பதிவு செய்த நாள்
09
மே
2025
01:05
புனர்பூசம்.. யோக காலம்: ஞானக் காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2,3ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு, புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்
புனர்பூசம் 1,2,3ம் பாதத்தினருக்கு மே11 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து, தொழில், பணிக்காக வெளியூர் செல்லும் நிலை சிலருக்கு ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்றாலும் இக்காலத்தில்தான் அனைத்திலும் முன்னேற்றத்தையும் வழங்கப் போகிறார் குரு பகவான். 4ம் பாதத்தினருக்கு விரய குருவாக சஞ்சரித்து பல வகையில் செலவுகளை உண்டாக்கினாலும், அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து குடும்பத்தில் முன்னேற்றம், வசதி வாய்ப்பை அதிகரிப்பார் குருபகவான்.
பார்வைகளின் பலன்
குரு சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது விதி. 1,2,3 ம் பாதத்தினருக்கு, 5,7,9 ம் இடங்களுக்கு மே11 முதல் குரு பார்வை உண்டாவதால் குடும்பத்தில் சுபிட்சநிலை உண்டாகும். கடன், வம்பு என்றிருந்த நிலை மாறும். உறவுகள் பலப்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தந்தையின் சொத்துகள் கைக்கு வரும். சிலருக்கு வாரிசு அடிப்படையில் தந்தையின் வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் வேண்டுதல் பலிக்கும். சிலருக்கு இரண்டாவது குழந்தையும் சுபமாக பிறக்கும். திருமண வயதினருக்கு மணமேடை அமையும். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய வீடு, சொத்து என்ற கனவு நனவாகும். 4ம் பாதத்தினருக்கு, 4, 6, 8 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், உடல் பாதிப்பு விலகும். தொழிலிலும், வேலையிலும் இருந்த எதிர்ப்பு, மறைமுகத் தொல்லை இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறி வழக்கு சாதகமாகும். உங்கள் செல்வாக்கை மறைக்க எதிரிகள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறாமல் போகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும்.
சனி சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் ஆதாய நிலை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வம்பு வழக்கு முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். மார்ச் 6 முதல் பத்தாமிட சனியால், வேலை, தொழிலில் நெருக்கடி உண்டாகும். வியாபாரம் மந்தமாகும். செலவு அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் நிலை உண்டாகும்.
4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை அஷ்டம சனியின் காலம் என்பதால் வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிலருக்கு மருத்துவ செலவு அதிகரிக்கும். இல்லையெனில் அவமானத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும். மார்ச் 6க்கு மேல் புதிய பாதை தெரியும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். கடன்கள் அடைபடும். வருமானம் அதிகரிக்கும், சொத்து சுகம் உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்
1, 2, 3 ம் பாதத்தினருக்கு ராகு 9ல், கேது3 ல் சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். 4ம் பாதத்தினருக்கு, ராகு 8ல் கேது2 ல் சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு, சிலருக்கு விபத்து ஏற்படும். கீழோரால் அவமானங்களை சந்திக்க நேரும். குடும்பத்தில் பிரச்னை, வருமானத்தில் நெருக்கடி ஏற்படும்.
சூரிய சஞ்சாரம்
1, 2, 3 ம் பாதத்தினருக்கு, ஏப். 14 – மே 14, ஆக. 17 – செப். 16, நவ. 11 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – ஜூன் 16, செப். 17 – அக். 17, டிச. 16 – 2026 ஜன. 14 காலங்களிலும், தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். ஆரோக்கியத்தை சீராக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். வேலை வாய்ப்பை உண்டாக்குவார். தொழிலில் லாபம், வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்.
செவ்வாய் சஞ்சாரம்
1, 2, 3 ம் பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 30, அக். 27 – டிச. 6 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு ஜூலை 30 – செப்.14, டிச.6 – 2026 ஜன.14 காலங்களிலும் தன் 3, 6, ம் இட சஞ்சாரங்களால் எடுக்கும் வேலைகளில் வெற்றியை உண்டாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். தன்னம்பிக்கை, தைரியத்தை அதிகரிப்பார். சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார். வியாபாரம், தொழிலில் லாபத்தை ஏற்படுத்துவார்.
