பதிவு செய்த நாள்
09
மே
2025
02:05
மகம்.. நினைப்பது நடந்தேறும்; ஞான மோட்சக்காரகன் கேது பகவானை நட்சத்திர அதிபதியாகவும், ஆத்ம காரகன் சூரியனை ராசி நாதனாகவும் கொண்ட நீங்கள், நீதி, நியாயம், நேர்மை தவறாதவர்கள். பார்வைக்கு எளியவராக தெரிந்தாலும் செயலில் துணிச்சலை வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கு பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவான், அவருக்கு சப்தம ஸ்தானமான மிதுனத்தில் மே11 முதல் லாப குருவாக சஞ்சரிக்கிறார். 11ம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவான், நினைத்த காரியங்களை நினைத்தபடி நடத்தி வைப்பார். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பதவி உயர்விற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு அந்தஸ்து உயரும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்பவர்களுக்கு இக்காலத்தில் அதற்குரிய வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு, சொத்து வாங்கும் நிலை உண்டாகும். அக்.8 முதல் நவ.18 வரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர் திடீர் செலவுகளை அதிகரிப்பார். தொழில், வேலையில் நெருக்கடி உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். மற்ற காலங்களில் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
பார்வைகளின் பலன்
குருபகவான், தான் சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை வளப்படுத்துவார் என்பது பொது விதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 3, 5, 7 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் இதுநாள் வரை இருந்த நெருக்கடிகள், தடைகள் விலகும். முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் கூடும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வேலையில் உண்டான மறைமுக எதிர்ப்பு விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். வேலை நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ் செய்ய நினைத்தவர்கள் மனம் மாறுவர். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் அடையும். சொந்த வீடு, வாகனம் என்ற வசதியும் இக்காலத்தில் ஏற்படும்.
சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை சனி சப்தம ஸ்தானமான 7ல் சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சுய கவுரவம் பாதிக்கப்படலாம். நன்றாகப் பழகியவர்களும் உங்களுக்கு எதிராக மாறலாம் என்றாலும், மிதுன குருவின் பார்வை 7ம் இடத்திற்கு உண்டாவதால் சனியால் உண்டாகும் பாதிப்பு மறையும். 2026 மார்ச் 6
முதல் சனி 8ம் இடத்தில் அஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால் எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும். வருமானம் குறையும். வேலையில் பிரச்னை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உடல்நிலையில் பாதிப்பு, விபத்து என மருத்துவச் செலவு அதிகரிக்கும்.
ராகு, கேது சஞ்சாரம்
7ல் ராகு சஞ்சரிப்பதால் வாழ்வில் தடுமாற்றம் உண்டாகும். தவறான நபர்களின் பழக்கம் ஏற்பட்டு அதனால் அவமானத்திற்கு ஆளாக நேரும். சிலருக்கு சட்ட சிக்கலும், பொருளாதார இழப்பும் ஏற்படலாம். மிதுன குருவின் பார்வை ஏழாம் இடத்திற்கு இருக்கும் வரை ராகுவால் உண்டாகும் பலன்கள் மாறும். இந்த நேரத்தில் ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் போராட்ட நிலை ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை இல்லாமல் போகும். வழக்கமாக நடைபெற்ற வேலைகளில் கூட தடைகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும்.
சூரிய சஞ்சாரம்
மே15 – ஜூலை16, அக்.18 – நவ.16, 2026 ஜன.14 – பிப்.21 காலங்களில் 10, 11, 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். முன்னேற்றம் உண்டாகும். தொழில்,வியாபாரம் லாபம் அடையும். பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும்.
செவ்வாய் சஞ்சாரம்
செப்.14 – அக்.27, 2026 ஜன.14 – பிப்.21 காலங்களில் 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்டு வந்த வேலைகள் நடந்தேறும். உடல்நிலை சீராகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். செல்வாக்கு உயரும். எதிரிகள் பலம் இழப்பர்.
பொதுப்பலன்
லாப குருவின் காலம் முன்னேற்றமான காலமாகும். எல்லாவிதமான நன்மைகளையும் அடைவீர்கள். நீங்கள் எடுத்த வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை குரு பகவான் அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் நெருக்கடிக்கு ஆளாக நேரும். என்றாலும் செவ்வாய், சூரியன் சஞ்சாரம் உங்களைப் பாதுகாக்கும்.
