பதிவு செய்த நாள்
18
ஜூலை
2016
11:07
புதுச்சேரி: கடற்கரை சாலையில் தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்ட, சத்ய சாயி சேவா சமிதியின், பாலவிகாஸ் மாணவர்கள், ஒரு டன் குப்பையை அகற்றினர். தனிமனிதன் ஒழுக்கமான வாழ்க்கையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக, சத்ய சாயி பாபாவால் தோற்றுவிக்கப்பட்டது, சத்ய சாயி பாலவிகாஸ் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், குழந்தைகள் மனத்தில் நன்னடத்தையை உருவாக்குவதோடு, ஆன்மிக தேடலையும் ஏற்படுத்துவம் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
துப்புரவு பணி: புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள நகர சமிதியில் பயிற்சி பெறும் மூன்றாம் வகுப்பு முடித்த பாலவிகாஸ் மாணவர்கள் நேற்று கடற்கரை சாலையில் தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டனர். கருங்கள் குவியல்களுக்கு இடையே கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், மதுபாட்டீல்கள் அகற்றப்பட்டன. மொத்தம் ஒரு டன் குப்பை சேகரிக்கப்பட்டது.
சூரிய நமஸ்காரம்: பின்பு, கடற்கரை சாலையில் காந்தி திடலில் திரண்ட மாணவர்களுக்கு உடல் நலத்தையும், மன வளத்தையும் காப்பதற்காக சூரிய நமஸ்காரம் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பஞ்ச பூதங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சத்ய சாயி மாநில பொறுப்பாளர்கள் பேசும்போது, பொது இடமான கடற்கரை சாலையில் பாலவிகாஸ் மாணவர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டு தங்களது சமூக பொறுப்பினை செய்தனர். இத்துடன் நிறுத்திவிடாமல், அன்றாட வாழ்விலும், பொது இடத்திலும் இந்த சமூக பொறுப்பினை தொடர வேண்டும் என்றனர். துாய்மை பணி ஏற்பாடுகளை புதுச்சேரி சத்ய சாயி நிறுவனங்களின் மாநில பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.