Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேக்கிழார் பாடிய பன்னிரண்டாம் ... 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-2 | திருத்தொண்டர் புராணம் 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் ...
முதல் பக்கம் » பனிரெண்டாம் திருமறை
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-1 | திருத்தொண்டர் புராணம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 செப்
2011
04:09

12ம் திருமுறையில் சேக்கிழாரால் பாடப்பட்ட திருத்தொண்டர் புராணம் 4286 பாடல்களும், அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதற் காண்டம்
1. பாயிரம்

வாழ்த்து

1. உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

தெளிவுரை : உலகங்கள் எல்லாவற்றாலும் இன்ன தன்மையன் என்று உணர்தற்கும் இன்ன தன்மையன் என்று சொல்வதற்கும் அரியவனாயும், அவ்வாறு அரியவன் ஆயினும் யாவரும் எளிதில் கண்டு உய்ய வேண்டும் என்ற அருளால் மூன்றாம் பிறைச் சந்திரன் உலாவுவதற்கு இடமாய்க் கங்கையாற்றைத் தரித்த சடையை உடையவனாயும், அளவில்லாத ஒளியை உடையவனாயும், தில்லைப் பதியில் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தக் கூத்து ஆடுபவனாயும் உள்ள இறைவனின், அன்பரின் உள்ளத்தில் மலரும் சிலம்பினை அணிந்த திருவடிகளை, வாழ்த்தி வணங்குவோம்.

2. ஊன டைந்த உடம்பின் பிறவியே
தான டைந்த உறுதியைச் சாருமால்
தேன டைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
மாந டம்செய் வரதர்பொற் றாள்தொழ.

தெளிவுரை : தேனையுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த நிலையில், பெருங்கூத்து ஆடுகின்ற வரம் கொடுக்கும் தன்மையுடையவனின் பொன்னடிகளை வணங்க, ஊன் பொருந்திய உடலுடன் கூடிய மனிதப் பிறவியே தான் பெற்ற உறுதிப் பொருளைச் சேரும்.

3. எடுக்கும் மாக்கதை இன்றமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள் முடிக்
கடக்க ளிற்றைக் கருத்துள் இருத்துவாம்.

தெளிவுரை : உயிர்களையெல்லாம் பாவங்களாகிய குற்றங்களிலிருந்து எடுத்து உய்யச் செய்யும் தன்மை கொண்ட இந்தப் பெரிய புராணம், இனிய தமிழ்ப் பாட்டுகளாக இனிதாய் நிறைவேறி உலகில் பொருந்திய மேன்மையை நமக்கு அருள் செய்யும் பொருட்டாய், ஐந்து பெரிய கைகளையும் தாழ்ந்த காதுகளையும் நீண்ட முடிகளையும் உடைய மத யானையின் முகம் கொண்ட விநாயகப் பெருமானை உள்ளத்தில் பதிய வைப்போம்.

திருக்கூட்டம்

4. மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன்
துதிசெயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே.

தெளிவுரை : மூன்றாம் பிறைச் சந்திரன் வளர்வதற்கு இடமான சடையையுடைய கூத்தப் பெருமானை நினைந்து துதித்துச் செயல் செய்யும் நாயன்மார்களின் தூய்மையான சொன் மலரின் நலத்தை அனுபவிக்கும் தூயவர் நிறைந்த அடியார் திருக்கூட்டமானது இறைவனின் ஆணையின் வழியே உலகில் விளக்கம் அடைந்து வெற்றி பெறுக.

அவையடக்கம்

5. அளவி லாத பெருமைய ராகிய
அளவி லாஅடி யார்புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பரி தாயினும்
அளவில் ஆசை துரப்ப அறைகுவேன்.

தெளிவுரை : அளவில்லாத பெருமைகளைக் கொண்டவர்களான அடியவரின் புகழினை எங்ஙனம் எடுத்து உரைக்க வல்லேன்? அவற்றை அளவு கூடும்படி எடுத்துக் கூறுவது அரிது. இருப்பினும், எனது இயலாமையை எண்ணித் தடுத்தேனாயினும் தடுக்க இயலாது. அளவில்லாத ஆசை என்னைச் சொல்வாயாக என்று தூண்டுவதால் சொல்லத் துணிவு கொள்கிறேன்.

6. தெரிவ ரும்பெரு மைத்திருத் தொண்டர் தம்
பொருவ ருஞ்சீர் புகலலுற் றேன்முற்றப்
பெருகு தெண்கடல் ஊற்றுண் பெருநசை
ஒருசு ணங்கனை ஒக்கும் தகைமையேன்.

தெளிவுரை : பெருகிய அமிர்தமான பாற்கடலை ஊற்றுக் காண வேண்டும் என்ற பேராசை கொண்ட ஒரு நாயினைப் போன்ற தன்மையுடையவன் நான். ஆயினும் அறிவதற்கு இயலாத பெருமையுடைய திருத் தொண்டர்களின் நிகர் இல்லாத சிறப்புகளை எடுத்துச் சொல்ல முற்படுகின்றேன்.

7. செப்ப லுற்ற பொருளின் சிறப்பினால்
அப்பொ ருட்குரை யாவருங் கொள்வரால்
இப்பொ ருட்கென் னுரைசிறி தாயினும்
மெய்ப்பொ ருட்குரி யார்கொள்வர் மேன்மையால்.

தெளிவுரை : சொல்லால் உணர்த்தப்படும் பொருள் சிறந்ததானால் அதைச் சொல்லும் சொல் சிறந்ததாகாது போயினும், அது பற்றி இகழாது பொருளின் சிறப்பை எண்ணி அப் பொருளைச் சொல்லும் அச் சொல்லை யாவரும் கைக் கொள்வர். ஆகவே, இக்காப்பியத்துள் குறித்த அடியார் புகழ்களான பெரும் பொருளுக்கு என் சொல் சிறிதே என்றாலும், உண்மைப் பொருளையே விரும்பும் உரிமை உடைய சான்றோர் இதனை அந்தப் பொருள் சிறப்பை எண்ணி இகழாமல் கைக் கொள்வர்.

8. மேய இவ்வுரை கொண்டு விரும்புமாம்
சேய வன்திருப் பேரம் பலஞ்செய்ய
தூய பொன்னணி சோழன்நீ டூழிபார்
ஆய சீர்அந பாயன் அரசவை.

தெளிவுரை : சிவந்த மேனியையுடைய கூத்தப் பெருமானின் பேரம்பலமான சபையைப் பொன்னால் வேய்ந்து அழகுபடுத்திய சோழர் பெருமானான உலகத்தில் நீடு நிலைத்துப் புகழும் சிறப்பும் கொண்ட அநபாயச் சோழ மன்னனின் அரச அவையானது, மேலே உரைத்தபடி சிறந்த பொருளை இந்நூல் தன்னுள் கொண்டிருப்பதால், இதை ஏற்றுக் கொண்டு விரும்பும்.

9. அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவருந்
தெருளின் நீரிது செப்புதற் காமெனின்
வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப்புகல் வாமன்றே.

தெளிவுரை : அருளின் தன்மையாய் விளங்கும் திருத்தொண்டின் புகழ் அறிவதற்கு அரியது என்று உணர்ந்த நீர் இதைச் சொல்லப் புகுந்ததற்குக் காரணம் யாது? என்று வினவு வீராயின், மெய்ம் மொழியால் வானில் அமர்ந்து சொல்லி யருளிய பொருள் துணையால், அப்பெருமான் மெய்ம் மொழி கூறிய துணையான் அன்றே அது கூறுவதற்குரியதே யாம் என்று துணிந்து சொல்வோம்.

நூற்பெயர்

10. இங்கிதன் நாமங் கூறின் இவ்வுல கத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புறவிருள் போக்கு கின்ற
செங்கதி ரவன்போல் நீக்குந் திருத்தொண்டர் புராணம என்பாம்.

தெளிவுரை : இப் புராணத்தின் பெயர் என்னவென்று கூறுவோமாயின், ஆதிகாலத்திலிருந்து இங்குள்ள இருவேறு இருள் கூட்டங்களிலே புற இருளைப் போக்குகின்ற கதிரவனைப் போல், மக்களின் உள்ளத்தில் பொருந்தி நின்று பொங்கிய அக இருளான ஆணவத்தைப் போக்கி உதவும் திருத்தொண்டர் புராணம் எனக் கூறுவோம்.

பாயிரம் முற்றுப் பெற்றது

1. திருமலைச் சருக்கம்

2. திருமலைச் சிறப்பு

11.பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கும் அறிவரி யான்என்றும்
மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை.

தெளிவுரை : யாவருக்கும் தம் தன்மை இன்னது என்று அறிவதற்கு அரியதான சிவபெருமானின் எக்காலத்தும் நீங்காமல் பொருந்தி வாழ்வதற்கு இடமான கயிலை என்ற பெருமையுடைய மலை, பொன் மீது வெண்மையான திருநீற்றை அணிந்தது போல் எடுத்துக் கூறுவதற்குரிய நீண்ட இமயமலையில் உள்ளது.

12. அண்ணல் வீற்றிருக் கப்பெற்ற தாதலின்
நண்ணு மூன்றுல குந்நான் மறைகளும்
எண்ணில் மாதவஞ் செய்யவந் தெய்திய
புண்ணி யந்திரண் டுள்ளது போல்வது.

தெளிவுரை : இம்மலை, பெருமையுடைய சிவபெருமான் விரும்பி எழுந்தருளி என்றும் நிலை பெற்றுள்ள தன்மை பெற்ற மலையாதலால், பொருந்தும் மூன்று உலகங்களும் நான்கு வேதங்களும் அளவற்ற பெரிய தவம் செய்ததால் நேரே கண்ணால் பார்க்கும்படி வந்து சேர்ந்த புண்ணியங்களான யாவையும் ஒருங்கு கூடியதைப் போல் விளங்குவதாகும்.

13. நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி
இலகு தண்தளி ராக எழுந்ததோர்
உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்
மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை.

தெளிவுரை : அந்தப் பெரிய கயிலை மலையானது, நிலைத்த எண்ணில்லாத தலங்களைத் தன் ஒளி வீசி விளங்கும் குளிர்ந்த தளிர்களாய்க் கொண்டு முளைத்து எழுந்த உலகம் என்ற ஒப்பில்லாத ஒளி வீசுகின்ற அழகான கொடியின் உச்சியில் மலர்கின்ற வெண்மையான நிறமுடைய பூப்போல் விளங்குவதாகும்.

14. மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்
கான வீணையின் ஓசையும் காரெதிர்
தான மாக்கள் முழக்கமும் தாவில்சீர்
வான துந்துபி யார்ப்பும் மருங்கெலாம்.

தெளிவுரை : அத்தகைய மலையின் பக்கங்களில் எல்லாம் மேன்மையுடைய நான்கு வேதங்களின் ஒலியும், வித்தியாதரர் முதலியவரின் பாட்டினாலும் வீணையினாலும் செய்யும் ஒலிகளும், மேகங்களும், யானைக் கூட்டங்களும் ஒன்றிற்கு ஒன்று எதிராய்ச் செய்யும் ஒலிகளும், குற்றம் அற்றவான துந்துபி முரசுகளின் ஒலிகளும் நிறைந்து விளங்கும்.

15. பனிவி சும்பி லமரர் பணிந்துசூழ்
அனித கோடி அணிமுடி மாலையும்
புனித கற்பகப் பொன்னரி மாலையும்
முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெலாம்.

தெளிவுரை : அந்தக் கயிலை மலையின் முன் பக்கங்களில் குளிர்ந்த வான் உலகத்தில் உள்ள வானவர் வணங்கிச் சூழ்கின்ற பல முடிகளின் வரிசையும், தூய்மையான கற்பக மலர்களால் கட்டப்பட்ட பொன் இதழ்களையுடைய மலர் மாலைகளும், துறவியர் வணங்கி நிற்கும் வரிசையும் நிறைந்து விளங்கும்.

16. நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
நாடும் ஐம்பெரும் பூதமும் நாட்டுவ
கோடி கோடி குறட்சிறு பூதங்கள்
பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்.

தெளிவுரை : அக்கயிலை மலையின் பக்கங்களில் எல்லாம் பெரிய தேவர் பதங்களையும், வேண்டுமானால் உலக காரணமாய் நாடும் ஐம்பூதங்களையும் தாம் நினைத்த வண்ணம் நிலை நாட்ட வல்ல பலப்பல கோடியான சிறிய குறுகிய வடிவம் உள்ள சிவ பூத கணங்கள் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் உள்ள பரந்த இடங்களைக் கொண்டு விளங்கும்.

17. நாய கன்கழல் சேவிக்க நான்முகன்
மேய காலம் அலாமையின் மீண்டவன்
தூய மால்வரைச் சோதியின் மூழ்கியொன்
றாய அன்னமும் காணா தயர்க்குமால்.

தெளிவுரை : சிவபெருமானின் திருவடிகளை வணங்கச் சென்ற நான்முகன், அப்போது அதற்குரிய காலமாய் இல்லாது போன காரணத்தால், திரும்பி வந்து, அந்த இறைவனின் தூய பெரிய மலையின் வெண்ணிறப் பேரொளியிலே கலந்து அதனுடன் ஒன்றானதால், தனது ஊர்தியான அன்னப் பறவையைக் காண இயலாமல் வருந்துவான்.

18. காதில்வெண் குழையோன் கழல்தொழ நெடியோன்
காலம்பார்த் திருந்ததும் அறியான்
சோதிவெண் கயிலைத் தாழ்வரை முழையில்
துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு
மீதெழு பண்டைச் செழுஞ்சுடர் இன்று
வெண்சுட ரானதென் றதன் கீழ்
ஆதிஏ னமதாய் இடக்கலுற் றானென்
றதனைவந் தணைதருங் கலுழன்.

தெளிவுரை : செவியில் வெண் சங்குக் குழையை அணிந்த சிவ பெருமானின் திருவடிகளைத் தொழுவதற்குத் திருமால் தக்க காலத்தை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருந்தான். கருடன் அதனை அறியாதவனாய், வெண்மையான ஒளியுடைய கயிலை மலையின் சாரலில் உள்ள ஒரு குகையில் விநாயகரின் ஊர்தியான பெருச்சாளியைப் பார்த்து, முற்காலத்தில் மேலே எழுந்த செழுஞ் சுடரானது இன்று வெள்ளை ஒளித்தூணாய் நிற்பதான நினைவால் அதை வெள்ளைப் பன்றி வடிவு கொண்டு தன் தலைவன் திருமால், அடி தேடி நிலம் தோண்டி நிற்கின்றான் என நினைத்து அப்பெருச்சாளியிடம் வந்து நின்றது.

19. அரம்பைய ராடல் முழவுடன் மருங்கின்
அருவிகள் எதிரெதிர் முழங்க
வரம்பெறு காதல் மனத்துடன் தெய்வ
மதுமல ரிருகையும் ஏந்தி
நிரந்தரம் மிடைந்த விமானசோ பான
நீடுயர் வழியினால் ஏறிப்
புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப்
பொலிவதத் திருமலைப் புறம்பு.

தெளிவுரை : அந்தத் திருமலையின் பக்கம், அரம்பை முதலான தெய்வ மங்கையின் ஆடலுக்கு ஏற்ப இசைக்கும் முழவுடன், பக்கத்தில் ஓடும் மலையருவிகள் எதிர் எதிர் இசைப்பவை போல் ஒலிக்க, இறைவனிடத்தில் தாங்கள் குறித்த வரங்களைப் பெற வேண்டும் என்னும் ஆசையுடன் கூடிய, தேன் நிறைந்த கற்பக மரப் புதுப் பூக்களை இரண்டு கைகளிலும் எடுத்துக் கொண்டு, நெருங்கிய விமானங்கள் கூடிய படிவழியே ஏறிவந்து, இந்திரன் முதலான தேவர்கள் துதி செய்ய விளங்குவதாகும்.

20. வேதநான் முகன்மால் புரந்தரன் முதலாம்
விண்ணவர் எண்ணிலார் மற்றும்
காதலால் மிடைந்த முதற்பெருந் தடையாம்
கதிர்மணிக் கோபுரத் துள்ளான்
பூதவே தாளப் பெருங்கண நாதர்
போற்றிடப் பொதுவில்நின் றாடும்
நாதனார் ஆதி தேவனார் கோயில்
நாயகன் நந்தியெம் பெருமான்.

தெளிவுரை : மேலே கூறிய வண்ணம், நான்முகன், திருமால், இந்திரன் முதலான தேவர்களும், மேலும் எண்ணில்லாத முனிவர்களும் வரம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நெருங்கிக் கூடித் தடைப்பட்டு வெளியே முதல் கோபுர வாயிலில் வீற்றிருப்பார்கள். அங்குச் சிவபூதங்கள், வேதாளங்கள் முதலிய கணநாதர்களும் தம்மைத் தரிசிக்கும் படி அம்பலத்தில் நித்யமான கூத்தாடும் ஆதி நாதனும் முதற்கடவுளும் ஆன சிவபெருமானின் திருக்கோயில் அதிகாரியான நந்திதேவர் இருப்பார்.

21. நெற்றியிற் கண்ணர் நாற்பெருந் தோளர்
நீறணி மேனியர் அனேகர்
பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார்
பிஞ்ஞகன் தன்னருள் பெறுவார்
மற்றவர்க் கெல்லாந் தலைமையாம் பணியும்
மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையான் அருளினாற் பெற்றான்
காப்பதக் கயிலைமால் வரைதான்.

தெளிவுரை : நெற்றிக் கண்ணும் நான்கு தோள்களும் திருநீறு பூசிய மேனியும் உடையவராய்க் காளை யூர்தியில் எழுந்தருளும் சிவபெருமானின் அடியவர்களாகி, அப்பெருமானின் அருளைப் பெறுபவர்களாய், பலர் இருந்தனர். அந்த அடியவர்களுக்கெல்லாம் தலைவரான திருப்பணி விடையும் மலர் போன்ற கையில் உடைவாள் பிரம்பு என்பனவற்றையும், கற்றையாய் கட்டிய நீண்ட சடையையுடைய சிவபெருமானின் திருவருளால் பெற்ற நந்தி தேவர் காவல் செய்வது இந்தக் கயிலைப் பெருமலையேயாகும்.

22. கையின்மான் மழுவர் கங்கைசூழ் சடையில்
கதிரிளம் பிறைநறுங் கண்ணி
ஐயர்வீற் றிருக்குந் தன்மையி னாலும்
அளப்பரும பெருமையி னாலும்
மெய்யொளி தழைக்குந் தூய்மையி னாலும்
வென்றிவெண் குடைஅந பாயன்
செய்யகோல் அபயன் திருமனத் தோங்குந்
திருக்கயி லாயநீள் சிலம்பு.

தெளிவுரை : திருக்கயிலாயம் என்ற பெரியமலை, தம் இடக் கையில் மானும் வலக் கையில் மழுவும் உடையவராயும், கங்கையைச் சூழ்ந்த கரையைப் போன்று கட்டிய நீண்ட சடை முடியில் ஒளி வீசுகின்ற மூன்றாம் பிறைச் சந்திரனையும் நல்ல மணம் கொண்ட கொன்றை மாலையையும் உடைய தலைவராயும் உள்ள சிவ பெருமான், விரும்பி வீற்றிருக்கும் தன்மை உடைமையாலும், வெற்றியுடைய வெண்குடையையுடைய அநபாயரும் செங்கோல் ஏந்திய அபய சோழருமான மன்னரின் மனம் போல ஓங்குவதாகும்.

23. அன்ன தன்திருத் தாழ்வரை யின்னிடத்து
இன்ன தன்மையன் என்றறி யாச்சிவன்
தன்னை யேயுணர்ந் தார்வம் தழைக்கின்றான்
உன்ன ருஞ்சீர் உபமன் னியமுனி.

தெளிவுரை : அந்த இயல்புகள் கொண்ட கயிலை மலையின் ஒரு பக்கத்தில், நினைத்தற்கும் அரிய சிறப்புடைய உபமன்னிய முனிவர் இப்படிப்பட்ட இயல்பு உடையவன் என்று எவராலும் அறிய இயலாத சிவபெருமானையே உணர்ந்து ஆசை பெருக அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.

24. யாத வன்துவ ரைக்கிறை யாகிய
மாத வன்முடி மேலடி வைத்தவன்
பூத நாதன் பொருவருந் தொண்டினுக்கு
ஆதி யந்தம் இலாமை யடைந்தவன்.

தெளிவுரை : அந்த உபமன்னிய முனிவர், யாதவனும் துவாரகைக்கு மன்னனுமான கண்ணனின் முடி மீது தன் அடிகளைச் சூட்டியவர்; பூதநாயகராய் உள்ள சிவ பெருமானிடத்துச் செய்கின்ற ஒப்பில்லாத தொண்டிற்கு முதலும் முடிவும் இல்லாத இயல்பைப் பெற்றவர்.

25. அத்தர் தந்த அருட்பாற் கடலுண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
பத்த ராய முனிவர்பல் லாயிரர்
சுத்த யோகிகள் சூழ இருந்துழி.

தெளிவுரை : அம்முனிவர் தம் இறைவர் தந்த அருளால் திருப்பாற் கடலைப் பருகி உள்ளம் நிறைவு பெற்றுத் தேக்கி அதுவே உருவாய் வளர்ந்தவர். பக்தர்களாக உள்ள முனிவர்கள் பல ஆயிரவர் சுத்த யோகிகள் என்ற இவர்கள் தம்மைச் சூழ்ந்திருக்க அமர்ந்திருந்த இடத்தில்,

26. அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திருந் தாரெலாம்
இங்கி தென்கொல் அதிசயம் என்றலும்.

தெளிவுரை : அங்கு ஒரு பெரிய ஒளியானது ஆயிரம் கதிரவர்கள் ஒருங்கே தோன்றி வளரும் பெரிய ஒளிபோல் முன்னால் தோன்றவே, சுற்றிலும் சூழ இருந்த முனிவர் எல்லாரும் இங்கு இது தோன்றுவது என்ன வியப்பு ! என்று உரைத்தனர்.

27. அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தி யாவுணர்ந் தம்முனி தென்திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்றொண்டன்
எந்தை யார்அரு ளால்அணை வான்என.

தெளிவுரை : துறவியர் அவ்வாறு கூறக் கேட்ட அந்த உபமன்னிய முனிவர், மாலை நேரத்தின் வானத்தில் தோன்றும் பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய சிவபெருமானின் திருவடிகளை நினைத்து உண்மை யுணர்ந்தவராய், கயிலை மலையிலிருந்து தென் திசையில் போய்த் தோன்றிய நாவலூர் நம்பி எனும் புகழ்ச்சி மிக்க வன்றொண்டரான சுந்தரமூர்த்தியார் மீண்டும் கயிலை மலைக்கு எழுந்தருள்கின்றார் என்று சிவந்த நீண்ட சடை முடியையுடைய அந்த,

28. கைகள் கூப்பித் தொழுதெழுந் தத்திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோ ரந்தணர்.

தெளிவுரை : உபமன்னிய முனிவர் உணர்ந்து கைகளைத் தலை மீது குவித்துத் தொழுதபடியே எழுந்து பேரொளி தோன்றிய அந்தத் தெற்குத்திசையை நோக்கித் தன் மேனி முழுவதும் ஆனந்த புளகம் கடலைப் போன்று கிளர்ந்து எழச் சென்றார். அதனால் தமக்குள் எழுந்த ஐயமானது நீங்கும்படி, சுற்றி இருந்த முனிவர் பின்வருமாறு கேட்கலாயினர்.

29. சம்பு வின்அடித் தாமரைப் போதலால்
எம்பி ரான்இறைஞ் சாயிஃ தென்னெனத்
தம்பி ரானைத்தன் னுள்ளந் தழீஇயவன்
நம்பி யாரூரன் நாம்தொழுந் தன்மையான்.

தெளிவுரை : சிவபெருமானின் திருவடிகளைத் தவிர வேறு எவரையும் வணங்காத இயல்புகொண்ட உபமன்னிய முனிவரே ! இப்போது இந்தச் சோதியைத் தொழுது எழுந்து தெற்குத் திக்கு நோக்கிச் செல்லும் காரணம் யாது? என வினவினார். வினவ, இங்கு வருகின்றவர் தம் பிரானான சிவபெருமானையே தம் மனம் முழுவதும் தழுவிக் கொண்டவர். அவர் பெயர் நம்பி ஆரூர் ஆவார். அவர் நம்மால் வணங்கப்படும் இயல்புடையவர்.

30. என்று கூற இறைஞ்சி இயம்புவார்
வென்ற பேரொளி யார்செய் விழுத்தவம்
நன்று கேட்க விரும்பு நசையினோம்
இன்றெ மக்குரை செய்தருள் என்றலும்.

தெளிவுரை : என்று உபமன்னிய முனிவர் மேற்கண்டவாறு கூறினார். கூற, அம்முனிவர்கள் வணங்கி, மேலே சொல்லத் தொடங்கினர். வெற்றியுடைய பெருமை பொருந்திய ஒளியுடைய இவர் (நம்பி ஆரூரர்) செய்த தூய தவத்தின் வரலாற்றை நன்கு கேட்க விரும்பும் ஆசையுடையோம். எங்கட்கு அதை இன்றே கூறியருள வேண்டும் என்று வேண்டினர். வேண்டவும்,

31. உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொரு ளாகிய
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்.

தெளிவுரை : உபமன்னிய முனிவர் அந்த மாதவர்க்கு நம்பி யாரூரரின் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார். கங்கையாற்றைச் சடையில் அணிந்த மெய்ப்பொருளான சிவபெருமான் அணிந்து கொள்ளும் மலர் மாலையையும் திருநீற்றையும் எடுத்துத் தருபவர் ஒருவர் கயிலை மலையில் உண்டு.

32. அன்ன வன்பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கொரு நாள்முதல் வன்தனக்கு
இன்ன வாமெனு நாள்மலர் கொய்திடத்
துன்னி னான்நந் தனவனச் சூழலில்.

தெளிவுரை : அவரது பெயர் ஆலால சுந்தரர். முன் காலத்தில் ஒருநாள் காலையில் இறைவனுக்குச் சாத்துவதற்காக விதிப்படி புதுமலர்களைக் கொய்து எடுக்கும் பொருட்டாய் நந்தவனத்துக்கு அந்த ஆலால சுந்தரர் சென்றார்.

33. அங்கு முன்னெமை ஆளுடை நாயகி
கொங்கு சேர்குழற் காமலர் கொய்திடத்
திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்
பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார்.

தெளிவுரை : அந்த நந்தவனத்தை ஆலால சுந்தரர் சேர்வதற்கு முன்பே, உயிர்களை ஆளும் உமை அம்மையாரின் கூந்தலுக்குரிய மலர்களைக் கொய்து வந்து தரும் பொருட்டு நிறைமதி போன்ற முகத்தையும் மேன்மேலும் கிளர்கின்ற அழகையும் உடைய மங்கையரான தோழியர் இருவர் அந்த வனத்தில் சென்றிருந்தனர்.

34. அந்த மில்சீர் அனிந்திதை ஆய்குழல்
கந்த மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருளென.

தெளிவுரை : அந்தத் தோழியர் இருவர் அளவற்ற சிறப்புடைய அநிந்திதை நுட்பமாகச் செறிந்த கூந்தலும் மணம் கமழும் மாலையும் உடைய கமலினி என்ற பெயருடையவர் ஆவார். அவர்கள் மலர்க் கொத்துக்களில் அன்று பூத்த பூக்களை ஆராய்ந்து கொய்து கொண்டிருந்த போது சிவ பெருமானின் அருளே என்னுமாறு வந்து,

35. மாத வம்செய்த தென்றிசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வாரவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதருங் காட்சியிற் கண்ணினார்.

தெளிவுரை : பெருந்தவம் செய்த தெற்குத் திக்கில் பூமி பெரு வாழ்வு அடையவும், தீமையற்ற திருத் தொண்டத் தொகை என்ற பதிகத்தை அளிக்கவும் போவாரான ஆலால சுந்தரர், அத்தோழியர் மீது மனம் செலுத்த, அவ்வாறு காதல் கொள்ளப் பெற்ற மங்கையரும் காட்சித் துறையில் ஈடுபட்டனர்.

36. முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
என்னை யாட்கொண்ட ஈசனுக் கேய்வன
பன்ம லர்கொய்து செல்லப் பனிமலர்
அன்னம் அன்னவ ருங்கொண் டகன்றபின்.

தெளிவுரை : முதலில், அங்கிருந்து ஆலால சுந்தரர் வண்டுகள் மொய்க்கும் போது, புதிய மலர்களில், என்னை ஆளுடைய இறைவனுக்கு விதிக்கப்பட்ட, பலவற்றையும் பறித்துக் கொண்டு சென்றார். செல்ல, அவ்வாறே குளிர்ந்த பூக்களைப் பறித்துக் கொண்டு அன்னப் பறவை போன்ற அம்மங்கையரும் சென்றனர், பின்,

37. ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
மாதர் மேல்மனம் வைத்தனை தென்புவி
மீது தோன்றிஅம் மெல்லிய லாருடன்
காதல் இன்பம் கலந்தணை வாயென.

தெளிவுரை : சிவபெருமான் ஆலால சுந்தரரின் செய்தியை அறிந்தவராய், நீ மங்கையர் மீது உள்ளம் வைத்தாய். ஆதலால் தெற்குத் திக்கில் தோன்றி அம்மங்கையரிடம் இன்பம் கலந்து பின்னர் இங்கு வந்து அணைவாயாக! என அருள் செய்தார். இங்ஙனம் அருள் செய்ய,

38. கைக ளஞ்சலி கூப்பிக் கலங்கினான்
செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்
மையல் மானுட மாய்மயங் கும்வழி
ஐய னேதடுத் தாண்டருள் செய்என.

தெளிவுரை : ஆலால சுந்தரரர் தம் கைகளைத் தலை மீது குவித்து மனம் கலங்கி, ஐய! செம்மையான தங்கள் திருவடிகளைப் பிரிந்து இங்கு நின்று நீங்கும் சிறுமையுடையனாகி மயக்கம் பொருந்திய மானிடப் பிறப்பில் பிறந்து மயங்கும் போது, அம்மயக்கத்தினின்று என்னைத் தாங்கள் தடுத்து ஆட்கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டார்.

39. அங்க ணாளன் அதற்கருள் செய்தபின்
நங்கை மாருடன் நம்பிமற் றத்திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாருமென்று
அங்க வன்செயல் எல்லாம் அறைந்தனன்.

தெளிவுரை : அவரது வேண்டுகோளுக்குப் பெருங் கருணையுடையவரான சிவபெருமான் , அவ்வாறே ஆகுக! என அருள் செய்தார். பின் அங்ஙனமே, நம்பியும் அந்நங்கையரும் முன் கூறிய தென் திசையில் அருள் தங்கிய மனிதப் பிறப்பில் போந்து இன்பம் அடைந்து மீண்டும் இங்கு வருகின்றனர் என்று அங்கே அவர் வரலாறு முழுவதையும் உப மன்னிய முனிவர் உரைத்தார்.

40 . அந்த ணாளரும் ஆங்கது கேட்டவர்
பந்த மானுடப் பாற்படு தென்றிசை
இந்த வான்றிசை எட்டினும் மேற்பட
வந்த புண்ணியம் யாதென மாதவன்.

தெளிவுரை : அங்கு அந்த வரலாற்றைக் கேட்ட அம்முனிவர்களும், மற்றத் திக்குகளைப் போலவே பாசவினைக்குட்பட்ட மனிதர் பிறந்து திகழ்வதற்கு இடமான எட்டுத் திக்குகளிலும் தெற்குத் திக்கானது மேலானதாக எண்ணி இவர் அங்குப் போந்ததற்குரியதாகுமாறு அந்தத் தெற்குத் திசை செய்த புண்ணியம் யாது? என்று வினவ, உபமன்னிய முனிவர் பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்.

41. பொருவ ருந்தவத் தான்புலிக் காலனாம்
அருமு னியெந்தை அர்ச்சித்து முள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப் புலியூரென்று
ஒருமை யாளர்வைப் பாம்பதி ஓங்குமால்.

தெளிவுரை : முன்னம் பலர் வழிபட்டதன்றி, ஒப்பில்லாத தவத்தையுடைய வியாக்கிர பாதர் என்னும் என் தந்தை யாரால் வழிபடப் பெற்றும் உள்ளது. அன்றியும் எல்லாப் பெருமைகளும் வந்து அடையும்படி, பெரும்பற்றப் புலியூர் என்ற பெயருடன் முனிவர்க்கு இருப்பிடமாகி அப்பதி அங்கு உயர்ந்து விளங்கும்.

42. அத்தி ருப்பதி யில்நமை ஆளுடை
மெய்த்த வக்கொடி காண விருப்புடன்
நித்தன் நீடிய அம்பலத் தாடும்மற்று
இத்தி றம்பெற லாந்திசை எத்திசை.

தெளிவுரை : மேலும் அந்தத் தலத்தில் நம்மை ஆட்கொள்கின்ற நாயகியரான சிவகாமசுந்தரி அம்மையார் விருப்பத்துடன் எப்போதும் கண்டு கொண்டிருக்க என்றும் உள்ள அம்பலத்தில் நித்தன் உருவுடன் திருக்கூத்து ஆடுகின்றான். இந்தத் திக்கே அன்றி வேறு எந்தத் திக்கு இதைப் போன்ற பெருமை கொண்டது?

43. பூதம் யாவையின் உள்ளலர் போதென
வேத மூலம் வெளிப்படு மேதினிக்
காதல் மங்கை இதய கமலமாம்
மாதொர் பாகனார் ஆருர் மலர்ந்ததால்.

தெளிவுரை : எல்லா உயிர்களிலும் உள்ளே இருந்து இதய கமலம் மலர்வதைப் போல் உலகம் என்ற காதல் மங்கையின் பிரணவம் வெளிப்படும் இடமாகிய இதய கமலம் என்னும் படியான தியாகேசர் வீற்றிருக்கும் திருவாரூர் தெற்குத் திக்கில் பொருந்தி விளங்குவதாகும்.

44. எம்பி ராட்டிஇவ் வேழுல கீன்றவள்
தம்பி ரானைத் தனித்தவத்தால் எய்திக்
கம்பை யாற்றில் வழிபடு காஞ்சிஎன்று
உம்பர் போற்றும் பதியும் உடையது.

தெளிவுரை : எம் இறைவியாயும் இந்த ஏழுலகங்களைப் பெற்ற அன்னையாயும் உள்ள காமாட்சியம்மையார் தம் பெருமானாகிய இறைவனைத் தனித் தவம் செய்து வெளிப்படக் கண்டு கங்கையாற்றில் வழிபட்ட காஞ்சி நகரம் என்னும் பெயர் கொண்ட தேவர்களும் வந்து வணங்கும் தலத்தையும் அத்தெற்குத் திக்குத் தன்னிடம் கொண்டதாகும்.

45. நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து
பொங்கு நீடருள் எய்திய பொற்பது
கங்கை வேணி மலரக் கனல்மலர்
செங்கை யாளர்ஐ யாறுந் திகழ்வது.

தெளிவுரை : நம் குருநாதரான நந்தி தேவர் தவம் செய்து வளர்ந்து நீடிய அருள் பெற்ற அழகுடையதான கங்கையாறு சடையில் மலரவும் சிவந்த கையிலே தீ மலரவும் கொண்ட இறைவனின் திருவையாறு என்ற தலமும் இத்தெற்குத் திக்கிலேயே இருப்பதாகும்.

46. தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை
ஈசர் தோணி புரத்துடன் எங்கணும்
பூச னைக்குப் பொருந்தும் இடம்பல
பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை.

தெளிவுரை : மேல் கூறப்பட்டவையே அல்லாமல் தெற்குத் திக்கில் நாடுகளை எல்லாம் விளங்கச் செய்த இறைவரின் திருத்தோணிபுரத்துடன் (சீகாழியுடன்) சிவ பூசைக்குப் பொருந்திய பல இடங்களும் உள்ளன. ஆதலால் திக்குகளின் இயல்பு பற்றிப் பேசுவோமானால் அந்தத் தெற்குத் திக்குக்கு மற்றத் திக்குகள் ஒப்பாக மாட்டா.

47. என்று மாமுனி வன்றொண்டர் செய்கையை
அன்று சொன்ன படியால் அடியவர்
துன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
இன்றெ னாதர வாலிங் கியம்புகேன்.

தெளிவுரை : மேலே கண்டவாறு உபமன்னிய முனிவர் ஆலால சுந்தரர் வன்றொண்டராகி வரும் செய்கையின் வரலாறுகளை அங்குக் கூறியருளினார். அவர் உரைத்த வண்ணமே, அடியவரின் நிறைந்த சிறப்பை விளக்கும் திருத் தொண்டத் தொகையை ஆதரவாகக் கொண்ட விரிந்த நூலான இப்பெரிய புராணத்தை இப்போது யான் என் ஆசையினால் சொல்லப் புகுவேன்

48. மற்றி தற்குப் பதிகம்வன் றொண்டர்தாம்
புற்றி டத்தெம் புராணர் அருளினால்
சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகையெனப்
பெற்ற நற்பதி கம்தொழப் பெற்றதாம்.

தெளிவுரை : இங்கு இந்த நூலுக்குப் பதிகமாக, அந்த வண்தொண்டரே புற்றை இடமாகக் கொண்ட பெருமானின் திருவருள் பற்றிக் கூறியருளிய மெய் வாக்கான திருத்தொண்டத் தொகை என்ற பேர் பெற்ற நல்ல திருப் பதிகமே தொழுது மேற்கொள்ளப் பெற்றதாகும்.

49. அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை
நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்.

தெளிவுரை : அந்தத் திருத் தொண்டத் தொகை என்ற மெய்மைப் பதிகத்திலே துதிக்கப் பெற்ற அடியார்களை நம் நாதனான நம்பி யாண்டார் நம்பி உள்ளம் மகிழ்ந்து துதித்தருளிய திருத் தொண்டர் திருவந்தாதியை வகை நூலாகவும் வழி நூலாகவும் கொண்டு எம் ஆற்றலில் திருவருள் புகுந்து கைதந்த படி தவிராது கூறுவோம்.

50. உலகம் உய்யவும் சைவம்நின் றோங்கவும்
அலகில் சீர்நம்பி ஆருரர் பாடிய
நிலவு தொண்டர்தங் கூட்ட நிறைந்துறை
குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம்.

தெளிவுரை : உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் உறுதி பெற்று உய்யும் பொருட்டாகவும் சைவத்துறையானது நிலைபெற்று நின்று வளரவும் அளவில்லாத சிறப்புகளையுடைய நம்பியாரூரர் திருத் தொண்டத் தொகையிலே பாராட்டியருளிய என்றும் நின்று நிலவும் திருத் தொண்டர் கூட்டம் எப்போதும் நிறைந்து வாழ்வதற்கு இடமாகிப் பொருந்திய குளிர்ந்த நீரான காவிரிபாயும் சோழ நாட்டின் சிறப்பை இனிக் கூறுவோம்.

திருமலைச் சிறப்பு முற்றுப் பெற்றது.

3. திருநாட்டுச் சிறப்பு

51. பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுட்
கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்
சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி
நாட்டியல் பதனையான் நவில லுற்றனன்.

தெளிவுரை : நம்பி ஆரூரர் பாடிய பாட்டான இயற்றமிழுக்குப் பொருளாகப் பரவிய எல்லைக்குள் உள்ள பல நாடுகளுள், மலைகளுள் பெரிய இமய மலையின் சிகரத்தின் உச்சியில், புலிக்கொடியை நாட்டிய புகழ் வளரும் சோழர்களால் ஆளப் பெற்ற காவிரி நாட்டின் சிறப்பு இயல்புகளை நான் சொல்லத் தொடங்குகின்றேன்.

52. ஆதிமா தவமுனி அகத்தி யன்தரு
பூதநீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர்மண் மடந்தைபொன் மார்பில் தாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்.

தெளிவுரை : முதன்மையுடைய தவமுடைய அகத்திய முனிவரால் கொணரப்பட்ட ஐம்பூதங்களுள் ஒன்றான நீரைக் கமண்டலத்திலிருந்து கவிழ்த்ததால் பெருகிய காவிரியாறானது அழகான மண் மடந்தையின் மார்பில் தாழ்ந்து தொங்கும் குளிர்ந்த முத்து மாலையைப் போல விளங்கும்.

53. சையமால் வரைபயில் தலைமை சான்றது
செய்யபூ மகட்குநற் செவிலி போன்றது
வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்
உய்யவே சுரந்தளித் தூட்டு நீரது.

தெளிவுரை : மேலும் அக்காவிரியாறு, சையம் என்ற பெரிய மலையினின்றும் வரும் பெருமையிற் சிறந்ததாகும்; செம்மை செய்யும் பூமகளை வளர்க்கின்ற செவிலித்தாய் போன்றதாகும்; உலகில் உள்ள எல்லா வகை உயிர்களையும் வளரச் செய்து நாளும் அவை உய்யுமாறு சுரந்தும் அளித்தும் உண்டாக்கும் நீரைக் கொண்டது. (மேற்கு மலைத்தொடரில் காவிரி தோன்றும் மலையைச் சைவ மலை என்றார்.)

54. மாலின்உந் திச்சுழி மலர்தன் மேல்வருஞ்
சால்பினால் பல்லுயிர் தருதன் மாண்பினால்
கோலநற் குண்டிகை தாங்குங் கொள்கையாற்
போலும்நான் முகனையும் பொன்னி மாநதி.

தெளிவுரை : (காவிரியாறானது) திருமாலின் கொப்பூழ்ச் சுழி போன்று அலைகள் தன் மீது சுழித்து வருகின்ற சிறப்பாலும், பல உயிர்களையும் இறவாது நீர் அளித்துக் காத்து வருதலாலும், அகத்திய முனிவரின் அருட் கோலம் கொண்ட கமண்டலத்தில் தங்கி வரப் பெற்ற வரலாற்றாலும், நான்முகனைப் போன்ற சிறப்புடையது. (நான்முகன், திருமாலின் கொப்பூழின் கண் உள்ள தாமரையினின்று பிறக்கும் சிறப்பாலும், பலவுயிர்களைப் படைக்கின்ற சிறப்பாலும், நல்ல குண்டிகையைத் தாங்கும் கோலம் கொண்டுள்ளமையாலும், அக்காவிரியாறானது நான்முகனைப் போன்றுள்ளது என்றார்.

55. திங்கள்சூ டியமுடிச் சிகரத் துச்சியில்
பொங்குவெண் டலைநுரை பொருது போதலால்
எங்கள்நா யகன்முடி மிசைநின் றேயிழி
கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே.

தெளிவுரை : (காவிரியாறு) சந்திரன் தவழும் உயர்ந்த சைய மலையின் மீதிருந்து தோன்றி வருவதாலும், நீர் வெள்ளம் பொங்கி வருவதால் உள்ளதான வெண்மையான தலை போன்ற உருவம் கொண்ட நுரைகளை மோதி அடித்து வருவதாலும், கங்கையாறு பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய சிவபெருமானது தலைமுடியினின்று வருவதாலும், வெண்மையான தலைகளைப் பொங்கு நுரை போல மோதி வருவதாலும் அக்காவிரி ஆற்றின் நீர் வெள்ளமானது, எம் தலைவனான சிவபெருமானின் திருமுடியினின்று வரும் கங்கையே ஆகும்.

56. வண்ணநீள் வரைதர வந்த மேன்மையால்
எண்ணில்பே ரறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல்பா கத்தையா ளுடைய நாயகி
உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.

தெளிவுரை : (காவிரி) அழகிய நீண்ட சைய மலைத் தொடர்ச்சியினின்று வந்த மேன்மையாலும், அளவில்லாத அறங்கள் எல்லாவற்றையும் வளரத் துணையாய் நிற்பதாலும், (நாயகியின் அருள் ஒழுக்கால்) எல்லா மலைகளிலும் நீண்ட இமய மலைக்கு மகளாய்த் தோன்றியதாலும், (நாயகியின் அருள் ஒழுக்கம்) எல்லா அறமும் நான் செய்ய வேண்டும் என்று கேட்டு உயிர்களுக்கு அறம் செய்யும் வித்தாக இரண்டு நாழி நெல்லைப் பெற்று அறத்தை வளர்த்த பெருங் கொடையால், அக்காவிரியாறானது, எம் பெருமானின் ஒரு பாகத்தைத் தம்முடையதாக்கிக் கொண்டு உலகத்தை ஆட் கொண்ட உமையம்மையாரின் திருவுள்ளத்தில் எல்லாவுயிர்களிடத்தும் பரவி நெகிழும் தன்மையதாம் கருணையுடைய இனிய ஒழுக்கம் போன்றதாகும்.

57. வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
எம்பி ரானை இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி
உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால்.

தெளிவுரை : மணம் கமழும் மலர்களாலும், நீராலும் வழிபட்டுச் செம்பொன் மணல் சிதறி இரு கரையிலும் உள்ள எண் இல்லாத கோயில்களில் எம்பெருமானைக் கும்பிடுவதால் குளிர்ந்த காவிரியாறு தேவர் தலைவரான சிவபெருமானின் அடியவரையும் போன்றுள்ளது.

58. வாச நீர்குடை மங்கையர் கொங்கையில்
பூசு குங்கும மும்புனை சாந்தமும்
வீசு தெண்டிரை மீதிழித் தோடுநீர்
தேசு டைத்தெனி னும்தெளி வில்லதே.

தெளிவுரை : காவிரியாறானது மணம் கமழும் நீரில் குடைந்து ஆடும் பெண்களின் கொங்கைகளில் பூசிய குங்குமச் சந்தனப் பூச்சுகளை மேலே வீசும் அலைகளால் அழித்தபடி ஓடுவதால், அந்த நீர் மேல் கூறப்பட்ட பல காரணங்களாலும் தூய்மையும் ஒளியும் இயல்பில் உள்ளது எனினும் தெளிவில்லாததாகும்.

59. மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு
பூவி ரித்த புதுமதுப் பொங்கிட
வாவி யிற்பொலி நாடு வளந்தரக்
காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால்.

தெளிவுரை : வண்டுகள் எழுந்து ஆரவாரம் செய்ய மலையினின்று அடித்து வரும் புதிய பூக்களின் தேன் பொங்க அங்கங்கே நீர் நிலைகள் நிறைந்த காட்டுக்கு வளத்தைத் தருதற் பொருட்டாய் காவிரியின் வெள்ள நீர் கால்வாய்களில் எங்கும் பரந்து ஓடும்.

60. ஒண்து றைத்தலை மாமத கூடுபோய்
மண்டு நீர்வய லுட்புக வந்தெதிர்
கொண்ட மள்ளர் குரைத்தகை ஓசைபோய்
அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால்.

தெளிவுரை : ஒளி பொருந்திய துறையிலே பெரிய மதகுகளின் வழியே போய் மிக்க புதிய வெள்ளம் வயலில் புகவும், அவ்வெள்ள நீரை எதிர்கொண்டு அழைப்பதைப் போல் வந்து மள்ளர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்து கை கொட்டி அழைத்த ஓசையானது தேவரின் உலகத்திற்கும் அப்பாற்பட்டுச் போய்ச் சேரும்.

61. மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்
ஓதை யார்செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வதோர் காட்சி மலிந்தவே.

தெளிவுரை : அழகான நாற்றைப் பறிப்பவரின் சிறப்பும், அழகிய நாற்றுகளை முடியாய்ச் சேர்த்து முடிந்து நீரில் சேர்ப்பவரின் செயலின் சிறப்பும், ஓசை மிகுமாறு வயலை உழவர் உழுது பண்படுத்தும் ஒழுக்கமும், கண்டவர்க்கு ஆசை மேன்மேல் விளைவிக்க வல்லனவாகி ஒவ்வொன்றும் எங்கும் பெருங்காட்சியாய் விளங்கின.

62. உழுத சால்மிக வூறித் தெளிந்தசே
றிழுது செய்யினுள் இந்திரத் தெய்வதந்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்.

தெளிவுரை : ஏர் உழுத பின்பு ஊறச் செய்து தெளிந்த சேறு குழம்பாகப் பண்படுத்தப்பட்ட வயலுள், இந்திரனை வழிபட்டு, நாற்றை நடுபவரின் கூட்டமே கெடுதி இல்லாத காவிரியாறு பாயும் நாட்டில் எங்கும் விளங்கும்.

63. மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழலசைய மடநடையின் வரம்பணைவார்.

தெளிவுரை : நாற்றை அவ்வாறு நட்ட பின்னர், புதுநீர் பாய்ந்து வந்த வயலில் வளர்ந்த நெல் நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து காட்ட, அப்பருவத்தைக் கண்டு உழவர் இதுதான் களை பறிக்கும் பருவம் என்று சொல்ல, அவ்வாறே களையைக் களைந்து செல்லும் உழத்தியர்கள், குளிர்ந்த முத்துகளை ஈனும் சங்குகள் கால்களில் இடறுவதால், தளர்ந்து மெல்ல அசைந்து செல்வார்கள். வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அசையுமாறு இளைய நடையுடன் அருகில் உள்ள வரப்பில் சேர்வர்.

64. செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறைவண்டை
அங்கைமலர் களைக்கொடுகைத் தயல்வண்டும் வரவழைப்பார்
திங்கணுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவல் தளவரும்பப்
பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார்.

தெளிவுரை : உழத்தியர் செங்குவளை மலர்களைக் களையாய்ப் பறித்து அவற்றைச் சூடிக் கொள்வர். தம் கரிய கூந்தலின் மேல் இறகுகளையுடைய வண்டுகளைத் தம் கைம்மலர்களால் போகுமாறு ஓட்டுவதால் அவை நீங்கிச் செல்லாததுடன் அயலில் இருக்கும் வண்டுகளையும் கூட வரும்படி செய்து கொள்வர். பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியில் வியர்வை தோன்றவும் முல்லை அரும்பு போன்ற பற்கள் சிறு நகையைத் தோற்றுவிக்கவும், களையாகப் பறித்த புதிய தாமரை மலரினின்று பெருகிய தேனை வாய் வைத்துக் குடிப்பர்.

65. கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச்
சுரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம்
அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன
வரும்பல்லா யிரங்கடைசி மடந்தையர்கள் வயலெல்லாம்.

தெளிவுரை :  பார்ப்பவர்கள் இவை கரும்பல்ல, நெல்லேயாகும், இவை கமுகு அல்ல, கரும்பே ஆகும் எனக் கூறுவதற்கு இடமான வயல்களில் எங்கும், வண்டு குடைவதால், நீல மலரில் துகள் பரந்து இரவுத் தன்மையைப் புலப்படுத்தக் கூடிய பகற் போதெல்லாம், இவை அரும்பு அல்ல, அரும்பைப் போன்ற முலையே; இவை அமுது அல்ல, அமுது போன்ற மொழியே எனக் கூறத் தக்க இலக்கணம் வாய்ந்த பல ஆயிரம் உழத்தியர் நிரம்பித் தொழில் செய்திருந்தனர்.

66. கயல்பாய்பைந் தடநந்தூன் கழிந்தபெருங் கருங்குழிசி
வியல்வாய்வெள் வளைத்தரள மலர்வேரி உலைப்பெய்தங்
கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும்
வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம்.

தெளிவுரை : கயல் மீன்கள் துள்ளும் நீர்நிலையின் கரையில் கிடக்கும் ஊன் இல்லாத நத்தை ஓடுகளைச் சோறு ஆக்கும் சிறுபானையாயும், சங்குகள் ஈன்ற முத்துகளைப் பூவின் தேனை உலை நீராய் ஊற்றிய உலையிலே இட்டு, பக்கங்களில் கிடக்கும் ஆமை ஓடுகளான அடுப்பிலே ஏற்றிச் செவ்வாம்பல் மலர்களைத் தீயாய் வைத்து அடுப்பை ஊதும் செயலான உழவச் சிறுமியரின் விளையாட்டு அங்கு வரப்புகளில் எங்கும் திகழும்.

67. காடெல்லாங் கழைக்கரும்பு காவெல்லாங் குழைக்கரும்பு
மாடெல்லாங் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாங் கடலன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனையொவ்வா நலமெல்லாம்.

தெளிவுரை : கழையான கரும்பு எல்லாம் காடு போல் உள்ளன. சோலைகளில் கிளையின் தளிர்தோறும் மலர் அரும்புகள் விளங்கும். பக்கங்களில் எங்கும் கரிய குவளை மலர்கள் மலரும். நெருக்கமாய் வளையும் வயல்களில் எங்கும் சங்குகள் கிடக்கும். நீர்நிலையின் கரையில் எங்கும் இளைய அன்னங்கள் உலவும். குளங்கள் எல்லாம் கடலைப் போன்ற பரப்பை உடையன. எனவே, எந்நாடும் எந்த நலத்தாலும் சோழ நாட்டுக்கு நிகராகாது.

68. ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
சோலை வாய்வண் டிரைத்தெழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவுமால்.

தெளிவுரை : கரும்பாலையில் சாறு முதலியவற்றைக் காய்ச்சுபவர் இடும் ஒலியும், சோலைகளில் வண்டுகள் பல கூடி ஒலிக்கும் ஒலியும், உலகத்தை ஓங்கச் செய்யும் வேதத்தின் ஒலியும் கூடிக் கடல் ஒலியைவிடப் பெரிய ஒலியாய் விளங்கின.

69. அன்னம் ஆடும் அகன்றுறைப் பொய்கையில்
துன்னும் மேதி படியத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால்.

தெளிவுரை : அன்னங்கள் விளையாடுகின்ற பெரிய துறைகளையுடைய நீர் நிலைகளில் கூட்டமான எருமைகள் விழுந்து முழுகுவதனால், வாளை இளமீன்கள் நிரம்ப எழுந்து அருகில் உள்ள சோலையின் பாக்கு மரங்களின் மீது பாயும் காட்சி, வானத்தில் எங்கும் பரந்து தோன்றி மறையும் வான வில்லைப் போன்று விளங்கும்.

70. காவி னிற்பயி லுங்களி வண்டினம்
வாவி யிற்படிந் துண்ணும் மலர்மது
மேவி அத்தடம் மீதெழப் பாய்கயல்
தாவி அப்பொழி லிற்கனி சாடுமால்.

தெளிவுரை : சோலையில் பழகும் வண்டுகள் அடுத்துள்ள நீர் நிலையில் நீர்ப் பூக்களிலும் படிந்து தேனைக் குடிக்கும். அங்ஙனம் தேனைக் குடிக்கும் நீர்நிலையில் வாழ்ந்தும் அதில் அடங்கியிராமல் மேலே எழுந்து பாயும் இயல்புடைய கயல் மீன்கள் தாவி வண்டுகள் வந்த அச்சோலைகளில் இனிய கனிகளின்மீது பாய்ந்து அவற்றை உதிர்த்துச் சிதைக்கும்.

71. சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்த வாகிச்
சூல்முதிர் பசலை கொண்டு சுருள்விரித் தரனுக் கன்பர்
ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்க ளெல்லாம்.

தெளிவுரை : நீண்ட வயலில் நெல் ஓங்கி வளர்ந்து ஒப்பில்லாமல் மிக்குத் தூய வெண்மையான உண்மைக் கருவின் வளத்தை உடையவனாகிக் கரு முற்றுவதால் பசலை அடைந்து, பின்பு சுருளை விரித்து, இறைவனின் அன்பரின் நீர்மை கொண்ட மனம் போன்று கதிர்கள் எல்லாம் அலர்ந்தன.

72. பத்தியின் பால ராகிப் பரமனுக் காளா மன்பர்
தத்தமிற் கூடி னார்கள் தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தி யின்பால் முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி யெல்லாம்.

தெளிவுரை : அன்பின் வசப்பட்டவராகி இறைவனுக்கு அடிமை செய்யும் அன்பர்கள் கூடியபோது ஒருவருக்கொருவர் எதிர் எதிராகப் பொருந்திய வரிசையில் கதிர்களின் பால் ஊறி முற்றிய வகையால், தலை வணங்கியவையாய், அந்த அன்பர்களுக்குச் சிவபோகம் விளைவதைப் போல் நெல் முதிர்ந்து போகம் விளைந்தது.

73. அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு யர்ப்பார்
விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்.

தெளிவுரை : அரிதலால் பெறப்பட்ட செந்நெல்லினது சூடுகளை அடுக்கிப் பெரிய போராகக் குவிப்பர்; பரிவு உண்டாகப் பிடிக்கப்பட்ட பலவகை மீன்களையும் நீண்ட குன்றைப் போல் குவிப்பர். புரியாய்ச் சுரிந்து சங்குகள் ஈன்ற முத்துக்களையும் சுடரையுடைய குன்றைப் போல் உயர்த்திக் கூட்டுவர். விரிந்து மலர்த் தொகுதியைத் தேன் வடியச் சேர்த்து ஒரு பக்கத்தில் வைப்பர்.

74. சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்குங் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
மேல்வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்க தன்றே.

தெளிவுரை : நெல் கற்றைகள் சூடு குவிந்த பெரிய மலையினை ஒத்த போரை மேலே இருந்து அளவாகச் சாயச் செய்து பெரிய ஏர்களைச் செலுத்தும் கருமையான பெரிய எருமைக் கூட்டங்கள் வலமாக வந்து மிதித்துச் சுற்றி வரும் தோற்றமானது. நீர்த்துளிகள் நிறைந்த கரிய மேகங்கள் பெரிய பொன் மலைச் சாரல் மீது வலம் சுற்றுகின்ற தோற்றம் போல், சூடு மிதிக்கும் அந்நாளில், விளக்கம் மிக்குத் தோன்றியது.

75. வைதெரிந் தகற்றி யாற்றி மழைப்பெயல் மானத் தூற்றிச்
செய்யபொற் குன்றும் வேறு நவமணிச் சிலம்பும் என்னக்
கைவினை மள்ளர் வானங் கரக்கவாக் கியநெற் குன்றால்
மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு.

தெளிவுரை : வைக்கோலைப் பிரித்து எடுத்த வேறு இடத்தில் இட்டு, நெல்லை மழை தூற்றுவதைப் போல் தூற்றி, சிவந்த பொன் மலையும் வெவ்வேறான நவமணிக் குன்றுகளும் எனக் கூறும்படி கைத் தொழிலில் வல்ல உழவர்கள் வானத்தை மறைக்குமாறு உயர்த்திச் சேர்த்த நெற்குன்றுகளினால் நெருக்கமான மலைகள் நிறைந்த நாட்டைப் போல், தாமரை மலர்கள் நிறைந்த நீர்நிலைகளையுடைய மருத நிலம் விளங்கியது.

76. அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண் டறங்கள் பேணிப்
பரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையுந் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம் நீடி மலர்ந்துள பதிகள் எங்கும்.

தெளிவுரை : அந்த நாட்டில் உள்ள பதிகள் எல்லாம், மேல் கூறியவாறு அமைக்கப்பட்ட நெற்குவைகளில் மன்னர்க்குச் செலுத்த வேண்டிய ஆறில் ஒரு பங்கு கடமையைச் செலுத்திய பின்பு, மிகுந்த விளைச்சலைக் கொண்டு அங்கு முதலில் செய்யத்தக்க அறங்களை விரும்பிச் செய்து, துதித்தற்குரிய கடவுட் பூசையைப் பாராட்டிச் செய்து தென் புலத்தாரையும் விருந்தினரையும் ஒழுக்கம் கொண்ட சுற்றத்தாரையும் ஓம்பி, விளங்கும் குடிகளால் செழித்து மலை போன்ற மாடங்கள் நிலவப் பெற்றுள்ளன,

77. கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர்
சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப்
பெரும்பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்
வரும்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவு மெங்கும்.

தெளிவுரை : உழவர் கரும்பைக் காய்ச்சுவதால் அக்கரும்பாலையினின்று எழும் புகைகளோ, மங்கையர் தம் தலையில் சூட்டிய பூக்களில் மொய்த்த வண்டுகள் எழும்படியாய்க் கூந்தலை உலர்த்துதற்கு ஊட்டும் அகில் தூபமோ, வேள்வித் தூண்களை நட்டு இறைவனைக் குறித்து வேள்வி செய்யும்போது அந்த வேள்விச் சாலையினின்று எழும் புகையோ, அது காரணமாய் வானத்தில் கூடும் கரிய மேகத்தின் கூட்டமோ, இன்னது என்று தெரிந்து கொள்ள இயலாத வண்ணம் சூழ்ந்த மாடங்களும் சோலைகளும் எங்கும் இருந்தன.

78. நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
கோளிசா லந்த மாலங் குளிர்மலர்க் குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்.

