பதிவு செய்த நாள்
08
ஆக
2016
01:08
சேலம்: சேலம், மாரியம்மன் கோவில்களில் ஆடி பண்டிகை கொண்டாட்டத்துக்கு, நேர்த்திக்கடன் செலுத்த, 1.50 லட்சம் நாட்டு கோழிகள், விற்பனைக்கு குவிந்துள்ளன.சேலம், கோட்டை மாரியம்மன் உட்பட மாநகரில், 78 அம்மன் கோவில்களிலும், மாவட்டத்தில், 112 கோவில்களிலும், ஆடி பண்டிகை பொங்கல் விழா, நாளை முதல் மூன்று நாட்கள் கொண்டாப்படுகிறது. இதில் பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதற்காக, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, அதிக அளவில் நாட்டு கோழிகள், சேவல்கள் சேலத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. நேற்று மட்டும், 1.50 நாட்டு கோழிகள் விற்பனைக்கு வந்தன. இன்று மேலும், ஒரு லட்சம் கோழிகள் மற்றும் சேவல்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.இன்றைய நிலையில், நாட்டு கோழி உயிருடன் கிலோ, 300 ரூபாய் முதல், 320 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
ஒரிஜினல் கண்டறிவது எப்படி: அனைத்திலும் போலிகள் வந்து விட்டது போல், பண்ணையில் வளர்க்கப்படும் கலர் கோழிகளை, நாட்டு கோழி எனக்கூறி விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளை கையால், அதன் வயிறு, நெஞ்சு பகுதியில் பிடித்து பார்த்தால், எலும்பு தென்படாமல், அதிக அளவில் கறி தென்படும். அது மட்டுமின்றி, பளபளப்பாகவும் இருக்கும். ஒரிஜினல் நாட்டு கோழிகளில், கறிக்கு பதில் எலும்பு தென்படுவதோடு, பளபளப்பு குறைவாகவும், கால் பகுதியில் கறுப்பு நிறம் கலந்தும் காணப்படும். பண்ணை கோழிகளின் கால்களில், மஞ்சள் நிறம் அதிகரித்து காணப்படும்.