழே விழுந்து, திருமுன்பு துதித்து நின்று, பெரிய மறைகள் தேடுகின்ற பொருளைத் தெளியும்படி கூர்ந்து அழுந்திய பார்வை செய்து, நாடும் ஐந்தெழுத்து உணர்ச்சியில் பொருந்தத் திருமுன்பு விதிப்படி நினைந்தார்.

1838. தொலைவில் செய்தவத் தொண்டனார் சுருதியே முதலாங்
கலையின் உண்மையாம் எழுத்தஞ்சுங் கணிக்கின்ற காலை
நிலையின் நின்றுமுன் வழுவிட நீண்டபொன் மேருச்
சிலையி னார்திரு மேனிமேல் விழுந்ததோர் சிலம்பி.

தெளிவுரை : அழியாத தவத்தைத் செய்த தொண்டரான அந்நீலநக்கர், வேதங்களை முதலாகக் கொண்ட எல்லாக் கலைகளும் எடுத்துச் சொல்லும் உண்மைப் பொருளான திருவைந்தெழுத்தை எண்ணும்பொழுது, ஒரு சிலந்தி தான் நின்ற நிலையினின்றும் வழுவியதால் நீண்ட பொன் மேரு மலையை வில்லாக உடைய இறைவரின் அருள் குறியான சிவலிங்கத்தின் மேனி மீது விழுந்தது.

1839. விழுந்த போதில்அங் கயல்நின்ற மனைவியார் விரைவுற்
றெழுந்த அச்சமோ டிளங்குழ வியில்விழுஞ் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதிமுன் துமிப்பவர் போலப்
பொழிந்த அன்பினால் ஊதிமேல் துமிந்தனர் போக.

தெளிவுரை : அங்ஙனம் சிலந்தி சிவலிங்கத்தின் மீது விழுந்த போது அங்குப் பக்கத்தில் நின்றிருந்த மனைவியார் விரைவாகப் பயத்துடன், இளங் குழந்தையின் மீது விழுந்த சிலந்தி ஒழியுமாறும் அதன் நச்சுத் தன்மை நீங்குமாறும் ஊதி முன் துமிக்கும் தாய் போன்று பொங்கி மேல் எழுந்த அன்பினால் ஊதித் திருமேனி மேல் நின்றும் அச்சிலந்தி மேல் போகுமாறு மேலே துமிந்தனர்.

1840. பதைத்த செய்கையால் மனைவியார் முற்செயப் பந்தஞ்
சிதைக்கு மாதவத் திருமறை யவர்கண்டு தங்கண்
புதைத்து மற்றிது செய்ததென் பொறியிலாய் என்னச்
சுதைச்சி லம்பிமேல் விழஊதித் துமிந்தனன் என்றார்.

தெளிவுரை : மனம் பதைத்ததால் தூண்டப்பட்ட செய்கையினாலே மனைவியார் முன் இவ்வாறு செய்ய, மலங்களை நீக்கும் மாதவம் செய்யும் மறையவரான திருநீல நக்கனார் அதைக் கண்டு ஆற்றமாட்டாமல் தம் கண்களைப் பொத்திக் கொண்டு, அறிவற்றவளே ! தகாத இச்செயலைச் செய்தது என்ன காரணம் ? என வினவ, சுதைச் சிலம்பி இறைவரின் திருமேனி மீது விழுந்தபடியால் அதனை நீக்க ஊதித் துமிந்தேன் எனக் கூறினார் அம்மையார்.

1841. மனைவி யார்செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல்மணி மார்பர்தம் பூசனைத் திறத்தில்
இனைய செய்கைஇங் கநுசித மாம்என எண்ணும்
நினைவி னால்அவர் தம்மைவிட் டகன்றிட நீப்பார்.

தெளிவுரை : பூணூல் புனையும் மார்பினரான திருநீலநக்கர், தம் மனைவியார் செய்த செயலில் உள்ள அன்பை மனத்தில் கொள்ளாதவராய் தம் பூசையுள் இஃது இங்குத் தகாத செயலாகும் என்று எண்ணும் எண்ணங் கொண்டதனால், அம்மனைவியார் தம்மை விட்டு நீங்குமாறு துறப்பவராய்,

1842. மின்நெ டுஞ்சடை விமலர்மேல் விழுந்தநூற் சிலம்பி
தன்னை வேறொரு பரிசினால் தவிர்ப்பது தவிர
முன்அ ணைந்துவந் தூதிவாய் நீர்ப்பட முயன்றாய்
உன்னை யான்இனித் துறந்தனன் ஈங்கென உரைத்தார்.

தெளிவுரை : மின் போல் ஒளிவீசுகின்ற நீண்ட சடையுடைய குற்றமற்றவரான இறைவரின் திருமேனியின் மேல் விழுந்த நூல் சிலந்தியை வேறு ஒருவகையினால் தவிர்க்காது முன் வந்து வாய்நீர் படுமாறு முயன்றாய் ! இனி நான் உன்னைத் துறந்து விட்டேன் ! என மொழிந்தார்.

1843. மற்ற வேலையிற் கதிரவன் மலைமிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுதுதீர் பூசனை முடித்துக்
கற்றை வேணியார் தொண்டருங் கடிமனை புகுந்தார்.

தெளிவுரை : அச்சமயத்தில் கதிரவன் மேற்குத் திக்கிலே மறைந்தான். பொருந்திய கட்டளையின் வழியே நின்று மனைவியார் ஒரு பக்கம் நீங்கத், தம் பூசை முற்றுதற்கு வேண்டிய குற்றம் நீங்கும் பூசை முறைகளைச் செய்து முடித்துக் கற்றையாக முடித்த சடையுடைய சிவ பெருமானின் அடியாரான நீலநக்கரும் தம் இல்லத்துக்குள் புகுந்தார்.

1844. அஞ்சும் உள்ளமோ டவர்மருங் கணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார்
செஞ்சொல் நான்மறைத் திருநீல நக்கர்தாம் இரவு
பஞ்சின் மெல்லணைப் பள்ளியிற் பள்ளிகொள் கின்றார்.

தெளிவுரை : நீலநக்கரின் மனைவியார் அஞ்சிய உள்ளத்துடன் அவரது பக்கத்தில் சேராதவராய் நஞ்சையுண்ட பெருமானின் கோயிலில் தங்கியிருந்தார். செம்மையான சொற்களையுடைய நான்கு மறைகளில் வல்ல திருநீலநக்கர் தனியாய் அன்றிரவு பஞ்சு இட்ட மெல்லிய அணையில் துயிலலானார்.

1845. பள்ளி கொள்பொழு தயவந்திப் பரமர்தாங் கனவில்
வெள்ள நீர்ச்சடையோடுதம் மேனியைக் காட்டி
உள்ளம் வைத்தெமை ஊதிமுன் துமிந்தபால் ஒழியக்
கொள்ளும் இப்புறஞ் சிலம்பியின் கொப்புள்என் றருள.

தெளிவுரை : அவ்வாறு அவர் உறங்கும் போதில் அயவந்தி என்ற கோயிலில் எழுந்தருளிய சிவபெருமான் அவரது கனவில் எழுந்தருளிக் கங்கை நீர் ததும்பும் சடையுடன் தம் திருமேனியைக் காட்டி, மனத்தில் அன்பு வைத்து எம்மை முன்பு ஊதித் துமிந்த பக்கம் ஒழிய மற்ற இந்தப் பக்கம் எல்லாம் சிலந்தியின் கொப்புளங்கள் காண்பாயாக ! என்று உரைத்தருளினாராக,

1846. கண்ட அப்பெருங் கனவினை நனவெனக் கருதிக்
கொண்ட அச்சமோ டஞ்சலி குவித்துடன் விழித்துத்
தொண்ட னார்தொழு தாடினார் பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையைப் போற்றிநின் றழுதார்.

