பழநி: பழநி மலைக்கோயில் கழிவுகளை மொத்தமாக ஒரு இடத்தில் சேகரித்து, அதன்மூலம் சமையல் எரிவாயு தயாரிக்க துவங்கப்பட்ட பணி கிடப்பில் உள்ளது. பழநி கோயில் இலவச சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகே ரூ. 20 லட்சம் செலவில் நவீன தொழில் நுட்பத்துடன் கழிவுநீரில் எரிவாயு தயாரிக்கும் திட்டம் துவக்கப்பட்டது. இதற்காக இரண்டு எரிவாயு உற்பத்தி கலன்கள் (டாங்க்) அமைக்கப்பட்டு அதன் அருகே வடித்திறக்கல் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைக்கோயில் கழிவுகளை குழாய்கள் மூலம் கொண்டு வந்தும், திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, வடித்திறக்கல் தொட்டிகளில் நிரப்பப்படுகிறது. அதன் அருகேயுள்ள எரிவாயு உற்பத்தி கலன்கள் மூலம் காஸ் தயாராகிறது. இந்த எரிவாயுவை கோயிலுக்கு வரும் பக்தர்கள் சமையல் செய்வதற்கு வழங்க கோயில்நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பணி துவங்கி இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை திட்டம் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. தைப்பூசத்திற்குள்ளாவது பயன்பாட்டிற்கு கொண்டுவர கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கழிவுநீரில் காஸ் தயாரிக்க மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளோம். அது கிடைத்தவுடன் மீதியுள்ள பணிகள் முடிக்கப்படும்,” என்றார்.