பதிவு செய்த நாள்
09
மே
2025
01:05
மிருகசீரிடம்.. தொட்டது துலங்கும்: தைரிய, வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும் உள்ளனர்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதத்தினருக்கு மே11 முதல் 2ம் வீட்டில் சஞ்சரித்து, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையையும், செயலில் வேகத்தையும், எதிர்பார்த்த வரவையும், முயற்சியில் வெற்றியையும், வேலையில் முன்னேற்றத்தையும், வாழ்வில் யோகத்தையும் உண்டாக்க இருக்கிறார் குருபகவான். 3,4ம் பாதத்தினருக்கு ஜென்ம குருவாக சஞ்சரித்து குடும்பத்தை விட்டு வெளியூர் சென்று வசிக்கும் நிலையையும், மனதில் குழப்பத்தையும் உண்டாக்குவார் குருபகவான்.
பார்வைகளின் பலன்
குரு சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது பொது விதி. 1,2 ம் பாதத்தினருக்கு, 6,8,10ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், இதுவரை இருந்த மந்தநிலை மாறும். மனதில் இருந்த பயம் போகும். உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்தி வந்த நோய் நொடிகள் விலகும், தொழில், வேலையில் இருந்த எதிர்ப்பு, மறைமுகத் தொல்லைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 3, 4ம் பாதத்தினருக்கு, 5,7,9 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த குழப்பம், விவகாரம், ரத்த உறவுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள், சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய வீடு என்ற கனவு நனவாகும்.
சனி சஞ்சாரம்
1, 2 ம் பாதத்தினருக்கு 2026 வரை ஜீவன ஸ்தான சனியால் வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். நெருக்கடி அதிகரிக்கும். செய்யாத தவறுக்கு பதில் சொல்லும் நிலை உண்டாகும். செய்து வரும் தொழிலில் தடைகள் இருக்கும். முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். மார்ச் 6 முதல் சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். 3, 4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். நினைத்த செயல்கள் நடந்தேறும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். மார்ச் 6 முதல் பத்தாமிட சனியால் வேலை, தொழிலில் பிரச்னைகள், வருமானக்குறைவு, போராட்டம், முன்னேற்றமில்லாத நிலை ஏற்படும்.
ராகு, கேது சஞ்சாரம்
1, 2 ம் பாதத்தினருக்கு ராகு 10லும், கேது 4 லும் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். உழைப்பிற்கேற்ப வருமானம் வரும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது அவசியம். வேலைப்பளு கூடும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். 3, 4ம் பாதத்தினருக்கு ராகு 9ல், கேது 3ல் சஞ்சரிப்பதால் தெய்வ அருள் கிடைக்கும். நீண்ட நாளாக தள்ளிப்போன வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.
சூரிய சஞ்சாரம்
1, 2 ம் பாதத்தினருக்கு ஜூலை17 – ஆக.16, அக்.18 – நவ.16, 2026 பிப்.13 – ஏப்.13 காலங்களிலும், 3, 4ம் பாதத்தினருக்கு ஏப்.14 – மே14, ஆக.17 – செப்.16, நவ.11 – டிச.15, 2026 மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் தன் 3,6,10,11ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையை சீராக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். தொழிலில் லாபம், பணியில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்க வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார்.
செவ்வாய் சஞ்சாரம்
1, 2ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – ஜூன்8, செப்.14 – அக்.27, 2026 ஏப்.1 – மே 26 காலங்களிலும், 3, 4 ம் பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 30, அக்.27 – டிச.6 காலங்களிலும் தன் 3,6,11ம் இட சஞ்சாரங்களால் ஜெயத்தை உண்டாக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். எடுத்த வேலைகளை முடித்து வைப்பார். ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் அதிகரிப்பார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவை உண்டாக்குவார். செல்வாக்கோடு வாழ வைப்பார்.
பொதுப்பலன்
குரு பகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் 3, 4 ம் பாதத்தினருக்கு யோகப் பலன்களை வழங்குவார். 1, 2 ம் பாதத்தினருக்கு பார்வைகளால் பலன் கிடைக்கும். சூரியனும், செவ்வாயும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர்.
தொழில்
செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மருத்துவம், கெமிக்கல், பெட்ரோல், உணவகம், நிதி, இண்டஸ்ட்ரீஸ், பங்கு வர்த்தகம், ஆன்லைன் வர்த்தகம், வேளாண்மை லாபம் அடையும்.
