பதிவு செய்த நாள்
20
செப்
2011
11:09
திருச்சூர்: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளதாகவும், பயங்கரவாதிகளின் இலக்காக உள்ள கோவிலில், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஏற்கனவே பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இந்நிலையில், ரகசிய புலனாய்வு ஏஜென்சிகள் நடத்திய விசாரணையில், பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள முக்கியப் பகுதிகளில், குருவாயூர் கோவிலும் இடம் பெற்றுள்ளது. இத்தகவலை, மத்திய உள்துறை அமைச்சகம், கேரள மாநில தலைமைச் செயலருக்குத் தெரிவித்து,கோவிலுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படியும், தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளில், நிறையக் குறைபாடுகள் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது. தற்போது, பரிசோதனை இன்றி, யார் வேண்டுமானாலும், கோவிலுக்குள் செல்லலாம் என்ற நிலை இருந்து வருகிறது. மேலும், பூஜை பொருட்கள் என்ற பெயரிலும், கோவிலுக்கான பொருட்கள் என்ற பெயரிலும், பல பொருட்கள் சோதனையிடப்படாமல் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படுவது குறித்தும், உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. கோவிலைச் சுற்றிலும், 100 மீட்டர் இடங்கள் உடனடியாகக் கையப்படுத்த வேண்டும். கோவிலுக்கு வெளியே, உயர்ந்த கட்டடங்களில் இருந்து, மூலவர் சன்னதி, கோவில் சுற்றுப் பிரகாரம், கொடி மரம் போன்ற முக்கிய இடங்கள், வெளி ஆட்கள் பார்வையில் படும் வகையில் இருக்கக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.