தெளிவுரை : எங்கும் தென்னை செருந்தி நறுமணமுடைய நரந்தம் உள்ளன. எங்கும் அரசு, கடம்பு, பச்சிலை மரம், குளிர்ந்த மலரையுடைய குரா மரம் உள்ளன. எங்கும் வலிய பெரிய அடிப்பாகத்தையுடைய பனை, சந்தனம், குளிர்ந்த மலரையுடைய நாகம் உள்ளன; எங்கும் நீண்ட இலைகளையுடைய வஞ்சி, காஞ்சி, நிறைந்த மலர்கள் மலர்ந்த கோங்கு உள்ளன.

79. சூதபா டலங்கள் எங்குஞ் சூழ்வழை ஞாழல் எங்குஞ்
சாதிமா லதிகள் எங்குந் தண்டளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும் வகுளசண் பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும் பூகபுன் னாகம் எங்கும்.

தெளிவுரை : எங்கும் மாமரங்களும்; பாடல மரங்களும் உள்ளன; எங்கும் மலர்கள் மிக்குப் பூக்கும் சுரபுன்னை மரம். ஞாழல் மரங்கள் உள்ளன. எங்கும் சாதிப் பூ (பிச்சி) முல்லை உள்ளன. எங்கும் மெல்லிய இதழ்களையுடைய அனிச்சம் உள்ளன. எங்கும் குருக்கத்தி, சரளம் உள்ளன. எங்கும் மகிழ மரம் சண்பகம் உள்ளன. எங்கும் மடல்கள் விரியும் தாழைகள் உள்ளன. எங்கும் கமுகு, புன்னை உள்ளன.

80. மங்கல வினைகள் எங்கும் மணஞ்செய்கம் பலைகள் எங்கும்
பங்கய வதனம் எங்கும பண்களின் மழலை எங்கும்
பொங்கொளிக் கலன்கள் எங்கும் புதுமலர்ப் பந்தர் எங்குஞ்
செங்கயல் பழனம் எங்குந் திருமகள் உறையுள் எங்கும்.

தெளிவுரை : அங்கு எங்கும் மங்கலச் செயல்கள் நிகழும். எங்கும் மணம் செய்வதால் எழும் ஆரவாரம் கேட்கும். எங்கும் மேற்கூறிய மங்கலச் செயல்களைக் கூடிச் செய்யும் மங்கையரின் தாமரை போன்ற முகங்கள் காணப்படும். எங்கும் அச்செயல்களில் அவர்கள் மழலைச் சொல்லால் பாடும் பண்ணிசைகள் ஒலிக்கும். எங்கும் மிக்க ஒளியுடைய அணிகலன்கள் ஒளிரும். எங்கும் புதிய மலர் மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தல்கள் விளங்கும். எங்கும் செங்கயல்கள் நிறைந்த வயல்கள் இருக்கும். எங்கும் திருமகள் வாழும் இடங்கள் துலங்கும்.

81. மேகமுங் களிறு மெங்கும் வேதமுங் கிடையு மெங்கும்
யாகமுஞ் சடங்கு மெங்கும் இன்பமும் மகிழ்வு மெங்கும்
யோகமுந் தவமு மெங்கும் ஊசலு மறுகு மெங்கும்
போகமும் பொலிவு மெங்கும் புண்ணிய முனிவ ரெங்கும்.

தெளிவுரை : எங்கும் முகில்களும் யானைகளும் ஒன்றாய்க் கலந்து காணப் பெறும். எங்கும் வேதம் ஓதுதலும் அவற்றை மாணவர் பயிலுதலுமான இடங்கள் விளங்கும். எங்கும் வேள்வியும் சடங்குகளும் விளங்கும். எங்கும் யாகங்களைச் செய்வதால் உளதாகும் அனுபவமான இன்பமும் மகிழ்வை அளிக்கும் செயல்களும் நிகழும். எங்கும் யோகமும் தவமும் செய்யப் பெறும். எங்கும் பெண்கள் ஊசலும் அவை பொருந்திய தெரு இடங்களும் விளங்கும். எங்கும் போகமும் அவற்றால் வெளியே தோன்றும் விளக்கமும் பொலிந்து விளங்கும். எங்கும் வேதம் முதலியவற்றால் சிவ புண்ணியம் உடைய முனிவர் இலங்குவர்.

82. பண்டரு விபஞ்சி எங்கும் பாதசெம் பஞ்சி எங்கும்
வண்டறை குழல்கள் எங்கும் வளரிசைக் குழல்கள் எங்கும்
தொண்டர்த மிருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை யெங்கும்
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவு மெங்கும்.

தெளிவுரை : அந்த நாட்டில் எங்கும் குறிஞ்சி முதலான திணைக்கு ஏற்ற பண்களைத் தரும் வீணைகளும் பாதங்களில் ஊட்டிய செம்பஞ்சுக் குழம்பு வகையான அணிவகையும் அவற்றின் அடிச்சுவடும் உள்ளன. வண்டுகள் ஒலிக்கும் கூந்தல்களும் இசை முழங்கும் வேய்ங்குழல்களும் உள்ளன. அடியார்களின் இருப்பிடங்களில் எப்போதும் சொல்லப் பெறுவது வட மொழி தென்மொழி மறைகளே! பூஞ்சோலைகள் பலவற்றிலும் ஆத்தியும் பலா மரங்களும் இலங்கும்.

83. மாடுபோ தகங்கள் எங்கும் வண்டுபோ தகங்கள் எங்கும்
பாடுமம் மனைகள் எங்கும் பயிலுமம் மனைகள் எங்கும்
நீடுகே தனங்கள் எங்கும் நிதிநிகே தனங்கள் எங்குந்
தோடுசூழ் மாலை எங்குந் துணைவர்சூழ் மாலை எங்கும்.

தெளிவுரை : அந்நாட்டில் எங்கும் பக்கங்களில் யானைக் கன்றுகள் உள்ளன. எங்கும் மலர்களின் உள்ளிடங்களில் வண்டுகள் குடையும். எங்கும் பாடல்கள் பாடப்படும் அழகிய வீடுகள் விளங்கும். எங்கும் பெண்கள் ஆடும் அம்மானை விளையாட்டுகள் விளையாடுவர்; எங்கும் நீண்ட கொடிகள் கட்டப் பெற்றிருக்கும்; எங்கும் நதிகள் பலவகையும் சேர்ந்த சேமவைப்புகள் விளங்கும்; எங்கும் இதழ்கள் செறிந்த மாலைகள் தொங்கவிடப் பெற்றிருக்கும். எங்கும் காதலர் காதலியர் தொடர்ந்துள்ள வரிசைகள் விளங்கும்.

84. வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா
நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும்
ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத்தாம் அஞ்சும்.

தெளிவுரை : கோயில் திருவிழாக்களின் இனிய முழக்கங்கள், விருப்பமுடன் செய்யப் பெற்ற விருந்தோம்பலின் சிறப்பு என்னும் இரண்டு வீதிகளில் மிக்குள்ளன. எல்லாச் சாதியினரும் தங்கள் தங்களுக்கு விதித்த ஒழுக்க பிலையிலிருந்து தவறமாட்டார்கள். வீடுகள் தோறும் தப்பாமல் பிள்ளைகள் உள்ளனர். பகை முதலான குண வேறுபாட்டையுடைய பறவைகளும், விலங்குகளும் அவற்றை ஒழித்துத் தத்தம் எல்லையிலேயே நிற்கும், தேவ உலகினராய இலக்குமியும் (அல்லது காமதேனுவும்) இந்த நாட்டில் இருக்க எண்ணுவர். எல்லா உயிர்களும் ஐந்தெழுத்தை ஓதும். அதனால் வரக் கூடிய பிறவிப் பிணியும் உயிர்களைப் பிடித்தற்கு வர அச்சம் கொள்ளும்.

85. நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநா டென்றும்
பொற்றடந் தோளால் வையம் பொதுக்கடிந் தினிது காக்குங்
கொற்றவன் அநபா யன்பொற் குடைநிழற் குளிர்வ தென்றால்
மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்ப லாமோ.

தெளிவுரை : நல்ல தமிழ் வழங்கும் எல்லைக்குள் நாம் சிறப்பாகப் பேசும் நாடானது, என்றும் நிலைபெறும்படி அழகிய பெருந்தோள் வன்மையால், உலகம், எல்லோருக்கும் பொதுவானது என்பதை மாற்றித் தனக்கே உரியது என்று ஆக்கிக் கொண்டு, இனிதே காத்து வரும் வெற்றி மன்னரான அநபாய சோழரின் அழகிய வெண் குடை நிழலில் குளிர்ந்து வாழ்கின்றது என்றால், அந்நாட்டின் பெருமைகளை நம்மால் அளவிட்டுக் கூற முடியுமோ ? முடியாது.

திருநாட்டுச் சிறப்பு முற்றுப் பெற்றது

4. திருநகரச் சிறப்பு

86. சொன்ன நாட்டிடைத் தொன்மையின் மிக்கது
மன்னு மாமல ராள்வழி பட்டது
வன்னி யாறு மதிபொதி செஞ்சடைச்
சென்னி யார்திரு வாரூர்த் திருநகர்.

தெளிவுரை : நாம் புகழ்ந்து சொன்ன நாட்டில் உள்ள பல நகரங்களிலும் மிகவும் பழமை உடையது, நிலை பெறும் திருமகளால் வழிபடப் பெற்றது. வன்னி இலையும் கங்கை யாறும் பிறைச் சந்திரனும் தங்கிய சிவந்த சடை முடித் தலைவரான தியாகராசர் எழுந்தருளியது திருவாரூர்த் தலம் ஆகும்.

87. வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் மணிமுழ வோசையும்
கீத வோசையு மாய்க்கிளர் வுற்றவே.

தெளிவுரை : அங்கு வேதங்களை ஓதும் ஓசை, வீணைகள் வாசிக்கும் ஓசை, ஒளிமிக்க தேவர்கள் துதிக்கும் ஓசை, பெண்கள் ஆடலிலும் பாடலிலும் அதற்கு ஏற்ப முழக்கும் முழவுகளிலும் கூடி உண்டாகும் ஓசை என்ற இவை கீதங்களின் ஓசையுடன் ஒன்றாகி எங்கும் கிளர்ந்து கலந்து ஒலித்தன. இத்தகைய பற்பல ஒலிகளும் அந்த நகரத்தில் பொருந்திப் பெரும் கிளர்ச்சியை அளித்தன.

88. பல்லி யங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதிச் செழுமணித் தேரொலி
மல்லல் யானை ஒலியுடன் மாவொலி
எல்லை இன்றி யெழுந்துள எங்கணும்.

தெளிவுரை : பலவகைப்பட்ட இன்னியங்களின் ஒலிகளுடன் செல்வம் நிறைந்த தெருக்களிலே அழகான தேர்களின் ஒலியும், செழுமையான யானையின் ஒலியும், குதிரை ஒலியும் சேர்ந்து, அளவின்றி அந்த நகரத்தில் எங்கும் ஒலித்தன.

89. மாட மாளிகை சூளிகை மண்டபம்
கூட சாலைகள் கோபுரந் தெற்றிகள்
நீடு சாளர நீடரங் கெங்கணும்
ஆடன் மாத ரணிசிலம் பார்ப்பன.

தெளிவுரை : மாடம், செங்குன்று, சூளிகை, மண்டபம், கூடம், சாலை, கோபுரம், திண்ணை, நீண்ட பலகணி, நீண்ட அரங்கு என்ற எங்கும் ஆடும் மங்கையரின் அழகிய சிலம்புகள் ஒலிக்கும்.

90. அங்கு ரைக்கென் னளவப் பதியிலார்
தங்கள் மாளிகை யின்னொன்று சம்புவின்
பங்கி னாள்திருச் சேடி பரவையாம்
மங்கை யாரவ தாரஞ்செய் மாளிகை.

தெளிவுரை : அங்குள்ள மாளிகைகளில் பதியிலார் என்ற உருத்திர கணிகையர் மாளிகைகள் பலவற்றுள் ஒன்று, இறைவரின் ஒரு பாகத்தில் அமர்ந்த உமையம்மையாரின் அநிந்திதை கமலினி என்ற இரு தோழியருள் ஒருவரான கமலினியார் அவதரிக்கும் பேறு பெற்றது என்றால், அவ்விடம் பற்றியுரைக்கும் உரைகளுக்கு என்ன அளவு இருக்கின்றது.

91. படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூதுபோய்
நடந்த செந்தா மரையடி நாறுமால்.

தெளிவுரை : பேரொளியாய் ஒளிரும் பல்மணிகள் தூக்கிக் கட்டிய அந்த நகரத்தில் அந்த மாளிகை இருக்கும் வீதியானது தோண்டிச் சென்ற பன்றியாலும் (திருமாலினாலும்) பறந்து சென்ற அன்னப் பறவையாலும் (நான்முகனாலும்) தேடப் பெற்ற சிவபெருமான், தாம் வலியத் தொடர்ந்து சென்று ஆளாகக் கொண்ட தம் அடியாரான வன்தொண்டர்க்காக அந்த மாளிகைக்குத் தூதாகச் சென்று நடந்த செந்தாமரை போன்ற திருவடி மணம் வீசிக் கொண்டே இருக்கும்.

92. செங்கண் மாதர் தெருவில் தெளித்தசெங்
குங்கு மத்தின் குழம்பை அவர்குழல்
பொங்கு கோதையின் பூந்துகள் வீழ்ந்துடன்
அங்கண் மேவி யளறு புலர்த்துமால்.

தெளிவுரை : சிவந்த கண்களையுடைய மங்கையர் தெருவிலே தெளித்த குங்குமக் குழம்பை அவர் கூந்தலில் சூடிய புதிய மலர் மாலைகளிலிருந்து மகரந்தம் உதிர்ந்து விழுந்து குழம்புடனே பொருந்தி, அந்தச் சேற்றை உலரச் செய்யும்.

93. உள்ளம் ஆர்உரு காதவர் ஊர்விடை
வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாந்
தெள்ளும் ஓசைத் திருப்பதி கங்கள்பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.

தெளிவுரை : காளை ஊர்தியில் எழுந்தருளி வரும் தியாகராயப் பெருமானின் திருவாரூர்ப் பக்கங்களில் எல்லாம் தெளியும் ஓசைத் திருப்பதிகங்களைப் பசுமையான கிளிகள் பாடும். அவற்றை நாகண வாய்ப் பறவை கேட்கும் என்றால் யார்தாம் மனம் உருகார்?

94. விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கில் பேரொலி யால்துன்னு பண்டங்கள்
வளத்தொ டும்பல வாறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள்.

தெளிவுரை : (கடைத் தெருக்கள்) ஒளிமிக்க அணிகள் பொருந்தியிருத்தலால், அசைவில்லாத பேரொலிகளால், நெருங்கிய பலப்பல பொருள்களும் பிறவும் வளம் பெற வகைகள் கொண்டிருத்தலால்,

(கடல்) பலவகை விளக்குகள் கொண்ட மரக்கலங்களை உடைமையால், அலைகளின் அசைதலினால் உண்டாகும் பேரிரைச்சலால், மலை காடு நாடு முதலான பல இடங்களின் பண்டங்களையும் வாரிக் கொணரும் வளங்களுடன் ஆறுகள் வந்து கலப்பதால் கடைத் தெருக்கள் கடலைப் போன்று விளங்குவனவாகும்.

95. ஆர ணங்களே அல்ல மறுகிடை
வார ணங்களும் மாறி முழங்குமால்
சீர ணங்கிய தேவர்க ளேயலால்
தோர ணங்களில் தாமமுஞ் சூழுமால்.

தெளிவுரை : தெருக்களில் மறைகளே அல்லாமல் யானைகளும் எதிர் எதிராய் முழங்குவன, சிறப்பான அணங்காடல் முதலியவற்றால் அழைக்கப் பெற்ற வானவர்களே அல்லாது தோரணங்களில் மாலைகளும் சூழ உள்ளன.

96. தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்வே றிடத்ததத் தொல்நகர்.

தெளிவுரை : அந்தப் பழமை மிக்க திருவாரூர் நகரம், தலையினின்று நிலம் வரை நீண்டு தொங்கிய சடை உடையவர்கள், சைவர்கள், பெருந்துறவியர், வாழ்வடைந்த மனமுடைய முனிவர்கள், வேதியர் விரும்பிய இன்பத் துறையில் பொருந்தியவர் சுற்றிலும் சூழ்ந்து வாழும் பலப்பல வெவ்வேறு இடங்களையுடையதாகும்.

97. நிலம கட்கழ கார்திரு நீள்நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
மலர்ம கட்குவண் தாமரை போல்மலர்ந்து
அலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால்.

தெளிவுரை : நிலம் என்னும் நங்கைக்கு அழகு நிறைந்த நீண்ட நெற்றியிலே திலகம் போன்றது சோழர் அரசு செய்து வாழும் இந்நகரம். அதனுடன் மலர் மகளுக்கு இருப்பிடமான வளமுடய தாமரை மலர் போல் மலர்ந்து அளவில்லாத சிறப்புடையதாய் இத்திருவாரூர் சிறந்து விளங்கும்.

98. அன்ன தொல்நக ருக்கர சாயினான்
துன்னு செங்கதி ரோன்வழித் தோன்றினான்
மன்னு சீர்அந பாயன் வழிமுதல்
மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே.

தெளிவுரை : மேல் கூறப்பட்ட இயல்புகள் எல்லாம் பொருந்தப் பெற்ற பழைய திருவாரூர் நகரத்தில் மன்னனாய் வீற்றிருந்தான், நெருங்கிய கதிரவனின் மரபில் தோன்றியவனும் நிலைபெற்ற சிறப்புடைய அநபாய சக்கரவர்த்தியின் வழியில் முன்னவனுமாகிய வணங்கும் அணிகளை அணிந்த மனு மன்னனே ஆவான்.

99. மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாங்
கண்ணும் ஆவியு மாம்பெருங் காவலான்
விண்ணு ளார்மகிழ் வெய்திட வேள்விகள்
எண்ணி லாதன மாண இயற்றினான்.

தெளிவுரை : அம்மன்னன் இவ்வுலகத்தில் வாழ்கின்ற எல்லாவுயிர்களையும் கண்ணையும் உயிரையும் போல் காவல் செய்தனன். இங்ஙனம் இவ்வுலகத்தவர்க்குப் பயன் செய்வதே அன்றி மேல் உலகத்தில் விண்ணவர்க்கும் அவர் மகிழுமாறு பல வேள்விகளைச் சிறப்பாகச் செய்தனன்.

100. கொற்ற வாழி குவலயஞ் சூழ்ந்திடச்
சுற்று மன்னர் திறைகடை சூழ்ந்திடச்
செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப்
பெற்ற நீதியுந் தன்பெயர் ஆக்கினான்.

தெளிவுரை : வெற்றி பொருந்திய தன் ஆணைச் சக்கரம் உலகத்தைச் சூழ்ந்து நிற்கவும், அந்த ஆணையால் சூழப்பெற்ற மன்னர் திறைப் பொருள் தன் கடைவாயிலில் சூழ்ந்து கொண்டு இருக்கவும், சினம் நீக்கிய செம்மையால் உண்மை உருவான ஆதி மனு மன்னவன் பெற்ற மனுநீதி என்பதைத் தன் பெயராலே அமைந்ததாக அமைத்துக் கொண்டான்.

101. பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தமா ராய்ந்துளான்
துங்க வாகமஞ் சொன்ன முறைமையால்.

தெளிவுரை : அந்த மன்னன் மேலும் மேலும் வளர்கின்ற வேத வடிவினதான புற்றை இடமாகக் கொண்டு எங்கும் வீற்றிருக்கும் வன்மீக நாதரின் பூசைக்கு வேண்டிய நிபந்தங்களைச் சிவாகமங்களில் விதித்தவாறே ஆராய்ந்து ஏற்படுத்தினான்.

102. அறம்பொரு ளின்ப மான அறநெறி வழாமற் புல்லி
மறங்கடிந் தரசர் போற்ற வையகங் காக்கும் நாளில்
சிறந்தநல் தவத்தால் தேவி திருமணி வயிற்றில் மைந்தன்
பிறந்தனன் உலகம் போற்றப் பேரரிக் குருளை அன்னான்.

தெளிவுரை : அம்மன்னர், அறம், பொருள், இன்பம் என்ற இவற்றால் அமைந்த அற வழியில் உயிர்களை நிறுத்தினார். தாமும் அறநெறியில் நின்றார். அவற்றிற்கு மாறான மறங்களை (பாவ காரணங்களை) அழித்தும் மற்ற மன்னர்கள் துதிக்க உலகத்தைக் காத்து வந்தார். அத்தகைய நாளில் அவர் செய்த சிறந்த நல்ல தவத்தின் பயனால் அவருடைய மனைவியின் வயிற்றில் இளஞ்சிங்கம் போன்ற மைந்தன் உலகம் போற்றப் பிறந்தான்.

103. தவமுயன் றரிதில் பெற்ற தனிஇளங் குமரன் நாளுஞ்
சிவமுயன் றடையுந் தெய்வக் கலைபல திருந்த ஓதிக்
கவனவாம் புரவி யானை தேர்படைத் தொழில்கள் கற்றுப்
பவமுயன் றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான்.

தெளிவுரை : தவம் செய்து பெற்ற நிகர் இல்லாத அந்த மைந்தன் நாள்தோறும் முயன்று சிவத்தை அடைவிக்கும் தெய்வக் கலைகள் பலவற்றையும் நன்றாகக் கற்றதோடு, தன் குலத்துக்கு ஏற்றவண்ணம் யானை, குதிரை, தேர், படைக்கலம் முதலியவற்றின் பயிற்சியும் பெற்று, ஆன்மாமுன் செய்த பாவங்களின் பயனாய் எடுக்கும் இப்பிறவியின் பிறவியும் இவனிடம் பாக்கியமே பெற்றது எனக் கூறும்படி நற்குணங்களில் சிறந்து விளங்கினான்.

104. அளவில்தொல் கலைகள் முற்றி அரும்பெறல் தந்தை மிக்க
உளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி
இளவர சென்னுந் தன்மை எய்துதற் கணிய னாகி
வளரிளம் பரிதி போன்று வாழுநாள் ஒருநாள் மைந்தன்.

தெளிவுரை : முன் சொன்ன அளவில்லாத பழைய கலைகள் எல்லாம் நிரம்பப் பெற்றுப் பெறுவதற்கு அரிய தந்தையார் மனம் மிக மகிழும் ஆசை வளருமாறு மேன் மேல் வளரும் நற்குணங்கள் நிறைந்து இளவரசனாம் தகுதியை அடையும் பக்குவம் உடையவனாய் ஒளிவளரும் கதிரவன் போன்று விளங்கினான். அங்ஙனம் வாழும் நாளில் ஒருநாள்...

105. திங்கள்வெண் கவிகை மன்னன் திருவளர் கோயில் நின்று
மங்குல்தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழக்
கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமங் குலவு தோளான்
பொங்கிய தானை சூழத் தேர்மிசைப் பொலிந்து போந்தான்.

தெளிவுரை : மணம் கமழும் மாலை சூடிக் கலவைச் சாந்தை அணிந்த தோள்களையுடைய அந்த அரசிளைஞன் முகில்கள் தவழ்கின்ற மாடங்களையுடைய அரச வீதியில் மற்ற அரசிளைஞர்கள் தன்னைச் சூழ்ந்து வரவும், மிக்க படையானது சூழ்ந்து வரவும், சந்திரன் போன்ற வெண் கொற்றக் குடையையுடைய மன்னரின் அரண்மனையினின்று புறப்பட்டுத் தேரில் விளக்கமான காட்சி பெற ஏறிச் சென்றான்.

106. பரசுவந் தியர்முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர்
விரைநறுங் குழலார் சிந்தும் வெள்வளை ஒருபால் மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி
அரசிளங் குமரன் போதும் அணிமணி மாட வீதி.

தெளிவுரை : தன் புகழை ஏந்திக் கொண்டு வரும் வந்தியர்கள், சூதர்கள், மாகதர்கள் என்னும் இவர்கள் ஒரு பக்கம் வரவும் முழங்கி ஒலிக்க முரசும் சங்கும் ஒலிப்பவர் ஒரு பக்கம் வரவும், வெற்றி பொருந்திய மன்னனின் இள மைந்தன் அழகியமணி மாட வீதியில் உலா வந்தான்.

107. தனிப்பெருந் தருமம் தானோர் தயாவின்றித் தானை மன்னன்
பனிப்பில்சிந் தையினில் உண்மைப் பான்மைசோ தித்தால் என்ன
மனித்தர் தன் வரவு காணா வண்ணமோர் வண்ணம் நல்ஆன்
புனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகி னூடே.

தெளிவுரை : நிகர் இல்லாத பெருமையுடைய அறக்கடவுள் சிறிதும் அருள் இல்லாது மன்னரின் நடுங்காத சிந்தையின் உண்மைத் தன்மையைச் சோதிப்பதற்கு வந்தது போல், தன் வருகையைச் சூழ இருந்த பலரும் அந்த மாட வீதியில் இருந்தவரும் ஆகியவருள் எவரும் காண இயலாதபடி ஓர் அழகிய பசுவின் இளைய கன்று அந்த வீதியில் துள்ளியபடி வந்தது.

108. அம்புனிற் றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச்
செம்பொனின் தேர்க்கால் மீது விசையினாற் செல்லப் பட்டங்
கும்பரி னடையக் கண்டங் குருகுதா யலமந் தோடி
வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந்நடுக் குற்று வீழும்.

தெளிவுரை : மேற்கூறியவாறு துள்ளி வந்த பசுவின் இளங்கன்று ஓர் அபாயம் உண்டாகத் தக்க வகையிலே குறுக்கே செல்லவே, தேரின் பொன் சக்கரம் தன்மீது வேகமாகச் செலுத்தப் பெற்று விண் உலகத்தை அடைந்தது. அதைப் பார்த்து அங்கு மிகவும் மன உருக்கத்தை அடைந்த அதன் தாய்ப் பசு வெம்பியது; அலறியது; சோர்ந்தது ! உடல் நடுக்கம் அடைந்து விழுந்தது.

109. மற்றது கண்டு மைந்தன் வந்ததிங் கபாயம் என்று
சொற்றடு மாறி நெஞ்சில் துயருழந் தறிவ ழிந்து
பெற்றமுங் கன்றும் இன்றென் உணர்வெனும் பெருமை மாளச்
செற்றஎன் செய்கேன் என்று தேரினின் றிழிந்து வீழ்ந்தான்

தெளிவுரை : அங்கு நிகழ்ந்த அதனைப் பார்த்து, அந்த அரசிளைஞன் இங்கு அபாயம் வந்தது ! என்று சொல் தடுமாற்றம் அடைந்து, மன வருத்தம் அடைந்து, மன வருத்தம் அடைந்து, அறிவை இழந்து, இன்று பசுவும் கன்றும் என் உணர்வாகிய பெருமையை அடியுடன் அழியும்படி செய்து விட்டனவே! நான் இதற்கு என்ன செய்வேன் ! என்று தேரினின்று இறங்கி விழுந்தான்.

110. அலறுபேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும்
நிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த் திரங்கி நிற்கும்
மலர்தலை உலகங் காக்கும் மனுவெனும் எங்கோ மானுக்கு
உலகில்இப் பழிவந் தெய்தப் பிறந்தவா வொருவ னென்பான்.

தெளிவுரை : அலறும் சிறந்த பசுவை ஒரு பக்கம் பார்த்து அதன் உயிர் பதைபதைப்பதைப் போல அரச இளைஞனும் தன் ஆருயிர் பதைத்துத் தளர்ந்தான். மற்றொரு பக்கம் தன் தேர்க்காலில் அகப்பட்டு, நிலத்தில் விழுந்து கிடக்கும் கன்றைப் பார்த்து, வருத்தத்தால் பெருமூச்சுவிட்டு, இரங்கி நிற்பான். விரிந்த உலகத்தில் பல வுயிர்களையும் காக்கக் கடமையுடையவனாய் முன்னைய மனுவே இவர் எனக் கூறப் பெறுகின்ற என் மன்னர்க்கு உலகத்தில் இல்லாத இந்தப் பெரும் பழி வந்து சேருமாறு நான் அவர்க்கு மகனாகப் பிறந்தேனே? எனக் கூறுபவனாய்...

111. வந்தஇப் பழியை மாற்றும் வகையினை மறைநூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவ தறமே யாகில்
எந்தைஈ தறியா முன்னம் இயற்றுவ னென்று மைந்தன்
சிந்தைவெந் துயரந் தீர்ப்பான் திருமறை யவர்முன் சென்றான்.

தெளிவுரை : இவ்வாறு ஏற்பட்டுவிட்ட பழியை மாற்றும் வகையை மறை முதலான நூல்களும் அவற்றின்படி ஒழுகும் வாய்மையுடைய அந்தணர்களும் விதிக்கின்றபடி செய்வது அறமாய் இருக்குமானால், என் தந்தை இதை அறிவதற்கு முன்பே அதைச் செய்து முடிப்பேன் என்று எண்ணித் துணிந்து அந்த அரசிளைஞன் மனத்தில் மிக்கவருத்தத்தைத் தீர்க்குமாறு அந்தணரிடம் சென்றான்.

112. தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்தஆத் தரியா தாகி
முன்நெருப் புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின்பொற் கோயில் வாயில்
பொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்த தன்றே.

தெளிவுரை : தன் உயிர்க்கு நிகரான கன்றானது இறந்திடப் பசு மேலும் அந்தத் துன்பத்தைப் பொறுக்க இயலாதாகி, முன்னால் நெருப்பு விழுதல் போலப் பெருமூச்சுவிட்டு, விம்மி, முகத்தில் கண்ணீர் பெருக எழுந்து சென்று, உலகத்தில் நிலைபெற்ற எல்லா உயிர்களையும் காக்கின்ற செங்கோல் ஆட்சியை உடைய மனுநீதி மன்னனின் அழகிய அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த அழகிய மணியைத் தனது கொம்பினால் அசைத்து அடித்தது. அப்போது,

113. பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்
வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக்
கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் கடைமுன் கேளாத்
தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது.

தெளிவுரை : பழியின் பறை ஒலியோ, பிணிக்கும் தன்மையுடைய பாவத்தின் ஒலியோ, அரச மரபுக்கு ஒரு மகனான அரசிளைஞன் உயிரைக் கைக் கொள்ள வருகின்ற கூற்றுவனின் ஊர்தியான எருமைக் கடாவின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணியின் பேர் ஒலியோ என எண்ணும் படி தம் கடை வாயிலில் இதற்கு முன் கேட்டிராத மணி ஓசையானது மன்னனின் செவியில் புகுந்தபோது அந்த மணியினின்று மிகவும் ஒலித்து எழுந்தது.

114. ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து
பூங்கொடி வாயில் நண்ணக் காவல ரெதிரே போற்றி
ஈங்கிதோர் பசுவந் தெய்தி இறைவநின் கொற்ற வாயில்
தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கிய தென்று சொன்னார்.

தெளிவுரை : அப்போது அந்த மணி ஒலியைக் கேட்ட மன்னர், தம் அரியணையினின்று இழிந்து வாயிலுக்கு வந்தார். அவ்வளவில் அந்த அரண்மனை வாயில் காவலர்கள் அவரை வணங்கி, எம் மன்ன ! இங்கே இந்த ஒரு பசு வந்து உன் வெற்றியுடைய வாயிலில் கட்டப்பட்டுத் தொங்குகின்ற மணியை அடைந்து தன் கொம்பினால் அசைத்தது எனக் கூறினர்.

115. மன்னவ னதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி
என்னிதற் குற்ற தென்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க
முன்னுற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்
தொன்னெறி யமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான்.

தெளிவுரை : மன்னர், காவலர் உரைத்ததைக் கேட்டும் தம் முன்னர் வருந்தி நின்ற பசுவைக் கண்டும், அதன் பின்பு, இதற்கு என்ன நேர்ந்தது? எனக் கேட்டு அறியும் விருப்பத்துடன் அங்கு நின்ற அமைச்சர்களை இகழ்ச்சியுடன் பார்த்தார். அச்சமயத்தில் முன்னம் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி எல்லா வற்றையும் அறிந்த அமைச்சர் மன்னரை வணங்கிப் பின் வருமாறு சொல்லத் தொடங்கினார்.

116. வளவநின் புதல்வன் ஆங்கோர் மணிநெடுந் தேர்மே லேறி
அளவில்தேர்த் தானை சூழ அரசுலாந் தெருவிற் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால் இடைப்புகுந் திறந்த தாகத்
தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை என்றான்.

தெளிவுரை : எம் மன்னரே ! உம் மைந்தன் அங்கு ஒரு பெரிய அழகிய தேரில் ஏறிக்கொண்டு பல தேர்ப் படைகள் தன்னைச் சூழ்ந்துவர அரசர் உலாச் செல்கின்ற தெருவில் உலா வரும் போதில், இளைய பசுவின் கன்று தேர்ச் சக்கரத்தில் புகுந்து மடிந்துவிட்டது. அதனால் கன்றை இழந்து தளர்ச்சி அடைந்த இப்பசு இங்கே வந்து இவ்வாறு மணியை அசைத்து அடித்தது என அமைச்சன் சொன்னான்.

117. அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயர மெய்தி
வெவ்விடந் தலைக்கொண் டாற்போல் வேதனை யகத்து மிக்கிங்கு
இவ்வினை விளைந்த வாறென் றிடருறு மிரங்கு மேங்குஞ்
செவ்விதென் செங்கோ லென்னுந் தெருமருந் தெளியுந் தேறான்.

தெளிவுரை : அமைச்சர்கள் கூறிய அந்தச் சொற்களைக் கேட்ட மன்னர் அந்தப் பசு அடைந்த துன்பங்களைப் போன்று துன்பம் அடைந்தவனாகி, நஞ்சானது தலையில் ஏறியதைப் போன்று மனத்தில் வேதனை மிகுந்து, இங்கு இந்தத் துன்பம் நிகழ்ந்தவாறு எப்படி? என்று துன்பப்படுவார்; இரங்குவார்; ஏங்குவார்; தம் செங்கோல் நன்றாக உள்ளது ! என்று தம்மையே இகழ்ந்து கொள்வார்; உள்ளம் கழல்வார்; பின் சற்றுத் தெளிவு பெற்றுக் கொள்வார்; என்றாலும் ஒன்றும் தெளிவு கொள்ளாதவர் ஆனார்.

118. மன்னுயிர் புரந்து வையம் பொதுக்கடிந் தறத்தில் நீடும்
என்னெறி நன்றா லென்னும் என்செய்தால் தீரு மென்னுந்
தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரும்
அந்நிலை யரச னுற்ற துயரமோர் அளவிற் றன்றால்.

தெளிவுரை : இவ்வுலகத்தில் நிலைபெற்ற உயிர்களை எல்லாம் தீமை அணுகாதபடி காத்து உலகம் எல்லார்க்கும் பொதுவானது என்பது இல்லாது, எனக்கே உரியது என்னுமாறு அறவழியில் நீண்ட காலம் செலுத்திய என் ஆட்சி மிக நன்றாக இருக்கின்றது ! எனத் தம்மைத் தாமே இகழ்ந்து சொல்வார்; என்ன செய்தால் இது நீங்கும்; எனத் தமக்குதானே புகல்வார்; தன் இளங்கன்று காணாத தாய்ப் பசுவைக் கண்டு தளர்ச்சி அடைவார்; இவ்வாறு அந்நிலையில் மன்னர் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை !

119. மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடிவணங்கிச்
சிந்தைதளர்ந் தருளுவது மற்றிதற்குத் தீர்வன்றால்
கொந்தலர்த்தார் மைந்தனைமுன் கோவதைசெய் தார்க்குமறை
அந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறமென்றார்.

தெளிவுரை : மன்னர் அடைந்த அளவற்ற துன்பத்தை அமைச்சர் கண்டு அவரது திருவடிகளை வணங்கி மன்னரே ! மனம் தளர்வது இதற்குத் தீர்வாக ஆகாது ! பின் யாது தீர்வு என்றால், பசுவதை செய்தவர்க்கு அந்தணர் விதித்த வழியே உமது மைந்தனை முறை செய்வது தான் அறநெறியாகும் ! என்று இயம்பினர்.

120. வழக்கென்று நீர்மொழிந்தால் மற்றதுதான் வலிப்பட்டுக்
குழக்கன்றை இழந்தலறுங் கோவுறுநோய் மருந்தாமோ
இழக்கின்றேன் மைந்தனைஎன் றெல்லீருஞ் சொல்லியஇச்
சழக்கின்று நானியைந்தால் தருமந்தான் சலியாதோ.

தெளிவுரை : மறையை ஓதும் அந்தணர் விதித்த வழி மைந்தனை நிறுத்துவதே இதற்குத் தீர்வாகும் என நீங்கள் சொல்வீ ரானால், அது வலியக் கொல்லப்பட்டதால் இளங்கன்றை இகழ்ந்து அலறும் பசுவினது துன்பத்துக்கு மருந்தாகுமா? பசு தன் கன்றை இழந்ததற்குத் தீர்வாகும்படி நான் என் மகனை இழந்து விடுவேன் என்று எண்ணி நீங்கள் எல்லாரும் சேர்ந்து கூறிய இந்தத் தீமைக்கு நான் உடன்பட்டால் அறக் கடவுள் தான் சலிப்பு அடையாதோ ?

121. மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ.

தெளிவுரை : அந்த அரச அறம் யாது என்றால், உலகத்தின் வாழும் உயிர்களைக் காக்கும் போது, பின் அக்காவலுக்கு இடையூறாய்த் தன்னாலும், தன் பரிவாரத்தாலும், கள்வராலும் மற்ற உயிர்களாலும் வரும் ஐந்து வகையான அச்சங்களையும் போக்கி அறத்தைப் பிறழாமல் பாதுகாப்பவன் அல்லனோ மாநிலம் காவலன் என்ற பெயருக்கு உரிமையுடையவன்?

122. என்மகன்செய் பாதகத்துக் கிருந்தவங்கள் செயஇசைந்தே
அன்னியனோர் உயிர்கொன்றால் அவனைக்கொல் வேனானால்
தொன்மனுநூற் றொடைமனுவால் துடைப்புண்ட தெனும்வார்த்தை
மன்னுலகில் பெறமொழிந்தீர் மந்திரிகள் வழக்கென்றான்.

தெளிவுரை : என் மகன் செய்த பாவச் செயலுக்குக் கழுவாயாக அறநூலின் வழி நிற்கச் செய்தலான தவம் செய்ய உடன்பட்டு, அவ்வாறே அயலான் ஓர் உயிரைக் கொன்றால் அதற்குக் கழுவாயாக அவனைக் கொலை செய்வதே தீர்வாகும் எனக் கொன்று விடுவேனானால், இவ்வுலகத்தில் பழைய காலத்திலிருந்து வந்த மனுநூல் நீதி, பின்னால் அதே பெயர் கொண்ட ஒரு மனு மன்னனால் அழிக்கப் பட்டது என்ற பழிச் சொல் வந்து சேரும். அங்ஙனம் உலகில் வரும் பழியை நான் அடையும் படி நீங்கள் வழக்கு உரைத்தீர்கள் என்று உரைத்தார்.

123. என்றரசன் இகழ்ந்துரைப்ப எதிர்நின்ற மதியமைச்சர்
நின்றநெறி உலகின்கண் இதுபோல்முன் நிகழ்ந்ததால்
பொன்றுவித்தன் மரபன்று மறைமொழிந்த அறம்புரிதல்
தொன்றுதொடு நெறியன்றோ தொல்நிலங்கா வலஎன்றார்.

தெளிவுரை : என இங்ஙனம் மன்னர் அமைச்சரைப் பார்த்துச் சொன்னார். அதைக்கேட்டு எதிரே நின்ற அறிவு நுட்பம் உடைய அமைச்சர்கள் பழமையான உலகக் காவல் பூண்ட மன்னரே! நாங்கள் கூறிய வழியிலே நின்ற நீதி நெறி இவ்வுலக வழக்கத்தில் இதைப் போல் முன் நடந்துள்ளது. ஆதலால் இதற்கு அரசிளஞனைக் கொல்வது மரபன்று. வேதத்தில் விதித்தவாறு அறம் செய்விப்பது அதாவது கழுவாயாக ஒன்றைச் செய்தல் என்பது தொன்று தொட்டு வரும் நெறியன்றோ என்று வணங்கியுரைத்தனர்.

124. அவ்வண்ணந் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம்நோக்கி
மெய்வண்ணந் தெரிந்துணர்ந்த மனுவென்னும் விறல்வேந்தன்
இவ்வண்ணம் பழுதுரைத்தீர் என்றெரியி னிடைத்தோய்ந்த
செவ்வண்ணக் கமலம்போல் முகம்புலர்ந்து செயிர்த்துரைப்பான்.

தெளிவுரை : அங்ஙனம் வணங்கிச் சொன்ன அமைச்சர்களை நோக்கி, உண்மையின் தன்மையை யுணர்ந்த மனு என்ற வலிய மன்னர் இங்ஙனம் குற்றமாய்ச் சொன்னீர்களே ! எனக் கூறித் தீயில் தோய்ந்த செந்தாமரை போல் சினத்தால் முகம் சிவந்து மேலும் கூறலானார்.

125. அவ்வுரையில் வருநெறிகள் அவைநிற்க அறநெறியின்
செவ்வியவுண் மைத்திறநீர் சிந்தைசெயா துரைக்கின்றீர்
எவ்வுலகில் எப்பெற்றம் இப்பெற்றித் தாமிடரால்
வெவ்வுயிர்த்துக் கதறிமணி யெறிந்துவிழுந் ததுவிளம்பீர்.

தெளிவுரை : அமைச்சர்களே ! நீங்கள் கூறியவுரைகளின் படி வரும்விதிகள் ஒருபுறம் இருக்க, அறவழியில் சிறந்த உண்மை இயல்பை உள்ளத்துக் கொள்ளாமல் நீங்கள் இங்ஙனம் உரைத்தீர்கள் ! அவ்வுண்மை இயல்பு யாது என்றால், எந்த உலகத்தில் எந்தப்பசு இத்தகைய துன்பத்தால் பெருமூச்சு விட்டுக் கதறி வந்து அரண்மனை வாயிலில் ஆராய்ச்சி மணியை அசைத்துத் துடித்துப் பதறியது? இதை ஆராய்ந்து கூறுங்கள் !

126. போற்றிசைத்துப் புரந்தரன்மா லயன்முதலோர் புகழ்ந்திறைஞ்ச
வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த்
தோற்றமுடை உயிர்கொன்றான் ஆதலினால் துணிபொருள்தான்
ஆற்றவுமற் றவற்கொல்லும் அதுவேயா மெனநினைமின்.

தெளிவுரை : முன் காலத்தில் இந்திரன், நான்முகன், திருமால் முதலான தேவர்கள் வணங்குமாறு எழுந்தருளியிருந்த வீதி விடங்கப் பெருமான் அதற்கு முன் மேவியும் இப்போது உறைந்தும் வீற்றிருக்கும்பதியான இத்திருவாரூரில் தோன்றிய உயிரைக் கொன்றவன் இம்மகன், ஆதலால் அவனைக் கொல்வதே துணியப்படுகின்ற பொருள் ஆகும் என எண்ணுங்கள் !

127. எனமொழிந்து மற்றிதனுக் கினியிதுவே செயல்இவ்ஆன்
மனமழியுந் துயரகற்ற மாட்டாதேன் வருந்துமிது
தனதுறுபே ரிடர்யானுந் தாங்குவதே கருமமென
அனகன்அரும் பொருள்துணிந்தான் அமைச்சருமஞ் சினரகன்றார்.

தெளிவுரை : என்று மேற்கண்டவாறு சொல்லிப் பின்பு இனி இதற்குச் செய்யக் கூடிய செயல் இதுவேயாகும். இந்தப் பசு உள்ளம் வருந்தும் துன்பத்தை நீக்க மாட்டாதவன் ஆனேன். ஆதலால் இப்படி அடைந்த துன்பத்தை யானும் அடைவதே செய்யத் தக்கது! எனக் கூறி மன்னர் செய்வதற்கு அரிய செயலைச் செய்யத் துணிந்து நின்றார். அதைப் பார்த்து அமைச்சரும் அஞ்சி அகன்று போயினர்.

128. மன்னவன்தன் மைந்தனையங் கழைத்தொருமந் திரிதன்னை
முன்னிவனை அவ்வீதி முரண்தேர்க்கா லூர்கவென
அன்னவனும் அதுசெய்யா தகன்றுதன்ஆ ருயிர்துறப்பத்
தன்னுடைய குலமகனைத் தான்கொண்டு மறுகணைந்தான்.

தெளிவுரை : இங்ஙனம் செய்ய துணிவுடைய மன்னர் தம் மகனை வரப் பண்ணி ஓர் அமைச்சனை நோக்கி, இவனை அந்தத் தெருவில் தேர்ச் சக்கரத்தில் கிடத்தித் தேரை இவன் மீது ஊர்க ! என்று ஆணையிட்டார். அந்த அமைச்சனும் அதைச் செய்யாது போய்த் தன் அரிய உயிரைத் துறந்தான். அதையறிந்த அம்மன்னர் தன் குலமகனை முறை செய்வதற்குத் தாமே கொண்டு அத்தெருவுக்குச் சென்றார்.

129. ஒருமைந்தன் தன்குலத்துக் குள்ளான்என் பதும்உணரான்
தருமம்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்
மருமம்தன் தேராழி உறவூர்ந்தான் மனுவேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோமற் றெளிதோதான்.

தெளிவுரை : அங்ஙனம் சென்ற மன்னர் தம் குலத்துக்கு உள்ளவன் இவ்வொரு மகனே என்பதையும் உள்ளத்தில் உணராதவராய், தம் வழியில் செல்வதே கடமை என்ற ஒரே எண்ணம் உடையவராய்த் தம்மகனை அந்தத் தெருவில் கிடத்தி, அவனது மார்பில் தம் தேரின் சக்கரம் ஏறிச் செல்லுமாறு தேரைச் செலுத்தினார். உலகத்துக்கு அரிய மருந்து போன்ற அரசாட்சி செய்வது தான், செய்வதற்கு அரியதோ அல்லது எளியதோ என்பதை ஆராயுங்கள்.

130. தண்ணளிவெண் குடைவேந்தன் செயல்கண்டு தரியாது
மண்ணவர்கண் மழைபொழிந்தார் வானவர்பூ மழைசொரிந்தார்
அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி மழவிடைமேல்
விண்ணவர்கள் தொழநின்றான்வீதிவிடங் கப்பெருமான்.

தெளிவுரை : மிக்க அருள் பொருந்திய வெண் கொற்றக் குடையையுடைய மனுநீதி மன்னரின் செயற்கரிய செயலைக் கண்டு பொறுக்க இயலாதவராய், மண் உலகத்தவரான மக்கள் கண்ணீர் மழை பொழிந்தனர். தேவர் கற்பகப் பூ மழை பொழிந்தனர். மிகவும் பெருமையுடைய அம்மன்னர் கண் முன்னர் வீதிவிடங்கப் பெருமானான தியாகராசர் காட்சி தந்து தொழுமாறு எழுந்தருளி நின்றார்.

131. சடைமருங்கில் இளம்பிறையுந் தனிவிழிக்குந் திருநுதலும்
இடமருங்கில் உமையாளும் எம்மருங்கும் பூதகணம்
புடைநெருங்கும் பெருமையும்முன் கண்டரசன் போற்றிசைப்ப
விடைமருவும் பெருமானும் விறல்வேந்தற் கருள்கொடுத்தான்.

தெளிவுரை : சடையின் ஒரு பக்கத்தில் பிறைச் சந்திரனும், தனித்து விழிக்கும் இயல்பு கொண்ட திருநெற்றியும், இடப் பக்கத்தில் உமையம்மையாரும் எல்லாப்பக்கங்களிலும், சூழ்ந்த பூதகணங்களுமாக இக்காட்சியை இறைவர் புலப்படுத்திக் காட்டினர். மனு அரசர் அதனைக் கண்டு துதித்து நிற்க, காளையுடைய வீதிவிடங்கப் பெருமான் வல்லமையுடைய அம்மன்னருக்குத் தம் நிறைவான அருளைத் தந்தார்.

132. அந்நிலையே உயிர்பிரிந்த ஆன்கன்றும் அவ்வரசன்
மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடனெழலும்
இன்னபரி சானானென் றறிந்திலன்வேந் தனும்யார்க்கும்
முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ.

தெளிவுரை : அவ்வளவில், இறந்த பசுவின் கன்றும், மன்னரின், உரிமைக் கன்றான மைந்தனும் தற்கொலை செய்து கொண்ட அமைச்சனும் ஒருங்கே உயிர் பெற்றெழுந்தனர். அதைக் கண்ட மன்னரும் தாம் இன்னதன்மை அடைந்தார் என்று தாமே அறியாதபடி ஆனார். இங்ஙனம் நிகழுமோ என்றால், எல்லார்க்கும் முன்னவரான இறைவர் முன் நின்றால் முடியாததும் உண்டோ? இல்லை !

133. அடிபணிந்த திருமகனை ஆகமுற எடுத்தணைத்து
நெடிதுமகிழ்ந் தருந்துயரம் நீங்கினான் நிலவேந்தன்
மடிசுரந்து பொழிதீம்பால் வருங்கன்று மகிழ்ந்துண்டு
படிநனைய வரும்பசுவும் பருவரல்நீங் கியதன்றே.

தெளிவுரை : இறைவர் அருளின் வழி உயிர் பெற்றெழுந்த அரசிளைஞன் மன்னர் அடிகளை, வணங்கினான். அங்ஙனம் வந்து தம்மை அடிபணிந்த மைந்தனை மன்னர் எடுத்துத் தம் மார்பு பொருந்தத் தழுவிப் பெரிதும் மகிழ்ந்து (பசு அடைந்த துன்பத்தால் உண்டான தம்) முன்னைய துன்பத்தினின்று நீங்கினார். மடியில் சுரந்து பொழியும் பாலை. உயிர் பெற்று எழுந்த கன்று மகிழ்ந்து குடிக்க பால் பெருகி வரும் பசுவும் தான் கன்றிழந்த முன்னைய துன்பத்தினின்று அப்போதே நீங்கியது.

134. பொன்தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான்
வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்துச்
சென்றருளும் பெருங்கருணைத் திறங்கண்டு தன்னடியார்க்கு
என்றும்எளி வரும்பெருமை ஏழுலகும் எடுத்தேத்தும்.

தெளிவுரை : அழகு பொலியும் மதில் சூழ்ந்த திருவாரூரில் பூங்கோயிலில் எழுந்தருளிய இறைவர் வெற்றி பொருந்திய மனுச் சோழருக்குக் காட்சியளித்துத், தம் அருளையும் அளித்து எழுந்தருளிய கருணைத் திறத்தைப் பார்த்து, அந்த இறைவர் இவ்வாறே அடியார்க்கு வெளி வந்து அருளும் பெருமையை ஏழ் உலகும் வணங்கும்.

135. இனையவகை அறநெறியில் எண்ணிறந்தோர்க் கருள்புரிந்து
முனைவரவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர்மேல்
புனையுமுரை நம்மளவில் புகலலாந் தகைமையதோ
அனையதனுக் ககமலராம் அறவனார் பூங்கோயில்.

தெளிவுரை : இங்ஙனம் அறநெறியில் அளவில்லாத உயிர்களுக்கு அருள் செய்து வீதிவிடங்கப் பெருமான் வீற்றிருந்தருளும் பழைய அந்தப் பதியைப் பற்றி எடுத்துச் சொல்வது அளவான நம் சொல்லாற்றலில் அடங்குவதோ? அடங்காது ! அந்தகரத்துக்கு அகமலர் போல விளங்குவது, அறவனார் ஆன இறைவர் வீற்றிருக்கும் பூங்கோயில் என்று பெயர் கொண்ட திருக்கோயிலாகும்.

திருவாரூர்த் திருநகரச் சிறப்பு முற்றிற்று.

5. திருக்கூட்டச் சிறப்பு

136. பூத நாயகர் புற்றிடங் கொண்டவர்
ஆதி தேவர் அமர்ந்தபூங் கோயிலிற்
சோதி மாமணி நீள்சுடர் முன்றில்சூழ்
மூதெ யிற்றிரு வாயின்முன் னாயது.

தெளிவுரை : பூதகணங்களின் தலைவராயும், புற்றில் இடம் கொண்டு வீற்றிருப்பவராயும், ஆதிதேவராயும் உள்ள இறைவர் விரும்பி எழுந்தருளும் பூங்கோயில் என்ற கோயிலுள் விளக்கம் மிக்கு பேரழகும் பேரொளியும் உள்ள திருமுற்றத்தில் மதிலின் வாயிலை அடுத்து முதலில் (தேவாசிரியன் மண்டபம்) உள்ளது.

137. பூவார் திசைமுகன் இந்திரன் பூமிசை
மாவாழ் அகலத்து மால்முத லானவர்
ஓவா தெவரும் நிறைந்துறைந் துள்ளது
தேவா சிரிய னெனுந்திருக் காவணம்.

தெளிவுரை : தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனும் இந்திரனும், திருமகளைத் தன் மார்பில் கொண்ட திருமால் முதலிய தேவர்களும் ஆகிய எல்லாரும் நீங்காமல் நிறைந்து வாழ்வதற்கு, இடமாக உள்ளது அத்தேவாசிரியன் மண்டபம் !

138. அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
நிரந்த நீற்றொளி யால்நிறை தூய்மையால்
புரந்த வஞ்செழுத் தோசை பொலிதலால்
பரந்த வாயிரம் பாற்கடல் போல்வது.

தெளிவுரை : உயிர்களின் துயரத்தைப் போக்கும் அடியவர்கள் திருமேனி மேல் ஒழுங்கு பெற அணிந்த திருநீற்றின் வெண்மையான ஒளியாலும், உயிர்களைக் காக்க வல்லதாய் அவர்கள் வாக்கில் எழும் ஐந்தெழுத்தின் பஞ்சாட் சரத்தில் ஒலியானது எங்கும் பொருந்துவதாலும், பரந்த பலபாற்கடல்கள் ஒன்றாய்ச் சேர்ந்துள்ளதைப்போல் அத் தேவாசிரியன் மண்டபம் விளங்குவதாகும்.

139. அகில காரணர் தாள்பணி வார்கள்தாம்
அகில லோகமும் ஆளற் குரியரென்று
அகில லோகத்து ளார்க ளடைதலின்
அகில லோகமும் போல்வ ததனிடை.

தெளிவுரை : எல்லா வுலகங்களுக்கும் காரணமான சிவபெருமானின் திருவடிகளையே பற்றாகக் கொண்டு பணிபவராய் இங்கு எழுந்தருளியிருக்கும் அடியார்களே, எல்லா உலகங்களையும் ஆளுதற்கு உரியார் என்ற காரணத்தால், எல்லா உலகங்களில் உள்ளவரும் அவர்களது ஆட்சிக்குள் அமைந்து வணங்க இங்கு வந்து சேர்கின்றனர். ஆதலால் அத்தேவாசிரியனின் இடம் எல்லாவுலகங்களையும் ஒன்றாய்ச் சேர்ந்ததைப் போல் விளங்கியது.

140. அத்தர் வேண்டிமுன் ஆண்டவர் அன்பினால்
மெய்த்த ழைத்து விதிர்ப்புறு சிந்தையார்
கைத்தி ருத்தொண்டு செய்கடப் பாட்டினார்
இத்தி றத்தவ ரன்றியும் எண்ணிலார்.

தெளிவுரை : அங்குள்ள அடியார்கள் உலகத் தந்தையாரான சிவபெருமானால் விரும்பி முன்னே ஆட்கொள்ளப் பெற்றவர்கள்; அன்பின் மிகுதியால் தம் மேனியில் மயிர்ப் புளகமும் உடல் நடுக்கமும் நிகழும் நெகிழ்வும் உடையவர்கள். தம் கடமையாய்க் கொண்டு கைத்தொண்டு செய்பவர்கள். இத்தன்மையுடையவர்களுடன் எண் இல்லாத அடியார்கள்,

141. மாசி லாத மணிதிகழ் மேனிமேல்
பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்
தேசி னால்எத் திசையும் விளக்கினார்
பேச வொண்ணாப் பெருமை பிறங்கினார்.

தெளிவுரை : குற்றம் இல்லாத உருத்திராக்கம் பூண்ட தம் திருமேனியில் பூசிய திருநீற்றின் தூய்மை போலவே, உள்ளேயும் புனிதத் தன்மை வாய்ந்தவர்கள். ஆதலால் அவர்கள் இவ்வளவு என்று வரையறை செய்து சொல்லால் சொல்ல முடியாத பெருமையில் விளங்குபவர்கள்.

142. பூத மைந்தும் நிலையிற் கலங்கினும்
மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓது காத லுறைப்பி னெறிநின்றார்
கோதி லாத குணப்பெருங் குன்றனார்.

தெளிவுரை : அந்த அடியவர்கள் இறைவரது ஆணையின்படி நிலை பெற்ற ஐந்து பூதங்களும் தம் நிலையில் கலங்கின போதும், தம் நிலை கலங்காது உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானின் தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தம் உள்ளத்தால் மறவாதவர்கள். பெரியவர்களால் எடுத்து ஓதப் பெற்ற அன்பிலே முளைத்த பக்தி வழியில் தவறாமல் நிற்பவர்கள். குற்றம் இல்லாத குணமலை போன்றவர்கள்.

143. கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

தெளிவுரை : அவ்வடியார்கள் குறைவதும் மிகுவதும் இல்லாத நிலைத்த செல்வத்தையுடையவர்கள்; மண் ஓட்டையும் பசும் பொன்னையும் ஒன்றாகவே மதிப்பவர்கள்; இறைவனை உள்ளத்தில் கூட்டி வைத்த அன்பு மேலீட்டினால் அவனைக் கும்பிடும் பிறப்பு ஒன்றே அல்லாது வீடு பேற்றையும் விரும்பாத வன்மை வாய்ந்தவர்கள்.

144. ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே
பார மீசன் பணியல தொன்றிலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவிலார்
வீர மென்னால் விளம்புந் தகையதோ.

தெளிவுரை : அவ்வடியார்கள் ஆரமாக அணிவது உருத்தி ராக்க மாலையே. ஆடையாய் உடுப்பது கந்தல் ஆடையாகும். அவர் தாம் செய்யும் கடமையாய்த் தாங்கி நிற்பது இறைவரின் தொண்டயே அன்றி வேறொன்றும் இல்லாதவர்கள். அவர்கள் அத்தகைய பணியில் தம்மைச் செலுத்தவல்ல குளிர்ந்த அன்பை உடையவர்கள்; ஒன்றாலும் குறைவு இல்லாதவர்கள். இத்தகையவர்களின் வீரம் என்னால் அளவிட்டுச் சொல்லும் தன்மை உடையதோ? உடையதன்று.

145. வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
தாண்ட வப்பெரு மான்தனித் தொண்டர்கள்
நீண்ட தொல்புக ழார்தந் நிலைமையை
ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந் தேத்துகேன்.

தெளிவுரை : அவர்கள் மேற்கண்ட கோலமே அல்லது தாங்கள் வேண்டியவாறு மேற் கொள்வனவும், கண்டாரும் கேட்டாரும் விரும்பத்தக்கனவும் ஆகிய பலப்பல வேடங்களில் விளங்குபவர்கள்; வேடத்தால் பலப்பல தோற்றத்தினராயினும் கூத்தப் பெருமானுக்கு ஆளாம் தனிப் பெருமையில் ஒன்று போல் விளங்குபவர்கள். ஆதலால் நீண்ட அளவற்ற புகழை உடையவர் ஆவார்கள் இக்கூட்டத்தில் உள்ளவர்கள். இத்தகையவரின் தொண்டின் நிலையை இப்புராணத்தில் எடுத்துக் கூறி வாழ்த்தப் புகும் யான் என்ன வென்று அறிந்து ஏத்துவேன்?

146. இந்த மாதவர் கூட்டத்தை யெம்பிரான்
அந்த மில்புகழ் ஆலால சுந்தரன்
சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம்.

தெளிவுரை : இந்த மாதவர் திருக்கூட்டத்தை எம் இறைவனான அளவற்ற புகழையுடைய ஆலால சுந்தரர் இந்த வுலகத்தில் வந்து அவதரித்து, சுந்தரத் திருத் தொண்டத் தொகைத் தமிழ் பாடிய வரலாற்றை உரைக்கத் தொடங்குகின்றோம்.

திருக்கூட்டச் சிறப்பு முற்றுப் பெற்றது

6. தடுத்தாட்கொண்ட புராணம் (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)

63 நாயன்மார்களில் முதல் மூவரில் ஒருவர் சுந்தரர்.  இவரது அழகில் மயங்கிய சிவபெருமான் இவரை சுந்தரா என்று அழைத்ததுடன், இவருக்காக  தூது சென்ற பெருமைக்குரியவர்.