பொதுப்பலன்
குரு பகவான் சஞ்சாரத்தில், ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் 4ம் பாதத்தினருக்கு யோகப் பலன் வழங்குவார். 1, 2, 3ம் பாதத்தினருக்கு பார்வைகளால் பலன் கிடைக்கும். சூரியன், செவ்வாய் சஞ்சாரம் பெருமளவில் நன்மைகளை உண்டாக்கும். வசதி வாய்ப்பை அதிகரிக்கும்.
தொழில்
இக்காலத்தில் தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. முதலீட்டிலும் உற்பத்தியிலும் கவனம் தேவை. எந்த ஒன்றையும் உங்கள் பார்வையிலேயே செய்வதால் எதிர்பார்த்த லாபம் வரும். ஏற்றுமதி, இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், ஜுவல்லரி, பங்கு வர்த்தகம், பதிப்பகம், கமிஷன் ஏஜன்சி, வேளாண்மைத் தொழிலில் லாபம் கூடும்.
பணியாளர்கள்
வேலைப்பளு அதிகரிக்கும். அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். இருக்கும் வேலையை விட்டு விடலாமா என்றும் யோசிப்பீர்கள். வேறு வேலைக்கும் முயற்சி செய்வீர்கள். இக்காலத்தில் யோசித்து செயல்படுவது நல்லது. நிர்வாகத்தின் விருப்பப்படி செயல்படுவதால் நெருக்கடி இல்லாமல் போகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அதற்காக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும்.
பெண்கள்
படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும்.சிலருக்கு குழந்தை பாக்கியமும் ஏற்படும். கணவரிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும்.
கல்வி
மாணவர்களுக்கு படிப்பின் அவசியம் தெரியவரும். ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பர். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. வாகனப் பயணத்தில் இக்காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொற்று நோய், பரம்பரை நோய்கள் வர வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் அக்கறை அவசியம்.
குடும்பம்
குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வசதி வாய்ப்பு கூடும். சேமிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். சொந்த வீடு, வாகனம் அமையும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும்.
பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட நன்மை அதிகரிக்கும்.
பூசம்.. திருமணம் நடக்கும்
கர்மக்காரகன் சனி பகவானை நட்சத்திர அதிபதியாகவும், மனக் காரகன் சந்திரனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் நினைத்ததை சாதிப்பதில் வல்லவர். ஆனாலும், சில நேரங்களில் உங்கள் வாழ்க்கைத்துணையால் போராட்டத்தை சந்திக்கலாம். உங்களுக்கு பாக்யாதிபதியான குரு பகவான் மே11 முதல் உங்கள் ராசிக்கு 12 ம் இடத்தில் விரய குருவாக சஞ்சரிக்கிறார். விரய குரு பல வகையிலும் செலவுகளை உண்டாக்குவார். அலைச்சலை ஏற்படுத்துவார். தொழிலில் போராட்டத்தை உண்டாக்குவார். வேலையில் நெருக்கடிகளை அதிகரிப்பார். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அதனால் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படும் என்றாலும், அக். 8 முதல் நவ. 18 வரை உங்கள் ராசிக்குள் உச்சமாக சஞ்சரிப்பவர் வசதி வாய்ப்பு, குடும்பத்தில் முன்னேற்றத்தை அதிகரிப்பார். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற கனவுகள் நடந்தேறும்.
பார்வைகளின் பலன்
குரு சஞ்சரிக்கும் இடத்தை விட அவர் பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது விதி. இக்காலத்தில் 4, 6, 8 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் சொந்த வீடு, வாகனம் அமையும். வரவை விட செலவு அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவி செய்வதற்காக ஜாமீன் கையெழுத்திட்டால் சட்ட சிக்கல்களுக்கு ஆளாக நேரும். இக்காலத்தில் ஒரு கடனை அடைக்க தைரியமாக வேறு இடத்தில் கடன் வாங்குவீர்கள். அதை அடைக்க முடியாமல் திணறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு உண்டாகும். அதற்கேற்ற முன்னேற்றம் இல்லாமல் போகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். எதிர் வரும் பிரச்னைகளை துணிச்சலாக எதிர்கொள்வீர்கள்.
சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை அஷ்டம சனியின் காலம் என்பதால் எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லாமல் போகும். எடுக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்படும். வாழ்வில் இதுவரை இப்படி சோதனைகளைக் கண்டதில்லை என்று நினைக்கும் அளவிற்கு நிலைமைகள் இருக்கும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். இல்லையெனில் கடன் கொடுத்தவர்களால் அவமானத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உருவாகும். மார்ச் 6 க்கு மேல் சனி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை அனுபவித்த சங்கடங்கள் மாறும். வருமானத்திற்குரிய முயற்சிகள் வெற்றியாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். கடன்கள் அடைபடும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
ராகு, கேது சஞ்சாரம்
8 ல் ராகு, 2 ல் கேது சஞ்சரிப்பதால், ஒன்று போய் ஒன்று என்று நெருக்கடிக்கு ஆளாவீர்கள். வெளியில்தான் பிரச்னை என்றால் வீட்டிற்குள் நிம்மதி இல்லாமல் போகும். வருமானத்தில் தடைகள் உண்டாகும். உடல் பாதிப்பு, சிலருக்கு விபத்தும் ஏற்படும். தவறான பழக்க வழக்கங்களால் அவமானத்தை சந்திக்க நேரும். வியாபாரத்தில் செய்யும் முதலீடு காணாமல் போகும்.
சூரிய சஞ்சாரம்
ஏப்.14 – ஜூன்16, செப்.17 – அக்.17, டிச.16 – 2026 ஜன. 14 காலங்களில் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் உங்கள் நிலையில் இருக்கும் சங்கடங்களை இல்லாமல் செய்வார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். அக்கம் பக்கத்தினர், உறவினர் மத்தியில் செல்வாக்கை அதிகரிப்பார். ஆரோக்கிய குறைபாட்டை சீராக்குவார். இழுபறியாக இருந்த வழக்குகளை சாதகமாக்குவார். தொழிலில் லாபம், வேலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். இக்காலத்தில் உங்களுக்கிருந்த பாதிப்பு, பிரச்னை இல்லாமல் போகும்.
செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 30 – செப். 14, டிச. 6 – 2026 ஜன.14 காலங்களில் தன் 3, 6, ம் இட சஞ்சாரங்களால், உங்கள் நிலையை உயர்த்துவார். கடுமையான நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பார். எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். தைரியமாக செயல்பட வைப்பார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். முடியாது என நீங்கள் விட்டு விட்ட முயற்சிகளை மீண்டும் கையில் எடுத்து வெற்றி காண வைப்பார். வியாபாரம், தொழிலில் இருந்த பாதிப்பை நீக்குவார்.
பொதுப்பலன்
குருபகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை தர முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை உங்கள் ராசிக்குள் உச்சமடையும் காலத்தில் நினைத்த வேலைகள் நடந்தேறும். தொடர்ந்து பார்வைகளால் பலன் கிடைப்பதுடன், சூரியன், செவ்வாய் சஞ்சாரமும் பெருமளவில் நன்மை தரும்.
தொழில்
இக்காலத்தில் தொழிலில் புதிய முயற்சி, முதலீடுகளை தவிர்க்கவும். கடன் வாங்கி தொழிலை விரிவு செய்யலாம் என்ற எண்ணம் இருந்தால் அதைத் தவிர்ப்பது நல்லது. எந்த ஒன்றையும் உங்கள் பார்வையிலேயே செய்வது அவசியம். ஏற்றுமதி இறக்குமதி, டிரான்ஸ்போர்ட், வேளாண்மை, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருத்துவம், கம்ப்யூட்டர், குடிநீர், பங்கு வர்த்தகம், கமிஷன் ஏஜன்சி வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். புதிய வேலை, வேறு இடத்திற்கு முயற்சி செய்வதெல்லாம் இக்காலத்தில் வேண்டாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதும், வேலையில் கவனமாக இருப்பதும் அவசியம். நிர்வாகத்தின் விருப்பப்படி செயல்படுவதால் நெருக்கடி இல்லாமல் போகும். அரசு பணியில் இருப்பவர்கள் மேலதிகாரியின் ஆலோசனையின்படி செயல்படுவது நன்மையாகும். ஒரு சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.