பணியாளர்கள்
அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
பெண்கள்
குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னைகள் விலகும். செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் சந்தித்த போராட்டங்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்பவருக்கு முன்னேற்றம் உண்டாகும். கணவருடன் இணக்கம் உண்டாகும். இளம் பெண்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.
கல்வி
குரு பார்வைகள் சாதகமாக இருப்பதால் படிப்பில் ஆர்வம் கூடும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்விலும் வெற்றி உண்டாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்கள் வீடு திரும்புவர். பரம்பரை நோய், தொற்று நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
குடும்பம்
குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர். பிள்ளைகளுக்கு திருமணம், குழந்தைப்பேறு என சந்தோஷம் அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். சொத்து சுகம், வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் வளம் பெருகும்.
திருவாதிரை: வருமானம் அதிகரிக்கும்
ராகுவை நட்சத்திர அதிபதியாகவும், புதனை ராசி நாதனாகவும் கொண்ட நீங்கள் அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிரம்பப் பெற்றவர். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கக் கூடியவர். உங்களுக்கு சப்தமாதிபதியும், ஜீவனாதிபதியுமான குரு பகவான் மே11 முதல் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரிக்கிறார். ஜென்ம குரு அலைச்சலை அதிகரிப்பார் என்றாலும் ஏழுக்குரியவன் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பது பெரும் யோகமாகும். இக்காலத்தில் எல்லா விதமான பாக்கியங்களும் உங்களுக்கு உண்டாகும். இடம், வீடு, வாசல், திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என வாழ்க்கையின் தேவைகள் யாவும் நிறைவேறும்.
பார்வைகளின் பலன்
குரு சஞ்சரிக்கும் இடத்தை விட, அவர் பார்க்கும் இடங்கள் சுபத்துவப்படும் என்பதால் 5, 7, 9 ம் இடங்களுக்கு உண்டாகும் குருபார்வைகளால், குடும்பத்தில் நெருக்கடி விலகும். உறவுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள், சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தோரின் வேண்டுதல் நிறைவேறும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரும் நிலை ஏற்படும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். புதிய வீடு, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து என்ற கனவு நனவாகும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் அந்தஸ்து உயரும். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உடல்நிலை சீராகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். மார்ச் 6 முதல், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால், தொழிலில் தடைகளும், முன்னேற்றமில்லாத நிலையும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளும் பலன் தராமல் போகும். பார்த்து வரும் வேலையில் பிரச்னைகள், தடைகள், அவமானம், போராட்டம், முன்னேற்றமில்லாத நிலை ஏற்படும்.
ராகு, கேது சஞ்சாரம்
ராகு 9 ல், கேது 3 ல் சஞ்சரிப்பது யோகமாகும். பெரிய மனிதர்களுடன் தொடர்பும், அவர்களுடைய ஆதரவும் உண்டாகும். குல தெய்வ, இஷ்ட தெய்வ அருள் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எந்த நிலை வந்தாலும் அதையெல்லாம் சமாளிக்கும் வலிமை உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சூரிய சஞ்சாரம்
ஏப். 14 – மே14, ஆக.17 – செப்.16, நவ.11 – டிச.15, 2026 மார்ச்15 – ஏப்.13 காலங்களில் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் உங்களுக்கிருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். செல்வாக்கை அதிகரிப்பார். எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். முயற்சிகளை லாபமாக்குவார். உடல்நிலையை சீராக்குவார். வழக்குகளை இல்லாமல் செய்வார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை அதிகரிப்பார்.
செவ்வாய் சஞ்சாரம்
ஜூன் 8 – ஜூலை 30, அக். 27 – டிச.6 காலங்களில் தன் 3, 6, ம் இட சஞ்சாரங்களால், தொழில், வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்ப்பு இல்லாமல் போகும். நோய்நொடி விலகும். செல்வாக்கு உயரும்.
பொதுப்பலன்
குரு பகவான் சஞ்சாரத்தில், ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் உங்களுக்கு தனவரவை அதிகரிப்பார். குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்துவார். கேதுவும், சூரியனும், செவ்வாயும் உங்கள் நிலையை உயர்த்துவர். சங்கடங்களைப் போக்குவர்.
