பதிவு செய்த நாள்
29
ஜூலை
2016
12:07
கிருஷ்ணகிரி: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி சுப்பிரமணியர் கோவிலில், பக்தர்கள் பறக்கும் காவடியில் வந்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். பர்கூர் அடுத்த ஜெகதேவி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில், புஷ்பகாவடி, மயில் காவடியுடன் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று மாலை இந்த கோவில் பகுதியில், இளைஞர் மார்பில், மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், சந்தூர் மாங்கனிமலை வேல்முருகன் வள்ளி தேவசேனா கோவில், எட்ரப்பள்ளி பாலமுருகன் கோவில், காரகுப்பம் முருகர் கோவில் என, மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் ஆடிக்கிருத்திகை திருவிழா கொண்டாடப்பட்டது.
* ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் நகர் சக்திவிநாயகர், வேல்முருகன் கோவிலில், முருகனுக்கு புதிதாக வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தங்க கவச அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போல், அன்னசாகரம், பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில், காரிமங்கலம் மந்தைவீதி முருகன் கோவில், முரசுப்பட்டி முருகன் கோவில்களில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.