பதிவு செய்த நாள்
16
செப்
2011
10:09
ஊட்டி:ஊட்டி எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 30ம் தேதி நடக்கிறது.ஊட்டி எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வருகிறது. அடிவாரம் வலம்புரி விநாயகர் கோவில், 108 திருப்படிகள், ஆறுபடைவீடு மண்டபங்கள், ராஜகோபுர 3 நிலை, மகா மண்டபம், முருகன் கருவறை, கருவறை விமானம் 2ம் நிலை, சொர்ணாகர்ஷண பைரவர், நவநாயகர், காளியம்மன், ஜலகண்டீஸ்வரி, ஜலகண்டேஸ்வர சுவாமி, குகை சித்தி விநாயகர் கோவில்கள், 40 அடி உயரமுள்ள முருகன் திருவுருவச்சிலை, சிவன் அம்பாள் கோவில் மகா மண்டபம், வெளிப்பிரகார மண்டபம், சால கோபுரம், தேர் மண்டபம் உட்பட பல்வேறு திருப்பணிகள் நடந்துள்ளன.தற்போது மண்டபம் புதுப்பிப்பு, மடப்பள்ளி அமைத்தல், நடைபாதை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வரும் 30ம் தேதி காலை 9.05 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கயிலை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், இளையபட்டம் மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடாலய தலைவர் குமரகுருபர சுவாமி ஆகியோர் ஆசியுடன், உணவு துறை அமைச்சர் புத்தி சந்திரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக், உட்பட பலர் பங்கேற்கின்றனர்.