கன்னியாகுமரி அம்மன் கோயில் காணிக்கை பட்டுகள் ஏலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2011 11:09
கன்னியாகுமரி : கன்னியாகுமரி பகவதியம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பட்டுகள் ஏலம் விடப்பட்டது. இந்தியாவில் உள்ள புகழ்மிக்க கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் நேர்ச்சைகள் நிறைவேறவும், நிறைவேறியதற்காகவும் அம்மனுக்கு பட்டுகள், பரிவட்டங்கள், பாவாடைகள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இவ்வாறு செலுத்தப்பட்ட காணிக்கை பட்டுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த பட்டுகளை பொது ஏலம் விட அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதன் பேரில் 348 பட்டு, பரிவட்டம், பாவாடைகள் ஏலம் விடப்பட்டது. அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட பட்டுகளை ஏலம் எடுக்க நூற்றுக்கணக்கான பெண்கள் வந்திருந்தனர். ஏலம் விடப்பட்ட பட்டுகள் மூலம் 25 ஆயிரத்து 255 ரூபாய் கோயிலுக்கு வருமானம் கிடைத்தது. இனி தமிழ் மாதம் தோறும் கடைசி வெள்ளி கிழமைகளில் பட்டுகள் ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தேவசம்போர்டு தொகுதி கண்காணிப்பாளர் ஸ்ரீமூல வெங்கடேசன் மற்றும் கோயில் மேலாளர் சோணாசலம், ராஜேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.