பதிவு செய்த நாள்
01
ஆக
2016
01:08
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், ‘புஷ்கர மேளா’ எனப்படும், புனித நீராடல் திருவிழா நாளை வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை விரிவாக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அவ்வாறு, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள வசதி கள் என்னென்ன என்பது குறித்தான தகவல்களை மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த பாதுகாப்பு ஏற்பாடுக்கான தகவல்கள்:
* திருப்போரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு மார்க்கமாக, 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன
* ஆறு இடங்களில் தற்காலிக வாகனம் நிறுத்துமிடமும், அந்த இடங்களில் குடிநீர், கழிப்பிடம், மின்விளக்கு போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளது
* ஏற்கனவே உள்ள நீர்த்தொட்டிகளில், ‘குளோரினேஷன்’ செய்யப்பட்டு, குடிநீர் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. 50 தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளன
* 16 தற்காலிக குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன; பிளாஸ்டிக் பொருட்கள் முற்றி லும் தடை செய்யப்பட்டுள்ளது
* கடந்த ஒரு வாரமாக சாலையோரங்களில், ‘பிளீச்சிங்’ பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. காலை, மாலை என இரு வேளைகளிலும், கொசு மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது
* எட்டு அவசர சிகிச்சை வாகனங்களும், இரண்டு, இருசக்கர மருத்துவ வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன
* பக்தர்களுக்காக மூன்று சிறப்பு மருத்துவக்குழுக்கள், 20 தற்காலிக மருத்துவ முகாம்கள், 12 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன
* நகரின் அனைத்து பகுதிகளிலும் சுற்றியுள்ள எட்டு கிராமங்களில், திருவிழா முடியும் வரை, குப்பை அகற்ற, 350 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* அன்னதானம் வழங்குவது குறித்து, முறையாக பதிவு செய்யப்பட்டு, 40 நபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு சோதனை செய்த பிறகே வழங்கப்படும்.
* ஒதுக்கப்பட்ட ஏழு இடங்களில் மட்டுமே, அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
* காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் வழங்கினால் பறிமுதல் செய்யப்படும்
* தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது
* எட்டு, காவல் பார்வை கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்
* 40 சி.சி.டி.வி., கேமராக்கள் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ளன
* 2,000 காவலர்கள் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்படுகின்றனர்
* பக்தர்கள் நெருக்கம் நிறைந்த இடங்களில் ஆறு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும்
* குளம் மற்றும் கோவில் அருகில், எட்டு தீயணைப்பு வாகனங்கள், தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்
* குளக்கரையில், 16 நீர்ததெளிப்பான்கள், பக்தர்கள் மீது தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது
* குளக்கரையை சுற்றி ஐந்து தற்காலிக பெண்கள் உடை மாற்றும் இடம் அமைக்கப்பட்டுள்ளது
* குளத்தில் இரு சிறிய ரக படகுகள், இரு மோட்டார் ரக படகுகள், ஒரு ரப்பர் படகு, 40 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் இருப்பர்
* கிரிவல பாதையில், புதிய தார் சாலை போடப்பட்டுள்ளது.
* கழிவுநீர் கால்வாய்கள், சீரமைக்கப்பட்டு, கான்கிரீட் கலவைகள் மூலம் மூடப்பட்டுள்ளது
* குளத்து நீரில் மூழ்கி குளிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை
* விழா நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க, மின்மாற்றிகளை மாற்றி, மின்சாரம் வழங்கப்படவுள்ளது.
மேலும், அரசின் திட்டங்களை விளக்கும் வகையில், 21 துறை ரீதியான அரங்குகளும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம், பொழுதுபோக்கு பூங்கா மற்றும் கலை பண்பாட்டு துறை மூலம், நாள் முழுதும் கலை நிகழ்ச்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 1.50 லட்சம் தீபம் ஏற்ற தேவையான ஏற்பாடுகளும், பக்தர்களுக்கு உதவி செய்ய, 2,000 தன்னார்வ தொண்டர்களும் தயாராக இருப்பர்.