பதிவு செய்த நாள்
20
செப்
2011
11:09
நகரி: திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, அவர்களின் புகைப்படத்துடன் கூடிய தரிசன டிக்கெட் வழங்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது, திருப்பதியில் அலிபிரியிலிருந்து பாத யாத்திரை பக்தர்களுக்கு, நடைபாதை வழியில் காலிகோபுரம் அருகிலும், ஸ்ரீவாரிமெட்டு வழியாக வருபவர்களுக்கு கைரேகை பதிவுடன், "திவ்ய தரிசனம் என்ற பெயரிலும் இலவச டோக்கன் வழங்கப்படுகிறது. இதை தவறான முறையில் பக்தர்கள் பயன்படுத்துவதாக, புகார் வந்ததையடுத்து, "போட்டோ மெட்ரிக் முறையில் தரிசன டிக்கெட்கள் வழங்கும் திட்டத்தை, நேற்று முன்தினம் தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு துவக்கி வைத்தார். சோதனை அடிப்படையில், முதலில் ஸ்ரீவாரிமெட்டு வழியாக செல்லும் பக்தர்களுக்கு இந்த டோக்கன் வழங்கப்படும். பரிசீலனைக்குப் பின், அலிபிரி வழியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கைரேகை பதிவுடன் பக்தர்கள் புகைப்படமும் லேசர் பிரின்டிங் முறையில் வழங்கப்படுவதால், இதை அடுத்தவர்களுக்கு விற்க முடியாது. இதனால் தில்லுமுல்லுகள் தவிர்க்கப்படும்.
முன்னுரிமை: புரட்டாசி மாதம் என்றால், திருமலைக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் பாத யாத்திரையாகத் தான் வருவார்கள். இவ்வாறு வருபவர்களுக்கு, முன்னுரிமை அளித்து விரைவாக தரிசனம் செய்வதற்கு, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனத்திற்கு வைகுந்தம் காம்ப்ளக்சில் வரும் போது, லட்டு டோக்கன் வாங்கும் போது மட்டுமே, சற்று நேரம் காத்திருக்க வேண்டும். மற்றபடி எந்த இடத்திலும் இவர்கள் காத்திருக்க வேண்டியது இல்லை. குறிப்பாக, பாத யாத்திரை பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக சாமி தரிசனம் பார்ப்பதற்கு, தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்துள்ளதாக, பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தாமதம் கூடாது: முன்பதிவின் மூலம் அபிஷேகம், வஸ்திர அலங்கார சேவை டிக்கெட்கள் பெற்றுள்ள பக்தர்கள், 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரத்தில் திருமலைக்கு வந்து, அவர்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வராதவர்களின் டிக்கெட்டுகள், கரன்ட் புக்கிங் மூலம் அடுத்தவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை வரும் நவம்பர் முதல் தேதியிலிருந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.