பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
12:07
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வராள் கோயில் மகா கும்பாபிஷேகம் பக்தர்களின் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க கோலாகலமாக நடந்தது. இக்கோயிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த 6 ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து இரண்டு நாட்கள் கணபதி ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. ஜூலை 8 ம் தேதி வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு யாகசாலை பிரவேசத்துக்கு பின் முதல்கால யாக பூஜைகள் துவங்கியது. நேற்று அதிகாலை 3 மணிக்கு 6ம் கால யாக பூஜைகள் துவங்கி 5 மணிக்கு மகாபூர்ணாகுதி நிறைவடைந்தது. தொடர்ந்து 9 மணிக்கு கயிலை வாத்தியம், மேள தாளம் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, கோபுரத்தை அடைந்தன. கருடன் கோயிலை வட்டமிட, பக்தர்களின் ஹர ஹர, சிவ சிவ கோஷம், பெண்களின் மங்கல குரவை ஒலிக்க சரியாக 9.30 மணிக்கு மூலஸ்தான, ராஜகோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் குருக்கள் சிவகுமார், பாஸ்கரன் சர்வசாதகம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வராள் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்து. தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமிகள் வீதியுலா வந்தனர். மேலும் பக்தர்களுக்குளுக்கு ஆயிர வைசிய சபை, சமூக நலச்சங்கம், இளைஞர் சங்கம் சர்பில் அன்னதானம், நீர், மோர் வழங்கபட்டன. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபை, ஆயிர வைசிய சமூக நலச்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.