 திருநாவலூர் (தற்போது விழுப்புரம் மாவட்டம்)என்னும் திருத்தலத்தில், ஆதிசைவர் மரபில், சடையனாருக்கும்,  இசைஞானியாருக்கும்  சுந்தரர் 8ம் நூற்றாண்டில் தோன்றினார். இவரது இயற்பெயர் நம்பியாரூரார். ஒரு முறை ஆரூரர் வீதியிலே, விளையாடிக் கொண்டிருந்தபொழுது அங்கு வந்த திருமுனைப்பாடி அரசர்  நரசிங்கமுனையர்  ஆரூரரைக் கண்டார். அக்குழந்தையை தம்மோடு அழைத்து செல்ல முடிவெடுத்து,குழந்தையைத் தூக்கிக் கொண்டு, சடையனார் இல்லத்திற்குள் சென்றார்.  சடையனாரும் நரசிங்கமுனையரும் பால்ய சிநேகிதர்கள்.  அரசன் சடையனாரிடம், நண்பா! உங்கள் குழந்தையின் அழகில் நான் பேரன்பு பூண்டேன். அதனால் இக்குழந்தையை மகனாக வளர்க்கும் பாக்கியத்தை எனக்குத் தர வேண்டும், என்று கேட்டான்.  பெற்றோர்கள்  மனநிறைவோடு மகனை அரசருடன் அனுப்பி வைத்தனர். ஆரூரர்,  சின்னஞ்சிறு வயதிலேயே,அரண்மனையில் அரசர்க்குரிய அத்தனை கலைகளிலும் நல்ல தேர்ச்சி பெற்று அரசகுமாரனைப்போல் வாழத் தொடங்கினார்.  பெற்றோர்கள், ஆரூரருக்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தனர். திருநாவலூருக்கு அடுத்தாற் போல் புத்தூர் என்ற ஊரிலுள்ள, சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் புதல்வியை ஆரூரருக்குப் பார்த்து மணம் முடிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.  திருமணத்திற்கு முதல் நாள் ஆரூரர் திருநாவலூரில் இருந்து வெண்புரவியில் புத்தூருக்கு புறப்பட்டார். மணநாள் காணப்போகும் ஆரூரரை சிவபெருமான் தடுத்தாட்கொள்ளத் திருவுள்ளங் கொண்டு,  ஒரு முதிய அந்தணர் வடிவம் தாங்கி மணப்பந்தலுக்குப் புறப்பட்டார்.  அங்கு எழுந்தருளும் போதே, நான் கூறப்போகும் இம்மொழியை யாவரும் கேளுங்கள் என்று கூறிக்கொண்டேதான் வந்தார் எம்பெருமான்!  நம்பியாரூர், பணிவன்போடு ஐயனே! தங்கள் வரவு நல்வரவாகுக!   என்று கூறினார்.

அதற்கு அம்முதியவர், அப்பனே! உனக்கும் எனக்கும் முற்காலத்தேயுள்ள ஓர் தொடர்பு காரணமாக, ஒரு பெரும் வழக்குள்ளது. அதை தீர்த்து விட்டு, நீ உன் திருமணத்தை நடத்து என்றார். அதைக் கேட்டு, அனைவரும் திகைக்க சுந்தரர் மட்டும் சற்றும் கலங்காமல், ஐயனே! உமது வழக்கை  முடித்துவிட்டு, பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன். வழக்கை இயம்புவீராக! என்றார். வேதியர், அந்த அவையில் உள்ளோரை நோக்கி, அந்தணர் குலத்தோரே! இந்நாவலூரான் என் அடிமை! என்றார். எனக்கு இவனது பாட்டன், எழுதிக்கொடுத்த அடிமை ஓலை இதோ  என்று தம் கையிலிருந்த நீட்டோலையைக் காண்பித்தவாறே   சினம் பொங்கக் கூறினார். ஆரூரர் புன்னகை தவழ,  ஐயா! வேதியரே! உமக்கு நன்றாக பித்து பிடித்திருக்கிறது. இல்லாவிடில், குற்றமற்ற என்னை உங்களுக்கு அடிமை என்பீரா!.அத்துடன் நீர் என்ன பித்தனோ? என்றும் கேட்டார். இறைவன் சினம் பொங்க வீணாக பேசி என் கோபத்தை கிளறாதே! மணவறையில் உட்கார்ந்து கொண்டு வித்தகம் பேசுகிறாயே எதற்கு? உன் கடன் எனக்குப் பணிசெய்து கிடப்பதே என்பதை நினைவிற் கொள்! என்றார்.
 
மனம் குழம்பிய சுந்தரர்.  முதியவரிடம் எங்கே அடிமை ஓலையைக் காட்டுங்கள் என்றார். தனிப்பட்ட முறையில் உன்னிடம்  கொடுக்க முடியாது.  அவைக்களம் வா!  என்றார். நம்பியாரூரர் கோபத்துடன் அந்தணர் கையிலிருந்த  ஓலையைப் பிடுங்கி, சுக்கு சுக்காகக் கிழித்தெறிந்தார். அதற்கு பெரியவர் இது கொடிய அநியாயம் என்று முறையிட்டார். அப்பொழுது திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் சிலர்,  நீவிர் யார்?என்று கேட்டனர். நான் அருகிலுள்ள வெண்ணெய்நல்லூரில் பிறந்து வளர்ந்தவன். இவன் பாட்டன் இவன் எனக்கு அடிமை என்று எழுதிக் கொடுக்காவிடில், எதற்காக நம்பியாரூரன்,  என் கையிலிருந்த ஓலையைக் கிளித்தெறிய வேண்டும்? இவன் என் அடிமைதான் என்பதை உறுதிப்படுத்தி உலகறியச் செய்ய இதைவிட எங்களுக்கு ஆதாரம் வேறென்ன வேண்டும்? என்று விடையளித்தார் எம்பெருமான்! அப்படியென்றால், இந்த வழக்கை வெண்ணெய் நல்லூரிலேயே தீர்த்துக் கொள்ளலாம் வாரும் என்று கூறினார் சுந்தரர்! அங்ஙனமே ஆகட்டும். இப்போது நீ கிழித்த ஓலை நகலேயாகும். மூல ஓலையைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். வெண்ணெய்நல்லூரிலுள்ள அவையோர் முன்னால் மூல ஓலையைக் காண்பித்து நீ என் அடிமை என்பதை நிரூபிக்கிறேன் என்ற மறையோன், தள்ளாதவரைப் போல தடியை ஊன்றிக் கொண்டு புறப்பட்டார்.

 ஆரூரரும் மற்ற அனைவரும் பெரியவருடன்  வெண்ணெய்நல்லூர் அவையை வந்தடைந்தனர். அவையோர் முன்னால் பெரியவர் அந்தணர்களே! இந்நாவலூரன் என் அடிமை! அதற்கு சான்று இந்த மூலஓலை என்று கூறி அந்த ஓலையை எடுத்து அவையோரிடம் கொடுத்தார். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது.  திருநாவலூரில் இருக்கும் ஆதிசைவனாகிய ஆரூரன் என்னும் பெயருடைய நான், திருவெண்ணெய்நல்லூர் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது. நானும் என் வழிவரும் மரபினோரும் வழிவழியாய் இவருக்கு அடிமை தொழில் செய்து வருவோம் என்பதற்காக உள்ளும் புறமும் ஒருமைப்பட்டு எழுதிக் கொடுத்தேன். இதற்கு இஃது என் கையெழுத்து. இம்மணிவாசகத்தைக் கணக்கன் வாசிக்கக் கேட்ட அவையோர்,  அந்தணர் கூறுவது முறைதான் என்று ஒப்புக்கொண்டனர்.

ஆரூரன் அந்தணருக்கு அடிமையாய்ப் பணிசெய்வது தான் கடமை, என்று தங்கள் தீர்ப்பை வழங்கினார்கள். ஆரூரரும் மறையவர் தீர்ப்புப்படி அந்தணருக்கு அடிமையாகி, அவையோர் தீர்ப்புக்கு தலை வணங்கினார். அவையோர், முதியவரிடம், இவ்வூரில் உமது இருப்பிடம் எங்கே என்று எங்களுக்குக் காட்டுவீராக என்றனர். எம்பெருமான், அவர்களை அழைத்துக் கொண்டு  அவ்வூரிலுள்ள திருவட்டுறை என்கின்ற திருக்கோவிலுக்குள் அழைத்து சென்று மறைந்து விட்டார். அந்தணரை தேடிய சுந்தரர் ஆலயம் முழுவதும் வலம் வந்தார். எங்கு தேடியும் அவரை காணவில்லை. அப்பொழுது கோயிலுள் பேரொளி பிறந்தது. இறைவன்  உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார்.  ஆரூரானுக்கு ஆனந்தக் காட்சியளித்த அம்மையப்பர் திருவாய் மலர்ந்து,  அன்பிற்கினிய ஆலால சுந்தரா! எம்மை நீ தமிழ்ப்பாக்களால் அர்ச்சனை செய்வாயாக! என்று அன்பு கட்டளை இட்டார். அதற்கு சுந்தரர்,  என்னை ஆண்டருளிய அருட்பெருங்கடலே! யான் யாதும் அறிந்திலேனே! என்று சுந்தரர் விண்ணப்பித்து, உருகி நின்றார். இறைவன் தம்பிரான் தோழரைப் பார்த்து, உன்னை ஆட்கொண்ட போது எம்மை பித்தா! என்று அழைத்தாய், ஆதலின் பித்தா என்று அடி எடுத்துப்பாடுவாயாக!  என்று திருவாய் மலர்ந்து அருளினார். சுந்தமூர்த்தி சுவாமிகள், உள்ளமும் உடலும் பொங்கிப் பூரிக்க ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவாறே, பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா! என்று அடி எடுத்து, தடுத்தாட்கொண்ட தம்பிரான் மீது திருப்பதிகம் ஒன்றைப் பாடத் தொடங்கினார். சுந்தரரின் இசைத்தமிழ் இன்ப வெள்ளத்திலே மூழ்கி மிதந்த எம்பெருமான், சுந்தரர்க்கு திருவருள் புரிந்து மறைந்தார். சுந்தரர், சிந்தை மகிழ திருநாவலூர் திரும்பினார். அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் மீதும் திருப்பதிகங்களைப் பாடினார்.

147. கங்கையும் மதியும் பாம்புங் கடுக்கையு முடிமேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதியிரு மருங்கு மோடிச்
செங்கயல் குழைகள் நாடுந் திருமுனைப் பாடி நாடு.

தெளிவுரை : கங்கையாற்றையும் மூன்றாம் பிறைச் சந்திரனையும் பாம்பையும் கொன்றை மலரையும் தம் முடியின் மீது கொண்ட சிவபெருமானால் ஆள் ஓலை காட்டி வலிய ஆட்கொள்ளப்பட்ட ஆலால சுந்தரர்க்கு, ஆணைப்படி இவ்வுலகத்தில் அவதரிக்க உரிய நாடாவது, குளிர்ந்த, சந்திரன் போன்று பெண்களின் முகங்களின் இருபக்கங்களிலும் ஓடிப் போய்ச் சிறந்த கயல் மீன்கள் போன்ற கண்கள் காதுகளில் அணிந்த குழைகளை நாடிச் செல்லும் அழகிய மங்கையர் வாழும் திருமுனைப்பாடி நாடு என்பதாகும்.

148. பெருகிய நலத்தால் மிக்க  பெருந்திரு நாடு தன்னில்
அருமறைச் சைவ மோங்க அருளினால் அவத ரித்த
மருவிய தவத்தான் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத்
திருமறை யவர்கள் நீடுந் திருநாவ லூரா மன்றே.

தெளிவுரை : பெருகிய பல நலங்கள் எல்லாம் மிக்க பெரிய அந்தத் திருமுனைப்பாடி நாட்டில், அரிய சைவ நெறியானது தழைக்கும் பொருட்டு இறைவர் திருவருளினால் சுந்தரர் அவதரிப்பதற்குப் பொருந்திய பெரிய தவத்தைச் செய்த வளமுடைய பதியாவது, உண்மை நெறி தவறாத மறையவர் நிலைத்து வாழும் திருநாவலூர் என்பதாகும்.

149. மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும்
வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடைய னாருக்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி யார்பால்
தீதகன் றுலகம் உய்யத் திருவவ தாரஞ் செய்தார்.

தெளிவுரை : உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானுக்கு வழி வழியாய் அடிமைத் தொண்டு செய்யும் சிவமறையோர் மரபில் தோன்றியவராய், மேன்மை கொண்ட சடையனாருக்குக் குற்றம் இல்லாத இல்வாழ்வுக்குரிய, மனைவியரான இசை ஞானியார் திருவயிற்றிடமாய் உலகம் தீமையினின்று நீங்கவும், உய்தி பெறவும் ஓலை காட்டி ஆளப்பட்டவர் அவதாரம் செய்தருளினார்.

150. தம்பிரா னருளி னாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்
நம்பியா ரூர ரென்றே நாமமுஞ் சாற்றி மிக்க
ஐம்படைச் சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டி சாத்திச்
செம்பொன்நாண் அரையில் மின்னத் தெருவில்தேர் உருட்டு நாளில்.

தெளிவுரை : அவதரித்த அவர், தாம் அடிமைசெய்யும் தம் பெருமானின் அருளால், மாதவர்களும் போற்றத்தக்க நம்பியாரூர் என்ற திருப்பெயர் சூட்டப் பெற்றவராய்க் காவல் தொழில் மிக்க ஐம்படையும் சதங்கையும் அணிந்தும், அழகிய மணிகள் பதித்த சுட்டி அணிந்தும், செம்பொன் நாண் திருவரையில் விளங்கும்படியாய்த் தெருவில் சிறு தேர் உருட்டி விளையாடும் நாட்களில், ஒருநாள்.

151. நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர் கண்டு
பரவருங் காதல் கூர  பயந்தவர் தம்பாற் சென்று
விரவிய நண்பி னாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசிளங் குமரற் கேற்ப அன்பினால் மகன்மை கொண்டார்

தெளிவுரை : அந்த நாடு நல் வாழ்வு பெறுமாறு ஆள்கின்ற நரசிங்க முனையர் என்ற மன்னர் (நம்பி ஆரூரரைப்) பார்த்து (அவரிடத்தில்) சொல்வதற்குரிய ஆசை மிக்கதனால் பெற்றோரிடம் போய் நட்புரிமையினால், இந்தக் குழந்தையை வேண்டிப் பெற்றுக் கொண்டு சென்று, தம் மரபில் தோன்றிய அரசிளைஞன் போன்ற அன்பு மிகுதியால், தங்கட்கு மகனாம் தன்மையிலே ஏற்றுக் கொண்டார்.

152. பெருமைசா லரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னுந் தங்கள்
வருமுறை மரபின் வைகி வளர்ந்துமங் கலஞ்செய் கோலத்
தருமறை முந்நூல் சாத்தி யளவில்தொல் கலைகள் ஆய்ந்து
திருமலி சிறப்பின் ஓங்கிச் சீர்மணப் பருவஞ் சேர்ந்தார்.

தெளிவுரை : பெருமை பொருந்திய மன்னரின் அன்புக்குரிய மகனான பின்பும் தம் சைவ அந்தணர் மரபுக்குரிய ஒழுக்கத்தில் நின்று வளர்ந்தார்; அந்த ஒழுக்கத்துக்கு ஏற்றவாறு உரிய வயதில் பூணூல் சாத்தும் சடங்கும், பள்ளியில் சேர்க்கும் சடங்கும் செய்யப் பெற்றார். அளவில்லாத கலைகளை யெல்லாம் ஆராய்ந்து அந்தக் கலைகளால் ஆன கல்விச் செல்வமும் அரசிளைஞருக்குரிய பொருட் செல்வமும் கூடப் பெற்றார். மிக்க அன்பின் சிறப்பால் உயர்ந்து சிறப்பான மணம் செய்விக்கின்ற பருவத்தை அடைந்தார்.

153. தந்தையார் சடைய னார்தம் தனித்திரு மகற்குச் சைவ
அந்தணர் குலத்துள் தங்கள் அரும்பெரும் மரபுக் கேற்ப
வந்ததொல் சிறப்பில் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால்
செந்திரு வனைய கன்னி மணத்திறஞ் செப்பி விட்டார்.

தெளிவுரை : அங்ஙனம் ஆருரர்க்கு மணப் பருவம் வந்தடையவும், தந்தையாரான சடையனார் தம் குலத்துக்கு ஏற்றவாறு புத்தூரிலே ஆதிசைவ அந்தணர் மரபிலே பழங்குடியில் தோன்றிய சடங்கவி சிவசாரியாரின் மகளைத் தம் மகனுக்கு மணம் பேசுவதற்கு முதியவரிடம் கூறியனுப்பினார்.

154. குலமுத லறிவின் மிக்கார் கோத்திர முறையுந் தேர்ந்தார்
நலமிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை யேற்று
மலர்தரு முகத்த னாகி மணம்புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான்.

தெளிவுரை : குலம் குடி முதலியவற்றில் சிறந்த முதியோர் அங்கனமே போய்ச் சடையனார் கூறியனுப்பிய மணத் திறத்தைத் தெரிவித்தனர். தெரிவிக்க, அந்நன்மையை ஏற்றுக் கொண்டவராய்ச் சடங்கவி சிவாசாரியார், முக மலர்ச்சியுடன், மணம் செய்வதற்கு வேண்டுவனவான பலவுண்மைகளையும் எடுத்துச் சொல்லி, ஒப்புமை பெற்றதால் தம் மகளை மணம் செய்து தருவதற்கு இசைந்தார்.

155. மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப்
பெற்றவர் தம்பால் சென்று சொன்னபின் பெருகு சிந்தை
உற்றதோர் மகிழ்ச்சி யெய்தி மணவினை உவந்து சாற்றிக்
கொற்றவர் திருவுக் கேற்பக் குறித்துநாள் ஓலை விட்டார்.

தெளிவுரை : அவ்வாறு அவர் மணத்துக்கு இசைந்ததைக் கேட்ட முதியவர் ஆரூரரின் பெற்றோரிடம் போய் அதனைத் தெரிவித்தனர். சடையனார், மனம் மகிழ்ந்து ஆரூரரின் அன்பின் தந்தையான மன்னரின் சிறப்புக்கு ஏற்றபடி திருமணத்தை அறிவிக்கும்படி குறித்து எழுதிய ஓலையைப் பெண் வீட்டாருக்கு அனுப்பினர்.

156. மங்கலம் பொலியச் செய்த மணவினை ஓலை ஏந்தி
அங்கயற் கண்ணி னாரும் ஆடவர் பலரும் ஈண்டிக்
கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினா ரெதிரே வந்து
பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்.

தெளிவுரை : மங்கலம் கொண்ட அந்த மண நாள் ஓலையை மணமகன் வீட்டிலிருந்து மங்கலப் பெண்களும் ஆடவரும் ஏந்திக்கொண்டு புத்தூருக்குச் செல்ல, மணமகள் வீட்டிலிருந்து அங்ஙனமே மங்கலப் பெண்களும் ஆடவரும் எதிர் கொண்டு வந்து பணிந்து அந்த ஓலையை ஏற்றுக் கொண்டனர்.

157. மகிழ்ச்சியால் மணமீக் கூறி மங்கல வினைக ளெல்லாம்
புகழ்ச்சியாற் பொலிந்து தோன்றப் போற்றிய தொழில ராகி
இகழ்ச்சியொன் றானும் இன்றி ஏந்துபூ மாலைப் பந்தர்
நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள்முளை சாத்தி னார்கள்.

தெளிவுரை : அவ்வாறு மணநாள் ஓலையை ஏற்றுக்கொண்ட பெண் வீட்டு ஆடவர் மணநாள் ஓலை பெற்ற உறுதியான மகிழ்ச்சியால் அந்தத் திருமணச் செய்தியை மேலும் மேலும் பலர்க்கும் கூறினர். மணத்துக்கு உரிய முன்னால் செய்யப்பட வேண்டிய எல்லா மங்கலச் செயல்களையும் விளக்கமாய்ச் செய்யத் தொடங்கினர். எவ்வகையிலும் குறை சொல்லாத வகையால், பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் அமைத்து அதில் கூடி முளை சாத்தும் சடங்கைச் செய்தனர்.

158. மணவினைக் கமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத்
துணர்மலர்க் கோதைத் தாமச் சுரும்பணை தோளி னானைப்
புணர்மணத் திருநாள் முன்னாட் பொருந்திய விதியி னாலே
பணைமுர சியம்ப வாழ்த்திப் பைம்பொன்நாண் காப்புச் சேர்த்தார்.

தெளிவுரை : இங்ஙனம் புத்தூரில் மணமகளைப் பெற்றவர் மணத்துக்குரிய சடங்குகளைச் செய்ய, திருநல்லூரில், திருமண நாளுக்கு முன்னைய நாளில் முரசு முதலிய மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, பூமாலை அணிந்த தோள்களையுடைய நம்பி ஆரூரைப் பெற்றோர் வாழ்த்தி விதிப்படி பொன் நாணைக் காப்புக் கட்டினர்.

159. மாமறை விதிவ ழாமல்  மணத்துறைக் கடன்க ளாற்றித்
தூமறை மூதூர்க் கங்குல் மங்கலந் துவன்றி ஆர்ப்பத்
தேமரு தொடையல் மார்பன் திருமணக் கோலங் காணக்
காமுறு மனத்தான் போலக் கதிரவ னுதயஞ் செய்தான்.

தெளிவுரை : காப்புக் கட்டிய பின்பு, திருநாவலூரில் அன்றிரவு மறை நூல் விதிப்படி செய்ய வேண்டிய, மற்றச் சடங்குகள் யாவும் தவறாமல் செய்து கொண்டு, மங்கள வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டுமிக்க, தேன் பொருந்திய மலர் மாலை சூடிய நம்பி ஆரூரரின் மணக் கோலத்தைக் காண்கின்ற ஆசையுடையவன் போல் கதிரவன் உதயமானான்.

160. காலைசெய் வினைகள் முற்றிக் கணிதநூற் புலவர் சொன்ன
வேலைவந் தணையு முன்னர் விதிமணக் கோலங் கொள்வான்
நூலசைந் திலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன்
மாலையுந் தாரும் பொங்க மஞ்சனச் சாலை புக்கான்.

தெளிவுரை : காலைக் கடன்களை முடித்த பின்பு, சோதிடர்கள் குறித்த நல்ல வேலை வருவதற்கு முன்பே விதியின்படி செய்கின்ற மணக் கோலம் கொள்வதற்காகப் பூணூல் விளங்கும் மார்பையும் நுட்பமான கேள்வியை யுமுடைய மேலோரான நம்பி ஆருரர் மணிமாலையும் மலர் மாலையும் விளங்கத் திருமஞ்சன சாலையுள் புகுந்தார்.

161. வாசநெய் யூட்டி மிக்க மலர்விரை யடுத்த தூநீர்ப்
பாசனத் தமைந்த பாங்கர்ப் பருமணிப் பைம்பொன் திண்கால்
ஆசனத் தணிநீ ராட்டி அரிசனஞ் சாத்தி யன்பால்
ஈசனுக் கினியான் மேனி எழில்பெற விளக்கி னார்கள்.

தெளிவுரை : மணம் கமழும் நெய்ப்புகை யூட்டிய பாத்திரத்தில் உரிய மலர்களையும் மணப் பொருள்களையும் பெய்த நீரை நிரப்பி, அதன் பக்கத்தில் இடப்பட்ட பொன் அரியணையில் (ஆரூரரை) எழுந்தருளச் செய்து, அன்பினால் இறைவனுக்கு இனிய நம்பியாரூரரை நீராட்டிச் சுண்ணம் பூசி, அவரது மேனியானது மேலும் அழகு பெறும்படியாய்ச் செய்தனர்.

162. அகில்விரைத் தூப மேய்ந்தஅணிகொள்பட் டாடை சாத்தி
முகில்நுழை மதியம் போலக் கைவலான் முன்கை சூழ்ந்த
துகில்கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித்தன் தூய செங்கை
உகிர்நுதி முறையில் போக்கி ஒளிர்நறுஞ் சிகழி ஆர்த்தான்.

தெளிவுரை : நீராடச் செய்த பின்னர், அகில்புகை கமழும் பட்டாடையை சாத்தி, கைவல்லமை உடைய ஒருவன் தன் முன் கையில் எடுத்து துணியை நம்பி ஆரூரரின் நீண்ட கரிய குடுமியில் மேகத்துக்குள் நுழையும் வெண்மதிபோல் செலுத்தி ஈரத்தை மாற்றி, தன் கையின் நக நுனியினால் மயிரின் சிக்கலை எடுத்து, விளங்கிய சிகழிகையைக் கட்டினான்.

163. தூநறும் பசுங்கர்ப் பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில்
ஆனதண் பனிநீர் கூட்டி யமைத்தசந் தனச்சே றாட்டி
மான்மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப்
பான்மறை முந்நூல் மின்னப் பவித்திரஞ் சிறந்த கையான்.

தெளிவுரை : தூய்மையான நல்ல மணமுடைய பச்சைக் கர்ப்பூரச் சுண்ணத்துடன் அழகான மலர்களிலிருந்து எடுக்கப்பட்ட பனி நீர் கூட்டிச் செய்த சந்தனக் குழம்பைப் பூசி, கத்தூரி கலந்த கலவைச் சாந்தையும் அணிவித்தனர். அதன்பின் விதிப்படி அணியும் பூணூலை மார்பிலும் பவித்திரத்தைக் கையிலும் விளங்க வைத்தனர். அவ்வாறு பவித்திரம் கொண்ட கையையுடைய நம்பி ஆரூரர்,

164. தூமலர்ப் பிணையல் மாலை துணரிணர்க் கண்ணி கோதை
தாமமென் றினைய வேறு தகுதியால் அமையச் சாத்தி
மாமணி யணிந்த தூய வளரொளி இருள்கால் சீக்கும்
நாமநீள் கலன்கள் சாத்தி நன்மணக் கோலங் கொண்டான்.

தெளிவுரை : தூய்மையான மலர்களால் ஆன பிணையல், மாலை, கண்ணி, கோதை, தாமம் என்ற பலவகைப் பூ மாலைகளையும் சாத்த அணிந்து, ஒளி மிகுந்த மணிகள் பதித்த பொன் மணி மாலைகளையும் சாத்த அணிந்து, நல்ல மணக் கோலத்தைக் கொண்டார்.

165. மன்னவர் திருவுந் தங்கள் வைதிகத் திருவும் பொங்க
நன்னகர் விழவு கொள்ள நம்பியா ரூரர் நாதன்
தன்னடி மனத்துள் கொண்டு தகுந்திரு நீறு சாத்திப்
பொன்னணி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார்.

தெளிவுரை : முன் சொன்ன வண்ணம் மன்னர் பெருங்கோலக் காட்சியும் தமக்குரிய வைதிகப் பெருங் கோலத்தின் காட்சியும் மேன் மேல் கூடிக் கண்டவரை விரும்பச் செய்ய அந்த நகரம் முழுவதும் விழாக் கொண்டாடவும், இறைவனின் திருவடிகளைத் தன் மனத்தில் நினைத்துத் திருநீறு அணிந்து கொண்டவராய்ப், பொன்னால் அழகாக அணி செய்யப்பட்ட நல்ல இலக்கணங்களுடன் கூடிய குதிரை மீது ஏறிச் சென்றார்.

166. இயம்பல துவைப்ப எங்கும்  ஏத்தொலி எடுப்ப மாதர்
நயந்துபல் லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்க
வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க் கின்பஞ் செய்தே
உயர்ந்தவா கனயா னங்கள் மிசைக்கொண்டார் உழைய ரானார்.

தெளிவுரை : பலவகை இன்னிசைக் கருவிகளும் ஒலிக்கவும், எங்கும் சிறப்புச் சொல்லும் ஒலி ஒலிக்கவும், மங்கல மங்கையர் விருப்பத்துடன் வாழ்த்துக் கூறவும், வேத ஒலிகள் மேல் எழுந்து ஓங்கவும், உலகத்தார் வியப்பும் விருப்பும் கொள்ளவும், மண எழுச்சி பார்க்க வந்து சேர்ந்தவர் யாவர்க்கும் மகிழ்ச்சி செய்து உறவினர் தத்தமக்கு ஏற்ற உயர்ந்த பல்லக்கு முதலிய ஊர்திகளில் ஏறியமர்ந்தனர்.

167. மங்கல கீத நாத மறையவர் குழாங்க ளோடு
தொங்கலும் விரையுஞ் சூழ்ந்த மைந்தருந் துவன்றிச் சூதும்
பங்கய முகையுஞ் சாய்த்துப் பணைத்தெழுந் தணியின் மிக்க
குங்கும முலையி னாரும் பரந்தெழு கொள்கைத் தாகி.

தெளிவுரை : மங்கலமான பாடல்களையும் நாதமே வடிவான மறைகளையும் பாடும் அந்தணர் கூட்டத்துடன், பூமாலைகளையும் பொன்னாரி மாலைகளையும் வேறு மணங்களையும் அணிந்த ஆடவர்களும் நெருங்கிப் பணைத்து எழுந்து தாமரை அரும்பையும் சூதாடு கருவியையும் வெற்றி கண்டு, அணிகலன்களையும் குங்குமக் குழம்பையும் அணிந்த கொங்கைகளையுடைய மங்கையருடன் கூடி. பரந்து எழுந்த தன்மையுடன்,

168. அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்தவெள் வளைக ளாலும்
இருங்குழை மகரத் தாலும் இலங்கொளி மணிக ளாலும்
நெருங்கிய பீலிச் சோலை நீலநீர்த் தரங்கத் தாலுங்
கருங்கடல் கிளர்ந்த தென்னக் காட்சியிற் பொலிந்த தன்றே.

தெளிவுரை : அரிய திருமண எழுச்சி புறப்பட்ட அச்சமயத்தில் ஒலித்த வெண் சங்குகளாலும் ஒளியுடைய மணிகளினாலும் நெருங்கி ஏந்திச் சென்ற மயிற்பீலிக் குஞ்சங்களின் நீல நிறம் கொண்ட அலைகளினாலும், அந் நாளில் அப்போதே கருமையான கடல் கிளர்ச்சி பெற்று எழுந்து செல்வதைப் போன்று விளங்கியது.

169. நெருங்குதூ ரியங்கள் ஏங்க நிரைத்தசா மரைகள் ஓங்கப்
பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்குபூங் கொடிக ளாட
அருங்கடி மணம்வந் தெய்த அன்றுதொட்டு என்றும் அன்பில்
வருங்குல மறையோர் புத்தூர் மணம்வந்த புத்தூ ராமால்.

தெளிவுரை : நெருங்கி முழங்கும் இன்னியங்கன் ஒலிக்கவும், வரிசையாய் வீசப் பெறும் தாமரைகள் மேலே கிளர்ந்து வரவும், பெரிய குடைகள் நெருங்கிச் செல்லவும், ஒன்றுடன் ஒன்று மாறுபட்டவை போல் பலவகையுள்ள அழகான கொடிகள் ஆடவுமாக இப்படி அந்தப் புதிய திருமண எழுச்சி புத்தூரை வந்து சேர்ந்தது. அதனால் அன்று முதலாக என்றும் அன்பில் வரும் ஆதி சைவ அந்தணர் வாழும் அந்தப் புத்தூர் மணம் வந்த புத்தூர் எனப் பெயர் பெற்றதாயிற்று.

170. நிறைகுடந் தூபம் தீபம் நெருங்குபா லிகைக ளேந்தி
நறைமல ரறுகு சுண்ணம் நறும்பொரி பலவும் வீசி
உறைமலி கலவைச் சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளல் மணமெதிர் கொள்ள வந்தார்.

தெளிவுரை : புத்தூரின் அந்தணரும் மங்கையரும் நிறைகுடம், தூபம், விளக்கு, முளைப்பாலிகைகள் முதலான மங்கலப் பொருள்களை எடுத்துக் கொண்டும் மலர், அறுகு, பொன் சுண்ணப்பொடி, பொரி முதலியவற்றை இறைத்துக் கொண்டும், சந்தனம் கலந்த பன்னீர் தெளித்துக் கொண்டும் மண எழுச்சியில் வந்தவரை எதிர் கொண்டனர். 

171. கண்களெண் ணிலாத வேண்டுங்  காளையைக் காண என்பார்
பெண்களி லுயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார்
மண்களி கூர வந்த மணங்கண்டு வாழ்ந்தோம் என்பார்
பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடு வார்கள்.

தெளிவுரை : வேறு மங்கையர் சிலர் காளை போன்ற இவரைக் காண எண் இல்லாத கண்கள் வேண்டும் என்பார். சிலர் சடங்கவி சிவாசாரியின் மகளே இத்தகையவரை மணக்கப் போவதால் பெண்களில் எல்லாம் மிகவும் நோற்றவள் ! என்பார். சிலர் மண் உலகம் மகிழத்தக்க இந்த மணத்தைக் காணப் பெற்றதால் நாம் பெரு வாழ்வை அடைந்தோம் என்பார். சிலர் பண்களினால் நிறைந்த கீதம் பாடுவாரும் ஆடுவாரும் ஆனார்.

172. ஆண்டகை யருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்
தாண்டிய பரியும் நம்பால்தகுதியில் நடந்த தென்பார்
பூண்டயங் கிவனே காணும புண்ணிய மூர்த்தி யென்பார்
ஈண்டிய மடவார் கூட்டம்  இன்னன இசைப்பச் சென்றார்.

தெளிவுரை : சிலர், ஆண்தகையான இவரது அருள்நோக்கம் என்ற வெள்ளத்தில் அகப்பட்டு மீளும் வகையறியாது நின்றோம் என்பார். சிலர், இவர் ஏறிவரும் குதிரையும் தகுதிபெற நம்மிடம் வந்தது! என்பார். சிலர், அணிகலன் பூண்ட இவரே நாம் கண் வாழும் புண்ணிய மூர்த்தியாவார் என்பார். அங்குக் கூடிய பலப்பல மங்கையரும் இவ்வாறு பாராட்டிப் பேச ஆரூரர் சென்றார்.

173. வருமணக் கோலத் தெங்கள் வள்ளலார் தெள்ளும் வாசத்
திருமணப் பந்தர் முன்பு   சென்றுவெண் சங்க மெங்கும்
பெருமழைக் குலத்தி னார்ப்பப் பரிமிசை இழிந்து பேணும்
ஒருமணத் திறத்தி னங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்.

தெளிவுரை : இவ்வாறு மணக் கோலத்தோடு வருகின்ற எம் வள்ளலாரான நம்பியாரூரர் மிகவும் மணம் கமழும் மணப் பந்தலின் முன் போய், வெண்மையான சங்குகள் மேகம் போலமுழங்க, குதிரையை விட்டிறங்கி, உட்புகுந்து பேணியதான அந்த மணத்தில் நிகழ்ந்த செய்தியைச் சொல்வேன். அதனால் நான் உய்தி பெறுவேன்.

174. ஆலுமறை சூழ்கயிலை யின்கணருள் செய்த
சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்
மேலுற வெழுந்துமிகு கீழுற அகழ்ந்து
மாலும்அய னுக்குமரி யாரொருவர் வந்தார்.

தெளிவுரை : ஒலிக்கும் மறைகளால் சூழப்பெற்ற திருக்கயிலை மலையில் அருளுடைமையால் அருள் செய்த சால்புடைய அருள் மொழியின் படியே ஆலாலசுந்தரரைத் தடுத்தாட் கொண்டு வழிப்படுத்துவதற்காக மேலே எழுந்து பறந்தும் கீழே தோண்டியும் சென்று அறிவு மயங்கிய நான்முகன் திருமால்களுக்கு அரியவரான ஒப்பற்ற இறைவர் வந்தார்.

175. கண்ணிடை கரந்தகதிர் வெண்பட மெனச்சூழ்
புண்ணிய நுதற்புனித நீறுபொலி வெய்தத்
தண்மதி முதிர்ந்துகதிர் சாய்வதென மீதே
வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க.

தெளிவுரை : இரு கண்களுக்கு நடுவேஉள்ள ஒரு நெற்றிக் கண்ணை மறைத்துச் சூழ்ந்த ஒளியுடைய வெண்மையான ஆடை போல் நெற்றியில் தூய்மையான வெண்ணீறு விளங்கவும் குளிர்ந்த பிறைச் சந்திரன் முதிர்ந்து கதிர் சாய்ந்த தன்மைபோல் வெண்மையான நரை முடிப்பு விழுந்து அசைந்திடவும் (எய்தி)  

176. காதிலணி கண்டிகை வடிந்தகுழை தாழச்
சோதிமணி மார்பினசை நூலினொடு தோளின்
மீதுபுனை யுத்தரிய வெண்டுகில் நுடங்க
ஆதப மறைக்குடை அணிக்கரம் விளங்க.

தெளிவுரை : செவியில் உருத்திராக்கத்தால் ஆன காதணிகள் தாழ்ந்து விளங்கவும், ஒளியும் அழகும் பொருந்திய மார்பின் மேல் அணிந்த பூணூலோடு தோள்மீது உத்தரியமாய் அணிந்த வெண்மையான ஆடையும் அசைந்திடவும் கையில் வெயிலை மறைக்கின்ற குடை விளங்கவும்,

177. பண்டிசரி கோவண உடைப்பழமை கூரக்
கொண்டதொர் சழங்கலுடை யார்ந்தழகு கொள்ள
வெண்டுகி லுடன்குசை முடிந்துவிடு வேணுத்
தண்டொருகை கொண்டுகழல் தள்ளுநடைகொள்ள.

தெளிவுரை : வயிற்றினின்று சரிந்த கோவண உடையின் பழைமை மிகும்படி அதன் மீது அணிந்த உடை பொருந்தி நின்று அழகு செய்யவும், வெண்மையான ஆடையும் தருப்பைப் புல்லும் நுனியில் முடிந்து விட்ட மூங்கில் தண்டு மற்றொரு கையில் தாங்கி வரும்போது கால்கள் முதுமையால் நிலை கொள்ளாது தள்ளாடிய நடை கொள்ளவும்,

178. மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பெனு மதன்படிவ மேயோ
மெய்த்தநெறி வைதிகம் விளைத்தமுத லேயோ
இத்தகைய வேடமென ஐயமுற வெய்தி.

தெளிவுரை : இங்ஙனம் கொண்ட திருக்கோலமானது செறிந்து வளர்கின்ற பேரழகே முதிர்ந்து மூப்பு ஆகிய உருவமோ? அல்லது அவ்வாறு உள்ள முதுமையின் உண்மையான வடிவமோ? அல்லது உண்மை வைதிக நெறியை உலகத்தில் உண்டாக்கிய மூலப் பொருளோ? என அங்குக் கண்டோர் எல்லாரும் ஐயப்படுமாறு வந்தார்.

179. வந்துதிரு மாமறை மணத்தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பியெதிர் பன்னுசபை முன்னின்று
இந்தமொழி கேண்மினெதிர் யாவர்களும் என்றான்
முந்தைமறை யாயிர மொழிந்த திருவாயான்.

தெளிவுரை : அவ்வாறு வந்து மணம் தொடங்கும் பந்தலில் நம்பி ஆரூரர் எதிரில் அவையின் முன் நின்று, பழமையுடைய அளவில்லாத வேதங்களைச் சொன்ன வாயையுடைய சிவபெருமான், யாவரும் நான் சொல்லப் போவதைக் கேளுங்கள் எனக் கூறத் தொடங்கினர்.

180. என்றுரைசெ யந்தணனை எண்ணில்மறை யோரும்
மன்றல்வினை மங்கல மடங்கலனை யானும்
நன்றுமது நல்வரவு நங்கள்தவ மென்றே
நின்றதிவண் நீர்மொழிமின் நீர்மொழிவ தென்றார்.

தெளிவுரை : இங்ஙனம் சொன்ன அந்தணனை, அங்கிருந்த அந்தணர்களும் மணமகனான நம்பி ஆரூரரும் பார்த்து உமக்கு நல்வரவு ! அது நமக்கு நல்லது ! அது எங்கள் தவமாகும் எனக் கூறி நீங்கள் சொல்ல எண்ணியதைக் கூறுங்கள் . என்று உரைத்தனர்.

181. பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி
என்னிடையும் நின்னிடையும் நின்றஇசை வால்யான்
முன்னுடைய தோர்பெரு வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீமுயல்தி என்றான்.

தெளிவுரை : தம் சடைக் கோலத்தை மறைத்துக் கொண்டு வந்த வேதியரும் நாவலூரைப் பார்த்து, எனக்கும் உனக்கும் முன்காலத்தில் உண்டான உடன்படிக்கை மூலம் உள்ள ஒரு பெரு வழக்கைத் தீர்த்து அதன் பின் நீ உன் வேள்வியை (மணத்தை)ச் செய்து கொள்க ! என்றார்.

182. நெற்றிவிழி யான்மொழிய நின்றநிக ரில்லான்
உற்றதொர் வழக்கெனிடை நீயுடைய துண்டேல்
மற்றது முடித்தலதி யான்வதுவை செய்யேன்
முற்றவிது சொல்லுகென வெல்லைமுடி வில்லான்.

தெளிவுரை : தம் நெற்றிக் கண்ணை மறைத்துக் கொண்டு வந்த அந்தணர் (இறைவன்) இங்ஙனம் சொல்ல, ஒப்பில்லாத நம்பியாரூரர் அவரைப் பார்த்து, என்னிடம் பொருந்தியுள்ள ஒரு வழக்கு உனக்கு இருக்குமானால், அதை முடித்த பின் அன்றி நான் மணம் செய்துகொள்ளேன். ஆதலால் இதனை முழுவதும் சொல்லுக ! என்று இயம்பினார்.

183. ஆவதிது கேண்மின்மறை யோர்என்அடி யான்இந்
நாவல்நக ரூரனிது நான்மொழிவ தென்றான்
தேவரையும் மாலயன் முதற்றிருவின் மிக்கோர்
யாவரையும் வேறடிமை யாவுடைய எம்மான்.

தெளிவுரை : நான் கூறுவது இதுவே ! அந்தணர்களே ! இந்த நாவலூரன் என் அடிமையாவான் ! இதுவே யான் இங்குச் சொல்ல வந்த வழக்கு ! என்றார், தேவரையும் நான்முகன், திருமால் முதலிய பெருஞ் செல்வம் உடையவரையும் தனியாய்த் தமக்கு அடிமையாய்க் கொண்ட எம் இறைவன்.

184. என்றான் இறையோன் அதுகேட்டவ ரெம்ம ருங்கும்
நின்றார் இருந்தார் இவனென்னினைந் தான்கொ லென்று
சென்றார் வெகுண்டார் சிரித்தார் திருநாவ லூரான்
நன்றால் மறையோன் மொழியென் றெதிர்நோக்கி நக்கான்.

தெளிவுரை : என்று மேற்கண்டவாறு உரைத்தார் இறைவர். அதைக் கேட்டவரான பந்தலின் எங்கும் நின்றவர்களும் இருந்தவர்களும் இவர் என்ன எண்ணி இதனைச் சொன்னார்? என்று அவருடைய பக்கத்தில் சென்றவரும் சினந்தவரும் சிரித்தவர்களுமாயினர். நாவலூரர் இந்த அந்தணனின் மொழி நன்றாக இருக்கின்றது ! என்று அவர் எதிரில் இகழ்ச்சி தோன்ற நகைத்தார்.

185. நக்கான் முகநோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான் மிசையுத்தரி யத்துகில் தாங்கி மேற்சென்று
அக்கா லமுன்தந்தை தன்தந்தையா ளோலை யீதால்
இக்கா ரியத்தை நீயின்று சிரித்ததென் ஏடவென்ன.

தெளிவுரை : அவ்வாறு இகழ்ச்சி தோன்ற நகைத்த நம்பியாரூரரின் முகத்தை நேரேபார்த்து, இதனால் நடுங்கித் தள்ளாடியபடி கீழே சரிந்த உத்தரியத்தை மேலே எடுத்து இட்டுத் தாங்கியபடி நெருங்கிச் சென்று அந்நாளில் உன் தந்தையின் தந்தை (பாட்டன்) எழுதித் தந்த அடிமை ஓலை இது! இன்று நான் கூறியதை இகழ்ந்து நகைத்தது ஏன்? ஏடா? என இறைவர் கூறியருள,

186. மாசிலா மரபில் வந்த வள்ளல்வே தியனை நோக்கி
நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியாற் சிரிப்பு நீங்கி
ஆசிலந் தணர்கள் வேறோர் அந்தணர்க் கடிமை யாதல்
பேசஇன் றுன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன் என்றார்.

தெளிவுரை : குற்றம் இல்லாத ஆதி சைவ வேதியர் குலத்தில் வந்த நம்பியாரூரர், வேதியரைப் பார்த்து, முன்னம் அன்பு தொடர்ந்து வந்ததால் ஒருவாறு உள்ளமானது நெகிழப் பெற்றுச் சிரிப்பு நீங்கி, குற்றமற்ற சைவ வேதியர் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமையாவர் என்ற சொல் சொல்வதை இன்று உம்மிடமே கேட்டோம் ! மறையவனே ! நீ பித்தனோ ! என்றார்.

187. பித்தனு மாகப் பின்னும் பேயனு மாக நீயின்று
எத்தனை தீங்கு சொன்னாய் யாதுமற் றவற்றால் நாணேன்
அத்தனைக் கென்னை யொன்றும் அறிந்திலை யாகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம் பணிசெய வேண்டு மென்றார்.

தெளிவுரை : அதைக் கேட்ட இறைவரான வேதியர் நான் நீ சொன்னபடியே பித்தன் ஆனாலும் சரி, அதனோடு பேயன் ஆனாலும் சரி, மேலும் நீ இன்னும் எவ்வளவு தீ மொழிகளைச் சொன்னாலும் சரி. நான் ஒன்றாலும் நாணம் அடைந்து நிற்க மாட்டேன் ! இவ்வளவுக்கும் நீ என் தன்மை ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லையானால், கேலி பேச வேண்டா ! நான் இட்ட பணியைச் செய்தல் வேண்டும் என்றார்.

188. கண்டதோர் வடிவா லுள்ளங் காதல்செய் துருகா நிற்குங்
கொண்டதோர் பித்த வார்த்தை  கோபமு முடனே யாக்கும்
உண்டொராள் ஓலை யென்னும் அதனுண்மை யறிவே னென்று
தொண்டனா ரோலை காட்டு கென்றனர் துணைவ னாரை.

தெளிவுரை : நான் பார்த்த இந்தக் கிழ வேதியரின் திருவடிவின் அழகில் ஈடுபட்டு என் உள்ளம் ஆசையினால் உருகுகின்றது. ஆனால் அதற்கு மாறாக, அவர் தாம் மேற்கொண்டு கூறிய சொற்கள் சினத்தை அதனுடனே ஒன்றாக உண்டாக்குகின்றன. எனவே, இவ்விரண்டு வழியிலும் சென்று விடாது ஓர் அடிமை ஓலை உண்டு என்று இவர் கூறிய அதன் உண்மையை ஆராய்ந்து அறிவேன் ! என்று எண்ணி, ஐயனே ! நீங்கள் கூறிய அடிமை ஓலையைக் காட்டுக ! எனத் தொண்டரான நம்பி, தம் உயிர்த்துணைவரான வேதியரை வினவினார்.

189. ஓலைகாட் டென்று நம்பியுரைக்கநீ யோலை காணற்
பாலையோ அவைமுன் காட்டப் பணிசெயற் பாலை யென்ற
வேலையில் நாவ லூரர் வெகுண்டுமேல் விரைந்து சென்று
மாலயன் தொடரா தானை வலிந்துபின் தொடர லுற்றார்.

தெளிவுரை : இங்ஙனம் நம்பி யாரூரர், ஓலையைக் காட்டுக ! என வினவ, அதைக் கேட்ட வேதியர் நீ ஓலையைப் பார்த்து அறியத் தக்கவனோ ! அல்லை. அதனை, அவை முன் காட்ட அவர் முடிவு சொன்னபின் அதன்படி பணி செய்வதற்கு மட்டும் தகுதியுடையாய் ! என்று சொன்னார். அவ்வளவில், நாவலூரர் சினந்து, மேற்கிளம்பிச் சென்று, நான்முகன் திருமால்களுக்கும் எட்டாத அந்த இறைவனை வலிந்து பின் தொடரலானார்.

190. ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்த ணாளன்
காவணத் திடையே யோடக் கடிதுபின் தொடர்ந்து நம்பி
பூவணத் தவரை உற்றார் அவரலால் புரங்கள் செற்ற
ஏவணச் சிலையி னாரை யார்தொடர்ந் தெட்ட வல்லார்.

தெளிவுரை : இங்ஙனம் ஓலையை வலிந்து பறித்திட நம்பியாரூரர் சென்றபோது அந்தணரான இறைவர் மணப் பந்தலில் ஓட, அந்த அழகிய மேனியுடையவரை விரைவாய்ப் பின் தொடர்ந்து சென்று பிடித்தார். திரிபுரம் எரித்த, மலையை வில்லாகக் கொண்ட அவரை நம்பியாரூரரே அல்லாது வேறு யார்தான் தொடர்ந்து பிடிக்க வல்லார்? எவரும் இல்லை !

191. மறைகளா யினமுன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற
இறைவனைத் தொடர்ந்து பற்றி  யெழுதுமா ளோலை வாங்கி
அறைகழ லண்ணல் ஆளாய் அந்தணர் செய்த லென்ன
முறையெனக் கீறி யிட்டார் முறையிட்டான் முடிவி லாதான்.

தெளிவுரை : மறைகள் எல்லாம் முன் துதித்துத் தம் மலர் போன்ற அடிகளைப் பற்றிக் கொள்ள நின்ற அவ்விறைவரைத் தொடர்ந்து சென்று பிடித்துக் கொண்டு அவர் கையில் இருந்த அடிமை ஓலையைப் பறித்துக் குற்றம் இல்லாத அந்தணர் பிறர்க்கு அடிமையாய்ப் பணி செய்தல் என்ன முறைமையில் அமைந்தது ? எனக் கூறி ஒலிக்கின்ற வீரக் கழல் அணிந்த பெருமையுடைய நம்பியாரூரர் அந்த ஓலையைக் கிழித்து எறிந்து விட்டார். முடிவற்ற இறைவன் முறையிடலானான்.

192. அருமறை முறையிட் டின்னும் அறிவதற் கரியான் பற்றி
ஒருமுறை முறையோ என்ன உழைநின்றார் விலக்கி இந்தப்
பெருமுறை உலகில் இல்லா நெறிகொண்டு பிணங்கு கின்ற
திருமறை முனிவ ரேநீர் எங்குளீர் செப்பு மென்றார்.

தெளிவுரை : அரிய வேதங்கள் எல்லாம் ஓலமிட்டுத் தேடியும் இன்னும் அறியப்படாத இறைவன் நம்பியாரூரரைப் பிடித்துக் கொண்டு ஒரு முறை இது முறையாகுமோ? என்று முறையிடவும், சுற்றிலும் இருந்த உறவினர் இருவரையும் விலக்கி வேதியரைப் பார்த்து, இவ்வாறு உலகத்தில் இது வரை இல்லாத ஒரு புதிய வழக்கைக் கொண்டு வந்து மாறுபட்டு நிற்கின்ற வேதியரே, நீவிர் எங்குள்ளவர்? கூறுக ! என்று வினவினர்.

193. என்றலும் நின்ற ஐயர் இங்குளேன் இருப்புஞ் சேயது
அன்றிந்த வெண்ணெய் நல்லூர் அதுநிற்க அறத்தா றின்றி
வன்றிறல் செய்தென் கையில் ஆவணம் வலிய வாங்கி
நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினா னடிமை யென்றான்.

தெளிவுரை : பக்கத்தில் நின்றவர் இவ்வாறு வினவவும், அங்கு நின்ற இறைவர், நான் இங்கு இருப்பவன் தான். என் இருப்பிடமும் நெடுந்தொலைவில் இல்லை ! இங்கே அண்மையில் உள்ள திருவெண்ணெய் நல்லூராகும். அது போக, அழவழியின்றும் தவறி, என் கையிலிருந்த ஓலையை வலியப் பிடுங்கிக் கிழித்து எறிந்ததால், தான் எனக்கு அடிமை என்ற உண்மையை இவன் உறுதிப்படுத்தி விட்டான் ! என்றார்.

194. குழைமறை காதி னானைக் கோதிலா ரூரர் நோக்கிப்
பழையமன் றாடி போலு மிவனென்று பண்பின் மிக்க
விழைவுறு மனமும் பொங்க வெண்ணெய்நல் லூரா யேலுன்
பிழைநெறி வழக்கை யாங்கே பேசநீ போதா யென்றார்.

தெளிவுரை : மறைத்த குழையணிந்த காதையுடைய வேதியரைக் குற்றம் அற்ற நம்பியாரூரர் பார்த்து, இவன் பழைய மன்றாடி போலும் ! என்று தம்முள் கொண்டு, முன் அன்பின் தன்மை மிக்குப் பொருந்திய உள்ளத்தில் அதனால் நெகிழ்ந்து ஆசையானது மேலும் மேலும் பெருக, ஐயா ! நீர் திருவெண்ணெய் நல்லூரில் இருப்பவரானால், மேற் கொண்டு வந்த இந்தப் பிழை வழக்கைப் பேச அங்கே வருவாய் என்றார்.

195. வேதிய னதனைக் கேட்டு வெண்ணெய்நல் லூரி லேநீ
போதினும் நன்று மற்றப் புனிதநான் மறையோர் முன்னர்
ஆதியின் மூல வோலை காட்டிநீ யடிமை யாதல்
சாதிப்ப னென்று முன்னே தண்டுமுன் தாங்கிச் சென்றான்.

தெளிவுரை : நம்பியாரூரர் கூறியதை இறைவர் கேட்டு, நீ வெண்ணெய் நல்லூர்க்கு வந்தாலும் நல்லதே ! அந்த ஊரில் உள்ள தூய மறையவர் முன்பு ஆதியில் எழுதித் தந்த மூல ஓலையைக் காட்டி எனக்கு நீ அடிமையே என்பதைச் சாதித்துக் காட்டுவேன் ! எனக் கூறிக் கொண்டு தண்டை யூன்றியபடி முன்னே சென்றார்.

196. செல்லுநான் மறையோன் தன்பின் திரிமுகக் காந்தஞ் சேர்ந்த
வல்லிரும் பணையு மாபோல் வள்ளலுங் கடிது சென்றான்
எல்லையில் சுற்றத் தாரு மிதுவென்னா மென்று செல்ல
நல்லவந் தணர்கள் வாழும் வெண்ணெய்நல் லூரை நண்ணி.

தெளிவுரை : அங்ஙனம் போகும் அந்தணர் பின், வேறுபடுத்தும் காந்தத்தின் பின்பு இரும்பு இழுத்துச் செல்லப்பட்டு அணைவதைப்போல், நம்பி ஆரூரரும் தம் வயமின்றிப் விரைவாய்ப் போனார். அங்குக் கூடியிருந்த சுற்றத்தவரும் இது எப்படி முடியுமோ? என்ற ஐயத்துடன் தொடர்ந்து வர, நல்ல அந்தணர் வாழ்வதற்கு இடமான திருவெண்ணெய் நல்லூரை அடைந்தனர்.

197. வேதபா ரகரின் மிக்கார் விளங்குபே ரவைமுன் சென்று
நாதனாம் மறையோன் சொல்லும் நாவலூர் ஆரூ ரன்றான்
காதலென் அடியான் என்னக் காட்டிய வோலை கீறி
மூதறி வீர்முன் போந்தா னிதுமற்றென் முறைப்பா டென்றான்.

தெளிவுரை : அந்தணர்களில் சிறந்தவர் கூடி விளங்கிய பெரிய அவையின் முன் போய்த் தலைவரான வேதியர், எல்லாரும் பாராட்டுதற்குரிய திருநாவலூரில் தோன்றிய நம்பிஆரூரன், தான் என் விருப்பமுடைய அடிமை என்பதற்குச் சான்று காட்டிய ஓலையைக் கிழித்து விட்டுப் பேரறிவுடைய உங்கள் முன்பு வந்திருக்கின்றனன். இதுவே என் முறையீடாகும் என்று சொன்னார்.

198. அந்தண ரவையின் மிக்கார் மறையவ ரடிமை யாதல்
இந்தமா நிலத்தி லில்லை யென்சொன்னாய் ஐயா வென்றார்
வந்தவா றிசைவே யன்றோ வழக்கிவன் கிழித்த வோலை
தந்தைதன் தந்தை நேர்ந்த தென்றனன் தனியாய் நின்றான்.

தெளிவுரை : அந்த அந்தணரின் அவையில் தலைவர்கள் இதைக் கேட்டனர். கேட்டு, ஐயனே ! அந்தணர் மற்றவர்க்கு அடிமையாவது இவ்வுலகத்தில் இல்லை. அங்ஙனமாகவும், நீ புதுமையாய்ச் சொன்னது என்ன? என வினவினர். அதற்குத் தனியாய் வந்த அந்த வேதியர் இந்த வழக்கு வந்த விதம் இசைவின் மூலம் அன்றோ! அந்த இசைவைக் காட்டும் சான்றாகி இவனால் கிழிக்கப்பட்ட ஓலையானது அவனுடைய பாட்டனார் அடிமையை ஒப்புக் கொண்டு எழுதித் தந்ததாகும் என்று உரைத்தார்.

199. இசைவினா லெழுது மோலை  காட்டினா னாகி லின்று
விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி யாமோ
தசையெலா மொடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான்
அசைவில்ஆ ரூரர் எண்ணம் என்னென்றார் அவையின் மிக்கார்.

தெளிவுரை : வேதியரான இறைவர் கூறக் கேட்ட சபையில் உள்ள சான்றோர் நம்பியாரூரரைப் பார்த்து இசைவுப்படி எழுதிய ஓலையை இவர் காட்டினால் அதை விரைவில் பறித்துக் கிழப்பது உமக்கு வெற்றி தருவதாகுமோ? தசை எல்லாம் ஒடுங்க மிகவும் மூத்த இவர் தம் வழக்கைப் பொருந்த எடுத்துச் சொன்னார். நம்பியாரூரரே! இது பற்றி உம் கருத்து யாது? என வினவினார்.

200. அனைத்துநூல் உணர்ந்தீர் ஆதி சைவனென் றறிவீர் என்னைத்
தனக்குவே றடிமை யென்றிவ் வந்தணன் சாதித் தானேல்
மனத்தினா லுணர்தற் கெட்டா மாயையென் சொல்லு கேன்யான்
எனக்கிது தெளிய வொண்ணா தென்றனன் எண்ணம் மிக்கான்.

தெளிவுரை : எண்ணம் மிக்கு, இதற்கு அசைவில்லாது நின்ற நம்பியாரூரர் எல்லா நூல்களும் கற்றுணர்ந்த பெரியோர்களே ! நீங்கள் என்னை ஆதிசைவன் என்று அறிவீர் ! அப்படியிருக்க, இந்த அந்தணன் என்னைத் தனக்கு அடிமை எனக் கூறுவானானால், இது என் உள்ளத்துக்கு எட்டாத மாயையாக உள்ளது. எனக்கு இது அறிந்து கொள்ளக் கூடாததாய் உள்ளது ! என்று சொன்னார்.

201. அவ்வுரை யவையின் முன்பு  நம்பியா ரூரர் சொல்லச்
செவ்விய மறையோர் நின்ற திருமறை முனியை நோக்கி
இவ்வுல கின்கண் நீயின் றிவரையுன் னடிமை யென்ற
வெவ்வுரை யெம்முன் பேற்ற வேண்டுமென் றுரைத்து மீண்டும்.

தெளிவுரை : அத்தகைய சொற்களை நம்பியாரூரர் அந்த அவையில் சொல்ல, அந்த அவையில் இருந்த அந்தணர்கள் அங்கு நின்ற திருமறை முனிவரைப் பார்த்து இவ்வுலகத்தில் நீ என்று இவரை உன் அடிமை என்ற வசை பொருந்திய வழக்கை எங்கள் முன்பு மெய்ப்பித்துக் காட்ட வேண்டும் எனச் சொல்லி மேலும் சொல்லலாயினர்.

202. ஆட்சியில் ஆவ ணத்தில் அன்றிமற் றயலார் தங்கள்
காட்சியில் மூன்றி லொன்று காட்டுவா யென்ன முன்னே
மூட்சியிற் கிழித்த வோலை  படியோலை மூல வோலை
மாட்சியிற் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான்.

தெளிவுரை : அங்ஙனம் மெய்ப்பிக்க வேண்டுமேல் ஆட்சி, ஆவணம், அயலவரின் சாட்சி என்று மூன்று வகைச் சாட்சியங்களில் ஒன்றைக் காட்டவேண்டும் எனச் சொல்ல, மாயையில் வல்ல அந்த வேதியர் அந்த மூன்றில் நான் காட்ட விரும்புவது ஆவணமேயாகும். ஆனால் முன்னம் மணப்பந்தலில் சினத்தால் இந்த ஆரூரன் கிழித்தது படி ஓலையாகும். மூல ஓலையை அறங்கூறும் அவையின் முன் காட்டுவதற்காகச் சேமமாய் வைத்துள்ளேன் என்று இயல்பினார்.