தெளிவுரை : தாம் கண்ட அந்தக் கனவை நனவு என்றே எண்ணி அடைந்த அச்சத்துடனே அஞ்சலியாய்த் தலை மேல் குவித்த கைகளுடனே விழித்து எழுந்து, அடியாரான திருநீலநக்க நாயனார், தொழுது ஆடினார், துதித்தார்; தேவர் தலைவரான இறைவர் பெருங்கருணையைப் போற்றி நின்று அழுதார்.

1847. போது போயிருள் புலர்ந்திடக் கோயிலுள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்தஅங் கணர்தம்
பாத மூலங்கள் பணிந்துவீழ்ந் தெழுந்துமுன் பரவி
மாத ராரையுங் கொண்டுதம் மனையில்மீண் டணைந்தார்.

தெளிவுரை : இரவுக் காலமானது நீங்கி இருள் நீங்கிப் புலர்ந்திடக் கோயிலுள் போய், ஆதிநாயகராய் அயவந்தியில் வீற்றிருக்கின்ற இறைவரின் அடிகளில் வணங்கிக் கீழே விழுந்து எழுந்து திருமுன்பு துதித்து அம்மையாரையும் உடன் அழைத்துக் கொண்டு தன் இல்லத்துக்கு மீண்டும் வந்து சேர்ந்தார்.

1848. பின்பு முன்னையிற் பெருகிய மகிழ்ச்சிவந் தெய்த
இன்பு றுந்திறத் தெல்லையில் பூசனை இயற்றி
அன்பு மேம்படும் அடியவர் மிகஅணை வார்க்கு
முன்பு போலவர் வேண்டுவ விருப்புடன் முடிப்பார்.

தெளிவுரை : அதன்பின்பு, முன்னால் இருந்ததைவிடப் பெருமகிழ்ச்சி வந்து அடைய, இன்பம் உடைய எண்ணில்லாத பூசனைகள் இறைவர்க்குச் செய்து, அன்புமிக்க அடியவர் வந்தடைவார்களுக் கெல்லாம் முன்போலவே அத்தகையர் வேண்டியவற்றையெல்லாம் விருப்புடன் செய்து முடிப்பாரானார்.

1849. அன்ன தன்மையில் அமர்ந்தினி தொழுகும்அந் நாளில்
மன்னு பூந்தராய் வருமறைப் பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட மற்றவர் பாதம்
சென்னி வைத்துடன் சேர்வுறும் விருப்பினிற் சிறந்தார்.

தெளிவுரை : அங்ஙனம் அவர் ஒழுகி வந்த நாட்களில் நிலை பெற்ற சீகாழிப்பகுதியில் தோன்றியருளிய திருஞான சம்பந்தரின் பெருமைகளைப் பலவகையாகச் சொல்லி உலகம் போற்றக் கேட்டு, அவருடைய திருவடிகளை வணங்கி அவருடன் கூடியிருக்கும் விருப்பம் மிக்க சிறப்புடையவர் ஆனார்.

1850. பண்பு மேம்படு நிலைமையார் பயிலும்அப் பருவம்
மண்பெ ருந்தவப் பயன்பெற மருவுநற் பதிகள்
விண்பி றங்குநீர் வேணியார் தமைத்தொழ அணைவார்
சண்பை மன்னருஞ் சாத்தமங் கையில்வந்து சார்ந்தார்.

தெளிவுரை : பண்பினால் மேன்மையுடைய திருநீலநக்கர் முன் சொன்ன நிலையில் பயின்ற காலத்தில், பெருந்தவப் பயனை உலகம் அடையும் பொருட்டுப் பொருந்திய நல்ல பதிகளில், விண்ணில் விளங்கும் கங்கை தங்கிய சடையையுடைய சிவபெருமானைத் தொழுவதற்குச் சேர்வாராய்ச், சீகாழித் தலைவரான திருஞானசம்பந்தரும் திருசாத்த மங்கையில் வந்து அடைந்தார்.

1851. நீடு சீர்த்திரு நீலகண் டப்பெரும் பாணர்
தோடு லாங்குழல் விறலியார் உடன்வரத் தொண்டர்
கூடும் அப்பெருங் குழாத்தொடும் புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டுளம் மகிழ்நீல நக்கர்.

தெளிவுரை : திருநீடிய பெரிய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மலர்கள் பொருந்துவதற்கு இடமான கூந்தலையுடைய பாணினியான மதங்க சூளாமணியாரும் உடன் வர, தொண்டர்கள் கூடும் அந்தப் பெருங்கூட்டத்துடன் சீகாழித் தலைவரான திருஞானசம்பந்தர் தம் நகரத்தின் பக்கத்தில் எழுந்தருளியதனைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்த திருநீலநக்க நாயனார்,

1852. கேட்ட அப்பொழு தேபெரு மகிழ்ச்சியிற் கிளர்ந்து
தோட்ட லங்கலுங் கொடிகளும் புனைந்துதோ ரணங்கள்
நாட்டி நீள்நடைக் காவண மிட்டுநற் சுற்றத்
தீட்ட முங்கொடு தாமுமுன் பெதிர்கொள எழுந்தார்.

தெளிவுரை : கேள்விப்பட்ட அப்போதே பெருமகிழ்ச்சி பொங்கி மலர் மாலைகளையும் கொடிகளையும் தூக்கி அலங்கரித்துத் தோரணங்கள் நாட்டி நீண்ட தொலைவு வரை நடைக் காவணம் இட்டு, நல்ல சுற்றத்தாரின் கூட்டத்தையும் உடன் அழைத்துக்கொண்டு தாம் முன்பு எதிர் கொள்ளும் பொருட்டு எழுந்தாராகி,

1853. சென்று பிள்ளையார் எழுந்தரு ளுந்திருக் கூட்டம்
ஒன்றி அங்கெதிர் கொண்டுதங் களிப்பினால் ஒருவா
றன்றி ஆடியும் பாடியும் தொழுதெழுந் தணைவார்
பொன்ற யங்குநீள் மனையிடை யுடன்கொடு புகுந்தார்.

தெளிவுரை : சென்று, ஞானசம்பந்தர் எழுந்தருளும் அக்கூட்டத்தைச் சேர்ந்து அங்கு அவரை எதிர்கொண்டு வரவேற்றுத் தம் மகிழ்ச்சியின் மேலீட்டால் ஒருபடித்தாய் அன்றிப் பலவகையாக ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைபவராய்ப் பொன் விளங்கும் பெரிய தன் மனையிடத்து உடனே அழைத்துக் கொண்டு புகுந்தார்.

1854. பிள்ளை யாரெழுந் தருளிய பெருமைக்குத் தக்க
வெள்ள மாகிய அடியவர் கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதர வோங்கிட ஓங்குசீர்க் காழி
வள்ள லாரைத்தம் மனையிடை அமுதுசெய் வித்தார்.

தெளிவுரை : திருஞானசம்பந்தர் எழுந்தருளியிருக்கும் பெருமைக்கும் ஏற்றபடி பெருந்திரளாகக் கூடிய அடியவர் கூட்டமும் விரும்பி வர, மனத்தில் அன்புமிக, தம் இல்லத்தில் சீகாழியில் அவதாரம் செய்த வள்ளலான ஞானசம்பந்தரை உணவு உண்ணும்படி செய்தார்.

1855. அமுது செய்தபின் பகலவன் மேல்கடல் அணையக்
குமுத வாவியிற் குளிர்மதிக் கதிரணை போதில்
இமய மங்கைதன் திருமுலை அமுதுண்டார் இரவும்
தமது சீர்மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார்.

தெளிவுரை : திருஞானசம்பந்தரும் அடியார் கூட்டமும் திருவமுது செய்தபின்பு கதிரவன் மேற்குத் திக்கில் அடைந்து அந்தமனம் ஆக, ஆம்பல் மலர்களையுடைய பொய்கைகளில் குளிர்ந்த மதியின் கதிர்கள் சேரும் இரவுக் காலத்தில், உமையம்மையாரின் முலைப்பாலை யுண்ட அந்த ஞானசம்பந்தர் அன்றிரவிலும் சிறப்புடைய திருமனையில் தங்குவதற்கு வேண்டியவற்றை நீலநக்கர் அமைத்தார்.

