பதிவு செய்த நாள்
04
ஆக
2016
12:08
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி, துரித வேகத்தில் நடந்து வருகிறது. திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில், மலைக் கோவிலுக்கு சென்று வருகின்றனர். மலைக்கோவிலுக்கு செல்லும் சாலை, போதிய அகலம் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில், கோவில் நிர்வாகம் மலைக்கோவிலில் உள்ள படசெட்டி குளத்தில் இருந்து, மலைக்கு சாலை அகலப்படுத்த தீர்மானித்து, 4.85 லட்சம் ரூபாய் கோவில் நிதியில் இருந்து, ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள், துரித வேகத்தில் நடந்து வருகிறது. இதற்காக மலையில் இருந்து, மண் அள்ளப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, கோவில் அலுவலர் ஒருவர் கூறுகையில், படசெட்டி குளத்தில் இருந்து, வாகனங்கள் செல்வதற்கு, எவ்வித இடையூறும் இல்லாமல் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இப்பணிகள், துரித வேகத்தில் நடந்து வருகின்றன. இம்மாதத்திற்குள் பணிகள் முடிந்து பக்தர்களின் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றார்.