203. வல்லையேற் காட்டிங் கென்ன மறையவன் வலிசெய் யாமற்
சொல்லநீர் வல்லீ ராகில் காட்டுவே னென்று சொல்லச்
செல்வநான் மறையோர் நாங்கள் தீங்குற வொட்டோ மென்றார்
அல்லல்தீர்த் தாள நின்றார் ஆவணங் கொண்டு சென்றார்.

தெளிவுரை : நீங்கள் அங்ஙனம் காட்ட வல்லவரானால் இங்குக் காட்டுங்கள் என்றனர். அப்போது இறைவர் நம்பியாரூரன் முன்போல் வலிந்து என் ஓலையைக் கிழித்தெறியாது இருக்க உங்களால் சொல்லக் கூடுமாயின், காட்டுவேன் என்று இறைவர் உரைத்தார். மறையவர்களான அந்தணர்கள், நாங்கள் முன்போல் இங்குச் சான்றான ஓலைக்குத் தீமை உண்டாகும்படி விட மாட்டோம் ! என்று உறுதி கூறினர். துன்பத்தைத் தவிர்த்துத் தடுத்து ஆட்கொள்ள வந்த இறையவராகிய வேதியர் ஓலையைக் கையில் எடுத்துக் கொண்டு அவையோரின் முன் சென்றார்.

204. இருள்மறை மிடற்றோன் கையி லோலைகண் டவையோ ரேவ
அருள்பெறு கரணத் தானும் ஆவணந் தொழுது வாங்கிச்
சுருள்பெறு மடியை நீக்கி விரித்ததன் தொன்மை நோக்கித்
தெருள்பெறு சபையோர் கேட்ப வாசகஞ் செப்பு கின்றான்.

தெளிவுரை : கருமையான கழுத்தை மறைத்துக் கொண்டு வந்த வேதியர் தம் கையில் எடுத்துக் காட்டிய ஓலையைக் கண்டு அவையோர் ஏவினதால், அவையில் உள்ள அருளைப் பெற்ற கரணத்தான், அந்த ஆவணமாகும் ஓலையை உரியபடி வணங்கி வாங்கி, அதை வைத்துச் சுருட்டியிருந்த உறையை எடுத்து விலக்கிச் சுருண்ட சுருளை விரித்து, முதலில் அதன் பழமையைப் பரிசோதித்து, அறிந்து கொண்டு அறிவுடையவர்களான அவையினர் யாவரும் கேட்க, அதில் உள்ள வாசகத்தைப் பின்கண்டவாறு படித்துச் சொல்லலானான்:

205. அருமறை நாவல் ஆதி  சைவனா ரூரன் செய்கை
பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக் கியானும் என்பால்
வருமுறை மரபு ளோரும் வழித்தொண்டு செய்தற் கோலை
இருமையா லெழுதி நேர்ந்தேன் இதற்கிவை யென்னெ ழுத்து.

தெளிவுரை : அந்தணர் வாழும் திருநாவலூரில் ஆதிசைவ மரபிலே ஆரூரன் என்ற நான் இதன்மூலம் எல்லாரும் அறிய எழுதி வைக்கும் செய்தியாவது: பெருமுனிவரான திருவெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு நானும் என் வழியில் வருபவரும் வழிவழியாய்த் தொண்டு செய்து வருவோம் என்பதற்காக உடன்பட்டு இந்த ஓலையை மனமும் செயலும் சம்மதித்து, எழுதித் தந்தேன். இதற்கு இது என் கையெழுத்து.

206. வாசகங் கேட்ட பின்னர் மற்றுமே லெழுத்திட் டார்கள்
ஆசிலா வெழுத்தை நோக்கி யவையொக்கு மென்ற பின்னர்
மாசிலா மறையோர் ஐயா மற்றுங்கள் பேர னார்தந்
தேசுடை எழுத்தே யாகில் தெளியப்பார்த் தறிமின் என்றார்.

தெளிவுரை : இங்ஙனம் கரணத்தான் படித்த ஓலை வாசகத்தைக் கேட்ட பின்னர் எழுதித் தந்தவரின் கையெழுத்துக்குப்பின் சாட்சிக் கையெழுத்திட்டவரின் கையெழுத்துக்களையும் பார்த்து, அவை சரியாய் இருப்பதை அறிந்த பின், குற்றம் இல்லாத அவையினர், நம்பி ஆரூரரைப் பார்த்து, ஐயா ! இந்த ஓலையில் உள்ள கையெழுத்து பாட்டனாருடைய உண்மையான கையெழுத்தாய் இருந்தால், அதைத் தெளிய முழுதும் பரிசோதித்துத் தெரிந்து கொள்ளுங்கள் எனக் கூறினர்.

207. அந்தணர் கூற வின்னு மாளோலை யிவனே காண்பான்
தந்தைதன் தந்தை தான்வே றெழுதுகைச் சாத்துண் டாகில்
இந்தவா வணத்தி னோடு மெழுத்துநீ ரொப்பு நோக்கி
வந்தது மொழிமின் என்றான் வலியஆட் கொள்ளும் வள்ளல்.

தெளிவுரை : அந்தணர் இங்ஙனம் சொல்ல, இந்த அடிமை ஓலையைக் கண்டு தெளிவதற்கு இவனோ உரியவன்? இவனுடைய பாட்டன் எழுதிய வேறு கைச்சாத்துக் கிடைக்குமானால் அதை வரவழைத்து இந்த ஓலையின் கையெழுத்துடன் அதை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் உள்ளத்திற்கு நியாயம் என்று படுவதைத் தீர்ப்பாகச் சொல்லுங்கள் என்று வலிய ஆட்கொள்ள வந்த வள்ளலான இறைவர் தாமே முந்திக் கொண்டு சொன்னார்.

208. திரண்டமா மறையோர் தாமுந் திருநாவ லூரர் கோமுன்
மருண்டது தெளிய மற்ற மறையவ னெழுத்தால் ஓலை
அரண்டரு காப்பில் வேறொன் றழைத்துடன் ஒப்பு நோக்கி
இரண்டுமொத் திருந்த தென்னே யினிச்செயல் இல்லை யென்றார்.

தெளிவுரை : அங்குக் கூடியிருந்த அவையினரும் அவ்வாறே செய்ய எண்ணி, முன்னே நம்பி ஆரூரர்கொண்ட மயக்கம் நீங்கிட, அவரது பாட்டனார் தாமே தம் கையால் எழுதிய வேறு ஓலையைத் தக்க பாதுகாவலில் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து வரவழைத்து, அதன் எழுத்தினை அந்தணர் காட்டிய ஓலையின் கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து இரண்டு கையெழுத்தும் ஒன்று போலவே உள்ளன ! இனி நாம் செய்யக் கூடியது ஒன்றுமில்லை ! எனக் கூறினர்.

209. நான்மறை முனிவ னார்க்கு நம்பியா ரூரர் தோற்றீர்
பான்மையி னேவல் செய்தல் கடனென்று பண்பின் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி விதிமுறை யிதுவே யாகில்
யானிதற் கிசையே னென்ன இசையுமோ வென்று நின்றார்.

தெளிவுரை : இங்ஙனம் விசாரணையை முடித்துக் கொண்டு சபையோர், நம்பி ஆரூரரே ! நீங்கள் இந்த வழக்கிலே இம் முனிவர்க்குத் தோற்றுவிட்டீர்! அவர் ஏவல் கொள்ளும் தன்மைப்படி அவருக்கு நீர் ஏவல் செய்தலே உம் கடமை யாகும். எனத் தீர்ப்புக் கூற, அதைக் கேட்ட நம்பி ஆரூரர் இதுவே விதிப்படியான தீர்ப்பு என்றால் நான் இதற்குச் சம்மதிக்க மாட்டேன் என்று சொல்ல முடியுமோ? என்று சொல்லி நின்றார்.

210. திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி
அருமுனி நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்
பெருமைசேர் பதியே யாகப் பேசிய துமக்கிவ் வூரில்
வருமுறை மனையு நீடு வாழ்க்கையுங் காட்டு கென்றார்.

தெளிவுரை : அதன் பின்பு திரு மிகுந்த அவையினர் தம் முன்பு நின்ற அந்தணரைப் பார்த்து, அரிய முனிவரே ! நீங்கள் முன்னே காட்டிய ஓலையில் எங்கள் பெருமையுடைய திரு வெண்ணெய் நல்லூரே உங்கள் ஊராக எழுதப்பட்டுள்ளது. அஃது உண்மையானால், இந்த வூரில் உள்ள உமக்குப் பழைமையான வீட்டையும் தொன்று தொட்டு வரும் நீண்ட வாழ்க்கையையும் காட்டுக ! என்று கூறினர்.

211. பொருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவ ரென்னை
ஒருவரும் அறியீ ராகில் போதுமென் றுரைத்துச் சூழ்ந்த
பெருமறை யவர்கு ழாமும்  நம்பியும் பின்பு செல்லத்
திருவருட் டுறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்.

தெளிவுரை : ஒப்பில்லாத வழக்கைப் பேசி வெற்றி பெற்ற புண்ணிய முனிவர் அந்தணர்களைப் பார்த்து என்னை ஒருவரும் அறியீரானால் என்னுடன் வாருங்கள். என் மனையையும் வாழ்க்கையையும் காட்டுவேன் என்று கூறி, சுற்றி நின்ற அவ்வூர் அந்தணர்களும் திரு நாவலூரிலிருந்து வந்த அந்தணர்களும் நம்பியாரூரரும் தம் பின் வர முன் சென்று, திருவருட்டுறை என்ற திருக்கோயிலுள் புகுந்தார். அதன்பின் அவர்களுள் எவரும் அவரைக் காணவில்லை.

212. எம்பிரான் கோயில் நண்ண இலங்குநூன் மார்பர் எங்கள்
நம்பர்தங் கோயில் புக்க தென்காலோ வென்று நம்பி
தம்பெரு விருப்பி னோடு தனித்தொடர்ந் தழைப்ப மாதோ
டும்பரின் விடைமேல் தோன்றி அவர்தமக் குணர்த்த லுற்றார்.

தெளிவுரை : கிழ வேதியராக வந்த இறைவர் அந்தக் கோயிலுள் புகவும் விளங்கும் பூணூல் அணிந்த இந்த அந்தணர் எம் இறைவரின் கோயிலில் புகுந்ததன் காரணம் யாது? என்று ஐயம் கொண்டு, நம்பியாரூரர் அந்தணர் கூட்டத்திலிருந்து பிரிந்து முன் சென்று, மிக்க விருப்பத்துடன் அவரைத் தனியாய்க் கோயிலுள் தொடர்ந்து அழைக்க, சிவபெருமான் வான் வெளியில் காளையூர்தியில் எழுந்தருளி வெளிப்பட்டுப் பின் கண்டவாறு அவருக்கு உண்மையை உணர்த்தியருளினார்.

213. முன்புநீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்
பின்புநம் ஏவ லாலே பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து
நன்புல மறையோர் முன்னர் நாம்தடுத் தாண்டோம் என்றார்.

தெளிவுரை : முன் பிறவியில் நீ எமக்குக் கயிலை மலையில் தொண்டு செய்தவன். நீ மங்கையர் மேல் உள்ளம் வைத்ததால் நம் ஆணைப்படி இந்தப் பிறவியை அடைந்தாய். துன்பம் அளிக்கும் வாழ்வு உம்மைத் தொடராதபடி அங்கே நாம் தந்த மொழிப்படி உன்னைத் தொடர்ந்து வந்து இந்த அந்தணர் முன்னிலையில் நாமே தடுத்தாட் கொண்டோம் என்று உண்மையை உணர்த்தியருளினார்.

214. என்றெழு மோசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
கன்றுபோல் கதறி நம்பி கரசர ணாதி யங்கந்
துன்றிய புளக மாகத் தொழுதகை தலைமே லாக
மன்றுளீர் செயலோ வந்து வலியஆட் கொண்ட தென்றார்.

தெளிவுரை : நம்பியாரூரர் ஆண்டோம் என்று இறைவர் வானத்திலிருந்து உண்டாக்கிய ஒலியைக் கேட்டுத் தாய்ப் பசுவின் கனைப்பைக் கேட்ட ஆன் கன்றைப் போல் கதறிக் கைகால் முதலான திருமேனி எங்கும் புளகம் கொள்ளத் தலைமீது கைகளைக் குவித்துக் கொண்டு நான் உமக்கு அடிமையல்லேன் என மறித்துச் சொன்ன என்னை வலிய ஆட்கொண்டது மன்றில் ஆடும் தங்களின் அருட்செயலோ என்றார்.

215. எண்ணிய வோசை யைந்தும் விசும்பிடை நிறைய வெங்கும்
விண்ணவர் பொழிபூ மாரி மேதினி நிறைந்து விம்ம
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப
அண்ணலை ஓலை காட்டி யாண்டவ ரருளிச் செய்வார்.

தெளிவுரை : இங்ஙனம் கண்ட திருவருள் வெளிப்பாட்டால் வானத்தில் ஐந்து தேவ துந்துபி முரசுகளும் நிறைந்து ஒலித்தன. வானவர் கற்பகப் பூமழை பெய்தனர். மண் உலகத்தவர் மகிழ்ச்சி அடைந்தனர். வேதங்கள் ஒலித்தன. ஓலையைக் காட்டி நம்பியை ஆண்ட அவ்விறைவர் பின் வருமாறு அருளலானார்.

216. மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்.

தெளிவுரை : நீ எம்மிடம் வலிந்து பேசியதால் வன்தொண்டன் என்ற பெயரைப் பெற்றாய், நமக்கு அன்பால் சிறந்த வழிபாடாவது நம்மைத் துதிக்கும் பாடலேயாகும், ஆதலால் இவ்வுலகத்தில் நம்மைத் துதித்துத் தமிழ்ப் பாடலைப் பாடுவாயாக ! என்று வேதம் பாடும் தம் திருவாக்கினால் நம்பியாரூரரைப் பார்த்துக் கூறியருளினார்.

217. தேடிய அயனு மாலுந் தெளிவுறா தைந்தெ ழுத்தும்
பாடிய பொருளா யுள்ளான் பாடுவாய் நம்மை யென்ன
நாடிய மனத்த ராகி நம்பியா ரூரர் மன்றுள்
ஆடிய செய்ய தாளை யஞ்சலி கூப்பி நின்று.

தெளிவுரை : நான்முகனும் திருமாலும் தேடிக் காணாமல் பின்பு திருவைந்தெழுத்தைப் பாடித் துதித்துக் கண்ட பொருளான இறைவர் இங்ஙனம் நம்மைப் பாடுக என்று சொல்ல, அக்கட்டளைப்படி பாடும் வகையைச் சிந்தித்த உள்ளத்துடன் நம்பியாரூரர் தில்லைச் சிற்றம்பலத்தில் சிற்சபையில் திருக்கூத்து நிகழ்த்தும் திருவடிகளை எண்ணிக் கை கூப்பி வணங்கினார்.

218. வேதிய னாகி யென்னை வழக்கினால் வெல்ல வந்த
ஊதிய மறியா தேனுக் குணர்வுதந் துய்யக் கொண்ட
கோதிலா அமுதே இன்றுன் குணப்பெருங் கடலை நாயேன்
யாதினை யறிந்தென் சொல்லிப் பாடுகேன் எனமொழிந்தார்.

தெளிவுரை : மறையவராய் வடிவு கொண்டு, என்னை வழக்காடி வெல்வதற்கென்று வந்த அருட்செயலால் எனக்கு வர இருக்கும் பயனை அறியாதிருந்தேன். அங்ஙனமிருந்தும் எனக்கிருந்த அந்த அறியாமையைப் போக்கி உன் உதவியை உணர்ந்து உய்கின்ற வகையை எனக்குக் காட்டி உய்யச் செய்த குற்றம் இல்லாத அமிர்தமே ! உன் குணங்கள் என்ற பெரிய கடலில் எதை அறிந்து என்ன சொல்லிப் பாடுவேன்? என்று உரைத்து நின்றார்.

219. அன்பனை யருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்
முன்பெனைப் பித்த னென்றே மொழிந்தனை யாத லாலே
என்பெயர் பித்த னென்றே பாடுவா யென்றார் நின்ற
வன்பெருந் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாட லுற்றார்.

தெளிவுரை : இங்ஙனம் வேண்டி நின்ற அன்பரான வன் தொண்டரான நாவலூரை அருட் பார்வைபார்த்தருளி நீ முன் மணப்பந்தலில் என்னைப் பித்தனோ மறையோன் என்று மொழிந்தாய். ஆதலால் என் பெயரைப் பித்தன் என்றே வைத்துப் பாடுவாயாக ! என்று உரைத்தருளினார். அவர் அருளை நோக்கி நின்ற ஆரூரரும் தம்மை ஆட் கொண்ட இறைவனை அவ்வாறே பாடத் தொடங்கினர்.

220. கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாயடி யவர்பான்
மெய்த்தாயினு மினியானையவ் வியனாவலர் பெருமான்
பித்தாபிறை சூடீயெனப் பெரிதாந்திருப் பதிகம்
இத்தாரணி முதலாமுல கெல்லாமுய வெடுத்தார்.

தெளிவுரை : உமையை ஒரு பாகத்தில் வைத்து, அதனால், அடியாரிடம் தாயினும் சிறந்த இனிமை செய்பவரான சிவ பெருமானை, அவர் ஆணையிட்டபடியே நாவலூரர், பித்தர் பிறை சூடி என்று தொடங்கும் பெருமையுடைய திருப்பதிகத்தை இந்த நிலவுலகம் முதலான எல்லாவுலகங்களும் உய்யும்படி பாடத் தொடங்கினார்.

221. முறையால்வரு மருதத்துடன் மொழியிந்தள முதலிற்
குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழ மையினால்
நிறைபாணியி லிசைகோள்புணர் நீடும்புகல் வகையால்
இறையான்மகி ழிசைபாடின னெல்லாநிக ரில்லான்.

தெளிவுரை : பண் இலக்கணம் பதினொன்றில் முறையாய் வருகின்ற நான்கு பண்களில், மருதத்தின் திறமாகக் கூறப்படும் இந்தளத்தில் முதல் என்னும் இசைப்பாகு பாட்டாலும், நான்கு வகை நிலையிலும் நிலைப் படுத்தித் தூயதாகக் காட்டும் தன்மையில், வலிவு மெலிவு சமம் என்னும் தாள நிலையையுடைய இசைப் பாகுபாட்டிற்கு ஏற்பப் பொருந்திய உரிமையாலும், தாள விகற்பங்களில் நிறைந்த அளவுள்ள தாளத்துடன் முன் கூறிய பதினொன்றாலும், பண்ணின் இயல்பை அறிந்து, அறிந்ததற்கு ஏற்றவாறு அந்த இலக்கணம் நிரம்புமாறு அசையா மரபில் நீடிப் போய்ப் பயன் தந்து சொல்லப் பெறும் யாழ்த்திறன் வகையிலே, இறைவன் மகிழும் தமிழ் இசைப்பாட்டைத் தமக்கு நிகர் இல்லாத ஆரூரர் பாடினார்.

222. சொல்லார்தமி ழிசைபாடிய தொண்டன்தனை இன்னும்
பல்லாறுல கினில்நம்புகழ் பாடென்றுறு பரிவின்
நல்லார்வெண்ணெய் நல்லூரருட் டுறைமேவிய நம்பன்
எல்லாவுல குய்யப்புரம் எய்தானருள் செய்தான்.

தெளிவுரை : இங்ஙனம் தம்மைச் சொல் தமிழ் இசைப் பதிகத்தால் பாடிய ஆரூரரை, இங்ஙனமே, இனியும் பல வகையாலும் நம் புகழ்களைப் பாடுவாயாக ! என்று நல்லவர் வாழ்வதற்கு இடமான திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறையிலே வீற்றிருக்கும் இறைவரும், எல்லா வுலகங்களும் உணர்ந்து உய்தற் பொருட்டுத் திரிபுரங்களை எரித்த வருமான சிவபெருமான் கருணைப் பெருக்கால் ஆணையிட்டு எழுந்தருளினார்.

223. அயலோர்தவ முயல்வார்பிற ரன்றேமணம் அழியும்
செயலால்நிகழ் புத்தூர்வரு சிவவேதியன் மகளும்
உயர்நாவலர் தனிநாதனை யொழியாதுணர் வழியிற்
பெயராதுயர் சிவலோகமும் எளிதாம்வகை பெற்றாள்.

தெளிவுரை : தாம் அறிந்த பிற தவங்களில் கைம்மை நோன்பில் முயல்பவர் பிறர் மணத்தைத் தொடங்கும் அன்றே அழிந்ததால், விளங்கும் புத்தூரில் வந்த சடங்கவி நிகர் இல்லாத கணவரையே நீங்காமல் உள்ளத்தில் வைத்துத் தியானித்த வழியால் அவரையும் நீங்காத நினைவுடையவராய் உயர்ந்த சிவலோகத்தை எளிதாக அடையும் வகையையும் அடைந்தார்.

224. நாவலர்கோன் ஆரூரன் தனைவெண்ணெய் நல்லூரின்
மேவுமருட் டுறையமர்ந்த வேதியராட் கொண்டதற்பின்
பூவலருந் தடம்பொய்கைத் திருநாவ லூர்புகுந்து
தேவர்பிரான் தனைப்பணிந்து திருப்பதிகம் பாடினார்.

தெளிவுரை : நாவலூரரான நம்பி ஆரூரர் தம்மை வெண்ணெய் நல்லூரிலே திருவருட்டுறையில் எழுந்தருளியவர் மறையவராக வந்து ஆட்கொண்ட பின்பு, மலர்கள் பூக்கின்ற நீர்நிலைகளையுடைய திருநாவலூரில் சென்று தேவர்களுக்குத் தலைவரான இறைவரை வணங்கித் தேவாரப் பதிகம் பாடினார். அங்கு அப்போது சுந்தரர் பாடிய பதிகம் கோவலனான் முகன் என்ற தொடக்கத்தை உடையதாகும்.

225. சிவனுறையுந் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால்
அவநெறியிற் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத்
தவநெறிதந் தருளென்று  தம்பிரான் முன்னின்று
பவநெறிக்கு விலக்காகுந் திருப்பதிகம் பாடினார்.

தெளிவுரை : திருநாவலூரிலிருந்து போய்ச் சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்துறையூரை அடைந்து தம்இறைவன் முன்பு நின்று அழைத்து என் தீவினையின் பயனால் வீணான நெறியில் செல்லாது, என்னைத் தடுத்து ஆட் கொண்டாய். அடியேனுக்குச் செல்லக்கூடிய தவநெறியை எனக்கு அருளல்வேண்டும் குறிப்புக் கொண்டதாய் எல்லா வுயிர்களையும் பல நெறியினின்று விலக்கி ஆளக்கூடிய திருப்பதிகத்தைப் பாடினார். இங்குப் பாடிய பதிகம் மலையார் அருவி என்ற தொடக்கத்தைக் கொண்டதாகும்.

226. புலனொன்றும் படிதவத்திற் புரிந்தநெறி கொடுத்தருள
அலர்கொண்ட நறுஞ்சோலைத்  திருத்துறையூர் அமர்ந்தருளும்
நிலவுந்தண் புனலுமொளிர் நீள்சடையோன் திருப்பாத
மலர்கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் வன்றொண்டர்.

தெளிவுரை : நம்பியாரூரர் வேண்டிய வண்ணமே புலன்கள் தம் தம் வழியில் செல்லாது தவத்தில் இடைவிடாது செல்லும் நெறியை இறைவன் தந்தருளினார். அதனால் நம்பியாரூரர் அதனையே மேற்கொண்டு, மலர்கள் நிறைந்த நல்ல சோலைகள் சூழ்ந்த திருத்துறையூர் என்ற தலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற பிறைச் சந்திரனும் கங்கையும் விளங்குவதற்கு இடமான நீண்ட சடையையுடைய இறைவனின் திருவடி மலர்களை உள்ளத்தில் நினைத்துச் சொல்லால் போற்றிக் கையால் வந்தனை செய்து சிவ பூசை செய்தார்.

227. திருத்துறையூர் தனைப்பணிந்துசிவபெருமான் அமர்ந்தருளும்
பொருத்தமா மிடம்பலவும் புக்கிறைஞ்சிப் பொற்புலியூர்
நிருத்தனார் திருக்கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று
வருத்தமிகு காதலினால் வழிக்கொள்வான் மனங்கொண்டார்.

தெளிவுரை : நம்பியாரூரர் திருத்துறையூரை வணங்கி அங்கிருந்தும் (புறப்பட்டார்.) புறப்பட்டு இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடையில் உள்ள அவரது பூசனைக்குப் பொருந்திய பல தலங்களிலும் போய் இறைவனை வணங்கினார்; சிதம்பரத்தில் கூத்தரின் திருக்கூத்தைக் கண்டு வணங்குவதற்கு எண்ணி, அந்த எண்ணத்தால் வருத்தம் மிகுவிக்கும் ஆசையானது மிக, அதனால் புறப்பட்டுச் செல்ல உள்ளம் கொண்டார்.

228. மலைவளர்சந் தகில்பீலி மலர்பரப்பி மணிகொழிக்கும்
அலைதருதண் புனற்பெண்ணை யாறுகடந் தேறியபின்
இலகுபசும் புரவிநெடுந் தேர்இரவி மேல்கடலிற்
செலவணையும் பொழுதணையத் திருவதிகைப் புறத்தணைந்தார்.

தெளிவுரை : அவ்வாறு எண்ணிய வன்றொண்டர் புறப்பட்டு, மலையிலே வளரும் சந்தனம் அகில் என்னும் மரங்களையும் மயிற்பீலியையும் மலர்களையும் வாரி எங்கும் பரப்பி மணிகளைக் கொழித்து அவைகளுடனே வரும் குளிர்ந்த நீர்ப் பரப்பையுடைய பெண்ணையாற்றினைக் கடந்து கரை ஏறிய பின்பு மாலை நேரத்தில் திருவதிகை வீரட்டானத் தின் வெளி எல்லையை அடைந்தார்.

229. உடையவர சுலகேத்து  முழவாரப் படையாளி
விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்புபெரும் பதியைமிதித்
தடையுமதற் கஞ்சுவனென் றந்நகரிற் புகுதாதே
மடைவளர்தண் புறம்பணையிற் சித்தவட மடம்புகுந்தார்.

தெளிவுரை : இறைவனால் ஆளாகக் கொள்ளப்பட்ட அரசாய் உலகம் ஏத்தும் உழவாரப் படையையுடைய திருநாவுக்கரசர் இறைவனுக்குக் கையினால் தொண்டை விரும்பிச் செய்த பெருமையுடைய தலமான இந்தத் திருவதிகை வீரட்டானத்தில் காலால் மிதித்துச் செல்வதற்கு நான் அஞ்சுகின்றேன் என்ற நினைவால், ஆரூரர் அந்த நகரத்தினுள் புகாமல், அதன் வெளியே உள்ள சித்தவட மடத்தில் புகுந்து அங்கிருந்தார்.

230. வரிவளர்பூஞ் சோலைசூழ் மடத்தின்கண் வன்றொண்டர்
விரிதிரைநீர்க் கெடிலவட வீரட்டா னத்திறைதாள்
புரிவுடைய மனத்தினராய்ப் புடையெங்கு மிடைகின்ற
பரிசனமுந் துயில்கொள்ளப் பள்ளியமர்ந் தருளினார்.

தெளிவுரை : இசைப் பாடல்களைப் பாடுகின்ற வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த அந்தச் சித்த வட மடத்தில் நம்பியாரூரர், விரிந்த அலைகளையுடைய நீர் மிக்க கெடில ஆற்றின் வடகரையில் உள்ள வீரட்டானம் என்ற திருக்கோயிலில் வீற்றிருக்கும் இறைவனை மனத்துள் எண்ணியவராய்த் தம்மைச் சூழ்ந்த பரிவாரங்கள் உறங்கப் பள்ளி கொண்டருளினார்.

231. அதுகண்டு வீரட்டத் தமர்ந்தருளும் அங்கணரும்
முதுவடிவின் மறையவராய் முன்னொருவ ரறியாமே
பொதுமடத்தி னுட்புகுந்து பூந்தாரான் திருமுடிமேற்
பதுமமலர்த் தாள்வைத்துப் பள்ளிகொள்வார் போல்பயின்றார்.

தெளிவுரை : நம்பியாரூரர் தம் அடிகளை எண்ணிய வண்ணம் பள்ளி கொண்டதைக் கண்டு திருவீரட்டானத்து உறையும் சிவபெருமான் முதிய மறையவர் வேடம் கொண்டு முன்னே ஒருவரும் அறியாதபடி அந்தச் சித்தவட மடத்துக்குள் புகுந்து நம்பியாரூரரின் திருமுடியின் மீது தம் தாமரை மலர் போன்ற திருவடிகளை வைத்துத் தாமும் உறங்குவதைப் போல் விளங்கினார்.

232. அந்நிலைஆ ரூரனுணர்ந் தருமறையோ யுன்னடியென்
சென்னியில்வைத் தனையென்னத் திசையறியா வகைசெய்தது
என்னுடைய மூப்புக்காண் என்றருள அதற்கிசைந்து
தன்முடியப் பால்வைத்தே துயிலமர்ந்தான் தமிழ்நாதன்.

தெளிவுரை : அதை நம்பியாரூரர் உணர்ந்து அவரைப் பார்த்து, அரிய மறையவரே; உம் அடிகளை என் தலை மீது வைத்தீர்களே என்று சொன்னார். அதற்கு இறைவரான முதியவர், என் முதுமை என்னைத் திக்குத் தெரியாமல் செய்து விட்டது ! என்று விடையிறுத்தார். தமிழ் நாதனான ஆரூரர் அதை ஒப்புக்கொண்டு தம் தலையை அப்பால் வேறு இடத்தில் வைத்து உறங்கலானார்.

233. அங்குமவன் திருமுடிமேல் மீண்டுமவர் தாள்நீட்டச்
செங்கயல்பாய் தடம்புடைசூழ் திருநாவ லூராளி
இங்கென்னைப் பலகாலும் மிதித்தனைநீ யாரென்னக்
கங்கைசடைக் கரந்தபிரா னறிந்திலையோ எனக்கரந்தான்.

தெளிவுரை : ஆரூரர் வேறு இடத்தில் தலை வைத்துப் படுத்த போதும் அந்த இடத்திலும் மீண்டும் இறைவர் தம் திருவடிகளை அவரது முடியின் மீது வைத்தருளினார். கயல் மீன்கள் பாய்வதற்கு இடமான நீர் நிலைகள் சூழ்ந்த திருநாவலூர் நம்பிகள் இறைவரைப் பார்த்து, இங்கு என்னைப் பல முறையும் மிதித்தீர். நீவிர் யார்? என்று சினத்துடன் கேட்டார், கங்கையைச் சடையில் கொண்ட இறைவன் என்னை நீ இன்னும் அறிந்திலையோ? எனக் கூறி மறைந்தருளினார்.

234. செம்மாந்திங் கியானறியா தென்செய்தே னெனத்தெளிந்து
தம்மானை யறியாத சாதியா ருளரே யென்று
அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த
கைம்மாவி னுரியானைக் கழல்பணிந்து பாடினார்.

தெளிவுரை : என் செருக்கினால் யான் இறைவனை அறிந்து கொள்ளாமல் என்ன செய்து விட்டேன் ! என்று வருந்தி, தம்மானை அறியாத சாதியார் உளரே ! என்று தொடங்கும் திருப்பதிகத்தால் திருவதிகைத் தலத்தில் உள்ள திருவீரட்டானத்து இறைவரின் திருவடிகளை வணங்கித் துதித்துப் பாடினார்.

235. பொன்றிரளும் மணித்திரளும் பொருகரிவெண் கோடுகளும்
மின்றிரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங்குறடும்
வன்றிரைக ளாற்கொணர்ந்து திருவதிகை வழிபடலால்
தென்திசையில் கங்கையெனுந் திருக்கெடிலம் திளைத்தாடி.

தெளிவுரை : பொன் கூட்டத்தையும் மணிக் கூட்டத்தையும், யானைக் கொம்புகளையும், ஒளி முத்துகளையும், மண மலர்களையும், மணமுடைய சந்தனக் கட்டைகளையும், வலிய அலைகளால் கொண்டு வந்து திருவதிகையை வழிபடுவதால் தென் திசைக் கங்கை என்று சொல்லப்பெறும் திருக்கெடில ஆற்றில் மகிழ்ந்து நீராடி, நம்பியாரூரர்.

236. அங்கணரை அடிபோற்றி அங்ககன்று மற்றந்தப்
பொங்குநதித் தென்கரைபோய்ப் போர்வலித்தோள் மாவலிதன்
மங்கலவேள் வியிற்பண்டு வாமனனாய் மண்ணிரந்த
செங்கணவன் வழிபட்ட திருமாணி குழியணைந்தார்.

தெளிவுரை : அழகிய நெற்றிக் கண்ணையுடைய இறைவனை அடி வணங்கி, அந்தத் திருவதிகை என்ற தலத்தினின்று புறப்பட்டு நீங்கி, அந்தப் பெண்ணை நதியின் தென் கரையின் வழியாகச் சென்று, போர் வன்மையுடைய தோள் உடைய மாவலியின் வேள்வியில் வாமன வடிவத்துடன் சென்று மூன்றடி மண்ணை யாசித்து அவனைப் பாதலத்தில் அழுத்திய திருமால் வழிபட்ட திருமாணி குழி என்ற தலத்தைச் சேர்ந்தார்.

237. பரம்பொருளைப் பணிந்துதாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு
வரந்தருவான் தினைநகரை வணங்கினர்வண் டமிழ்பாடி
நரம்புடையாழ் ஒலிமுழவின்  நாதவொலி வேதவொலி
அரம்பையர்தங் கீதவொலி அறாத்தில்லை மருங்கணைந்தார்.

தெளிவுரை : அங்கு முழுமுதற் பொருளான இறைவனை வணங்கி, அவருடைய திருவடிகளைத் துதித்துச் சென்று, தம்மை வணங்கியவர்க்கு வேண்டும் வரங்களைத் தருபவரான இறைவர் எழுந்தருளிய திருத்தினை நகரை வணங்கித் திருப்பதிகம் பாடினார். பின்பு நரம்புகளையுடைய யாழின் ஒலியும், முழவின் ஒலியும், வேதத்தின் ஒலியும், அரம்பையர் பாடும் கீத ஒலியும் இடைவிடாமல் ஒலிக்கும் திருத்தில்லையின் எல்லையை அடைந்தார்.

238. தேம லங்கலணி மாமணி மார்பில்
 செம்ம லங்கயல்கள் செங்கம லத்தண்
பூம லங்கவெதிர் பாய்வன மாடே
புள்ள லம்புதிரை வெள்வளை வாவித்
தாம லங்குகள் தடம்பணை சூழுந்
தன்ம ருங்குதொழு வார்கள்தம் மும்மை
மாம லங்களற வீடருள் தில்லை
மல்ல லம்பதியி னெல்லை வணங்கி.

தெளிவுரை : தேனையுடைய புதிய தாமரை மலர்மாலையும் அழகிய சிறந்த மணிமாலையும் சூடிய மார்பையுடைய ஆரூரர் திண்ணிய தாமரையின் மலர்கள் அசையும்படி அழகிய கயல் மீன்கள் எதிரில் பாய, அதனால் பக்கத்தில் வண்டுகளும் நீர்ப்பறவைகளும் ஒலிக்கும் அலைகளையுடைய வெண்மையான சங்குகள் உள்ள நீர்நிலையினின்றும் அசையும் மலங்கு மீன்கள் பரந்த வயல்களில் சூழ்வதற்கு இடமான, தன் பக்கத்தில் வந்து வணங்குபவரின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேற்றை அருள்கின்ற தில்லை என்ற செழிய பதியினின் எல்லையை வணங்கிக் கொண்டு, அதன்பின்,

239. நாக சூதவகு ளஞ்சர ளஞ்சூழ்
நாளி கேரமில வங்க நரந்தம்
பூக ஞாழல்குளிர் வாழை மதூகம்
பொதுளும் வஞ்சிபல வெங்கு நெருங்கி
மேக சாலமலி சோலைக ளாகி
மீது கோகில மிடைந்து மிழற்றப்
போக பூமியினு மிக்கு விளங்கும்
பூம்பு றம்பணை கடந்து புகுந்தார்.

தெளிவுரை : நாவல், மா, மகிழம், சூழ்ந்த தென்னை, இலவங்கம், நரந்தம், கமுகு, குங்குமம், குளிர்ச்சியுடைய வாழை, இலுப்பை, நெருங்கிய வஞ்சி முதலிய மரங்கள் எவ்விடத்தும் நெருங்கி மேக மண்டலம் வரை ஓங்கி, வளர்ந்த சோலைகளாகி அவற்றில் குயில்கள் கூவத் தேவலோகத்தைவிட மிகப் பொலிவுடன் விளங்கும் அழகிய புறம்பணையையும் கடந்து உள்ளே புகுந்தார்.

240. வன்னி கொன்றைவழை சண்பகம் ஆரம்
மலர்ப்ப லாசொடு செருந்திமந் தாரங்
கன்னி காரங்குர வங்கமழ் புன்னை
கற்பு பாடலம் கூவிள மோங்கித்
துன்னு சாதிமரு மாலதி மௌவல்
துதைந்த நந்திகர வீர மிடைந்த
பன்ம லர்ப்புனித நந்தனவ னங்கள்
பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.

தெளிவுரை : வன்னி, கொன்றை, சுரபுன்னை, சண்பகம், சந்தனம், முறுக்கு, செருந்தி, மந்தாரம், கோங்கு, குரவம், மணம் கமழும் புன்னை, கற்பகம், பாதிரி, வில்வம் முதலான பூ மரங்கள் ஓங்கியும் பொருந்திய சாதி மல்லிகை, முல்லை முதலியவை நெருங்கிய பூக்கொடிகள் நிரம்பியும், நந்தியா வட்டம், அலரி முதலிய செடிகள் நெருங்கியும் உள்ள தூய்மையான நந்தவனங்களைப் பணிந்து கொண்டு நம்பியாரூரர் சென்றார்.

241. இடம ருங்குதனி நாயகி காண
ஏழ்பெ ரும்புவன முய்ய வெடுத்து
நடந வின்றருள் சிலம்பொலி போற்றும்
நான்ம றைப்பதியை நாளும் வணங்கக்
கடல்வ லங்கொள்வது போற்புடை சூழுங்
காட்சி மேவிமிகு சேட்செல வோங்குந்
தடம ருங்குவளர் மஞ்சிவர் இஞ்சித்
தண்கி டங்கையெதிர் கண்டும கிழ்ந்தார்.

தெளிவுரை : இடப்பாகத்தில் அமர்ந்த உமையம்மையார் காணவும் ஏழ் உலகங்களில் உள்ள உயிர்களும் உய்தி பெறவும் எடுத்துக் கூத்தாடியருளும் திருச்சிலம்பின் ஒலி போற்றும் நான்கு மறைகளும் துதிக்கும் இந்தத் தலத்தை நாமும் நாள்தோறும் வலமாய் வந்து வணங்குவோம் என்ற எண்ணத்துடன் கடலானது சூழ்ந்த வளைந்தாற் போன்ற தோற்றம் மிக்கதாய், மிகவும் உயரச் சென்று மேகம் தவழ்தற்கு இடமான மதிலின் புறத்தில் உள்ள குளிர்ந்த அகழினை ஆரூரர் தாம் செல்லும் வழியில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

242. மன்று ளாடுமது வின்னசை யாலே
மறைச்சு ரும்பறை புறத்தின்  மருங்கே
குன்று போலுமணி மாமதில் சூழுங்
குண்ட கழ்க்கமல  வண்டலர் கைதைத்
துன்று  நீறுபுனை மேனிய வாகித் தூய 
நீறுபுனை தொண்டர்க ளென்னச்
சென்று சென்றுமுரல் கின்றன  கண்டு
சிந்தை அன்பொடு திளைத்தெதிர் சென்றார்.

தெளிவுரை : மன்றில் ஆடுகின்ற தேனின் (இறைவரின்) ஆசையால் உள்ளே மறைகள் ஒலிக்க, அதன் வெளிப் பக்கத்தே குன்றைப் போல் உயர்ந்த மதிலைச் சூழ்ந்துள்ள அகழியில் மலர்ந்த தாமரைமலரில் இருந்த வண்டுகள், மேல் எழுந்து தாழை மலரில் செறிந்த மகரந்தத்தில் படிந்த மேனியைக் கொண்டதாய், அதனால் புனிதமான திருநீறு பூசிய சிவனடியர்களைப் போன்ற தோற்றத்துடன் சென்று ஒலிக்கின்ற காட்சியைப் பார்த்து ஆரூரர் உள்ளத்தில் மிக்க அன்பில் முழுகி மேலே சென்றார்.

243. பார்வி ளங்கவளர் நான்மறை நாதம்
பயின்ற பண்புமிக வெண்கொடி யாடும்
சீர்வி ளங்குமணி நாவொலி யாலும்
திசைக ணான்கெதிர் புலப்பட லாலும்
தார்வி ளங்குவரை மார்பின் அயன்பொற்
சதுர்மு கங்களென வாயின தில்லை
ஊர்வி ளங்குதிரு வாயில்கள் நான்கின்
உத்த ரத்திசை வாயின்மு னெய்தி.

தெளிவுரை : உலகமானது விளக்கம் அடைய வளர்க்கும் நான்கு வேத ஒலிகள் பயிலும் தன்மை மிகுந்து நிற்க, வெண் கொடி ஆடும் சிறப்புடன் மணி நாவின் ஒலி எழுவதாலும், நான்கு திக்குகளிலும் எதிர் முகமாகப் புறப்படுவதாலும், மாலைகள் அணிந்த அகலமான மார்புடைய நான்முகனின் பொன் நிறம் பொருந்திய நான்கு முகங்களே இவை என்று சொல்லப் பெறுபவனான தில்லைப்பதியின் விளக்கம் மிக்க நான்கு வாயில்களில் வடதிக்குத் திருவாயிலின் முன் ஆரூரர் சேர்ந்து.

244. அன்பின் வந்தெதிர் கொண்டசீ ரடியார்
அவர்க ளோநம்பி யாரூரர்  தாமோ
முன்பி றைஞ்சினர் யாவரென் றறியா
முறைமை யாலெதிர்  வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பி னிறைந்து
பெருகு  நாவனக ரார்பெரு மானும்
பொன்பி றங்குமணி மாளிகை நீடும்
பொருவி றந்ததிரு வீதி புகுந்தார்.

தெளிவுரை : அன்பினால் வந்து எதிர் கொண்ட சிறந்த அடியாரோ அல்லது நம்பியாரூரரோ, இவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கும்போது முதலில் வணங்கியவர் யார் என்று அறிந்து கொள்ள இயலாதபடி எதிர் எதிர் வணங்கி மகிழ்ந்தனர். பின்னர் ஆரூரர் ஆனந்தக் கூத்தரை வணங்கும் விருப்பம் மிகுந்த பொன்னால் விளங்கும் அழகிய மாளிகை நீடிய ஒப்பில்லாத திருவீதியில் புகுந்தார்.

245. அங்கண் மாமறை முழங்கும் மருங்கே
ஆட ரம்பையர் அரங்கு  முழங்கும்
மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும்
வாச மாலைகளின் வண்டு முழங்கும்
பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர்
போற்றி சைக்குமொலி எங்கும் முழங்கும்
திங்கள் தங்குசடை  கங்கை முழங்கும்
தேவ தேவர்புரி யுந்திரு வீதி.

தெளிவுரை : மூன்றாம் பிறைச் சந்திரன் பொருந்திய சடையிலே கங்கை ஒலிக்கின்ற கூத்தர் விரும்பி எழுந்தருளும் அத்திரு வீதியின் எங்கும் நான்கு மறைகள் ஒலிக்கும். அவற்றின் பக்கத்தில் தேவமங்கையர் ஆடல் முழக்கம் செய்ய ஐந்து தேவ துந்துபிகளும் முழங்கும். மணம் பொருந்திய பூமாலைகளில் வண்டுகளின் இசை ஒலிக்கும், அன்பு பொங்கி வழியும் கண்ணீர் உடைய அடியார்கள் போற்றித் துதிக்கும் ஒலி எங்கும் கேட்கும்.

246. போக நீடுநிதி மன்னவன் மன்னும்
புரங்க ளொப்பன வரம்பில வோங்கி
மாக முன்பருகு கின்றன போலும்
மாளி கைக்குல மிடைந்த  பதாகை
யோக சிந்தைமறை யோர்கள் வளர்க்கும்
ஓம தூமமுயர் வானி லடுப்ப
மேக பந்திகளின் மீதிடை எங்கும்
மின்னு  டங்குவன வென்ன விளங்கும்.

தெளிவுரை : எல்லாப் போகங்களையும் கொண்டிருக்கும் குபேரனின் பட்டினங்களைப் போல் தனித்தனியே விளங்கும் அளவற்றனவாய் மிகவும் உயர்ந்து மேக மண்டலத்தைத் தம் முன் அடக்குபவை போல் உள்ள மாளிகைக் கூட்டங்களின் மேல் கட்டப்பட்ட கொடிகள் அந்த மாளிகைகளில் வாழும் அந்தணர் யோக சிந்தையால் வளர்க்கின்ற ஓமப் புகையானது வானை அளாவிச் செல்ல மேகக் கூட்டங்களின் இடையில் எங்கும் மின்னல் கொடிகள் போல் விளங்கும்.

247. ஆடு தோகைபுடை நாசிகள் தோறும்
அரணி தந்தசுட ராகுதி  தோறும்
மாடு தாமமணி வாயில்கள் தோறும்
மங்க லக்கலசம் வேதிகை தோறுஞ்
சேடு கொண்டவொளி தேர்நிரை தோறுஞ்
செந்நெ லன்னமலை சாலைகள் தோறும்
நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும்
நிறைந்த தேவர்கணம் நீளிடை தோறும்.

தெளிவுரை : கோபுர நாசிப் பக்கங்களில் எங்கும் மயில்கள் ஆடும். வேள்விகளில் எங்கும் அரணியால் கடைந்து கொள்ளப்பட்ட நெருப்பு விளங்கும். இரண்டு பக்கங்களிலும் மாலைகள் தொங்க விடப்பட்டிருக்கும்; தேர்க் கூட்டங்களில் எங்கும் பேரொளி காணப்படும். அன்ன சாலைகளில் எங்கும் நெல்லரிசிச் சோற்று மலைகள் விளங்கும். தண்ணீர்ப் பந்தல்களில் எப்போதும் நிரம்பிய குளிர்ந்த தண்ணீர் வகைகள்; வீதியின் அயல் இடங்கள் எங்கும் நிறைந்த தேவர் கூட்டங்கள்.

248. எண்ணில் பேருல கனைத்தினு முள்ள
எல்லை யில்லழகு சொல்லிய வெல்லாம்
மண்ணில் இப்பதியில் வந்தன வென்ன
மங்க லம்பொலி வளத்தன வாகிப்
புண்ணி யப்புனித வன்பர்கள் முன்பு
புகழ்ந்து பாடல்புரி பொற்பின் விளங்கும்
அண்ண லாடுதிரு வம்பலஞ் சூழ்ந்த
அம்பொன் வீதியினை நம்பி வணங்கி.

தெளிவுரை :எண்ணில்லாத பெரிய உலகங்கள் எல்லாவற்றிலும் உள்ள எல்லையற்ற அழகுகள் எல்லாம் ஒன்றாய்த் திரண்டு மண்ணுலகில் இத்தலத்தில் வந்து சேர்ந்துள்ளன எனக் கூறும்படி மங்கலம் பொருந்தும் வளங்களை உடையனவாய், புண்ணிய புனித அன்பர்கள், முன்னால் புகழ்ந்து பாடும் அழகுடன் விளங்கி இறைவன் ஆடும் அம்பலத்தைச் சூழ்ந்திருக்கும் உள் வீதியை நாவலூரர் வணங்கிக் கொண்டு சென்று,

249. மால யன்சத மகன்பெருந் தேவர்
மற்று முள்ளவர்கள் முற்றும் நெருங்கிச்
சீல மாமுனிவர் சென்றுபின் துன்னித்
திருப்பி ரம்பினடி கொண்டு திளைத்துக்
காலம் நேர்படுதல் பார்த்தயல் நிற்பக்
காத லன்பர்கண நாதர் புகும்பொற்
கோல நீடுதிரு வாயி லிறைஞ்சிக்
குவித்த செங்கைதலை மேற்கொடு புக்கார்.

தெளிவுரை : திருமால், நான்முகன், இந்திரன் என்னும் பெருந்தேவர்களும் மற்றத் தேவர்களும் முழுவதும் நெருங்கித் தவ ஒழுக்கமுடையவர் முன்னே நெருங்கிச் சேர்ந்து, தக்க காலமாக இல்லாததால் உள்ளே செல்ல மாட்டாதவராய்க் காவல் தலைவரான நந்தி தேவரின் ஆணைப் பிரம்பின் அடி தம் மேல் பட, அதில் திளைத்தவராய், தக்க நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு பக்கங்களில் ஒதுங்கி நிற்க, காதல் மிக்க அடியார்களும் கண நாதர்களும் தடை இல்லாது உள்ளே செல்லும் அழகிய வாயிலை வணங்கி, உச்சியில் குவித்த கையுடன் நம்பி யாரூரர் அதன் உள்ளே புகுந்தார்.

250. பெருமதில் சிறந்த செம்பொன்மா ளிகைமின்
பிறங்குபே ரம்பல மேரு
வருமுறை வலங்கொண் டிறைஞ்சிய பின்னர்
வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்
அருமறை முதலில் நடுவினில் கடையில்
அன்பர்தஞ் சிந்தையில் அலர்ந்த
திருவள ரொளிசூழ் திருச்சிற்றம் பலமுன்
திருவணுக் கன்திரு வாயில்.

தெளிவுரை : பின்பு பெரிய மதில் சூழ்ந்த செம் பொன் மாளிகையையும் பேரம்பலமான மேருவையும் விதிப்படி வலமாய் வந்து வணங்கினார். அதன் பின்னர் மகிழ்வுடன் மேலும் சென்று வணங்குவதற்காக நம்பி ஆரூரர் வேதத்தின் முதல் இடை கடைகளிலும் அன்புடையவரின் உள்ளங்களிலும் விளங்கும் திருவளர் ஒளி சூழ்ந்த திருச்சிற்றம் பலத்தின் முன்பு உள்ள திருவணுக்கன் திருவாயிலில் புகுந்தார்.

251. வையகம் பொலிய மறைச்சிலம் பார்ப்ப
மன்றுளே மாலயன் தேட
ஐயர்தாம் வெளியே யாடுகின் றாரை
அஞ்சலி மலர்த்திமுன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
கரணமோ கலந்தவன் புந்தச்
செய்தவம் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான்
திருக்களிற் றுப்படி மருங்கு.

தெளிவுரை : ஆரூரர் - நான்முகன் திருமால் தேட, உலகம் விளங்க, வேதமான சிலம்பு ஒலிக்க, அம்பலத்துள் வெளியே திருக்கூத்து இயற்றும் அந்த இறைவனை மலர்த்தியும் குவித்தும் கூப்பிய கைகளும் ஆனந்தமுடைய கண்களும் இவற்றின் உள் கலந்த அந்தக் கரணங்களும் உடையவராய், அன்பால் உந்திச் செலுத்தப்பட்டுச் செய்யும் தவத்தில் பெரியவராய் திருக்களிற்றுப் படியின் பக்கத்தில் போய் வணங்கி எழுந்தார்.

252. ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
வெல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.

தெளிவுரை : ஐந்து வகையாய் ஐந்து வகைகளில் பெயரும் அறிவுகளை எல்லாம் கண்களே தம்முடையனவாக்கிக் கொள்ள, அளவிட இயலாத நான்கு கரணங்களின் செயல்கள் எல்லாம் சித்தம் என்ற ஒன்றின் செயலே ஆக, மூன்று குணங்களும் சுத்த சாத்துவிகம் என்ற ஒன்றேயாய் நிற்க, பிறைச்சந்திரன் வாழ்கின்ற சடையையுடைய இறைவன் ஆடுகின்ற, அளவும் ஒப்பும் இல்லாத பெரு நடனத்தால் தம்மிடம் நிகழ்ந்த பேரின்பக் கடலில் திளைத்து நிகர் இல்லாத பெரிய மகிழ்ச்சியில் திளைத்தார்.

253. தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருநடங் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு
வாலிதாம் இன்பமாம் என்று
கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக்
கைம்மல ருச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்.

தெளிவுரை : மகிழ்வால் மலர்ந்த நாவலூரர் கண்களினின்று ஆனந்தக் கண்ணீர் அருவியைப் போல் வடியக் கைகளைத் தலைமேல் குவித்துக் கூப்பிக் கொண்டு, தெளிந்த பிறைச் சந்திரன் பொருந்திய சடையையுடையவனே ! பொதுவாக பிறவியானது துன்பம் உடையது என்றாலும் உனது திரு நடனத்தைக் கும்பிடும் வாழ்வு பெற்று இம்மண்ணுலகத்தில் வந்த மனிதப் பிறவியானது எனக்கு நல்ல இன்பமாயிற்று, என்று பண்ணால் நிரம்பிய, அறிவதற்கு அரிய, தேவாரத் திருப்பதிகம் பாடித் துதித்துப் பணிந்தார்.

254. தடுத்துமுன் ஆண்ட தொண்டனார் முன்பு
தனிப்பெருந் தாண்டவம் புரிய
எடுத்தசே வடியா ரருளினால் தரளம்
எறிபுனல் மறிதிரைப் பொன்னி
மடுத்தநீள் வண்ணப் பண்ணையா ரூரில்
வருகநம் பாலென வானில்
அடுத்தபோ தினில்வந் தெழுந்ததோர் நாதம்
கேட்டலும் அதுவுணர்ந் தெழுந்தார்.

தெளிவுரை : முன்பு திருமணத்தில் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட சுந்தரரின் முன்னால். ஒப்பில்லாத பெருங்கூத்துச் செய்ய எடுத்த திருவடியையுடைய பெருமானின் திருவருளால், முத்துக்களை அடித்து வரும் மடிந்து விழும் அலைகளையுடைய காவிரியால் பெருகிய வளம் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருவாரூரில் நம்மிடத்துக்கு வருவாயாக ! என்று அப்போது வானத்தில் எழுந்தது ஓர் ஒலி; அந்த ஒலியைக் கேட்டதும் நம்பியாரூரர் உணர்ந்து எழுந்தார்.

255. ஆடுகின் றவர்பே ரருளினால் நிகழ்ந்த
அப்பணி சென்னிமேற் கொண்டு
சூடுதங் கரங்கள் அஞ்சலி கொண்டு
தொழுந்தொறும் புறவிடை கொண்டு
மாடுபே ரொளியின் வளருமம் பலத்தை
வலங்கொண்டு வணங்கினர் போந்து
நீடுவான் பணிய வுயர்ந்த பொன் வரைபோல்
நிலையெழு கோபுரங் கடந்து.

தெளிவுரை : ஆரூரர், அம்பலத்தில் ஆடுபவரின் கருணையினால் அருளப்பட்ட அந்தக் கட்டளையைத் தலைமேற் கொண்டு, தம் கைகளைத் தலை மீது குவித்து வணங்கித் தொழுது விடைபெற்றுக் கொண்டு, பக்கத்தே பரவும் ஒளியுடைய சிற்றம்பலத்தை வலமாக வந்து வணங்கி, வெளியே வந்து, நீண்ட வானமும் சிறிதாக, உயர்ந்த பொன் மலை போல் நிலையினின்றும் எழுந்த தெற்குக் கோபுரத்தை அடைந்து,

256. நின்றுகோ புரத்தை நிலமுறப் பணிந்து
நெடுந்திரு வீதியை வணங்கி
மன்றலார் செல்வ மறுகினூ டேகி
மன்னிய திருப்பதி யதனில்
தென்றிரு வாயில் கடந்துமுன் போந்து
சேட்படுந் திருவெல்லை யிறைஞ்சிக்
கொன்றைவார் சடையா னருளையே நினைவார்
கொள்ளிடத் திருநதி கடந்தார்.

தெளிவுரை : கோபுர வாசலுக்கு வெளியில் நின்று கோபுரத்தைக் கீழே விழுந்து வணங்கிப் பின் நீண்ட வீதியை வணங்கி, விழாப் பொருந்திய செல்வ வீதியுள் சென்று, நிலைபெற்ற அந்தப் பதியின் தெற்குத் திசை வாயிலைக் கடந்து போய், நகரின் வெளியேயுள்ள தெற்கு எல்லையை வணங்கி, அதன்பின்பு, கொன்றைமலர் அணிந்த சடையை யுடைய இறைவனின் திருவருளையே எண்ணியவராய் (நாவலூரர்) கொள்ளிடம் என்ற ஆற்றைக் கடந்தார்.

257. புறந்தருவார் போற்றிசைப்பப் புரிமுந்நூல் அணிமார்பர்
அறம்பயந்தாள் திருமுலைப்பால் அமுதுண்டு வளர்ந்தவர்தாம்
பிறந்தருளும் பெரும்பேறு பெற்றதென முற்றுலகிற்
சிறந்தபுகழ்க் கழுமலமாந் திருப்பதியைச் சென்றணைந்தார்.

தெளிவுரை : பரிவாரங்களான அடியார்கள் தம்மைத் துதித்த வண்ணம் வர, பூணூலை மார்பிலுடைய ஆரூரர், அறங்களையெல்லாம் தந்தவளான உமையம்மையாரின் திருமுலைப் பாலான அமுதத்தை உண்டு வளர்ந்த திருஞான சம்பந்தர் அவதரித்த பெரும் பேற்றையுடைய திருப்பதியாகும் இது என்று எவ்வுலகத்திலும் சிறந்த புகழ் வாய்ந்த கழுமலம் என்ற திருத்தலத்தைப் போய் அடைந்தார்.

258. பிள்ளையார் திருவவதா ரஞ்செய்த பெரும்புகலி
உள்ளுநான் மிதியேனென் றூரெல்லைப் புறம்வணங்கி
வள்ளலார் வலமாகவரும்பொழுதின் மங்கையிடங்
கொள்ளுமால் விடையானும் எதிர்காட்சி கொடுத்தருள.

தெளிவுரை : திருஞானசம்பந்தர் அவதாரம் செய்த பெரும் பேறு பெற்ற புகலி என்னும் இத்தலத்தின் எல்லையுள் காலால் மிதித்து அடியெடுத்து வைக்க மாட்டேன் என்ற எண்ணம் கொண்டவராய், அந்தத் தலத்தின் எல்லையுள் நின்று வணங்கி, அதனை ஆரூரர் வலம் வரும்போது, உமையம்மையாருடன் காளையூர்தியில் எழுந்தருளி இறைவன் அவருக்கு எதிர் காட்சி தந்தருள.

259. மண்டியபே ரன்பினால் வன்றொண்டர் நின்றிறைஞ்சித்
தெண்டிரைவே லையின்மிதந்த திருத்தோணி புரத்தாரைக்
கண்டுகொண்டேன் கயிலையினில் வீற்றிருந்த படியென்று
பண்டருமின் னிசைபயின்ற திருப்பதிகம் பாடினார்.

தெளிவுரை : நம்பியாரூரர் மிகுந்து எழுந்த பேரன்பால் வணங்கி நின்று, ஊழியில் தெளிந்த அலைகளையுடைய கடலில் மிதந்த திருத்தோணிபுரத்தின் இறைவரைக் கயிலையில் அவர் வீற்றிருக்கும் கோலத்தை நான் கண்டு என் உள்ளத்தில் பொருந்தியிருக்க வைத்துக் கொண்டேன் ! என்ற கருத்துக் கொண்ட பண் நிரம்பிய இனிய இசையையுடைய தக்கேசிப் பண் அமைந்த திருப்பதிகத்தைப் பாடினார்.

260. இருக்கோல மிடும்பெருமான் எதிர்நின்றும் எழுந்தருள
வெருக்கோளுற் றதுநீங்க ஆரூர்மேற் செலவிரும்பிப்
பெருக்கோதஞ் சூழ்புறவப் பெரும்பதியை வணங்கிப்போய்த்
திருக்கோலக் காவணங்கிச் செந்தமிழ்மா லைகள்பாடி.

தெளிவுரை : வேதங்கள் கூவியழைக்கின்ற சிவபெருமான் இங்ஙனம் நாவலூரர்க்கு எதிர் நின்று காட்சி தந்தருளிய போது ஆரூரர் மனத்தில் வெருக் கொண்டு (அஞ்சிப்) பின் தெளிவு கொண்டு திருவாரூர்க்குச் செல்ல விருப்பம் கொண்டு கடல் சூழ்ந்த புறவம் என்ற அந்தப் பதியை வணங்கிப் போய்த் திருக்கோலக்கா என்ற தலத்தை அடைந்து இறைவனைக் கண்டு திருப்பதிகத்தைப் பாடினார்.

