பதிவு செய்த நாள்
20
ஆக
2016
11:08
புதுச்சேரி: வழிபாட்டு தலங்களுக்கு அருகில் பொதுக்கூட்டம் நடத்த இனி அனுமதி இல்லை என, டி.ஜி.பி., சுனில்குமார் கவுதம் தெரிவித்தார். இந்து முன்னணி சார்பில், சுதந்திரதின விழாவையொட்டி, பொதுக்கூட்டம், பஸ் நிலையம் அருகே கடந்த 14ம் தேதி இரவு நடந்தது. கூட்டம் நடந்தபோது, மேடையை நோக்கி பீர் பாட்டில் வீசப்பட்டதில், மூன்று பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக, உருளையன்பேட்டை முகமதியார் பள்ளி வாசல் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்து முன்னணியினருக்கும், முஸ்லிம்க ளுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இரு தரப்பையும் சமாதானம் செய்த உருளையன்பேட்டை போலீசார், இருதரப்பு புகாரின்பேரின் வழக் குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இரு தரப்பினரையும் அழைத்து, போலீஸ் அதிகாரிகள் சமாதான கூட்டம் நடத்தினர். போலீஸ் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில், டி.ஜி.பி., சுனில்குமார் கவுதம் தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி., ராஜிவ் ரஞ்சன், எஸ்.பி.,க்கள் ஆறுமுகம், ரட்சனா சிங், அப்துல் ரஹீம் உள்ளிட்ட அதிகாரிகளும், வி.சி., கட்சி மாநில செயலாளர் தேவபொழிலன், பா.ஜ., துணைத் தலைவர் செல்வம், வட்டார காங்., தலைவர் ரகுமான், இந்து முன்னணி மாநில செயலாளர் மகேஷ், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மற்றும் பா.ஜ., வினர், பொதுக்கூட்டத்தில் பாட்டில் வீசிய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர். காங்., மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர், மசூதி மீது தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றனர்.
மேலும், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்ற விதிமுறை இருந்தும், மீறி அனுமதி அளித்ததால்தான் பிரச்னை ஏற்பட்டது என இரு தரப்பினருமே குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து, டி.ஜி.பி., சுனில்குமார் கவுதம் பேசுகையில், மசூதி மீது தாக்குதல் நடத்திய 2 பேரை கைது செய்துள்ளோம். மேலும், சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகிறோம். அதேபோல், பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் வீசியவர்களை தேடி வருகிறோம். வழிபாட்டு தலங்களுக்கு அருகில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தந்ததது தவறு. இனி அதுபோன்று அனுமதி தரப்படாது. வழிபாட்டு தலங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். மாதந்தோறும் அனைத்து பகுதி யில் உள்ள மத தலைவர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி சமாதானமாக இருக்கச் செய்யவும் ஏற்பாடு செய்து வருகிறோம் என, தெரிவித்தார்.