தேவிபட்டினம்: துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், நவபாஷாண கடற்கரையில் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
இங்குள்ள கடற்கரையில் கடல்புற்கள், கழிவுகள் அதிகளவு தேங்கி வருவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இவற்றை பாரத பிரதமரின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் அகற்றினர். நிகழ்ச்சிக்கு கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் அமானுல்லா ஹமீது, என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் வள்ளிவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நவபாஷாண கடற்கரை ஓரத்தில் கிடந்த கடல் புற்கள், கழிவுகளை மாணவர்கள் சேகரித்து மாற்று பகுதியில் கொட்டினர். கல்லுாரி மாணவர்களுடன் ஆசிரியர் இருதயராஜ், லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா, பட்டய தலைவர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.