தொழில்
தொழில் வளர்ச்சி அடையும். அதன் முன்னேற்றத்தில் அக்கறை உண்டாகும். சிலர் வசதியான இடத்திற்கு தொழிலை மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். ரியல் எஸ்டேட், குவாரி, பிரிக்ஸ், பில்டர்ஸ், நிதி நிறுவனம், இண்டஸ்ட்ரீஸ், ஆன்லைன் வர்த்தகம், வாகனம், டிராவல்ஸ், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, சின்னத்திரை, வேளாண்மை வளர்ச்சி அடையும். கலைஞர்களின் நிலை உயரும்.
பணியாளர்கள்
வேலையின் காரணமாக சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். சிலர் பார்க்கும் வேலையில் முன்னேற்றமில்லை என வேறு இடத்திற்கு செல்வர். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகமாக பணியாளர்கள் நிரந்தரம் பெறுவர்.
பெண்கள்
நீண்ட நாள் கனவு நனவாகும். குருபலம் வந்து விட்டதால் திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு மாங்கல்யம் ஏறும். பொன், பொருள் சேரும். உறவுகளுடன் இணக்கம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவருடன் இருந்த பிரச்னை விலகும். சொந்த வீடு, அசையா சொத்து என உங்கள் நிலை உயரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.
கல்வி
குரு பகவான் ராசிக்குள் சஞ்சரிப்பதால் படிப்பில் ஆர்வம் கூடும். நினைவுத்திறன் அதிகரிக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்விலும் வெற்றி உண்டாகும். விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
அலைச்சலும் உழைப்பும் அதிகரித்திட வாய்ப்பிருப்பதால் இக்காலத்தில் உடல்நிலையில் கவனம் தேவை. ரத்த அழுத்தம், வீசிங், அல்சர், கேஸ்ட்ரிக், நரம்பு கோளாறு என ஏதாவது ஒன்று உங்களை வாட்டிக் கொண்டிருக்கும். மருத்துவச் செலவு கூடும்.
குடும்பம்
நெருக்கடிகள் விலகும். கடன் தொல்லையால் அவதிப்பட்ட நிலை மாறும். பண வரவு அதிகரிக்கும். இடம், வீடு, வாகனம், பொன், பொருள் சேரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் என குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.
பரிகாரம்: பகவதி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
புனர்பூசம்.. யோக காலம்: ஞானக் காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2,3ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு, புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்
புனர்பூசம் 1,2,3ம் பாதத்தினருக்கு மே11 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து, தொழில், பணிக்காக வெளியூர் செல்லும் நிலை சிலருக்கு ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்றாலும் இக்காலத்தில்தான் அனைத்திலும் முன்னேற்றத்தையும் வழங்கப் போகிறார் குரு பகவான். 4ம் பாதத்தினருக்கு விரய குருவாக சஞ்சரித்து பல வகையில் செலவுகளை உண்டாக்கினாலும், அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து குடும்பத்தில் முன்னேற்றம், வசதி வாய்ப்பை அதிகரிப்பார் குருபகவான்.
பார்வைகளின் பலன்
குரு சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது விதி. 1,2,3 ம் பாதத்தினருக்கு, 5,7,9 ம் இடங்களுக்கு மே11 முதல் குரு பார்வை உண்டாவதால் குடும்பத்தில் சுபிட்சநிலை உண்டாகும். கடன், வம்பு என்றிருந்த நிலை மாறும். உறவுகள் பலப்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தந்தையின் சொத்துகள் கைக்கு வரும். சிலருக்கு வாரிசு அடிப்படையில் தந்தையின் வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் வேண்டுதல் பலிக்கும். சிலருக்கு இரண்டாவது குழந்தையும் சுபமாக பிறக்கும். திருமண வயதினருக்கு மணமேடை அமையும். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய வீடு, சொத்து என்ற கனவு நனவாகும். 4ம் பாதத்தினருக்கு, 4, 6, 8 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், உடல் பாதிப்பு விலகும். தொழிலிலும், வேலையிலும் இருந்த எதிர்ப்பு, மறைமுகத் தொல்லை இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறி வழக்கு சாதகமாகும். உங்கள் செல்வாக்கை மறைக்க எதிரிகள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறாமல் போகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும்.