1856. சீல மெய்த்திருத் தொண்டரோ டமுதுசெய் தருளி
ஞாலம் உய்ந்திட நாயகி யுடன்நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர் அழைத்திடக் கடிது
நீல நக்கனார் வந்தடி பணிந்துமுன் நின்றார்.

தெளிவுரை : ஒழுக்கமுடைய மெய்த்தொண்டர்களுடனே திருவமுது செய்த பின்பு, உலகம் ஓங்கும் பொருட்டுப் பெரிய நாயகி அம்மையாருடன் தோணியப்பர் வெளிப்பட்டருளுமாறு முன் அழுதவரான திருஞான சம்பந்தர் அழைக்கத் திருநீலநக்கர் விரைவில் வந்து அடிவணங்கித் திருமுன்பு நின்றார்.

1857. நின்ற அன்பரை நீலகண் டயாழ்ப் பாணர்க்
கின்று தங்கஓர் இடங்கொடுத் தருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச்
சென்று மற்றவர்க் கிடங்கொடுத் தனர்திரு மறையோர்.

தெளிவுரை : அங்ஙனம் வந்து நின்ற அடியாரான திருநீல நக்கரைப் பார்த்துத் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு இன்று தங்குதற்குரிய ஓர் இடம் அளித்தருளுக ! என்று திருஞானசம்பந்தர் கூறினார். பெரிதும் மகிழ்ச்சியை அடைந்து அதை ஏற்றுச் சென்று அத் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு நடுமனையின் வேதிகையின் பக்கத்தில் மறையவரான திருநீலநக்கர் இடம் அமைத்துத் தந்தார்.

1858. ஆங்கு வேதியில் அறாதசெந் தீவலஞ் சுழிவுற்
றோங்கி முன்னையில் ஒருபடித் தன்றியே ஒளிரத்
தாங்கு நூலவர் மகிழ்வுறச்சகோடயாழ்த் தலைவர்
பாங்கு பாணியா ருடன்அருளாற்பள்ளி கொண்டார்.

தெளிவுரை : அங்கு அந்த வேதிகையில் என்றும் நீங்காது வளர்க்கப்பட்டு உள்ள செந்தீயானது வலமாகச் சுழித்து எழுந்து மேல் ஓங்கி முன்னைவிட ஒருவிதமாய் அன்றிப் பலவகையாய் விளக்கம் அடையவே, சகோட யாழ்த் தலைவரான திருநீலகண்டர் தம் பக்கத்தில் அமரும் மதங்க சூளாமணியாருடனே திருவருள் மயமாய்ப் பள்ளி கொண்டார்.

1859. கங்கு லிற்பள்ளி கொண்டபின்கவுணியர் தலைவர்
அங்கு நின்றெழுந் தருளுவார் அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீலநக் கரைச்சிறப் பித்தே
பொங்கு செந்தமிழ்த் திருப்பதி கத்தொடை புனைந்தார்.

தெளிவுரை : கவுணியர் குலத் தலைவரான திருஞானசம்பந்தர் அன்று இரவு அங்குப் பள்ளிகொண்ட பின், எழுந்து அங்கிருந்தும் புறப்படுவாராகித் திருநீலநக்கரைச் சிறப்பாக எடுத்துக் கூறி, அயவந்தியில் விரும்பி எழுந்தருளியுள்ள பெருமானைப் பொங்கும் செந்தமிழான திருப்பதிகமான மாலையைப் புனைந்து பாடினார்.

1860. பதிக நாண்மலர் கொண்டுதம் பிரான்கழல் பரவி
அதிக நண்பினை நீலநக் கருக்களித் தருளி
எதிர்தொ ழும்பதி களில்எழுந் தருளினார் என்றும்
புதிய செந்தமிழ்ப் பழமறை மொழிந்தபூ சுரனார்.

தெளிவுரை : திருப்பதிகமான புதிய மலர் மாலையைக் கொண்டு தம் இறைவரின் திருவடிகளைத் துதித்து, பெரு நட்பினை நீலநக்கருக்குத் தந்தருளிய, பழைமையுடைய மறைகளை என்றும் புதிதாய் உள்ள செந்தமிழால் கூறியருளிய அந்தணரான ஞானசம்பந்தர் மேலும் தொழச் செல்லும் பதிகளை நோக்கிச் செல்லலானார்.

1861. பிள்ளை யார்எழுந் தருளஅத் தொண்டர்தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும்
வள்ள லார்திரு வருளினை வலியமாட் டாமை
உள்ளம் அங்குடன் போக்கிமீண் டொருவகை இருந்தார்.

தெளிவுரை : அவ்வாறு அந்தப் பதியினின்றும் திருஞான சம்பந்தர் புறப்பட, அத்திரு நீலநக்கரும் ஞானசம்பந்தரைத் தொடர்ந்து செல்லுமாறு தம்மை உந்திச் செலுத்தும் அன்பும் நட்பும் தவிர்க்க இயலாதவையாய் இருப்பினும், வள்ளலாரான ஆளுடைய பிள்ளையாரின் அருளிப் பாடான திருவாணையை வற்புறுத்தி மறுக்க இயலாததால், தம் மனத்தை மட்டும் அவர் போகும் இடங்களில் செல்லும் படி விடுத்துத் தாம் மீண்டு ஒருவாறு தங்கியிருந்தனர்.

1862. மேவு நாளில்அவ் வேதியர் முன்புபோல் விரும்புந்
தாவில் பூசனை முதற்செய்கை தலைத்தலை சிறப்பச்
சேவின் மேலவர் மைந்தராந் திருமறைச் சிறுவர்
பூவ டித்தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார்.

தெளிவுரை : அங்ஙனம் அவர் தங்கியிருந்த நாளில் அந்த வேதியரான நீலநக்கர் முன்புபோல் வேதம் விரும்பிய குற்றம் இல்லாத பூசை முதலான செய்கைகள் எல்லாம் மேலும் மேலும் சிறப்பாய் ஓங்கக் காளை ஊர்தியின் மேல் வரும் இறைவரின் மைந்தரான அந்தணச் சிறுவரின் அழகிய திருவடிகளைப் பொருந்திய வுணர்வுடன் வணங்கி வந்தார்.

1863. சண்பை யாளியார் தாமெழுந் தருளும்எப் பதியும்
நண்பு மேம்பட நாளிடைச் செலவிட்டு நண்ணி
வண்பெ ரும்புக ழவருடன் பயின்றுவந் துறைந்தார்
திண்பெ ருந்தொண்ட ராகிய திருநீல நக்கர்.

தெளிவுரை : சண்பை என்ற சீகாழியில் தோன்றிய ஞான சம்பந்தர் எழுந்தருளும் எவ்வெத்தலங்களிலும் இடை இடையே பல நாட்கள் கழிந்த பின்பு அன்பு மேலீட்டினால் சென்று சேர்ந்து திண்மையான பெரிய திருநீலநக்கர் வண்மையுடைய பெரும்புகழினையுடைய அவருடனே கூடியிருந்து மீண்டுவந்து அமர்ந்திருந்தனர்.

1864. பெருகு காதலில் பின்நெடு நாள்முறை பிறங்க
வருபெ ருந்தவ மறையவர் வாழிசீ காழி
ஒருவர் தந்திருக் கல்லியா ணத்தினில் உடனே
திரும ணத்திறஞ் சேவித்துநம்பர்தாள் சேர்ந்தார்.