261. தேனார்க்கு மலர்ச்சோலைத் திருப்புன்கூர் நம்பர்பால்
ஆனாப்பே ரன்புமிக அடிபணிந்து தமிழ்பாடி
மானார்க்குங் கரதலத்தார் மகிழ்ந்தஇடம் பலவணங்கிக்
கானார்க்கு மலர்த்தடஞ்சூழ் காவிரியின் கரையணைந்தார்.

தெளிவுரை : பின் தேன் பொருந்திய சோலைகள், சூழ்ந்த திருப்புன்கூர் தலத்தில் வீற்றிருக்கும் சிவலோக நாதரிடம் உண்டான மிக்க அன்பால் சென்று வணங்கித் திருப்பதிகம் பாடிச் சென்று, இங்ஙனமே மானைக் கையில் கொண்டவரான சிவபெருமான் வீற்றிருக்கும் இடங்களான திருக்கஞ்சானுர், திருவாரூர் முதலிய பலவற்றையும் வணங்கி தேன் பொருந்திய மலர்களையுடைய நீர் நிலைகளையுடைய நதியின் கரையை அடைந்தார்.

262. வம்புலா மலரலைய  மணிகொழித்து வந்திழியும்
பைம்பொன்வார் கரைப்பொன்னிப்  பயில்தீர்த்தம் படிந்தாடித்
தம்பிரான் மயிலாடு துறைவணங்கித் தாவில்சீர்
அம்பர்மா காளத்தின் அமர்ந்தபிரான் அடிபணிந்தார்.

தெளிவுரை : புதுமையுடைய மலர்களையும் மணிகளையும் கொண்டு வழியில் இருகரையிலும் பொன்னை ஒதுக்கிச் செல்லும் காவிரியின் நீரில் மூழ்கி ஆடி இறைவன் எழுந்தருளிய திருமயிலாடு துறையை வணங்கிச் சென்று திருவம்பர் மாகாளத்தினை ஆரூரர் அடைந்தார்.

263. மின்னார்செஞ் சடையண்ணல் விரும்புதிருப் புகலூரை
முன்னாகப் பணிந்தேத்தி முதல்வன்தன் அருள்நினைந்து
பொன்னாரும் உத்தரியம் புரிமுந்நூ லணிமார்பர்
தென்னாவ லூராளி திருவாரூர் சென்றணைந்தார்.

தெளிவுரை : மின்னல் போன்ற ஒளியுடைய சிவந்த சடையுடையவரான சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்புகலூரை முதலில் வணங்கித் துதித்து இறைவரின் அருளையே எண்ணியவராய்ப் பொன்னாடையான உத்தரியத்தையும் பூணூலையும் உடைய மார்பினரும் நாவலூரில் தோன்றிய வருமான சுந்தரர் போய்த் திருவாரூரை அடைந்தார்.

264. தேராரும் நெடுவீதித் திருவாரூர் வாழ்வார்க்கு
ஆராத காதலின்நம் ஆரூரன் நாமழைக்க
வாராநின் றானவனை மகிழ்ந்தெதிர்கொள் வீரென்று
நீராருஞ் சடைமுடிமேல் நிலவணிந்தார் அருள்செய்தார்.

தெளிவுரை : தேர் அழகுடைய தெருக்களையுடைய திருவாரூரில் அன்பர்களுக்கு மிகுந்த அன்புடைய நம் நம்பியாரூரன் நாம் அழைத்ததால் இங்கு வருகின்றான். அவனை நீங்கள் மகிழ்ந்து எதிர்கொண்டு வரவேற்பீராக! என்று கங்கை பொருந்திய சடை முடியின் மீது பிறைச் சந்திரனை அணிந்த தியாகராசர் அருள் செய்தார்.

265. தம்பிரா னருள்செய்யத் திருத்தொண்ட ரதுசாற்றி
எம்பிரா னார்அருள்தான் இருந்தபரி சிதுவானால்
நம்பிரா னாராவார்அவரன்றே யெனுநலத்தால்
உம்பர்நா டிழிந்ததென எதிர்கொள்ள வுடனெழுந்தார்.

தெளிவுரை : தம் பெருமானான தியாகராசர் இங்ஙனம் அருள் செய்யவே, திருவாரூரில் வாழ்பவரான அன்பர்கள், தாம் தாம் கேட்ட அந்த ஆணையை மற்றவரும் அறிய எடுத்துக் கூறிக் கொண்டனர். எம்பெருமானின் நிறைந்த திருவருள் இருந்த தன்மை இதுவேயானால், எம் பெருமான் ஆவாரும் அந்தச் சுந்தரரே அல்லரோ? எனக் கொண்ட நன்மையால் தேவர் உலகம் இங்கு இழிந்து விட்டதோ எனக் கூறும் படியாய் எதிர்கொண்டு ஆரூரரை அழைக்க உடனே புறப்பட்டனர்.

266. மாளிகைகள் மண்டபங்கள் மருங்குபெருங் கொடிநெருங்கத்
தாளின்நெடும் தோரணமுந்  தழைக்கமுகுங் குழைத்தொடையும்
நீளிலைய கதலிகளும் நிறைந்தபசும் பொற்றசும்பும்
ஒளிநெடு மணிவிளக்கு முயர்வாயில் தொறும்நிரைத்தார்.

தெளிவுரை : மாளிகைகள் மண்டபங்கள் என்பனவற்றில் நீண்டு உயர்ந்த கொடிகளை மேற்பக்கத்தில் நெருங்கும்படி கட்டி, அடியில் நீண்ட தோரணங்களையும், இலைகள் அடர்ந்த பாக்கு வகைகளையும் மாவிலை முதலான தழைகளால் தொடுக்கப்பட்ட மாலைகளையும் நீளமான இலைகளையுடைய மரங்களையும் நீர் நிரம்பிய பொன் குடங்களையும் வரிசையாய் அமைத்து மணிகளால் ஆன விளக்குகளையும் உயர்ந்த வாயில்கள் தோறும் ஒழுங்கு பெற வைத்திருந்தனர்.

267. சோதிமணி வேதிகைகள் தூநறுஞ்சாந் தணிநீவிக்
கோதில்பொரி பொற்சுண்ணங் குளிர்தரள மணிபரப்பித்
தாதவிழ்பூந் தொடைமாலைத் தண்பந்தர் களுஞ்சமைத்து
வீதிகள்நுண் துகள்அடங்க விரைப்பனிநீர் மிகத்தெளித்தார்.

தெளிவுரை : ஒளி பொருந்திய அழகுடைய திண்ணைகளைத் தூய மனம் கொண்ட சந்தனக் குழம்பால் அழகாக மெழுகி, குற்றம் இல்லாத பொரியும் நல்ல மணம் உடைய சுண்ணப் பொடியும் நீர்மையுடைய முத்துகளும் மற்ற மணிகளும் என்னும் இவற்றை அழகு பொருந்தப் பரப்பி வைத்து, மகரந்தம் அப்போது அவிழ்ந்து அலரும் தருணத்தில் தொடுத்த பூமாலையால் ஆன குளிர்ந்த பூப்பந்தர்களும் இட்டு, வீதிகளில் தூசி அடங்கும்படி மணம் கமழும் பனி நீரைத் தெளித்தனர்.

268. மங்கல கீதம்பாட மழைநிகர்தூ ரியமுழங்கச்
செங்கயற்கண் முற்றிழையார் தெற்றிதொறும் நடம்பயில
நங்கள்பிரான் திருவாரூர் நகர்வாழ்வார் நம்பியைமுன்
பொங்கெயில்நீள் திருவாயில் புறமுறவந் தெதிர்கொண்டார்.

தெளிவுரை : மங்கலப் பாடல்கள் பாட மேகக் கர்ச்சனை போன்ற ஒலியையுடைய தூரியங்கள் ஒலிக்க, சிவந்த கடல் போன்ற கண்களையுடைய நல்ல அணிகளை அணிந்த மங்கையர் மேடைதோறும் நடனம் ஆட, திருவாரூரில் வாழ்கின்ற அடியார்கள் ஆரூரரை உயர்ந்த மதிலை யுடைய மதிற்புற வாயிலில் வந்து எதிர் கொண்டு வரவேற்றனர்.

269. வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன்
வன்றொண்டர் அஞ்சலி கூப்பி வந்து
சிந்தை களிப்புற வீதி யூடு
செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி
எந்தை யிருப்பதும் ஆரூ ரவர்
எம்மையு மாள்வரோ கேளீர் என்னும்
சந்த விசைப்பதி கங்கள்  பாடித்
தம்பெரு மான்திரு வாயில் சார்ந்தார்.

தெளிவுரை : மேற்கண்டவாறு மதில்வாயிலில் வந்து தம்மை எதிர்கொண்டு வணங்குபவர்களான திருவாரூர் அடியார்களை, அவர் தம்மை வணங்குவதற்கு முன்னமேயே தாம் கைகுவித்து வணங்கி அவர்களுடன் கலந்து இரு திறத்தார்க்கும் மகிழ்ச்சி பொங்க, மேற் கூறியவாறு தம்மை வரவேற்க அலங்கரிக்கப்பட்ட திருவீதியுள் செல்லும் சுந்தரர், இறைவனின் ஆணைப்படி தம்மை வரவேற்க வந்த திருவாரூர் அடியவர்களை நோக்கி, எம்பெருமான் வீற்றிருப்பதும் ஆரூர். அவர் எம்மையும் ஆட்கொள்வாரோ, கேளுங்கள் என்ற கருத்தைக் கொண்ட மகுடத்தையுடைய சந்தமும் இசையும் கொண்ட காந்தாரப் பண்ணில் அமைந்த திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு தம் இறைவரின் திருவாயிலை அடைந்தார்.

270. வானுற நீள்திரு வாயில் நோக்கி
மண்ணுற ஐந்துறுப் பால் வணங்கித்
தேனுறை கற்பக வாச மாலைத்
தேவா சிரியன் தொழுதி றைஞ்சி
ஊனு முயிரும் உருக்கு மன்பால்
உச்சி குவித்த செங்கைக ளோடும்
தூநறுங் கொன்றை யான்மூலட் டானம்
சூழ்திரு மாளிகை வாயில் புக்கார்.

தெளிவுரை : வானத்தில் பொருந்த உயர்ந்த நீண்ட திரு வாயிலைப் பார்த்துக் கீழ் விழுந்து ஐந்து உறுப்புகளால் வணங்கி, தேன் பொருந்திய கற்பக மலர்மாலை வாசம் கமழும் தேவாசிரியன் என்ற மண்டபத்தினை வணங்கி, உடலையும் உயிரையும் உருக்கும் அன்பால் உச்சி மீது குவிக்கப்பட்ட சிவந்த கைகளுடனும் தூய்மையான நல்ல மணம் கொண்ட கொன்றைமாலையை அணிந்த புற்றிடம் கொண்டாரின் மூலத்தானத்தைச் சூழ்ந்துள்ள திருமாளிகை வாயில் புகுந்தார்.

271. புற்றிடங் கொண்ட புராதனனைப்
பூங்கோயின் மேய பிரானை யார்க்கும்
பற்றிட மாய பரம்பொருளைப்
பார்ப்பதி பாகனைப் பங்க யத்தாள்
அர்ச்சனை செய்ய அருள்புரிந்த
அண்ணலை மண்மிசை வீழ்ந்தி றைஞ்சி
நற்றமிழ் நாவலர் கோன்உடம்பால்
நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.

தெளிவுரை : தாம் விரும்பி வெளிப்பட வாழும் இடமாய்ப் புற்றினைக் கொண்ட பழைமையானவரை, பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமானை ! எல்லா உயிர்களுக்கும் பற்றுக் கோடான மேலான முழு முதல் இறைவரை. பார்வதியம்மையை ஒரு பாகத்தில் கொண்டவரை, தாமரை மலர் போன்ற தம் அடிகளை வழிபடுகின்ற பேற்றைத் தமக்கு அளித்த பெருமையுடையவரை, தரையில் விழுந்து வணங்கி நல்ல தமிழில் வல்ல சுந்தரர் இந்த உடலை எடுத்ததன் நற்பயனை உண்மையில் அடைந்தார்.

272. அன்பு பெருக உருகியுள்ளம்
அலையஅட் டாங்கபஞ் சாங்க மாக
முன்பு முறைமையி னால்வணங்கி
முடிவிலாக் காதல் முதிர வோங்கி
நன்புல னாகிய ஐந்தும்ஒன்றி
நாயகன் சேவடி எய்தப் பெற்ற
இன்பவெள் ளத்திடை மூழ்கிநின்றே
இன்னிசை வண்டமிழ் மாலை பாட.

தெளிவுரை : அன்பு மிக்கதால் மனம் உருகி அலையத் திருமூலத்தான நாதர் முன்பு எட்டு உறுப்புகளாலும் ஐந்து உறுப்புகளாலும் விதிப்படி வணங்கி, அளவில்லாத ஆசை மேலும் மேலும் பெருக, நல்ல ஐந்து புலன்களும் ஒன்றித்து நிற்க, இறைவன் திருவடியை அடையப் பெற்றதனால் உண்டான இன்பப் பெருக்கில் மூழ்கி அதில் நிலைத்து நின்று, சுந்தரர், இனிய பண் நிரம்பப் பெற்றதும் வண்மை பொருந்தியதுமான தேவாரத் திருப்பதிகத்தைப் பாடினார்.

273. வாழிய மாமறைப் புற்றிடங்கொள்
மன்னவ னாரரு ளாலோர் வாக்குத்
தோழமை யாக வுனக்குநம்மைத் த
ந்தனம்  நாமுன்பு தொண்டு கொண்ட
வேள்வியி லன்றுநீ கொண்டகோலம்
என்றும் புனைந்துநின் வேட்கை தீர
வாழிமண் மேல்விளை யாடுவாயென்
றாரூரர் கேட்க எழுந்த தன்றே.

தெளிவுரை : உயிர்கள் தம்மை வழிபட்டு வாழ்வடையும் பொருட்டாகப் பெரிய வேதங்களின் வடிவமாய் அமைந்த புற்றை இடமாகக் கொண்டு எழுந்தருளிய இறைவனின் நிறைவான அருளால் நம்மையே உமக்குத் தோழனாய்த் தந்துள்ளோம். நாம் முன்னர்த் தடுத்தாட் கொண்ட திருமணத்தில் அன்றைக்கு நீ கொண்டிருந்த மணக் கோலத்தையே என்றும் கொண்டு உன் ஆசை தீரும்படி இவ்வுலகத்தில் விளையாடுவாயாக ! நீ வாழ்க ! என்று திருவாக்கு சுந்தரர் திருப்பதிகத்தைப் பாடிய அப்போதே கேட்குமாறு எழுந்தது.

274. கேட்க விரும்பிவன் றொண்டரென்றும்
கேடிலா தானை யிறைஞ்சி நின்றே
ஆட்கொள வந்த மறையவனே
ஆரூ ரமர்ந்த அருமணி யே
வாட்கயல் கொண்டகண் மங்கைபங்கா
மற்றுன் பெரிய கருணை யன்றே
நாட்கம லப்பதந் தந்ததின்று
நாயினே னைப்பொரு ளாக என்றார்.

தெளிவுரை : சுந்தரர் இறைவனின் திருவாக்கைக் கேட்டலும் எக்காலத்தும் அழியாத புற்றிடம் கொண்டவரை மிக்க விருப்பத்துடனே வணங்கி நின்று, நான் அன்று உலகத்துக்கு ஆளாவதைத் தடுத்து உனக்கு ஆளாகும்படி வந்த வேதியரே ! இன்று அதுபோன்றே என்னை ஆளாய்க் கொள்ளத் திருவாரூரில் வீற்றிருக்கும் அரிய மணி போன்றவரே ! வாளின் இயல்பும் கயல்மீனின் இயல்பும் கொண்ட கண்ணையுடைய உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவரே ! நாய் ஒத்த என்னையும் ஒரு பொருளாக மதித்து அன்று போலவே இன்றும் உன் புதிதாய் மலர்ந்த அடித்தாமரையான அருளைத் தந்தது உன் கருணையால் அன்றோ ! எனக் கூறி வணங்கினார்.

275. என்று பலமுறை யால்வணங்கி
எய்திய உள்ளக் களிப்பி னோடும்
வென்றி யடல்விடை போல்நடந்து
வீதி விடங்கப் பெருமான் முன்பு
சென்று தொழுது துதித்துவாழ்ந்து
திருமா ளிகைவலஞ் செய்து போந்தார்
அன்று முதலடி யார்களெல்லாம்
தம்பிரான் தோழ ரென்றே யறைந்தார்.

தெளிவுரை : எனப் பல முறை துதித்து வணங்கி, மிக்க மன மகிழ்ச்சியுடன் வெற்றியுடைய காளை நடப்பதைப் போல் திருமூலட்டானநாதரின் திருமுன்பிருந்து நடந்து போய் வீதிவிடங்கரான தியாகேசர் திருமுன்பு போய், வணங்கித் துதித்து அதில் வாழ்வடைந்தவராய்த் திருமாளிகையை வலமாக வந்து சுந்தரர் வெளியே வந்தார். அது முதற் கொண்டு அடியார்கள் அனைவரும் சுந்தரர்க்குத் தம்பிரான் தோழர் என்ற பெயரை இட்டு வழங்கினர்.

276. மைவளர் கண்ட ரருளினாலே
வண்டமிழ் நாவலர் தம்பெ ருமான்
சைவ விடங்கின் அணிபுனைந்து
சாந்தமும் மாலையுந் தாரு மாகி
மெய்வளர் கோலமெல் லாம்பொலிய
மிக்க விழுத்தவ வேந்த ரென்னத்
தெய்வ மணிப்புற்று ளாரைப் பாடித்
திளைத்து மகிழ்வொடுஞ் செல்லா நின்றார்.

தெளிவுரை : சுந்தரர், இறைவரின் திருவருளால் ஆதி சைவர்க்குரிய அழகிய கோலத்தை மேற்கொண்டு, சந்தனம், மணி மாலை, மலர்மாலை என்னும் இவற்றையும் பூண்டு, இங்ஙனம் மெய்வளர் கோலம் யாவும் விளங்க, மிகச் சிறந்த தவத்தவர் இவரே எனக் கூறும்படி தெய்வ மணிப் புற்றிடம் கொண்டவரை அந்நாள் தொடங்கிப் பாடித் துதித்து அதனால் உண்டான இன்பத்தில் திளைத்து வாழ்ந்து வரலானார்.

277. இதற்குமுன் எல்லை யில்லாத் திருநகர் இதனுள் வந்து
முதற்பெருங் கயிலை யாதி முதல்வர்தம் பங்கி னாட்குப்
பொதுக்கடிந் துரிமை செய்யும் பூங்குழற் சேடி மாரிற்
கதிர்த்தபூ ணேந்து கொங்கைக் கமலினி அவத ரித்தாள்.

தெளிவுரை : சுந்தரர் அந்தத் திருவாரூர்க்கு எழுந்தருளுவதற்கு முன்பு, எல்லையில்லாத சிறப்புடைய திருவாரூர் என்ற அந்நகரத்திலே, பெருமையுடைய கயிலை மலையில் வீற்றிருக்கும் ஆதிமுதல்வரான சிவபெருமானின் ஒரு பங்கையுடையவரான உமையம்மையாருக்குச் சிறப்பாக ஏவலைச் செய்யும் இரு தோழிப் பெண்களுள் ஒருவரான கமலினியார் வந்து அவதரித்தார்.

278. கதிர்மணி பிறந்த தென்ன உருத்திர கணிகை மாராம்
பதியிலார் குலத்தில் தோன்றிப் பரவையா ரென்னு நாமம்
விதியுளி விளக்கத் தாலே மேதகு சான்றோ ரான்ற
மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாத்தி.

தெளிவுரை : ஒளியுடைய மணி பிறந்ததைப் போல் உருத்திர கணிகைகள் என்று கூறப் பெறும் பதியிலார் குலத்தில் அவதரித்துப் பரவையார் என்ற பெயரைச் சாத்திரப்படி வந்த விளக்கத்தால் சான்றோர் பிறையணிந்த தூய இறைவனின் நாளான திருவாதிரை நாளில் மங்கல அணிகள் செய்து சாற்றுக் கொண்டு,

279. பரவினர் காப்புப் போற்றிப் பயில்பெருஞ் சுற்றந் திங்கள்
விரவிய பருவந் தோறும் விழாவணி யெடுப்ப மிக்கோர்
வரமலர் மங்கை யிங்கு வந்தன ளென்று சிந்தை
தரவரு மகிழ்ச்சி பொங்கத் தளர்நடைப் பருவஞ் சேர்ந்தார்.

தெளிவுரை : பொருந்திய பெருஞ்சுற்றத்தார் ஒன்று கூடி உரிய தெய்வங்களைக் குழவியைக் காக்கும்படி முதல் மாதத்தில் காப்புச் செய்து, அதன் பின்பு வந்த அந்தந்த மாதங்களில் கூடும் அவ்வப் பருவங்களில் எல்லாம் உரிய விழாக்களை அழகு பெறச் செய்ய, அறிவால் மிக்க ஓர் செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளே இங்கு வந்து தோன்றினாள் என மனம் மிக மகிழ, அவர் தளர் நடைப் பருவத்தை அடைந்தார்.

280. மானிளம் பிணையோ தெய்வ வளரிள முகையோ வாசத்
தேனிளம் பதமோ வேலைத் திரையிளம் பவள வல்லிக்
கானிளங் கொடியோ திங்கட் கதிரிளங் கொழுந்தோ காமன்
தானிளம் பருவங் கற்குந் தனியிளந் தனுவோ வென்ன.

தெளிவுரை : அங்ஙனம் தளர் நடைப் பருவத்தை அடைந்த பரவையார் இளமையுடைய பெண் மானோ ! வளர்ச்சியைப் பெறுவதற்கு உள்ள தெய்வப் பூவின் இளைய அரும்போ? மணம் கமழும் தேனின் முதிராத இளம் பதமோ? கடல் அலைகளில் உள்ள இளம் பவளக் கொடிகளில் விளைந்த அழகிய இளம் பவளக் கொடியோ? சந்திர ஒளியில் முதலில் முளைக்கும் இளக் கொழுந்தோ? மன்மதன் இளம் பருவத்தில் தன் போர்த் தொழிலைக் கற்கும் ஒப்பில்லாத இளைய வில்லோ? என்னுமாறு,

281. நாடுமின் பொற்பு வாய்ப்பு நாளுநாள் வளர்ந்து பொங்க
ஆடுமென் கழங்கும் பந்தும் அம்மனை ஊச லின்ன
பாடுமின் னிசையுந் தங்கள் பனிமலை வல்லி பாதங்
கூடுமன் புருகப் பாடுங் கொள்கையோர் குறிப்புத் தோன்ற.

தெளிவுரை : சுற்றத்தாரும் மற்றவரும் நாடி அறியும்படி இனிய அழகு பொருந்திய தன்மை நாளும் நாளும் மேலும் மேலும் வளர்ந்து பெருகும்படி, ஆடும் மென்மையான கழற்சிக் காய்களும் பந்தும் அம்மனையும் ஊசலும் என்ற இசை முதலிய விளையாட்டுகளில் அவற்றுடன் சேர்த்துப் பாடப்படுகின்ற இனிய பாடல்களைத் தங்கட்குச் சிறப்பாக, உரியதலைவியரான உமையம்மையாரின் திருவடிகளைக் கூடுகின்ற அன்பினால் உடலும் உயிரும் உருகுமாறு பாடும் கொள்கையின் குறிப்புக் கேட்பவருக்குத் தோன்றப் பாடினார்.

282. பிள்ளைமைப் பருவ மீதாம் பேதைமைப் பருவ நீங்கி
அள்ளுதற் கமைந்த பொற்பால் அநங்கன்மெய்த் தனங்க ளீட்டங்
கொள்ளமிக் குயர்வ போன்ற கொங்கைகோங் கரும்பை வீழ்ப்ப
உள்ளமெய்த் தன்மை முன்னை உண்மையுந் தோன்ற வுய்ப்பார்.

தெளிவுரை : குழந்தைப் பருவமான ஐந்தாண்டு வரை உள்ள பருவத்தின் பின் வருவதான பேதைப் பருவமும் கடந்து, அள்ளி எடுத்துக் கொள்கின்ற விருப்பத்தை யுண்டாக்கும் அழகுடன் மன்மதனின் மெய்யாகிய கொங்கைகளின் குவியலை ஏற்றுக் கொள்ளும் பொருட்டாய் மிகவும் உயர்ந்து வளர்வன போல் கொங்கைகள் கோங்கு அரும்புகளை வெல்லும் படியாய் வளரவும், மனத்தினது உண்மை இயல்பானது முன்னே தான் அம்மையாரின் தோழியாய் இருந்த உண்மையும் சில சமயம் குறிப்பாய்த் தோன்றவும் வாழ்வார் ஆனார்.

283. பாங்கியர் மருங்கு சூழப் படரொளி மறுகு சூழத்
தேங்கமழ் குழலின் வாசந் திசையெலாஞ் சென்று சூழ
ஓங்குபூங் கோயி லுள்ளார் ஒருவரை யன்பி னோடும்
பூங்கழல் வணங்க வென்றும் போதுவார் ஒருநாட் போந்தார்.

தெளிவுரை : ஒருநாள், தம் தோழியர் தம்மைச் சூழ்ந்து வரக் கூந்தலின் வாசனை எல்லாத் திசைகளிலும் போய் நிறைய, பூங்கோயிலுள் வீற்றிருக்கும் இறைவரை வணங்கும் பொருட்டுப் படரும் ஒளி மிக்க திருவீதியைச் சூழ்ந்து செல்பவரான அப்பரவையர் வழக்கம் போல் சென்றார்.

284. அணிசிலம் படிகள் பார்வென் றடிப்படுத் தனமென் றார்ப்ப
மணிகிளர் காஞ்சி யல்குல் வரியர வுலகை வென்ற
துணிவுகொண் டார்ப்ப மஞ்சு சுரிகுழற் கழிய விண்ணும்
பணியுமென் றினவண் டார்ப்பப் பரவையார் போதும் போதில்.

தெளிவுரை : அடிகளில் பூண்ட சிலம்புகள் இவ்வடிகள் மண்ணுலகத்தை வெற்றிகொண்டு அடிப்படுத்தின எனக் கூறுவது போல் ஒலிக்கவும், மணியுடன் விளங்கும் காஞ்சி அணி, பாம்பு உலவும் கீழ் உலகத்தை வெற்றி கொண்ட துணிவுடன் கிளர்ச்சி கொண்டு விளங்கவும், சுருண்ட கூந்தலுக்கு மேகம் தோற்றுவிட்டதால், விண்ணுலகமும் பணியும் என்று கூட்டமான வண்டுகள் ஒலிக்கவும், பரவையார் தெருவில் சென்றார். அப்படிச் செல்லும் போது,

285. புற்றிடம் விரும்பி னாரைப் போற்றினர் தொழுது செல்வார்
சுற்றிய பரிச னங்கள் சூழஆ ளுடைய நம்பி
நற்பெரும் பான்மை கூட்ட நகைபொதிந் திலங்கு செவ்வாய்
விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழை யவரைக் கண்டார்.

தெளிவுரை : புற்றைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்ட இறைவரைத் துதித்து வணங்கியபின் பரிவாரங்கள் தம்மைச் சுற்றிச் சூழ்ந்து வரப் போகின்ற சுந்தரர், பெரிய நல்ல ஊழ்வினை கூட்டி வைத்த காரணத்தால், மகிழ்ச்சிக் குறியான முறுவலுடன் விளங்கும் சிவந்த வாயையும் வில் போன்ற நெற்றியின் கீழ் வேல் போன்ற கண்களையும் உடைய ஒளிர்ந்து விளங்கும் அணிகளை அணிந்த பரவையாரைக் கண்டார்.

286. கற்பகத்தின் பூம்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்.

தெளிவுரை : சுந்தரர், இங்கு நான் காண்கின்ற இது கற்பக மரத்தின் பூங்கொம்புகளுடன் கூடிய கொம்போ ! காமன் தன் பெரு வாழ்வாகக் கொண்ட பொருளோ ! அழகு என்ற பொருள் செய்த புண்ணியத்தின் பயனாக விளைந்த புண்ணிய விளைவோ! மேகத்தை மேலே சுமந்து கொண்டும், வில், நீலோற் பல மலர், பவளம், தாமரை, நிலவு ஆகியவற்றை யெல்லாம் அழகு பொருந்த அங்கங்களாகக் கொண்டும் உள்ள ஒரு பூங்கொடியோ ! இங்குக் கூறப்பட்ட இவற்றின் இன்னது என்றோ அல்லது இவற்றுடன் அடங்காததால் வேறு ஒன்று என்றோ முடிவு செய்யக் கூடாத அற்புதப் பொருளோ ! அல்லது சிவபெருமானின் அருளோ ! இஃது என்னவென்று நான் அறியேன் ! என்று வியப்படைந்தார்.

287. ஓவியநான் முகனெழுத வொண்ணாமை யுள்ளத்தால்
மேவியதன் வருத்தமுற விதித்ததொரு மணிவிளக்கோ
மூவுலகின் பயனாகி முன்னின்ற தெனநினைந்து
நாவலர்கா வலர்நின்றார் நடுநின்றார் படைமதனார்.

தெளிவுரை : நான்முகன் இத்தகைய ஓர் ஓவியம் எழுத இயலாமையினால் பொருந்திய தனது வருத்தம் நிறைவு கொள்ளும்படி உள்ளத்தில் படைத்த அழகிய விளக்கமோ? மூவுலகங்களிலும் பெறும் பயனேஆய் என் முன் இங்கு நின்றது ! என்று நினைத்தவராய் வணங்கிச் செல்பவரான நாவலூரர் மேலே செல்வதை நிறுத்தி விட்டு நின்றார். இங்ஙனம் நின்ற அவருக்கும் அவரால் காணப்பெற்ற நங்கை பரவையாருக்கும் நடுவே காமன் நின்றார்.

288. தண்டரள மணித்தோடும்   தகைத்தோடும் கடைபிறழும்
கெண்டைநெடுங் கண்வியப்பக் கிளரொளிப்பூ ணுரவோனை
அண்டர்பிரான் திருவருளால்  அயலறியா மனம்விரும்பப்
பண்டைவிதி கடைகூட்டப் பரவையா ருங்கண்டார்.

தெளிவுரை : குளிர்ச்சியுடைய முத்தும் மணிகளும் பதித்த தோடுகளையும் தாண்டி ஓடும் இயல்புடைய கடை பிறழ்கின்ற கெண்டைமீன் போன்ற வடிவு கொண்ட கண்கள் வியப்படைய விளங்கும் ஒளியுடைய அணிகளை அணிந்த நாவலூரரை, சிவபெருமானது திருவருளால் அவனை அன்றி வேறொன்றையும் இதுவரை அறியாத, தம் மனம் விருப்பத்தையுடைய முன் கயிலாயத்தில் இறைவர் விதித்த கட்டளை இருவரையும் சேரும்படி கூட்டுவித்த காரணத்தால் பரவையம்மையாரும் அவரைப் பார்த்தார்.

289. கண்கொள்ளாக் கவின்பொழிந்த திருமேனி கதிர்விரிப்ப
விண்கொள்ளாப் பேரொளியா னெதிர்நோக்கு மெல்லியலுக்கு
எண்கொள்ளாக் காதலின்முன் பெய்தாத தொருவேட்கை
மண்கொள்ளா நாண்மடம்அச் சம்பயிர்ப்பை வலிந்தெழலும்.

தெளிவுரை : கண் பார்வைக்கு அடங்காத அழகு பொழியும் மேனியில் வீசும் கதிர்களின் விரிவு வானத்தினும் அடங்காது பெருகும் பெரிய ஒளி உருவம் கொண்ட நாவலூரரை அவர் கண்ட நோக்குடன் ஒன்றுபட எதிரே நோக்குகின்ற மென்மையான இயலை உடைய பரவை யாருக்கு மனத்தில் அடக்க முடியாத இதற்கு முன் இவ்வுலகத்தில் அனுபவித்திராத ஒரு புதிய விருப்பமானது, இந்த உலகத்தில் உள்ளவர் யாரும் இதுவரை காப்பாற்றிக் கொள்ளாத அளவில் தாம் கைக்கொண்டு ஒழுகிய நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு என்ற பெண்மைக் குணங்கள் நான்கினையும் அடக்கி மேலே (எழுந்தது). எழுந்தவுடன்,

290. முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ பெருகொளியால்
தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள்பெற் றுடையவனோ
என்னேயென் மனந்திரித்த இவன்யாரோ வெனநினைந்தார்.

தெளிவுரை : என் முன் தோன்றும் இவன் பேரொளிப் பிழம்பாய்த் தானாக வந்து தோன்றும் முருகப் பெருமானோ ! தனக்கு ஒப்பில்லாத மன்மதனோ ! வாடாத மாலை சூடிய விஞ்சையருள் ஒருவனோ ! மின்னல் போன்ற சிவந்த சடையையுடைய சிவபெருமானின் மெய்யருளைப் பெற்றவனோ ! என் உள்ளத்தைத் திரியச் செய்த இவன் யாரோ ! என்று பரவையார் நினைத்தார்.

291. அண்ணலவன் தன்மருங்கே அளவிறந்த காதலினால்
உண்ணிறையுங் குணநான்கும் ஒருபுடைசாய்ந் தனவெனினும்
வண்ணமலர்க் கருங்கூந்தல் மடக்கொடியை வலிதாக்கிக்
கண்ணுதலைத் தொழுமன்பே கைக்கொண்டு செலவுய்ப்ப.

தெளிவுரை : பெருமையுடைய சுந்தரரிடத்தில் அளவில்லாத காதலால் முன் தன் உள்ளத்தில் நிறைந்திருந்த நாணம் முதலிய பெண்மைக் குணங்கள் நான்கும் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து ஒதுங்கின போதும், அழகிய மலரின் மணம் பொருந்திய கருமையான கூந்தலையுடைய மடமையுடைய கொடியை ஒத்த பரவையாரை, வன்மையுடையவராக ஆக்குவித்து, நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானைச் சென்று வணங்க வேண்டும் என்ற இறையன்பே பற்றுக் கோடாய்ப் பற்றிக் கொண்டு போகும்படி வழி நடத்திக் கொண்டு போக,

292. பாங்கோடிச் சிலைவளைத்துப் படையனங்கன் விடுபாணம்
தாங்கோலி யெம்மருங்கும் தடைசெய்ய மடவரலும்
தேங்கோதை மலர்க்குழல்மேல் சிறைவண்டு கலந்தார்ப்பப்
பூங்கோயி லமர்ந்தபிரான் பொற்கோயில் போய்ப்புகுந்தாள்.

தெளிவுரை : சுற்றும் ஓடிச் சென்று வில்லை வளைத்துப் போர் செய்பவனான காமன் எய்கின்ற அம்புகள் பலவும் கூடித் தம்மைச் சுற்றிக் கொண்டு எப்பக்கமும் தடை செய்யவும், அத்தடைகளை அன்பு கைக்கொண்ட துணையால் கடந்து, பரவையாரும் கூந்தல் மேல் அணிந்த மலர் மாலைகளின் மேல் இறகையுடைய வண்டுகள் கூடிப் பாடிக் கொண்டிருக்கப் போய், பூங்கோயில் என்ற ஆலயத்தில் எழுந்தருளிய இறைவனின் கோயிலுக்குள் புகுந்தார்,

293. வன்றொண்ட ரதுகண்டுஎன் மனங்கொண்ட மயிலியலின்
இன்றொண்டைச் செங்கனிவாய் இளங்கொடிதான் யாரென்ன
அன்றங்கு முன்நின்றார் அவர்நங்கை பரவையார்
சென்றும்பர் தரத்தார்க்குஞ் சேர்வரியார் எனச்செப்ப.

தெளிவுரை : வன்றொண்டர் அதைப் பார்த்து, என் உள்ளத்தைத் தனக்கு இடமாய்க் கொண்ட மயில் போன்ற சாயலையும், இனிய கொவ்வைப் பழத்தைப் போன்ற வாயையும் உடைய இளங்கொடி போன்ற இம்மங்கை யார்? என்று வினவினார். அப்போது அவ்விடத்தில் அவர் முன் நின்ற அடியவர், அம்மங்கை பரவையார் என்ற பெயருடையவர். தேவத்தன்மை உடையவரும் போய் அடைவதற்கு அரியவர் எனக் (கூறினர்) கூற,

294. பேர்பரவை பெண்மையினில் பெரும்பரவை விரும்பல்குல்
ஆர்பரவை யணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை
சீர்பரவை யாயினாள் திருவுருவின் மென்சாயல்
ஏர்பரவை யிடைப்பட்ட என்னாசை யெழுபரவை.

தெளிவுரை : இவரது பெயரானது பரவை. இவரிடம் காணும் பெண்மைக் குணங்களைக் காணுமிடத்துப் பெருந்தேவர் அவை விரும்பும் திலோத்தமை முதலான மங்கையரும் துதிக்கத்தக்க தெய்வம் ஆவார். மேலே தங்கிய மூக்கின் அணியில் உள்ள முத்துக்களைவிட மேன்மையுற்று விளங்கும் அழகிய பல் வரிசை முல்லையரும்புகளாகும். அவர் திருமகளும் விரும்பும் அழகுடையார். கண்டார் விரும்பும் இனிய மென்சாயலின் அழகில் அகப்பட்ட என் விருப்பமானது ஏழுகடல் போன்றதாகும் !

295. என்றினைய பலவுநினைந் தெம்பெருமான் அருள்வகையான்
முன்றொடர்ந்து வருங்காதல் முறைமையினால் தொடக்குண்டு
நன்றெனையாட் கொண்டவர்பால் நண்ணுவனென் றுள்மகிழ்ந்து
சென்றுடைய நம்பியும்போய்த் தேவர்பிரான் கோயில்புக.

தெளிவுரை : மேல் சொல்லிய வண்ணம் பாராட்டி இவையொத்த பல எண்ணங்களையும் கொண்டவராய் எம் இறைவன் அருளிய வழியால் முன்னிருந்தே வரும் காதலான பழைய வீதியில் கட்டுப்பட்டவராய் நன்றாக என்னை ஆட்கொண்ட இறைவனிடத்தே சேர்வேன் என்று உள்ளத்துள் மகிழ்ந்து செல்பவராய் ஆளுடை நம்பி சென்று தேவ தேவனான இறைவனின் திருக்கோயிலில் (புகுந்தார்). புகுதலும்,

296. பரவையார் வலங்கொண்டு பணிந்தேத்தி முன்னரே
புரவலனார் கோயிலினின் றொருமருங்கு புறப்பட்டார்
விரவுபெருங் காதலினால் மெல்லியலார் தமைவேண்டி
அரவின்ஆ ரம்புனைந்தார்அடிபணிந்தார் ஆரூரர்.

தெளிவுரை : பொற்கோயிலுள் புகுந்த பரவையார் அதனை வலமாய் வந்து இறைவனை வணங்கித் தம் வழக்கப்படி வழிபாட்டை முடித்துக் கொண்டு, நம்பியாரூரர் கோயில் புகும் முன்பு இறைவனின் கோயிலிலிருந்து வேறு ஒரு பக்கமாக வெளியே சென்றார். தம்மிடம் வந்து பொருந்திய வேட்கையால் மென்மையான இயல் கொண்ட பரவையாரைத் தமக்குத் தருமாறு நாவலூரர், பாம்புகளை அணியாய்க் கொண்ட இறைவரின் அடிகளை வணங்கினார்.

297. அவ்வாறு பணிந்தேத்தி யணியாரூர் மணிப்புற்றின்
மைவாழுந் திருமிடற்று வானவர்பால் நின்றும்போந்து
எவ்வாறு சென்றாள்என்  இன்னுயிராம் அன்னமெனச்
செவ்வாய்வெண் நகைக்கொடியைத் தேடுவா ராயினார்.

தெளிவுரை : மெல்லியலான பரவையாரைப் பெற, அவ்வகையிலே வணங்கித் துதித்த ஆரூரர், அழகிய திருவாரூரில் புற்றில் இடங்கொண்ட திருநீல கண்டப் பெருமானிடத்திலிருந்து நீங்கிப் போய் என் உயிர் போன்ற அன்னப் பரவை எங்கே சென்றாள்? என்று அந்தச் சிவந்த வாயையும் வெண்மையான நகையையும் உடைய கொடி நிகர்த்த பரவை நங்கையைத் தேட முற்பட்டார்.

298. பாச மாம்வினைப் பற்றறுப் பான்மிகும்
ஆசை மேலுமொ ராசை யளிப்பதோர்
தேசின் மன்னியென் சிந்தை மயக்கிய
ஈச னாரரு ளெந்நெறிச் சென்றதே.

தெளிவுரை : பாசமான வினைக்கட்டை அறுப்பதற்காக என்னிடத்து மிக்கு எழும் இறைவன் பணியிற் கொண்ட ஆசையையும் கீறிடச் செய்து, அதற்கு மேலும் ஓர் ஆசையை தருகின்ற ஒப்பில்லாத ஒளியுடன் பொருந்தி மயங்காத என் உள்ளத்தையும் மயங்கிடச் செய்த இறைவனது திருவருள் (உருவமான மங்கை) எவ்வழியே சென்றது?

299. உம்பர் நாயகர் தங்கழல் அல்லது
நம்பு மாறறி யேனை நடுக்குற
வம்பு மால்செய்து வல்லியின் ஒல்கியின்று
எம்பி ரானரு ளெந்நெறிச் சென்றதே.

தெளிவுரை : தேவர்களின் இறைவனான சிவபெருமானின் திருவடிகளையே அல்லாமல் வேறொன்றையும் நம்பும் நெறியறியாத என்னை, நடுக்கம் அடையுமாறு வலிந்து மயக்கத்தைத் தந்து கொடி போல் அசைந்து இன்று என் முன் வந்த எம் பெருமானின் அருள் மயமான பரவை எவ்வழியில் சென்றது?

300. பந்தம் வீடு தரும்பர மன்கழல்
சிந்தை யார்வுற உன்னுமென் சிந்தையை
வந்து மால்செய்து மானென வேவிழித்து
எந்தை யார்அருள் எந்நெறிச் சென்றதே.

தெளிவுரை : பந்தத்தையும் வீட்டையும் தரும் சிவபெருமானின் அடிகளை என்னுள்ளே பொருந்தி நிறையும்படி எண்ணும் என் சித்தத்திற்குள்ளே, தானே வந்து புகுந்து மயக்கத்தைச் செய்து மான்போல் நோக்கிய எம்இறைவனின் அருள்வடிவான பரவை எங்கே சென்றது?

301. என்று சாலவு மாற்றல ரென்னுயிர்
நின்ற தெங்கென நித்திலப் பூண்முலை
மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்
சென்று தேவா சிரியனைச் சேர்ந்தபின்.

தெளிவுரை : என்று இங்ஙனம் பலவும் கூறி, மிகவும் தரியாராய் என் உயிர் (பரவை) எங்குச் சென்றது? என்ற முத்துகள் பதித்த அணிகள் அணிந்த கொங்கையையும் மணம் பொருந்திய அழகிய கூந்தலையும் உடைய வஞ்சிக்கொடி போன்ற பரவையாரைத் தேடுவதற்காகச் சென்று தேவாசிரிய மண்டபத்தை அடைந்தார், சுந்தரர்.

302. காவி நேர்வருங் கண்ணியை நண்ணுவான்
யாவ ரோடு முரையியம் பாதிருந்து
ஆவி நல்குவர் ஆரூரை யாண்டவர்
பூவின் மங்கையைத் தந்தெனும் போழ்தினில்.

தெளிவுரை : கருங்குவளை மலரே நேர் எதிராய் வருகின்றதோ எனக் கூறத் தக்க கண்களையுடைய பரவையாரைப் பெறுபவரான சுந்தரர், ஒருவரிடமும் ஒரு பேச்சும் பேசாது அங்கு வீற்றிருந்து ஆரூரைத் தமக்குத் தலைநகராய் வைத்து ஆட்சி செய்பவரான இறைவர் அழகுடைய இனிய பரவையை எனக்கு அளித்து அதன் மூலம் என் உயிரையும் எனக்கு அளிப்பார் எனக் கூறிக் கொண்டிருந்தார். அப்போது,

303. நாட்டு நல்லிசை நாவலூ ரன்சிந்தை
வேட்ட மின்னிடை இன்னமு தத்தினைக்
காட்டு வன்கட லைக்கடைந் தென்பபோற்
பூட்டு மேழ்பரித் தேரோன் கடல்புக.

தெளிவுரை : உலகத்தில் சிறந்த புகழை நிலை நாட்டும் நாவலூரரான நம் நம்பியாரூரரின் உள்ளம் விரும்பிய மின்னல் போன்ற இடையையுடைய பரவையாரான இனிய அமுதத்தைக் கடலைக் கடந்து போய்க் காட்டுவேன் என்று போவதைப் போன்று வெவ்வேறான ஏழு குதிரைகள் பூட்டிய தேரையுடைய கதிரவன் கடலில் புகுந்தான். அப்போது,

304. எய்து மென்பெடை யோடிரை தேர்ந்துண்டு
பொய்கை யிற்பகல் போக்கிய புள்ளினம்
வைகு சேக்கைகண் மேற்செல வந்தது
பையுள் மாலை தமியோர் பனிப்புற.

தெளிவுரை : பிரியாமல் தம்முடன் உள்ள மென்மையான பெட்டைகளுடன் கூடிய பல இடத்தும் திரிந்து இரையைத் தேடி உண்டு பொய்கையிலே பகற்காலத்தைப் போக்கிய பறவைக் கூட்டம் தாம் ஒடுங்கும் கூடுகளைச் சென்றடையவும், அப்பறவைகளைப் போலன்றித் தனித்துப் பிரிந்தவர் அஞ்சி நடுங்கவும், பிரிந்தவர்க்குத் துன்பம் செய்யும் தன்மையுடைய மாலைக் காலம் வந்தது.

305. பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்அரன்
அஞ்செ ழுத்து முணரா அறிவிலோர்
நெஞ்சு மென்ன இருண்டது நீண்டவான்.

தெளிவுரை : பஞ்சினை விட மென்மையான பாதங்களையுடைய விலைமாதர்களின் உள்ளமும், வஞ்சம் செய்யும் மாக்களின் வலிய வினையும், சிவபெருமானின் ஐந்தெழுத்தையும் எண்ணாத அறியாமை யுடையவரின் மனமும் போல் நீண்ட வானம் இருள் அடைந்தது.

306. மறுவில் சிந்தைவன் றொண்டர் வருந்தினால்
இறும ருங்குலார்க் கியார்பிழைப் பாரென்று
நறும லர்க்கங்குல் நங்கைமுன் கொண்டபுன்
முறுவ லென்ன முகிழ்த்தது வெண்ணிலா.

தெளிவுரை : குற்றம் இல்லாத சிந்தையுடைய வன்றொண்டரும் இவ்வாறு வருத்தம் அடைவாரானால் ஒடிவது போன்று துவளும் இடையுடைய மங்கையர்க்குத் தப்பிப் பிழைப்பவர் யார்? என்ற கருத்துடன், மணமுடைய பூக்களை அணிந்த இரவு என்ற பெண் முன்னே கொண்டதான புன்சிரிப்புத் தானோ இது என்று காணும்படி வெண்மையான பிறைச் சந்திரன் தோன்றி ஒளி வீசியது.

307. அரந்தை செய்வார்க் கழுங்கித்தம் ஆருயிர்
வரன்கை தீண்ட மலர்குல மாதர்போல்
பரந்த வெம்பகற் கொல்கிப் பனிமதிக்
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம்.

தெளிவுரை : துன்பம் செய்யும் புல்லர்க்கு வருந்தித், தம் உயிர்க் காதலர் தம்மைத் தொட்டபோது மலர்ச்சி அடையும் நலம் கொண்ட பெண்களைப்போல், எங்கும் பரவி வெம்மை செய்யும் கதிரவன் கதிர்க்கைகள் படும்போது மலராமல் வாடிக் குவிந்து, சந்திரனின் குளிர்ந்த கைகள் படும்போது ஆம்பல் மலர்கள் மலர்ந்தன.

308. தோற்று மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே
சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோய்
ஆற்ற அண்டமெ லாம்பரந் தண்ணல்வெண்
நீற்றின் பேரொளி போன்றது நீள்நிலா.

தெளிவுரை : இவ்வுலகில் பிறக்கும்படி இறைவன் காட்டும் உயிர்களுக்கெல்லாம் தூய்மையும் பலராலும் எடுத்துக் கூறப்படும் இன்பத்தையும் குளிர்ச்சியையும் தந்து செல்வதே அல்லாது பிற எல்லா அண்டங்களிலும் போய்ப் பரந்து நிலவுகின்ற பெருமையுடைய இறைவனின் திருநீற்றின் வெண்மையான ஒளிபோன்று, நீண்ட ஒளி விடும் சந்திரன் விளங்கியது.

309. வாவி புள்ளொலி மாறிய மாலையில்
நாவ லூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர்பெருங் காதலும்
ஆவி சூழ்ந்த தனிமையு மாயினார் .

தெளிவுரை : நீர் நிலைகளிலே பகல் பொழுதைப் போக்கிய பறவைக் கூட்டம் மாலையில் தம் இருப்பிடங்களை அடைந்தன. ஆதலால், அப்பறவையினத்தின் ஒளி மாறிய மாலைக் காலத்தில், நம்பி ஆரூரரும், பரவை என்ற நங்கையார் அளித்த படரும் தன்மையுடைய பெருங் காதலும், தன் உயிரைச் சூழ்ந்து பற்றிய தனிமையும் உடையவரானார்.

310. தந்தி ருக்கண் எரிதழ லிற்பட்டு
வெந்த காமன் வெளியே உருச்செய்து
வந்தென் முன்னின்று வாளி தொடுப்பதே
எந்தை யார்அருள் இவ்வண்ண மோவென்பார்.

தெளிவுரை : எம் இறைவரின் நெற்றித் திருக்கண்ணின் தீப்பட்டு இறந்து போன காமன் வெளிப்பட உருக்கொண்டு இங்கு என் முன் வந்து நின்று அம்பு எய்வதா? எம் இறைவனின் திருவருளும் இத்தகைய இயல்பு கொண்டதோ? என்று உட்கொண்டு சொல்லி மேலும் கூறத் தொடங்கினார்.

311. ஆர்த்தி கண்டும்என் மேல்நின்று அழற்கதிர்
தூர்ப்ப தேயெனைத் தொண்டுகொண் டாண்டவர்
நீர்த்த ரங்கநெடுங் கங்கை நீள்முடிச்
சாத்தும் வெண்மதி போன்றிலை தண்மதி.

தெளிவுரை : துன்பத்தைப் பார்த்த பின் மேலும் மேலும் எப்போதும் போல் உனது போக்கின்படியே செல்லாது நின்று, உன் இயல்பான குளிர்ந்த கதிரல்லாது இயல்புக்கு மாறான வெம்மையான கதிர்களை நீ வீசுவதா? என்னைத் தடுத்தாட் கொண்ட இறைவன் அலைகளையுடைய நெடிய கங்கை சூடிய நீண்ட முடியில் அருளால் எடுத்து அணிந்து கொண்ட வெண்மையான சந்திரனைப் போல் நீ இல்லையே ! ஏ, சந்திரனே ! என்று சந்திரனை நோக்கிக் கூறினார் சுந்தரர்.

312. அடுத்து மேன்மேல் அலைத்தெழு மாழியே
தடுத்து முன்னெனை யாண்டவர் தாமுணக்
கடுத்த நஞ்சுண் தரங்கக் கரங்களால்
எடுத்து நீட்டுநீ யென்னைஇன் றென்செயாய்.

தெளிவுரை : தொடர்ந்து மேன்மேலும் எழுகின்ற அலைகளை வீசி எழுகின்ற கடலே ! மற்றத் தேவர்களை எல்லாம் துன்புறுத்திய நஞ்சை, என்னை முன்னம் தடுத்தாட் கொண்ட இறைவனே உண்ணுமாறு உன் அலைகளான கைகளால் எடுத்து நீட்டித் தந்த நீ இன்றைக்கு என்னை என்னதான் செய்யமாட்டாய்? என்று சுந்தரர் கடலை நோக்கிச் சொன்னார்.

313. பிறந்த தெங்கள் பிரான்மல யத்திடைச்
சிறந்த ணைந்தது தெய்வநீர் நாட்டினில்
புறம்ப ணைத்தடம் பொங்கழல் வீசிட
மறம்ப யின்றதெங் கோதமிழ் மாருதம்.

தெளிவுரை : இனிய தென்றல் காற்றே ! நீ தோன்றியது எங்கள் பெருமானான இறைவனது பொதிய மலையிலே ! அங்ஙனம் தோன்றி வந்து சேர்ந்த வழியாவது தெய்வத் தன்மை கொண்ட சோழ நாட்டு நீர் நிலைகளின் வழியாகும். அங்ஙனமாகவும் தீக்காற்று வீசுமாறு நீ வன்மை கொண்டது எங்கோ? என்று தென்றல் காற்றை நோக்கிச் சுந்தரர் உரைத்தார்.

314. இன்ன தன்மைய பின்னும் இயம்புவான்
மன்னு காதல னாகிய வள்ளல்பால்
தன்ன ரும்பெறல் நெஞ்சு தயங்கப்போம்
அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம்.

தெளிவுரை : மேலே கூறப்பட்டவையே அல்லாமல் இவை போன்ற தன்மை கொண்ட சொற்களை மேலும் மேலும் சொல்வதற்குப் பொருந்திய காதலையுடைய நம்பி ஆரூரரிடத்தே தன் பெறுவதற்குரிய உள்ளம் பின் நின்று தயங்கி வர முன் சென்றவரான அன்னம் போன்ற பரவையாரின் செயலின் திறங்களை இனிச் சொல்வோம்.

315. கனங்கொண்ட மணிகண்டர் கழல்வணங்கிக்
கணவனைமுன் பெறுவாள் போல
இனங்கொண்ட சேடியர்கள் புடைசூழ
எய்து பெருங் காதலோடும்
தனங்கொண்டு தளர்மருங்குற் பரவையும்வன்
றொண்டர்பால் தனித்துச் சென்ற
மனங்கொண்டு வரும்பெரிய மயல்கொண்டு
தன்மணிமா ளிகையைச் சார்ந்தாள்.

தெளிவுரை : மேகத்தின் கரிய நிறம் கொண்ட அழகிய நீல நிறம் கொண்ட கண்டத்தர் அடிகளை வணங்கி அவ் வணக்கத்தின் பயனாய்ப் பெற்ற அருள் மூலம், கணவனை மேலே பெறுபவள் போல், தம்முடன் ஒத்துவாழும் தன்மையுடைய தோழியர் தம்மைச் சூழ்ந்து வரவும், தம்மிடம் புதிதாக வந்து சேர்ந்த காதலுடன் கொங்கைச் சுமையைச் சுமந்து தளர்ந்த இடையையுடைய பரவையாரும் வன்றொண்டரான நாவலூரரிடத்தே தம்மையும் தோழியரையும் விட்டுத் தனியாய்ப் போய்த் திரும்பும் போது, தன் உள்ளமானது சேர்த்துக் கொண்ட பெரிய மயக்கத்தையும் மேற்கொண்டவராய்த் தம் அழகிய மாளிகையைச் சேர்ந்தார்.

316. சீறடிமேல் நூபுரங்கள் அறிந்தனபோல் சிறிதளவே யொலிப்ப முன்னர்
வேறொருவ ருடன் பேசாள் மெல்லவடி யொதுங்கிமா ளிகையின் மேலால்
ஏறிமர கதத்தூணத் திலங்குமணி வேதிகையில் நலங்கொள் பொற்கால்
மாறின்மலர்ச் சேக்கைமிசை மணிநிலா முன்றின்மருங் கிருந்தாள் வந்து.

தெளிவுரை : தம் மாளிகையை அடைந்த பரவையார் தம் சிறிய அடிகளில் அணிந்த சிலம்புகள் அவர் உள்ளத்தில் உள்ளவற்றை அறிந்து கொண்டாற் போன்று ஒலிக்க, தம் முன்னர் நிற்கும் வேறு எவருடனும் பேசாதவராய், மெல்ல அடிமீது அடிவைத்துப் போய் மாளிகையின் மேல் நிலையில் மரகதத்தால் அமைந்த தூண்களுடனே விளங்கிய அழகிய திண்ணை மீது ஒப்பில்லாத பூம்படுக்கையின் மேல் அழகிய நிலா முற்றத்தில் அமர்ந்திருந்தார்.

317. அவ்வளவில் அருகிருந்த சேடிதனை முகநோக்கி ஆரூர் ஆண்ட
மைவிரவு கண்டரைநாம் வணங்கப்போம் மறுகெதிர்வந் தவரா ரென்ன
இவ்வுலகி லந்தணரா யிருவர்தே டொருவர்தா மெதிர்நின் றாண்ட
சைவமுதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி யென்றாள்.

தெளிவுரை : அச்சமயத்தில் தம் அருகில் இருந்த தோழியின் முகம் நோக்கி, திருவாரூரை ஆள்கின்ற நீலகண்டரான தியாகராசப் பெருமானை நாம் வணங்கச் சென்ற போது அங்கு நம் எதிரில் வந்தவர் யார்? எனப் பரவையார் வினவினர். அதற்குத் தோழியானவள், அவர் தாம், நான்முகன் திருமால் முதலான தேவர்களுக்கும் காண்பதற்கரிய ஒருவர், இவ்வுலகத்தில் அந்தணராய் உருக்கொண்டு வந்து, மாறுபட்டவர் போல் தம்மைப் புலப்படுத்தி, வழக்காடி ஆட்கொள்ளப்பட்ட சைவ முதல் தொண்டராகவும் தம்பிரான் தோழராகவும் விளங்கும் ஆளுடைய நம்பியாவார் என்று உரைத்தாள்.

318. என்றவுரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ வென்னா முன்னம்
வன்றொண்டர் பால்வைத்த மனக்காதல் அளவின்றி வளர்ந்து பொங்க
நின்றநிறை நாண்முதலாங் குணங்களுடன் நீங்கவுயி ரொன்றுந் தாங்கி
மின்றயங்கு நுண்ணிடையாள் வெவ்வுயிர்த்து மெல்லணைமேல் வீழ்ந்த போது.

தெளிவுரை : என்று தோழியுரைத்த சொற்களைக் கேட்டதும் பரவையார், எம்பிரானுடைய தோழரோ ! என்று சொல்லி, அச்சொற்கள் வாயினின்று வெளிப்படுவதற்கு முன்பு, வன்றொண்டரிடம் எழுந்த காதல் உணர்வு அளவு கடந்து மேலே எழுந்ததால், முன்பு தம்மிடம் நிலைபெற்ற நிறையும் நாணம் முதலிய குணங்களும் ஒரு சேர நீங்கிட, உயிர் ஒன்றை மட்டும் ஆற்றாமல் தாங்கியபடி, மின் போல் துவள்கின்ற நுட்பமான இடையையுடைய அவர் பெருமூச் செறிந்து மென்மையான பூம்படுக்கையில் விழுந்தார். அச்சமயத்தில்,

319. ஆரநறுஞ் சேறாட்டி அரும்பனிநீர் நறுந்திவலை யருகு வீசி
ஈரவிளந் தளிர்க்குளிரி படுத்துமட வார்செய்த விவையு மெல்லாம்
பேரழலில் நெய்சொரிந்தால் ஒத்தனமற் றதன்மீது சமிதை யென்ன
மாரனுந்தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி மலர்வாளி சொரிந்தான் வந்து.

தெளிவுரை : மணம் கமழும் கலவைச் சந்தனக் குழம்பைப் பூசியும் அரிய மணமுடைய பனிநீரை மழை போல் சிறு துளிகளாய்ப் பக்கங்களில் எல்லாம் தெளித்தும், குளிர்ந்த தளிர்களை இட்டும் இங்ஙனம் தோழியர் செய்தனர். இவையும் இவை போன்ற பிறவும் முன்பே நெருப்பாய் மூண்ட அதன் மீது வார்க்கும் நெய் போல் ஆயின. அதன் மேலும் அவ்வழலைப் பின்னும் வளர்க்க உணவைத் தருவதைப் போல் மன்மதனும் வந்து தன் ஒப்பில்லாத வில் வலிமையைக் காட்டி மலர் அம்புகளை மென்மேலும் எய்தான்.

320. மலரமளித் துயிலாற்றாள் வருந்தென்றல் மருங்காற்றாள் மங்குல் வானில்
நிலவுமிழுந் தழலாற்றாள் நிறையாற்றும் பொறையாற்றாள் நீர்மை யோடுங்
கலவமயி லெனவெழுந்து கருங்குழலின் பரமாற்றாக் கைய ளாகி
இலவவிதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்தாற்றா மையின்வறிதே யின்ன சொன்னாள்.

