வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பக்தர்கள் தப்பினர். சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா நாளை மறுநாள் (ஜூலை 31) பிரதோஷ வழிபாட்டுடன் துவங்குகிறது. இதற்காக நேற்று (ஜூலை 28) முதல் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு மலைப்பாதை திறக்கப்பட்டது. காலை முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் மலைப்பாதை மூடப்பட்டது.
காட்டாற்று வெள்ளம்: மாலை 5.30 மணி முதல் மலை உச்சி, கோயில் வளாகப்பகுதியில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. வறண்டு கிடந்த ஆறுகளில் மழைநீர் ஓடத்துவங்கியது. சிறிது நேரத்தில் அனைத்து ஓடைகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அடிவாரப்பகுதி பிரதான ஆற்றில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடியது. மாங்கேனி ஊற்று, சங்கிலிப்பாறை பாலம் ஆகியவற்றில் நடைபாதையை மூழ்கடித்து வெள்ள நீர் ஓடியது.
தொடர்ந்து மழை:ஏற்கனவே மாலை 4 மணிக்கு மேல் பக்தர்கள் மலைக்கு செல்ல தடைவிதித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் மலைப்பாதையில் பக்தர்கள் யாரும் இல்லை. இதனால் வெள்ள ஆபத்திலிருந்து பக்தர்கள் தப்பினர். மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் போலீசார், தீயணைப்பு துறையினர் மீட்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.