பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
11:07
வெற்றி நோக்குடன் செயலாற்றும் மேஷ ராசி அன்பர்களே!
தற்போது
குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கு
செல்கிறார். இது வரை அவர் பல்வேறு நன்மைகளை செய்து இருப்பார். குறிப்பாக
குடும்பத்தில் மகிழ்ச்சியையும், பணவரவையும் கொடுத்து குதுõகலத்தை
ஏற்படுத்தி இருப்பார். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம்
கிடைத்திருக்கும். பெண்களால் நற்பலனை அடைந்திருப்பீர்கள். தற்போது குரு
பகவான் 6ம் இடத்திற்கு செல்வது சிறப்பானது என சொல்ல முடியாது. ‘6ல் குரு
இருக்க கை, கால்கள் பந்தனம்’ என்பது ஜோதிட மொழி. அதாவது 6ம் இடத்து
குருவால் உடல்நலம் பாதிக்கப்படலாம். மனதில் தளர்ச்சி ஏற்படலாம். இதற்காக
கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு
என்பார்கள். அந்த வகையில் குருவின் 9ம் இடத்து பார்வை குடும்ப ஸ்தானத்தில்
விழுவதால் கணவன், மனைவி இணை பிரியாமல் வாழ்வர். பணவரவும் அதிகரிக்கும்.
எந்த இடையூறையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள்.
உங்களையும் அறியாமல்
அசாத்திய ஆற்றல் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். மனதில் துணிச்சல்
பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சனி பகவான் இப்போது
8ம் இடத்தில் இருக்கிறார். அவரால் உறவினர்கள் வகையில் மனக்கசப்பும்,
கருத்துவேறுபாடும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை
உருவாகும். ராகு 5ம் இடமான சிம்ம ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம்
அல்ல. அவரால் மனதில் இனம் புரியாத வேதனை ஆட்டிப் படைக்கலாம். அதே நேரம்
கேது 11ம் இடமான கும்பத்தில் இருந்து நல்ல வளத்தையும் நல்ல
ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த
செயலை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் கொடுப்பார். முக்கிய கிரகங்கள் பல
சாதகமாக இல்லை என்றாலும், கிரக பலத்தால் உங்க காட்டுல பணமழை என்று
சொல்லும் விதத்தில் கையில் பெரும்பணம் புழங்கும்.
அதே சமயத்தில் ஆரோக்கிய
குறைவால் அடிக்கடி சிரமப்பட நேரிடும். உடல்நலனில் அக்கறை கொள்வது அவசியம்.
குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மனம் போல ஆடம்பர
பொருட்களை வாங்கலாம். புதிய வீடு, மனை வாங்கவும் யோகமுண்டாகும். சிலர்
வசதியான வீட்டிற்கு குடிபோகும் வாய்ப்பு கிடைக்கும். உறவினர் மத்தியில்
செல்வாக்கு ஏற்படும். அவர்களின் வருகையால் நன்மை கிடைக்கும். திருமணம்
போன்ற சுபநிகழ்ச்சிகள் தடைபடலாம். குருவின் பார்வை பலமாக இருப்பதால்
குடும்பத்தில் குற்றால சாரல் வீசும். உள்ளத்தில் உதகை பூக்கள் பூக்கும்.
கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாக இடமுண்டு. ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுத்து போகவும்.
தொழில், வியாபாரம்: தொழில்,
வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமையும்,
அனுகூலமான போக்கும் காணப்படும். இரும்பு, கம்ப்யூட்டர், அச்சுத்தொழில்,
இயந்திர தொடர்பான தொழில் போன்ற துறைகளில் நல்ல வளர்ச்சி ஏற்படும். எதிலும்
அதிக முதலீடோ அல்லது புதிய முதலீடோ தவிர்ப்பது அவசியம். அரசு வகையில் உதவி
கிடைப்பதில் தடை ஏற்படலாம். வீண் அலைச்சல் உருவாகும். கையில் இருக்கும்
பணத்தை நிரந்தர டெபாசிட் செய்வது புத்திசாலித்தனம். போட்டியாளர் மூலம்
பிரச்னை தலைதுõக்கலாம். கவனமாக இருப்பது நல்லது.
பணியாளர்கள்:
பணியாளர்கள் கடந்த காலத்தைப் போல நன்மை எதிர்பார்க்க முடியாது. வேலையில்
ஆர்வம் இல்லாமல் போகலாம். வேலைப்பளுவும் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
காரணமற்ற
அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறாமல் போகலாம்.
சிலருக்கு விருப்பமில்லாத இட, பணி மாற்றம் கிடைக்கப் பெறலாம். பணியில்
விழிப்புடன் இருப்பது நல்லது. ஆனால், விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.
பணப்புழக்கத்தில் குறைவிருக்காது.
கலைஞர்கள்: சுமாரான நிலையில்
இருப்பர். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
பாராட்டுகள், விருதுகள் போன்றவை எதிர்பார்த்தபடி கிடைக்காது. ஆனால்,
வருமானத்தில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பில்லை.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடு இருப்பர். எதிர்பார்த்த புதிய பதவி அல்லது கவுரவம் கிடைப்பது அரிது.
மாணவர்கள்: மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு சிறப்பானதாக இருந்திருக்கும்.
தேர்விலும்
நல்ல மதிப்பெண் பெற்றிருப்பீர்கள். ஆனால் வரும் கல்வி ஆண்டில் அக்கறையுடன்
கல்வியில் ஈடுபட வேண்டியது அவசியம். உழைப்புக்கேற்ற பலனே கிடைக்கும்.
போட்டி, பந்தயத்தில் விடாமுயற்சி இருந்தால் வெற்றி உங்களுக்கே.
விவசாயிகள்:
நல்ல வளர்ச்சி காண்பர். எள், கேழ்வரகு, பனை போன்ற பயிர்களில் நல்ல
வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி தாமதமாகும். சிலர்
நவீன முறையில் விவசாயம் செய்து வருமானத்தைப் பெருக்க முயல்வர்.
டிசம்பருக்குப் பிறகு அதிக முதலீடு செய்யும் பயிர்களை தவிர்ப்பது நல்லது. கூலி
தொழிலாளர்கள்
சீரான வாழ்வை காண்பர். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வரும் என்று
நம்ப முடியாது. எனவே புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள்:
நல்ல வசதியோடு காணப்படுவர். சுற்றுலா, விருந்து, விழா என அடிக்கடி சென்று
வருவர். குழந்தைகளின் செயல்பாட்டால் மகிழ்ச்சி காண்பீர்கள். புதிய நகை,
ஆடைகள் போன்றவை கிடைக்கும். சிலருக்கு பிறந்த வீட்டு சீதனம் வந்து சேரும்.
வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். கணவர்
மற்றும் குடும்பத்தாரிடம் சற்று விட்டுக் கொடுத்து போகவும்.
பரிகாரம்:
வெள்ளியன்று மாரியம்மனை தரிசியுங்கள். ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
துர்க்கை அம்மனுக்கு தீபமிடுவது நன்மையளிக்கும். பசுவுக்கு கீரை, பழம்
கொடுங்கள். ஏழைக்குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவி செய்யுங்கள்.