தெளிவுரை : மலர்ப் படுக்கையில் விழுந்த பரவையார் உறக்கம் கொள்ளாதவராய் நிலா முற்றத்தில் வீசும் தென்றற் காற்றுத் தன்மீது பட அதையும் பொறாதவர் ஆனார். மேகம் தவழும் வானத்தினின்று வீசும் நிலாவின் கதிர்கள் நெருப்பை உமிழ்வதால் அதனையும் ஆற்றாதவர் ஆனார். தமக்குரிய பெண்மைக் குணமான நிறையைக் கொண்டு செலுத்தவல்ல பொறை என்ற சத்தியைத் தாங்க இயலாதவர் ஆனார். மலரணையில் கிடந்த அவர் சிறிய தோகை மயில் போல எழுந்து தம் கரிய கூந்தலின் பாரத்தையும் தாங்க முடியாத நிலையுடையவராய் இலவ மலர் போன்ற சிவந்த வாய் நெகிழ்ந்து பொறுக்க இயலாத வருத்தத்தால் தமக்குத் தாமே பின் வரும் இவற்றைப் பேசலானார்.

321. கந்தங் கமழ்மென் குழலீர் இதுவென் கலைவாண் மதியங் கனல்வா னெனையிச்
சந்தின் தழலைப் பனிநீ ரளவித் தடவுங் கொடியீர் தவிரீர் தவிரீர்
வந்திங் குலவுந் நிலவும் விரையார் மலயா னிலமும் எரியாய் வருமால்
அந்தண் புனலும் அரவும் விரவுஞ் சடையா னருள்பெற் றுடையார் அருளார்.

தெளிவுரை : மணம் கமழும் மென்மையான கூந்தலையுடைய பெண்களே ! இது என்ன? அமிர்தக் கலைகளையுடைய சந்திரனோ என்னைச் சுடலானான்; இந்தச் சந்தனக் குழம்பைப் பனிநீருடன் தெளித்து என் மீது பூசுகின்ற கொடி போன்றவரே ! இச்செயலைக் கைவிடுங்கள் ! கைவிடுங்கள் ! இங்கு வந்து உலாவி நிற்கும் தென்றற் காற்றோ தீயுருவாய் வீசுகின்றது. அழகிய குளிர்ந்த நீரையுடைய கங்கையாறும் பாம்பும் அணிந்த சடையுடைய சிவபெருமானின் அருளைப் பெற்று என்னை உடையாரான நாவலூரரோ எனக்கு அருள் செய்யவில்லை !

322. புலரும் படியன் றிரவென் னளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா
உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெருவாழ் வுரையீர்
பலரும் புரியுந் துயர்தா னிதுவோ படைமன் மதனார் புடைநின் றகலார்
அலரும் நிலவு மலரு முடியார் அருள்பெற் றுடையா ரவரோ வறியார்.

தெளிவுரை : என்னைப் பொறுத்த அளவில் இந்த இரவு விடிவதாய் இல்லை. தாங்கிக் கொள்ளும் ஆற்றலும் காத்துக் கொள்ளும் ஆற்றலும் சிறிதும் தங்கா ஆயின. என் கொங்கைகளும் உள்ளமும் உலர்ந்து போகின்றன. இத்தனைப் பெருவாழ்வுகளும் (துன்பமும்) தீயவளான என் ஒருத்தி மட்டிலா இயல வேண்டும்? கூறுங்கள்; பலரும் கூடிச் செய்யும் தொழில் இவ்வாறு துன்பம் செய்வதுதானா? (ஒருவரைப் போல் அனைவரும் துன்பத்தைச் செய்வதா ?) மன்மதன் என் பக்கத்தில் நின்று படை தொடுப்பதைக் கைவிடான் ! கொன்றையும் சந்திரனும் மலர்வதற்கு இடமான திருமுடியுடையாரது திருவருள் பெற்று என்னை உடைய நாவலூரரோ நான் அடையும் துன்பத்தை அறிந்து கொள்ளவில்லை ! என் செய்வேன் !

323. தேருங் கொடியு மிடையு மறுகில்  திருவா ரூரீர் நீரே யல்லால்
ஆரென் துயர மறிவா ரடிகேள் அடியே னயரும் படியோ விதுதான்
நீரும் பிறையும் பொறிவா ளரவின் நிரையுந் நிரைவெண் டலையின் புடையே
ஊருஞ் சடையீர் விடைமேல் வருவீர் உமதன் பிலர்போல் யானோ வுறுவேன்.

தெளிவுரை : தேரும் கொடிகளும் நெருங்கிய வீதிகளையுடைய திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவரே ! நீவிரே அல்லாமல் என் துன்பத்தை அறிய வல்லவர் யார்? அடிகளே ! அடியேன் வருந்தும் அளவும் இவ்வளவுதான் ! கங்கையாறும் சந்திரனும் புள்ளிகளையுடைய கொடிய பாம்புகளும் வரிசையான வெண்மையான தலையின் பக்கங்களில் ஊர்வதற்கு இடமான சடையையுடையவரே ! காளை மீது எழுந்தருள்பவரே ! உம்மிடம் அன்பு கொள்ளாதவர் போல் நான் இத்துன்பத்தை அடையலாமா?

324. என்றின் னனவே பலவும் புகலும்
இருளா ரளகச் சுருளோ தியையும்
வன்றொண் டரையும் படிமேல் வரமுன்பு
அருள்வா னருளும் வகையார் நினைவார்
சென்றும் பர்களும் பணியுஞ் செல்வத்
திருவா ரூர்வாழ் பெருமா னடிகள்
அன்றங் கவர்மன் றலைநீர் செயுமென்று
அடியா ரறியும் படியா லருளி.

தெளிவுரை : என்று இவ்வாறு பலவற்றையும் சொல்கின்ற இருண்ட மேகம் போன்ற கரிய சுருண்ட கூந்தலையுடைய பரவையாரையும் நம்பியாரூரரையும் இவ்வுலகத்தில் பிறக்குமாறு அருள் செய்த சிவபெருமான் இப்போது அவர்களுக்கு அருள் செய்யும் வகையை யாரே அறிவார்? தேவரும் வந்து வணங்கும் செல்வம் நிறைந்த திருவாரூரிலே வாழ்கின்ற தியாகராயப் பெருமான், இன்றைய தினமே திருவாரூரில் அந்த இருவருக்கும் நீங்கள் திருமணத்தைச் செய்யுங்கள் என்று திருவாரூரின் அடியார்கள் அறியுமாறு கனவில் தெரிவித்தருளி,

325. மன்னும் புகழ்நா வலர்கோன் மகிழ
மங்கை பரவை தன்னைத் தந்தோம்
இன்னவ் வகைநம் மடியா ரறியும்
படியே யுரைசெய் தனமென் றருளிப்
பொன்னின் புரிபுன் சடையன் விடையன்
பொருமா கரியி னுரிவை புனைவான்
அன்னந் நடையாள் பரவைக் கணியது
ஆரூ ரன்பால் மணமென் றருள.

தெளிவுரை : நிலை பெற்ற புகழ் உடைய நாவலூரர் மகிழுமாறு, மங்கை பரவையை உனக்குத் தலைவியாய் அளித்தோம். இங்ஙனம் நாம் தந்த செயலைத் திருவாரூரில் வாழ்கின்ற அடியார்கள் அறியுமாறு அருள் செய்துள்ளோம் என்று கனவில் கூறியருளி, பின்பு, பொன்னைப் புரி செய்தது போன்ற சடையையும் காளையையும் யானைத் தோல் போர்வையும் உடைய தியாகராசர் பரவையாரின் கனவிலும் எழுந்தருளி, நம்பியாரூரனுக்கும் உனக்கும் விரைவில் மணம் நிகழும் ! என்று அருள் செய்தார்.

326. காமத் துயரில் கவல்வார் நெஞ்சிற்
கரையில் லிருளுங் கங்குற் கழிபோம்
யாமத் திருளும் புலரக் கதிரோன்
எழுகா லையில்வந் தடியார் கூடிச்
சேமத் துணையா மவர்பே ரருளைத்
தொழுதே திருநா வலர்கோன் மகிழத்
தாமக் குழலாள் பரவை வதுவை
தகுநீர் மையினால் நிகழச் செய்தார்.

தெளிவுரை : காமத் துன்பத்தால் வருந்திய நம்பியாரூரர் பரவையார் என்ற இருவருடைய உள்ளத்தில் நிறைந்து முடிவின்றியிருந்த ஆற்றாமை என்ற இருளும், அந்த இரவு மெல்லக் கழிந்து செல்லும் யாமங்களான இருளும் நீங்க, கதிரவன் தோன்றும் காலமான விடியற்காலையில் கனவில் உணர்த்தியருளப் பெற்ற திருவாரூர் அடியார்கள் அனைவரும் கூடித் துணையான தம் பெருமானின் பேரருளைத் தொழுது வாழ்த்தி, சுந்தரர் மகிழுமாறு மாலை சூடிய கூந்தலையுடைய பரவையாரின் திருமணத்தைத் தக்க சிறப்புடன் நிகழ்த்தினர்.

327. தென்னாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குற் பரவையெனு மெல்லியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்.

தெளிவுரை : அழகிய திருநாவலூரர், சிவபெருமானின் அருளால் மின்னல் போன்ற கொடியொத்த இடையையுடைய பரவையார் என்னும் மெல்லியலாரின் பொன்னணி பூண்ட இரண்டு கொங்கைகளான மலைகளின் நெருங்கிய சிகரங்களையே அரணாகக் கொண்டு பல நாளும் பழகும் யோகத்தை அதற்குரிய வழி வழி அறத்திலே விரும்பிப் பயிலலானார்.

328. தன்னையா ளுடையபிரான் சரணார விந்தமலர்
சென்னியிலுஞ் சிந்தையிலும் மலர்வித்துத் திருப்பதிகம்
பன்னுதமிழ்த் தொடைமாலை பலசாத்திப் பரவையெனும்
மின்னிடையா ளுடன்கூடி விளையாடிச் செல்கின்றார்.

தெளிவுரை : நாவலூரர் தம்மை ஆளாக உடைய சிவபெருமானின் திருவடித் தாமரைகளை அணியாக மேல் சூட்டியும், உள்ளத்தில் நினைத்தும், திருப்பதிகமான தமிழ்ச் சொல் மாலைகள் பலவற்றை அருளியும் பரவை என்ற தேவியாருடன் கூடி விளையாடி வரலாயினார்.

329. மாதுடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலைப்
போதலர் வாவி மாடு  செய்குன்றின் புடையோர் தெற்றிச்
சீதளத் தரளப் பந்தர்ச் செழுந்தவி சிழிந்து தங்கள்
நாதர்பூங் கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி.

தெளிவுரை : நாவலூரர் பரவையாருடன் சேர்ந்திருந்து மாளிகைகயின் பக்கத்திலே, சோலையில், நீர் மலர்கள் மலர்ந்துள்ள நீர் நிலைகளின் சார்பில், செய்குன்றின் பக்கத்தில், திண்ணையில், விளையாடி வரலானார். ஒரு நாள் அவர் குளிர்ந்த முத்து விதானத்தின் கீழ் அமைந்த அழகிய ஆசனத்திலிருந்து இறங்கிச் சென்று, தம் இறைவர் எழுந்தருளியுள்ள பூங்கோயிலை அடைந்து கும்பிட வேண்டும் என்ற விருப்புடன்,

330. அந்தரத் தமரர் போற்றும் அணிகிள ராடை சாத்திச்
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச்
சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர்மணிக் கலன்கள் சாத்தி
இந்திரத் திருவின் மேலாம் எழில்பெற விளங்கித் தோன்ற.

தெளிவுரை : வானவரும் போற்றும் அழகிய ஆடை அணிந்து, குங்குமப் பூ கலந்த சந்தனக் குழம்பை அணிந்து, அழகிய சுழியம் என்ற தலைமுடியை அணிந்து, ஒளிரும் மணி அணிகள் அணிந்து, இந்திரச் செல்வக் காட்சியின் மேன்மையுடைய அழகு மிகவும் பொலிந்து தோன்றவும்.

331. கையினிற் புனைபொற் கோலும் காதினில் இலங்கு தோடும்
மெய்யினில் துவளு நூலும் நெற்றியின் விளங்கு நீறும்
ஐயனுக் கழகி தாமென் றாயிழை மகளிர் போற்றச்
சைவமெய்த் திருவின் கோலந் தழைப்பவீ தியினைச் சார்ந்தார்.

தெளிவுரை : கைகளில் அழகிய பொற்கோலும், செவிகளில் விளங்கிய கவச குண்டலங்களும், மார்பில் துவண்டு அசையும் பூணூலும், நெற்றியில் விளக்கம் செய்யும் திருநீறும் கண்ட மங்கையர், இப்பெருமானுக்கு இக்கோலமே மிகவும் அழகு ஊட்டுவதாகும் ! என்று பாராட்டத் திருவீதியை(ச் சுந்தரர்) அடைந்தார்.

332. நாவலூர் வந்த சைவ நற்றவக் களிறே யென்றும்
மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க் கன்ப வென்றுந்
தாவில்சீர்ப் பெருமை யாரூர் மறையவர் தலைவ வென்றும்
மேவினர் இரண்டுபாலும் வேறுவே றாயம் போற்ற.

தெளிவுரை : சைவ சமயத்தின் நல்ல தவப் பயனாய்த் திரு நாவலூரில் தோன்றிய ஆண் யானை போன்றவரே என்றும், பகைவரின் திரிபுரங்களை எரித்த காளை ஊர்தியையுடைய சிவபெருமானிடத்து மிக்க அன்புடையவரே, என்றும், குற்றம் இல்லாத சிறப்பைக் கொண்ட திருவாரூர் வேதியர் தலைவரே, என்றும் இரண்டு பக்கங்களிலும் பொருந்தியவராய்ச் சூழ்ந்த பரிவாரங்களும் மகளிர் கூட்டமும் துதிக்க,

333. கைக்கடா குரங்கு கோழி சிவல்கவு தாரி பற்றிப்
பக்கமுன் போது வார்கள் பயில்மொழி பயிற்றிச் செல்ல
மிக்கபூம் பிடகை கொள்வோர் விரையடைப் பையோர் சூழ
மைக்கருங் கண்ணி னார்கள் மறுகநீண் மறுகில் வந்தார்.

தெளிவுரை : கையால் பிடித்துப் பழக்கும் கடா, குரங்கு, சிவல், கவுதாரி, என்னும் இவற்றைப் பற்றிக் கொண்டு அவருடைய இரு பக்கங்களிலேயும் முன்னேயும் செல்பவர்கள், அவ்விலங்கு முதலியவற்றைப் பழக்கிய சொற்களைச் சொல்லிக் கொண்டு செல்லவும், மலர்கள் நிறைந்த மலர்க் கூடைகள் கொண்டு செல்பவரும் வாசனைப் பண்டத்துடன் கூடிய வெள்ளிலை முதலியவற்றை எடுக்கும் அடைப்பைக்காரரும் சூழ்ந்து வரவும் நீண்ட தெரு வழியாய்ச் சுந்தரர் வந்தார்.

334. பொலங்கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத
இலங்கொளி வலயப் பொற்றோள் இடையிடை மிடைந்து தொங்கல்
நலங்கிளர் நீழற் சூழ நான்மறை முனிவ ரோடும்
அலங்கலம் தோளி னான்வந் தணைந்தனன் அண்ணல் கோயில்.

தெளிவுரை : அழகிய அணிகள் பூண்ட ஆடல் குதிரைகளை ஆடச் செய்து வருபவர் முன்பு செல்லவும், ஒளி வீசுகின்ற வாகுவலயங்களை அணிந்த தோள்கள் மீது இடையிடை நெருங்கக் கட்டியதால் மயிற்பீலிக் குஞ்சங்களின் நன்மை தரும் நிழல் சூழவும், மாலை சூடிய தோள்களையுடைய நம்பிகள் வேத முனிவர்களுடனே வந்து தியாகேசனின் திருக்கோயிலை அடைந்தார்.

335. கண்ணுதல் கோயில் தேவா சிரியனாங் காவ ணத்துள்
விண்ணவ ரொழிய மண்மேன் மிக்கசீ ரடியார் கூடி
எண்ணிலார் இருந்த போதில் இவர்க்கியா னடியான்ஆகப்
பண்ணுநா ளெந்நா ளென்று பரமர்தாள் பரவிச் சென்றார்.

தெளிவுரை : நெற்றியில் திருக்கண்ணையுடைய இறைவரின் பூங்கோயிலின் மணி முற்றத்தில் திருவாயில் முன் உள்ள தேவாசிரியன் என்ற பெயர் கொண்ட மண்டபத்தில், வாயிலில் கூடியிருக்கும் தேவர்கள் ஒருபுறம் நிற்க, இம்மண் உலகத்தில் தோன்றிய அடியார் எண் இல்லாதவர் இருந்த போது, இவர்களுக்கெல்லாம் என்னை அடியான் ஆகுமாறு செய்கின்ற நாளும் எந்நாளோ? என்ற எண்ணத்துடன் இறைவரின் பாதங்களைத் துதித்த வண்ணம் சுந்தரர் செல்லலானார்,

336. அடியவர்க் கடிய னாவேன் என்னும்ஆ தரவு கூரக்
கொடிநெடுங் கொற்ற வாயில் பணிந்துகை குவித்துப் புக்கார்
கடிகொள்பூங் கொன்றை வேய்ந்தா ரவர்க்கெதிர் காணக் காட்டும்
படியெதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு.

தெளிவுரை : அடியார்க்கு அடியவன் ஆவேன் என்ற அன்பு தம் உள்ளத்தில் மேலிட்டு எழக், கொடிகள் கட்டியதாய் நெடியதாய், வெற்றி அளிப்பதாய் உள்ள உட்கோபுரத் திருவாயிலை வணங்கித் கைகளைத் தலைமீது கூப்பிக் கொண்டு திருக்கோயிலுள் சுந்தரர் புகுந்தார். அச்சமயத்தில் மணமும் அழகும் உடைய கொன்றை மலரைச் சூடிய தியாகராசர் அவர் எதிர் காட்சி காணக் காட்டும்படி அவர் எதிரே தோன்றி நிற்கப் பார்த்து அவருடைய திருவடிகளை வணங்கி அவற்றைத் தலைமேல் தாங்கியவராய்.

337. மன்பெ ருந்திரு மாமறை வண்டுசூழ்ந்
தன்பர் சிந்தை அலர்ந்தசெந் தாமரை
நன்பெ ரும்பர மானந்த நன்மது
என்த ரத்து மளித்தெதிர் நின்றன.

தெளிவுரை : (தங்கள் திருவடித் தாமரைகள்) நிலையான பெருந்திருவை அளிக்கின்ற அளவில்லாத வேதங்களான வண்டுகள் மொய்த்து ஒலிக்க, அன்புடன் நினைப்பவரின் உள்ளமான செந்தாமரையில் ஊறும் நல்ல பெரிய பரமானந்தம் என்ற நல்ல தேனைப் பெறத் தகுதியற்ற என்னிடத்தும், பெறுமாறு தந்து எதிரே தாமே தோன்றி நின்றன.

338. ஞாலம் உய்ய நடமன்றுள் ஆடின
கால னாருயிர் மாளக் கறுத்தன
மாலை தாழ்குழல் மாமலை யாள்செங்கை
சீல மாக வருடச் சிவந்தன.

தெளிவுரை : (தங்கள் திருவடித்தாமரைகள்) உலகம் உய்யும் பொருட்டு ஐந்தொழில் பெருங்கூத்தை அம்பலத்திலே ஆடின; கூற்றுவனின் உயிர் நீங்குமாறு சிந்தின; மாலை சூடிய தாழ்ந்த கூந்தலையுடைய உமையம்மையார் தம் செங்கையால் தடவச் சிவந்தன.

339. நீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன
வேதி யாதவர் தம்மைவே திப்பன
சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய
ஆதி மாலயன் காணா வளவின.

தெளிவுரை : (தங்கள் திருவடித் தாமரைகள்) நீதியில்நிற்கும் தவமுடையவரின் உள்ளத்தில் ஒளிவீசி விளங்குவன. அறியாதவரையும் அறிவித்துத் திருத்துவன; ஒளிப் பிழம்புக்கெல்லாம் ஒளி அளித்து அவற்றின் மேலும் எழுந்து விளங்கும் ஒளியாக உள்ளன; ஒரு காலத்தில் தோன்றும் இயல்பினரான திருமாலால் அளந்து காண இயலாத அளவைக் கொண்டன.

340. வேத வாரண மேற்கொண் டிருந்தன
பேதை யேன்செய் பிழைபொறுத் தாண்டன
ஏத மானவை தீர்க்க இசைந்தன
பூத நாதநின் புண்டரீ கப்பதம்.

தெளிவுரை : பூத கணங்களின் தலைவரான தங்கள் தாமரை போன்ற அடிகள், வேதங்கள் என்ற யானையின் மீது நிற்பன; அறியாமையுடையேனான நான் செய்த பிழைகளைப் பொறுத்தருளி என்னை அடிமையாய்க் கொண்டன; மேலும் வரக் கடவனவான குற்றங்களை எல்லாம் போக்கவும் இசைந்து நின்றன.

341. இன்னவா றேத்து நம்பிக் கேறுசே வகனார் தாமும்
அந்நிலை யவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி
மன்னுசீ ரடியார் தங்கள் வழித்தொண்டை உணர நல்கிப்
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார்.

தெளிவுரை : இவ்வாறு போற்றுகின்ற ஆரூரர்க்கு காளையின் தலைவரான சிவபெருமானும் அந்நிலையில் அவர் வேண்டிய அவ்வருளையே அவர்க்கு அருள் செய்வதற்காக, நிலை பெற்ற சிறப்புப் பொருந்திய அடியார்களின் வழிவழியாக வரும் திருத்தொண்டின் திறங்களை உணரும் அறிவை அளித்து மேலும் அவர்களின் பெருமைகளைத் தாமே அருளிச் செய்யலானார்.

342. பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார் ஊனமே லொன்று மில்லார்
அருமையாம் நிலையி னின்றார் அன்பினா லின்ப மார்வார்
இருமையுங் கடந்து நின்றார் இவரைநீ யடைவா யென்று.

தெளிவுரை : இறைவர், பெருமையினால் எம்மைப் போன்றவர்; பேணும் இயல்பால் எம்மைத் தமக்கே உரிமையாய்ப் பெற்றார்; எம்முடன் ஒன்றி நின்ற நிலையினால் உலகத்தை வெல்வார்; அதனால் பின்னால் வரவிருக்கின்ற ஊனங்கள் ஏதும் இல்லாதவர்; மற்றவர் எவரும் நிற்பதற்கரிய நிலையிலே நின்றவர்கள்; அன்பு நிறைவதால் இன்பத்தையே நிறைய அனுபவிப்பார்கள்; இம்மை மறுமைகளைக் கடந்த நிலை பெற்றவர்கள்; இத்தகையவரான இந்த அடியார்களை நீ சேர்வாயாக ! என்று சொல்லி,

343. நாதனா ரருளிச் செய்ய நம்பியா ரூரர் நானிங்கு
ஏதந்தீர் நெறியைப் பெற்றேன் என்றெதிர் வணங்கிப் போற்ற
நீதியா லவர்கள் தம்மைப் பணிந்துநீ நிறைசொன் மாலை
கோதிலா வாய்மை யாலே பாடென வண்ணல் கூற.

தெளிவுரை : (மேற்கண்ட வண்ணம்) இறைவர் கூறியருளினாராக, நாவலூரர் நான் குற்றம் தீர் நெறியை இங்கு அடைந்து உய்ந்தேன் ! என எதிர் வணங்கிப் போற்றி, நின்றார். அப்போது இறைவர், நீ விதிப்படி இவர்களை வணங்கி நிறைந்த சொன் மாலையைக் குற்றம் இல்லாத உண்மைத் தன்மையாலே அவர்களைப் பாடுவாயாக என்று அருளிச் (செய்தார்) செய்ய,

344. தன்னையா ளுடைய நாதன் தானருள் செய்யக் கேட்டுச்
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப் பாடி நாடர்
இன்னவா றின்ன பண்பென் றேத்துகேன் அதற்கி யானார்
பன்னுபா மாலை பாடும் பரிசெனக் கருள்செய் யென்ன.

தெளிவுரை : தம்மைத் தடுத்து ஆட்கொண்ட இறைவர் தாமே இங்ஙனம் அருளிச் செய்த ஆணையைக் கேட்டவராய், அப் பெருமானைத் தலையார வணங்கி நின்ற நாவலூரர் அங்ஙனம் நிறைந்த சொல் மாலை பாடுவதற்கு இன்னபடி பாடுவது என்றும் இன்ன பண்பைப் பாடுவது என்றும் எங்ஙனம் அறிந்து துதிப்பேன் ! அதற்கு நான் என்ன தகுதியுடையேன்? அவர்களைப் பாடும் தன்மையை எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டி நின்றார்.

345. தொல்லைமால் வரைபயந்த தூயாள்தன் திருப்பாகன்
அல்லல்தீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால்
தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேனென்று
எல்லையில்வண் புகழாரை யெடுத்திசைப்பா மொழியென்றார்.

தெளிவுரை : பழைமையுடைய இமய மலையில் தோன்றிய தூயவளான உமையை ஒரு பாகத்தில் கொண்ட இறைவர், உலகம் துன்பம் நீங்கி உய்யும் பொருட்டு வேதங்களை அருளிய தம் திருவாயால் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என எடுத்துத் துதித்துப் புகழ் மாலை பாடுவாயாக ! என அருள் செய்தார்.

346. மன்னுசீர் வயலாரூர் மன்னவரை வன்றொண்டர்
சென்னியுற அடிவணங்கித் திருவருள்மேல் கொள்பொழுதின்
முன்னமால் அயனறியா முதல்வர்தா மெழுந்தருள
அந்நிலைகண் டடியவர்பாற் சார்வதனுக் கணைகின்றார்.

தெளிவுரை : நிலை பெற்ற சிறப்பை யுடைய வயலால் சூழப்பட்ட ஆரூர்ப் பெருமானை வன்றொண்டர் தலை, தரையில் பட அடிகளை வணங்கித் தலை மீது கொண்ட போதில், முன் திருமால், அயன் ஆகியவர் அறியாத அப்பெருமான் அவர் முன் எழுந்தருள, அதைக்கண்டு நாவலூரர் தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருக்கும் அடியவர்களிடம் சேர்வதற்கு அங்குச் செல்வாராய்,

347. தூரத்தே திருக்கூட்டம் பலமுறையால் தொழுதன்பு
சேரத்தாழ்ந் தெழுந்தருகு சென்றெய்தி நின்றழியா
வீரத்தா ரெல்லார்க்குந் தனித்தனிவே றடியேன் என்று
ஆர்வத்தால் திருத்தொண்டத் தொகைப்பதிக மருள்செய்தார்.

தெளிவுரை : அடியார் கூட்டத்தினைத் தொலைவில் நின்றே பல முறை வணங்கியும் அன்பு மிகுதியால் மீண்டும் தாழ்ந்து எழுந்தும், பின்பு அருகில் போய் நின்று கொண்டு, எக்காலத்தும் அழியாத வீரமுடைய அவர்கள் பெயரைச் சொல்லி இவர்க்கு அடியேன், இவர்க்கு அடியேன் என்றும் துதித்து மேலும் மேலும் எழுகின்ற ஆசையால் திருத் தொண்டத் தொகை என்ற பெயர் கொண்ட திருப்பதிகத்தை நம்பியாரூரர் பாடுபவராய்,

348. தம்பெருமான் கொடுத்தமொழிமுதலாகத் தமிழ்மாலைச்
செம்பொருளால் திருத்தொண்டத் தொகையான திருப்பதிகம்
உம்பர்பிரான் தானருளும் உணர்வுபெற உலகேத்த
எம்பெருமான் வன்றொண்டர் பாடியவ ரெதிர்பணிந்தார்.

தெளிவுரை : தம் இறைவன் எடுத்துத் தந்த மொழிகளையே முதலாய் வைத்துத் தொடங்கிய தமிழ்ப் பாமாலையாய்ச் செம்பொருள் கொண்டு திருத்தொண்டத் தொகை என்ற பதிகத்தை அந்த இறைவனே அருள்கின்ற உணர்வு பெறுதலால், உலகம் ஏத்துமாறு, எம் தலைவரான நாவலூரர் பாடி முடித்து அத்திருக் கூட்டத்தின் முன்பு வணங்கினார்.

349. உம்பர்நா யகர்அடியார் பேருவகை தாமெய்த
நம்பியா ரூரர்திருக் கூட்டத்தின் நடுவணைந்தார்
தம்பிரான் தோழரவர் தாமொழிந்த தமிழ்முறையே
எம்பிரான் தமர்கள்திருத் தொண்டேத்தல் உறுகின்றேன்.

தெளிவுரை : சிவபெருமானின் அடியவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைய நாவலூரர் அத்திருக் கூட்டத்துள் சென்று சேர்ந்தார். அவர் பாடிய அந்தத் தமிழ்த் திருப்பதிகம் காட்டிய அம்முறையிலே தனித்தனியாய் விரித்து இறைவனுக்கு உகந்தவரான அடியார்களின் திருத்தொண்டின் வரலாற்றையும் தன்மைகளையும் எடுத்துக் கூறித் துதிக்க முயல்கின்றேன்.

தடுத்தாட் கொண்ட புராணம் முற்றுப் பெற்றது.

2. தில்லை வாழ்ந்தணர் சருக்கம்

7. தில்லை வாழந்தணர் புராணம்

தில்லையில் வாழ்ந்த அந்தணர்கள் மூவாயிரவர். அவர்கள் இல்லங்களில் மறைகள் முழங்கும். வேள்வி ஒளி வீசும். அவர்கள் மறைகளைக் கற்றுத் துறை போயவர்; அவர்கள் அனைவரும் சிவனடியார்கள்.

350. ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.

தெளிவுரை : ஆதியாகியதுடன் நடுவுமாகி, பாசஞானம், பதி ஞானம் என்பனவற்றால் அறியப்படாது, சிவ ஞானத்தால் அறியப்படுகின்ற அளவைக் கொண்டதாக, காட்டும் அறிவாகிய ஒளியும் அது காட்டக் காண்கின்ற அறிவுமாகி, இரண்டு வகைப்பட்ட மாயைகளினின்றும் தோன்றிய எப்பொருளுமாகி, அவை எல்லாவற்றிலும் அத்துவிதமாய்க் கலந்து ஒரு பொருளாகிப் பெண்ணுமாகி அதனுடன் இணைந்த ஆணுமாகிப் போதித்து நிற்கும் தில்லையின் அம்பலத்தில் ஆடும் திருக்கூத்துக்கு வணக்கம், வணக்கம்!

351. கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்  திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.

தெளிவுரை : பசு ஞானம் பதிஞானங்களால் கற்பிக்கப் பெற்ற எல்லாம் கடந்து நின்று அச்சோதியானது அருளே வடிவாகக் கொண்டு அறிவதற்குரிய அற்புதக் கோலத்தில் நீடி, அரிய வேதத்தின் உச்சியான உபநிடதங்களின் உச்சியில் உணர்த்தப் படுகின்ற ஞானாகாயத்தின் உருவமான தில்லைச் சிற்றம்பலத்தில் நிலைத்து நின்று அழகோடு கூத்து ஆடுகின்ற மலர் போன்றதும் கழலை அணிந்ததுமான திருவடிக்கு வணக்கம், வணக்கம்.

352. போற்றிநீள் தில்லை வாழந் தணர்திறம் புகல லுற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக் குரிய தொண்டாம்
பேற்றினார் பெருமைக் கெல்லை  யாயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்.

தெளிவுரை : இங்ஙனம் கூத்தரின் கழலை வணங்கி அதன் துணையினால் வழிவழி நீண்டு வாழ்ந்து வரும் தில்லை வாழ் அந்தணர்களின் இயல்பைச் சொல்லத் தொடங்குகின்றேன். இவர்கள் திருநீற்றினால் நிரம்பிய கோலத்தையுடைய கூத்தப் பெருமானுக்குரிய திருத்தொண்டராகின்ற பேறு பெற்றவர்கள். எல்லாப் பெருமைகளுக்கும் எல்லையாய் உள்ளவர்களும் வழிபட்டு வாழ்வதற்கு ஏதுவான ஒழுக்கத்தில் தலை நின்றவர்கள். பெருகுகின்ற அன்பினால் அவருடைய திருவடியையே பற்றுக் கோடாகக் கொண்டு தவம் செய்து வாழ்பவர்கள்.

353. பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிக ளேந்தி
மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றுந்
தங்களுக் கேற்ற பண்பில் தகும்பணித் தலைநின் றுய்த்தே
அங்கணர் கோயி லுள்ளா அகம்படித் தொண்டு செய்வார்.

தெளிவுரை : இவர்கள் பெருகும் செல்வத்தில் சிறந்த அழகு மிக்க அணிகளை விதிப்படி அழகுற இறைவனின் திருமேனியில் சாத்தி, அலங்காரத்தைச் செய்து, வேத மந்திரங்களால் துதித்து, மேலும் செய்வதற்கேற்ற பணிகளைச் செவ்வனே செய்து, இறைவன் திருக்கோயிலுக்குள் அபிஷேகம் முதலிய திருத்தொண்டைச் செய்து வந்தனர்.

354. வருமுறை எரிமூன் றோம்பி மன்னுயி ரருளான் மல்கத்
தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியிற் செல்லும்
அருமறை நான்கி னோடுஆ றங்கமும் பயின்று வல்லார்
திருநடம் புரிவார்க் காளாந் திருவினாற் சிறந்த சீரார்.

தெளிவுரை : இவர்கள் அறத்தையே பொருளாகக் கொண்டு தத்துவ வழியில் போகும், அரிய நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் நன்கு கற்று அவற்றில் வல்லவர்கள்; உலகம் அருள் பெற்று வாழும் பொருட்டு விதிமுறைப்படி வரும் ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருக பத்தியம் ஆகிய மூன்று தீக்களையும் வளர்த்துக் காத்து வருபவர்கள்; அருள் நடம் செய்யும் இறைவனுக்கு ஆட்செய்யப் பெற்ற அருட் செல்வத்தினால் சிறந்து விளங்கும் சிறப்புப் பெற்றவர்கள்.

355. மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டார்
அறுதொழி லாட்சி யாலே யருங்கலி நீக்கி யுள்ளார்
உறுவது நீற்றின் செல்வம் எனக்கொளும் உள்ளம் மிக்கார்
பெறுவது சிவன்பா லன்பாம் பேறெனப் பெருகி வாழ்வார்.

தெளிவுரை : இந்த அந்தணர்கள் குற்றம் இல்லாத மரபில் வந்ததே அன்றி இடையறாத நல்ல ஒழுக்கத்தை உடையவர்கள். தமக்குரிய ஓதல் முதலான ஆறு தொழில்களையும் முறைப்படி செய்து வருகின்ற தன்மையினால் உலகத்தின் உயிர்கட்கெல்லாம் கலியை வாராமல் காத்தவர்கள். தாம் பெறக் கடவதாகிய உறுதிப்பயன் திருநீற்றின் நெறியாலான அருட்செல்வமே எனக் கொண்டு ஒழுகுகின்ற எண்ணம் உடையவர்கள். சிவபெருமானிடத்துத் தாம் பெறத் தக்க பெரும் பேறாவது அவன் திருவடியிலே பதிந்த அன்பு ஒன்றே ஆகும் என்று எண்ணும் பெரு வாழ்வை உடையவர்கள்.


356. ஞானமே முதலா நான்கும் நவையறத் தெரிந்து மிக்கார்
தானமுந் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையுந் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார்.

தெளிவுரை : இவர்கள் ஞானம், யோகம், கிரியை, சரியை என்னும் நான்கினையும் குற்றமில்லாமல் அறிந்து அவற்றில் மிகவும் திறமையுடையவர்கள்; தானத்திலும் தவத்திலும் வல்லவர்கள். எல்லாவற்றிலும் தகுந்தவற்றையே சார்ந்தவர்கள். குற்றம் ஒன்றும் இல்லாதவர்கள். உலகங்கள் எல்லாம் புகழ்ந்து போற்றுகின்ற மானத்தையும் பொறுமையையும் மேற்கொண்டு இல்லறத்தைத் தவறாது நடத்தி வருபவர்கள்.

357.  செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வவே தியர்க ளானார்
மும்மைஆ யிரவர் தாங்கள் போற்றிட முதல்வ னாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனிப்பெறும் பேறொன் றில்லார்
தம்மையே தமக்கொப் பான நிலைமையால் தலைமை சார்ந்தார்.

தெளிவுரை : செம்மைத் தன்மையால் ஆணவம் நீங்கித் துணிவு பெற்ற உள்ளத்தை யுடைய தெய்வத்தன்மை வாய்ந்த மூவாயிரம் வேதியர்கள் இம்மையில் இறைவனைத் தாம் போற்றி வாழுமாறு கைவசமாகக் கிடைக்கப்பெற்று வாழ்பவர்கள். ஆதலால் இவர்கள் இனிப் பெறுவதான இதை விடச் சிறந்த பேறு வேறில்லாதவர்கள். மேற்கூறியவற்றால் இவர்கள் தங்கட்குத் தாங்களே நிகரானவர்களே அல்லாமல், பிறர் இல்லை என்று நிலை பெற்று அறநெறியிலே தலை சிறந்தவர்கள்.

358. இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலா மெல்லைத் தாமோ
தென்றமிழ்ப் பயனா யுள்ள திருத்தொண்டத் தொகைமுன் பாட
அன்றுவன் றொண்டர் தம்மை யருளிய ஆரூர் அண்ணல்
முன்திரு வாக்காற் கோத்த முதற்பொரு ளானா ரென்றால்.

தெளிவுரை : செந்தமிழின் பயனாய் உள்ள திருத்தொண்டத் தொகை பாடுவதற்கு முன்னாள் வன்தொண்டரான சுந்தரர்க்கு ஆணையிட்டு அடி எடுத்துத் தந்த திருவாரூர்த் தியாகப் பெருமான் தொடக்கம் செய்து தந்த முதலிலே கோத்த தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்ற தொடரால் குறித்த பொருளாவார்கள், இவர்களே என்றால், இன்றைக்கு இத்தகைய அந்தணர் மூவாயிரவரின் பெருமை எம்மால் சொல்லத்தக்க எல்லைக்கு உட்படுவதோ?

359. அகலிடத் துயர்ந்த தில்லை யந்தண ரகில மெல்லாம்
புகழ்திரு மறையோ ரென்றும் பொதுநடம் போற்றி வாழ்க
நிகழ்திரு நீல கண்டக் குயவனார் நீடு வாய்மை
திகழுமன் புடைய தொண்டர் செய்தவங் கூற லுற்றாம்.

தெளிவுரை : பரந்து பட்ட உலகத்தில் உயர்வுடைய தில்லை வாழ் அந்தணர்கள் என்ற உலகம் புகழ்ந்து போற்றும் தெய்வ வேதியர்கள் நாள்தோறும் தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவனின் அருள் நடனத்தைப் பேணிப் போற்றி வாழ்க! திரு நீல கண்டம் என்ற பெயருடன் நிகழ்ச்சியுற்ற நீடு செலுத்திய வாய்மைத் தன்மை விளங்குதற்கு இடமான அன்புடைய தொண்டர் செய்த தவத்தினது வரலாற்றைச் சொல்லத் தொடங்குகின்றோம்.

தில்லை வாழ்ந்தணர் புராணம் முற்றுப் பெற்றது

 

8. திருநீலகண்ட நாயனார் புராணம்

தில்லையில் தோன்றிய அடியாருள் ஒருவர் திருநீலகண்டர். அவர் குயவர் மரபினர். எப்போதும் திருநீலகண்டம் என்ற இறைவரின் கண்டத்தைப் போற்றி வந்தார். ஆதலால் திருநீலகண்டர் என அழைக்கப்பெற்றார். அவர் ஒரு நாள் கணிகையர் வீட்டுக்குச் சென்று வந்ததால் அவர் மனைவி சினந்து எம்மைத் தீண்ட வேண்டா! என்றதால் திருநீலகண்டர் தம் மனைவியுடன் தொடர்பின்றி இருந்தார். அவர் எம்மை என்று பன்மையில் கூறியதால் பிற பெண்களையும் அவர் தொடாமல் வாழ்ந்தார். இந்நிலையில் அவர்கள் பல ஆண்டுகள் வாழ்ந்தனர். முதுமை அவர்களை நாடி வந்தது. இறைவர் அவர்களின் அன்பை உலகறியச் செய்ய எண்ணினார். அவர் ஒரு சிவனடியார் போல் வந்து தம் பிச்சை ஓட்டை அவரிடம் தந்தார். இதைப் பாதுகாப்புடன் வைத்திருந்து நான் கேட்கும் போது தருக என்றார். பின் ஒருநாள் இறைவர் திருநீலகண்டரின் வீட்டிற்கு வந்தார். தம் ஓட்டைத் தரும்படி வினவினார். திருநீலகண்டர் அந்த ஓட்டை தேடி விட்டுக் கிடைக்காததால், வேறு ஓடு தருவதாகச் சொன்னார். இறைவர் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாது மனைவியின் கையைப் பற்றி நீரில் மூழ்கிச் சத்தியம் செய்யும்படி உரைத்தார். திருநீலகண்டர் தம் மனைவியைத் தீண்டுவதில்லை என்பதைச் சொல்ல இயலாது தவித்தார். வழக்குத் தில்லை வாழந்தணர் முன்னம் சென்றது. அவர்கள் சிவனடியார் உரைத்தபடி செய்யுமாறு உரைத்தனர். திருநீலகண்டர் ஒருகோலின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு மனைவியை மற்றொரு முனையைப் பிடிக்கச் செய்து, தமக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள தொடர்பின்மையையுரைத்து நீரில் முழுகி எழுந்தார். அவர்கள் இருவரும் இளமையுடன் விளங்க இறைவர் அருள் செய்தார். நீண்ட காலம் இன்புடன் வாழ்ந்து தம் அடியைச் சேரும்படி அருள் செய்தார்.

360. வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி மன்னுசிற் றம்ப லத்தே
ஆதியும் முடிவும் இல்லாஅற்புதத் தனிக்கூத் தாடும்
நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார்.

தெளிவுரை : (திருநீலகண்டர்) முன்பு விரித்துச் சொன்ன அந்தணர் வாழ்கின்ற தில்லை என்ற பழம்பதியிலே குயவர் குலத்தில் அவதரித்தவர். உமையம்மையார் வீற்றிருக்கும் ஒரு பாகத்தை நோக்கி, நிறைந்த சிற்றம்பலத்தினிடமாக நின்று, ஆதியும் அந்தமும் இல்லாத அற்புதத் தனிக் கூத்தை ஆடும் இறைவரின் திருவடிகளையே போற்றி வணங்குதலான நல்லொழுக்கத்தில் மிக்கு விளங்கினார்.

361. பொய்கடிந் தறத்தின் வாழ்வார் புனற்சடை முடியார்க் கன்பர்
மெய்யடி யார்கட் கான பணிசெயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றுஞ் செய்கை மனையறம் புரிந்து வாழ்வார்
சைவமெய்த் திருவின் சார்வே பொருளெனச் சாரு நீரார்.

தெளிவுரை : அவர் பொய்யை ஒழித்து அறநெறியில் வாழ்பவர். கங்கையை அணிந்த முடியை யுடைய சிவபெருமானின் உண்மை அடியார்களுக்கு வேண்டிய பணிவிடைகளை யெல்லாம் செய்கின்ற விருப்பம் மிக்க ஒழுக்கம் உடையவர். உலகத்தில் சிறந்ததாகக் கொண்டு ஒழுகப்பெறும் இல்லற வாழ்வை வழுவாது நடத்தி வருபவர். சைவ சமயத்தின் உண்மைச் செல்வத்தின் சார்பே பொருளாவது என உணர்ந்து சார்ந்து ஒழுகும் தன்மை கொண்டவர்.

362. அளவிலா மரபின் வாழ்க்கை மட்கலம் அமுதுக் காக்கி
வளரிளந் திங்கட் கண்ணி மன்றுளார் அடியார்க் கென்றும்
உளமகிழ் சிறப்பின் மல்க ஓடளித் தொழுகு நாளில்
இளமைமீ தூர இன்பத் துறையினில் எளிய ரானார்.

தெளிவுரை : அவர் அளவு இல்லாத பரம்பரையில் தம் மரபு வழியே வந்த தொழில் செய்யும் மண் பாத்திரங்களைத் தம் இல்வாழ்வின் உணவுக்கு ஆக்கிக் கொண்டு, பிறைச் சந்திரனை அணிந்த சிவபெருமானின் அடியார்கள் வேண்டிய திருவோட்டினை அவர்கள் எப்போதும் மகிழ்ந்து கொள்ளும்படி நிறைய அளித்து ஒழுகி வந்தார். அக்காலத்தில் இளமை மேலீட்டால் சிற்றின்பத்துறையில் எளியவர் ஆனார்.

363. அவர்தங்கண் மனைவி யாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார்
புவனங்க ளுய்ய ஐயர் பொங்குநஞ் சுண்ண யாஞ்செய்
தவநின்று தடுத்த தென்னத் தகைந்துதான் தரித்த தென்று
சிவனெந்தை கண்டந் தன்னைத் திருநீல கண்ட மென்பார்.

தெளிவுரை : அவருடைய மனைவியாரும் அருந்ததியைவிட மேன்மை கொண்ட கற்புக் குணம் வாய்க்கப் பெற்றவர். உலகம் உய்யும் பொருட்டாக இறைவர் பாற்கடலில் பொங்கி எழுந்த நஞ்சை அமுது செய்ய (அது உள்ளே போய் மறைந்து படாமல் எமக்கெல்லாம் அறிகுறியாய் விளங்குமாறு) நாங்கள் செய்த தவத்தின் பேறுதான் அவ்வளவில் நிற்குமாறு, இந்தக் கண்ட மன்றோ அதனைத் தானே தாங்கி நிற்கின்றது என்ற கருத்தினால் சிவபெருமானான எம் இறைவரின் கழுத்தையே எப்போதும் நினைப்பவராய்த் திருநீலகண்டம் என்று சொல்லிய வண்ணம் வருபவர் ஆனார்.

364. ஆனதங் கேள்வர் அங்கோர் பரத்தைபா லணைந்து நண்ண
மானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய வெல்லாஞ் செய்தே உடனுறைவு இசையா ரானார்
தேனலர் கமலப் போதில் திருவினு முருவின் மிக்கார்.

தெளிவுரை : தேன் பொருந்திய தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமியை விட அழகிற் சிறந்த திருநீலகண்டரின் மனைவியார், மேல் சொன்ன இயல்பு உடையவரான தம் கணவர், ஒருநாள் பரத்தையை அணைந்து இல்லத்துக்கு வந்ததால், அதனால் எழுந்த மானத்தினாலே உண்டான மனவருத்தத்தை ஆற்ற இயலாதவராகி மேற்கொண்ட ஊடலால் இல் வாழ்வில் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் செய்து முடித்தும், கணவருடன் மெய்யுறு புணர்ச்சி ஒன்றுக்கு மட்டும் இசையவில்லை.

365. மூண்டவப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண்டயங் கிளமென் சாயல் பொற்கொடி யனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீ ராயின் எம்மைத் திருநீல கண்ட மென்றார்.

தெளிவுரை : அவருக்கு உண்டான புலவியை நீக்கிக் கூடும் பொருட்டு அன்புடைய நாயனார், தம் அணிகள் அணிந்த மென்மையான சாயலையுடைய பொற்கொடி போன்ற மனைவியார் முன் சென்று, வேண்டியவற்றை யெல்லாம் இரந்து பணிந்து, கூறி, அதனால் அந்த அம்மையார் புலவி நீங்கினார் எனக் கருதி, அவரது மேனியைத் தழுவ முனைந்தார். அப்போது, நீவிர் எம்மைத் தொடுவீரானால் திருநீல கண்டத்தின் ஆணை உம்மைத் தடுப்பதாக ! என்று ஆணையிட்டார்.

366. ஆதியார் நீல கண்டத் தளவுதாங் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி எம்மைஎன் றதனால் மற்றை
மாதரார் தமையும் என்றன் மனத்தினுந் தீண்டேன் என்றார்.

தெளிவுரை : புராதனரான சிவபெருமானது திருநீல கண்டத்தின் அளவில் தாம் மேற்கொண்ட ஆசையானது வேறு எதனாலும் அதனைக் கடக்கச் செய்யாத மனைவியார் கூறிய ஆணையைக் கேட்ட பெரியவரான நாயனார், அவரை விட்டு விலகிச் சென்று, அந்த அம்மையாரை மனைவியைப் போல் நோக்காமல் அயலாரைப் போல் எண்ணி நோக்கி, நீ என்னை என்று கூறாது எம்மை எனக் கூறியதனால், உன்னையே அன்றி உன் இனத்தைச் சேர்ந்த மற்ற மங்கையர் எவரையுமே என் மனத்தாலும் இனித் தீண்ட மாட்டேன் ! என்று கூறினார்.

367.  கற்புறு மனைவி யாரும் கணவனார்க் கான வெல்லாம்
பொற்புற மெய்யு றாமற் பொருந்துவ போற்றிச் செய்ய
இற்புறம் பொழியா தங்கண் இருவரும் வேறு வைகி
அற்புறு புணர்ச்சி யின்மை அயலறி யாமை வாழ்ந்தார்.

தெளிவுரை : கற்பில் மிக்க மனைவியாரும் தம் கணவருக்கு வேண்டிய பணிவிடைகள் எல்லாவற்றையும் அழகு பெறவும், ஆனால் தம் மேனி மீது தீண்டாமலும், இல் வாழ்க்கையில் பொருந்தும் செயல்களைச் சோர்வின்றிக் காத்துச் செய்து வந்தார். தம் வீட்டை விட்டு வெளியில் நீங்காது அந்த வீட்டிலேயே அந்த இருவரும் தனித்தனியாய் வாழ்பவராகி, அன்பு மிகுவதற்குக் காரணமான மெய்யுறு புணர்ச்சி ஒன்று மட்டும் இல்லாமல் வாழும் தன்மையை அயலவர் எவரும் அறியாதவாறு வாழ்ந்து வந்தனர்.

368. இளமையின் மிக்கு ளார்கள் இருவரு மறிய நின்ற
அளவில்சீ ராணை போற்றி ஆண்டுகள் பலவுஞ் செல்ல
வளமலி யிளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார்.

தெளிவுரை : இளமைத் தன்மை மிக்குள்ள அந்த இருவரும் தெரிய மட்டும் நிகழ்ந்து, மற்றவர் அறியாமல் நின்ற அளவில்லாத சிறப்பைக் கொண்ட அந்த ஆணையைக் கடவாமல் காப்பாற்றி வந்தனர். இங்ஙனம் ஆண்டுகள் பல கழிந்தன. அதனால் உடல் வளம் முதலியவை மலிந்த இளமைப் பருவம் நீங்கியது. உரிய வடிவம் கொண்ட முதுமை வந்தது. அதனால் தளர்ச்சியை அடைந்து, உடல் கோலில் சாய்ந்து நடக்கும் பருவம் வந்தாலும் தம் பெருமானது திறத்தில் தாம் கொண்ட அன்பு சாய்ந்து கெடாத தன்மையுடன் விளங்கினார்.

369. இந்நெறி யொழுகு நாளில் எரிதளிர்த் தென்ன நீண்ட
மின்னொளிர் சடையோன் தானுந் தொண்டரை விளக்கங் காண
நன்னெறி யிதுவா மென்று ஞாலத்தோர் விரும்பி உய்யும்
அந்நெறி காட்டு மாற்றால் அருட்சிவ யோகி யாகி.

தெளிவுரை : இங்ஙனம் அவர்கள் ஒழுகி வந்த காலத்தில் தீயானது சுடர் விட்டு நீண்டதோ என்னும்படி வளர்ந்து ஒளி வீசும் சடையைக் கொண்ட இறைவரும், தம் தொண்டரான நாயனாரின் உண்மைத் தன்மையைக் கண்டு உலகத்தார், இதுவே நல்ல நெறியாகும் ! என்று அறிந்து விரும்பிக் கைக்கொண்டு உய்யச் செய்கின்ற வகையினால், அருட் சிவயோகியாரான கோலத்தைப் பூண்டு,

370.  கீளொடு கோவணஞ் சாத்திக் கேடிலா
வாள்விடு நீற்றொளி மலர்ந்த மேனிமேல் க்ஷ
தோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்
நீளாளி வளர்திரு முண்ட நெற்றியும்.

தெளிவுரை : கீளும் கோவணமும் அணிந்து கொண்டு அழிவில்லாமையைச் செய்கின்ற ஒளிவீசும் திருமேனியில் தோளிலும் மார்பிலும் விழுந்து துவள்கின்ற பூணூல் அணிந்ததுடன், விரியும் அந்தத் திருநீற்றின் ஒளியே வளரும் திரிபுண்டரமான நெற்றியும்

371. நெடுஞ்சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங்கதிர் முறுவல்வெண் ணிலவும் மேம்பட
இடும்பலிப் பாத்திர மேந்து கையராய்
நடந்துவேட் கோவர்தம் மனையை நண்ணினார்.

தெளிவுரை : தம் நீண்ட சடை மறைந்திட அதனிடத்தே நெறித்துச் சுருண்ட மயிரும் பம்பை மயிரும், திருவாயில் ஒளி வீசும் வெண்ணிலவு போன்ற புன்முறுவலும் கொண்டு, உயர்வடையும் பொருட்டுப் பிச்சை இடுவதற்கான திருவோட்டை ஏந்திய கையையுடையவராகி, நடந்து வந்த நீலகண்டரின் இல்லத்தைச் சேர்ந்தார்.

372. நண்ணிய தவச்சிவ யோக நாதரைக்
கண்ணுற நோக்கிய காத லன்பர்தாம்
புண்ணியத் தொண்டராம் என்று போற்றிசெய்
தெண்ணிய உவகையால் எதிர்கொண் டேத்தினார்.

தெளிவுரை : மேல் சொன்ன வண்ணம் தவக் கோலம் பூண்ட சிவயோக நாதரைக் கண்ணாற் கண்ட ஆசைமிக்க நீல கண்ட நாயனார், இவர் புண்ணியத் தொண்டரே ஆகும் என்ற எண்ணத்துடன் துதித்துத் தாம் எண்ணியதற்கு ஏற்ப எதிர் கொண்டு சென்று வணங்கினார்.

373. பிறைவளர் சடைமுடிப் பிரானைத் தொண்டரென்று
உறையுளில் அணைந்துபே ருவகை கூர்ந்திட
முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள்
நிறைபெரு விருப்பொடு செய்து நின்றபின்.

தெளிவுரை : திருநீலகண்டர் பிறைச் சந்திரன் வளர்தற்கு இடமான சடை முடியையுடைய இறைவரை அவரது தொண்டர் எனக் கொண்டு, தம் வீட்டில் அழைத்து வந்து சேர்ந்து, மிக்க மகிழ்ச்சி அடைந்து முறைப்படி வழிபாடு செய்வதில் நூல்களில் கூறிய முறைப்படி பூசைகளை யெல்லாம் மனம் நிறைந்த விருப்பத்துடன் இயற்றினார். பின் அவரது முன்நின்று,

374. எம்பிரான் யான்செயும் பணிஎது என்றனர்
வம்புலா மலர்ச்சடை வள்ளல் தொண்டனார்
உம்பர்நா யகனும்இவ் வோடுன் பால்வைத்து
நம்பிநீ தருகநாம் வேண்டும் போதென்று.

தெளிவுரை : எம்பெருமானே, நான் செய்யக் கூடிய பணி விடை யாது? என்று இயம்பினார், மணம் கமழும் மலரையுடைய சடையனாரான சிவபெருமானின் தொண்டரான குயவனார். தேவர்க்குத் தலைவரான சிவயோகியாரும் நம்பியே ! இந்த ஓட்டை நின்னிடம் வைத்திருந்து நாம் வேண்டும்போது நீ திரும்பத் தருவாயாக ! என்று கூறினார்.

375. தன்னையொப் பரியது தலத்துத் தன்னுழைத்
துன்னிய யாவையுந் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்னதன் மையதிது வாங்கு நீயென.

தெளிவுரை : இவ்வோடு தனக்கு ஒப்பாக வேறு ஒன்று இல்லாதது; தன்னிடம் உள்ள பொருள்கள் எல்லாவற்றையும் தூய்மையாக்குவது; பொன் மணியை விட மிகக் கவனமாய்க் காக்க வேண்டியது. இதன் தன்மை இத்தகையது ! இதை வாங்குவாயாக என்று (சொன்னார்) சொல்ல,

376. தொல்லைவேட் கோவர்தங் குலத்துள் தோன்றிய
மல்குசீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு
ஒல்லையின் மனையிலோர் மருங்கு காப்புறும்
எல்லையில் வைத்துவந் திறையை யெய்தினார்.

தெளிவுரை : தொன்று தொட்டு வழி வழியாய் வரும் குயவர் குலத்தின் தோன்றலான மிக்க சிறப்புடைய தொண்டனார், வணங்கி அதனை வாங்கிக்கொண்டு விரைந்து போய், தம் வீட்டின் தனி இடத்தில் காவலுடைய இடத்தில் சேமமாக வைத்து விட்டு வந்து மீண்டும் இறைவரை அடைந்தார்.

377. வைத்தபின் மறையவ ராகி வந்தருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்துடன் போய்விடை கொண்டு மீண்டனர்
அத்தர்தாம் அம்பல மணைய மேவினார்.

தெளிவுரை : அங்ஙனம் வைத்த பின்னர்த் துறவியராக வந்த இறைவர் அவ்விடம் விட்டு நீங்கிச் சென்றார். அதுவரை நின்று பணியைக் கேட்ட தொண்டனாரான குயவரும் அவருடனே போய் வெளியே சென்று வழிவிட்டு விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். இறைவரும் தம் அம்பலத்தைப் போய் அடைந்தார்.

378. சாலநாள் கழிந்த பின்பு தலைவனார் தாமுன் வைத்த
கோலமார் ஓடு தன்னைக் குறியிடத் தகலப் போக்கிச்
சீலமார் கொள்கை யென்றுந் திருந்துவேட் கோவர் தம்பால்
வாலிதாம் நிலைமை காட்ட முன்புபோல் மனையில் வந்தார்.

தெளிவுரை : இது நிகழ்ந்த பின்பு பல நாட்கள் கடந்தன. பின்னர் இறைவர் தாம் நாயனாரிடம் கொடுத்து வைத்த அழகிய திருவோட்டினை அது வைக்கப் பெற்ற இடத்தினின்று அகன்று போகச் செய்தார். பின் சிவநெறி காத்து வாழ்கின்ற சிறந்த ஒழுக்கத்தில் எப்போதும் திருத்தமாய் நின்ற குயவனாரிடம் விளங்கிய உண்மைத் தன்மையை உலகத்தவர்க்குக் காட்ட, தவக் கோலத்துடன் முன் வந்தாற் போல் அவரது திருமனைக்கு வந்தருளினார்.

379. வந்தபின் தொண்ட னாரும் எதிர்வழி பாடு செய்து
சிந்தைசெய் தருளிற் றெங்கள் செய்தவ மென்று நிற்ப
முந்தைநா ளுன்பால் வைத்த மொய்யொளி விளங்கும் ஓடு
தந்துநில் என்றான் எல்லாந் தான்வைத்து வாங்க வல்லான்.

தெளிவுரை : இங்ஙனம் இறைவன் முன் வந்தாற்போல் வரவும் நாயனார், முன் போலவே அவரை எதிர் கொண்டு வரவேற்று, தாங்கள் அடியேனை எண்ணி இங்கு எழுந்து அருளியது நாங்கள் செய்த தவப்பயனே ஆகும் என்று சொல்லி நின்றார். நிற்க, எல்லாப் பொருள்களையும் தானே வைக்கவும் மீள வாங்கவும் வல்லவரான அந்த இறைவர், முன் நாளில் உன்னிடம் நான் தந்து வைத்த ஒளியுடைய ஓட்டைத் தருவாயாக ! என்று மொழிந்தார்.

380. என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு
சென்றுமுன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி
நின்றவர் தம்மைக் கேட்டார் நேடியுங் காணார் மாயை
ஒன்றுமங் கறிந்தி லார்தாம் உரைப்பதொன் றின்றி நின்றார்.

தெளிவுரை : இவ்வாறு அவர் விரைந்து சொல்ல, அந்தப் பெரிய தவத்தவர் தந்த திருவோட்டை விரைவாகச் சென்று எடுத்து வருவதற்காகச் சென்றார். அதைத் தான் காவலுடன் வைத்த எல்லைக்குள் அவர் கண்டிலர். அதனால் அறிவு மயங்கிப் பார்த்து அங்கு நின்றவரையும் அது பற்றி வினவினார். அவர்களும் காணாராகவே தாமே மற்ற இடங்களிலும் தேடிப் பார்த்தும் அதனைக் காணார் ஆயினார். அவ்வோடு காணாது போன மாயையினை இன்னவாறு என்று ஒன்றும் அப்போது அறியாராகிப் பின் தவத்தவரிடம் உரைக்கும் மொழி ஒன்றும் தெரியாமல் வீட்டுக்குள் அங்கேயே இருந்தார்.