தெளிவுரை : பெருகும் அன்பினால் பின்னர் நீண்ட நாள்கள் இவ்வாறு விளங்கும்படி நிகழவரும் பெரிய வேதியரான திருநீலநக்கர் எந்நாளும் வாழ்வுடைய சீகாழிப்பதியில் அவதரித்த ஒப்பில்லாத ஞானசம்பந்தரின் திருமணச் சிறப்பில், அத்திருமணச் சிறப்பைக் கும்பிட்டபடியால் அவருடன் கூடிச் சிவபெருமான் திருவடிகளை அடைந்தார்.

1865. தருதொ ழில்திரு மறையவர் சாத்தமங் கையினில்
வருமு தற்பெருந் திருநீல நக்கர்தாள் வணங்கி
இருபி றப்புடை அந்தணர் ஏறுயர்த் தவர்பால்
ஒருமை உய்த்துணர் நமிநந்தி யார்தொழில் உரைப்பாம்.

தெளிவுரை : சிறந்த தொழிலினரான திருச்சாத்தமங்கையில் தோன்றியருளிய முதன்மையுடைய பெரிய நீலநக்கரின் திருவடிகளை வணங்கி, அதன் துணையினால், இரு பிறப்புடைய அந்தணராய்க் கொடியை உயர்த்திய சிவபெருமானிடத்து மன ஒருமைப்பாடு கொண்டு உணர்கின்ற நமிநந்தியார் செய்த திருத்தொண்டினை உரைக்கப் புகுகின்றேன்.

திருநீலநக்க நாயனார் புராணம் முற்றுப் பெற்றது.

33. நமிநந்தியடிகள் நாயனார் புராணம்

திருவாரூர்க்கு அருகில் உள்ளது ஏமப்பேறூர். அந்த ஊரில் அந்தணர் குலத்தில் நமிநந்தியடிகள் தோன்றினார். திருநீறே உண்மைப் பொருள் என்ற கொள்கையை உடையவராய் விளங்கினார். அவர் ஏமப் பேறூரிலிருந்து திருவாரூர் சென்று ஒரு நாள், வன்மீக நாதரை வணங்கித் திருமுன்றிலை அடைந்தார். அங்குப் பக்கத்தில் உள்ள அரன்நெறி கோயிலுக்குச் சென்றார். அப்போது மாலை நேரம், அங்கு நிறைய விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று அவர் எண்ணினார். வீட்டுக்குச் சென்று நெய்யைக் கொணர நேரம் இல்லை. அங்குள்ள ஒரு சமணர் வீட்டுக்குச் சென்று விளக்குக்கு நெய் வேண்டினார். கையில் கனல் உடைய சிவபெருமானுக்கு விளக்கு எதற்கு? தண்ணீர் விட்டு விளக்கை எரியச் செய்யும் என்றனர். அதனால் வருந்தி நேரே கோயிலுக்குச் சென்று விழுந்தார். அப்போது அசரீரி, அன்ப! வருந்தாதே! இக்கோயிலின் பக்கத்தில் உள்ள குளத்தினின்று நீரை எடுத்து விளக்கை ஏற்று என்றது, அவர் திகைத்தார். எனினும் இறைவரின் ஆணைப்படி செய்தார். விளக்கு சுடர் விட்டு எரிந்தது! பின்பு கோயில் முழுதும் பல விளக்குகளை ஏற்றினார். அதன்பின் சமணர்களுக்கு எதிரில் தண்ணீர் விட்டுப் பல விளக்குகளை எரித்தார். இங்ஙனமே அவர் பகலில் தொண்டும், மாலையில் விளக்கும் எரித்தார். இரவில் வீட்டுக்குச் செல்வார்.

ஒருநாள் திருவாரூர்த் தியாகேசர் திருமணலிக்கு எழுந்தருளினார். எல்லாச் சாதியினரும் அப்பெருமானைக் கண்டு வணங்கியதால் தீட்டாயிற்று என எண்ணினார். தம் வீட்டின் உள்ளே செல்லாது வெளியில் படுத்துறங்கினார். அவருடைய மனைவியார் அவரை வந்து அழைத்த போது தம் எண்ணத்தை உரைத்தார். தாம் நீராடிய பின் பூசை முதலியவை செய்ய வேண்டும் என்றும் அதனால் நீர் கொணரும்படி உரைத்தார். அம்மையார் நீர் கொணரச் சென்றார். சற்று நேரத்தில் அவருக்கு உறக்கம் உண்டாயிற்று. கனவில் அவருக்குத் தியாகேசர் எழுந்தருளி திருவாரூரில் பிறந்தவர் அனைவரும் சிவகணங்கள், அவ்வுண்மையை நாம் காட்ட நீ நாளை காண்பாய்! என்றார். மறுநாள் அவர் திருவாரூர்க்கு விரைந்தார். அப்போது அவ்வூரவர் அனைவரும் சிவபெருமானாகக் (சிவசாரூபத்தினராய்க்) காட்சியளித்தனர். அதனால் அவர் தம் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என இறைவனிடம் வேண்டினார். தம் ஏமப்பேறூரை விட்டுத் திருவாரூரிலேயே குடியிருந்து பின் இறைவனின் திருவடி நிழலை அடைந்தார். அவர் தொண்டர்களுக்கு ஆணிப் பொன் என்று நாவுக்கரசரால் தேவாரத்தில் பாடப்பட்டுள்ளார்.

1866. வையம் புரக்குந் தனிச்செங்கோல் வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம்பணையும் செழுநீர்த் தடமும் புடையுடைத்தாய்ப்
பொய்தீர் வாய்மை அருமறைநூல் புரிந்த சீலப் புகழதனால்
எய்தும் பெருமை எண்திசையும் ஏறூர் ஏமப் பேறூரால்.

தெளிவுரை : உலகத்தைக் காவல் செய்யும் தனிச் செங்கோலையுடைய சோழர்களின் காவிரித் திருநாட்டில் செந்தாமரைத் தடங்களையுடைய பெருவயல்களையும் செழுமையான நீர்ப் பொய்கைகளையும் எப்பக்கங்களிலும் கொண்டதாகி, மலங்களை நீக்கும் தன்மையுடைய மெய்ப் பொருளைக் கூறும் அரிய வேதங்களிலும் அவற்றின் வழிப்பட்ட நூல்களிலும் சொல்லும் விதிகளை இடைவிடாமல் சிந்தித்துச் செய்யும் நல்ல ஒழுக்கமுடையவரின் புகழால் வரும் பெருமையானது எல்லாத் திக்குகளிலும் பரவிச் செல்கின்ற ஊர் ஏமப்பேறூர் என்பதாகும்.

1867. மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணிமறுகு
வேலை பயிலும் புனல்பருகு மேகம் பயிலும் மாடங்கள்
சோலை பயிலும் குளிர்ந்தஇருள் சுரும்பு பயிலும் அரும்பூகம்
காலை பயிலும் வேதஒலி கழுநீர் பயிலும் செழுநீர்ச்செய்.

தெளிவுரை : அழகிய தெருக்களின் பக்கங்களில் மாலைகள் மிகவும் தொங்கவிடப்பட்ட தோரணங்கள் விளங்கும் மாளிகைகளின் மீது கடலில் நீரையுண்ணும் மேகங்கள் பொருந்தியிருக்கும். குளிர்ந்த இருண்ட நிழல், சோலைகளில் விளங்கும். அரிய பாக்கு மரங்களில் வண்டுகள் மொய்க்கும். உரிய காலங்களில் வேத ஒலி மிக்கு ஒலிக்கும். செழிப்பான நீர்வயல்களில் கழுநீர் மலர்கள் விளங்கும்.

1868. பணையில் விளைந்த வெண்ணெல்லின் பரப்பின் மீது படச்செய்ய
துணர்மென் கமலம் இடைஇடையே சுடர்விட் டெழுந்து தோன்றுவன
புணர்வெண் புரிநூ லவர்வேள்விக் களத்தில் புனைந்த வேதிகைமேல்
மணல்வெண் பரப்பின் இடைஇடையே வளர்த்த செந்தீ மானுமால்.

