பதிவு செய்த நாள்
18
ஜூலை
2016
12:07
ஊத்துக்கோட்டை: ஆடி மாதம் துவங்கிய நிலையில், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று, அதிகளவு வாகனங்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மேம்பாலத்தின் நடைபாதையில் வீசும் துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதிப்பட்டனர். பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் நடக்கும் விழாக்களில் ஆடி மாத விழா முக்கியமானது. இந்த மாதத்தில் துவங்கும் முதல் ஞாயிற்றுக்கிழமை முதல், 13 வாரங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நேற்று, முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் நாகலாபுரம், பிச்சாட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். கார், வேன், சரக்கு வாகனங்களில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் சென்றனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு, பெரியபாளையத்தில் குவிந்தனர். காலையில் இவர்கள் அம்மனை தரிசிக்கும் முன் மொட்டை அடித்தல், வேப்ப இலை ஆடை அணிதல் உள்ளிட்ட நேர்த்திக் கடனை செலுத்தினர்.
ஊத்துக்கோட்டை அடுத்த, புதுக்குப்பம் கிராமத்தில் இருந்து பெண்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்றனர். ஆரணி ஆற்றின் மேல் உள்ள மேம்பாலத்தில் பாதசாரிகள் நடந்து செல்லும் இடத்தில் கழிவுநீர் துர்நாற்றத்தாலும், கால்நடைகள் இயற்கை உபாதைகளை கழித்ததாலும், கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மூக்கை மூடிக்கொண்டு சென்றனர். வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் குப்பை அகற்றாமல் தேங்கியுள்ளது பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக எல்லாபுரம் ஒன்றியம் சார்பில், சுகாதார துறைக்கு நிதி வழங்கும் நிலையில், பக்தர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்ய, சுகாதாரம், ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இங்கு தேங்கியுள்ள குப்பை, துர்நாற்றம் வீசும் இடங்கள் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் நாட்களில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பூவை.சீதாலட்சுமி பி.டி.ஓ., எல்லாபுரம்