தொழில்
லாப ஸ்தானம் பலம் அடைவதால் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் கூடும். தொழில் வளர்ச்சிக்காக வாங்கிய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். போக்குவரத்து, கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், கால்நடை, இயந்திரம், மருத்துவம், ஏற்றுமதி, இறக்குமதி, ரியல் எஸ்டேட், வேளாண்மை, ஹார்டுவேர் தொழில்கள் லாபம் தரும்.
பணியாளர்கள்
வேலையில் இருந்த நெருக்கடி விலகும். உங்களின் திறமைக்கும் தகுதிக்கும் மரியாதை உண்டாகும். நிர்வாகத்தால் பாராட்டப்படுவீர்கள். அரசுப்பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல், தவறான வழியில் செல்லாமல், நேர்மையாக செயல்படுவது அவசியம்.
பெண்கள்
பூர்வ புண்ணியம், களத்திர ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் நிகழும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். பொருளாதாரம் உயரும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். படிப்பு, வேலை வாய்ப்பு கனவுகள் நனவாகும்.
கல்வி
படிப்பில் பின் தங்கிய நிலை மாறும். ஐந்தாம் இடத்திற்கு குரு பார்வை உண்டாவதால் தேர்வில் அதிக மதிப்பெண் வரும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் வெளி மாநிலம், வெளிநாடு என மேற்கல்விக்காக செல்வர்.
உடல்நிலை
சப்தம சனி, ராகுவிற்கு குருபார்வை உண்டானாலும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது, அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் சனி உடல் பாதிப்பை உண்டாக்குவர். தொற்றுநோய், பரம்பரை நோய், விபத்துக்களை ஏற்படுத்தலாம் என்பதால் இக்காலத்தில் கவனமாக இருப்பது நல்லது.
குடும்பம்
லாபகுருவும் அவரது பார்வைகளும், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலை உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும். நீண்ட நாள் கனவு நனவாகும். இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.
பரிகாரம்: விநாயகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
பூரம்.. அதிர்ஷ்டக்காரகன் சுக்கிர பகவானை நட்சத்திர அதிபதியாகவும், ஆத்ம காரகன் சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், நினைத்ததை சாதிக்கக் கூடியவர்கள். எடுத்த வேலையை முடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். உறவுகள் மத்தியிலும், வெளியிலும் எப்போதும் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, மங்களக்காரகனான குருபகவான் மே11 முதல் லாப ஸ்தானமான 11ம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இக்காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை, உடல்நிலையில் முன்னேற்றம், மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் நினைத்த ஒவ்வொன்றும் நினைத்தபடியே நடந்து முன்னேற்றம் காண்பீர்கள். வேலைவாய்ப்பு, பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நண்பர், உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு சொத்து வாங்கும் யோகம், மணவாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு புதிய துணை அமையும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். கோயில் தரிசனம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
பார்வைகளின் பலன்
குருபகவான் சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களைப் சுபப்படுத்துவார் என்பது பொதுவிதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 3, 5, 7 ம் இடங்களுக்கு குரு பார்வை உண்டாவதால் இதுவரை சோதனைகளை சந்தித்தவர்களுக்கு சாதனை புரியும் வாய்ப்பு உண்டாகும். சகோதர, சகோதரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். உங்களுக்குள் துணிச்சலும், எதையும் சாதிக்கும் வலிமையும் உண்டாகும். நோய்கள் விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் வழியே பெருமை சேரும். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் உங்களை விட்டு விலகும். உங்களின் புத்திக் கூர்மை பளிச்சிடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். உங்களை நம்புபவர்களை நல்வழியில் நடத்துவீர்கள். திருமணத்தடை விலகி மணவாழ்வு கைகூடும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். நண்பரால் ஆதாயம் உண்டாகும். உடலும் மனமும் பொலிவு பெறும். தடைபட்ட வேலைகள் நடைபெற ஆரம்பிக்கும்.
