திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், நேற்று கனகவல்லி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வீரராகவ பெருமாளுக்கும், கனகவல்லி தாயாருக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். கடந்த, 12ம் தேதி வீரராகவருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. நேற்று கனகவல்லி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. இதற்காக, ஹிருத்தாப நாசினி குளத்திலிருந்து புனித நீரை வெள்ளி குடங்களில் அர்ச்சகர்கள் எடுத்து வர, திருமஞ்சன குடம் நான்கு வீதிகள் வழியாக நடந்தது. பின், கனகவல்லி தாயாருக்கு குளத்திலிருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர், பால், தயிர், மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.நேற்று மாலை 6:30 மணிக்கு உற்சவருக்கு சாற்று முறை நடைபெற்றது. மாலை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த உற்சவரை பொதுமக்கள் வழிபட்டனர்.