தெளிவுரை : வயல்களில் விளைந்த வெண்மையான நெற் பயிரிடையே, மேலே தோன்றும்படி இடை இடையே ஒளி விட்டு மேல் எழுந்து தோன்றும் சிவந்த பன்மெல்லிதழ்களையுடைய தாமரைப் பூக்கள், பொருந்திய வெண்மையான பூணூல் அணிந்த வேதியர்கள் வேள்விக் களத்தில் அழகுடன் அமைத்த வேதிகைமீது வெண்மையான மணலைப் பரப்பி இடைஇடையே வளர்த்த செந்தீயை ஒத்திருக்கும்.

1869. பெருமை விளங்கும் அப்பதியில் பேணும் நீற்றுச் சைவநெறி
ஒருமை வழிவாழ் அந்தணர்தம் ஓங்கு குலத்தி னுள்வந்தார்
இருமை உலகும் ஈசர்கழல் இறைஞ்சி ஏத்தப் பெற்றதவத்
தருமை புரிவார் நமிநந்தி அடிகள் என்பா ராயினார்.

தெளிவுரை : பெருமையுடன் விளங்கும் அந்தப் பதியில் போற்றும் திருநீற்றுச் சார்புடைய சைவ நெறியில் ஒருமைப்பாடு உற்ற வழியில் வாழும் அந்தணர்களின் சிறந்த குலத்திலே, தோன்றியவராய், இம்மையிலும் மறுமையிலும் சிவபெருமான் திருவடிகளையே வணங்கி வாழ்த்தும் பேறுடைய தவத்தை அரிய வகையால் இடைவிடாது ஒழுகி வருபவர். அவர் நமிநந்தி அடிகள் என்று அழைக்கப்படுவர்.

1870. வாய்மை மறைநூல் சீலத்தால் வளர்க்கும் செந்தீ எனத்தகுவார்
தூய்மைத் திருநீற் றடைவேமெய்ப் பொருளென் றறியுந் துணிவினார்
சாம கண்டர் செய்யகழல் வழிபட் டொழுகும் தன்மைநிலை
யாம இரவும் பகலும்உணர் வொழியா இன்பம் எய்தினார்.

தெளிவுரை : வாய்மையுடைய மறைநூலும் அதன் வழி வரும் நூலால் விதித்த ஒழுக்கத்தால் வளர்க்கப்படும் செந்தீ இவர் ஆவார் எனக் கூறப்படும் தகுதி உடையவர். தூய திருநீற்றின் சார்பே மெய்ப்பொருளாவது எனத் துணிந்து மேற்கொண்ட அறிவை உடையவர். அவர் சாம வேதத்தை அருளியவரான சிவபெருமானின் சிவந்த திருவடிளையே வழிபட்டு ஒழுகும் தன்மை நிலையை இரவுப்போதிலும் பகற் போதிலும் உணர்ச்சியில் கொள்கின்ற இடைவிடா இன்பத்தை எய்தியிருந்தார்.

1871. அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார் அடியார்மேல்
வெவ்வூ றகற்றும் பெருமான்தன் விரைசூழ் மலர்த்தாள் பணிவுறுவ
தெவ்வூ தியமும் எனக்கொள்ளும் எண்ணம் உடையார் பலநாளும்
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார் திருப்பா தங்கள் வணங்கினார்.

தெளிவுரை : அடியார் மேல் வரும் கொடிய ஆணவமலமான பிணியைப் போக்கியருளும் சிவபெருமானின் மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளைப் பணியும் தன்மை பெறுவதே எல்லா ஊதியமும் ஆகும் என்று கொள்ளும் எண்ணம் உடைய அவர், அந்த ஏமப் பேறூரினின்றும் திருவாரூரை அடைவாராகிப் பகைவரின் திரிபுரங்களை எரித்த மேருமலையான வில்லை ஏந்திய சிவபெருமானின் திருவடிகளைப் பல நாள்களிலும் வணங்கினார்.

1872. செம்பொற் புற்றின் மாணிக்கச் செழுஞ்சோ தியைநேர் தொழுஞ்சீலம்
தம்பற் றாக நினைந்தணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்துபோந்
தம்பொற் புரிசைத் திருமுன்றில் அணைவார் பாங்கோர் அரனெறியின்
நம்பர்க் கிடமாங் கோயிலினுள் புக்கு வணங்க நண்ணினார்.

தெளிவுரை : செம்பொன் போன்ற புற்றில் வீற்றிருக்கும் மாணிக்க ஒளியைப் போன்ற இறைவரை நேரில் கண்டு வழிபடும் நல்லொழுக்கமே தமக்கு உறுதியாவது என்று எண்ணிச் சார்ந்து நிலம் பொருந்த விழுவது வணங்கி அதனால் வாழ்வடைந்து வெளியே வந்து பொன்மதில் திருமுற்றத்தில் தனியிடமான அரன் நெறி என்னும் பதியில் சிவபெருமானுக்கு இடமான கோயிலுள் புகுந்து வணங்குதற்குச் சென்றார்.

1873. நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்புற் றெழுந்த காதலுடன்
அண்ண லாரைப் பணிந்தெழுவார் அடுத்த நிலைமைக் குறிப்பினால்
பண்ணுந் தொண்டின் பாங்குபல பயின்று பரவி விரவுவார்
எண்ணில் தீபம் ஏற்றுவதற் கெடுத்த கருத்தின் இசைந்தெழுவார்.

தெளிவுரை : பொருந்தி வணங்கி, அன்பு காரணமாக ஆசை மேலே எழுந்த பக்தியுடன் பெருமையுடைய இறைவரைத் தாழ்ந்து எழுவார்; அடுத்து வரும் நிகழ்ச்சிக்காக மனத்தில் எழுந்த குறிப்பால் செய்யும் திருத்தொண்டின் பாங்கு பலவும் செய்து துதித்து அங்குத் தங்குவாராய் எண்ணற்ற விளக்குகளை ஏற்றுவதற்கு மனத்துள் ஏற்பட்ட எண்ணத்துக்கு இசைந்து அதைச் செய்ய எழுவாராய்,

1874. எழுந்த பொழுது பகற்பொழுதங் கிறங்கு மாலை எய்துதலும்
செழுந்தண் பதியி னிடையப்பாற் செல்லிற் செல்லும் பொழுதென்ன
ஒழிந்தங் கணைந்தோர் மனையில்விளக் குறுநெய் வேண்டி உள்புகலும்
அழிந்த நிலைமை அமணர்மனை ஆயிற் றங்கண் அவருரைப்பார்.

தெளிவுரை : அவ்வாறு துணிந்து எழுந்து பொழுதானது பொழுது இறங்கும் மாலை நேரமாகச் சேரலும், செழுமையான அந்தத் திருவாரூர்ப் பதியில் சேர்ந்து திரும்பும்படி சேர்ந்தால் பொழுதானது போய்விடும் என எண்ணி அதனை விடுத்து, அங்கே அணைந்த விளக்கிற்கு நெய் பெறுதலை வேண்டி ஓர் இல்லத்துக்குள் புகவும், அது சமணரின் இல்லமாய் விளங்கியது, அங்கு அவர்கள் சொல்வாராகி,

1875. கையில் விளங்கு கனலுடையார் தமக்கு விளக்கு மிகைகாணும்
நெய்யிங் கில்லை விளக்கெரிப்பீ ராகில் நீரை முகந்தெரித்தல்
செய்யும் என்று திருத்தொண்டர்க் குரைத்தார் தெளியா தொருபொருளே
பொய்யும் மெய்யு மாம்என்னும் பொருள்மேல் கொள்ளும் புரைநெறியார்.