சனி சஞ்சாரம்
மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கும் நேரத்தில் சனிபகவான் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் உங்களுக்கு பாதக பலன்கள் ஏற்படும் என்றாலும், குருவின் பார்வை 7ம் இட சனிக்கு உண்டாவதால் சனி வழங்கும் பாதிப்பு குறையும். 2026 மார்ச் 6 முதல் சனி 8ம் இடத்தில் அஷ்டமச்சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். சுமூகமாக நடைபெற்ற வேலைகளில் தடை, பிரச்னை ஏற்படும். உடல் பாதிப்பு ஏற்படும். வருமானத்தில் பிரச்னை, வேலையில் நெருக்கடி, கடன் தொல்லை, குடும்பத்தில் குழப்பம் என நிம்மதியற்ற நிலை உருவாகும்.
ராகு, கேது சஞ்சாரம்
ராகு 7ம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பம், தொழில், வேலை, வியாபாரம், ஆரோக்யம், ஒழுக்கம் என எல்லாவற்றிலும் சோதனை உண்டாகும். மிதுன குருவின் பார்வை ராகுவிற்கு இருக்கும் வரை ராகு வழங்கும் பாதகப் பலன்கள் உங்களை நெருங்காது. ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் செயலில் கவனம் தேவை. குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பதும், தவறானவர் நட்பும் உங்கள் நிலையை மாற்றி விடும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை குறையும். வழக்கமாக செய்யும் வேலைகளில் தடை, பிரச்னை தோன்றும். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.
சூரிய சஞ்சாரம்
மே15 – ஜூலை16, அக்.18 – நவ.16, 2026 ஜன.14 – பிப்.21 காலங்களில் 10, 11, 3, 6 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். நன்மைகளை அதிகரிப்பார். கடன்களை அடைக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையை மாற்றுவார். வியாபாரம், தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். பணியாளர்களுக்கு நிம்மதியை உண்டாக்குவார். வழக்கில் வெற்றி வழங்குவார். உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்.
செவ்வாய் சஞ்சாரம்
செப். 14 – அக். 27, ஜன. 14 – பிப். 21 காலங்களில் 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பவர் சோர்ந்து கிடந்த உங்களைச் சுறுசுறுப்பாக்குவார். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளை லாபமாக்குவார். ஆரோக்யத்தை மேம்படுத்துவார். நினைத்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண வைப்பார். எதிர்ப்புகளால் ஏற்பட்ட நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். வழக்கில் சாதகமான நிலையை உண்டாக்குவார்.
பொதுப்பலன்
மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் காலமும், கடகத்தில் குரு வக்ரமடையும் காலமும் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். முயற்சிகள் வெற்றியாகும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை குரு பகவான் அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். ஜென்ம ராசிக்குள் கேது பகவான் சஞ்சரிப்பதால் சோதனைகளுக்கு ஆளாக வேண்டிவரும் என்றாலும், சூரியன், செவ்வாய் சஞ்சாரம் உங்களுக்கு நன்மைகளை அள்ளித்தரும்.
தொழில்
லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரித்து தைரியமாக செயல்படும் நிலயும், லாபத்தை அடையக்கூடிய நிலையையும் உண்டாக்குவதால் முடங்கிய தொழில்களும் இக்காலத்தில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஆடை ஆபரணம், ஜூவல்லரி, அழகு சாதனம், வாகன விற்பனை, கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், மருத்துவம், ஏற்றுமதி இறக்குமதி, ரியல் எஸ்டேட், வேளாண்மை தொழில்கள் முன்னேற்றம் பெறும்.
பணியாளர்கள்
லாப குருவால் மனக்கவலை விலகும். வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். புதிய சலுகைகள் கிடைப்பதுடன், ஊதியமும் அதிகரிக்கும். சிலர் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வீர்கள். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமும், உயர்வும் உண்டாகும். ஜென்ம ராசிக்குள் கேது, மார்ச் 6 முதல் 8ல் சனி சஞ்சரிக்க உள்ளதால் தவறுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையாகும். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு வேலையில் சிக்கல், மெமோ, இடமாற்றம், சஸ்பெண்ட் ஏற்படலாம்.
