பதிவு செய்த நாள்
09
ஆக
2016
12:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ஊழியர்கள் பற்றாக்குறையால் கோயில் பணிகள் தொய்வடைந்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 15 ஆண்டுக்கு முன்பு குருக்கள், முதுநிலை, இளநிலை ஊழியர்கள், ஓதுவார்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என 250 பேர் பணியாற்றினர். இதனால் கோயில் நிர்வாக நடவடிக்கைகள், சுகாதார பணிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொய்வின்றி நடந்தது. அனைத்து சன்னதிகளிலும் தினசரி பூஜைகள் முடங்காமல் நடந்தது. கடந்த 15 ஆண்டில் ஒய்வு பெற்ற குருக்கள், ஊழியர்களுக்கு பதில் புதிய ஊழியர்கள் நியமிக்காததால், தற்போது கோயிலில் 108 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் அலுவலக முதுநிலை, இளநிலை ஊழியர்கள் பணிச்சுமையால் பரிதவித்து வருகின்றனர். இதனால் சேதுமாதவர், பைரவர் சன்னதிகளில் பூஜை செய்ய குருக்கள் இன்றி மூடிக்கிடக்கிறது. ஒரே குருக்கள் இரு சன்னதிகளில் பூஜை செய்கின்ற நிலையும் உள்ளது. மேலவாசல் முருகன், விநாயகர் கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் குருக்கள் நியமித்து பூஜைகள் நடக்கிறது.
நிர்வாக நடவடிக்கைகளும் தேக்கமடைந்துள்ளது. தற்போது கோயிலில் பாதுகாப்பு, துப்புரவுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஊழியர்களை நியமித்து உள்ளனர். இவர்கள், கோயிலுக்குள் சுவாமி, அம்மன் உள்ளிட்ட முக்கிய சன்னதிகள் திறந்து மூடவும், துப்புரவு பணியில் பொறுப்புணர்வு இன்றி செயல்படும் போது அதற்கு நிரந்தர ஊழியர்களே பொறுப்பு ஏற்கவேண்டிய நிலை உள்ளது. எனவே ஆகம விதிகளின் படி கோயிலில் தங்கு தடையின்றி பூஜைகள் நடக்கவும், நிர்வாக நடவடிக்கைகள் தொய்வின்றி தொடரவும் காலியாக உள்ள ஊழியர் பணியிடங்களை நிரப்ப இந்து அறநிலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.