தெளிவுரை : கையில் விளங்கும் தீயை ஏந்திய சிவபெருமானுக்கு விளக்கு மிகையானது. விளக்குக்கு நெய் இங்கு இல்லை ! நீவீர் விளக்கு எரிப்பீரானால் நீரை மொண்டு எரிப்பீராக! என்று திருத்தொண்டர்க்குக் கூறினர், தெளிவில்லாமல் ஒரு பொருளே பெய்யும் மெய்யுமாகும் என்ற கொள்கை மேற்கொண்டு நடக்கும் குற்றமுடைய நெறியையுடைய அந்தச் சமணர்.

1876. அருகர் மதியா துரைத்தவுரை ஆற்றா ராகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறையணிந்த
முருகு விரியும் மலர்க்கொன்றை முடியார் கோயில் முன்எய்தி
உருகும் அன்பர் பணிந்துவிழ ஒருவாக் கெழுந்த துயர்விசும்பில்.

தெளிவுரை : மேற்கண்ட வண்ணம் சமணர் மதியாது சொன்ன சொல்லைக் கேட்டுப் பொறுத்துக் கொள்ள இயலாதவராகி அப்போதே மனத்தில் பொருந்தும் வருத்தத்துடன், அங்கிருந்து நீங்கிச் சென்று, பிறையைச் சூடிய மணம் வீசும் கொன்றை மலரை அணிந்த சடையையுடைய சிவபெருமானின் கோயில் முன்பு சேர்ந்து, உள்ளம் உருகும் அன்பர் பணிந்து வீழ்ந்தார். அச்சமயத்தில் வானத்தினின்றும் ஒரு திருவாக்குத் தோன்றியது.

1877. வந்த கவலை மாற்றும்இனி மாறா விளக்குப் பணிமாற
இந்த மருங்கில் குளத்துநீர் முகந்து கொடுவந் தேற்றுமென
அந்தி மதியம் அணிந்தபிரான் அருளால் எழுந்த மொழிகேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வ தறிந்திலரால்.

தெளிவுரை : உனக்கு உண்டான கவலையை மாற்றிக் கொள்ளும். இனி இடைவிடாமல் திருவிளக்குப் பணியைச் செய்வதற்குப் பக்கத்தில் உள்ள இந்தக் குளத்தின் நீரை முகந்து கொணர்ந்து விளக்கை ஏற்றுவாயாக ! என்று மாலைக் காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரனை அணிந்த சிவபெருமானின் அருளால் எழுந்த சொல்லைக் கேட்டு நமிநந்தி அடிகள் மனம் மகிழ்ந்து செய்வதறியாமல் நின்றார்.

1878. சென்னி மிசைநீர் தரித்தபிரான் அருளே சிந்தை செய்தெழுவார்
நன்னீர்ப் பொய்கை நடுப்புக்கு நாதர் நாமம் நவின்றேத்தி
அந்நீர் முகந்து கொண்டேறி அப்பர் கோயில் அடைந்தகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்குந் திரிமேல் நீர்வார்த்தார்.

தெளிவுரை : தலையில் கங்கையை அணிந்த சிவபெருமானின் அருளை எண்ணிய வண்ணம் எழுவாராகி நல்ல நீரையுடைய அந்தக் குளத்தில் புகுந்து இறைவரின் திருநாமமான பெருமந்திரத்தைக் கூறித் துதித்த வண்ணம் அந்தக் குளத்து நீரை மொண்டு எடுத்துக் கொண்டு மேல் ஏறி அப்பரின் அரன்நெறிக் கோயிலை அடைந்து, கடல் சூழ்ந்த உலகத்தவர் வியந்து காணும்படி, அகலுள் முறுக்கிய திரியின் மீது அந்நீரை வார்த்தார்.

1879. சோதி விளக்கொன் றேற்றுதலும் சுடர்விட் டெழுந்த ததுநோக்கி
ஆதி முதல்வர் அரனெறியார் கோயில் அடைய விளக்கேற்றி
ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிருங் களிப்பினுடன்
நாதர் அருளால் திருவிளக்கு நீரால் எரித்தார் நாடறிய.

தெளிவுரை : அந்த அகல் விளக்கு ஒன்றில் தீயை ஏற்றுதலும் அது சுடர் விட்டு மேல் நோக்கி எழுந்து எரிந்தது. அதைப் பார்த்து ஆதி முதல்வரான அரனெறியப்பரின் திருக்கோயில் முழுவதும் எங்கும் திருவிளக்குகளை ஏற்றுவித்துக் குற்றமே நினைந்து நிந்தை கூறிய சமணர்களின் எதிரில் மிக்குப் பெருகிய மகிழ்ச்சியுடன் இறைவரின் திருவருளால் நாடு முழுவதும் அறியுமாறு நீரை வார்த்துத் திருவிளக்கை எரித்தார்.

1880. நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்றெரியக்
குறையுந் தகளி களுக்கெல்லாம் கொள்ள வேண்டும் நீர்வார்த்து
மறையின் பொருளை அர்ச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே அணைவார் பணிவுற் றொருப்பட்டார்.

தெளிவுரை : விடியும் வரை திருவிளக்குகள் அணையாமல் நின்று எரியும் பொருட்டு, எரிவதால் விளக்கின் நெய்யான நீர் குறையும் அகல்களில் எல்லாம் நிறையும் தன்மையில் எரியும் தன்மைக்கும் அகலின் அளவுக்கும் ஏற்றவாறு கொள்ளத்தக்க நீரை விளக்கு நெய்யாய் வார்த்து, வேதப் பொருளான சிவபெருமானைத் தம் இல்லத்தில் வைத்துப் பூசனை செய்யும் நியதி தவறாமல் தாம் வாழும் ஏமப்பேறு என்னும் ஊரில் அன்றைய இரவே சேர்பவராய், இறைவரைத் தொழுது புறப்பட்டார்.

1881. இரவு சென்று தம்பதியில் எய்தி மனைபுக் கென்றும்போல்
விரவி நியமத் தொழில்முறையே விமலர் தம்மை அருச்சித்துப்
பரவி அமுது செய்தருளிப் பள்ளி கொண்டு புலர்காலை
அரவம் அணிவார் பூசையமைத் தாரூர் நகரின் மீண்டணைந்தார்.

தெளிவுரை : அன்றிரவே சென்று தம் நகரில் சேர்ந்து மனையுள் புகுந்து நாள்தோறும் தாம் செய்வதைப் போல் பொருந்திய நியமமாகச் செய்யும் பூசைமுறைச் செயல்களின் முறைப்படியே விமலரைப் பூசித்துப் போற்றிப் பின்பு திருவமுது செய்தருளிப் பள்ளி கொண்டு, விடியலில் எழுந்து, பாம்பை அணிந்த இறைவரின் பூசை நியமத்தை முடித்துக் கொண்டு, திருவாரூர்த் திருநகரத்தை மீண்டும் வந்து அடைந்தார்.

1882. வந்து வணங்கி அரனெறியார் மகிழுங் கோயில் வலங்கொண்டு
சிந்தை மகிழப் பணிந்தெழுந்து புறம்பும் உள்ளுந் திருப்பணிகள்
முந்த முயன்று பகலெல்லாம் முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத் தரியவிளக் கெங்கும் ஏற்றி அடிபணிவார்.

தெளிவுரை : திருவாரூர் வந்து வணங்கி அரன்நெறியப்பர் விரும்பி விளங்க வீற்றிருக்கும் கோயிலை வலமாக வந்து மன மகிழ்ச்சியுடன் கீழே விழுந்து வணங்கிப் பணிந்து எழுந்து, கோயிலின் உள் பக்கத்திலும் வெளிப்பக்கத்திலும் செய்யக்கூடிய பல பணிகளையும் முதலில் செய்து அந்த நாளில் பகற்காலத்தில் முழுமையும் முறைமைப்படி செய்து முடித்து அந்தணரான நமிநந்தியடிகள் மாலைக் காலம் வர அப்போது அரிய திருவிளக்குகளை ஏற்றி அடி பணிவாரானார்.