381. மறையவ னாகி நின்ற மலைமகள் கேள்வன் தானும்
உறையுளிற் புக்கு நின்ற ஒருபெருந் தொண்டர் கேட்ப
இறையிலிங் கெய்தப் புக்காய் தாழ்த்ததென் னென்ன வந்து
கறைமறை மிடற்றி னானைக் கைதொழு துரைக்க லுற்றார்.

தெளிவுரை : துறவியார் கோலம் கொண்டு வந்து நின்ற, உமையை ஒரு பாகத்தில் கொண்ட அவரும், வீட்டிற்குள் புகுந்து மேற் சொன்னவாறு மயங்கி நின்ற ஒப்பில்லாத பெருந் தொண்டர் கேட்குமாறு, விரைவாக இங்கு வர உள்ளே புகுந்தவனே ! இவ்வளவு நேரம் தாமதித்த காரணம் யாது? என்று உரக்கக் கேட்க, உடனே அத்தொண்டர் வெளியே திரும்பி வந்து கரிய கண்டத்தை மறைத்துக் கொண்டு வந்திருந்த துறவியாரைப் பார்த்துக் கை கூப்பித் தொழுது பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்.

382. இழையணி முந்நூன் மார்பின் எந்தைநீர் தந்து போன
விழைதரும் ஓடு வைத்த வேறிடந் தேடிக் காணேன்
பழையமற் றதனில் நல்ல பாத்திரந் தருவன் கொண்டிப்
பிழையினைப் பொறுக்க வேண்டும் பெருமவென் றிறைஞ்சி நின்றார்.

தெளிவுரை : எம் இறைவரே ! இழைகளால் ஆன பூணூல் அணிந்த மார்புடைய எம் தந்தை போன்றவரே ! நீர் என்னிடத்துக் கொடுத்துப் போன விரும்பத்தக்க திருவோட்டினை அது வைக்கப்பட்ட இடத்தினும் பிற இடங்களிலும் தேடியும் கண்டிலேன். எனவே காணாது போனது பழையது. அதை விட நல்ல வேறு புதிய ஓட்டைத் தருவேன். அதனை ஏற்றுக்கொண்டு உம் பாத்திரத்தைக் காணாது போக்கிய என் பிழையைக் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லித் தொண்டர் வணங்கி நின்றார்.

383. சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி
என்னிது மொழிந்த வாநீ யான்வைத்த மண்ணோ டன்றிப்
பொன்னினா லமைத்துத் தந்தாய் ஆயினுங் கொள்ளேன் போற்ற முன்னைநான் வைத்த வோடே கொண்டுவா வென்றான் முன்னோன்.

தெளிவுரை : யாவர்க்கும் மேலோரான இறைவர், தலையால் வணங்கி நின்ற நாயனாரைக் கோபித்தவர் போல் பார்த்து, நீ சொன்னது யாது? நான் உன்னிடம் தந்த மண்ணோடு அன்றிப் பொன்னால் ஓட்டைச் செய்து தந்தாயானாலும் அதை நான் பெற்றுக் கொள்ள மாட்டேன். உன்னால் பாதுகாக்கப்பட உன்னிடம் நான் வைத்த ஓட்டையே எடுத்துக்கொண்டு வா ! என்று இறைவர் சொன்னார்.

384. கேடிலாப் பெரியோய் என்பால் வைத்தது கெடுத லாலே
நாடியுங் காணேன் வேறு நல்லதோர் ஓடு சால
நீடுசெல் வதுதா னொன்று தருகின்றேன் எனவுங் கொள்ளாது
ஊடிநின் றுரைத்த தென்றன் உணர்வெலா மொழித்த தென்ன.

தெளிவுரை : என்றும் கெடுதல் இல்லாத பெரியோனே ! என்னிடம் நீர் தந்தது காணாமல் போனபடியால், அதை எங்கும் தேடியும் காணேன். அந்த ஓட்டை விட மிக நீண்ட காலம் பயன்படத் தக்கதையே தெரிந்து வேறு ஓடு ஒன்றைத் தருகின்றேன் என்று வணங்கிக் கூறியதைத் தாங்களும் ஏற்றுக் கொள்ளாமல் சினந்து நின்று சொன்ன இவ்வுரை என் உணர்வு முழுவதையும் ஒழித்துவிட்டது ! எனத் தொண்டர் கூறினார்,

385. ஆவதென் நின்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிப்
பாவகம் பலவும் செய்து பழிக்குநீ யொன்றும் நாணாய்
யாவருங் காண உன்னை வளைத்துநான் கொண்டே யன்றிப்
போவதுஞ் செய்யே னென்றான் புண்ணியப் பொருளாய் நின்றான்.

தெளிவுரை : உன்னால் இனி ஆகக் கூடியது என்ன? நான் உன்னிடம் அடைக்கலமாக வைத்த ஓட்டைக் களவு செய்து, பலப்பல வஞ்சகம் செய்து அதனால் வரும் பழிக்கு நாணாதவன் ஆனாய் ! யாவரும் காணும்படி உன்னை, வளைத்துப் பற்றி என் ஓட்டை உன்னிடமிருந்து பெற்றுக் கொண்டல்லாது இங்கிருந்து ஓரடியும் எடுத்து வைத்துப் போவதும் செய்ய மாட்டேன் என்று, புண்ணியங்களுக்கெல்லாம் பொருளாய் நின்ற இறைவர் உரைத்தருளினார்.

386. வளத்தினான் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை
உளத்தினுங் களவி லாமைக் கென்செய்கேன் உரையு மென்னக்
களத்துநஞ் சொளித்து நின்றான் காதலுன் மகனைப் பற்றிக்
குளத்தினின் மூழ்கிப் போவென் றருளினான் கொடுமை யில்லான்.

தெளிவுரை : வளம் மிக்க உம் ஓட்டை நான் திருடிக் கொள்ளவில்லை. செயலில் களவு இல்லாமையே அல்லாது என் உள்ளத்தில் களவு எண்ணம் இல்லாததைப் புலப்படுத்துவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ! கூறுங்கள் என்று தொண்டர் வினவினார். தம் கண்டத்தில் நஞ்சினை ஒளித்துக் கொண்டுள்ள இறைவர், அதைக் காட்டுவதற்கு உன் ஆசைக்குரிய மகனைக் கைப்பிடித்துக் கொண்டு குளத்தில் முழுகித் தந்து செல்வாயாக ! என்று கொடுமை இல்லாதவராகிக் கூறினார்.

387. ஐயர்நீ ரருளிச் செய்த வண்ணம்யான் செய்வ தற்குப்
பொய்யில்சீர்ப் புதல்வ னில்லை என்செய்கேன் புகலு மென்ன
மையறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னைப் பற்றி
மொய்யலர் வாவி புக்கு மூழ்குவாய் எனமொ ழிந்தார்.

தெளிவுரை : ஐயரே ! தாங்கள் உரைத்த வண்ணம் செய்தற்குப் பொய்மை இல்லாத சிறப்புடைய எனக்கு மகன் இல்லை ! ஆதலால் நான் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் ! என நாயனார் உரைக்க, இறைவர் அப்படியாயின், குற்றம் இல்லாத உன் மனைவியைப் பிடித்துக் கொண்டு நிறைவான பூக்களையுடைய குளத்தில் முழுகிச் சத்தியம் செய்வாயாக ! எனத் துறவியார் உரைத்தார்.

388. கங்கைநதி கரந்தசடை கரந்தருளி யெதிர்நின்ற
வெங்கண்விடை யவர்அருள வேட்கோவ ருரைசெய்வார்
எங்களிலோர் சபதத்தால் உடன்மூழ்க இசைவில்லை
பொங்குபுனல் யான்மூழ்கித் தருகின்றேன் போதுமென.

தெளிவுரை : கங்கை ஒளித்து இருத்தற்கு இடமான சடையை மறைத்து அருளி நின்ற கொடிய கண்ணையுடைய காளையை வாகனமாகக் கொண்ட இறைவர், இவ்வாறு உரைத்தருளினார். அதற்கு விடை கூறுபவராய், எங்களுக்குள் ஏற்பட்டுள்ள ஒரு சபதத்தால் நான் என் மனைவியார் கையைப் பற்றிக் கொண்டு உடல் மூழ்குதல் பொருந்தாது. என் குற்றம் இன்மையைக் காட்ட நீரில் நானே முழுகிக் கொடுக்கின்றேன் வாரும் என்று (உரைத்தார்) உரைக்க,

389. தந்ததுமுன் தாராதே கொள்ளாமைக் குன்மனைவி
அந்தளிர்ச்செங் கைப்பற்றி அலைபுனலின் மூழ்காதே
சிந்தைவலித் திருக்கின்றாய் தில்லைவா ழந்தணர்கள்
வந்திருந்த பேரவையில் மன்னுவன்யா னெனச்சொன்னார்.

தெளிவுரை : இறைவர் தொண்டரைப் பார்த்து, நான் உனக்கு முன் தந்த ஓட்டை என்னிடம் திருப்பித் தாராமலும், அதை நீ களவு செய்யவில்லை எனக் காட்ட உன் மனைவியின் அழகிய தளிர் போன்ற கையைப் பிடித்துக் கொண்டு புனலில் முழுகிச் சத்தியம் தாராமலும், உன் மனத்தில் வலிமை உடையவனாய் உள்ளாய் ! இதற்காக நான் தில்லைவாழ் அந்தணர்கள் கூடிய திருந்திய அவையிலே போய் வழக்குரைப்பேன் என்று உரைத்தார்.

390. நல்லொழுக்கந் தலைநின்றார் நான்மறையின் துறைபோனார்
தில்லைவா ழந்தணர்கள் வந்திருந்த திருந்தவையில்
எல்லையிலான் முன்செல்ல இருந்தொண்ட ரவர்தாமும்
மல்குபெருங் காதலினால் வழக்கின்மே லிட்டணைந்தார்.

தெளிவுரை : நல்லொழுக்கத்தில் சிறந்தவர்களும் நான்கு வேத நெறியில் வல்லவர்களுமாகிய தில்லை வாழ் அந்தணர்கள் வந்து கூடியிருந்த திருத்தமான சபையிலே, தனக்கு ஓர் எல்லையில்லாதவரான இறைவர் முன் செல்ல, பெரிய தொண்டரான திருநீலகண்டரும் மிக்கு எழுகின்ற காதலுடன் துறவியார் தொடர்ந்த வழக்குத் தொடரப்பட்டவராய், அவர் பின் தாமும் போய்ச் சேர்ந்தார்.

391. அந்தணனாம் எந்தைபிரான் அருமறையோர் முன்பகர்வான்
இந்தவேட் கோவன்பால் யான்வைத்த பாத்திரத்தைத்
தந்தொழியான் கெடுத்தானேல் தன்மனைவி கைப்பற்றி
வந்துமூழ் கியுந்தாரான் வலிசெய்கின் றான்என்றார்.

தெளிவுரை : அந்தணராய் வந்த பெருமான், தில்லை வாழ் அந்தணர் முன்னே சென்று சொல்வாராகி, இந்தக் குயவன் தன்னிடம் நான் ஒப்படைத்த பாத்திரத்தையும் தரமாட்டான். உண்மையில் அதைப் போக்கி விட்டானானால் அதைப் புலப்படுத்திக் காட்டத் தன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்து கொடுக்கவும் மாட்டான். இவ்வாறு இவன் வன்கண்மை செய்கின்றான் என்றார்.

392. நறைகமழுஞ் சடைமுடியும் நாற்றோளும் முக்கண்ணும்
கறைமருவுந் திருமிடறுங் கரந்தருளி எழுந்தருளும்
மறையவனித் திறமொழிய மாமறையோர் உரைசெய்வார்
நிறையுடைய வேட்கோவர் நீர்மொழியும் புகுந்ததென.

தெளிவுரை : தமக்குரிய மணம் கமழ்கின்ற சடை முடியினையும் நான்கு தோள்களையும் மூன்று கண்களையும் நீலகண்டத்தையும் மறைத்துக் கொண்டு அருள் செய்து எதிரே வெளிப்பட்டு நின்ற வேதியர் இவ்வாறு சொல்லத், தில்லை வாழந்தணர்கள், நல்ல பண்பு நிறைந்த குயவரே ! நிகழ்ந்ததை நீவிர் சொல்லும் என்று கூறினர்.

393. நீணிதியாம் இதுவென்று நின்றவிவர் தருமோடு
பேணிநான் வைத்தவிடம் பெயர்ந்துகரந் ததுகாணேன்
பூணணிநூன் மணிமார்பீர் புகுந்தபரி சிதுவென்று
சேணிடையுந் தீங்கடையாத் திருத்தொண்டர் உரைசெய்தார்.

தெளிவுரை : அணியாய்ப் பூணூல் அணிந்த மார்பை உடையவரே ! இது பெருஞ்செல்வமாகும் என்று சொல்லி இவர் என்னிடம் தந்த திருவோடு, நான் அதனை மிகவும் காவலாக வைத்த இடத்தினின்றும் நீங்கி எவ்வாறோ மறைந்து விட்டது. இதுவே நிகழ்ந்த செய்கை ! என்று, தீமை என்பது தம்மைத் தொலைவிலும் அணுகாத குயவரான தொண்டர் உரைத்தார்.

394. திருவுடை யந்த ணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின்
உருவுடை யிவர்தாம் வைத்த வோட்டினைக் கெடுத்தீ ரானால்
தருமிவர் குளத்தின் மூழ்கித் தருகவென் றுரைத்தா ராகில்
மருவிய மனைவி யோடு மூழ்குதல் வழக்கே யென்றார்.

தெளிவுரை : இங்ஙனம் இருவர் மொழியும் கேட்ட தில்லை வாழந்தணர்கள் தீர்ப்புச் சொல்பவர்களாய்த் தொண்டரைப் பார்த்து, திருநீறு பூசிய கோலத்தைக் கொண்ட இந்த வேதியர் தந்த ஓட்டை நீர் காணாமல் போகச் செய்து விட்டீர். அப்படியாயின், நீர் சொல்வதை ஒப்புக் கொள்வதற்காக அவ்வோட்டினைத் தந்த இவரே உம்மைக் குளத்தில் முழுகித் தருமாறு கேட்டாரானால், இவர் வேண்டிய வண்ணமே உம் அன்புக்குரிய மனைவியுடன் குளத்தில் முழுகிச் சத்தியம் செய்து தருவதே அறநூல் வழக்காகும் என்று மொழிந்தனர்.

395. அருந்தவத் தொண்டர் தாமும் அந்தணர் மொழியக் கேட்டுத்
திருந்திய மனைவி யாரைத் தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையான் மூழ்கித் தருகின்றேன் போது மென்று
பெருந்தவ முனிவ ரோடும் பெயர்ந்துதம் மனையைச் சார்ந்தார்.

தெளிவுரை : அரிய தவத்தையுடைய தொண்டரும் இங்ஙனம் அந்த அந்தணர்கள் கூறிய தீர்பைச் செவியேற்று, அவர்களிடம், திருந்திய தம் மனைவியைத் தாம் தீண்டாத நிலையைச் சொல்ல மாட்டாதவராகி வழக்கில் வெற்றியுற்ற பெருந்தவ முனிவரைப் பார்த்து, பொருத்தமானபடி நான் குளத்தில் முழுகித் தருவேன்; வருவீராக ! என்று சொல்லி, அந்த அந்தணருடனே அங்கிருந்து தம் இல்லத்தை அடைந்தார்.

396. மனைவியார் தம்மைக் கொண்டு மறைச்சிவ யோகி யார்முன்
சினவிடைப் பாகர் மேவுந் திருப்புலீச் சுரத்து முன்னர்
நனைமலர்ச் சோலை வாவி நண்ணித்தம் உண்மை காப்பார்
புனைமணி வேணுத் தண்டின் இருதலை பிடித்துப் புக்கார்.

தெளிவுரை : தம் இல்லத்தில் உள்ள மனைவியாரையும் தம்முடன் அழைத்துக் கொண்டு, வேதியர் முன்னே, பிரமாணம் செய்வதற்காக, காளையூர்தியினரான சிவ பெருமான் எழுந்தருளிய திருப்புலீச்சுரம் என்னும் ஆலயத்தின் முன்பு அமைந்துள்ள மலர்ச் சோலை சூழ்ந்த நீர் நிலையை அடைந்து, தாம் கைக் கொண்டு ஒழுகிய ஆணை காக்கும் உண்மைத் தன்மையைக் காட்டுபவராய், அதற்கு மாறுபடாமல் பொருந்திய வகையினால் ஆணையும் செய்யும் பொருட்டு, அழகிய ஒரு மூங்கில் தண்டின் இரு பக்கங்களையும் நாயனாரும் மனைவியாருமாகப் பிடித்துக் கொண்டு மூழ்கிச் சத்தியம் தருமாறு துணிந்து நீர் நிலைக்குள் புகுந்தார்.

397. தண்டிரு தலையும் பற்றிப் புகுமவர் தம்மை நோக்கி
வெண்டிரு நீற்று முண்ட வேதியர் மாதைத் தீண்டிக்
கொண்டுடன் மூழ்கீ ரென்னக் கூடாமை பாரோர் கேட்கப்
பண்டுதஞ் செய்கை சொல்லி மூழ்கினார் பழுதி லாதார்.

தெளிவுரை : இங்ஙனம் மூங்கில் தண்டின் இரண்டு பக்கங்களையும் பிடித்து முழுகப் போகும் அவரைப் பார்த்து வெண்மைத் திருநீற்றைத் திரிபுரண்டரமாய் அணிந்த இறைவர் மனைவியைத் தொட்டுக் கைப் பிடித்து மூழ்கித் தருவீராக எனக்கூற, எவ்வகையினும் குற்றம் அற்ற தொண்டர், தாம் மனைவியைத் தீண்டி மூழ்க இயலாமையை உலகர் கேட்குமாறு தம் பழைய செய்தியைச் சொல்லித் தாம் முன் துணிந்த அப்படியே குளத்தினுள் முழுகினார்.

398. வாவியின் மூழ்கி ஏறுங் கணவரும் மனைவி யாரும்
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத்
தேவரும் முனிவர் தாமுஞ் சிறப்பொடு பொழியுந் தெய்வப்
பூவின்மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற.

தெளிவுரை : நீர்நிலையில் முழுகிச் சத்தியம் தந்து கரையேறும் கணவரும் மனைவியாரும் அதற்கு முன்னம் தங்களிடம் பொருந்தியிருந்த முதுமைத் தன்மை நீங்கப் பெற்று விருப்பம் அளிக்கும் இளமையைப் பெற்றவராய்த் தேவர்களும் முனிவர்களும் இந்த அற்புதம் காரணமாகப் பொழிந்த கற்பகப் பூமழையில் மேலும் முழுகுபவர்களைப் போல் விளங்கவும்,

399. அந்நிலை யவரைக் காணும் அதிசயங் கண்டா ரெல்லாம்
முன்னிலை நின்ற வேத முதல்வரைக் கண்டா ரில்லை
இந்நிலை இருந்த வண்ணம் என்னென மருண்டு நின்றார்
துன்னிய விசும்பி னூடு துணையுடன் விடைமேற் கண்டார்.

தெளிவுரை : அந்நிலையில் நின்ற அந்த இருவரையும் காணப் பெற்ற அதிசயத்தைக் கண்கூடாகக் கண்ட உலகத்தவர் அனைவரும் தங்கள் முன்னால் நின்ற வேதியராய் வந்திருந்த இறைவனைக் காணவில்லை ! இங்ஙனம் நிகழ்ந்த வண்ணம் தான் யாது? என்று மருட்சியை அடைந்தவராகிப் பின்பு பொருந்திய வானத்தின் வெளிக்குள்ளே தம் துணைவியான உமையம்மையாருடன் காளை யூர்தியின் மீது காட்சியளித்தார்.

400. கண்டனர் கைக ளாரத் தொழுதனர் கலந்த காதல்
அண்டரும் ஏத்தி னார்கள் அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி விடையின்மேல் வருவார் தம்மைத்
தொண்டரும் மனைவி யாருந் தொழுதுடன் போற்றி நின்றார்.

தெளிவுரை : இறைவரைக் கண்ணாரப் பார்த்தனர். கைகளால் தொழுதனர்; அன்பரின் பெருமையைப் பார்த்து விருப்பம் மிக்க தேவர்களும் துதித்தார்கள். வானத்தில் பொருந்திய அழகிய திருக்கோலத்தை வெளியாகக் காட்டிக் காளையூர்தியின் மேல் எழுந்தருளி வந்த இறைவரை நாயனாரும் மனைவியாரும் தொழுது துதித்து நின்றனர்.

401. மன்றுளே திருக்கூத் தாடி அடியவர் மனைகள் தோறுஞ்
சென்றவர் நிலைமை காட்டுந் தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனான் மிக்கீர் விருப்புட னிருக்க நம்பால்
என்றுமிவ் விளமை நீங்கா தென்றெழுந் தருளி னாரே.

தெளிவுரை : அம்பலத்துள் திருக்கூத்தாடி அடியார்களின் வீடுதோறும் சென்று அவர்களின் உண்மை நிலையை உலகம் அறியக் காட்டுகின்ற தேவரான இறைவரும், தொண்டரையும் அவருடைய மனைவியாரையும் பார்த்து, வென்று அடிப்படுத்திய ஐம்புலன்களால் மிக்கு விளங்குபவர்களே ! நீங்கள் இப்போது எம் அருளால் மீளப் பெற்ற இந்த இளமை எக்காலத்தும் நீங்கா நிலைமையுடன் எம்மிடத்தில் இருப்பீராக ! என்று அருளித் தம் நிறைவு நிலையுள் எழுந்தருளிச் சென்றார்.

402. விறலுடைத் தொண்ட னாரும் வெண்ணகைச் செவ்வாய் மென்றோள்
அறலியற் கூந்த லாராம்மனைவியும் அருளின் ஆர்ந்த
திறலுடைச் செய்கை செய்து சிவலோக மதனை யெய்திப்
பெறலரு மிளமை பெற்றுப் பேரின்பம் உற்றா ரன்றே.

தெளிவுரை : வல்லமையுடைய தொண்டரும், வெண்மையான பற்களும் சிவந்த வாயும் மென்மையான தோளும் கருமணல் போன்ற கூந்தலும் உடைய மனைவியாரும், அருளால் நிறைந்த திறமையான அரிய செய்கை செய்து மேலே சொன்ன வண்ணம் அதன் விளைவான சிவலோகத்தை அடைந்து, மற்றவர் எவராலும் பெறுவதற்கரிய இளமையைப் பெற்றவராய் அப்போதே பேரின்பத்தை அடைந்து விளங்கினர்.

403. அயலறி யாத வண்ணம் அண்ணலா ராணை யுய்த்த
மயலில்சீர்த் தொண்ட னாரை யானறி வகையால் வாழ்த்திப்
புயல்வளர் மாட நீடும் பூம்புகார் வணிகர் பொய்யில்
செயலியற் பகையார் செய்த திருத்தொண்டு செப்ப லுற்றேன்.

தெளிவுரை : அயலார் எவரும் அறியாதபடியாய் இறைவரது திருநீலகண்ட ஆணையைக் கடவாமல் பாதுகாத்து வாழ்ந்தவரும், உலக மயக்கத்துடன் படாது நீங்கியவருமாகிய சிறப்புடைய திருநீலகண்ட நாயனாரை யான் அறிந்த அளவில் வாழ்த்தி, அவரது புராணத்தை முடித்துக் கொண்டு, மேகங்கள் தவழ்ந்து தங்குமாறு உயர்ந்த மாடங்கள் பொருந்திய அழகிய புகார் நகரம் என்னும் காவிரிப் பூம்பட்டினத்தே வாழ்ந்த வணிகரான பொய்மை என்பது இல்லாத செயல் செய்கின்ற இயற்பகை நாயனார் ஆற்றிய திருத்தொண்டைக் கூறத் தொடங்குகின்றேன்.

திருநீலகண்ட நாயனார் புராணம் முற்றுப் பெற்றது.

 

9. இயற்பகை நாயனார் புராணம்

காவிரிப் பூம்பட்டினத்தில் தோன்றியவர் இயற்பகை நாயனார். அவர் சிவனடியார்க்கு வேண்டியவற்றையெல்லாம் இல்லை என்னாது தந்து வந்தார். இறைவர், அவரது இயல்பை உலகத்துக்கு உணர்த்த எண்ணினார். ஓர் அந்தணர்போல் இயற்பகையாரிடம் வந்தார். நீங்கள் எதைக் கேட்டாலும் தருவதாகக் கேள்விப்பட்டேன். அதனால் தங்களிடம் வந்தேன் என்றார். இயற்பகையார் அவர் வேண்டியது எதுவாயினும் தாம் தருவதாக உறுதி கூறினார். இறைவர், உம் மனைவியை எனக்குத் தருக! என்றார். நாயனார் தயங்கவில்லை! தம் மனைவியிடம் நிகழ்ந்ததைச் சொல்லி அவரை இறைவர்க்கு அளித்தார். இறைவர் தாம் அவருடைய மனைவியை அழைத்துச் செல்லும் போது நாயனாரின் உறவினர் வந்து தடுக்கக்கூடும் அதனால் தமக்குப் பாதுகாவல் வேண்டும் என்றார். உடனே இயற்பகையார் ஆயுதம் தாங்கி அவர்க்கு துணையாகிச் சென்றார். இறைவர் முன்னே! நாயனாரின் மனைவி பின்னே! இயற்பகையார் அவர்க்குப் பின்னே! இப்படிச் சென்றனர். திருசாய்க்காடு வந்தது. நீ திரும்பிச் செல்லலாம் என்றார் இறைவர். நாயனார் சற்றும் கலக்கமின்றி திரும்பிச் சென்றார். அச்சமயத்தில் இறைவர் தம்மைக் காப்பாற்ற வேண்டும் என்று ஓலம் இட்டார். நாயனார் திரும்பிச் சென்றபோது அந்தணராய் வந்த இறைவர் அங்கு இல்லை! விடைபாகராய்க் காட்சி தந்தார். தம் திருவடியை அடைய அருள் செய்தார்.

404. சென்னி வெண்குடை நீடந பாயன்
திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
புணரி தன்னையும் புனிதமாக் குவதோர்
நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய
நலஞ்சி றந்தது வளம்புகார் நகரம்.

தெளிவுரை : நீடுகின்ற வெண் கொற்றக் குடையையுடைய சோழர் குலத் தோன்றலான அநபாயப் பெருமன்னனின் முன்னவர்களான மன்னர்கள் புகழ் பொருந்திய சிறப்பில் நிலைத்த புகழ் கொண்ட மருத நிலத்தைச் சார்ந்த நீர் நாட்டிலே உள்ள வயல்களில் வளங்கள் பெருகுமாறு இயல்பாய் அளித்த காவிரியின் மிக்க நீர் பாய்தலால் கடலையும் தூய்மையாக்குகின்ற ஒரு நல்ல நீண்ட பெரிய நீர்நிலையை முன்னே உடையது வளம் வாய்ந்த புகார் என்ற காவிரிப் பூம்பட்டினம்.

405. அக்கு லப்பதிக் குடிமுதல் வணிகர்
அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண்பிறைச் சடையவ ரடிமைத்
திறத்தின் மிக்கவர் மறைச்சிலம் படியார்
மிக்க சீரடி யார்கள்யா ரெனினும்
வேண்டும் யாவையும் இல்லையென் னாதே
இக்க டற்படி நிகழமுன் கொடுக்கும்
இயல்பின் நின்றவர் உலகியற் பகையார்.

தெளிவுரை : இவ்வுலகில் இயற்பகையார் என்ற பெயரையுடையவர்; அத்தகைய வளம் வாய்ந்த நகரத்தில் நிலைத்து வாழ்பவர்; முதல் வணிக மரபினர். அவர் அளவில்லாத செல்வத்தால் வந்த எல்லா வளங்களையும் உடையவர். சிவந்த மாலைக் காலத்தில் தோன்றி விளங்குகின்ற பிறைச் சந்திரனை அணிந்த சடையுடைய சிவபெருமானின் அடிமைத் திறத்தில் சிறந்தவர். வேதங்களான சிலம்புகள் ஒலிக்கின்ற திருவடிகளையுடைய சிவபெருமானின் பெருஞ் சிறப்புடைய அடியவர் எவரேனும் கடல் சூழ்ந்த உலகத்தில் விளங்க முன்னே கொடுக்கும் தன்மையில் சிறந்தவர்.

406. ஆறு சூடிய ஐயர்மெய் யடிமை
அளவி லாததோர் உளம்நிறை யருளால்
நீறு சேர்திரு மேனியர் மனத்து
நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறி லாதநன் னெறியினில் விளங்கும்
மனைய றம்புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெ லாம்அவ ரேவின செய்யும்
பெருமை யேயெனப் பேணிவாழ் நாளில்.

தெளிவுரை : கங்கையாற்றைச் சடையில் சூடிய இறைவரின் உண்மையான அடிமைத் திறத்தில் அளவு படாததாய் மனத்தில் அருள் நிறைதலால் திருநீறு பூசிய மேனியைக் கொண்ட அடியவர் தம் உள்ளத்தில் நினைத்த எல்லாவற்றையும் செயலிலே நிறைவேற்றித் தந்து, மாறுபாடில்லாத நல்ல வழியில் சிறந்து இல்லறத்தில் வாழ்வதால் வருகின்ற சிறப்புகள் எல்லாம் அந்த அடியார்கள் இடுகின்ற ஏவல் எவையோ அவற்றைச் செய்து முடிக்கும் பெருமையேயாகும் என்று எண்ணி, அத்தகைய கொள்கை வழியினின்றும் தவறாமல் பாதுகாத்து வந்தார். அவ்வாறு வரும் நாளில்,

407. ஆயும் நுண்பொரு ளாகியும் வெளியே
அம்ப லத்துள்நின் றாடுவா ரும்பர்
நாய கிக்குமஃ தறியவோ பிரியா
நங்கை தானறி யாமையோ அறியோம்
தூய நீறுபொன் மேனியில் விளங்கத்
தூர்த்த வேடமுந் தோன்றவே தியராய்
மாய வண்ணமே கொண்டுதம் தொண்டர்
மறாத வண்ணமுங் காட்டுவான் வந்தார்.

தெளிவுரை : சிவ ஞானத்தால் ஆராய்கின்ற மிக்க நுட்பமான பொருளேயாகி யாவரும் காண வெளிப்படையாய்த் திருச்சிற்றம்பலத்தில் நின்று ஆடுகின்ற இறைவர், மேலாம் தலத்தில் விளங்கும் உமையம்மையார் தாம் இங்ஙனம் கோலம் கொண்டு வந்து செய்யும் செயலை அறியும்படியாகவோ அல்லது அவர் அறியாத வகையிலோ, இத்தகையயது என்று நாம் அறியோம் ! தூய வெண்ணீறு தம் பொன் மேனியில் விளக்கம் பெறவும் அதற்கு மாறாய்த் தூர்த்த வேடமும் அந்த மேனியில் வெளிப்படையாய் விளங்கவும், வேதியராம் தம் மறைந்த வடிவத்தையே கொண்டு உலகத்தவர் காண அதனைக் காட்டுதலே அன்றித் தம் அடியவரான இயற்கையார் சிவனடியார் வேண்டியவை எவையேயாயினும் இல்லை என்னாது தரும் இயல்பைக் காட்டும் பொருட்டு வந்தார்.

408. வந்து தண்புகார் வணிகர்தம் மறுகின்
மருங்கி யற்பகை யார்மனை புகுத
எந்தை யெம்பிரான் அடியவர் அணைந்தார்
என்று நின்றதோர் இன்பஆ தரவால்
சிந்தை யன்பொடு சென்றெதிர் வணங்கிச்
சிறப்பின் மிக்கவர்ச் சனைகள்முன் செய்து
முந்தை யெம்பெருந் தவத்தினால் என்கோ
முனிவர் இங்கெழுந் தருளிய தென்றார்.

தெளிவுரை : மேல் கூறிய வண்ணம் வந்து காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் தெருவில் ஒரு பக்கத்தில் உள்ள இயற்பகையார் இல்லத்தில் அந்த வேதியரான இறைவர் புகுந்தார். புகவே, எம் இறைவரின் அடியவர் வந்தணைந்தார் என எண்ணி, எப்போதும் தம் உள்ளத்தில் நிலைத்து நின்ற இன்பம் உடைய ஆதரவினால் எழுந்த அன்புடனே எதிர் கொண்டு வணங்கி அழைத்து வந்து சிறப்பான அருச்சனைகளை யெல்லாம் செய்து முடித்து, எம் முன்னோரும் அடியேனும் செய்த பெருந்தவத்தின் பயனாகவோ பெரு முனிவரான தாங்கள் இங்கு எழுந்தருளி வரப்பெற்றது ? என்று முகமன் கூறினார்,

409. என்று கூறிய இயற்பகை யார்முன்
எய்தி நின்றவக் கைதவ மறையோர்
கொன்றை வார்சடை யாரடி யார்கள்
குறித்து வேண்டின குணமெனக் கொண்டே
ஒன்று நீரெதிர் மறாதுவந் தளிக்கும்
உண்மை கேட்டுநும் பாலொன்று வேண்டி
இன்று நானிங்கு வந்தனன் அதனுக்கு
இசைய லாமெனில் இயம்பலா மென்றார்.

தெளிவுரை : என்று இவ்வாறு சொன்ன இயற்பகையார் முன்னே வந்து நின்ற அந்தத் தூர்த்த வேதியர் கொன்றை அணிந்த நீண்ட சடையையுடைய இறைவரின் அடியவர் வேண்டியவை எவையேனும் அவையெல்லாம் குணமாம் எனக் கொண்டு, அவர்கள் வேண்டியவை ஒன்றையும் மறுக்காது விருப்பத்துடன் கொடுக்கும் உண்மைத் தன்மையைக் கேட்டு உன்னிடம் ஒரு பொருளை விரும்பி இன்று இங்கு நான் வந்தேன். அதற்கு நீ சம்மதிப்பாயானால் நான் எண்ணியதைச் சொல்வேன் எனச் சொன்னார்.

410. என்ன அவ்வுரை கேட்டியற் பகையார்
யாதும் ஒன்றுஎன் பக்கலுண் டாகில்
அன்ன தெம்பிரான் அடியவர் உடைமை
ஐய மில்லைநீ ரருள்செய்யு மென்ன
மன்னு காதலுன் மனைவியை வேண்டி
வந்த திங்கென அந்தண ரெதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து
தூய தொண்டனார் தொழுதுரை செய்வார்.

தெளிவுரை : என இறைவர் கூற அதனைக் கேட்ட இயற்பகை நாயனார், தாங்கள் வேண்டுவது எதுவாயினும் அது என்னிடம் இருப்பதாயின் அது எம் பெருமானின் உடைமையாகும். இதில் ஐயம் இல்லை; நீவிர் வேண்டிய பொருளை இன்னது என்று உரையுங்கள் எனக் கூறினார். நிலை பெற்ற காதலில் உன் மனைவியைப் பெற வேண்டி நான் இங்கு வந்தேன் என்று இறைவர் உரைத்தார். மறைவிடத்தும் கூறத் தகாத இச்சொற்களை எதிரே நின்று சொல்லிய போதிலும், அதைக் கேட்டுப் பொறுத்துக் கொண்டதே அல்லாது முன்னைவிட மகிழ்ச்சியும் அடைந்து, தூய தொண்டரான இயற்பகையார் இறைவரை மேலும் மேலும் வணங்கிச் சொல்லலானார்.

411. இதுவெ னக்குமுன் புள்ளதே வேண்டி
எம்பி ரான்செய்த பேறெனக் கென்னாக்
கதுமெனச் சென்று தம்மனை வாழ்க்கைக்
கற்பின் மேம்படு காதலி யாரை
விதிம ணக்குல மடந்தைஇன் றுனைஇம்
மெய்த்த வர்க்குநான் கொடுத்தனன் என்ன
மதும லர்க்குழல் மனைவியார் கலங்கி
மனந்தெ ளிந்தபின் மற்றிது மொழிவார்.

தெளிவுரை : முன்னமே என்னிடம் உள்ள ஒரு பொருளையே வேண்டிய வகையால், எம்பிரான் எனக்குத் தந்த பேறு இதுவாம் என்று சொல்லி, இயற்பகையார் விரைவாக வீட்டிற்குள் போய், தம் மனைவாழ்க்கைக்கு உரியவராயும் கற்பிற் சிறந்தவராயும், தம் காதலுக்கு உரியவராயும் இருக்கும் தம் மனைவியைப் பார்த்து விதிப்படி மணம் செய்து கொண்ட என் குல மடந்தையே ! இன்று உன்னை இங்கே வந்துள்ள துறவியார்க்கு நான் தந்துவிட்டேன் என்றார். தேன் உடைய மலர்களைச் சூடிய மனைவியார் அதைக் கேட்டுக் கலங்கினார். பின் தெளிவடைந்து கூறலானார்.

412. இன்று நீரெனக் கருள்செய்த திதுவேல்
என்னு யிர்க்கொரு நாதநீ ருரைத்தது
ஒன்றை நான்செயு மத்தனை யல்லால்
உரிமை வேறுள தோவெனக் கென்று
தன்த னிப்பெருங் கணவரை வணங்கத்
தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்கச்
சென்று மாதவன் சேவடி பணிந்து
திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்.

தெளிவுரை : இயற்பகையாரின் மனைவியார், நீங்கள் இன்று எனக்கு அருளிய ஆணை இதுவானால், என் உயிர்க் கணவரான நீங்கள் அருளிச் செய்தது எதுவாயினும் அதனை அவ்வாறு செய்வதே தவிர எனக்கு வேறு உரிமையுண்டோ? எனக்கூறி, ஒப்பில்லாத தம் கணவரை வணங்கி நின்றார். அங்ஙனம் வணங்கிய மனைவியாரைப் பணிந்து நாயனார் தாமும் எதிராக வணங்கினார். பின் இலக்குமியை விடச் சிறந்தவரான அந்த அம்மையார் சென்று இறைவரான மாதவரின் அடியை வணங்கித் திகைப்புடன் நின்றார்.

413. மாது தன்னைமுன் கொடுத்தமா தவர்தாம்
மனம கிழ்ந்துபே ருவகையின் மலர்ந்தே
யாது நானினிச் செய்பணி என்றே
இறைஞ்சி நின்றவர் தம்மெதிர் நோக்கிச்
சாதி வேதிய ராகிய தலைவர்
தையல் தன்னையான் தனிக்கொடு போகக்
காதல் மேவிய சுற்றமும் பதியுங்
கடக்க நீதுணை போதுக வென்றார்.

தெளிவுரை : மனைவியாரை முன்னர்க் கொடுத்த மாதவரான இயற்பகையார் முன்பை விட உள்ள மகிழ்ச்சியுடன் பேருவகையிற் சிறந்து அவரை நோக்கி ,இனி நான் செய்யக் கூடிய பணி யாது? என்று பணிந்து வினவினார். இறைவர் அவரை எதிர் நோக்கி இயல்பிலே வேதியரான அவர். இம்மங்கையை நான் தனியாய்க் கொண்டு செல்லும் போது இவளிடமும் உன்னிடமும் விருப்புடைய சுற்றத்தாரையும் இவ்வூரவர்களையும் நான் கடந்துசெல்ல நீ துணையாய் என்னுடன் வருதல் வேண்டும் என உரைத்தார்.

414. என்றவர் அருளிச் செய்ய யானேமுன் செய்குற் றேவல்
ஒன்றிது தன்னை யென்னை யுடையவர் அருளிச் செய்ய
நின்றது பிழையா மென்று நினைந்துவே றிடத்துப் புக்குப்
பொன்றிகழ் அறுவை சாத்திப் பூங்கச்சுப் பொலிய வீக்கி.

தெளிவுரை : என இறைவரான வேதியர் கூறியருள, நான் முன்னரே இவர் சொல்வதற்கு முன்னம் செய்து, முடிக்க வேண்டிய ஒரு செயல் இது ! இதனை என்னை உடையவரான இம்மாதவர் எடுத்துக் கூறுமளவும் செய்யாமல் காலம் தாழ்ந்து நின்றது என் குற்றமேயாகும் என்று தமக்குள் எண்ணியவராய், வீட்டின் வேறு இடத்தில் சென்று, பொன் திகழும் நல்ல ஆடையை அணிந்து கொண்டு, அதன் மீது அழகிய கச்சிகனைக் கட்டி,

415. வாளொடு பலகை யேந்தி வந்தெதிர் வணங்கி மிக்க
ஆளரி யேறு போல்வார் அவரைமுன் போக்கிப் பின்னே
தோளிணை துணையே யாகப் போயினார் துன்னி னாரை
நீளிடைப் படமுன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார்.

தெளிவுரை : வாளும் பலகையும் கொண்டவராய் மீண்டு இறைவர் எதிரே வந்து வணங்கி வீரம் மிக்க ஆண் சிங்கம் போன்ற தொண்டனார் தம்மை மறுத்து எதிர்த்து வந்தவர்களை யெல்லாம் நெருங்கி எதிர்த்து நிலத்தில் வீழ்த்த எண்ணியவராய், இறைவர் அம்மையார் என்ற இருவரையும் தமக்கு முன்னே போகச் செய்து தாம் பின்னால் சென்றார்.

416. மனைவியார் சுற்றத் தாரும் வள்ளலார் சுற்றத் தாரும்
இனையதொன் றியாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால்
புனையிழை தன்னைக் கொண்டு போவதா மொருவ னென்று
துனைபெரும் பழியை மீட்பான் தொடர்வதற் கெழுந்து சூழ்வார்.

தெளிவுரை : மனைவியாரின் சுற்றத்தாரும் வள்ளலாரான தொண்டரின் சுற்றத்தாரும், இத்தகைய செயலை இதுவரை யார்தான் செய்தார்? இவர் தாம் பித்தம் கொண்டு இத்தகைய செயலைச் செய்வாரானால் அது காரணமாக ஒருவர் மனைவியாரை அழைத்துக் கொண்டு போய் விடுவதா? என எண்ணி, இச்செயலால் உற்ற பெரும் பழியினின்றும் மீட்பதற்காக அவரைப் பற்றித் தொடர்வதற்காக எழுந்து சுற்றிக் கொள்பவராய்,

417. வேலொடு வில்லும் வாளுஞ் சுரிகையு மெடுத்து மிக்க
காலென விசையிற் சென்று கடிநகர்ப் புறத்துப் போகிப்
பாலிரு மருங்கு மீண்டிப் பரந்தஆர்ப் பரவம் பொங்க
மால்கடல் கிளர்ந்த தென்ன வந்தெதிர் வளைத்துக் கொண்டார்.

தெளிவுரை : வேலும் வில்லும் வாளும் சுரிகையும் என்ற இவற்றை எடுத்துக் கொண்டு அளவில் மிக்கு எழுகின்ற காற்றைப் போல் வேகமாகச் சென்று காவலையுடைய அந்த நகரத்தின் ஒரு பக்கத்தில் போய் நெருங்கிப் பரந்த ஆரவாரத்துடன் பெருங்கடல்தான் பொங்கி எழுந்ததோ என்னுமாறு எதிரே வந்து வளைத்துக் கொண்டனர்.

418. வழிவிடுந் துணைபின் போத வழித்துணை யாகி யுள்ளார்
கழிபெருங் காதல் காட்டிக்காரிகை யுடன்போம் போதில்
அழிதகன் போகேல் ஈண்டவ் வருங்குலக் கொடியை விட்டுப்
பழிவிட நீபோ வென்று பகர்ந்தெதிர் நிரந்து வந்தார்.

தெளிவுரை : வழியைக் காத்து விடும் துணையாக ஆகிச் சென்ற தொண்டர் பின்னால் வர, வழித் துணையாகி உள்ளவரான வேதியர் பெருங்காதலைக் காட்டிக் கொண்டு அம்மையாருடன் பின் சென்றார். அப்போது துன்மார்க்கனே ! போகாதே நில் ! இங்கு எம் குலக் கொடியான அம்மையாரை விடுத்து உன் செயலால் உண்டான பழியை நீங்கிச் செல்வாயாக, எனக் கூறி, எதிரில் கூட்டமாகக் கூடிவந்தனர்.

419. மறைமுனி யஞ்சி னான்போல் மாதினைப் பார்க்க மாதும்
இறைவனே அஞ்ச வேண்டா இயற்பகை வெல்லு மென்ன
அறைகழ லண்ணல் கேளா அடியனே னவரை யெல்லாம்
தறையிடைப் படுத்து கின்றேன் தளர்ந்தருள் செய்யே லென்று.

தெளிவுரை : வேத முனிவரான இறைவர் அச்சம் கொண்டாற் போல், இயற்பகையாரின் மனைவியாரைப் பார்க்க, அவரும், இறைவ! அஞ்ச வேண்டியதில்லை ! அவர்கள் அனைவரையும் இயற்பகையார் வெல்வார் ! என்று உரைத்தார். அதனை ஒலிக்கும் கழலை அணிந்த நாயனார் கேட்டார். அடியேன் அவர்களை யெல்லாம், உமக்கு இடையூறு செய்யாது தரையில் விழும்படி செய்கின்றேன். தளர வேண்டாம் ! என்று (கூறினார்)

420. பெருவிறல் ஆளி என்னப் பிறங்கெரி சிதற நோக்கிப்
பரிபவப் பட்டு வந்த படர்பெருஞ் சுற்றத் தாரை
ஒருவரு மெதிர்நில் லாமே ஓடிப்போய்ப் பிழையு மன்றேல்
எரிசுடர் வாளிற் கூறாய்த் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்.

தெளிவுரை : பெரிய ஆற்றலையுடைய சிங்கம் போல் தீப்பொறி சிந்தப்பார்த்து, தம் குலம் அவமானம் அடையப் போகின்றதே என்று இரங்கி அதைக் காக்கும் பொருட்டாக வந்த பெருஞ்சுற்றத்தாரைப் பார்த்து, நீங்கள் ஒருவரும் இங்கு எனது எதிரில் நில்லாது ஓடிப் போய் உயிர் தப்பிப் பிழைத்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்யாவிட்டால் தீப்போல் வருந்தும் என் வாளால் துண்டாக வெட்டப்பட்டுத் துடிக்கப் போகின்றீர் ! எனக் கூறிக் கொண்டு அவர்களின் முன்னால் சென்று போரிடுபவராய் நின்றார்.

421. ஏடநீ யென்செய் தாயால் இத்திறம் இயம்பு கின்றாய்
நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்ற
பாடவம் உரைப்ப துன்றன் மனைவியைப் பனவற் கீந்தோ
கூடவே மடிவ தன்றிக் கொடுக்கயாம் ஒட்டோ மென்றார்.

தெளிவுரை : தொண்டர் இயற்பகையார் இவ்வாறு சொல்லவே, சுற்றத்தார்கள் ஏடா ! நீ என்ன செயலைச் செய்தாய். இந்த நாட்டவர்க்கு உன் செய்கையால் வரும் பழியையும் பகைவர் இகழ்ச்சியாய் நகைப்பதையும் பார்த்து நீ நாணம் கொள்ளவில்லை ! மனைவியை ஒரு வேதியனுக்கு அளித்து விட்டோ உன் வலிமையை நீ புகழ்ந்து பேசிக் கொள்வது? இதில் இறக்க நேர்ந்தாலும் நாங்கள் ஒருசேர இறந்து விடுவதே அல்லாது நீ உன் மனைவியை வேதியனுக்குத் தர விட மாட்டோம் ! எனவுரைத்தனர்.

422. மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த
செற்றமுன் பொங்க உங்கள் உடற்றுணி யெங்குஞ் சிந்தி
முற்றுநும் உயிரை யெல்லாம் முதல்விசும் பேற்றிக் கொண்டு
நற்றவர் தம்மைப் போக விடுவன்என் றெழுந்தார் நல்லோர்.

தெளிவுரை : சுற்றத்தார்கள் கூறிய இச்சொற்களைக் கேட்டதும் உள்ளத்தில் உள்ள சினமானது பொங்க, அவர்களைப் பார்த்து, உங்கள் உடல்களைத் துண்டாக்கி அத்துண்டுகளை எங்கும் சிந்தி, உங்கள் உயிரையெல்லாம் முன்னே விண்ணில் ஏற்றி அதன் பின்பு இந்த நற்றவரைப் போகுமாறு செய்வேன் ! என்று எழுந்தார்.

423. நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்தவச் சுற்றத் தாரும்
சார்ந்தவர் தம்முன் செல்லார் தையலைக் கொண்டு பெற்றம்
ஊர்ந்தவர் படிமேற் செல்ல உற்றெதிர் உடன்று பொங்கி
ஆர்ந்தவெஞ் சினத்தால் மேற்சென் றடர்ந்தெதிர் தடுத்தா ரன்றே.

தெளிவுரை : இயற்பகையார் போருக்கு நேர்ந்து எழுந்த சமயத்தில், அங்கு நிறைந்திருந்த சுற்றத்தவர்களும் இவ்வாறு சார்ந்த அவரது முன்பு செல்லாது, எப்போதும் எருதை ஊர்ந்து வருபவரான வேதியர் இங்கு அம்மையாரை உடன் கொண்டு நிலத்தில் நடந்து செல்ல, அவரை அப்போதே எதிர்த்துப் பொங்கிய பெருஞ்சினத்தால் மேலே பாய்ந்து எதிரில் சென்று தடுத்தனர்.

424. சென்றவர் தடுத்த போதில் இயற்பகை யார்முன் சீறி
வன்றுணை வாளே யாகச் சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளுந் தாளுந் தலைகளுந் துணித்து வீழ்த்து
வென்றடு புலியே றென்ன அமர்விளை யாட்டின் மிக்கார்.

தெளிவுரை : சுற்றத்தார் வேதியரை அங்ஙனம் தடுத்தபோது, இயற்பகையார் முன் சீறித் தம் வாளையே துணையாகக் கொண்டு இடம் வலமாகச் சாரி சுற்றி வந்து, எதிர்த்து நெருங்கியவரின் தோள்களும், கால்களும், தலைகளும் உடலினின்று கூறாகத் துண்டுகள் ஆகுமாறு வெட்டி நிலத்தில் விழச் செய்து, வெற்றி கொண்டு, போர் செய்யும் ஆண்புலியைப் போல் போர் விளையாட்டில் தாமே சிறந்தவராக விளங்கினார்.

425. மூண்டுமுன் பலராய் வந்தார் தனிவந்து முட்டி னார்கள்
வேண்டிய திசைகள் தோறும் வேறுவே றமர்செய் போழ்தில்
ஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவ ராகிக்
காண்டகு விசையிற் பாய்ந்து கலந்துமுன் துணித்து வீழ்த்தார்.

தெளிவுரை : இந்தப் போரில் பலர் ஒன்று கூடி எதிர்க்கவும், தனித்தனியாய் எதிர்ப்பவராயும், சுற்றத்தார் தத்தமக்கு வேண்டிய அவ்வத் திசைகளில் வந்து எதிர்த்துப் போர் செய்தனர். அப்போது ஆண்மை மிக்க நாயன்மார் ஒருவர் தாமே, அவ்வத் திறத்தாரையும் தாம் ஒருவரேயாக எதிர்த்து அவர்கள் அங்கங்கே தம்மைக் காணத்தக்க வகையில் சாரிகையாய்ச் சுற்றி அவர்கள் மீது பாய்ந்து போரிட்டு முன்னே அவ்வவர்களையும் வெட்டி நிலத்தில் வீழ்த்தினார்.

426. சொரிந்தன குடல்க ளெங்குந் துணிந்தன உடல்க ளெங்கும்
விரிந்தன தலைக ளெங்கும் மிடைந்தன கழுகு மெங்கும்
எரிந்தன விழிக ளெங்கும் எதிர்ப்பவ ரொருவ ரின்றித்
திரிந்தனர் களனில் எங்குஞ் சிவன்கழல் புனைந்த வீரர்.

தெளிவுரை : அங்ஙனம் அவர் போர் செய்தபோது, அப்போர்க்களத்தில் எங்கும் எதிர்த்தவரின் குடல்கள் செறிந்து கிடந்தன. உடல்கள் துண்டுபட்டுக் கிடந்தன; தலைகள் பரந்து கிடந்தன; எங்கும் கழுகுகள் கூடின; கண்கள் எரிந்தன; சிவபெருமானின் அடிகளையே எண்ணும் இயற் பகையார் ஒருவரே தம்மை மேலும் எதிர்ப்பவர் இல்லாமையால் தனியாய் (அக்களத்தில்) உலவினார்.

427. மாடலை குருதி பொங்க மடிந்தசெங் களத்தின் நின்றும்
ஆடுறு செயலின் வந்த கிளைஞரோ டணைந்தார் தம்மில்
ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்
நீடிய வாளுந் தாமும் நின்றவர் தாமே நின்றார்.

தெளிவுரை : வெட்டுப்பட்ட உடல் துண்டங்களின் பக்கத்தில் அலை போல் விட்டு விட்டுக் குருதிப் பெருக்கானது மேலும் மேலும் பொங்கியது. இவ்வாறு எதிர்த்தவர் மடிந்த போர்க் களத்தினின்று, எதிர்த்தழிக்கும் செயலை மேற்கொண்டு வந்த உறவினருடனே சேர்ந்தவர் எல்லாரினும் ஓடிச் சென்றவர் உயிர் தப்பினர். இவர்களை யல்லாது அங்கு எதிர்த்து நின்ற மற்றவர் எல்லாரும் மடிந்தே போயினர். தமக்கு ஒரே துணையாய் நிலைபெற்ற அந்த வாளை ஏந்தி நாயனார் மட்டும் தனியாய் எஞ்சி நின்றார்.

428. திருவுடை மனைவி யாரைக் கொடுத்துஇடைச் செறுத்து முன்பு
வருபெருஞ் சுற்ற மெல்லாம் வாளினால் துணித்து மாட்டி
அருமறை முனியை நோக்கி அடிகள்நீர் அஞ்சா வண்ணம்
பொருவருங் கானம் நீங்க விடுவனென் றுடனே போந்தார்.

தெளிவுரை : திருவையுடைய மனைவியாரைச் சிவ வேட வேதியர்க்குத் தந்து, அந்தக் கொடை நிறைவேறுதற்குத் தடையாய் வந்த பெருஞ் சுற்றத்தாரையெல்லாம் வாளால் துண்டித்து இறக்கும்படி செய்து, பின் அரிய மறை முனிவரைப் பார்த்து, அடிகளே ! நீ அஞ்சாதபடி ஒப்பில்லாத இந்தச் சோலையைக் கடந்து போகும்படி நான் துணையாய் வந்து வழியனுப்புவேன் ! என்று சொல்லி அவருடன் சென்றார்.

429. இருவரால் அறிய வொண்ணா ஒருவர்பின் செல்லும் ஏழை
பொருதிறல் வீரர் பின்பு போகமுன் போகும் போதில்
அருமறை முனிவன் சாய்க்கா டதன்மருங் கணைய மேவித்
திருமலி தோளி னானை மீளெனச் செப்பி னானே.

தெளிவுரை : நான்முகன் திருமால் என்ற இருவராலும் அறிந்து கொள்ள இயலாத இயல்புடைய ஒருவரான சிவபெருமான் பின்பு செல்லும் அம்மையார், எதிர்த்தவரைப் போரிட்டு வெல்லும் வலிய வீரரான நாயனார் பின் போக, முன்னம் போகும் பொழுது அரிய மறை முனிவரான வேதியர், திருச்சாய்க்காட்டின் அருகில் வந்ததும், வீரம் பொருந்திய தோள்களையுடைய இயற்பகையாரைப் பார்த்து, இனி நீ திரும்பிப் போ ! என்று கூறி விடை தந்தார்.

430. தவமுனி தன்னை மீளச்  சொன்னபின் தலையால் ஆர
அவன்மலர்ப் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று
புவனமூன் றுய்ய வந்த பூசுரன் தன்னை யேத்தி
இவனருள் பெறப்பெற் றேன்என் றியற்பகை யாரும் மீண்டார்.

தெளிவுரை : தவமுனிவரான இறைவர், தம்மைத் திரும்பிச் செல்லும்படி கூறிய பின்னர், கீழே விழுந்து அவர் திருவடிகளை வணங்கிய பின்பு, கையார வணங்கிப் பின் நின்று மூவுலகும் உய்யுமாறு எழுந்தருளிய அந்த வேதியரை வாயாரத் துதித்து, இவரது பேரருளைப் பெறும் பேறு பெற்றேன் என்று மகிழ்ந்து இயற்பகையார் மீண்டார்.

431. செய்வதற் கரிய செய்கை செய்தநற் றொண்டர் போக
மைதிகழ் கண்டன் எண்டோள் மறையவன் மகிழ்ந்து நோக்கிப்
பொய்தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனா னென்று
மெய்தரு சிந்தை யாரை மீளவும் அழைக்க லுற்றார்.

தெளிவுரை : செய்வதற்கு அரிய செயல் செய்த இயற்பகையார் திரும்பிப் போக, கருமை விளங்கும் கண்டரான எட்டுத் தோள்களையுடைய மறையவர் மகிழ்ந்து பார்த்து பொய்யான உள்ளம் இல்லாதவன் இவன்; திரும்பிப் பார்க்காதும் சென்று விட்டான் என அந்த மெய்யன்பு கொண்ட உள்ளம் கொண்ட நாயனாரை மீண்டும் அழைக்கலானார்.

432. இயற்பகை முனிவா ஓலம் ஈண்டுநீ வருவாய் ஓலம்
அயர்ப்பிலா தானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம்
செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்
மயக்கறு மறைஓ லிட்டு மாலயன் தேட நின்றான்.

தெளிவுரை : மயக்கம் அற்ற வேதங்கள் தம்மை நோக்கி ஓலமிட்டு அழைக்க நான்முகன் திருமால் தேடும்படி நின்ற பெருமையுடைய இறைவர், இயற்பகையானே ! ஓலம்! நீ திரும்பி வருவாயாக, ஓலம் ! எப்போதும் என் நினைவை மறவாதவனே, ஓலம் ! அன்புடையவனே. ஓலம், ஓலம் மற்றவர் எவரும் செய்தற்கரிய செய்கை செய்த தீரனே, ஓலம் ! என்று தாம் பலமுறையும் ஓலம் இட்டு அழைத்தார்.

433. அழைத்தேபே ரோசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன்
பிழைத்தவ ருளரே லின்னும் பெருவலித் தடக்கை வாளின்
இழைத்தவ ராகின் றாரென் றியற்பகை யார்வந் தெய்தக்
குழைப்பொலி காதி னானும் மறைந்தனன் கோலங் கொள்வான்.

தெளிவுரை : அங்ஙனம் அழைத்த அந்தப் பேரொலியைக் கேட்ட இயற்பகையார், அடியேன் இங்கு வந்து விட்டேன் ! வந்து விட்டேன் ! இன்னும் உம்மைத் தடுப்பவராய் எவரேனும் இருந்தால் என் பெரிய வலிய கையில் ஏந்திய வாளில் வெட்டுண்டவர் ஆவார் என்று சொல்லி, வந்து சேர்ந்தார். அச்சமயத்தில், காதணி விளங்கும் இறைவரும் அவருக்கு அருள் செய்யும் பொருட்டு அருட்சக்தி வெளிப்படக் கோலம் கொண்டவராய் மறைந்தார்.

434. சென்றவர் முனியைக் காணார் சேயிழை தன்னைக் கண்டார்
பொன்றிகழ் குன்று வெள்ளிப் பொருப்பின்மேல் பொலிந்த தென்னத்
தன்றுணை யுடனே வானில் தலைவனை விடைமேற் கண்டார்
நின்றிலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தினின் றெழுந்தார் நேர்ந்தார்.

தெளிவுரை : திரும்பிச் சென்ற இயற்பகையார் முனிவரைக் காணார் ஆனார். தம் மனைவியாரை மட்டும் பார்த்தார். பொன்மயமாய் விளங்கும் குன்று வெள்ளி மலையின் மீது விளங்கினாற் போல் தன் துணையான உமையாளுடனே வானத்தில் தலைவரான இறைவரைக் காளையூர்தி மீது பார்த்தார். நிற்கவில்லை; வணங்கித் தரையில் விழுந்தார்; பின்பு நிலத்தினின்று எழுந்தார். அதன் பின் இறைவரைத் துதிக்க முற்பட்டார்.

435. சொல்லுவ தறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி
வல்லைவந் தருளி யென்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி
தில்லையம் பலத்து ளாடுஞ் சேவடி போற்றி யென்ன.

