பதிவு செய்த நாள்
16
செப்
2011
10:09
நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவ விழா, இம்மாதம் 28ம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் அங்குரார்ப்பணத்துடன் துவங்குகிறது. 29ம் தேதி முதல் அக்., 7ம் தேதி வரை ஒன்பது தினங்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், தினமும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 29ம் தேதி திருமலைக்கு வரும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில அரசு சார்பில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான மலையப்பசுவாமிக்கு பட்டுவாஸ்திரம் சமர்பிக்கிறார். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான அக்., 3ம் தேதி மலையப்பசுவாமிக்கு மிகவும் விருப்பமான கருட வாகன சேவை உற்சவம் நடைபெறுகிறது. அக்., 4ம் தேதி தங்கத்தேர் உற்சவம் நடக்கிறது. தினமும் சுவாமி உபயதேவியாருடன் வாகன சேவையில், உற்சவ மூர்த்தியாக, திருமலையின் நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பிரம்மோற்சவ விழாவிற்கான நிகழ்ச்சி விவரங்களை, தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 28ம் தேதி திருமலை கோவிலில் இரவு 7 மணிக்கு அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி தொடங்குகிறது. பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான, 7ம் தேதி காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை திருமலை தெப்பத் திருக்குளத்தில் சக்கரஸ்தான வைபவம் நடைபெறும். பிரம்மோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.