1883. பண்டு போலப் பலநாளும் பயிலும் பணிசெய் தவர்ஒழுகத்
தண்டி அடிக ளால்அமணர் கலக்கம் விளைந்து சார்வில்அமண்
குண்டர் அழிய ஏழுலகும் குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர்கழல் அமரர் பணியும் அணியாரூர்.

தெளிவுரை : முன்பு போலவே பல நாள்களிலும் பொருந்தும் பணிகள் செய்து அவர் ஒழுகி வந்தார். தண்டி அடிகளால் சமணர்களுக்குக் கலக்கம் சேர்ந்ததால் நற் சார்பு இல்லாத சமணர்களான கீழ் மக்கள் அழிந்தொழிந்தனர். தேவர் தலைவரான தியாகேசர் அடியார்களின் அடிகளைத் தேவர்கள் போற்றுதற்கு இடமான திருவாரூரில் ஏழ் உலகங்களும் போற்றும் பெருமை விளங்கியது.

1884. நாத மறைதேர் நமிநந்தி அடிக ளார்நற் தொண்டாகப்
பூத நாதர் புற்றிடங்கொள் புனிதர்க் கமுது படிமுதலாம்
நீதி வளவன் தான்வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின்
மீது திகழ இருந்தமைத்தான் வேதா கமநூல் விதிவிளங்க.

தெளிவுரை : நாதத்தின் வடிவான வேதங்களைக் கற்றுத் தெளிந்த நமிநந்தியடிகளின் நல்ல தொண்டுகள் பயனாக பூதத் தலைவரான புனித இறைவர்க்கு நாள்தோறும் நிவேதனத்துக்குரிய திருவமுது படி முதலாகத் தான் வேண்டியபடியே நிவந்தங்கள் பலவற்றையும் வேதங்கள் ஆகமங்கள் முதலான நூல்களில் விதித்தவாறே விளங்கும் படி நீதியுடைய சோழர் தன் அரியணையில் வீற்றிருந்து அமைத்தார்.

1885. வென்றி விடையார் மதிச்சடையார் வீதி விடங்கப் பெருமாள்தாம்
என்றுந் திருவா ரூர்ஆளும் இயல்பின் முறைமைத் திருவிளையாட்
டொன்றுஞ் செயலும் பங்குனிஉத் திரமாந் திருநாள் உயர்சிறப்பும்
நின்று விண்ணப் பஞ்செய்த படிசெய் தருளும் நிலைபெற்றார்.

தெளிவுரை : வெற்றி பொருந்திய காளையை உடையவரும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவரும் ஆகிய வீதி விடங்கப் பெருமான், என்றும் திருவாரூரினை ஆட்சி செய்யும் இயல்பின் முறையான திருவிளையாடல் பொருந்திய செயலையும், பங்குனி உத்தரமான திருநாளில் உயர்ந்த திருவிழாவையும் நின்று விழாக் கொண்டருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அவ்வாறே விழாக் கொண்டருளும் நிலைமையையும் நமிநந்தியடிகள் பெற்றார்.

1886. இன்ன பரிசு திருப்பணிகள் பலவுஞ் செய்தே ஏழுலகும்
மன்னும் பெருமைத் திருவாரூர் மன்னர் அடியார் வழிநிற்பார்
அன்ன வண்ணந் திருவிளையாட் டாடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமிநந்தி அடிகள் தொழுதார் நாம்உய்ய.

தெளிவுரை : நமிநந்தியடிகள் இவ்வாறு பற்பல திருப்பணிகளையும் செய்து ஒழுகினார். ஏழு உலகங்களிலும் நிறையும் பெருமையை யுடைய திருவாரூர்ச் செல்வத் தியாகேசர் அடியார்களின் அன்பின் வழியே நிற்பவராதலின், அவர் விண்ணப்பித்த வண்ணமே திருவிளையாடல்களைக் கொண்டருளியவர் ஆதலின் நமிநந்தியடிகள் எந்நாளும் எல்லா நன்மைகளும் பெருக நாம் உய்யுமாறு அவரை வணங்கினர்.

1887. தேவர் பெருமான் எழுச்சிதிரு மணலிக் கொருநாள் எழுந்தருள
யாவ ரென்னா துடன்சேவித் தெல்லாக் குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமுமுடன் சேவித் தணைந்து விண்ணவர்தம்
காவ லாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார்.

தெளிவுரை : தேவரின் தலைவரான தியாகப் பெருமான் எழுச்சியாய் ஒரு நாள் திருமணலிக்கு எழுந்தருள, இவர் இன்னார் என்று கண்டறியாது ஒருங்கே கலந்து வணங்கி எல்லாக் குலத்தில் உள்ளவர்களும் உடன் கலந்து வந்து பொருந்த அடியாரான நமிநந்தி அடிகள் அவர்களுடன் கூடி வணங்கிச் சேர்ந்து தேவர்களின் காவலரான தியாகராசரின் திருவோலக்கத்தை அங்கே பார்த்து மகிழ்வு எய்தினார்.

1888. பொழுது வைகச் சேவித்துப் புனிதர் மீண்டுங் கோயில்புகத்
தொழுது தம்மூர் மருங்கணைந்து தூய மனையுள் புகுதாதே
இழுதும் இருள்சேர் இரவுபுறங் கடையில் துயில இல்லத்து
முழுதுந் தருமம் புரிமனையார் வந்துள் புகுத மொழிகின்றார்.

தெளிவுரை : பகல் பொழுது உள்ள வரையிலும் வணங்கிய வண்ணம் இருந்து இறைவர் திரும்பவும் தம் கோயிலுக்கு எழுந்தருளவும், அவரைத் தொழுது, தம் பதியினை அடைந்து தூய தம் திருமனைக்குள் புகாமல் இழுதைப் போன்ற செறிவான இருள் உள்ள இரவில் இல்லத்தின் வெளியே உறங்கினார். அப்போது இல்லறங்கள் முற்றும் செய்யும் மனைவியார் வந்து நாயகரை உள்ளே வருமாறு சொல்வார் ஆனார்.

1889. திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச் செய்யுங் கடன்முறையால்
அங்கி தனைவேட் டமுதுசெய்து பள்ளி கொள்வீர் எனஅவர்க்குத்
தங்கள் பெருமான் திருமணலிக் கெழுச்சி சேவித் துடன்நண்ண
எங்கும் எல்லா ரும்போத இழிவு தொடக்கிற் றெனைஎன்று.

தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சூடிய முடியையுடைய சிவ பெருமானின் பூசைகளை முடித்துச் செய்கின்ற கடமை முறைமைப்படி அக்கினி காரியமும் செய்து உறங்குவீராக ! என்று அவருடைய மனைவியார் உரைத்தார். உரைக்க, அவருக்கு, நம் தலைவரான இறைவர் மணலிக்கு எழுந்தருளும் எழுச்சியை வணங்கி உடன் கலக்குமாறு எவ்விடத்தும் எல்லாரும் கலந்து வந்ததால் என்னை இழிவு தீண்டியது (எனக்கு இழிவு உண்டாக்கியது) என்று சொல்லி,

1890. ஆத லாலே குளித்தடுத்த தூய்மை செய்தே அகம்புகுந்து
வேத நாதர் பூசையினைத் தொடங்க வேண்டும் அதற்குநீ
சீத நன்னீர் முதலான கொண்டிங் கணைவாய் எனச்செப்பக்
காதல் மனையார் தாமும்அவை கொணரும் அதற்குக் கடிதணைந்தார்.

தெளிவுரை : ஆதலால் நீராடிப் பின்பு அடுத்தபடி தூய்மையைச் செய்த பின்னரே இல்லத்துக்குள் வந்து பூசையைச் செய்ய வேண்டும். எனவே, அதற்கு நீ குளிர்ந்த நீர் முதலியவற்றைக் கொணர்வாயாக ! எனக் கூறினார். நமிநந்தி அடிகள். அவருடைய மனைவியாரும் அவற்றைக் கொண்டு வருவதற்கு விரைவாகப் போனார்.