தெளிவுரை : தங்களைத் துதித்துச் சொல்வது இன்னது என அறியேன். வாழ்க ! நீவிர் எனக்காகக் கொண்ட கோலத்திற்கு வணக்கம் ! விரைவாய் வந்து அருள் செய்து எளிய என்னை உம் அடியவனாய் ஆக்கிக் கொண்டீர். வணக்கம் ! எல்லையில்லாத இன்ப வெள்ளத்தை எனக்கு அருள் செய்தீர். வணக்கம் ! தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடும் தங்கள் சேவடிகளுக்கு வணக்கம் ! என்று (துதித்தார்) துதிக்க.

436. விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை
எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பா லன்பு
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுதி லாதாய்
நண்ணிய மனைவி யோடு நம்முடன் போது கென்று.

தெளிவுரை : வானத்தில் நின்ற வெள்ளை விடையினை உடைய சிவபெருமான் தம் அடியவரான இயற்பகையாரை நோக்கி, எண்ணிய இவ்வுலகத்தில் நம்மிடம் நீ செலுத்திய அன்பைக் கண்டு மகிழ்ந்தோம். குற்றம் இல்லாதவனே ! பொருந்திய மனைவியுடன் நம்மிடத்துக்கு வருவாயாக ! என்று அருள் (செய்தார்) செய்து,

437. திருவளர் சிறப்பின் மிக்க திருத்தொண்டர் தமக்குந் தேற்றம்
மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்குந் தக்க
பெருகிய அருளின் நீடு பேறளித் திமையோ ரேத்தப்
பொருவிடைப் பாகர் மன்னும் பொற்பொது அதனுட் புக்கார்.

தெளிவுரை : அருள் திரு வளர்கின்ற சிறப்புடைய திருத் தொண்டருக்கும் தெளிந்த கற்புடைய சிறந்த மனைவியார்க்கும் தக்கபடி பெருகிய அருளில் நீடும் வீடுபேற்றை அளித்து, அதன் பின்பு, இந்த அருளின் திறத்தைத் தேவர்கள், எல்லாம் துதிக்க, காளையூர்தியினரான இறைவர், தாம் என்றும் நிலைத்திருக்கின்ற பொன்னம்பலத்துள் சேர்ந்தருளினார்.

438. வானவர் பூவின் மாரி பொழியமா மறைகள் ஆர்ப்ப
ஞானமா முனிவர் போற்ற நலமிகு சிவலோ கத்தில்
ஊனமில் தொண்டர் கும்பிட் டுடனுறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத் தாரும் வானிடை யின்பம் பெற்றார்.

தெளிவுரை : வானவர்கள் கற்பகமலர் மழை பொழியவும், வேதங்கள் ஒலிக்கவும், ஞானமா முனிவர்கள் துதிக்கவும், நன்மை மிக்க சிவலோகத்தில் இந்தக் குற்றமற்ற தொண்டரான இயற்பகை நாயனார் (தம் மனைவியாருடன்) இறைவனுடன் நீங்காமல் இருக்கும் பேற்றைப் பெற்றார். இவருடன் பகைத்துப் போர் செய்து மடிந்த உறவினரும் வீர சொர்க்கத்தில் இன்பத்தை அடைந்தனர்.

439. இன்புறு தாரந் தன்னை ஈசனுக் கன்ப ரென்றே
துன்புறா துதவுந் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி
அன்புறு மனத்தால் நாதன்  அடியவர்க் கன்பு நீடும்
மன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்த லுற்றேன்.

தெளிவுரை : இங்ஙனம், இன்புறும் தம் மனைவியைச் சிவ பெருமானின் அடியவர் என எண்ணி யாதொரு கவலையும் இல்லாது இல்லை என்னாது கொடுத்த தொண்டரான இயற்பகையாரின் தொண்டின் பெருமையைத்தொழுது வாழ்த்தி, அதன் துணையால், இனி அன்பு கொண்ட உள்ளத்தால் இறைவன் அடியாரிடத்தில் அன்பு நீடிய நிலையான புகழையுடைய இளையான் குடியிலே தோன்றிய மாற நாயனாரின் அன்பின் வளத்தைச் சொல்லத் தொடங்குகின்றேன்.

இயற்பகை நாயனார் புராணம் முற்றுப் பெற்றது.

 

10. இளையான்குடி மாறநாயனார் புராணம்

இளையான்குடி என்ற ஊரில் தோன்றியவர் மாறனார். அவர் சிவனடியார்க்கு உணவளித்து மகிழ்விப்பதைக் கடமையாக மேற்கொண்டிருந்தார். அவர் செல்வம் உள்ள காலத்தில் அல்லாமல் வறுமை உள்ள காலத்திலும் சிவனடியாரை உபசரிக்கும் பண்புடையவர் என்பதை உலகுக்கு அறிவிக்கச் சிவபெருமான் அவருக்கு வறுமை ஏற்படச் செய்தார். ஒருநாள் நள்ளிரவு பெருமழை பெய்து கொண்டிருக்கும் நேரம், மாறனார் உணவு உண்பதற்கில்லாமலேயே படுத்துக் கொண்டார். அப்போது சிவனடியார் போல் இறைவர் அவர் இல்லத்துக்கு வந்தார். மாறனார் அவரை வரவேற்று உபசரித்தார். அடியாரின் பசியை எப்படிப் போக்குவது எனத் தம் மனைவியிடம் அவர் வினவினார். பகற்போதில் விதைத்த நெல் முறைகளை வாரிக் கொணர்ந்தால் உணவு சமைக்கலாம் என்றார் மனைவியார். மாறனார் வயலில் அன்று பகலில் விதைத்த நெல்முளைகளை வாரிக்கொணர்ந்தார். வீட்டின் கூரையை அறுத்து விறகுக்குத் தந்தார். அவருடைய மனைவியார் அதை வறுத்துக் குத்தி உணவு சமைத்தார். பின் மாறனார் தோட்டத்தில் நிரம்பி வளராத கீரையைப் பாசப்பழி முதல் பறிப்பரைப் போல் பறித்து வந்தார். அதனை அந்த அம்மையார் பலவகையான கறியாய்ச் சமைத்தார். அடியாரை உண்ண அழையுங்கள் என்றார். மாறனார் அவரைத் துயில் எழுப்பி, உணவு உண்ண எழுந்தருளுக என்றார். அவ்வளவில் இறைவர் அவர்க்குக் காட்சி தந்து தம் உலகினை அடைந்திட அருள் செய்தார்.

440. அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்
தம்பிரான் அடிமைத் திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப் பதி மாறனார்

தெளிவுரை : இளையான்குடி என்ற ஊரில் தோன்றிய மாறன் என்னும் பெயர் உடையவர்; அழகிய பொன்னால் வேயப் பெற்று நீடிய அம்பலத்தில் ஆடும் கூத்தப்பெருமானின் திருவடிகளை எப்போதும் தம் தலையில் சூடிக் கொள்பவர்; சிவபெருமானின் அடிமைத் திறத்தில் உயர்ந்த சார்பினால் உள்ளதான மேன்மையைத் தனதாகக் கொண்டு வாழ்பவர்; நம்பிக்கைக்குரிய சூத்திர நற்குலம் செய்த தவம் காரணமாகத் தோன்றி இம்மண்ணுலகத்தை விளக்கம் செய்தவர்.

441. ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லதொர் செல்வமும்
நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்ததோர்
சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார்

தெளிவுரை : ஏர்த்தொழிலால் நிறைந்து பெருகும் உழவு வளங்களினால் வரும் உணவும், அவை கொண்டு ஆக்கப் பெறுகின்ற அளவில்லாத மற்றச் செல்வங்களும், கங்கையாறு தரித்த சடையை உடையவரின் அடியார் திறத்தில் நிறைந்ததான சிறப்பால் மிக்க அன்பில் திளைக்குமாறு நிலைத்த மனமும், உலகில் வளர்ந்து நிலை பெறுமாறு விரும்பி, அவற்றைத் தாம் பெற்றதால் ஆன பெரும் பயனை அடைபவராய் வாழ்ந்து வந்தார்.

442. ஆரம் என்பு புனைந்த ஐயர் தம் அன்பர் என்பதோர் தன்மையால்
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன்
கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவிப் புலத்து
ஈரம் மென் மதுரப் பதம் பரிவு எய்த முன்னுரை செய்தபின்

தெளிவுரை : மாலையும் எலும்பும் பூண்ட இறைவரின் அடியார் என்ற ஒரே தன்மையை மனத்தில் எண்ணி முன்னே வந்தவர் யாவராயினும், நிலையான அன்பு மிகுதியால், அவர்களுக்கு முன்னே போய் வரவேற்று அழைத்துக் கைகள் குவித்து நின்று, அவர்களின் செவியில் அன்புடன் கூடிய மென்மையான இனிமையான சொற்களை அவர்கள் அன்பு கொள்ளும்படி கூறி அதன்பின்,

443. கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆதனத்து இடைவைத்து அருச்சனை செய்த பின்
உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பு இலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துளார்

தெளிவுரை : அவர்களைத் தம் இல்லத்திற்குள் அழைத்து வந்து புகுந்து, அழகிய அவர்களின் திருவடியை நீரால் தூய்மை செய்து விளக்கி, மிக்க அன்பினால் தக்க இருக்கையில் அமரச் செய்து வழிபட்டு, அதன் பின்பு நான்கு விதத்தில் அமைந்த அறுசுவை உணவுகளையும், ஒப்பில்லாத சிவ பெருமானின் அடியவர்கள் விருப்பத்துடன் உண்ணுமாறு நாள்தோறும் கொடுத்து வந்தார்.

444. ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு இலார் உளம் மகிழவே
நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால்
நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண்
தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள்

தெளிவுரை : எல்லா உயிர்களையும் தமக்கு ஆளாகக் கொண்ட இறைவரின் அடியவர் அளவற்றவர் மனம் மகிழ்ந்து ஒவ்வொர் நாளும் நிறைந்து வந்து உண்டு, இவரது அன்பினை அனுபவித்த தன்மையின் பயனான நன்மையினால், நீளும் பெருஞ் செல்வத்தின் பரப்பும் நெருங்கு செல்வங்களும் வளர்ந்து பெருக, எட்டுத் தோள்களையுடைய சிவபெருமான் அளகாபுரியை ஆளும்படி செய்த தம் தோழரான குபேரனே இவர் என்று கூறும்படி மாறனார் மகிழ்ந்து வந்தார். அத்தகைய நாள்களில்,,

445. செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது அன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள் தொறும் மாறி வந்து
ஒல்லையில் வறுமைப் பதம் புக உன்னினார் தில்லை மன்னினார்

தெளிவுரை : செல்வங்கள் மிக்கிருக்கும் காலத்தில் இச்செயல்களைச் செய்வதன்றியும், உண்மையாய்த் துன்பம் அளிக்கும் வறுமை வந்த காலத்திலும் இச்செயலைச் செய்ய இவர் வல்லவர் ஆவர் என்ற உண்மையை உலகிற்கு அறிவுறுத்தவே, வளமை மிக்க அச்செல்வங்கள் மெல்ல மறைந்து போய் நாள்தோறும் மாறி வந்து, பின்னர் விரைவிலே வறுமை நிலை வந்து அடையுமாறு தில்லையில் மன்னிய இறைவர் தம் திருவுள்ளத்தில் எண்ணினார்.

446. இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடி
மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும்
தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின்
முன்னை மாறில் திருப்பணிக் கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார்

தெளிவுரை : இவ்வாறு செல்வம் குன்றிடவும், எம் பிரானான இளையான் குடி மாறர் தம் மனம் சுருங்குதல் இல்லாது. தம்மிடம் உள்ளவற்றை விற்றும் தன்னையே விற்றுக் கொடுக்கத் தக்க கடன்களை வாங்கியும், மேலும் முன் தாம் செய்து வந்த ஒப்பில்லாத அடியார் பூசைக்கான திருப்பணியிலேயே முதிர்ந்த கொள்கை யுடையவராய் விளங்கினார்.

447. மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான அக்
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினர்
பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாளுடன் இன்றி ஓர்
நற்றவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார்

தெளிவுரை : இளையான்குடி மாற நாயனாரின் செயல் இத்தன்மையுடையனவாக இருக்க, திருமால் நான்முகன் ஆகிய வெற்றியுடைய பன்றியும் அன்னமும் தேடிக் காண இயலாத இயல்பையுடைய சிவபெருமான் தம் ஊர்தியான காளையின் மீது ஊர்வதும் இன்றி, பக்கத்தே எப்போதும் இருக்கும் உமையம்மையாரும் இல்லாமல், ஒரு நல்ல துறவியின் கோலத்தைக் கொண்டு, இந்த வுலகத்து உயிர்கள் நல்வாழ்வு பெற்று உய்யும்படி, இளையான்குடி மாற நாயனாரின் இல்லத்தை அடைந்தார்.

448. மாரிக் காலத்து இரவினில் வைகியோர்
தாரிப்பு இன்றிப் பசி தலைக் கொள்வது
பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற
வேரித்து ஆரான் விருந்து எதிர் கொண்டனன்

தெளிவுரை : தேனையுடைய மாலையைப் பூண்ட மாறனார் மழைக் காலத்தில் ஓர் இரவில் உறக்கம் இல்லாது விழித்திருந்து வேறு ஓர் ஆதரவு இல்லாமையால், மேல் எழும் பசி அதிகரிக்கப் பெற்று இல்லத்தின் கதவைத் தாழிட்டு அடைத்தபின், விருந்தினரை எதிர் கொள்ள வேண்டிய முறையில், சிவபெருமானை விருந்தினராக வரப் பெற்றார்.

449. ஈர மேனியை நீக்கி இடங் கொடுத்து
ஆர இன்னமுது ஊட்டுதற்கு ஆசையால்
தார மாதரை நோக்கித் தபோதனர்
தீரவே பசித்தார் செய்வது என் என்று

தெளிவுரை : முதலில் அவரது ஈரமேனியை நீக்கி (மேனியின் ஈரத்தைத் துடைத்து) பின் அவர் அமரத் தக்கதோர் இடத்தை அளித்தார். அதன்பின்னர், அவரது உள்ளம் மகிழுமாறு உணவு உண்பிக்க ஆசை கொண்டதால், தம் மனைவியான அம்மையாரைப் பார்த்து, இத்துறவியார் மிகவும் பசித்து வந்துள்ளார் ! ஆதலால் இதற்கு என் செய்வது ? என்றார்.

450. நமக்கு முன்பு இங்கு உணவிலை ஆயினும்
இமக் குலக்கொடி பாகர்க்கு இனியவர்
தமக்கு நாம் இன் அடிசில் தகவுற
அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என

தெளிவுரை : நமக்கு இங்கு முன்னம் உண்பதற்கு உணவில்லையானாலும் இமயமலை மன்னரின் மகளான பார்வதியை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானின் அடியவர்க்கு நாம் இனிய உணவைத் தக்கபடி அமைத்தல் வேண்டும். அதற்கு என்ன செய்வது? என்று வினவினார்.

451. மாது கூறுவாள் மற்று ஒன்றுங் காண்கிலேன்
ஏதிலாரும் இனித் தருவார் இல்லை
போதும் வைகிற்றுப் போம் இடம் வேறில்லை
தீது செய்வினை யேற்கு என் செயல்

தெளிவுரை : தம் கணவர் மேற்கண்டவாறு வினவ, அம்மையார் சொல்லலானார். அதற்குரிய வழி ஒன்றையும் அறியேன். மற்றவர் எவரும் இனித் தருபவர் இல்லை ! காலம் கடந்து இரவாகி விட்டது. போய்த் தேடக் கூடிய வேறு இடமும் இல்லை. தீவினையேனான எனக்குச் செய்வதற்கு என்ன உள்ளது? எனக் கூறிப் பின்னும்,

452. செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர் முளை வாரிக் கொடு வந்தால்
வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று
அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வுற

தெளிவுரை : நமக்கு இப்போது உண்டான துன்பம் நீங்குமாறு இன்று பகலில் வயலில் விதைத்த நீர்முளை நெல்லைத் தாங்கள் வாரிக் கொண்டு வந்தால், நான் அறிந்த வகையில் உணவு சமைக்கவும் கூடும். இதைத் தவிர வேறு வழி எனக்குப் புலப்படவில்லை எனக் கூறி மனம் (வருந்தினார்) வருந்த,

453. மற்ற மாற்றம் மனைவியார் கூற முன்
பெற்ற செல்வம் எனப் பெரிது உள் மகிழ்ந்து
உற்ற காதலினால் ஒருப் பட்டனர்
சுற்று நீர் வயல் செல்லத் தொடங்குவார்

தெளிவுரை : அத்தகைய சொற்களை மனைவியார் சொல்லக் கேட்டதும் நாயனார் முன்னம் தேடி வைத்த செல்வத்தைப் பெற்றது போல் மிகவும் மனம் மகிழ்ந்தார். உள்ளத்தில் உண்டான ஆசையினால் நீர் சூழ்ந்த வயலுக்கு நெல் முளையை வாரிக்கொண்டு வரப்போவதற்கு ஒருப்பட்டுத் தொடங்குவாராய்,

454. பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து
அருகு நாப்பண் அறிவருங் கங்குல் தான்
கருகு மை இருளின் கணம் கட்டு விட்டு
உருகு கின்றது போன்றது உலகு எலாம்

தெளிவுரை : அப்போது நிறைந்த மேகங்கள் மிகவும் அதிகமாக மழை பெய்தது. அதனால் வழியின் ஓரம் இது. நடு இடம் இது, என்று அறிவதற்கு இயலாத அந்த இரவானது, கரிய மை போன்ற இருளின் கூட்டம் திடத்தன்மை நீங்கி உலகம் முழுவதும் உருகி ஓடிப்பரவியது போல் இருள் சூழ்ந்து விளங்கியது.

455. எண்ணும் இவ் உலகத்தவர் யாவரும்
துண்ணெனும்படி தோன்ற முன் தோன்றிடில்
வண்ண நீடிய மைக்குழம்பாம் என்று
நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து

தெளிவுரை : உயர்வாக மதிக்கத்தக்க இவ்வுலகத்தவர் யாவரும் மனத்தால் நினைக்கவும் துண் என நடுக்கம் கொள்ளும் வகை தோன்றவே, அவ்வாறு இருள் புலப்படும் காலத்தில் நீண்ட வண்ணமுடைய மைக் குழம்பே இதுவாகும் என்று கொண்டு வெளியே புறப்பட முடியாத வண்ணம் இருள் செறிந்த நள்ளிரவில்,

456. உள்ளம் அன்பு கொண்டு ஊக்கவோர் பேரிடாக்
கொள்ள முன் கவித்துக் குறியின் வழிப்
புள்ளும் உறங்கும் வயல் புகப் போயினார்
வள்ளலார் இளையான் குடி மாறனார்

தெளிவுரை : தம் உள்ளத்தை அன்பானது தன் வசப்படுத்திக் கொண்டு ஊக்கம் தந்து செலுத்த, தாம் வாரிக் கொணரும் முளை நெல்லைக் கொள்ளத் தக்கதொரு பெரிய இறை கூடையைத் தலை மேல் கவித்துக் கொண்டு முன்நடந்து பழகியதான குறிவழியே சென்று நீர்ப்பறவைகள் உறங்கும் அந்த வயலுக்குள் புகுமாறு வள்ளலான இளையான் குடி மாறர் சென்றார்.

457. காலினால் தடவிச் சென்று கைகளால்
சாலி வெண் முளை நீர் வழிச் சார்ந்தன
கோலி வாரி இடா நிறையக் கொண்டு
மேல் எடுத்துச் சுமந்து ஒல்லை மீண்டார்

தெளிவுரை : மாறனார் காலால் தடவிச் சென்று நீரில் மிதக்கும் சாலி நெல்லின் முளைகளைக் கைகளால் திரட்டிக் கூடை நிறையக் கொண்டு, கூடையை மேலே தூக்கி எடுத்துத் தலையில் சுமந்து கொண்டவராய் மிக விரைவில் தம் இல்லத்துக்கு திரும்பி வந்தார்.

458. வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச்
சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி
வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர்
அந்தமில் மனையில் நீடும் அலகினை அறுத்து வீழ்த்தார்

தெளிவுரை : மாறனார் தம் மனைக்கு வந்தபின் மனைவியார் வாயிலில் நின்று அவர் கொண்டு வந்த நெல் முளை நிறைந்த கூடையை வாங்கிக் கொண்டு, உள்ளத்தில் மிக்க விருப்பத்துடன், நெல் முளையில் இருந்த சேற்றை நீரில் கழுவி ஊற்றியபின்பு தம் நாயகரிடம் இந் நெல்லைப் பக்குவப்படுத்தற்கு அடுப்பில் வைத்து எரிக்க விறகு இல்லை என்று கூற, அதைக் கேட்ட மேன்மையுடைய நாயனார், அழகற்ற அந்த இல்லத்தில் பொருந்தியுள்ள கூரையை விறகின் பொருட்டு அறுத்துத் தள்ளினார்.

459. முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்துப் பதம் முன் கொள்ள
வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து
வெறுப்பில் இன் அடிசில் ஆக்கிமேம் படு கற்பின் மிக்கார்
கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினார் கணவனாரை

தெளிவுரை : அவ்வாறு நாயனார் வீழ்த்திய அக்கூரை வரிச்சுளை முறித்து அடுப்பில் நெருப்பு மூட்டி அதில் நெல் முளைகளைப் பதமாக வறுத்தபின், அதை அரிசியாக் குற்றி எடுத்துச் சுத்தம் செய்து, நீரை வார்த்த உலையிலே இட்டுச் சிறிது வெறுப்புக்கு இடம் அளிக்காத வகையில் இனிய சோறாக ஆக்கி, அதன் பின்பு மிகச் சிறந்த கற்புத் திறத்திலே மேன்மையுடைய மனைவியார் கறிகளுக்கு இனி என்ன செய்வோம் என்று கூறித் தம் கணவரை வணங்கினார்.

460. வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே
அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று
குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப்
பழி முதல் பறிப்பார் போலப் பறித்து அவை கறிக்கு நல்க

தெளிவுரை : வழியில் நடந்து வந்ததால் உண்டான இளைப்புடனே அதன் முன்னரே வருந்திய பசியால் எம் ஐயன் வருந்துவார் என அன்பு மிகச் சென்று, தம் கொல்லையில் முளைக்க வைத்த குழிகளினின்றும் மேலே எழும் பருவம் அடையாத கீரைப்பயிர்களைக் கையால் தடவிப் பாசப்பழி முதலை அடியோடு பறிப்பவர் போல் அவற்றை வேருடன் பிடுங்கி வந்து தம் மனைவியிடம் கறிக்காகத் தந்தார்.

461. மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து
புனல் இடைக் கழுவித் தக்க புனித பாத்திரத்துக் கைம்மை
வினையினால் வேறு வேறு கறி அமுது ஆக்கிப் பண்டை
நினைவினால் குறையை நேர்ந்து திருவமுது அமைத்து நின்று

தெளிவுரை : மனைவியார் கணவர் தந்த கீரைகளை நன்கு ஆய்ந்து நீரில் கழுவித் தக்க தூய பாத்திரத்தில் இட்டு, முன் பழகிய தம் கைப் பழக்கத்தினால் வெவ்வேறாகப் பல வகைக் கறிகளாகச் சமைத்துப் பழைய நினைவால் உள்ள குறையை எண்ணி ஒருவாறு உள்ளம் தேறி உணவு வகைகளை அமைத்து எழுந்து நின்று,

462. கணவனார் தம்மை நோக்கிக் கறி அமுது ஆன காட்டி
இணை இலாதாரை ஈண்ட அமுது செய்விப்போம் என்ன
உணவினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார்

தெளிவுரை : (மனைவியார்) தம் கணவனாரைப் பார்த்துக் கறிகளும் உணவும் சமைத்து முடித்தவற்றைக் காட்டிப் பின் ஒப்பில்லாதவரை நாம் இப்போதே விரைவாக உணவு உண்ணச் செய்கிறோம் என்று உரைத்தார். உணர்வால் உணர ஒண்ணா ஒருவரான அவரை உணர்த்தும் பொருட்டு அவர் பக்கம் அணைய முன்னே சென்று நின்று கொண்டு நாயனார், அவரைத் துயில் எழுப்பத் தொடங்கினார்.

463. அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்பால்
எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று
தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்துத் தோன்றச்
செழுந் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார்

தெளிவுரை : யான் அழுந்தியுள்ள இடரினின்றும் நீங்கி உய்யும் பொருட்டாக என்பால் கருணை கொண்டு எழுந்தருளிய பெரியோய் இங்கு விரைவில் எழுந்து உணவு உண்டருளுக ! எனத் தொண்டர் உரைத்தபோது அடியாராய் வந்த அவர் ஒரு சோதியாய் எழுந்து தோன்றவே, வளமான நற்குணங்கள் அமைந்த மனைவியாரும் மாறரும் திகைத்து நின்றனர்.

464. மாலயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆகச்
சாலவே மயங்குவார்க்குச் சங்கரன் தான் மகிழ்ந்தே
ஏலவார் குழலாள் தன்னோடு இடப வாகனனாய் தோன்றிச்
சீலமார் பூசை செய்த திருத் தொண்டர் தம்மை நோக்கி

தெளிவுரை : திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரியவரான இறைவர் மேற்கொண்டு வந்த அடியார் கோலமானது ஒரு சோதியாய்த் தோன்றவே, அது கண்டு மயங்கி நின்ற தொண்டர்க்கு உணர்த்தும் பொருட்டு, இறைவர் மகிழ்ந்து மணம் பொருந்திய நீண்ட கூந்தலையுடைய உமையம்மையுடனே காளை ஊர்தியில் வெளிப்படக் காணுமாறு எழுந்தருளி வந்து, சிறந்த அடியார் பூசையைச் செய்து வந்த நாயனாரைப் பார்த்து,

465. அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்
என் பெரும் உலகம் எய்தி இருநிதிக் கிழவன் தானே
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே செய்தான் எவர்க்கும் மிக்கான்

தெளிவுரை : அன்பனே அடியார்களது பூசையைச் சற்றும் வழுவாமல் செய்த நீ உன் மனைவியோடும் என் பெரிய உலகத்தை அடைந்து குபேரன் தானே முன்னர்ப் பெரிய நிதிகளை ஏந்தி உன் மொழி வழியே ஏவல் செய்ய, பேரின்பம் அனுபவித்துக் கொண்டிருப்பாயாக என்று எவருக்கும் மிக்கவரான சிவபெருமான் அருள் செய்தார்.

466. இப்பரிசு இவர்க்குத் தக்க வகையினால் இன்பம் நல்கி
முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்து அருளிப் போனார்
அப் பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு
மெய்ப் பொருள் சோதி வேந்தன் செயலினை விளம்பல் உற்றேன்

தெளிவுரை : இங்ஙனம் இவர்க்குத் தக்க வகையால் இன்பம் தந்து பின்பு திரிபுரம் எரித்த சிவபெருமான், அன்பரின் முன் தோன்றிய வெளிப்பாட்டு நிலையினின்று நீங்கித் தம் வியாபக நிலைக்கு எழுந்தருளிச் சென்றார். அந்தப் பெரியவரான இளையான்குடி மாறநாயனாரின் திருவடிகளை வணங்கி, அத்துணை கொண்டு மெய்ப்பொருள் என்ற பெயர் உடைய சேதி நாட்டு மன்னரின் செய்தியைக் கூறத் தொடங்குகின்றேன்.

இளையான்குடி மாறநாயனார் புராணம் முற்றுப் பெற்றது

 

11. மெய்ப்பொருள் நாயனார் புராணம்

சேதி நாட்டின் தலைநகர் திருக்கோவலூர். அதனைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டு வந்த மன்னர் மெய்ப்பொருள் நாயனார். அவர் வீரத்தில் மிக்கவர். அதனால் எவரும் அவரை வெல்ல இயலவில்லை. அவருடன் பகை கொண்டவன் முத்தநாதன். அவன் மெய்ப்பொருளாரை வீரத்தால் வெல்ல இயலாதவனாய் வஞ்சனையால் வெல்ல எண்ணினான். சிவன் அடியார் போல் கோலம் கொண்டு ஆயுதத்தை உள்ளே மறைத்த சுவடிக்கட்டுடன் திருக்கோவலூரை அடைந்தான். அரண்மனைக்குள் மன்னர் இருக்கும் பகுதியின் வாயிலை அடைந்தான். அங்கு மன்னரின் மெய்க்காவலனான தத்தன் என்பவன் மன்னர் உறங்குகின்றார் எனக்கூறித் தடுத்தான். நான் மன்னனுக்கு மெய்ப்பொருள் உணர்த்த வந்தேன். ஆதலால், என்னைத் தடுக்காதே! என்று சொல்லியபடி உள்ளே புகுந்தான். மன்னரின் பக்கத்தில் அரசமாதேவி இருந்தார். அவர் துணுக்குற்று எழுந்தார். மன்னர் முத்தநாதனை வரவேற்றார். ஆசனத்தில் அமரச் செய்தார். உம் தலைவரான சிவபெருமான் அருளிய ஆகம நூல் ஒன்று உளது. அதை உனக்கு உணர்த்த வந்தேன்; நீயும் தனியாய் இருத்தல் வேண்டும் என்றார். மன்னர் தம் மனைவியை அப்பால் போகச் செய்தார். இப்போது அருள்க என்றார். தனியாய் இருந்தபோது ஓலைக்கட்டை அவிழ்ப்பவனைப் போல் அதனுள் மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்து நாயனாரைக் குத்தினான் அம்முத்தநாதன். உள்ளே சென்றபோதே மனம் அங்கு வைத்திருந்த தத்தன் ஓடிவந்து முத்தநாதனைத் தாக்கப் பாய்ந்தான். நாயனார் அதைத் தடுத்து, தத்தா! இவர் நமர் எனக்கூறித் தடுத்தார். தத்தன் மெய்ப்பொருளாரை வணங்கி, நான் என்ன செய்யவேண்டும் என்று வினவ, இவரை மற்றவர் தாக்காத வண்ணம் நம் நாட்டின் எல்லைக்கு அப்பால் கொண்டு விட்டுவிட்டு வருதல் வேண்டும் என்றார். தத்தன் அவ்வாறே செய்தான். இறைவர் மெய்ப்பொருள் நாயனார்க்குத் தம் வீட்டுலகத்தில் உறையும் பேற்றை அளித்தார்.

467. சேதி நன்னாட்டு நீடு திருக் கோவலூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான்
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார்

தெளிவுரை : நன்மையுடைய சேதி நாட்டின் திருக்கோவலூரில் நிலை பெற்ற ஆட்சி செலுத்தி வாழ்ந்து, உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டுள்ள இறைவரிடத்தில் வைத்த அன்பினால் வழிவழியாய் வரும் மலாடர் மன்னரான மெய்ப் பொருள் நாயனார் வேத நன்னெறியில் உண்மைத் திறமானது உலகத்தில் விளக்கம் அடைய, மேன்மையுடையவராய் மிக்க அன்பினால் இறைவனது அடியாரின் உள்ளக் கருத்தை அறிந்து அவர்க்கு ஏவல் செய்து வருபவரானார்.

468. அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து
வரை நெடும்ந்தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி
உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார்
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார்

தெளிவுரை : அரசியல் நெறியில் அமைந்த அறவழிகளில் வழுவாமல் காத்து, மலைபோல் உயர்ந்த தம் தோள் வன்மையால் பகைவரைப் போரில் வென்று மாற்றி, முன்னோர் மொழிந்தவற்றினின்று மாறுபடாது ஒழுகும் நீதி நிலையில் சிறந்தவராயும், அலை வீசும் கங்கையைச் சடையில் பூண்ட இறைவரின் அடியார் கோலத்தையே மனத்தில் நினைத்தவராயும் விளங்கினார்.

469. மங்கையைப் பாகமாக உடையவர் மன்னும் கோயில்
எங்கணும் பூசை நீடி ஏழிசைப் பாடல் ஆடல்
பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள் நாயகருக்கு அன்பர் தாளலால் சார்பு ஒன்று இல்லார்

தெளிவுரை : உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான் வெளிப்பட்டு வீற்றிருக்கும் கோயில்கள் எங்கும் பூசைகள் வழுவாமல் நீடித்து நடந்து வருமாறும், ஏழிசைப்பாடல் ஆடல் என்பவை மிகவும் பொருந்தி நிகழுமாறு, தவறாமல் செய்து வழிபட்டு வாழ்பவராயும், தங்கள் தலைவரின் அடியார்களின் திருவடிகளையே யன்றி வேறு சார்பு இல்லாதவராயும் அவர் விளங்கினார்.

470. தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவு அறக் கொடுத்து வந்தார்

தெளிவுரை : தம் அரசுரிமையில் தேடியனவான பொருள்களும் பெருஞ்செல்வங்களும் திருத் தில்லையில் அருட் கூத்து இயற்றும் பெருமானின் அடியார்க்கே ஆவன வாகும் என்று விரும்பிய மனத்துடனே, தம்மை ஆட் கொள்கின்ற நாயன்மார்களான அடியவர்கள் தம்மிடம் வந்த போது அவர், கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவின்றி அச் செல்வங்களை யெல்லாம் கொடுத்து வந்தார்.

471. இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு
பொன் அணி ஓடை யானைப் பொரு பரி காலாள் மற்றும்
பன் முறை இழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப் போனான்

தெளிவுரை : அவர் இங்ஙனம் ஒழுகி வந்த காலத்தில் ஒரு மன்னன் அவருடன் பகை கொண்டு வெல்லும் ஆசையால், போரில் எதிர்த்து வந்து தன்னுடைய பொன்னால் ஆன முகபடாம் அணிந்த யானை, போர்க் குதிரை, காலாள் முதலான பலவற்றையும் பலமுறை இழந்து அவமானம் அடைந்து போனான்.

472. இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப் பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும்
அப்பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆகச்
செப்பரு நிலைமை எண்ணித் திருக் கோவலூரில் சேர்வான்

தெளிவுரை : இங்ஙனம் தன் படைகளைப் பலமுறை இழந்து விட்ட பகைவன், நாயனாரைப் போரால் வெற்றி கொள்ள இயலாமல், அம்மெய்ப்பொருள் நாயனாரின் சைவ ஒழுக்கத்தைத் தெரிந்து கொண்டு, திருநீறு பூசுகின்ற அந்தப் பெரிய கோலம் கொண்டு, வஞ்சத்தால் வெல்லுதல் வேண்டும் என்ற, வாக்கினால் சொல்லக் கூடாத, அந்த நிலைமையை உள்ளத்தில் எண்ணிக் கொண்டு திருக்கோவலூர்க்குச் சேர்தற் பொருட்டு,

473. மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப்
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்

தெளிவுரை : தம் உடல் எல்லாம் விபூதியைக் பூசிக் கொண்டு சடைகளை முடித்துக் கட்டிக் கொண்டு, கையிலே படையை மறைத்து வைத்துப் புத்தகம் போல் கட்டப்பட்ட புத்தகப் பையை ஏந்திக் கொண்டு, கருமையை உள்ளே கொண்டு வெளியே ஒளி வீசும் விளக்கே எனக் கூறுமாறு, உள்ளத்தில் வஞ்சத்தைப் பொதிந்து வைத்துப் பொய்யை மறைத்த தவ வேடம் கொண்டு, அந்த நகரத்தினுள் முத்த நாதன் என்ற மன்னன் புகுந்தான்.

474. மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும்
கோதை சூழ் அளக பாரக் குழைக் கொடி ஆட மீது
சோதி வெண் கொடிகள் ஆடுஞ் சுடர் நெடு மறுகில் போகிச்
சேயதிர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான்

தெளிவுரை : சிறந்த தவக் கோலத்தைப் பூண்ட வன்கண்மை உடைய முத்தநாதன், மாளிகைகள் எங்கும் மாலை சுற்றிய கூந்தலையும் காதணியையும் உடைய கொடிகள் (பெண்கள்) ஆட, அவற்றின் மேல் ஒளி விளங்கும் வெண்மையான கொடிகள் ஆடுவதற்கு இடமான விளக்கம் பொருந்திய பெரிய தெருவில் போய்ச் சேதி நாட்டு மன்னரான மெய்ப் பொருள் நாயனாரின் அரண்மனையின் அழகிய திருவாயிலைச் சேர்ந்தான்.

475. கடை உடைக் காவலாளர் கை தொழுது ஏற நின்றே
உடையவர் தாமே வந்தார் உள் எழுந்து அருளும் என்னத்
தடை பல புக்க பின்பு தனித் தடை நின்ற தத்தன்
இடை தெரிந்து அருள வேண்டும் துயில் கொள்ளும் இறைவன் என்றான்

தெளிவுரை : அரண்மனையில் பல வாயில்கள் தோறும் காவல் செய்து நின்ற காவலர்கள் முத்தநாதன் சைவக் கோலத்துடன் உள்ளே புகுந்தபோது அவனைக் கை தொழுது விலகி நின்று, எம்மை ஆளுடைய அடியவர் தாமே வந்தார், உள்ளே எழுந்தருளுக ! எனக் கூறிட, அங்ஙனமே அரண்மனையின் வாயில்கள் பல புகுந்த பின்பு இறுதியாய் உள்ள வாயிலைக் காக்கும் தத்தன் என்பவன் சமயம் நோக்கித் தாங்கள் எழுந்தருள வேண்டும் எம் இறைவர் இப்போது துயில் கொள்கின்றார். 

476. என்று அவன் கூறக் கேட்டே யான் அவற்கு உறுதி கூற
நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கிப் புக்குப்
பொன் திகழ் பள்ளிக் கட்டில் புரவலன் துயில மாடே
மன்றலங் குழல் மென் சாயல் மா தேவி இருப்பக் கண்டான்

தெளிவுரை : என இங்ஙனம் தடைமொழிகளைத் தத்தன் சொல்லக் கேட்ட பின்னர், நான் மன்னனுக்கு உறுதி கூறப் புகுந்தேன். ஆதலால் நீயும் இங்குத் தடை செய்யாமல் நிற்க என்று சொல்லி இவ்வாறு அவனையும் கடந்து உள்ளே புகுந்து, பொன்னால் இயன்று விளங்கும் கட்டிலில் மன்னன் உறங்கப் பக்கத்தில் மணம் கமழும் அழகிய கூந்தலையும் மென்மையான சாயலையும் உடைய அரச மாதேவி இருக்க, முத்தநாதன் பார்த்தான்.

477. கண்டு சென்று அணையும் போது கதும் என இழிந்து தேவி
வண்டலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன்
அண்டர் நாயகனார் தொண்டராம் எனக் குவித்த செங்கை
கொண்டு எழுந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று

தெளிவுரை : அங்ஙனம் பார்த்த பின்பு உள்ளே பக்கத்தில் போகும் போது, அதைப் பார்த்து அரசியார் விரைந்து எழுந்து வண்டுகள் உறங்குவதற்கு இடமான மாலையை அணிந்த மன்னரை எழுப்பினார். அரசர் மெய்ப் பொருளார் துயில் உணர்ந்து தேவ தேவனான சிவபெருமானின் தொண்டர் இங்கு வந்தார் எனத் தலைமீது செங்கை கூப்பிக் கொண்டு படுக்கை விட்டு எழுந்து எதிரே போய் அடியார் வணக்கத்தில் நியதியாய்த் தாம் கொண்ட கொள்கைப்படி வணங்கி நின்று,

478. மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன
இங்கு எழுந்து அருளப் பெற்றது என் கொலோ என்று கூற
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்கும் இலாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான்

தெளிவுரை : மங்கலம் பெருக என் வாழ்வே வந்து சேர்ந்தது என்னுமாறு இங்குத் தாங்கள் எழுந்தருளும் பேறு வாய்க்கப் பெற்றது என் கொல்? என்று மெய்ப்பொருளார் சொல்ல, அதனைக் கேட்ட முத்தநாதன், உங்கள் நாயகரான இறைவர் முன் கூறிய ஆகம நூல் இவ்வுலகத்தில் எங்கும் இல்லாததான ஒன்றை உமக்குச் சொல்வதற்காகக் கொண்டு வந்துள்ளேன் எனச் சொன்னான்.

479. பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள் செய்த இந்த
மாறிலா ஆகமத்தை வாசித்து அருள வேண்டும் என்ன
நாறு பூங் கோதை மாது தவிரவே நானும் நீயும்
வேறு இடத்து இருக்க வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன்

தெளிவுரை : எனக்கு இதனைவிட மேலான பேறு வேறு இருக்கின்றதா? இறைவர் அருளிச் செய்த மாறில்லாத ஆகமத்தை வாசித்து அருளவேண்டும் என்று மெய்ப் பொருள் முன்னர் கூற, நான் ஆகமத்தை வாசிக்க மணமுடைய பூமாலை சூடிய தேவியாரும் இந்த இடத்தினின்று நீங்கிட வேண்டும்; நானும் நீயும் தனியான இடத்தில் இருக்க வேண்டும் என்று முத்தநாதன் சொல்ல, மன்னர்.

480. திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கிப்
பரிவுடன் விரைய அந்தப்புரத்திடைப் போக ஏவித்
தரு தவ வேடத்தானைத் தவிசின் மேல் இருத்தித் தாமும்
இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள் செய்யும் என்றான்

தெளிவுரை : திருமகளைப் போல் அங்கு நின்ற மனைவியாரைப் பார்த்து அந்தப்புரத்துக்குப் போகும்படிப் பணித்து விட்டு, புனைந்த தவக்கோலம் கொண்ட முத்தநாதனைத் தக்க இருக்கையில் அமரச் செய்து, தாம் நிலத்தில் இருந்து கொண்டு துதித்து, இனி அருள் செய்க ! என்று இயம்பினார்.

481. கைத் தலத்து இருந்த வஞ்சக் கவளிகை மடி மேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்த அவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான் முன் நினைத்த அப் பரிசே செய்ய
மெய்த் தவ வேடமே மெய்ப்பொருள் எனத் தொழுது வென்றார்

தெளிவுரை : முத்தநாதன் தன் கையில் வைத்திருந்த வஞ்சனையாகச் செய்த புத்தகப்பையை மடிமீது வைத்துப் புத்தகத்தை அவிழ்ப்பவனைப் போல் அவிழ்த்து, நாயனார் வணங்கும் சமயத்தில், அக்கட்டுள் மறைத்து வைத்திருந்த படையை (உடைவாளை) எடுத்து ஓங்கித் தான் முன்னம் நினைத்த அப்படியே செய்தானாக, மெய்ப்பொருளார், உண்மைத் தவ வேடமே மெய்ப்பொருளாகும் ! எனத் தொழுது வென்றார்.

482. மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
இறைப் பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான்
நிறைத்த செங் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப் படும் அளவில் தத்தா நமர் எனத் தடுத்து வீழ்ந்தார்

தெளிவுரை : மறைத்தவன் (முத்தநாதன்) உள்ளே புகுந்த போதே, அங்கு உள்ளம் செலுத்திய தத்தன் மிக விரைவில் அங்கு வந்து தன் வாளால் முத்த நாதனை வெட்ட முனைந்தான். மிகவும் குருதி பொங்குதலால் கீழே விழுகின்ற நாயனார், தாம் தரையில் விழுகின்ற அளவுக்குள், தம் நீண்ட கையினால், தத்தா, இவர் நம்மவர் ! எனக் கூறி அவன் செய்ய முனைந்த செயலைத் தடுத்து விழுந்தார்.

483. வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும் தலையினால் வணங்கித் தாங்கி
யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார்

தெளிவுரை : துன்பப்பட்டு (வெட்டப்பட்டு) வீழ்ந்த மன்னர் ஆணையால் இங்ஙனம் தன் செய்கையினின்று தடுக்கப்பட்ட அடிமையான தத்தனும், தலையால் வணங்கி ஏற்றுக் கொண்டு வீழும் மெய்ப்பொருளாரைத் தாங்கிக் கொண்டு யான் யாது செய்தல் வேண்டும்? எனப் பணிவுடன், கேட்க, எம்பிரான் அடியவரான இவர் இந்நாட்டை விட்டுத் திரும்பிச் செல்லும் வழியில் எவரும் எதிரிட்டுத் தடுக்காத வகையிலே காவல் மேற்கொண்டு இவரைக் கொண்டு விடுவாயாக ! என்றார்.

484. அத் திறம் அறிந்தார் எல்லாம் அரசனைத் தீங்கு செய்த
பொய்த் தவன் தன்னைக் கொல்வோம் எனப் புடை சூழ்ந்த போது
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான்
இத் தவன் போகப் பெற்றது இறைவனது ஆணை என்றான்

தெளிவுரை : அங்கு நிகழ்ந்த செய்தியை அறிந்தவர் அனைவரும் எம் மன்னர்க்குத் தீமை செய்த பொய்த்தவத்தவனைக் கொல்வோம் என்று பக்கத்தில் வந்து சூழ்ந்து கொண்டபோது, தத்தன் அவர்கள் அவ்வாறு செய்யாமல் தடுத்துத் தன்னுடன் அழைத்துச் செல்வான். அவர்களைப் பார்த்து இத் தவன் இவ்வாறு உயிருடன் போகப் பெறுவது மன்னவரின் ஆணையாகும் ! எனக் கூறினான்.

485. அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகன்று நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து
கை வடி நெடுவாள் ஏந்தி ஆளுறாக் கானஞ் சேர
வெவ் வினைக் கொடியோன் தன்னை விட்ட பின் மீண்டு போந்தான்

தெளிவுரை : அப்போது அவர்கள் எல்லாம் அஞ்சி அகன்று போயினர். போக, தத்தன் சிறந்த வழியிலே நகரத்தைக் கடந்து போய்க் கையில் கூரிய வாளை ஏந்திக் காவல் செய்து, ஆட்கள் எவரும் அணுக இயலாத காட்டைச் சேரவும், அங்கு அக்கொடியவனான அவனை விட்டு விட்டுத் திரும்பி வந்தான்.

486. மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீது இலா நெறியில் விட்ட
சொல் திறம் கேட்க வேண்டிச் சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான்

தெளிவுரை : அந்தத் தத்தன், காவல் செய்து அழைத்துக் கொண்டு போன வஞ்ச வேட முடையான் மீது எதிர்த்துப் போரிட வருபவர்களை யெல்லாம் தடுத்து விலக்கித் தீங்கு இல்லாத வழியில் விட்ட நற்சொல்லைக் கேட்பதற்காகவே, சோர்ந்து போய்க் கொண்டிருக்கும் உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கும் மெய்ப்பொருள் மன்னர் திருமுன்பு சென்று அவரது குறிப்பின் வழி நின்றான்.

487. சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய வல்லார் என்று
நின்றவன் தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார்

தெளிவுரை : போய் அடியை வணங்கி நின்று, செய்தவ வேடம் கொண்டவனுக்கு இடையூறு ஏதும் வாராமல் விட்டேன் ! என்று தத்தன் சொல்ல, மெய்ப்பொருளார், இன்று எனக்கு ஐயனான நீ செய்ததைப் போல் எவர் செய்தார் என்று அவனுக்கு நன்றி கூறுமுகத்தான் நல்ல சொற்களைச் சொல்லி, வணங்கி நின்ற அவனைப் பார்த்து, நிறைவான பெருங்கருணை கூர்ந்தார்.

488. அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும்
விரவிய செய்கை தன்னை விளம்புவார் விதியினாலே
பரவிய திரு நீற்று அன்பு பாது காத்து உய்ப்பீர் என்று
புரவலர் மன்றுள் ஆடும் பூங் கழல் சிந்தை செய்தார்

தெளிவுரை : தமக்குப் பின் அரசியல் நடத்த இருக்கும் இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும், தம்மிடம் கொண்ட காதலால் வருந்தும் தேவிமார், ஏனைச் சுற்றத்தார் முதலியவர்க்கும், பொருந்திய செய்தியைக் கூறுபவராய், விதியால் பரவப் பெற்ற விபூதியிடத்து வைத்த அன்பைச் சோர்வு இல்லாது பாதுகாத்து உலகில் கொண்டு செலுத்துவீராக ! என்று உறுதிமொழியைக் கூறிய பின், மன்னர் , திருமன்றிலே அருட் கூத்தாடுகின்ற பூங்கழல் அணிந்த தூக்கிய திருவடியைச் சிந்தித்தார்.

489. தொண்டனார்க்கு இமயப் பாவை துணைவனார் அவர் முன் தம்மைக்
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்தருளி மிக்க
அண்ட வானவர் கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேரக்
கொண்டவாறு இடை அறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார்

தெளிவுரை : தம்மைச் சிந்தை செய்த தொண்டருக்கு உமையம்மையார் கொழுநரான சிவபெருமான், அவர், முன் பலநாளும் உள்ளத்தில் எண்ணியவாறே வெளிப்பட அவர் எதிரில் காட்சி தந்து அருள் செய்து, தேவர்க்கும் எட்டாத தம் அருளாகிய திருவடி நீழல் சேரும்படி அருள் தந்து, இடையிடாமல் கும்பிட்டிருக்கும் பேற்றையும் தந்தார்.

490. இன்னுயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான் அன்பர் என்றே
நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை தன்னில்
என் உரை செய்தேன் ஆக இகல் விறன் மிண்டர் பொற் தாள்
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன்

தெளிவுரை : பொய்யான தவத்தவன் தன் உயிரைச் சிதைக்கக் கண்டும், அவன் தாங்கிய வேடத்தாலே, எம் பிரானின் அன்பனே ஆவான் என மனத்துள் கொண்டு, திருவேடமே சிந்தை செய்தலான தாம் கொண்ட நன்னெறியைத் தளர்வு படாது பாதுகாத்த சேதி நாட்டு மன்னரான மெய்ப் பொருள் நாயனாரின் பெருமையில் என் ஆற்றலில் உட்பட்ட சிறிதேயுரைத்தேன். அந்த நாயனாரின் பொன்னடிகளை வணங்கி, அத்துணைகொண்டு, விறன் மிண்ட நாயனார் முன் செய்த திருத்தொண்டின் வரலாற்றையும் பண்பையும் சொல்லத் துணிகிறேன்.

மெய்ப்பொருள் நாயனார் புராணம் முற்றிற்று

 

விறன்மிண்ட நாயனார் புராணம்

சேரநாட்டில் உள்ளது திருச்செங்குன்றூர். அந்தப் பதியில் வேளாளர் குலத்தில் விறல்மிண்டர் தோன்றினார். அவர் சிவனடியாரிடம் மிக்க அன்புடையவர். அதனால் சிவனடியாரை வணங்கிய பின்பே இறைவரையும் வணங்க வேண்டும் என்று எண்ணினார். திருவாரூரை அடைந்தார். அங்குள்ள தேவாசிரிய மண்டபத்தில் இருந்தார். அங்கு நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியார்களை வணங்காமல் கோயிலுக்குள் சென்றார். அதனால் சினம் கொண்ட விறல்மிண்டர் அடியார்களைச் சுந்தரர் வணங்காததைக் கண்டு சுந்தரர் புறகு (புறம்பானவன்) எனவும் அவருக்கு இறைவரும் புறகு (புறம்பானவன்) என்றும் கூறினார். அவர் கூறியதைச் சுந்தரர் கேட்டார். உடனே அந்த அடியார்களை வணங்கித் திருத்தொண்டத் தொகையைப் பாடினார். பின் விறல் மிண்டர் அடியார் தொண்டு செய்து கயிலாயத்தில் கணநாயகர் ஆகும் பேற்றைப் பெற்றார்.

திருச்சிற்றம்பலம்

491. விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப்
பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடு
திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும்
வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு

தெளிவுரை : மணம் கமழும் கொன்றை மாலை அணிந்த சடையையுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கிப் பெருந்தவம் செய்து, பரசு பெற்ற காரணத்தால் பரசுராமன் என்று பெயர் பெற்ற முனிவன் பெற்ற நாடு, அலைகளையுடைய கடலில் உண்டாகும் பெரு வளங்களும் நிலங்களில் செழித்த வளங்களும், மலைகளின் இனிய வளங்களும் ஒருசேரப் பெருகி மிகுகின்ற நாடாகிய மலை நாடாகும்.

492. வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும்
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும்
மூரல் எனச் சொல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும்
சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர்

தெளிவுரை : கடலில் விளைகின்ற ஒளியுடைய முத்துக்களையும், வயல் கரும்பில் உண்டாகின்ற முத்துக்களையும் மூங்கிலில் விளைகின்ற முத்துக்களையும் இம்முத்துக்களே இவர்களின் பல் வரிசைகள் என்று கூறத்தக்க வெண் முத்துப் போன்ற நகையையுடைய பெண்கள் வகை தெரிந்து, முறையாய்க் கோக்கின்ற சிறப்புடைய, சேரர்களின் திருநாட்டில் உள்ள பல ஊர்களிலும் முன்னால் வைத்து எண்ணும்படி சிறந்த பழைமையான ஊர் திருச்செங்குன்றூர்.

493. என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான்
அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை
சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமைத் தலை நின்றார்
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபிற் பெரியோர் வாழ் பதியாம்

தெளிவுரை : இது, செங்குன்றூர் என்ற பெயரால் விளக்கம் பெற்று உலகு ஏத்தும் பெருமையுடையது; அங்கு அன்னப் பறவைகள் பழகும் வயல்களில் உழவுத் தொழிலால் உண்டாகின்ற வளத்தைக் கொண்டு, உண்மையறிவோர் ஆராய்ந்த மறைகளில் விதித்த, வயல்களில் நடந்து வரும் தூய்மையுடைய குடிமைத்திறத்திலே வேளாளர் தலை சிறந்து விளங்கினர். நிலைபெற்ற குலத்தில் அப்பெரு மறை நூல்களிலே சொல்லப்படுகின்ற மரபிலே வந்த அந்தணப் பெரியோர்கள் வாழ்வதற்கு இடமானது அவ்வூராகும்.

494. அப் பொன் பதியின் இடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி
எப் பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார் எம்பிரானார் விறன் மிண்டர்

தெளிவுரை :  எம் பெருமானான விறன் மிண்டர் அந்த அழகிய நகரத்தில் வேளாள குலத்தை விளக்கம் செய்யத் தோன்றினார். அவர் கூறுவதற்கரிய பெரும் புகழையுடைய சிவபெருமானின் சேவடிகளையே பற்றுக் கோடாய்க் கொண்டு மற்ற எல்லாப் பற்றுகளையும் அறவே நீங்குவார். எல்லையிட ஒண்ணாத உண்மை அடியாரிடத்தில் மிக்க அன்பை உடையவர்.

495. நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த
பதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச் செல்வார்
முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திருக் கூட்டத்து
எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப் பெற்றார்

தெளிவுரை : கங்கையாற்றையும் பிறைச் சந்திரனையும் பூண்ட சடையையுடைய சிவபெருமான் விரும்பி வெளிப்பட்டருள்வதால் நன்மையில் சிறந்த தலங்கள் எங்கெங்கும் கும்பிட்டுச் செல்லும் ஆசையினால் வழிச் செல்பவரையும், அவ்வாறு வணங்கும் முறையில், முதிர்ந்த அன்புடைய பெருந்திருத் தொண்டர்களான திருக்கூடத்தின் முன்னர்ச் சென்று துதித்துப் பின்பே இறைவரின் திருவடிகளை வணங்கும் பேற்றைப் பெற்றார்.

496. பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும்
சென்று ஆள் உடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி
வன் தாள் மேருச் சிலை வளைத்துப் புரங்கள் செற்ற வைதிகத் தேர்
நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார்

தெளிவுரை : தமக்கு எவரும் ஒப்பில்லாதவரான விறன் மிண்டர், பொன்னைக் கொழிக்கும் அருவிகளையுடைய மலை நாட்டைக் கடந்து கடல் சூழ்ந்த வுலகின் எங்கெங்கும் போய், இறைவனது அடியார் ஒழுக்கம் நிலை பெறச் செய்தார்; வன்மையுடைய மேரு மலையை வில்லாக வளைத்துத் திரிபுரங்களை எரித்த வேதங்கள் பூட்டிய தேரின் மேல் நின்றவரான சிவபெருமான் வீற்றிருக்கும் திருவாரூர்க்குச் சென்று வணங்கினார்.

497. திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடைப் பொலிந்து
மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று உரைப்பச் சிவன் அருளால்
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார்

தெளிவுரை : இந்நாயனார், அருட் செல்வம் நிறைந்த பெருமை எந்நாளும் விளங்கும் திருவாரூரில் உள்ள தேவாசிரியன் மண்டபத்தில் பொலிவுடன் வீற்றிருக்கும் சிவனடியார்களை வணங்கி, அவர்களிடம் வந்து சேராமல் ஒரு பக்கமாக ஒதுங்கிச் செல்லும் வன்தொண்டன் புறகு (புறம்பாவான்) என்று சொல்வதற்குச் சிவபெருமான் அருளால் பெருகும் பெரிய பேறு பெற்றார். அதுவுமேயன்றி மேலும் பெறுதற்கு அமைந்து நின்றவராய்.

498. சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறை சூடிப்
பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால்
கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார்

தெளிவுரை : தொலை தூரத்தில் விளங்கி நின்ற மேரு மலையை வில்லாய் வளைந்த சிவபெருமானின் அடியார் திருக்கூட்டத்தைப் பேணாது (வணங்காது) செல்கின்ற நம்பி ஆரூரர்க்கும், அவரை ஆண்ட தலைவராம் தன்மை கொண்ட பிறையைத் தலையில் சூடிப் பாம்பை அணியாகக் கொண்ட பெருமானும் புறகு என்று உரைத்தார். பின் அவர்களிடமே கோணாத நல்ல அருளையும் பெற்றார். இதைவிட வேறு பெருமையும் யார் கூறவல்லார்?

499. ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின்
சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள்
ஓலம் இடவும் உணர்வு அரியார் உடனாம் உளது என்றால்
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தாரார்

தெளிவுரை : உலகமானது உய்யவும் நாம் எல்லாம் உய்யவும், சைவ நன்னெறியின் ஒழுக்கம் உய்யவும் திருத்தொண்டத் தொகையை முன்னே ;நம்பியாரூரர் பாடச் செழுமையான மறைகள் ஓலமிட்டும் உணர்வதற்கரிய சிவபெருமான் நாம் உள்ளது அடியார்களுடனேயாகும் ! என்று உரைப்பாரானால், நஞ்சை அமுதம் ஆக்கிய இறைவரின் அடியார் பெருமையை யார் அறிந்தவர் ?

500. ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெருந் தன்மை
தொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன் மிண்டர்
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல்ற்கீழ்
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார்

தெளிவுரை : இதைப் போன்றே பலகாலம் இவ்வுலகிலே உயர்ந்த பெருந்தன்மைகள் யாவும் கூடிய நிலையான சைவ நெறியினைக் காத்துத் தொண்டு செய்யும் பேறு பெற்று வாழ்ந்தவரான விறன்மிண்ட நாயனார் தம் திருத் தொண்டிற்கு ஏற்ற வகையினால் கணநாயகர் ஆகின்ற நிலைமையைப் பெற்று சிவபெருமானின் திருவடி நீழற் கீழ் விளங்கினார்.

501. வேறு பிரிதென் திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும்
பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை
கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேற் கொண்டே
ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத் தொண்டு அறைகுவாம்

தெளிவுரை : வேறு பலவற்றையும் சொல்வதால் என்ன பயன்? திருத்தொண்டத் தொகை கிடைக்கப் பெற்றதனால் உலகம் விளங்க வரும் பெரும் பேற்றுக்குக் காரணரான விறன் மிண்ட நாயனாரின் பெருமையை எடுத்துக் கூறும் சொல் திறம் என் சொல் ஆற்றல் அளவுக்குள் அமையுமோ? அவரது திருவடியைத் தலைமேற்கொண்டு, அத்துணை கொண்டு, பழையாறை வணிகரான அமர்நீதிநாயனாரின் திருத்தொண்டின் இயல்பைக் கூறுவோம்.

விறன்மிண்ட நாயனார் புராணம் முற்றுப் பெற்றது. திருச்சிற்றம்பலம்

 
மேலும் பனிரெண்டாம் திருமறை »
temple news
பன்னிரு திருமுறைகளில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் 12வது ... மேலும்
 
temple news
அமர் நீதி நாயனார் புராணம் சோழநாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் தோன்றியவர் அமர்நீதி ... மேலும்
 
temple news
4. மும்மையால் உலகாண்ட சருக்கம் இச்சருக்கத்தில் மூர்த்தியார், முருகர், உருத்திர பசுபதியார், திருநாளைப் ... மேலும்
 
temple news
1501. அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணிசண்பைமைம்மலி கண்டத் தண்டர் பிரானார் மகனாரும்கொய்ம்மலர் வாவித் ... மேலும்
 
temple news
இரண்டாம் காண்டம் 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் 34. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் சைவ சமயம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar