பதிவு செய்த நாள்
17
செப்
2011
11:09
ஓசூர்: சூளகிரி அருகே, குழந்தை வரம் வேண்டி ஹிந்துகளும், முஸ்லிம்களும், விரதம் இருந்து புளியமரத்தை வணங்கி, ஆடுகள் வெட்டி, 101 வகை பழங்கள், இனிப்புகள் மற்றும் உணவுகள் வழங்கி, புளிய மரத்துக்கு நூதன முறையில் பூஜை செய்து வருகின்றனர். ஓசூர் அருகே சூளகிரியில், 2வ0 ஆண்டுகளுக்கு முன் திப்புசுல்தான் ஆட்சியில் ஏராளமான முஸ்லிம்கள் வசித்து வந்தனர். அவர்களுடைய சந்ததியினர்தான் தற்போது சூளகிரி, கொல்லப்பள்ளி மற்றும் ஓசூர் பகுதியில் பிரிந்து வசித்து வருகின்றனர். சூளகிரி அடுத்த பழையூர் கிராமத்தில் ஏராளமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். தற்போது, அந்த கிராமம் அழிந்து அங்கிருந்த முஸ்லிம்கள் அருகில் உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் இடம் பெயர்ந்து வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் பரவலாக வசித்து வந்தனர். இப்பகுதியில் குழந்தை வரம் வேண்டி, முஸ்லிம், ஹிந்து பெண்களும், 200 ஆண்டுக்கு மேலாக தலைமுறை, தலைமுறைவாக ஊருக்கு அருகே காட்டுப்பகுதியில் அமைந்துள்ள புளியமரங்களை வணங்கி, ஒரு வாரம் யாரையும் பார்க்காமல், உணவு சாப்பிடாமல், வெறும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருந்து, நூதன முறையில் சிறப்பு பூஜை செய்கின்றனர். இந்த விரதத்தின் பலனாக அவர்களுக்கு குழந்தை பிறப்பதாகவும், குழந்தை பிறந்த பின், அந்த பெண், குழந்தையை, உறவினர்களுடன் அந்த புளியமரத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்று மொட்டை போட்டு, 101 வகை, பழங்கள், இனிப்புகள் மற்றும் உணவுகள் ஆகியவற்றை புளிமரத்திற்கு படைத்து, ஆடுகள் வெட்டி சமைத்து, அன்னதானம் வழங்குகின்றனர்.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சாமண்ணா கூறியதாவது: கொல்லப்பள்ளியில், 20 ஆண்டுக்கு மேல் குழந்தையில்லாத தம்பதிகள், இங்குள்ள புளியமரத்தை வணங்கி, விரதம் இருந்த பின் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை விரதத்துக்காக குறைந்தப்பட்சம், மூன்று நாள் முதல் அதிகப்பட்சம், ஏழு நாள் வரை சாப்பிடாமலும், யாரையும் பார்க்காமல் விரதம் இருக்க வேண்டும். அதன் பின் குழந்தை பெற்ற பெண்கள், உறவினர்களுடன், குழந்தையை அழைத்து கொண்டு, 101 வகை பழங்கள், உணவுகள், இனிப்புகளை படைத்து, ஆடு வெட்டி சமைத்து, அன்னதானம் வழங்குவதற்கு வீட்டில் இருந்து புளியமரத்திற்கு ஊர்வலமாக செல்கின்றனர். ஊர்வலத்தில் பெண்கள் படையல் பொருட்களை எடுத்து செல்லும் போது, அவர்களுடைய கால்கள் மண்ணில் படாதவாறு அவர்களுடைய உறவினர்கள் அவர்கள் முன் சேலைகளை விரித்து அவற்றின் மீது நடந்து அழைத்து செல்கின்றனர். இந்த குழந்தை வரம் பூஜையில் முஸ்லிம்களும், ஹிந்துகளும் சகோதரர்கள் போல் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.