1891. ஆய பொழுது தம்பெருமான் அருளா லேயோ மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்தணைய விண்ணோர் பெருமான் கழல்நினைந்து
தூய அன்பர் துயில்கொண்டார் துயிலும் பொழுது கனவின்கண்.

தெளிவுரை : அச்சமயத்தில், தம் இறைவரின் அருளாலோ அல்லது அவரது உடலில் வழிநடந்து வந்த களைப்பாலோ, இன்ன காரணத்தால் என்று அறியோம் ! சிறிதும் தாமதிக் காது உறக்கம் வந்து சேரத் தேவர் பெருமானை, சிவ பெருமானின் அடிகளை நினைந்த வண்ணம் நமிநந்தியடிகள் உறக்கம் கொண்டார். அங்ஙனம் உறங்கிய போது அவரது கனவில்,

1892. மேன்மை விளங்குந் திருவாரூர் வீதி விடங்கப் பெருமாள்தாம்
மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்தருளி
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நங்கணங்கள்
ஆன பரிசு காண்பாய்என் றருளிச் செய்தங் கெதிர்அகன்றார்.

தெளிவுரை : பெருமை விளங்குவதற்கு இடமான திருவாரூர் வீதி விடங்கப் பெருமான், தாமே, பெருமை கொண்ட நமிநந்தியடிகளின் பூசனை ஏற்பதற்கு வருபவர் போல் எழுந்தருளி வந்து திருவாரூர்ப் பிறந்தவர் எல்லாம் ஞான மறையவராய் நம் சிவகணங்கள் தன்மையை நாம் காண்பிக்க நீ காண்பாயாக ! என அருளிச் செய்து அவர் எதிரே இருந்து மறைந்தருளினார்.

1893. ஆதி தேவர் எழுந்தருள உணர்ந்தார் இரவர்ச் சனைசெய்யா
தேதம் நினைந்தேன் எனஅஞ்சி எழுந்த படியே வழிபட்டு
மாத ரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு
நாத னார்தந் திருவாரூர் புகுத எதிர்அந் நகர்காண்பார்.

தெளிவுரை : ஆதி தேவரான சிவபெருமான் மறைந்தருள நமிநந்தியடிகள் உணர்ந்தவராகி, இரவில் செய்யும் பூசையைச் செய்யாமல் பிழைபட எண்ணினேன் ! என்று அஞ்சி, எழுந்தபடியே வணங்கி உள்ளே புகுந்து, வழிபட்டு, மனைவியாருக்கும் கனவில் நேர்ந்த செய்தியைத் தெரிவித்தார். விடியற்காலையில் விரைவாய் இறைவரின் திருவாரூரில் புகுந்திட எதிரில் அத்திருவாரூரில் நகரத்தைக் காண்பாரான அவர்,

1894. தெய்வப் பெருமாள் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும்
மைவைத் தனைய மணிகண்டர் வடிவே யாகிப் பெருகொளியால்
மொய்வைத் தமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத் தஞ்சி அவனிமிசை விழுந்து பணிந்து களிசிறந்தார்.

தெளிவுரை : தேவர்களின் தலைவரான தியாகேசன் திருவாரூரில் பிறந்து வாழ்பவர் எல்லாம் கரிய திருக்கழுத்தை உடைய சிவபெருமானின் திருவடிவத்தையே உடையவர்களாகிப் பெருகும் ஒளியால் திரண்ட மேனியை உடையவராய் விளங்கும் இயல்பைப், பார்த்துத் தலைமீது கூப்பிய கை தூக்கி வைத்து அஞ்சி நிலத்தில் படிய விழுந்து வணங்கி மிகவும் களிப்பை அடைந்தார்.

1895. படிவம் மாற்றிப் பழம்படியே நிகழ்வுங் கண்டு பரமர்பால்
அடியேன் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று பணிந்தருளால்
குடியும் திருவா ரூரகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகுந் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார்.

தெளிவுரை : முன் காட்டிய கோலத்தை மறைக்க, முன் இருந்தபடியே நிகழ்வதையும் பார்த்து, இறைவரிடம் அடியேன் பிழையைப் பொறுத்தருள வேண்டும் ! என்று வேண்டி வணங்கித் திருவருளால் தம் தலத்தினின்றும் திருவாரூரில் குடிபுகுந்து வாழ்வாரானார்; உலகத்தில் நெடிது பெருகும் தொண்டுகள் பலவற்றையும் நிகழும்படி செய்து வரலானார்.

1896. நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி யாகவே
வேறு வேறு வேண்டுவன எல்லாஞ் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப்புற்றில் இருந்தார் தொண்டர்க் காணியெனும்
பேறு திருநா வுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார்.

தெளிவுரை : திருநீற்றினை அணியும் சிவபெருமானின் அடியார்களுக்கு நீண்ட காலமாக நியதியாக வேறு வேறாக வேண்டுவன பலவற்றையும் செய்தமையால், உயர்வாகிய சிறப்புடன் மணிப்புற்றை இடமாகக் கொண்டு வாழ்கின்ற இறைவரின் தொண்டர்க்கு ஆணிப் பொன்னாவார் இவர் என்று திருநாவுக்கரசு பெருமானால் பாராட்டும் பேறு உடையவராய்,

1897. இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழச்செய்து
நன்மை பெருகும் நமிநந்தி அடிகள் நயமார் திருவீதிச்
சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல்மிகும் வளர்பொற் சோதி மன்னினார்.

தெளிவுரை : நன்மைகள் பெருக விளங்கும் நமிநந்தி அடிகள் இங்ஙனம் எல்லாவுலகும் தொழும்படியாய்த் திருப்பணிகள் பலவற்றையும் செய்து, நலம் பொருந்தும் திருவீதியில், தலையில் பிறையும் கங்கையும் சூடும் இறைவரான திருவாரூர்த் தியாகப் பெருமானின் திருவடி நிழலில் வளர்கின்ற அழகிய சோதியுள் நிலைபெறச் சேர்ந்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார் துதி

1898. நாட்டார் அறிய முன்னாளில் நன்னாள் உலந்த ஐம்படையின்
பூட்டார் மார்பிற் சிறியமறைப் புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த்
தாள்தா மரைநீர் மடுவின்கண் தனிமா முதலை வாய்நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே.

தெளிவுரை : நாட்டில் உள்ள மக்கள் அறியும்படி முன் நாளில், ஐம்படைத்தாலியை அணிந்த மார்பையுடைய சிறிய மறையவர் மைந்தனைப் புக்கொளியூரில் தாளையுடைய பொய்கையில் தனித்த பெரிய முதலையின் வாயினின்றும் நல்ல நாளில் மீட்டவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவடிகளே தம்மை நினைவார்களை மீளா வழியினின்றும் மீட்பவையாம் !

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் முற்றுப் பெற்றது.

திருநின்ற சருக்கம் முற்றிற்று.

 
மேலும் பனிரெண்டாம் திருமறை »
temple news
பன்னிரு திருமுறைகளில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் 12வது ... மேலும்
 
temple news
12ம் திருமுறையில் சேக்கிழாரால் பாடப்பட்ட திருத்தொண்டர் புராணம் 4286 பாடல்களும், அதன் தெளிவுரையும் கீழே ... மேலும்
 
temple news
அமர் நீதி நாயனார் புராணம் சோழநாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் தோன்றியவர் அமர்நீதி ... மேலும்
 
temple news
4. மும்மையால் உலகாண்ட சருக்கம் இச்சருக்கத்தில் மூர்த்தியார், முருகர், உருத்திர பசுபதியார், திருநாளைப் ... மேலும்
 
temple news
இரண்டாம் காண்டம் 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் 34. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் சைவ சமயம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar