பதிவு செய்த நாள்
16
ஜூலை
2016
11:07
ஓமலூர்: சின்னநடுப்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா, இன்று, பொங்கல் வைபவம் நடைபெற உள்ளது. ஓமலூர், சின்னநடுப்பட்டியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 8ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம், விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம், சக்தி அழைத்தல், அன்னதானம் ஆகியவை நடந்தது. நேற்று, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், வீரகாரன் எட்டு திசையிலும் பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கரகம், அக்னி கரகம், பூங்கரகம் மற்றும் வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சியுடன், தோஷ நிவர்த்தியாக, ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஜென்ம பூஜை நடந்தது. இன்று அதிகாலை முதல், அம்மனுக்கு பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், வண்டிவேடிக்கை, இரவு நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். நாளை மறுதினம், மஞ்சள் நீராட்டுதலுடன், விழா நிறைவடைகிறது.