சனி சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் ஆதாய நிலை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வம்பு வழக்கு முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். மார்ச் 6 முதல் பத்தாமிட சனியால், வேலை, தொழிலில் நெருக்கடி உண்டாகும். வியாபாரம் மந்தமாகும். செலவு அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் நிலை உண்டாகும்.
4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை அஷ்டம சனியின் காலம் என்பதால் வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிலருக்கு மருத்துவ செலவு அதிகரிக்கும். இல்லையெனில் அவமானத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும். மார்ச் 6க்கு மேல் புதிய பாதை தெரியும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். கடன்கள் அடைபடும். வருமானம் அதிகரிக்கும், சொத்து சுகம் உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்
1, 2, 3 ம் பாதத்தினருக்கு ராகு 9ல், கேது3 ல் சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். 4ம் பாதத்தினருக்கு, ராகு 8ல் கேது2 ல் சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு, சிலருக்கு விபத்து ஏற்படும். கீழோரால் அவமானங்களை சந்திக்க நேரும். குடும்பத்தில் பிரச்னை, வருமானத்தில் நெருக்கடி ஏற்படும்.
சூரிய சஞ்சாரம்
1, 2, 3 ம் பாதத்தினருக்கு, ஏப். 14 – மே 14, ஆக. 17 – செப். 16, நவ. 11 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – ஜூன் 16, செப். 17 – அக். 17, டிச. 16 – 2026 ஜன. 14 காலங்களிலும், தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். ஆரோக்கியத்தை சீராக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். வேலை வாய்ப்பை உண்டாக்குவார். தொழிலில் லாபம், வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்.
செவ்வாய் சஞ்சாரம்
1, 2, 3 ம் பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 30, அக். 27 – டிச. 6 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு ஜூலை 30 – செப்.14, டிச.6 – 2026 ஜன.14 காலங்களிலும் தன் 3, 6, ம் இட சஞ்சாரங்களால் எடுக்கும் வேலைகளில் வெற்றியை உண்டாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். தன்னம்பிக்கை, தைரியத்தை அதிகரிப்பார். சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார். வியாபாரம், தொழிலில் லாபத்தை ஏற்படுத்துவார்.
பொதுப்பலன்
குரு பகவான் சஞ்சாரத்தில், ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் 4ம் பாதத்தினருக்கு யோகப் பலன் வழங்குவார். 1, 2, 3ம் பாதத்தினருக்கு பார்வைகளால் பலன் கிடைக்கும். சூரியன், செவ்வாய் சஞ்சாரம் பெருமளவில் நன்மைகளை உண்டாக்கும். வசதி வாய்ப்பை அதிகரிக்கும்.
தொழில்
இக்காலத்தில் தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. முதலீட்டிலும் உற்பத்தியிலும் கவனம் தேவை. எந்த ஒன்றையும் உங்கள் பார்வையிலேயே செய்வதால் எதிர்பார்த்த லாபம் வரும். ஏற்றுமதி, இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், ஜுவல்லரி, பங்கு வர்த்தகம், பதிப்பகம், கமிஷன் ஏஜன்சி, வேளாண்மைத் தொழிலில் லாபம் கூடும்.
பணியாளர்கள்
வேலைப்பளு அதிகரிக்கும். அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். இருக்கும் வேலையை விட்டு விடலாமா என்றும் யோசிப்பீர்கள். வேறு வேலைக்கும் முயற்சி செய்வீர்கள். இக்காலத்தில் யோசித்து செயல்படுவது நல்லது. நிர்வாகத்தின் விருப்பப்படி செயல்படுவதால் நெருக்கடி இல்லாமல் போகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அதற்காக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும்.
பெண்கள்
படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும்.சிலருக்கு குழந்தை பாக்கியமும் ஏற்படும். கணவரிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும்.
கல்வி
மாணவர்களுக்கு படிப்பின் அவசியம் தெரியவரும். ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பர். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. வாகனப் பயணத்தில் இக்காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொற்று நோய், பரம்பரை நோய்கள் வர வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் அக்கறை அவசியம்.
குடும்பம்
குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வசதி வாய்ப்பு கூடும். சேமிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். சொந்த வீடு, வாகனம் அமையும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும்.
பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட நன்மை அதிகரிக்கும்.