பெண்கள்
மிதுன குருவின் காலம் பெண்களுக்கு மேன்மையான காலம். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என கனவுகள் நனவாகும். குடும்பத்தில் வளமும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமையும் சிறக்கும். உடல் பாதிப்பு விலகும். பொருளாதாரம் உயரும். பொன், பொருள் சேரும். மார்ச் 6 முதல் மாங்கல்ய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கப் போவதால் கணவரின் நலனில் அக்கறை கொள்வது நல்லது.
கல்வி
படிப்பில் இருந்த தடைகள் விலகும். தவறான நட்புகளின் பிடியில் இருந்து விடுபட்டு ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். குருபார்வையால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். விரும்பிய கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது, அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியும் உங்கள் உடல் நிலையில் பாதிப்பை உண்டாக்குவர். சிலருக்கு என்ன நோய் என்பதை தெரிந்து கொள்ளவே அதிக நாட்கள் ஆகும். தொற்று, பரம்பரை நோய்கள், விபத்தை சந்திக்கலாம்.
குடும்பம்
மிதுன குருவும், அவரது பார்வையும் குடும்பத்தில் இருந்த குறைகளை நீக்கும். அந்தஸ்து, கவுரவம், செல்வாக்கு உயரும். கணவன், மனைவிக்குள் புரிதல் உண்டாகும். ஒற்றுமை பலப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும். நினைத்தது நிறைவேறும்.
உத்திரம்.. செல்வாக்கு உயரும்; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசி நாதனாகவும், 2,3,4ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு, மே11 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து, வாழ்வில் நன்மை உண்டாக்கப் போகிறார். செல்வம், செல்வாக்கை அதிகரிக்கப் போகிறார். வீடு, வாகனம், பட்டம், பதவி என வளமாக்கப் போகிறார். நீங்கள் இழந்தவற்றை மீண்டும் உங்களிடம் சேர்க்கப் போகிறார். இதுவரை இருந்த நெருக்கடிகளை போக்கி, தடைபட்ட வேலைகளை நடத்தித் தருவார். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும், உடல்நிலையில் முன்னேற்றம், மன நிலையில் மகிழ்ச்சியை தருவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் சஞ்சரித்து, தொழில் புரிவோருக்கு உழைப்பை அதிகரிப்பார். பணியாளர்களுக்கு பொறுப்பை உணர்த்துவார். வியாபாரிகளுக்கு அக்கறையை உண்டாக்குவார். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றத்தை ஏற்படுத்துவார். இதன் காரணமாகத் தான் ‘பத்தாமிட குரு பதவியைப் பறிப்பார்’ என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். என்றாலும் நேர்மையானவர்களையும், உண்மையாக உழைப்பவர்களையும் குரு சோதனைக்கு ஆளாக்க மாட்டார்.
பார்வைகளின் பலன்
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விடவும் பார்க்கும் இடங்களை சுபப்படுத்துவார் என்பது பொதுவிதி. 1ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை 3,5,7 ம் இடங்களுக்கு மே11 முதல் குரு வழங்குவதால் வாழ்வில் இருந்த சங்கடங்கள், நெருக்கடிகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். வேலையின் காரணமாகவோ, கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ பிரிந்த தம்பதி சேருவர். செய்து வரும் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 2,4,6 ம் இடங்களுக்கு மே11 முதல் குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்னைகள் விலகி நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். புதிய இடம், வாகனம் வாங்கும் கனவு நனவாகும். உடல் பாதிப்புகள் விலகும். வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம், வேலையில் ஏற்பட்ட போட்டி, எதிர்ப்பு விலகும். நோய் நொடி அகலும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்குவரும்.
சனி சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச்6 வரை 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், குடும்பத்தில் குழப்பம், நட்புகளிடம் பகை, உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். ஆனாலும் மிதுன குருவின் பார்வை 7ம் இடத்து சனிக்கு உண்டாவதால் பாதிப்புகள் குறையும். 2026 மார்ச் 6 முதல் சனி 8 ம் இடத்தில் அஷ்டமச் சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் நெருக்கடி அதிகரிக்கும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். நிம்மதியற்ற நிலை உருவாகும். கடன், அவமானம், விபத்து என்ற நெருக்கடியும் சிலருக்கு ஏற்படும். பணியில் நெருக்கடி அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை சத்ரு ஜெய ஸ்தான சனியால் செல்வாக்கு உயரும். நினைப்பது நடக்கும். எந்த ஒன்றிலும் எதிர்ப்பில்லாத நிலை உருவாகும். வழக்கில் வெற்றியுண்டாகும். மார்ச் 6 க்கு மேல் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை. கூட்டுத்தொழிலில் நெருக்கடி. நண்பருக்குள் பிரச்னை, தவறான நபர்களின் சேர்க்கையால் பண இழப்பு, அலைச்சல், அவமானம் ஏற்படும்.
ராகு, கேது சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு 7ல் ராகு, கேது ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால், குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். குடும்பம், தொழில், வேலை, வியாபாரம், ஆரோக்யம் என அனைத்திலும் நெருக்கடி ஏற்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 6ல் ராகு, 12ல் கேது சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த குழப்பம், போராட்டம், நெருக்கடிகள் முடிவிற்கு வரும். முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். வழக்கு வெற்றியாகும்.
சூரிய சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு மே 15 – ஜூலை 16, அக். 18 – நவ. 16, ஜன 14 – பிப். 21 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜூன் 15 – ஆக.16, நவ.17 – டிச.15, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும் தன் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரங்களால் உங்களைப் பாதுகாப்பார். தொழில், வியாபாரம், வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலை, மன நிலையில் இருந்த சங்கடங்களை அகற்றுவார். செல்வாக்கை உயர்த்துவார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார்.
செவ்வாய் சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு செப். 14 – அக். 27, ஜன. 14 – பிப். 21 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, அக். 10 – டிச. 6, பிப். 21 – ஏப். 1 காலங்களிலும் தன் 3, 6 ம் இட சஞ்சாரங்களால் தைரியத்தை அதிகரிப்பார். துணிச்சலுடன் செயல்பட வைப்பார். எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார். நேரம், காலத்தினால் அடங்கிக் கிடந்த உங்கள் நிலையை மாற்றுவார். உடல்நலத்தை மேம்படுத்துவார். நினைத்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார்.
பொதுப்பலன்
குருபகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.8 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் 2,3,4 ம் பாதத்தினருக்கு யோகப் பலன் உண்டாகும். ஆறாமிட ராகு நினைத்ததை நடத்தி வைப்பார். குருபார்வைகளும், சூரிய, செவ்வாய் சஞ்சாரங்களும் 4 பாதத்தினருக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
தொழில்
தொழில் மீது அக்கறை உண்டாகும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். முடங்கிய தொழில்களை மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியும் இக்காலத்தில் வெற்றியாகும். பங்கு வர்த்தகம், ஆன்லைன் பிசினஸ், ஏற்றுமதி இறக்குமதி, நிதிநிறுவனம், ஆட்டோ மொபைல்ஸ், ரெடிமேட்ஸ், ஜூவல்லரி, அழகு சாதனம், வாகன விற்பனை, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், டிரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ் துறையினர் முன்னேற்றம் காண்பர்.
பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம், நெருக்கடி விலகும். உங்களின் திறமை வெளிப்படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு இடத்திற்கு மாறுவர். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்
குருபகவானின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல் பாதிப்பு மறையும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும்.
கல்வி
படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். வெற்றி உண்டாகும். விரும்பும் கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
அதிகபட்ச உழைப்பாலும், அலட்சிய புத்தியாலும் உடல் பாதிப்பு இருந்து கொண்டிருக்கும். பரம்பரை நோய், தொற்று நோய், நரம்புக் கோளாறு, சுவாசப் பிரச்னையால் சிரமப்படலாம். சிலர் விபத்தையும் சந்திக்க நேரிடலாம்.
குடும்பம்
குரு பகவானின் சஞ்சார நிலை, பார்வைகள் குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் வீடு, வாசல், வண்டி, வாகனம் என கனவு நனவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். நீண்டநாள் கனவு நிறைவேறும்.
பரிகாரம்: அதிகாலையில் நீராடி சூரியனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.