பதிவு செய்த நாள்
20
ஆக
2016
11:08
பவானி: பவானி, குறிச்சி கிராமத்தில் உள்ள, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பெருமாள் - ஈஸ்வரன் கோவில்களைப் புதுப்பிக்க, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பவானி தாலுகா, அம்மாபேட்டை யூனியன், குறிச்சி கிராமத்தில், வரதராஜ பெருமாள், மாதேஸ்வரன், ஏரிக்கரை முனியப்பன், காளியம்மன், மாரியம்மன், ஓங்காளியம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. இவை அனைத்துமே, தமிழக அரசின், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கோவில்களுக்கு, குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மொத்தம், 100 ஏக்கர் நிலம் உள்ளது. பெருமாள், ஈஸ்வரன், விநாயகர் கோவில்கள், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இவை தற்போது, பாழடைந்த நிலையில் உள்ளன. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: பழமையும் பெருமையும் வாய்ந்த, பெருமாள், ஈஸ்வரன் கோவில்களுக்கு மட்டும், 74 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனாலும் இக்கோவில்களுக்கு, 42 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் செய்யப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஈஸ்வரன் கோவிலில் புனரமைப்பு பணிகள் செய்யவும், மண்டபம், மதில்சுவர், அலுவலகம் கட்டவும், ஒரு கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பி உள்ளோம். பெருமாள் கோவிலிலும், விரைவில் பணி துவங்க உள்ளது என்றனர்.