பெண்கள்
குருவின் பார்வைகள் உங்கள் நிலையை உயர்த்தும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். மாங்கல்ய ஸ்தானத்தில் ராகு, குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் எல்லாவற்றையும் அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். இல்லையெனில் குடும்பத்தில் பிரச்னைகள் உண்டாகும். கணவரின் உடல்நிலையின் மீது அக்கறை எடுப்பது நன்மையாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.
கல்வி
படிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும் அலட்சியமும் சோம்பலும் உங்களுக்கு எதிராகும் என்பதால் இக்காலத்தில் படிப்பில் அக்கறை கொள்வது நன்மையாகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்தும், மருத்துவச் செலவை உண்டாக்கும் என்பதால் கவனமாக இருப்பது நன்மையாகும். விபத்து ஏற்படவும் வாய்ப்பிருப்பதால் வாகனப் பயணத்தில் இக்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குடும்பம்
கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும் என்றாலும் குடும்பத்திற்குள் மூன்றாவது நபர் தலையிடுவதை தவிர்ப்பது நன்மையாகும். கடன் வாங்கியாவது வசதி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வீர்கள். புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். பிள்ளைகளின் உயர் கல்வி கனவை நனவாக்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.
ஆயில்யம்.. செலவு அதிகரிக்கும்; வித்யா காரகனான புத பகவானை நட்சத்திர அதிபதியாகவும், மனக்காரகன் சந்திரனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் திட்டமிட்டும், சாதுரியமாகவும் செயல்படக்கூடியவர்கள். பார்வைக்கு மென்மையானவராக தெரிந்தாலும் எடுத்த வேலையை முடிப்பதில் வல்லவராக இருப்பீர்கள். உங்களுக்கு பாக்கியங்களை தரக்கூடிய குரு பகவான் மே11 முதல் 12ம் இடத்தில் விரய குருவாக சஞ்சரிக்கிறார். உங்களுக்கு அவரே பாக்கியாதிபதி என்பதால் எதிர்பார்க்கும் நன்மை வழங்கி அதன் வழியே செலவுகளை மேற்கொள்ளும் நிலையை உண்டாக்குவார். வாழ்வில் உயர்வு பெற பாக்கிய ஸ்தானம் வலு பெற வேண்டும். பாக்கிய ஸ்தானாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும். பாக்கியாதிபதியான குரு அவருக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் போது வருமானத்தை வழங்கி அதில் இருந்து செலவுகளை ஏற்படுத்துவார். இக்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி யாவும் ஆதாயம் தரும். குடும்ப நலன் கருதி பல்வேறு செயல்களில் ஈடுபடுவீர்கள். இடம், வீடு, வாகனம் வாங்குதல், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக செலவு செய்தல் என்ற நிலை உண்டாகும். அக்.8 முதல் நவ.18 வரை உங்கள் ராசிக்குள் உச்சமாக சஞ்சரிப்பவர், வசதி வாய்ப்பை அதிகரிப்பார். திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவை நனவாக்குவார்.
பார்வைகளின் பலன்
குரு சஞ்சரிக்கும் இடத்தை விட அவர் பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது விதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 4, 6, 8 ம் இடங்களுக்கு குரு பார்வை உண்டாவதால், உடல் பாதிப்பு விலகி ஆரோக்கியம் மேம்படும். குடும்பம், நட்பு என்ற வட்டத்தில் மீண்டும் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். சிலர் புதிதாக நிலம், வாகனம் வாங்குவர். வீட்டை பழுது பார்த்து புதுப்பிப்பீர்கள். அசையா சொத்துகள் உங்கள் பெயரில் அமையும். எதிர்ப்பு, பகைவர் தொல்லை விலகி நிம்மதி அடைவீர்கள். இதுவரையில் சந்தித்த பிரச்னைகள் உங்களை விட்டு விலகும். வாழ்வில் புதிய நம்பிக்கை உண்டாகும். தொழில் மீண்டும் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். வம்பு, வழக்கு, சண்டை, சச்சரவுகள் நீங்கி சாதகம் நிலவும்.
சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை சனி 8ல் சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு, விபத்து, அவமானம் ஏற்படும். எந்த ஒன்றிலும் நிம்மதி என்பது இல்லாமல் போகும். அரசியல்வாதிகளுக்கு கவுரவ குறைச்சல் உண்டாகும். பணியாளர்களுக்கு விரும்பாத மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு வெளியூரில் வாழும் நிலை உண்டாகும். மார்ச் 6 க்கு மேல் சனி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த வருமானம் வரும். இதுவரை அனுபவித்த சங்கடங்கள் மாறும்.
ராகு, கேது சஞ்சாரம்
8ல் ராகு, 2ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவில் தடை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். கவுரவம், அந்தஸ்து, செல்வாக்கில் பின்னடைவு உண்டாகும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். ஒன்று போய் ஒன்று என நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
சூரிய சஞ்சாரம்
ஏப்.14 – ஜூன் 16, செப். 17 – அக். 17, டிச. 16 – 2026 ஜன.14 காலங்களில் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் செல்வாக்கை உயர்த்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வழக்கில் சாதகமான நிலையை உருவாக்குவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி, லாபத்தை வழங்குவார். உங்களுக்கு இருக்கும் சங்கடங்களை இல்லாமல் செய்வார்.
செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 30 – செப்.14, டிச.6 – 2026 ஜன.14 காலங்களில் 3, 6ம் இட சஞ்சாரத்தால் சங்கட நிலையில் இருக்கும் உங்களைப் பாதுகாப்பார். நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். வாழ்வை வளமாக்குவார். தொழிலில் இருந்த தடைகளை நீக்குவார்.
பொதுப்பலன்
ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை குரு அஸ்தமனம் அடைவதால் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை உங்கள் ராசிக்குள் உச்சம் அடையும் காலத்தில் நீங்கள் நினைத்த வேலைகள் நடந்தேறும். அவருடைய பார்வைக்குரிய இடங்கள் சுபப்பலன்களை வழங்கும் என்பதுடன் சூரியன், செவ்வாய் சஞ்சாரமும் உங்கள் நிலையை உயர்த்தும்.
தொழில்
தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. எந்தவொரு வேலையாக இருந்தாலும் அதை உங்கள் மேற்பார்வையில் செய்வது அவசியம். புதிய முயற்சியோ, செய்துவரும் தொழிலை விரிவு செய்ய புதிய முதலீடோ இக்காலத்தில் வேண்டாம். பணியாளர்களை அனுசரித்துச் செல்வதும் அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்குவதும் நன்மை தரும். மினரல் வாட்டர், பால் பண்ணை, எக்ஸ்போர்ட், நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், வேளாண்மை, ஹார்ட்வேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், பங்கு வர்த்தகம் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்
இக்காலத்தில் செய்து வரும் வேலையில் கவனமாக இருப்பதும், நிர்வாகத்தை அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும். பணியாளர்கள் தவறான வழியில் செயல்பட ஆரம்பித்தால் மெமோ, இடமாற்றம் ஏற்படும்.
பெண்கள்
உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீங்கள் சந்தித்து வந்த சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். கணவரின் ஆலோசனையை ஏற்று எந்த ஒன்றிலும் அதன்படி செயல்படுவது நன்மை தரும்.
கல்வி
படிப்பின் மீது அக்கறை உண்டாகும் என்றாலும், தவறான நண்பர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும். இக்காலத்தில் படிப்பில் அக்கறை கொள்வது அவசியம். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
உடல்நிலை
உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். சிலருக்கு என்ன நோய் என்பதைத் தெரிந்து கொள்ளவே பல மருத்துவர்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். தொற்று, பரம்பரை நோய் என் மருத்துவச் செலவும் தொடரும். சிலர் விபத்தையும் சந்திக்க நேரலாம்.
குடும்பம்
தன் குடும்பம் தன் பிள்ளைகள் என அளந்து வாழ்வதால் வேறு பிரச்னைகள் உண்டாகாது. தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் மூன்றாவது நபரால் குடும்பத்திற்குள் பிரச்னை உருவாகாது. இக்காலத்தில் கடன்பட்டாவது வீடு, வாகனம் என வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.