பதிவு செய்த நாள்
09
ஆக
2016
11:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜ கோபுரத்தில்
ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணி, 25 கோடி ரூபாய்
மதிப்பில் நடந்து வருகிறது. இதில், 13 நிலைகளுடன், 217 அடி உயரமுள்ள
ராஜகோபுரம், 86 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. அப்போது,
மா அருணை விநாயகருக்கு எதிரே உள்ள ராஜகோபுர நான்காவது துாணின்
மேற்கூரையில், 10 டன் எடை கொண்ட பீமில், நான்கு அடி துாரம் விரிசல்
கண்டுபிடிக்கப்பட்டது. இதை, சென்னை ஐ.ஐ.டி., கட்டமைப்பு பொறியியல் ஆய்வக
உதவிப் பேராசிரியர் அருண் மேனன், கடந்த, 27ம் தேதி ஆய்வு செய்தார்.
கோபுர
விரிசல் அபாயகரமான இடத்தில் உள்ளதால், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் ஒட்டி
சீர் செய்ய வேண்டும் என பரிந்துரைத்தார். மேலும் கோபுரத்தின், 13
நிலைகளிலும் ஆய்வு செய்த போது அங்கு பொருத்தப்பட்டுள்ள தேக்கு மர படிகள்
சேதமடைந்தது தெரிந்தது. இதையும் புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த நிலைப்படிகளை மாற்றுவதற்கு பொருத்தப்பட வேண்டிய இரும்பு
துாண், நேற்று கொண்டு வரப்பட்டது. இதை ஒவ்வொரு நிலைப் படியிலும் பொருத்தி,
புதிய தேக்கு மரத்தாலான நிலைப்படிகள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பணி
துவங்கி நடந்து வருகிறது. 13 நிலைப்படிகள் சீரமைக்கப்பட்டதும் துாண்
விரிசல் சரி செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.